புதன், 27 நவம்பர், 2013

கலாம்பாத்தார்


-ஜே.ஜெகத்ரட்சகன்
 
       சம்பந்தம் ஆசாரிதான் ஊரிலே வயசானவர். அவர் செத்து மூனு வருஷமாச்சு. இப்ப இருக்கிறதில பொன்னுசாமி அண்ணன்தான் பெரியவர். எண்பத்து அஞ்சு வயசாவுது. அவருக்கடுத்து நான். தாத்தாவுக்கு எப்பவுமே தன்னுடைய டிரவுசர் பிராயத்தைப் பேசுவதில் ரொம்ப அலாதி. குறிப்பா அஞ்சாவது முடிச்சிட்டு, போர்டிங்ல சேர்ந்து கார்பென்டிங் தொழிலை கத்துக்கொண்டதை அடிக்கடி பேசுவார். அந்த போர்டிங்கை வெள்ளைக்காரங்க நடத்தினதாகவும் அவர்கள் பழகும் விதம் அருமையா இருந்ததுனு சொல்லுவார். ஒரு முறை தாத்தாவுக்கு கையில் முழுக்க சிரங்கு வந்ததாகவும், அச்சிரங்கை வெள்ளைக்காரப் பெண்மணி கொஞ்சமும் கூச்சப்படாம சிரங்குகளைக் கழுவி சுத்தம் செஞ்சி மருந்து போட்டதை ஜூவுக்கு போயிட்டு வந்த பையன் மாதிரி சுவாரஸ்யமா சொல்லுவாரு.

        தாத்தா ரொம்பவும் சிலாகித்துப் பேசுகிற உயர்ந்த மனிதர், அவுங்க அப்பாதான். அவரு பேரு ராகலான். சமயோஜித புத்தியி அவர மாதிரி யாருமே இருக்க முடியாதுன்னுவாரு. மாடு பிடிக்கறதுல கைதேர்ந்தவருன்னும், அவர் மாடு பிடிச்சிக் கொடுத்தா நல்லா உழைக் கும்னும் ஊரே நம்புச்சாம். ஊர்ல யாரு மாடு பிடிக்கனும்னாலும் ராகலான கூப்புடுன்னு சொல்வாங்களாம். கேட்டுக்குணு இருந்த நா, அதெப்படி தாத்தா உங்க அப்பா நல்ல மாட்ட கண்டுபிடிப்பாருன்னு கேட்டேன்.  தாத்தாவுக்கு அவுங்க அப்பா நல்ல மாடு எது என்பதை விட, எது குறை இருக்குறது இல்லன்றத, சுலபமா கண்ணுபிடிச்சிடலாம்னு சொன்ன காரணங்களையெல்லாம் ஒன்னுவொன்னா சொன்னாரு. முதலாவது மாட்டோட பல்லு சரியா இருக்குதான்னுப் பாக்கணுமாம். மாடுங்களுக்குக் கீழ் தாடையில, மட்டுந்தான் பல்லு இருக்கும்னு புது தகவல அன்னைக்குச் சொன்னாரு. மாட்டுக்குக் ‘கொக்கிப்பல்லு’ன்னு ஒரு குறைபாடு இருக்கும்மாம். அப்படியிருந்தா அந்த மாட்டால பில்லு, வெக்க எதுவுமே சரியா சாப்பிட முடியாம மெலிஞ்சிடுமாம். அதனால கொக்கிப்பல்லு இருக்குற மாட்ட புடிக்கக்கூடாதாம். அதேமேரி ‘ஆறுக் கட்டுப் பல்லு’  இருக்குற மாட்டயும் பிடிக்கக்கூடாதாம். ஏன்னா, மாட்டுக்கு எட்டுப் பல்லு இருக்கணும் அதான் சரின்னார். அதேமேரி ‘கொள்ளிக் கொம்பு’ இருக்குற மாட்டயும் ‘குடைமேல்குடை’ இருக்குற மாட்டயும் புடிக்கக்கூடாதாம். கொள்ளிக்கொம்புன்னா, கொம்பு மேல வெள்ளையா இருக்குறது. குடைமேல்குடைன்னா, நெத்தியில ரெண்டு சுழி இருக்குற மாடுன்னாரு. அவர் யோசிச்சி ஒன்னொன்னா சொல்லிக்கினு இருக்கும்போது நீங்க சொல்லறது எருது மாட்டுக்கு மட்டுந்தானா, எரும, பசு இதுக்கும் பொருந்துமான்னுக் கேட்டேன். உடனே அவரு, நோ... நோ... இது எருது மாட்டுக்கு மட்டுந்தான்னாரு. தாத்தா எப்பப் பேசினாலும், No…No…, Sharp, Quick, Oh.. Yes! இதுமாதிரியான இங்கிலீஷ் வார்த்தைகளச் சொல்லி தன்னோட ஆங்கில அறிவுக்கு டார்ச் அடிப்பாரு. தொடர்ந்து ‘பாடை சுழி’, ‘பூராண் சுழி’, ‘டமார சுழி’ன்னு சொல்லிக்கினு போனாரு.

