புதன், 27 நவம்பர், 2013

ஒற்றைத் தட்டு தராசு



 - வெள்உவன், வரலாற்று ஆய்வாளர், திருநெல்வேலி

                      
            மனித நாகரிக வளர்ச்சியில் வணிகம் என்கிற செயல்பாட்டின் பங்கு என்பது ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது.  வணிகத்தை மேற்கொண்டவர்கள் வணிகர் எனப்பட்டனர். வணிகர்கள் பல நாடுகளின் எல்லா பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்குத் தேவையான பொருள்களை விற்பனை செய்வதும் அந்தப் பகுதியில் உற்பத்தியாகும் உற்பத்திப் பொருள்களை கொள்முதல் செய்வதும் கொள்முதல் செய்த பொருள்களை அந்தப் பொருள்களின் தேவை உள்ள பிற இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதுமான ஒரு செயல்பாடுதான் வணிகம் எனப்படுகிறது. இந்த செயல்பாட்டினூடே வணிகர்களின் நாடுகளுக்கிடை யேயான போக்கு-வரத்து என்பதான நிகழ்வினால் ஓர் இடத்தின் பண்பாடு, மொழி, அறிவு, பழக்க வழக்கம், அறிவியல் போன்றன இயல்பாகவும் மறைமுகமாகவும் அவர்களினால் கொண்டு செல்லப்பட்டு மற்ற இடங்களில் பரவும் நிலை உருவாகிறது. வணிகம் என்ற செயல்பாட்டினால் உண்டாகும் பக்கவிளைவு இது. இப்பக்க விளைவு மக்களின் நாகரிக வளர்ச்சிக்கு உந்து சக்தியாக திகழ்ந்தது.
            விற்பனை அல்லது கொள்முதல் என்பதன் ஆதாரமாக விளங்குவது அளவிடுதல் ஆகும். அளவிடுதல் என்பதன் அடிப்படையில்தான் பொருள்களின் அளவு கணக்கிடப் படுகிறது. இவ்வாறான கணக்கிடுதலுக்கு  நமது மரபில் ஏழு வகையான அளவுமுறைகள் இருந்திருக்கின்றன என்று தெரிய வருகிறது. அவை எண்ணல், நிறுத்தல், முகத்தல்,  பெய்தல் நீட்டல், தெரித்தல், சார்த்தல் என வகைப்படுகின்றன.


