புதன், 27 நவம்பர், 2013

நம்பிக்கை



சிறுகதை:
 
- லீலா கணபதி, பேராசிரியை (ஓய்வு), அரசு கவின்கலைக்கல்லூரி, சென்னை.

அன்று வீட்டில் நான் தனியாகத்தான் இருந்தேன். என்னோடு வசிக்கும் மகள் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு ஏழு மணிக்குத்தான் வீடு திரும்புவாள். பகலில் வரும் வேலைக்காரியும் சமையல்காரியும் வேலை முடிந்தவுடன் சென்று விடுவார்கள். நான் கதவை தாளிட்டுவிட்டு, சற்று கண்ணயர்வது வழக்கம். அன்றும் அப்படித்தான் ‘டீ’ போட்டு குடித்துவிட்டு சற்று நேரம் உட்கார்ந்திருந்தேன். கடுமையான வெய்யிலும் சூடான ‘டீ’யும் சேர்ந்து வியர்த்துக்கொட்டி, உடம்பு கசகசவென்று இருந்தது. குளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, என் அறையை ஒட்டியுள்ள குளியலறைக்குச் சென்று குளிர்ந்த நீரில் குளித்து இளைப்பாற, தொலைபேசி மணி கணகணவென்று அடித்தது. தொலைபேசி மணிசப்தம் கேட்டாலே என் உடல் தானே அதனை நோக்கி ஓடிவிடும். பலமுறை என் குழந்தைகள், ‘ஏன் அவசரம்? எந்த முக்கிய வேலைக்காக அழைப்பு வரும்? அவசர அவசரமாக ஓடிவருவதை நிறுத்துங்கள்’ என்று சொல்லியும் என் உடல் என்னை அறியாமலேயே தானே இயங்கி ஓடிவிடும்.
ஆனால் இன்று தொலைபேசி மணி அடித்தாலும் குளித்து ஆர அமரத்தான் அதை எடுக்கவேண்டும் என சங்கல்பம் செய்துக்கொண்டு கைபேசியை மெத்தை மீது வைத்தேன். குளித்து முடிப்பதற்குள் மறுபடியும் அதன் அலறல். சற்று நேரத்திற்கொல்லாம் அதன் அலறல் தொடர்ந்து ஒலிக்க, நான் பொறுமையிழந்தேன். சங்கல்பம் காற்றில் பறந்தது. அங்கிருந்த துண்டை எடுத்து அவசரஅவசரமாச் சுற்றிக் கொண்டு படுக்கையறையை நோக்கிப் போனேன். தொலைபேசி விடாக்கண்டனாக ஒலித்துக் கொண்டேயிருக்க, ஏதோ முக்கிய சேதிபோலும் என்று எண்ணி குனிந்து அதை எடுத்து காதில் அருகில் வைத்தேன். ஒலியடங்கி அமைதி கொண்டிருந்தது. எனக்கோ எரிச்சல்; கோபத்துடன் அதைப் படுக்கையின் மீது போட்டேன். நிமிர்ந்தேன். ஐயோ! இதென்ன? என் முதுகில் தாங்கொண்ணா வலி. ஏதோ நொறுங்கியது போன்ற உணர்வு. ‘எங்கள் குலதெய்வமான கங்கேஸ்வரி தாயே’ என்று அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பி அழைத்தேன். ‘ஓம் சக்தி, ஓம் சக்தி என்னைக் காப்பாற்று’ கூவினேன்.   அதற்குள்   எனதுடல்   தரையில்   சப்பாணியாக உட்கார்ந்திருந்த நிலையில் கிடந்தது. பாரமான எனது உடல் பயங்கரமாக வேதனையைத் தந்தது. என்னைச் சுற்றி, கட்டில் ஒரு பக்கம்; நாற்காலி ஒரு பக்கம்; மற்றொரு பக்கம் கதவு. நான் தாறுமாறாக விழுந்து அவற்றின் மீது மோதாமல் தப்பினேன். விசித்திரமான வீழல்! வாய் ‘ஓம் சக்தி’ என்று கூவ, மனம் அடுத்தப் பக்கத்தில் இருக்கும் ‘நைட்டியை’ அணிய எண்ணி, உட்கார்ந்த வண்ணம் உடம்பை தரையில் தேய்த்து தேய்த்து மெல்ல மெல்ல நகர்ந்து, மிகுந்த பிரயத்தனத்துடன் ஆடையை உடுத்திக் கொண்டேன். அதற்குள் வாசற்கதவு தாளிடப்பட்டிருக்கிறதே, தாழ்ப்பாளை உடைத்தாலன்று யாரும் உள்ளே வர முடியாதே’ என்ற எண்ணம். இந்த எண்ண ஓட்டத்திற்கு பின்னர் எதுவுமே நினைவில்லை.
என்ன அதிசயம்! தாழ்ப்பாள் திறக்கப்பட்டு நான் மெத்தையின் மீது மல்லாக்காக ஒழுங்கான நிலையில் படுத்துக் கொண்டிருந்தேன்.
படுக்கையறையை விட்டு சற்று தூரம் நடந்து வந்து வாசற்கதவு தாழ்ப்பாளை எப்படி திறந்தேன், திரும்ப வந்து படுக்கையில் எப்படி சரியாக படுத்துள்ளேன், வலியால் கதறியவள் எப்படி அமைதியானேன்... எதையும் விளக்க முடியாது.
அதற்குள் அஸ்தமனம் முடிந்து, இருள் கவ்வியது. கீழ்வீட்டிலிருந்த ஒருவரை மாடிக்கு வந்து மின்விளக்கு போடும்படி கைபேசி மூலம் தெரிவித்தேன். அவரும் எதிர்கேள்வி எதையும் கேட்காமல் விளக்கைத் தட்டிவிட்டார். அடுத்தபடியாக என் மகளுக்கு செய்தி தெரிவிக்க வேண்டும். எனக்கு ஏதாவது என்றாலே பதறி துடிப்பவள். ஆகவே நான் என் பதட்டத்தையும், வலியையும் காட்டிக் கொள்ளாமல், ‘நான் கட்டில்மீது உட்காரும் போது எனது முதுகு மிகவும் வலிப்பதாகவும் மருத்துவரிடம் அழைத்துப்போகும்படியும் தெரிவித்தேன். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே, ‘கீழே விழுந்தீர்களா?’ என்று கேட்டாள். நான் ‘இல்லை’ என பதில் அளித்தேன். மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கான ஏற்பாட்டை வரும் வழியிலேயே செய்துவிட்டு வந்தவள், கட்டில் மீது படுத்திருக்கும் என்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். நான் அவளோடு மருத்துவமனைக்கு போகும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்து அதற்கானவற்றினை பரபரப்புடன் செய்தாள். ஒரு நர்ஸ் உதவிக்கு வந்தாள். பிறகு என்ன.. ஆம்புலன்ஸ்.. எக்ஸ்ரே... ஆஸ்பத்திரி...
ஏற்கெனவே விழுந்த அதிர்ச்சியில் என்மனம் என்ன ஆகுமோ என்ற கேள்வியை எழுப்பி எதிலும் நம்பிக்கையின்றி வேண்டாத சிந்தனைக்கு இடம் கொடுத்து உள்ளுக்குள் ஆரம்பித்தது. இந்த உடம்பு வாழ்நாள் முழுவதும் இப்படிதான் படுத்துக்கிடக்குமா என்ற கேள்வி. விடை காணா துக்கம்.
என் கால்கள் மூட்டுவலியால் நடக்க கஷ்டப்பட்டபோது பல ஊர்களைச் சுற்றி பார்க்கும் ஆசை மிகுதியால், ‘மாற்று மூட்டு அறுவை சிகிச்சை’ சென்ற வருடம் தானே செய்துகொண்டேன். அதிகமான பணத்தையும் அதற்காக செலவும் செய்தேனே; எல்லாம் வீணா? இன்று என்வாழ்வில் தினசரி வேலைகளைக்கூட என்னால் செய்துக்கொள்ள முடியுமா? நான் எழுந்து நடப்பேனா? வாழ்நாள் முழுவதும் மற்றவரை எதிர்பார்த்து படுத்துக்கொண்டே காலம் கழிப்பேனா? நினைக்கவே மனம் ஒப்பவில்லை.