        எக்காரணத்தக் கொண்டும் நாகபூஷணம் இருக்கிற மாட்ட பிடிக்கவே கூடாதாம். அது குடும்பத்தக்கு கொஞ்சமும் ஆகாதாம். மாட்டோட வாலத் தூக்கினா பாம்பு மாதிரி இருக்குமாம். அதுதான் நாகபூஷணம்னார். ‘ஏறுவால்’ மாடும் ‘துண்டு எலும்பு’ மாடும் வேலைக்கு ஆகாதாம். ‘தொடைப் பிரட்டு’மாடு சேத்துல நடக்கவே நடக்காதாம். ‘சிட்டிகால்’மாடு பாரம் ஏத்துனா படுத்துக்குமாம். ‘கரிவாய் மாடு’ திடமா இருந்தாக்கூட ஒழுங்கா வேலை செய்யாத திருட்டு மாடா இருக்கும்னார். ‘வெட்டுக் கொம்பு’ சாதாரணமா சரியா நடக்காதாம். தரையில கால தேச்சி நடக்குமாம். அதனால சம்பாதிக்கறது எல்லாம் லாடம் கட்டவே சரியா இருக்குமாம். ‘பின்னெடுப்பு’ மாடும், ‘குறுங்கழுத்து’ மாடும் ஊனமுற்ற மாடுன்னு அவுங்க அப்பா அவருக்குச் சொன்னாறாம். ஒட்டு மொத்தமா மாடுங்கள மேற்கத்தியான் மாடு, தெற்கத்தியான் மாடு, வடக்கத்தியான் மாடுனு மூனு வகையாப் பிரிக்கலாம்னும், மேற்கத்தியான் மாடு காலு, உடம்பு, கொம்பு எல்லாம் நீளமா இருக்கும்னும் அது சீக்கிரமா களச்சுப் போயிடும்னு சொன்னாரு. அதனால அடிக்கடி மாட்ட மாத்த வேண்டி வருமாம். தெற்கத்தியான் மாடு உடம்பு, அமைப்பு ரொம்ப அருமையா இருக்கும். ஆனா குறையே இருக்காதுனு சொல்ல முடியாது. ஆனா நல்லா உழைக்குமாம். அதே மாதிரி வடக்கத்தியான் மாடும் நல்லா உழைக்குமாம். ஆனா தெற்கத்தியான விட நல்லா புஷ்டியா இருக்குமாம். யாருக்கும் அடங்காம, எல்லாரையும் இடிக்கற மாட்ட அறுத்து பார்த்தா வயித்துல ‘கோஜயம்’னு ஒன்னு இருக்குமாம். இருக்குற மாட்டுலயே வித்தியாசமான மாடு ‘காளிமாடு’ தானாம். காளிமாடு நாய் கடிக்கறதவிட ரொம்ப மோசமா கடிக்குமாம். இது மாதிரி இருக்கிற மாட்ட எங்கப்பா யாருக்கும்மே புடிச்சிக் குடுக்க மாட்டாரு. அதனாலதான் மாடுபுடிக்க எல்லாரும் அவரை கூப்பிடுவாங்கன்னார். தூக்கம் வருதுப்பா, ராத்திரிகூட சரியா தூங்கல, நாளைக்கு வா மாட்டப் பத்தி இன்னும் நிறைய சொல்றன்னு தூங்குறதுக்கு தயாராயிட்டார்.ஆமா... தாத்தா செத்து ஆறு மாசத்துக்கு மேல ஆகுது. செந்தலைக் குருவிக்காக எழுதலாம்னு நெனச்சப்போ ராத்திரி இதான் என் நெனப்புக்கு வந்துது...
***