  • எண்ணல்: பொருட்கள் ஒன்று.. இரண்டு... மூன்று... என்றவாறு எண்ணிக் கணக்கிடுதல் எண்ணல் அளவு ஆகும். எல்லா அளவு களுக்கும் இது அடிப்படை அளவு ஆகும்.
  • நிறுத்தல்: பொருட்களை நிறுத்து அதன் எடையை அறிவது நிறுத்தல் அளவு ஆகும். பொன், வெள்ளி போன்றனவற்றை நிறுக்கச் சிற்றளவுகளும் வணிகப் பொருட்களை அளக்கப் பேரளவுகளும் இருந்தன. துலாக் கோல் துணைகொண்டு பொருட்கள் நிறுக்கப் படுகின்றன.
  • முகத்தல்: நெய், பால் போன்ற நீர்மப் பொருள்களை முகந்து அளப்பது முகத்தல் அளவு ஆகும். நீர்மப் பொருள்களைக் கூம்பக் கூம்ப அளக்க இயலாது. படி, வள்ளம் போன்ற அளவுகலன்களின் மேற்பகுதி சமமாக இருக்கும்படிதான் அளக்க முடியும்.
  • பெய்தல்: தானியம் போன்ற கூல வகைகளை அளவுகலன் களில்   தானியங்களைப் பெய்து அதன் வாய்மீது கூம்பக் கூம்ப அளப்பது பெய்தல் அளவாகும்.
  • நீட்டல்: எண்ணல் அளவுக்கு அடுத்தப்படியாகக் கருதத்தக்கது. இரண்டு புள்ளிகளின் இடையிலுள்ள தூரம் நீளம் ஆகும். இந்தத் தூரத்தை அளப்பதே நீட்டல் அளவாகும். வேட்டி, புடவை போன்ற அறுவைப் பொருள்களும், நிலங்களும், சாலைகளும்  நீளத்தால் அளக்கப்படுகின்றன.
  • தெறித்தல்: காலத்தை அளப்பது தெறித்தல் அளவாகும். ஆண்டு திங்கள், நாள், நேரம் அனைத்தும் இதில் அடங்கும்.
  • சார்த்தல்: சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி ‘இப்படி’, ‘அதைப்போல’ என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவாகும்.
மேலே கண்ட அளவுமுறையில் குறிக்கப்படுகிற நிறுத்தல் அளவு  துலாக்கோல் என்கிற சாதனத்தின்  துணைகொண்டு பொருள்கள் நிறுக்கப்படுகின்றன. இந்த நிறுத்தல் என்பதன் தொமையை ‘துலாக் கோலியல்பே தூக்குங் கோலை.....’ என்கிற தொல்காப்பிய வரிகள் நமக்குப் புரிய வைக்கின்றன. அது போலவே திருவள்ளுவரும் “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்  அமைந்தொருபால்     கோடாமை சான்றோர்க் கணி”  என்பதாகத் திருக்குறளில் துலாக்கோல் பற்றிப் பேசுகிறார். இந்தத் துலாக்கோலைப் பயன்படுத்துவது போன்ற சிற்பங்களை நமது கோயில்களில் நம்மால்  இன்றும் காண முடிகிறது என்பதும் துலாக்கோலின் (ஒற்றைத் தட்டு தராசு) பயன்பாடு நீண்ட நெடுங்காலமாக நமது பண்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என்பதற்கான கூடுதல் சான்றாக இருக்கிறது.

 
                 இந்தத் துலாக்கோல் என்பது இன்றைய நாளில் தராசு என்று குறிப்பிடப்படுகிறது. தராசு என்கிற துலாக்கோல் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.  பொதுவாகத் தராசு என்பது இரண்டு தட்டுகள் கொண்ட ஒன்றாகவே, நம்மால் புரியப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு தட்டு கொண்ட துலாக்கோல் என்கிற தராசும் நம் ஊர்களில் காலம் காலமாய்ப் பண்டங்கள்  நிறுக்க  நம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிற  ஒன்று.  இதை  நம் ஊரில்  'வெள்ளிகாவரை' என்று சொல்வார்கள். சில இடங்களில தூக்கு, தூக்குகோல் என்றும் சொல்லப்படுகிறது. 'வெள்ளைக்கோல்வரை' என்கிற சுத்தமான, அழகான தமிழ் சொல்தான் நம் வாய்களுக்குள் நுழைந்து சிதைந்து  வெள்ளிகாவரைன்னு ஆகிப் போய்விட்டது. அந்தக் கோலில் வெள்ளை நிறத்தில் சில கோடுகள் வரைந்திருப்பார்கள். அதனாலதான் இந்தப் பெயர். அந்தக்  கோடுகள் தான் எடைகளுக்கான குறியீடுகள். 
                   பொதுவாக தராசு என்றால்  எடைக்கல் வைப்பதற்கு ஒரு தட்டு என்றும், எடை போட வேண்டிய பொருளை  வைப்பதற்கு மற்றொன்றும் என்பதாக இரண்டு தட்டுகள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த வெள்ளிக்காவரை என்கிற தூக்குகோலில் ஒரு தட்டுதான் உண்டு. அந்தக் கோலில் வரைந்திருக்கிற  கோடுகள்தான் எடை அளவு. ஒவ்வொரு கோடும் ஒவ்வொரு எடையைக் குறிக்கும் குறியீடு ஆகும்.  அங்கும் இங்கும் நகர்த்துகிற மாதிரி அந்தக் கோலில் ஒரு சின்ன நூல் கயிறு கட்டியிருப்பார்கள்.  தேவையான எடைக்குண்டான கோட்டுக்குக் கயிற்றை நகர்த்திப் பிறகு அந்தக் கோட்டிலேயே கயிற்றை இறுக்கி எடை போட வேண்டியபொருளைக் கோலில் உள்ள  ஒற்றைத் தட்டில் வைத்துக்  கோலைத்  தூக்கி எடை போடுவார்கள்.
எடை போடும் போது துலாக்கோலின்  கோல், படுக்கை வசத்தில் நேராய் இருந்தால் சரியான எடை காட்டுகிறது என்று அர்த்தம். மேலாகத் தூக்கிக்கொண்டு இருந்தால்  நிறுக்கப்படுகிற  பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமாய் துலாத் தட்டில்  இருக்கிறது என்று  அர்த்தம். கோல் கீழாகத் தாழ்ந்தால் நிறுக்கப் படுகிற  பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கும் குறைவாக இருக்கிறது என்று பொருள். இப்போது  புழக்கத்தில் இருக்கிற இரட்டைத் தட்டு தராசை விட இந்த ஒற்றைத் தட்டு தராசுக்குச் சில விசேஷத் தன்மைகள் உண்டு. இதில் பண்டங்களை நிறுக்கத் தனியாக எடைக்கல் என்று  ஒன்று  தேவையில்லை. 