இவ்வாறு நான் மனம் நொந்து படுக்கையில் இருக்கும் போது என்னைக்காண எங்கள் குடும்ப நண்பர் வந்திருந்தார். அவர் மருத்துவரும் ஆவார். அவரிடம் நடந்தது எல்லாம் கூறினேன். முதுகில் எலும்பு முறிவு என்ற சொல் அவரை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது போலும்.  எக்ஸ்ரேவைப் பார்த்து அதிசயப்பட்டார். அவர் என்னை நோக்கி மகிழ்ச்சியுடன் ‘நீ அதிஷ்டசாலி! இறைவன் தன் கருணையால் உன்னைத் தாங்கி பிடித்து பெரிய விபத்திலிருந்து காப்பாற்றிவிட்டார். அடிச்சுவடுகள் என்பதில் எழுதியிருப்பதுபோல் அவர் உன் கையை பிடித்துக் கொண்டு நடக்கவில்லை. உன்னை தன் தோளிலேயே சுமந்து பத்திரமாக பெரிய விபத்திலிருந்து காப்பாற்றியிருப்பது மிகப் பெரிய அற்புதம்’ என்றார். அப்போது அது என் நியாபகத்திற்கு வந்தது. ‘பகவான் தன் பக்தனது கையைப்பிடித்துக் கொண்டு உடன் அழைத்துச் சென்றபோது இரண்டு ஜதை அடிச்சுவடுகள் மணலின் மீது காணப்பட்டன. பின்னர் கண்டபோது ஒரு ஜதை அடிச்சுவடுகளே தெரிந்தன. அவன் மனம் பதை பதைக்க ‘இறைவா! என்னை தனியே தவிக்கவிட்டு சென்று விட்டீரே எனக் கேட்க, அன்று அந்த பக்தன் நடக்கவும் சக்தியின்றி இருந்தபடியால் தானே அவனைத் தோளில் சுமந்து சென்றதாகவும், அந்த ஒரு ஜோடி அடிச்சுவடுகள் இறைவனுடையது’ என்றும் விளக்கினார். இது நமக்குப் புரிவதில்லை. ‘இதைக்கேட்டு நான் அத்தனை பாக்கியம் செய்தவளா’ என்று வியந்தேன். நன்றி கூறினேன்.
எனது முதுகெலும்பு ஓரளவு முறிந்திருந்தாலும் எந்தவித பாதிப்பும் இன்றி சிறந்த முறையில் எல்லாம் வல்ல இறைவனால் காப்பாற்றப்பட்டிருக்கிறது அதை உணராமல் என் மனம் எப்படியெல்லாம் தவித்து, துன்பத்தில் ஆழ்த்தி துயரத்தில் மூழ்கடித்தது.
இறைவன் படைப்பில் மிக உயர்ந்த படைப்பு மனிதன்தானே! அந்த மனிதனை எத்தனை உயர்வாக சிறப்பாக படைத்திருக்கிறார். உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் எத்தனையோ பணிகளைச் செய்து அவனது ஆரோக்கியத்தை காத்துவருவதுடன் நினைத்துப் பார்ப்பதற்கரிய பல சாதனைகளைச் செய்ய வல்லதாக இருக்கின்றன. நாமோ அதைப்பற்றிய நினைப்பு சிறிதும் இல்லாமல் காலத்தை ஓட்டுகிறோம். ஏதேனும் உறுப்பு தன் பணியைச் செய்யாதபோதுதான் நமக்கு அதன் அருமை தெரிகிறது. நாம் ஒவ்வொரு உறுப்பையும் நன்றி உணர்வுடன் சரியானபடி கவனம் செலுத்தி காப்பாற்றவேண்டிய கடமையை மறந்து வாழ்கிறோம். அது பழுதடைந்து நாம் கஷ்டப்படும்போதுதான் விழிப்புணர்வு ஏற்படுகிறது.
நாம் படுக்கையில் இருக்கும் போது மனக்குரங்கு பேசிக்கொண்டே நம்மை துக்கத்தில் ஆழ்த்துகிறது. துயரத்தில் மூழ்கி அல்லல் படுகின்றோம். நம்மைப் பலப்படுத்துவதற்கு பதிலாக பலவீனமாக்கி ‘என்ன நேருமோ’ என்ற திகில்  கொள்ளச் செய்து சதா, கேள்விக்குறியை எழுப்பி நம்பிக்கையில்லா விடையை மேலும் மேலும் பெருக்கி மனக்கிலேசம் அடைகிறது. நடுநடுவே நம்பிக்கை தலை தூக்கினாலும் அதை ஏற்க மனப்பக்குவம் இல்லாமல் துயரத்தையே வளர்த்துக் கொள்ளுகிறது. என் முதுகெலும்பு காப்பாற்றப்பட்டு இருந்தபோதிலும் என் மனம் என்ன தவிப்பு தவிக்கின்றது.
இதற்கெல்லாம் என்ன காரணம்? நமக்கு எதிலும் நம்பிக்கையில்லை. எதிலும் சந்தேகம்; குழப்பம்; கலக்கம். நடக்கப்போகும் நல்லதைவிட தீயதையே நம் மனம் தேடி அலைகின்றது. இறைவன் அருளில் நம்பிக்கையின்றி நாமே நல்லதை நாடாமல் தீயதை நோக்கியே போகின்றோம். இவ்வாறு நன்மையற்ற தீய எண்ணங்களைத் தேர்ந்தெடுத்து மீளாத் துயர் அடைகிறோம். நல்லதை எண்ணி அதன் சுகத்தை உணர வழி தெரியாமல் துன்பம் அடைகின்றோம். இது ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கிறது.
ஒரு சமயம் நான் திருவண்ணாமலைக்கு சென்ற தருணத்தில் அதிதீ ஆசிரமத்தில் இரமண மகரிஷியின் சீடர் ஒருவரை சந்தித்துப் பேசியது என் நினைவிற்கு வருகிறது. ரமணரோடு அவர் இருந்தபோது நிகழ்ந்த ஏதேனும் ஒரு சம்பவத்தைக் கூறும்படி வேண்ட, அவர் இதனைச் சொன்னார்.
அதாவது பகவான் ரமணர் ஆசிரமத்தில் சத்சங்கம் நிகழும் போது பக்தர்கள் மட்டுமின்றி விலங்குகளும் – அதாவது ஆடு மாடு, நாய் முதலியவை உள்ளே வந்தால் யாரும் அவைகளை விரட்டுவதில்லை. அவைகளும் சமமாக அனுமதிக்கப் பட்டன. அங்கு அந்த விலங்குகளும் அமைதியாக இருந்து செல்வது வழக்கம்.
அத்தகைய சத்சங்கம் ஒன்று நடக்கையில் ஒரு பக்தர் ரமணரிடம் வந்து தன் மனம் சதா சர்வகாலமும் அடங்காது ஏதாவது எண்ணத்தில் சுழன்றுகொண்டே இருக்கிறது. இத்தகைய சஞ்சல மனத்தினால் அமைதியாக தியானம் செய்ய தன்னால் இயலவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். ரமணரோ அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. மௌனமாக இருந்தார். அன்று சத்சங்கம் துவங்கி அது முடிந்தவுடன் வழக்கம்போல் எல்லோருக்கும் அவரவர் இடத்திலேயே பிரசாதம் வழங்கப்பட்டது. இச்சமயம் ஒரு நாய் மட்டும் தன் இடத்தை விட்டு எழுந்து பிரசாதம் கொடுப்பவரைப் பின்தொடர்ந்து அலைந்துக் கொண்டிருந்தது. அதைக் கண்ட பகவான் ரமணர், அங்கு அமைதியாக வீற்றிருக்கும் மற்றொரு நாயை சுட்டிக்காட்டி, அது தனக்கு பிரசாதம் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அமைதியாக காத்திருக்கிறது. ஆனால் அலைந்து திரியும் இந்த நாய்க்கோ தனக்கு பிரசாதம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அவநம்பிக்கையில் சஞ்சலம் கொண்டு அலைகிறது. இந்த நிலையில் அதற்கு பிரசாதம் கிடைத்தாலும் அதனை அப்படியே ‘லபக்’ என்று விழுங்கிவிடும். அதனால் அந்த பிரசாதத்தின் ருசியை சுவைத்து அனுபவிக்கவும் முடியாது. ஆனால் அமைதியாக நம்பிக்கையுடன் காத்திருக்கும் அந்த நாய் தனக்கு கிடைத்த பிரசாதத்தை நன்கு சுவைத்து, ருசித்து சாப்பிட்டு திருப்தியடையும்’ என்று கூறினார்.