ஒரு வேலைக்கு இடையே மற்றும் ஒரு வேலை



கட்டுரை ஆசிரியர் : சந்ரு 

வாயில் அசை போட்டுக்கொண்டு எழுதுவது, வயது வேறுபாடு இல்லாமல் போவது, எதைப்பார்த்தாலும் சிரிப்பது, கபடு இல்லாமல் குறிப்பான ஒன்றை பாவிப்பது, மன தோற்றமாக்குவது, பயணத்தில் எந்தக் குறையும் தோனாது வழியனுப்புவது, வரவேற்பது...
கை நீட்டினேன் அவரும் கை நீட்டினார். ஒருவர் கையை ஒருவர் பற்றினோம். அந்தக் காலைப்பொழுதில் எனது நண்பனும் நானும் ஓடிக்கலைத்து வேர்த்து விருவிருக்க புல்வெளியில் அமர்ந்து, ஏது மில்லாமல் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் புன்னகைப்பதாய் இருந்தது. இதை எழுதும் போதுதான் நினைவு கூறுகிறேன். இத்தனை கால சந்திப்பில் பெருமாள் ஐயாவிற்குக் கை கொடுத்தது இதுதான் முதல் முறை. ஒரு வருடத்திற்கு மேலாக படுத்தப் படுக்கையாய் இருக்கிறார். அவரது மார்பிலிருந்து பக்கவாட்டாக செய்தித்தாள்கள் புரண்டு கிடக்கின்றன.
அவருக்குக் கை நோகும் என்று எனது நாற்காலியில் அமர்ந்தேன். தெருவிலிருந்து அவரது வீட்டு வளாகத்தில் வீட்டு கதவை திறந்ததும் இடப்புறமாக பெரிய மேஜைக்கு அடுத்த நாற்காலியில், நீண்ட தாடி, மீசை, தலைமுடி சகிதமாய் வெற்று மார்பின் குறுக்கே ஒரு நீண்ட துண்டை போட்டு அமர்ந்திருப்பார். இது கடந்த இருபத்தி ஐந்து காலடையாளம்.
சராசரி ஒரு கண் போன்று வட்டமான பிளாஸ்டிக் பொருள், அது பேனா மேடையாக இருக்கலாம். அதைப் பெருமாள் அய்யா மேஜையில் பார்த்தேனா என்பது இங்கு முக்கியமில்லை. அது நேற்று மாலை அவரை சந்தித்தது குறித்த நினைவில் வந்து போகிறது. இப்பொழுது அவரை படுக்கை அறையில் பார்க்கிறேன். நீண்ட தாடி, மீசை, தலைமுடி எல்லாம் நன்றாக மழுங்க மழித்திருக்கிறது. என்னைக் கண்டதும் அவரது முக மலர்ச்சி கடந்தகால அடையாளத்தில் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை.
           பெருமாள் அய்யாவின் மூத்த மகன் அவரது கால்மாட்டில் அமர்கிறான். மகன்,
“அப்பா... உங்க குல தெய்வம் சொரிமுத்து ஐயனார் கோவிலில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் கலை முகாமிற்கு நான் போய் வரட்டுமா?”
பெருமாள்.... “போயிட்டு வா”
மகன்... “சார்... எங்க அப்பா வணிக செட்டி, எண்ணெய் வியாபாரம். குலதெய்வம் துடியான சொரிமுத்து ஐயனார்.”
பெருமாள்... “என் பாட்டியோட பாட்டி சார். அந்த நான்கு தலைமுறையா ஐயனார்தான் எங்க குலதெய்வம். அதுக்கு முன்பா ‘முப்பிடாதி அம்மன்’. சொரிமுத்து ஐயனார் கோவில் சிங்கம்பட்டி ஜமீனுடையது. அவங்க தேவர்மார். அது அவங்க தெய்வம்தான். ஆனால் நாடார் அது இதுவென்று பல சாதிகளும் ஐயனாரை வணங்கு கிறார்கள்.”
என்னை வணங்கிய கையை மெதுவாக தன் மார்பில் சாய்த்துக் கொண்டார்.
மகன்... “நம்ம கோவிலில் ஐயர் பூஜை பண்ணக்கூடாது என்று ஐயரை போட்டு தள்ளிவிட்டார்கள் என்று சொன்னீர்களே”
பெருமாள்... “அதுவா... அது அந்தக்காலம்”
சில நொடிகள் பெருமாள் அய்யாவும் நானும் ஒருவரையொருவர் பார்த்தபடி மௌனமாய் இருந்தோம்.