இரட்டைத்தட்டுத் தராசில் ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருளை  நிறுக்க வேண்டும் என்றால் எடைக்கல் ஒரு கிலோ , எடை போட வேண்டிய பொருள் ஒரு கிலோ என்று இரண்டு கிலோ எடையைத் தூக்குவதற்கான சக்தியை நம் உடல் செலவழிக்க வேண்டும். ஆனால் ஒற்றைத் தட்டு தராசில் இந்த பிரச்சனை இல்லை. ஒரு கிலோ பொருளை நிறுக்க ஒரு கிலோவைத் தூக்குவதற்கு வேண்டிய சக்தியைச் செலவழித்தால் போதும்.
             இன்று தொடர்வண்டி நிலையங்கள், லாரி ஆபீஸ் போன்ற இடங்களில் பண்டங்கள் நிறுக்கப் பயன்படுத்தப்படுகிற ‘பிளாட்பாரம் பேலன்ஸ்’ களுக்கு ஆதிமூலமாய் இருப்பது  நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வருகிற ஒற்றைத் தட்டு தராசுதான். நாம் மேம்படுத்தியிருக்க வேண்டிய நம் தாத்தாக்களின் தொழில் நுட்பங்களை எல்லாம் வெளிநாட்டுக்காரன் மேம்படுத்திக் கொண்டு இருக்கிறான். நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். என்னகொடுமை இது?....           
திருவள்ளுவர் சொன்ன “சமன் செய்து சீர்தூக்கும் கோல்"இந்த ஒற்றைத் தட்டு தராசுதான்.. இந்த சமன் செய்து சீர்தூக்கும் கோல் என்பது வேறு ஒன்றை நினைவு படுத்துகிறது. தமிழ் மாதம் ஐப்பசிக்குத் துலாம் மாசம் என்ற பெயர் உண்டு.. சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் இது என்பதால்தான்  இந்தப் பெயர். சூரியன் துலாம் ராசியில் நுழைகிற நாள் அன்றைக்குப் பூமியில்  பகலும் இரவும் சம நீளத்தில் இருக்கும். அதாவது பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம். என்பதாக.  மற்ற நாள்களில் எல்லாம் பகலுக்கும் இரவுக்கும் நீளத்தில் கொஞ்சம் கூடுதல் குறைவு வித்தியாசம் இருக்கும். எனவே சமமான நீளம் கொண்ட பகல் இரவை கொண்ட நாள் இருக்கிற மாதத்திற்கும் ராசிக்கும் துலாம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
இன்னும் ஒரு கூடுதல் செய்தி வானத்தில் துலாம் நட்சத்திரம் நமது ஒற்றைத் தட்டு தராசு அதாவது துலாக்கோல் வடிவத்தில்தான் இருக்கும். இப்படி வானியல், கணக்கு, கணக்கீடு, சமானம் என்று நம் முன்னோர்களின் பன்முக அறிவு செழிப்பை நினைத்துப் பார்க்கையில் நம்மால் இன்று வியந்து ஆச்சரியப்பட மட்டுமேதான் முடிகிறது. நம் முன்னோர்களின் அறிவுத் தொடர்ச்சியின் கண்ணி நம்மை விட்டு எப்போது, எங்கே அறுந்து போனது என்கிற கேள்விக்கான பதிலை நம்மால் கண்டடைய முடியாத நிலை இன்று இருப்பதுதான் நிஜம்.
அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த சில நிறுத்தல் அளவைகள்:

பொன் முதலியவை நிறுக்கும் அளவு

4 நெல்லெடை = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பணவெடை
5 பணவெடை = 1 கழஞ்சு
8 பணவெடை = 1 வராகனெடை
4 கழஞ்சு = 1 கஃசு
4 கஃசு = 1 பலம்

பல்வகைப் பண்டங்கள் நிறுக்கும் அளவு

32 குன்றிமணி = 1 வராகனெடை
10 வராகனெடை = 1 பலம்
40 பலம் = 1 வீசை
100 பலம் = 1 கா
6 வீசை = 1 துலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்.

சாதிக் கழுவில் பிளக்கப்படும் சிலுவை



- இறைச்சேரி ஆரோக்கிய ஜோ, உளுந்தூர்ப் பேட்டை, விழுப்புரம்.

கட்டுரைக்கான முதன்முயற்சிதான். அதாவது, எங்க தாத்தா பேரு களியன் என்ற ஞானபிரகாசம். இதுக்கு என்னன்னு கேக்குறீங்களா? அங்கதான் டவுட்டு. இது என்ன களியன்... இது ஊர் பேரா இருக்குது. ஞானபிரகாசம் கிறிஸ்துவப் பெயரா இருக்குன்னு யோசிச்சேன்.ஒரு நாள் சாயந்திரம் மரியக்குழந்தைய பாக்கப்போனேன். யாரு மரியக் குழந்தன்னு கேக்கறீங்களா? எங்க பாட்டிதான். என்னடா.. நான் உயிரோடதான் இருக்கனான்னு பாக்க வந்தியான்னு கேட்டுச்சி. 85 வயசுலயும் சத்தம் கனீர்னு இருந்துச்சி. ஒன்னும் இல்ல ஆயா, நம்ம தாத்தா பேரு களியன்னு சொல்றாங்க. அதுக்கு அடுத்து ஞானபிரகாசம்னும் போட்டுருக்கு என்ன ரெண்டு பேரு? அப்படின்னு கேட்டேன். அதுக்கு ரொம்ப கோவம். என் வூட்டுக்காரு பேர நீ சொல்லிட்டியான்னு. சரி கோபப்படாத ஒழுங்கா சொல்லுன்னேன். அர்த்தம் மட்டும் தான் சொன்னுச்சி. ஒரு முறைகூட தன்னோட புருசன் பேர சொல்லவேயில்ல.