இவ்வாறு பகவான் ரமணர் பக்தர்களுக்குத் தேவையான அறிவுரைகளை குறிப்பாகவே உணர்த்துவார் என்று கூறினார்.

நினை


சிறுகதை:
- அ.தும்மா பிரான்சிஸ், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.
அவன் வேகவேகமாக குழித்தோண்டி கொண்டு இருந்தான். தோண்ட தோண்ட மணல் சரிந்து கொண்டே இருந்தது. இருள் சூழும் நேரம். வேகவேகமாகத் தோண்டி மணலை அள்ளி அள்ளி கொட்டிக்கொண்டு இருந்தான் தனி ஆளாக. வியர்வை பட்ட மண் மணம்வீசியது. மண் கிடைத்து விட்டது. அவன் உயரத்தைவிட ஆழமாக தோண்டிவிட்டான். குழியின் சுவர் முழுக்க இரத்தம் வழிவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான். குழியைத் தோண்டும் போது தனது பாதங்களையும் சேர்த்தே கடப்பாறையால் குத்திக்கொண்டு இருந்தான். தொடக்கத்தில் தெரியாமல் பாதத்தில் கடப்பறை குத்திக்கொள்ளப் பீச்சிய இரத்தம் மண்ணுடன் பட்டவுடன் உறிஞ்சிக்கொண்டு செம்மண்ணானது. மணப் பெண்ணானது.
ஏதோ ஒரு குப்பை மேட்டில் முளைத்திருந்த செடிகளுக்கு இடையே கிடைத்த மாங்கன்றை நடதான் இவ்வளவு ஆழமான குழியைத் தோண்டினான்.  ஆழம்தான் வளத்தைக் கொடுக்கும் என நம்பினான். காகத்தின் எச்சத்தில்கூட ஆலமரம் முளைக்கும். ஆனால் நிலைக்காது. கன்றுக்கு உரமாக தனது கால்களைக் கடப்பாறை யால் குத்திக் கிழித்து பிய்த்து குழியில் இட்டான். பின் தனது உடல் முழுவதையும் முடியும் வரை தானே குத்தி கிழித்து, பிய்த்து பிய்த்து குழிக்குள் துண்டு துண்டாகப் போட்டான். ஒவ்வொரு துண்டாய் குழிக்குள் தன்னை வீசிக் கொண்டபோது ஆனந்தமாய் சிரித்தான்.  சிங்கம்போல் கர்சித்தான். இவனது ஒலி கேட்டு கூடுகளுக்குச் செல்லும் பறவைகள் கூட திரும்பிப் பார்த்துச் சென்றன. அந்த வனாந்தரம் முழுக்க இவனது ஒலியும் வாசமும் பரவிக் கொண்டிருந்தது. மண் அதுவெறும் மண் மட்டுமல்ல. மனிதன் மண்ணில் இருந்து தோன்றினான்.
குத்திக் கிழித்து குழிக்குள் தன்னைப் போட்டுக் கொண்டே இருந்தவன், ஒரு கட்டத்தில் உடலை கிழிக்க முடியாமல் போக, குவித்து வைத்திருந்த மணலையும் மண்ணையும் தனது உடல் துண்டுகளுடன் கலந்து குழிக்குள் தள்ளினான். பின் மரக்கன்றை எடுத்துக்கொண்டு குழிக்குள் தன்னைத்தானே புதைத்துக்கொண்டு மரக்கன்றை நட்டு விட்டான்……
மண்டிக்கிடந்த புதர்களுக்கிடையில் சூம்பிக்கிடந்த மாங்கன்றை குட்டிமாதான் கண்டுபிடித்து, வரப்புகட்டி தினம் நீர் ஊற்றி வளர்த்தாள். இவளது கைப்பட்டவுடன் கன்று செடியாகிக் கொண்டிருந்தது. இவளுக்கு மட்டும் மா செக்கச்செவேலென்று வளர்வதாகப்பட்டது. செடி மரமானது.நகராட்சி சிமெண்ட் சாலை போட மரங்களை வெட்டிக்கொண்டு வந்தபோதும், கழிவுநீர் கால்வாய் தோண்டும்போதும் இடையூறாய் இருந்த மரத்தினை வெட்ட புல்டோசர் கொண்டுவரப்பட்டது. குட்டிமா தான் தனது தந்தையிடம் அடம்பிடித்து தனக்கு சேரவேண்டிய நிலத்தை நகராட்சிக்குக்

கொடுத்து மரத்தைக் காப்பாற்றியவள். அது அவளுக்கு வெறும் மரம் அல்ல. ஆம்... மரங்கள் வெறும் மரங்கள் அல்ல.
அவளது தெருவில் உள்ள பெருமாள் கோயிலை ஒட்டித்தான் மாமரம் வளர்ந்து இருந்தது. பெருமால் பக்தர்களுக்கு இம்மரம்தான் நிழல் தந்தது. இவள் வாடிய பயிரைக் கண்டபோது வாடியவள் அல்ல. கடைகளில் வாடாமல் இருக்கும் காய்கறிகளையும் கீரைகளையும் கண்டு வாடியவள். கேட்டால் பிணம் அழுகாமல் இருக்க இரசாயனம் இடுவதுபோல் பச்சை காய்கறிகள் வாடாமல் இருக்க இரசாயனம் இடுவார்கள் என்று புலம்புவாள்.
இம்மரத்திற்குப் பூச்சி மருந்து இட பலர் எவ்வளவோ முயன்றும் அதை குட்டிமாதான் தடுத்து நிறுத்தினாள். அம்மரம் இதுவரை காய்க்காமல் இருப்பதற்கு இவள்தான் காரணம் என்று வசவுகள் வேறு. இம்மரத்தைத் தொடாமல் இவளுக்கு பகல் விடியாது. தொடாமல் இரவில் உறக்கம் வராது. மரத்திற்கு ஒருமுறை பூச்சி அரிப்பு ஏற்பட்டது. அப்போது  செய்வது அறியாது பூச்சி மருந்து எதுவும் அடிக்காமல் மாரியம்மனுக்கு நோன்பிருந்து தீமித்து மரத்தைக் காப்பாற்றினாள்.
மரத்தைச் சுற்றி பாத்தி வெட்டி கரைக்கட்டி தினமும் நீர் ஊற்றுவாள். நீரொடு சானி எருவையும் கரைத்து ஊற்றுவாள். இவள் சடங்காகி உட்கார்ந்தபோது தலைமுழுகி பார்த்த முதல் உருவம் இம்மரம்தான். அந்த பார்வையில் மரம்கூட ஒரு கொழுந்திலையை உதிர்த்தது. அதை தனது பாட்டியிடம் எடுத்துவரச் சொல்லி புத்தகத்தில் இன்றும் பாதுகாத்து வருகிறாள்.
வீட்டில் விஷேச நாட்களில் திருவிழாக்களின்போது சிறப்புணவுகள் செய்தால், யாருக்கும் தெரியாமல் திருடிவந்து மரத்தின் வேர்களுக்கு இடையில் தூவி விடுவாள். ஒருமுறை பாயாசத்திற்குக் காய்ச்சி வைக்கப்பட்டிருந்த மூன்று லிட்டர் பாலை மரத்திற்கு ஊற்றிவிட்டு, தொடையில் அம்மா வைத்த சூட்டின் தழும்பு இன்றும் மறையவே இல்லை. குளிக்கும் போதெல்லாம் ஒருமுறை தழும்பைத் தொட்டுப்பார்த்து, கண்ணாடி பார்த்து புன்னகைப்பாள்.
தனது மகனுக்கு மாமரத்தடியில்தான் சோறூட்டுவாள், தாலாட்டுவாள், சமயங்களில் குழந்தையைக் குளிப்பாட்டுவாள். மரத்தடிதான் அவளுக்கு ஆரம்பப் பள்ளி. உதிர்ந்து விழும் இலைகளைக் கொண்டுதான் எண்ணும் எழுத்தும் அவள் அவனுக்குக் கற்பித்தாள். மகன் அடம்பிடிக்கும் போதெல்லாம் மரத்தைக் காட்டித்தான் சமாதானம் செய்வாள். இவனும் அம்மாவைப் போல் மரத்திடம் நெருக்கமாகவும் உருக்கமாகவும் இருந்தான். ஒருமுறை விளையாடும்போது கால் இடரி கீழே விழுந்தபோது வலது காலில் ஏற்பட்ட சிறாய்ப்புக்கு மா இலையைத்தான் அரைத்து குட்டிமா தடவிவிட்டாள். காயமும் விரைவாக குணமானது.