பெருமாள்... “ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தி ஏழில் பிறந்தேன். இந்த இருபதாம் தேதி எனக்கு எண்பத்தி ஏழுவயது முடிந்தது. நான் பிறந்ததற்கு பின் குடும்பத்தில் இன்னும் செல்வம் வளர்ந்தது. பன்னிரெண்டு ஏக்கர் தோப்பு, உட்கார்ந்து வேலைப்பார்க்க எண்ணெய்க் கடை, தோட்டம், துரவு என பெரியவர்கள் நிறைய சம்பாதித்து வைத்தார்கள். நல்ல வசதி”
மரத்துப்போன தந்தையின் கால்களைப் பிடித்துக்கொண்டு, சிரித்தபடி மகன், “பெரியவர்கள் சேர்த்து வைத்ததை இவர் சினிமா ஹீரோ நினைப்பில் எல்லா வற்றையும் அழித்தார்... என்னங்கப்பா”
தந்தையும் மகனும் சேர்ந்து சிரித்தார்கள். நானும் அதில்.
பெருமாள்... “ஒரு அண்ணன் அவரும் மிலிடெரியில் இறந்து போனார். மற்றவர் பெண்கள். நான் கடைசி பையன். என்னை எல்லோரும் செல்லமாக வைத்துக் கொள்வார்கள்”
       மகன்... “சரி... அப்பா உங்களை இவள் நல்லா பார்த்துக் கொள்கிறாளா?”
       பெருமாள்... “எப்போதாவது வந்து எட்டி பார்த்துவிட்டுப் போவான்”
       மகன்... “எப்பா... நான் உங்க பேரனைப் பற்றி கேட்கவில்லை.. இவா.. இவா...”
       பெருமாள்... “சரி இல்ல, அவளுக்கு பணம் கொடுப்பது விரயம்”.
       மகன்... “எப்பா... நான் நர்சப்பத்திக் கேட்கள.. உங்க மருமகளப்பத்திக் கேட்கிறேன்... இவ.. நல்லா கவனித்துக் கொள்கிறாளா?”
       பெருமாள்... “அவதான் என்னை கவனிக்கிறாள். எல்லாமே அவள்தான்”.
       சிறிது மௌனம். என்னைப் பார்த்து எதையோ சொல்ல நினைக்கிறார். அவரது பற்கள் நெரியும் சத்தம் கேட்கிறது. ஆரம்பத்திலிருந்து பேசும்போது பற்கள் நரநரக்கும் சத்தம் வருகிறது.
        பெருமாள்... “என் பிறந்த நாளைக்கு சட்டையும், பட்டு வேட்டியும் எடுத்து கொடுத்தான். அவர்கள் ரெண்டு பேரும் என்னை தூக்கி உட்காரவைத்து அந்த சட்டையை போட்டு விட்டார்கள். ஒரு பத்து நிமிடத்தில் கழற்றிவிடச் சொல்லி விட்டேன். சட்டை போட முடியவில்லை. அன்றைக்கும் எப்போதும் போல் கொஞ்சம் சரக்கு சாப்பிட்டிருந்தேன். மதியம் பாத்ரூம் போய்விட்டு, எழுந்து நின்றேன். தலை சுற்றுவது போல் இருந்தது. கீழே விழுந்து இடுப்பில் இருக்கும் கால் எலும்பு முறிந்துவிட்டது. ஆப்ரேசன் முடிந்து வீட்டுக்குவந்து நானாக எழுந்து நின்றேன். பிறகும் ஒருமுறை விழுந்தேன். பின்பு எழுந்துகொள்ளவே இல்லை. ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. அப்படி, இப்படி புறண்டு படுக்க முடியவில்லை. வாத நோய் இல்லை என்றாலும் கால் விளங்கவில்லை.
சாகும்வரை வீட்டுக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருந்தால் போதும் என்று நினைத்தேன். விதி நம்மை, படுத்த படுக்கையாக்கிவிட்டது. விதி... விதிக்கு முன் நாம என்ன செய்ய முடியும். எது எப்படியோ அது நடக்கட்டும் காத்திருப்போம்.”
நேற்று அவரைப் பார்தது முதல் இதை எழுதும் வேளையிலும் அகமகிழ்வில் எந்த மாற்றமும் இல்லை. அனைவரிடமும் விடைப்பெற்றுக்கொண்டு செல்லும் முன், வாசலை நோக்கி நடந்தபடி பெருமாள் அய்யா மருமகளை எனது மகள் என்று வாழ்த்தினேன்...சர்க்கஸ் விளையாடுவதும், அதை வேடிக்கைப் பார்ப்பதும் நாமாக...
******

களஆய்வும் வழக்காறுகளும்



கட்டுரை ஆசிரியர்: முனைவர் செ.ஸ்டாலின், உதவிப்பேராசிரியர், குருநானக் கல்லூரி, சென்னை.
 