சரி பேருக்குப் போவோம்.. எங்க தாத்தா பேரு களியன். அவரு இந்துன்னு சொல்றாங்க. தன்னோட 10 வயசுல அந்த ஊருக்கு மதத்தைப் போதிக்க வந்த பாதர் நோயல்தான் எங்க தாத்தாவுக்கு ஞானப்பிரகாசம்னு ஞானஸ்தானம் கொடுத்தி ருக்காரு. எங்க தாத்தா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவரு. பாதர் திரிதோ தாழ்த்தப் பட்ட எளிய மக்களுக்குக் கடினமாக உழச்சாரு. சேரிப்பகுதியில இருக்குற மக்கள முன்னேத்தனும்னு நெனச்சி சேரிப்பகுதிக்கு வந்தப்ப எங்க தாத்தா விளையாடிக் கிட்டு  இருந்தாறாம். அவரு உடனே தன்னோட பையிலிருந்த பால் பவுடர்... எல்லாம் கொடுத்தாறாம். எங்க தாத்தாவுக்குப் 15 வயதுன்றதால வாத்தியாருக்குப் படிக்கிறியான்னு பாதர் திரிதோ கேட்டாறாம். எங்க தாத்தா பயந்துபோயி ஓடிட்டாறாம். சொந்தகாரங்க எங்க தாத்தாவுக்கு புத்திமதி சொல்லி பாதர் திரிதோ கிட்ட கொண்டு வந்தாங்க.பாதர் திண்டிவனத்துல இருக்குற ஆர்.சி. டீச்சர் டிரைனிங் ஸ்கூல்ல சேர்த்து எங்க தாத்தாவ படிக்க வச்சாரு. படிப்பு முடிச்சி ஊருக்கு வாத்தியாரா வறாரு, அதேநேரம் பாதர்நோயல் எங்க ஊருக்கு வறாரு. அந்த ஞானஸ்தானப் பேருதான் ஞானப்பிரகாசம். எங்க ஆலயம் சிலுவ வடிவத்துல இருக்கும். கிழக்குத் தலைப் பகுதியிலதான் பூச. வடக்குப்பக்கம் கன்னி மார்கள். முகப்புப் பகுதியான மேற்குப் பகுதி முழுவதும் ஜாதி இந்துக்களுக்கானது... சாரி கிறிஸ்தவர்களுக்கானது, தெற்குப் பகுதிதான் எங்க பக்கம். இதுக்குப் பற சாலன்னு பேரு. பாதர் நோயல் வந்து முகப்பு சாலயில புது நன்ம தரும்போது அப்பத் தான் முதன்முறையா நாலு தலித் பசங்களுக்குப் புதுநன்ம பெறப்போறாங் கன்னதும் ஜாதி வெறியனுங்க (ஆமா... கிறிஸ்தவனுங்க) நாலு பேரயும் அடிச்சித் தள்ளிட்டு பாதர் நோயலயும் அடிச்சி சாவு மணியும் அடிச்சி வெளியே தள்ளிட் டானுங்க.
 அப்பறம் ஆலயம் மூடப்பட்டது. எங்க தாத்தா எங்க  ஊருல ஆர்.சி. துவக்கப் பள்ளியில வாத்தியாரா வேலை செஞ்சாரு. வேலை செஞ்சப்ப, அவருக்குப் 12 புள்ளைங்க. தன்னோட முதல் பிள்ளைய சாமிக்கு காணிக்கைக் கொடக்க றேன்னு பாதர் நோயல் கிட்ட சொல்ல, எங்க மாமாவ சாமியார் படிக்க கடலூர் ஆக்னெஸ் செம்னரி அனுப் பிட்டாரு. அப்புறம் மற்ற மாமா மூனு பேரையும் சென்னை லெயோலால படிக்க வச்சி அழகு பாத்தாரு எங்க தாத்தா. அப்பறம் எங்க சித்திய திருச்சியில ஹோலி கிராஸ்ல டீச்சர் டிரெயினிங் ஸ்கூல்ல சேத்து, எங்க அம்மாவ 10 வரைக்கும் படிக்க வச்சாரு எங்க தாத்தா.
எங்க ஊருல அப்போதைக்குச் சுமார் 1000 பேரு ஊர்க்காரங்க. சேரியில 200 பேரு. இந்தச் சேரியச் சேர்ந்த எங்க குடும்பம்தான் முதல்ல கல்வி பெற்ற குடும்பம். அங்க எங்க குடும்பம் மட்டும் இல்ல, எங்க ஊருல இருந்த முக்கால்வாசி குடும்பம் கிறிஸ்தவரா மாறிட்டாங்க. எங்க மாமா லெயோலா கல்லூரில  பேராசிரியரா இருந்தாரு. எங்க ஊருல வாத்தியாரா வேலை செஞ்ச எங்க தாத்தாவுக்கு சாகுற வரைக்கும் பேரு, பறை வாத்தியாருதான். என் பேரச் சொன்னாக்கூடத் தெரியாது. பறை வாத்தியாரு பேரன்னு சொன்னா புரிஞ்சிப்பாங்க. பிரான்ஸ் நாட்டு பாதருங்க பல முயற்சி செஞ்சி, எங்க ஊரையும் ஊரச் சுத்தி இருக்குற அனைத்து மக்களுக்கும் உதவி செஞ்சாங்க. உதவி மட்டும் இல்லாம... எங்க கிராமத்துல பள்ளி, மருத்துவமனை கொண்டு வந்தாங்க. அனைத்து மக்களையும் ஒன்னா பாத்தாங்க. காலப்போக்குல வெளிநாட்டு  பாதிரியாரு போயி, நம்ம ஊர்... பகுதியைச் சார்ந்தவங்க பாதிரியா வந்தாங்க. அப்போ சாதி வென்று கிறித்தவம் போனது. இன்னைக்கு எல்லாம் கிறித்தவறா இருக்கோம். ஆனா, ஆலயத்துல சம உரிமை இல்லை. தலித் கிறித்தவங்க தனியாதான் போகணும், தலித் பகுதிக்குத் தேர் வராது.