---------------------------
முழாண்டு விடுமுறை என்றதும் மகனின் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை. அவனது வகுப்பில் பலர் பாட்டி வீட்டிற்கு போவேன், அத்தை வீட்டிற்கு போவேன் என்று அலப்பரித்தபோது, பொங்கும் மகிழ்ச்சியில் இவன்  மாமரத்தைச் சுற்றப்போவதாகவும், நாள் முழுக்க மாமரத்தோடு விளையாடுவேன் என்று சொன்னபோதும் வகுப்பு மாணவர்கள் இவனை ஏதோ ஒன்றினைப் பார்ப்பது போல் பார்த்தனர். அதனை இவன் கண்டுகொள்வதாக இல்லை.
கத்தரி வெயில் என்றாலும் மரத்தின் அடியில் நின்றிருந்தால் மார்கழியாய் மணக்கும். விடியும் முன்னமே மரத்தடிக்கு ஓடோடி வந்துவிடுவான். உணவு, உறக்கம், விளையாட்டு எல்லாம் மரத்தடிதான். அந்த ஊரிலேயே இந்த மரம் மட்டும்தான் படர்ந்து பரந்து விரிந்து அடர்ந்து நிழல் தரும். மரத்தில் தங்கும் கிளிகள்கூட இவனது நண்பர்கள்தாம். ஒரு முறை மரத்தில் குடியிருந்த காக்கா ஒன்று நோய்வாய்ப்பட்டு கண்களில் இரத்தம் கசிந்து செத்து போனது. காக்கா கூட்டங்கள் வானை வட்டமிட்டு இழவு கொண்டாடினாலும், இறந்த காக்கையை இவன்தான் எடுத்து மரத்தடியில் அடக்கம் செய்தான். இறந்த காகத்தின் சிறகு ஒன்றைப் பிடுங்கி கல்லறையின் மேல் நட்டு வைத்தான். கிரிக்கெட் ஸ்டெம்ப் நடவோ, கோட்டிப்புல் விளையாட குழிகிழிக்கவோ, பேய் பந்தாடவோ, இவன் விடாததால் நண்பர்கள் யாரும் இவனுடன் சேருவதில்லை. தனிமையில் மரத்தடியில் இருந்தாலும் அவன் தனிமையை உணரவே இல்லை. அவனது தாத்தாப் பதினாறாம் நாள் காரியத்துக்கு மரத்தடியில் சமயல் செய்ய அடுப்பு மூட்டியபோது கொள்ளிக்கட்டையை எடுத்து அனைவரையும் விரட்டினான். மரத்திற்குப் பிடிக்கும் என்று இவன் பிறந்தநாள் அன்று செய்த பூரி ஒன்றை அம்மாவிடம் கேட்டு வாங்கி மரத்திற்கு மண்கிளறி இட்டான்.
குட்டிமாவிடம் போய் மாங்காய் பறித்து அரிசி பானையில் போட்டு சீக்கிரம் பழுக்க வைக்கச்சொன்னான். அவள் மறுக்கவே தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தான். அவனை சமாதானப்படுத்த ஏதேதோ சொல்லி மரத்திலேயே பழுக்கும்வரை காக்கச் செய்தாள். மாங்காயைத் தினம் தினம் எண்ணுவான். அதன் வளர்ச்சியையும் மாறும் நிறத்தையும் தினம் தினம் பார்த்து அம்மாவிடம் சொல்லி சொல்லி மகிழ்வான். கல்லடித்து மாங்காய் பறிக்கும் தெரு பிள்ளைகளிடம் இருந்து மரத்தையும் மாங்காயையும் காப்பாற்றும் இவன், கிளியும் அணிலும் உண்ணும் போது மட்டும் பார்த்து கைகட்டி ஆச்சரியப்பட்டு மகிழ்வான்.
கிழக்கு பக்கம் இருந்த காய்களில் ஒன்று நன்றாகப் பழுத்து விழுவதற்குத் தயாராய் தொங்கிக் கொண்டிருந்தது. அது விழும்போது தரையில் விழாமல் தாங்கிப் பிடிக்க அங்கேயே காத்துக்கிடந்தான். அசந்து மரத்தில் சாய்ந்து உட்கார்ந்த போது மாம்பழம் விழவே, ஓடோடி பழத்தைத் தரையில் விழாமல் பிடித்துவிட்டான். பழத்தை முகர்ந்து பார்த்து அதனைத் தூக்கிக்கொண்டு அம்மாவிடம் ஓடினான். அம்மா... அம்மா... பழமா... பழமா... நம்ம பழமா... மகிழ்ச்சியில் திக்கி திக்கி சொன்னான். குட்டிமா சலனப்படாமல் சாப்பிட சொன்னாள். அவன் கழுவ நீர் கேட்டான். கழுவாமல் உண்ணச் சொன்னாள். வெட்டி உண்ண கத்தி கேட்டான். வெட்டித் துண்டாக்காமல் சாப்பிடச் சொன்னாள். அம்மா பழம் பெரிசா இருக்குமா, வெட்டி சாப்பிடரம்மா... என்று குழைந்த போது குட்டிமா, வேண்டாம்பா அப்படியே சாப்புடுடா... அவனோ, ஏம்மா...? குட்டிமா கண்கலங்கி புன்னகைத்துக் கொண்டே சொன்னாள், அது உன் அப்பன்டா… வெட்டாம சாப்பிடு.

வேடதாரிகள்



சிறுகதை:
சிவசித்திரை, புகைப்படக் கலைஞர், சென்னை.

 “மனிதன் தோன்றிய காலம்தொட்டுச் சில காலங்களுக்கு முன்புகூட, மனிதனுக்குள் சாதி, மதமென்று மூடநம்பிக்கைகள் இருந்தாலும் அவனுக்குள் ஒரு பயம் இருந்தது. தர்மம், அதர்மம் என அவன் அவனுக்குள் வகுத்திருந்தான். காலப்போக்கில் எல்லாமே மாறிப்போனது.  பயம் என்ற ஒன்றை மறந்து, மனிதன் தவறு செய்வதற்கான வேடத்தை தரிக்க ஆரம்பித்துவிட்டான்” மனிதனின் மீதான ஆதங்கங்களைக் கொட்டித்தீர்த்தன, சிவப்புக் குதிரைகள். “பொன்னும் பொருளும், மண்ணும் பெண்ணும், பதவியும் படையும் தேவையாய் இருக்கிறது. அதனால், மனிதன் மனிதனையே வேட்டையாடுகிறான்” மனிதனின் வெறியாட்டத்தைச் சாடின பாசிக்குதிரைகள்.
“காலங்காலமாய் சாமியே... கதியென்று கிடந்த அத்தனைபேரும் மாறி விட்டனர்.  ஒரு நாளும் கிழமையில் கூட இந்தப்பக்கம் வருவதில்லை.  வெயிலிலும் மழையிலும், காய்ந்து நனைந்து, தோலுறிந்து மடியத்தான் போகிறோம்” வெள்ளைக் குதிரையின் குரல் உரக்க ஒலித்தன.