திருப்போரூரிலிருந்து திருக்குன்றம் போகும் வழியில் ஓர் ஊர் உள்ளது. அங்கு நானும் என் நண்பரும் கதை சேகரிக்கச்  சென்றிருந்தபோது ஊர்த்தலைவரிடம் அனுமதி வாங்குங்க என்றனர். அது உள்ளாட்சி தேர்தல் நேரம், தலைவர் பொறுப்பில் இருந்தவர் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் வீடு எங்களுக்குக் காண்பிக்கப்பட்டது. வாசலில் நின்ற இருவரிடம் விவரத்தைக் கூறினேன். எங்களை ஏறஇறங்கப் பார்த்த அவர்கள், தலைவரை அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிட முடியாது. இப்பொழுதுதான் அவர், நான், இவன் எல்லாம் ‘கேன்வாஸிங்’  போய்விட்டு வந்தோம். தலைவர், ‘ரெஸ்ட்’ எடுக்கிறார். நீ எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல் என்று கூறினார். அருகிலிருந்த அவர் நண்பர் காதில் ஏதோ சொல்ல மறுபடியும் சந்தேகத்துடன் பார்த்துவிட்டு ‘சரி உள்ளே வா’ என்றழைத்து அமர சொன்னார். நீங்கள் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்களா? அல்லது ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்தி சேகரிப் பவரா எனக் கேட்டனர். நாங்கள் கதை சேகரிக்க வந்தவர்கள் என்றால், அவரோ அதனை ஏற்கமறுத்துப் பேசிக்கொண்டிருந்தார். சட்டென்று நான் வைத்திருந்த பையைப் பிடுங்கிச் சோதனை போட்டார். என்னுடன் வந்தவனுக்குக் கோபம் வந்துவிட்டது. நான் மெதுவாகத் தலைவரைப் பார்த்து அனுமதி வாங்க வேண்டும் என்றேன். அவர் ‘ஊரு கெட்டுக் கிடக்குது, இது எலக்ஸன் டைமு. சரியா.. ஒழுங்கா நடந்துக்கம்.. பொம்பளங்க கிட்ட பேச்சி வெச்சிக்காதீங்க... புரிஞ்சிதா... எனக்கு ஐநூறு, இவனுக்கு ஐநூறு கொடுத்துட்டு போ.. தலைவருக்கிட்ட நா சொல்லிக்கிறெங்’ என்றார். பக்கத்திலிருந்தவர் சொன்னார், இவுரு சொன்னா தலைவர் சொன்னா மாதிரி... தலைவருக்கு இவெங் கொண்டாங்கொடுத்தா ஒறவு... என்று வாயில் ‘ஜொல்’ ஊற்ற தலை சரிந்து கூறிக் கொண்டிருந்தார். இவர்களுக்குப் பின்னிருந்த மதில் சுவருக்குப் பின்னே ஒருவர் எங்களைப் பார்த்து வெளியே வந்துவிடுங்கள்.. என்பது போல சைகை காட்டிக் கொண்டிருந்தார். எங்கள் கண்கள் அவரைப் பார்த்து ‘எங்களை எப்படியாவது காப்பாத்துங்க’ என்பது போல சைகைக் காட்ட இவங் களையும் பார்த்துக் கொண்டன. இறுதியில் நா உள்ளே போய்ட்டு வர்றே இருங் கன்னு ஒருவர் சொல்ல, வராத அழைப்புச் செல்லிடப்பேசியில் வந்தது போல ஆங்கி லத்தில் பேசிக் கொண்டு சிக்னல் இருக்கும் திசை நோக்கி நடப்பது போல வேகமாக நடந்து வெளியேறினோம். எனக்கு முன் என் நண்பன் ஓடினான் சைகைக் காரனிடம்.சரி இந்த மொற தொகுத்ததுலயிருந்து இப்ப ஓர் ஒப்பாரி, ஓர் விடுகதை...
ஒப்பாரி    