எங்க வூருல முக்கியமான விஷயம் இந்தியாவுலயே எங்கயும் 4.30 மணிக்கு திருப்பலி கிடையாது. ஆனா எங்க வூருல 4.05 முதல் செபம், 4.25 மணிக்கு இரண்டாவது மணி, 4.30 மணிக்கு முதல் திருப்பலி. சும்மா கிடையாது... ஆலயத்துக்குள்ள இடம் இல்லன்னு வெளிய ஃபுல்லா உட்காருவாங்க. கோயில்ல இருந்து அஞ்சு வீடு தள்ளிதான் எங்க வீடு. சும்மா கிடையாது குருவானவர் சொல்ற வார்த்த அவ்வளவு தெளிவா இருக்கும். எங்க அப்பா இன்னக்கி வரைக்கும் (60 வயது) முதல் திருப்பலி அதான் 4.30 மணி பூசைக்கி தவறாம போறாரு. அவரு... அப்படின்னா என்னென்ன பாடு பட்டுருப்பாருன்னு பாக்கலாம் வாங்க..
எனக்கு நெனவு தெரிஞ்சதுலருந்து என்ன 6 மணி பூசைக்கு அனுப்பாம வுட மாட்டாரு. நான் அஞ்சாவது படிக்கும் போது என்ன ஆலயத்துல பாதர் தங்குற  இடத்துல சேத்துட்டாரு. வேற ஒன்னும் இல்ல. கோயில்ல பூசை நடக்குறப்ப நாங்க அவருக்கு உதவி பண்ணுற பணிதான். அதுக்குப் பீடப் பணியாளர்னு பேரு. டெய்லி எங்க வீட்ல சாப்புடுவோம். பாதர் இல்லத்துல வராண்டாவுல தூங்குவோம். காலையில ரெண்டாவது பூசை முடிஞ்சவுடனே  ஸ்டடி, 6.30 மணியிலிருந்து 8 மணி வரை நடக்கும். அப்புறம் வீட்ல சாப்டுட்டு பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு திரும்பணும். பாதர் இல்லத்துல  எங்க புத்தகப் பை இருக்கும். எங்களுக்கு ஒரு தனி ரூம். காலை முதல் பூசை, பூசை உதவி செய்வோர் பட்டியல், இரண்டாவது பூசைக்கு உதவி செய்வோர் பட்டியல் வாராவாரம் லிஸ்ட்டு ஒட்டுவாங்க.  அத பாத்தா பயந்து போயிடுவேன் ஏன் தெரியுமா? என் பேரு எத்தன நாள் முதல் பூசையில இருக்கும்னு. ஏன்னா, 4 மணிக்கே எழுந்திரிக்கணும், ரொம்ப முக்கியம் சோம்பாய் தாத்தா. இவரு யாரு தெரியுமா? இவருதான் பாதருக்குச் சமக்கிறவரு. காலி வொயின் பாட்டில்ல தண்ணி எடுத்துக்கிட்டு வந்து 4 மணிக்கு எங்க மேல ஊத்தித்தான் எழுப்புவாரு... நான் அங்க இருந்த ஏழு வருஷம் அதே நெலமதான். அங்க இருக்கும் போது எனக்கு ஒரு டவுட்டு... அங்க நானு மட்டும்தான் சேரிக்காரன். வேற யாரும் அங்க இல்ல. அதனால எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. அங்க இருந்த பாதிரியாருங்க... என்னைய சமமா பாக்குறதா எனக்குத் தெரில.
எங்க பகுதிக்குத் தேர் வராது. புது நன்மை, கல்யாணம் சாவுன்னு ரொம்ப நாளாவே கஷ்டமா இருந்தது. பிரெஞ்சுக்கார சாமியார் செய்த புரட்சி மாதிரி இல்லன்னாலும் பரவாயில்ல. சாதிய வளக்காம இருப்பாங்களான்னு பாத்தா, இன்னிக்கு வரைக்கும் அவங்க சாதிக்காரங்கதான் சாமியார் படிக்கிறாங்க. எங்கள ஒரு சக கிறிஸ்தவனாக்கூட பாக்குறது இல்ல. இதெல்லாம் சரி செய்யணும், உரிமைய வென்றெடுக்கணும்னு சொல்லி 2008ல எங்க பகுதியில சகாயமாதா கொடிய நாங்க எங்களுக்கும் பங்கா கொடுங்கன்னு கேட்டோம். ஆனா பேராயரே, கிறிஸ்தவம்-சமத்துவம் சாதிக்கு வேலையில்ல அது முடியாதுன்னு சொல்லிட்டாரு. சம உரிமை இல்லன்னுதான் நாங்க தனி பங்கு வேணும்ன்னது... புரிஞ்சி புரியாத மாதிரி நடிக்கிறாங்க!  அது அவரோட  மனோபாவம். 