“தலையாரி வீராசாமி இருந்தபோது, நாம் நன்றாக இருந்தோம். இந்த ஊரும் பசுமையாக இருந்தது. காலங்கள் கடந்து, இப்போது எல்லாமே தலைகீழாயிற்று.  நன்றி மறந்தவர்கள் இந்த மனிதர்கள்” என்று, மனிதர்கள் மீது கலிங்கத்தினை ஏற்படுத்தின, பச்சைக் குதிரைகள். ஐய்யனார்கோயில் மண்குதிரைகளின் கேள்விகள், மனிதர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றின.  அங்கிருந்தது, ஒரு வெள்ளைக் குதிரைதான். மீதம் பன்னிரெண்டும் சிவப்புக் குதிரை, பச்சைக் குதிரை, பாசிக் குதிரை. தங்களுக்காய் குரல்கொடுக்க புதிதாய் வந்த ஒரு வெள்ளைக் குதிரையை நினைத்து, மற்ற குதிரைகள் பெருமிதமடைந்தன. மண்குதிரைகள், தங்களின் குரல் மனிதர்களின் காதில் விழப்போவதில்லை. அவர்கள் மூடர்கள் என்பதை, நன்றாக உணர்ந்திருந்தன.  குதிரைகளின் ஒட்டுமொத்தப் பார்வையும் ஐய்யனாரின் மீதே குவிந்தன.  உச்சிவெயில் மண்டையைபிளக்க உறிந்ததோல், உடைந்த கை கால், காணாமல் போன பாதி அரிவாள் என ஐய்யனாரின் கம்பீரமே சிதைந்திருந்தது.  ஐய்யனாரைப் பார்த்து, குதிரைகள் பரிதாபப்பட்டுக்கொண்டன. ஐய்யனார் குளம் வற்றி கொஞ்சநஞ்சம் இருந்த நீரையும் மேயவந்த ஆடுகள் உறிஞ்சுகொண்டிருந்தன. துருயேரிய நிலையில், மண்ணில் சாயும் நேரம்பார்த்துக் காத்திருந்தது, ஐய்யனாரின் வேல்கம்பு. அதில் கட்டியிருந்த மடித்துப்போன சிவப்புத்துணி, மெதுவாய் வீசியக் காற்றில் வேகமாய் அடித்துச் சென்றது.  வயல்வெளிகள் கேட்பாரற்றுக் கிடந்தன. ஆடுமாடுகள் சுகந்திரமாய் மேய்ந்து கொண்டிருந்தன. சின்னாபின்னமாய் மாறியி ருந்தது செம்பியநல்லூர் கிராமம். தலையாரி வீராசாமி இறந்து இருபது வருடமிருக்கும்.  தலையாரி வீராசாமி இருந்தபோது ஊரே செழிப்பாய் இருந்தது. விதைக்கிற பிடி நெல் ஒவ்வொன்றும்,  விளைச்சலில் ஒரு மரக்காய் நெல்லாகக் கொடுத்த காலம்.
அறுவடை செய்து நெல்லைத்தூற்றி மூட்டையாகப் பிடிக்கும் போது, கோணிப்பை குறைந்த காலம். பச்சைப்பசும் காலம். ஆடுமாடுகளின் கண்களுக்கு முறுக்கு மீசையும், இடுப்பு வாறும், ஆள்உயரக் கைத்தடியும் நிழலாய் தோன்றி மறையும். ஆடுமாடுகள் தனக்குப் பரிச்சயமான அந்த ஆள் வருகிறானா, இல்லையாயென நோட்டம் பார்க்கும்.  அவைகளுக்கு அவ்வுருவம் தென்படாத தருணத்தில் சற்றுப் பயமில்லாமல் மேயும். பள்ளிக்கூட சிறுசுகள், நடவுப்பெண்கள், வேலைக்குப் போகிற ஆட்கள் என எல்லோரின் கண்களிலும் வீராசாமியின் முகம் பதிந்திருந்தது. அவ்வுருவத்தை நினைத்தாலே நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு. எப்படிப்போகும் அந்தப் பயம். தலையாரி வீராசாமியென்றால் செம்பியநல்லூரே பயம்கொள்ளும். அப்படி ஒரு ஆள். கருப்புத்தோள். முறுக்கு மீசை. விரிந்த மார்பு. ஆள் உயரக் கைத்தடி, இடுப்பில் ஒரு பிச்சுவாக்கத்தி. வீராசாமி நடந்தால், ஊர்சனங்கள் சற்று ஒதுங்கி நடப்பார்கள். அப்படி ஒரு பளு.  சும்மாவாய் வந்தது அந்தப் பளு. எல்லாமே பனங்கள்ளும், ஆட்டுப்பாலும் செய்கிற வேலை. வெள்ளை முடியைப் பார்த்து வயதான ஆளென்று எடைபோட முடியாது. வைரம்பாய்ந்த கட்டை. வீராசாமி கும்பிடுகிற சாமியைவிட, தன் முதலாளியைவிட, செய்கிற தொழிலை முதலில் மதிக்கிறவர்.  அதிலிருந்து ஒருநாளும் தவறியதில்லை. செம்பியநல்லூர் ‘தராசு' பாண்டிதுரையென்றால் சுத்துப் பட்டியில் தெரியாதவர்கள் யாருமில்லை. ஊரைச்சுற்றியிருக்கிற கொஞ்ச நிலமும், கிழக்கால கண்ணுக் கெட்டியதூரம் வரை அவருடையதுதான். மிக உயர்ந்தவரென ஊரில் சொல்லிக் கொள்வார்கள். வீராசாமி, ‘தராசு' பாண்டிதுரையின் வயல்காட்டைத்தான் காவல் காத்தார். அதோடு, ஊர்சனங்களின் வயலையும் பார்த்துக்கொண்டார். பாண்டி துரையின், கிழக்கேயிருக்கிற இருபது ஏக்கர் கரும்புத்தோட்டம் வீராசாமியின் பாதுகாப்பில் இருந்தது. கரும்புத் தோட்டத்தின் அருகில் ஐய்யனார் கோயிலும், வீராசாமியின் குடிசையும் அங்குதான் இருந்தது. ஊர்காவலன் ஐய்யனார் கண்ணை மூடினாலும், வீராசாமி கண்ணை மூடியதில்லை. தூக்கம் வருகிறபோதெல்லாம் ஏழுமலையான் சுருட்டையெடுத்துப் பற்றவைத்தால், தூக்கம் கலைந்துவிடும். இப்படித்தான், ஒரு பகல்பொழுது. வீராசாமி, குடிசையின் வெளியே கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கிடந்தார். இரவெல்லாம் கண்விழித்து, தூக்கம் சொக்கியது. குடிசையை ஒட்டிய வயல்வரப்பில், பள்ளிக்கூடப் பொடுசுகள் நடந்துகொண்டே,
“டேய்.. கரும்பெல்லாம் பெரிசா ஆயிடுச்சிடா. இனிமே நாம கப்பிரோடு வழியா போவகூடாது. குறுக்குவழியிலதான் போவனும். அப்பத்தான் பண்ணையாரு கரும்ப காலிப்பண்ண முடியும்” எனத் திட்டம் தீட்டினர்.  அவ்வளவுதான், இதைக் கேட்டுக் கொண்டிருந்த வீராசாமி திடுக்கிட்டெழுந்து,
“யாண்டா களவானிப் பயபுள்ளைங்களா, எத்தன நாளா நெனச்சிக் கிட்டிருந்தீங்க. நானும், எங்குலசாமி ஐய்யனாரும் இருக்குற வரைக்கும் அது  நடக்காதுடா. எம்மொதலாளி எனக்குக் கூலிமட்டும் கொடுக்குலடா, வவுத்துக்குச் சோத்தையும் போடுறாரு.   யென் ஒடம்புல உள்ள அம்புட்டு ரத்தம் சிந்துனாலும், ஒரு சொட்டுக் கரும்புசாறு சிந்த வுடமாட்டன்” எனத் திட்டிக்கொண்டே, பொடுசுகளை விரட்டினார்.  பொடுசுகள் சேறு சகதித்தெறிக்க ஓடி மறைந்தனர். அந்தக் கரும்பில் அப்படி என்னதான் இருக்கிறது.  இனிப்பென்றால் இனிப்பு, அப்படி ஒரு இனிப்பு.  கரும்பு நிறமென்றால், சிவப்பும், நீலமும் கலந்த ஊதா நிறமென்று சொல்வார்கள்.  ஆனால் இது பச்சைக் கரும்பு.  கரும்பு தெரியாத அளவிற்குத் தழைகள். கரும்பு ஒவ்வொன்றும் உலக்கைப் பெரிசு. பொடுசுகள், பில்லறுக்கும் இளசுப்பெண்கள், வயல்காட்டில் வேலை செய்கிறவர்களென எல்லோருடைய கண்களும் கரும்புக் காட்டில் ஆனால், இவர்கள் எல்லோர் மீதும் வீராசாமியின் கண் பதிந்திருக்கும்.  ‘மனிதர்கள் தவறு செய்யவும் கூடாது, தவறு செய்வதற்கான வழியை ஏற்படுத்தவும் கூடாது' என்பதில் வீராசாமி உறுதியாக இருந்தார். தெற்குத்தெரு அம்மாசிக் கிழவர் எதிரில் வந்து கொண்டிருந்தார்.  வீராசாமியின் அருகில் வந்ததும்,
“என்ன வீராசாமி..... உங்க மொதலாளியோட ஆளுங்க, கரும்புக்காட்ட சுத்தியும்... கரண்டுகம்பி வச்சிக்கிட்டு இருக்காங்க!”