நா சித்தாடக் கட்டின நாளையில
என்ன இட்டும் போன எமனெ!
என்ன பெத்தவரும் அம்மாளும்
எனுக்கு இந்த வயசுல
எனுக்கு இருக்கலிகாடா
கூலி அனுப்பி வெச்சானொ!
எனுக்கு பாயப் படுக்கப் போட்டு,
எனுக்கு பச்சரிசி கிள்ளிப்போட்டு
நா பாவிவூட்டு வாசலிலே
பாவி நானும் வாழுறேமா
எனுக்கு முருங்க பழுதுவெச்சி
முருங்கக்கா தட்டுலயிட்ட அந்த
முண்டவூட்டு வாசலிலே
என்னப் பெத்த அம்மாளும் அப்பனொ
நானு மூணு நாளு வாழலியே
எனுக்கு ஈரப் பெருங்காயொ
இரு சாதி வேம்மம்மாரொ
எனுக்கு இருசாதிக் கூட்டத்திலெ
நா இருந்த மரம் கொள்ளலையெ...
எனுக்கு நெல்லி நெகலோரொ
நெல்லிமரம் சூதாடும் நா
நெத்திலெ பொறந்தப் புள்ள
நின்னு பொலம்ப சொந்தமில்ல!
வாழமர நெகலோரொ
வாழ்மரொ சூதாடும்
நா வனத்திலெ பொறந்த புள்ள எனுக்கு வந்து அழ சொந்தமில்ல!
எனுக்குச் சின்ன வயசினிலெ
சித்தாட கட்டுன நாளையிலெ
சிறு சடங்குப் போடுமுன்லெ
சிரிச்சி நாமுன்னெ அழுதுவிட சம்மதமா..... ஆங்...
பாவாடக் கட்டுமுன்னெ
மாபெருஞ்சடப் போடுமுன்னெ
பேச்சில எறங்குமுன்னெ பிரிஞ்சிவிட சம்மதமா..... ஆங்...
பதுங்கு வரவானது
பஞ்சாங்கம் பாத்தாலும்
பதுங்கும் பதராச்சி
எனுக்குப் பெத்த பஞ்சாங்கமும் பொய்யாச்சீ.....ஆங்...
தெப்பகுளம் எகிறிக்குதிக்குலான்னா
எலையும் சறுக்குதம்மா...
என் நாகமும் சீறுதம்மா...
கட்டு செம பன ஓல
பக்கத்துல தெப்பகுளம்
நாபதறிக் குதிக்கிலான்னா பல நாகமும் சீறுதம்மா..... ஆங்...
என்னப்பெத்த அம்மாளும்அப்பனொ
எனுக்கு என்ன கெதி வெச்சிருக்கே?
நா அழுது அழுது பொலம்பறது
உங்குளுக்குக் கேக்கலையொ... ஆங்..
அய்யோ!
பாம்புக்கு ரெண்டுக் கண்ணு
பரமசிவன் பெத்தப்பொண்ணு
நா பாம்ப நோக அழுலப்பா - என்னப்
பெத்த அப்பன நம்பி அழுறேம்பா... ஆங்...
எனக்குத் தேளுக்கு ரெண்டுக்கண்ணு
தேவேந்திரன் பெத்தப் பெண்ணு
தேனிருக்கும் பள்ளத்திலே - அந்த
கொடுமைக்கார பாவிங்கொ - அந்த
தேனிருக்கும் பள்ளத்திலெ!
தாழவிட்டுத் தள்ளினாங்கொ...
நா தேள ஒதறுவேனொ இல்ல
தெனறி விழுவேனொ!
பாம்ப ஒதறுவேனொ இல்ல
பதறி விடுவேனொ!
எனக்குப் போருப்பொராண்டு வரும் என்ன வுட்டுப் போன சீமானெ நா
பொல்லாதாங்கொ எனக்கு
வெறுவாயில தண்ணீ வரும்...
நீங்க இல்லாத நாட்டுல எனுக்கு
கொடுமைக்காரப் பாவிங்கயெல்லாஞ்
சேந்து பாழுங்கணத்தெ தள்ளுறாங்கொ.
 
- தி.நீலாம்பாள், கோட்டக்காடு, செய்யூர், வயது:48.