எங்க தாத்தாவும் ஆயாவும்


எங்களுக்குச் சம உரிமை கேட்டு பொதுப்பாதையில நடக்கத் தடை, தனி சுடுகாடு, தனித் தூம்பா, சேரித்தெருக்களுக்கு தேர்பவனி புறக்கணிப்பு உள்ளிட்ட தீண்டாமை வடிவங்களை ஒழிகக் கோரி திரு மேத்யு தலமையில சேரிக்காரங்க எல்லாம் சேர்ந்து எங்க பகுதியில உண்ணாவிரதம் இருந்தோம். இதுக்கு விளைவா, 2008 மார்ச் 8 ஞாயித்துக் கிழம அன்னிக்கி வீடுகளுக்குத் தீ வச்சதும், கொளுத்தினதும், எங்களுக்கு வெட்டுக்காயங்களும் தான் மிச்சம். இதுல குறிப்பிட்டுச் சொல்றது என்னன்னா இரட்சகநாதன்ற எங்க மாமாவ அடியடின்னு அடிச்சி அவுரு லுங்கிய கிழிச்சி, அவர பைக்குல கட்டி காட்டுக்கு இழுத்துகிட்டு போயி 30 பேருக்கு மேல சேர்ந்து முள்ளு மேல போட்டு சாதிவெறியோட அடிச்சானுங்க. அவுரு தாகம் தாகம்னு தண்ணிக் கேட்டாரு. அப்போ வாயில மூத்திரத்த வுட்டு அடிச்சானுங்க. அப்புறம் எப்டியோ ஆஸ்பிட்டலுக்குப் போனோம்... உடம்புலயிருந்து எடுத்த 26 முள்ளுகல விஜயா ஆஸ்பிட்டல் டாக்டருங்களே ஆச்சரியமா காட்டுனாங்க. இந்தச் சாதிவெறி வன்முறை துப்பாக்கிச் சூட்டுல முடிஞ்சது. 126 வருசம் ஆகியும் நீதி மன்றம் உத்தரவு கொடுத்தும் இன்னைக்கி வரைக்கும் சேரிக்குள்ள தேர் வரல. அனைத்து கிறிஸ்தவர் களுக்குமான மாதாவே...  எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!! அடுத்த முறை ஆய்வுக் கட்டுரையா தர ஆசப்படுறேன்.