“என்னண்ணே சொல்லுற.. கரண்ட்டு கம்பி வக்கிறாங்களா? இருக்கா துண்ணே. வேற வேல எதாச்சும் செய்வாங்க. மொதலாளி, என்ன கேக்காம எதையும் செய்யமாட்டாரு”.
“அட என்னப்பா நம்ப மாட்டுற நான் என்ன கொழந்தையா எனக்கு தெரியாது.. கரண்ட்டு கம்பி வைக்கிறாங்கங்குறன்...” .
“என்னண்ணே சொல்லுற.. எனக்குத் தெரியாதுண்ணே... நீ எப்ப பாத்த? எங்க வக்கிறாங்க?” என்று பதைபதப்புடன் கேட்டார், வீராசாமி.
“அட என்னப்பா தலையாரி நீ... சுத்தி நடக்குற நெலவரம் தெரியாம... களத்துமேட்டுல இருக்குற கரும்புக்காட்ட சுத்தியும் வச்சிக்கிட்டிருக்காங்க.  இப்பத்தான் நான் பாத்துட்டு வர்றன்” என்றதும், வீராசாமி பதறியடித்து களத்து மேட்டுக் கரும்புவயலை நோக்கி ஓடினார். அம்மாசிக் கிழவர் ஊர்நோக்கி நடந்து கொண்டே.. மனதுக்குள்,
“ஆடுமாடுகல்லாம் அங்கதான் நடமாடும். மனுசமக்களுக்குத் தெரியும் கரண்டு இருக்குறது, ஆடுமாடுக்கு எப்படித் தெரியும்... ம்... ஊர்காக்குற சாமி அந்த ஐய்யனாருதான் எல்லாரையும் காப்பாத்தனும்” என்று புலம்பிக்கொண்டார்.   மனிதர்கள் பிறக்கும்போது கையில் ஒன்றுமில்லை. இறக்கும்போதுதான் அடைந்த நன்மதிப்பைத் தவிர ஒன்றுமேயில்லை. பொன்னைச் சேர்ப்பதும், பெண்ணை அடைவதும், மண்ணைச் சொந்தம் கொண்டாடுவதும் மனிதனின் பேராசை. அந்த வகையில், பிறரை அழித்துத் தான் வாழ்வதில் தந்திரக்காரன் ‘தராசு' பாண்டிதுரை. வீராசாமி, மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கக் களத்துமேடு கரும்புக்காட்டை அடைந்தார். கரும்பு வயலில் பாண்டிதுரையின் பண்ணையாட்கள் செங்கோடனும், ‘டவுசர்' வேலுவும் மின்சார வேலியமைத்துக் கொண்டிருந்தனர்.
“நம்ம மொதலாளியா இப்புடி செய்யுறாரு” என வீராசாமி மனதிற்குள் நினைத்துக்கொண்டு,
“என்ன செங்கோடா... இதல்லாம்....?”
“என்னான்னா பாத்தா தெரியல கரண்ட்டு கம்பி வச்சிக்கிட்டிருக்கோம்” என்று கிண்டலாகச் சொன்னான். 
“அய்யாவா...! வைக்க சொன்னாரு?”
“ஆ...மாய்யா அய்யாதான் வைக்கச் சொன்னாரு. நரிக்கூட்டங்க வந்து, கரும்புக்காட்ட நாசம் பண்ணுதுல..... அதான்...” என்றான், செங்கோடன்.  அவன் தராசு பாண்டிதுரைக்கு மணியாட்டிக்கொண்டு திரிபவன். அவனிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லையென, வீராசாமி அதற்குமேல் அங்கு நிற்காமல் முதலாளியின் வீடுநோக்கி விறுவிறுவென நடந்தார். பாண்டிதுரை வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்து கொண்டு, வெற்றிலையைப் போட்டுக்கொண்டிருந்தார். இரு எடுபிடிகள் அருகில் நின்றனர். வீராசாமி, முதலாளியின் முன்னே சென்று,
“அய்யா.... நம்ம கரும்புத்தோட்டத்த சுத்தியும் கரண்ட்டுகம்பி வைக்க சொன்னீங்களாமே....” என்று தாழ்ந்த குரலில் கேட்க,
“ஆமா... வீரா... இந்த நாரப்பய நரிக்கூட்டம் வந்து கரும்புக்காட்ட நாசம் பண்ணுதுல... அதுக்கு ஒரு முடிவு கட்டுலான்னுதான்.  கரண்டுகம்பி வைக்க சொல்லிருக்கன். இனிமே பாரு நரிங்க காலடி வைக்கட்டும். கரண்டு அடிகிற வேகத்துல, இருவதடி தாண்டித் தூக்கி எரிஞ்சிருமுல்ல.....” என்ற பாண்டிதுரையின் குரலில், வன்மத்துடன்.. ஒரு தோரணை வெளிப்பட்டது. 
“என்ன அய்யா இப்படிச் சொல்லுறீங்க... நம்ம ஊரு ஆடுமாடுகல்லாம் அந்தப்பக்கம் மேயவருமே. மனுசமக்க நடமாடுவாங்க... அவங்களுக்கு ஏதாச்சுன்னா என்ன செய்யிறது...” என்று உயிரின் உன்னதம் உணர்ந்து, பதற்றத்துடன் கேட்டார் வீராசாமி.
“யாரு......யா இவன் சரியான மடையனா இருப்பான் போல. நமக்கு நம்ம வயதான் முக்கியம். அதுவும், பொழுதுசாஞ்சிதான் கரண்ட்டு போடுவோம்.    ஊருசனங்களுக்கு வேணுமுன்னா தண்டோராப்போட்டு சொல்லிப்புடுங்க.  அப்பறம் யாரும் வரமாட்டாங்க. அதுக்குமேலையும் ஆடுமாடுக வந்துதுன்னா... மாட்டிக்கிட்டு சாவட்டும். நாம என்னா பண்ணமுடியும். சும்மாவா கரும்பு போட்டுருக்கோம், எல்லாங் காசு..... காசு.. காசு..”