விடுகதை
 
இரும்புலி ஓடையில அவரவர் ஜாடக்கண்டு
அந்த மாமனக்கண்டு, அதட்டி மெரட்டி
காலால களையத் தாக்கி
எட்டு நாள் ஒரு வாரொ
கொட்டைய நாதுண்ணு பழத்த உனக்குக் குடுத்து
காப்பாத்தி வெச்ச என்னையெ நீ
கொடுப்பனச் செய்தியெ!
 
இது தா விடுகதை
இதுக்கு அர்த்தொ இன்னான்னா,

அதாவது, ஒரு ராஜா தெனமொ காட்டுக்கு வந்து எதனா ஒரு மிருகத்த வேட்டையாடுவாரு. அப்டி வேட்டையாடி வீட்டுக்கு எட்த்தும் போயி அது சமச்சி சாப்பிடுவாரு. அப்டீ இருக்கும்போது ஒரு நாளு சிங்கோ ஒண்ணு அவுர தொரத்த ஆரம்பிச்சிது. அவுரு பயிந்துக்கிணு காட்ல ஓடுவாரு. என்னைக் காப்பாத்துங்கொ, என்னைக் காப்பாத்துங்கொன்னு ஓடுவாரு, ஒருத்தரொ காப்பாத்துல அவுர. அப்போ ஒரு மரத்துல நெறய கொரங்குங்கொ இருங்கோ, அதுங்கொ மரத்து கெளைல ஒன்ன தாக்கி அவுர மேல ஏத்திக்கிணு, காப்பாத்துங்கொ அந்த சிங்ஙொ அந்த மரத்தூங்கீ யவோ படத்துங்கடுங்குது. நீ கீய வரமா நா போப்போறது இல்லன்னிக்கிணு.
இப்படி எட்டு நாளு ஒரு வாரமா மேலியெ இருக்குறாரு. சாப்பாடு ஆகாரொ எல்லா இந்தக் கொரங்குங்ஙொ மரத்துலார்ந்து பழோ காயி எல்லாத்தியொ குடுத்துட்டு, அந்த கொட்டைங்கள இதுங்கொ சாப்புடொ. இப்டீ எட்டு நாளு காப்பாத்திங்கிதுங்ஙொ. இந்த சிங்ஙொ கீயவெ இருந்து பாத்துக்குணு, எட்டு நாளு ஆயிப்போச்செ இன்னொ இன்னா பண்றதுன்னு போய்டுது.
எட்டு நாளிக்கு அப்றொ சிங்ஙொ போனதே இந்த ராஜாவ கீய எறக்கி வுட்டு வூட்டுக்கு அனுப்புதுங்கொ. இவரும் வூட்டுக்கு வந்துட்றாரு. ரெண்டு மூணு நாளு ரெஸ்ட் எட்த்துட்டு மறுபடியொ காட்டுக்கு வேட்டைக்கிப் போறாரு. தெனொ வேட்டையாட்ற மிருகங்களா வூட்டுக்கு எட்த்தாந்துடுவாரு. ஒரு நாளு எந்த மிருகமொ கெடைக்கில. கெடைக்கிலன்றதுக்காக ஒரு குட்டிக் கொரங்க சுட்டு எட்த்தும் போயிட்றா. அந்தக் குட்டிக் கொரங்ஙொட தாயி கொரங்கு தவிக்குது. இதுங்ஙொ நெனெக்கிது, இவன நம்போ எப்டீல்லா காப்பாத்துனொ, இவுனுக்கு பழொங் குட்துட்டு, நம்மோ கொட்டைய சாப்புட்டு இவுன பாதுகாப்புப் பண்ணி வெச்சிருந்தொ, நம்பொ கொழந்தைன்னுக்கூட பாக்காம சுட்டு எட்த்தும் போய்டானேன்னு, அழுதுக்கிணு கொண்டுக்குணு இருக்குதுங்கொ.
மறுபடியொ அந்த ராஜா வேட்டைக்கு வரும்போது அந்த சிங்ஙொ மறுபடியொ பாத்து தொரத்துது. இவெ மறுபடியொ அந்த எடத்துக்குத்தா ஓட்றா. என்னக் காப்பாத்துங்கொ! என்னக் காப்பாத்துங்கோண்ணிக்கிணு. அதுக்கு அந்த கொரங்குங்கொ சொன்னதுதான் மேல இருக்குற பழமொழி .
- மு.சாந்தி, அகரம்தென், வயது:45.