“ஊர்சனங்கக்கிட்ட சொல்லிடலாங்கையா... ஆடுமாடுகக்கிட்ட.. எப்படி சொல்லுறது?” என்ற வீராசாமியின் வார்த்தைகள், தராசு பாண்டிதுரைக்குச் செவுலில் பளாரென்று அடித்தைப்போல் இருந்தது.  பாண்டிதுரை கோபத்துடன், “நான் சொல்லுறத செய்யுற வேலக்காரபயதானயா நீ. எதுக்கு தேவையில்லா ததுல்லாம் தலையிடுற. இதுக்குமேலயும், இங்க நின்னீன்னா எனக்கு கோவந்தான் வரும்... ஒழுங்கா உசுரோட வீடுபோயி சேரு” என்று அதட்டினார். வீராசாமிக்கு இதைக்கேட்டதும் நரம்புகள் புடைத்துக்கொண்டன.  கண்கள் தீயென சிவந்திருந்தது. கோபம் பீறிட்டது. தன் நிலையறிந்து, அவரால் ஒன்றுமே செய்யமுடியாமல் வெளிநடந்தார். சாயும்காலம் நீலவானத்தில் கருமேகங்கள் பட்டும் படாததுமாக பூசியிருந்தது. கொங்சநஞ்சம் இருந்த வெளிச்சத்தையும் கரும்புக்காடு முழுங்கிக் கொண்டது. வயல்வரப்பில் குடிசை நோக்கி நடந்துகொண்டிருக்க, மனது அலைமோதியது. கால்கள் தடுமாறின. மேற்கிலிருந்து வீசுகிறக் காற்று, பயிரை அங்குமிங்கும் அசையவைத்தது.  வானம் தன்பாட்டுக்கு, தன்வேலையைப் பார்க்கத் தொடங்கியது. மின்னலோடு இடியும், இடியோடு மழையும் தொடர்ந்தது.  வீராசாமிக்கு இடியின் சப்தத்தைவிடவும், முதலாளி சொன்ன வார்த்தைகள் காதுகளில் உரக்க ஒலித்துக்கொண்டேயிருந்தது. தான் சிறுவயதிலும், தன் பாட்டன் முப்பாட்டனும் பண்ணை முதலாளிகளிடம் அடிமை பட்டுக்கிடந்ததும் நினைவில் தீயாய் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
பண்ணையாட்களின் வாழ்வியல் நிலை மிகவும் மிகமிகக் கொடுமையானதாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் இனாம்தார், சமீன்தார், இரயத்துவாரி, நிலப்பிரபுக்கள் என தங்களிடம் வேலை செய்யும் விவசாயிகளுக்கு நூறு அல்லது இருநூறு ரூபாய் பணம் கொடுத்து, புரோநோட்டில் “நாங்கள் நிரந்தரமாக தங்கள் பண்ணைக்கு அடிமையாக. பரம்பரைப் பரம்பரையாகப் பாடுபடுவோம்” என்று கையொப்பம் வாங்கிக் கொண்டனர். பண்ணையார்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த விவசாயிகள், தலைமுறைத் தலைமுறையாக அங்கிருந்து, அகலமுடியாமல் தினக்கூலிகளாகவும், பண்ணையாட்களாகவும் அடைப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடந்தனர். பண்ணையாட்கள் பல சாதிகளைச் சேர்ந்தவராக இருந்ததால் அவர்களின் வாழிடம் சாதி அடிப்படையில் படையாச்சி தெரு, பண்டாரம் தெரு, குடியானவன் தெரு, பள்ளர் தெரு, பறையர் தெரு என்று பண்ணைக்குச் சொந்தமான இடத்தில் அவர்களின் குடிசைகள் இருந்தன. குடிசைகள் மிகச்சிறியதாகவும், மூன்று அடி உயர மண்சுவருடன் கதவுகள் ஏதுமின்று மூங்கில் தட்டியை அடைப்பாகப் பயன்படுத்தினர். நிழலுக்காகப் பூசணி, பரங்கி, அவரை போன்ற கொடிகளைப் படர விடுவர். காய்க்கும் காய்களைப் பண்ணை வீட்டிற்குக் கொடுக்கவேண்டும். அடுப்பு சாம்பல் கூட பண்ணைக்கே சொந்தம். பண்ணையாட்கள் உடுத்தியிருக்கும் துணியைத் தவிர மாற்று துணி இருக்காது. வருடத்திற்கு ஒருமுறை  பண்ணை யாளர்கள் கொடுக்கும் புதிய வேட்டிக்கும், சேலைக்கும் உரிய பணத்தைப் பண்ணை யாட்களின் கடன் பத்திரத்தில் சேர்க்கப்படும். கிழிந்து நாராகிப் போன சாக்குகளை விரித்து, அதன் மேல் குழந்தைக் குட்டிகளுடன் முடங்கிக்கிடப்பர். அதிகாலை சேவல் கூவுவதற்கு முன்னரே, கொம்பு ஊதும் சத்தம் கேட்கும். சில கிராமங்களில் கொம்பு ஊதுவதற்குப் பதிலாக, ஒற்றைத் தப்பு அடிப்பர். குடிசைக்குள் இருந்து வெளியியேறி ஆண்கள் வயலை நோக்கி விறுவிறுவென ஓடி, சேற்றில் கால் வைத்த உடனே ‘ஓ' என்று ஓசையை எழுப்புவர். அந்த ஒலி ‘நாங்கள் வேலையைத் தொடங்கிவிட்டும்” என்று நிலச்சொந்தக்காரர்களுக்கு விவசாயிகள் அறிவிப்பதாகும்.
கிழக்கு வெளுக்கும் வரையில் அவர்கள் காத்திருக்க கூடாது, அதற்குள் வேலையை ஆரம்பித்திருக்க வேண்டும். இரண்டாவது கொம்பு ஒலிக் கேட்டதும் பெண்கள் குடிசையிலிருந்து புறப்பட்டு வயலுக்குள் இறங்கிவிடுவர். சூரியன் உச்சிக்கு வரும் பொழுதில் கரையேறுவர். கலையத்தில் கொண்டுவந்திருந்த கஞ்சியை ஒரு வாய் குடித்தபிறகு, மறுபடியும் வயலில் இறங்குவர். மேற்கு திசையில் சூரியன் மறைந்த பின்புதான் குனிந்த குனியிலிந்து நிமிரமுடியும். நாற்று நடுவது, களைபறிப்பது வேலை முடியவில்லை என்றால், இருள் கவியத் தொடங்கியதும் மண்ணில் குச்சியை நட்டு அதில் அரிக்கேன் விளக்கை வைத்து வேலையை முடிக்கவேண்டும். பண்ணை அடிமைகளான விவசாயிகள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என கண்காணிக்க காரியக்காரன், மணியக்காரன், கண்காணிப்பாளர், தலையாரி, ஏஜெண்ட் என ஒரு படையே இருக்கும். வயலில் வேலை முடிந்ததும் பண்ணையாட்கள் வீடு திரும்ப முடியாது. பண்ணை வீட்டிற்கு சென்று அங்கு கைகட்டி நிற்கவேண்டும். நிலப் பிரபுவிடம் அன்றைய தினம் பகலில் நடந்த வேலைகள் குறித்து விவரிக்கப்படும். வேலைக்குத் தாமதமாக வந்தவர்கள், எதிர்த்து பேசியவர்கள், வேகமாக வேலை செய்யாதவர்கள் என சம்பந்தபட்ட ஆள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அடுத்தநாள் பண்ணை வீட்டிற்கு அழைந்துவர நிலச்சொந்தக்காரர் உத்தர விடுவார். தலையாரி சம்பந்தப்பட்டவரை பண்ணை வீட்டிற்கு அழைத்துவருவார்.
அந்த நபர் பறையராக இருந்தால் பள்ளரைக் கூப்பிட்டு மாட்டுக்கொட்டடித் தூணில் கட்டச்சொல்வர். பள்ளராக இருந்தால் பறையரைக் கொண்டு கட்டச் சொல்வர். அதே படையாச்சி, தேவராக இருந்தால் பள்ளரையும், பறையரையும் கட்டச்சொல்லி புளிய விளாரால் செய்த ‘ஐந்து பிரி சாட்டை'யால் அடிப்பார்கள். ஐந்து பிரியை முறுக்கேற்றி, சாட்டையின் முனையில் பிரியை விலக்கி கூரான கூழாங்கல்லைச் சொருகி வைத்திருப்பார்கள். அடித்து இழுக்கும் போது, தோலை பிய்த்து இழுத்துவரும். ரத்தம் பீரிட்டெழும். அடிக்கிறவன் கை சோர்ந்து போகிறவரையில் அடிக்க, பின்னர் தலையாரி வாங்கி அடிப்பான். அவன் சரியாக அடிக்கவில்லை யெனில், நிலப்பிரபு சாட்டையை வாங்கி தலையாரியை அடிப்பான்.  அடிவாங்கு பவன் வேதனை தாங்காமல் எங்கே தன் முகத்தில் எச்சிலை துப்பிவிடுவான், எதிர்த்து பேசுவான் என்று வாயில் துணியைத் திணித்து கட்டிவிடுவர். வெறி தீர அடித்து முடித்ததும், ரத்தம் வடிந்துகொண்டிருக்கும் பண்ணையாளை வைக்கோல் அல்லது கோணிப்பையில் படுக்கவைத்துவிடுவர். பண்ணை வீட்டில் ரசம் சோறு போடுவர். காயத்திற்கு மருந்தாகச் சாணி உருண்டையைத் தீயில்போட்டு ஒத்தடம் கொடுத்துக் கொள்ள வேண்டும். பிறர், யாரும் அவனுக்கு உதவக்கூடாது. வீட்டிலிருந்தும் சோறு கொடுக்கக்கூடாது. ஆனால் அவன் வேலைசெய்ததாகக் கணக்குப்போட்டு கூலி தரப்படும். வேலை சரியாகச் செய்தவர்களில், ஆண்களுக்குக் கூலியாக இரண்டு படி நெல் தரப்படும். பெண்களுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு மரக்காய் நெல் கூலியாகத் தரப்படும்.
நெல்கூலி வாங்கியவுடன் குடிசைக்குத் திரும்பியவுடன், நெல்லை அவித்து.. புடைச் சட்டியில் வறுத்து.. உரலில் குதித்தி.. புடைத்து, கஞ்சி செய்வதற்குள் பதினோரு மணி ஆகிவிடும். வயல்வேலை முடித்து திரும்பும் ஆண்கள், தாம் பிடித்துவரும் மீன், நண்டு, நத்தை போன்றவற்றை குழம்பாக சமைப்பர். நாள் முழுவதும் உழைத்த களைப்பில், அந்த இடத்திலேயே உறங்குவர். அப்போது பாய், படுக்கை விரிப்பு என்பதோ கிடையாது. பண்னையார் வீட்டின் பழைய கிழிந்த கோணிப்பைகளும் வைக்கோலும் தான் படுக்கை விரிப்பு. கண் அயர்ந்து அசதியாக உறங்கிக்கொண்டிருக்கும் போது,  அதிகாலையில் கொம்பு ஊதும் சத்தம் கேட்கும். விவசாயிகள் வயல்காட்டை நோக்கி ஓடுவர். குனிந்த முதுகு நிமிறாமல் உழைப்பர். தாழ்த்தப்பட்டவர்கள் பறையரை, ‘வலங்கைப் பிள்ளை” என்றும் பள்ளரை, ‘இடங்கைப் பிள்ளை' என்று கூறுவது வழக்கம். அவர்கள் பண்ணையார்களுக்கு மட்டுமல்லாமல், தன்னைபோல உழைக்கும் பண்ணையாட்களுக்கும் அடிமைகளாக இருந்தனர்.  தங்களின் பிள்ளைகளும் பள்ளிக்கூடம் செல்லாமல் பண்ணையிலேயே அடிமைகளாக வேலை செய்யவேண்டும். பண்ணையில் வேலையில் ஏற்படும் தவறுகளுக்கும், ஊருக்குள் வேலையாட்கள் ஒருவருக்கொருவர் ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்கு நிலப்பிரபு கடும் தண்டனை வழங்கினான். அதில் மாட்டு சானத்தை மண்குடத்திலிட்டு, தண்ணீர்விட்டு கரைத்து அதைப் பண்ணையாட்களின் வாயில் ஊற்றுவார்கள். இத்தகைய கொடுமைகளிலிருந்து தப்பியவர்கள்.. நாகப்பட்டினம் அந்தணப் பேட்டையில் ‘ஆள் ஏற்றுமதி செய்யும் டிப்போ' ஒன்று இருந்தது. அதில் பர்மா, சிங்கப்பூர் என்று வேலைசெய்வதற்கு ஆட்களை அனுப்பும் இடம் அது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கந்து வட்டி வியாபாரம் நடத்தி ஏராளமான நிலங்களையும், சொத்துகளையும் வைத்திருந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் தங்களுக் குத் தேவைப்படும் ஆட்களை அங்கிருந்து பொறுக்கினார்கள். அதில் வேலைக்குச் சேர்ந்தவன் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து ஊருக்கு வருவதாக கடிதம் எழுதுவான். அந்தக் கடிதம் தன் வீட்டிற்குச் செல்லாது தபால்காரர் மூலமாக நிலப்பிரபுரவிடம் போகும். அவன் உடனே சம்பந்தப்பட்ட நபரின் தகப்பனையோ, தமையனையோ அழைத்து அவனை ஊருக்கு திரும்பி வரச்சொல்லுபடி கடிதம் எழுத வைப்பர். ஊருக்குள் அவன் திரும்பி வரும்போது, அவனைப் பிடித்து  வைக்கோல் பிரியில் சுற்றி நிலப்பிரபு தீயிட்டு கொளுத்துவான்.
உழைப்புக்கான சரியான கூலி, ஒரு படி நெல்லை உயர்த்திக் கேட்டதற்கு, ஊர்மக்களையே தீயிட்டு கொளுத்திய மகாபாதகன் நிலப்பிரபு. நிலவுடமையாளர்கள் மீதான கோபம் தன் முதலாளி மீதும் திரும்பியது. பாண்டிதுரை ஒரு மகாபாதகனாக உருவெடுத்து, வீராசாமியின். கண்முன் நின்றான். வானத்தில் லேசாக தூரல் போட்டது. வீராசாமி வீடு வந்தடைந்தார். குடிசை வாசலில் நின்று, கருப்பங்காட்டைப் பார்த்தார்.  கருப்பங்காடெங்கிலும் இருள் சூழ்ந்திருந்தது. அது வீராசாமிக்கு ஏதோ ஒரு அச்சத்தை மூட்டியது. என்னாதான், வீராசாமி பார்ப்பதற்கு மலையாக தோற்றமளித்தாலும், உள்ளுக்குள் அவரின் மனது ஈரந்தான்.  புல் பூண்டுகள், செடி கொடிகள், மரம் மட்டைகள், மாடு மனிதர்களென யாராக இருக்கட்டும், அவர்களை மெய்யுணர்வோடு உயிராக நேசிப்பவர், வீராசாமி.  பெருமூச்சுடன், மனதைப் பிழிந்தெடுக்கும் வலியோடு குடிசைக்குள் நுழைந்தார். நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டேயிருந்தது. வெறும்வயிறு.  கலையத்தில் கஞ்சி இருந்தும், சாப்பிடத் தோனவில்லை.  தன்னை சூழ்ந்த வெறுமையுடன், கயிற்றுக்கட்டில் சாய்ந்தார். 
“நான் சொல்லுறத செய்யுற வேலக்காரபயதானயா நீ” என்ற முதலாளியின் வார்த்தைகள் வீராசாமியின் காதுகளில் கேட்டுக்கொண்டேயிருந்தது. மனதின் நினைவலைகள் கருப்பங்காட்டையே சுற்றித்திரிந்தது.  என்னதான் முதலாளிக்கு விசுவாசமாக இருந்தாலும், உசிருக்கு ஒரு ஆபத்தென்றால் வீராசாமியின் மனது... கிடந்து தவியோ... தவியென்று தவித்தது.  உதடுகள் வெகுநேரமாய் புலம்பித் தவிக்கையில், ஒரு உயிரோட சத்தம்
“மா..... அம்மா.....”ங்குற சத்தம். பூமியையேப் பிளக்கிற அலறல் சத்தம், கருப்பங்காட்டிலிருந்து எதிரொலித்தது. வீராசாமி அலறியடித்து, எழுந்துகொண்டார். சுவரில் மாட்டியிருந்த அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு குடிசைவிட்டு வெளியேவர, மழை நச நசவென்று தூரல் போட்டது. கோணிப்பையைத் தலையில் போட்டுக்கொண்டு, கருப்பங் காட்டிற்கு ஓடினார்.  அந்தநேரம் பார்த்து, அரிக்கேன் விளக்கும் சதி செய்தது.  மினுக்கட்டான் பூச்சிக் கனக்காய் எறிந்தது. வீராசாமிக்கு கண்ணும் தெரியவில்லை, மண்ணும் தெரியவில்லை.  வாய்க்கால் வரப்பு தாண்டி, சேறு சகதியென்று விழுந்தடித்து, ஒருவழியாய் கருப்பங்காட்டை நெருங்கினார். கையிலிருந்த அரிக்கேன் விளக்கு இருளடைந்தது. வீராசாமியைச் சுற்றியும் இருள். அன்றைய இரவு இருளாகவே போனது. 
மறுநாள். மழைக்காலத்தின் மஞ்சள் வெயில். மழைவிட்டுப்போன சுவடுகள்.  அங்குமிங்கும் தெருவில் தேங்கி நிற்கிற மழைநீர். காற்றின் முகம் கூட தொலைந் திருந்தது. கருமேகங்கள் யார் கண்ணிலும்படாமல் மறைந்துகொண்டன.  பயிர்கள் எவ்வித அசைவின்றி நின்றன. ஐய்யனார் கோவிலின் முன் ஊரே கூடிநின்றது. இடைவிடாத கூச்சல். பரிதாபப் படும் முகங்கள். இரக்கப்பட்ட வார்த்தைகள். அழுகுரல்கள். வீராசாமியைப் பற்றிய வீர வசனங்கள். தொடர் உரையாடல்களுக்கி டையே சற்று அமைதியானது. கூட்டத்தில் ஒரு குரல்,
“அய்யா வர்றாரு வழிவுடு, வழிவுடு....” என்றது.  பாண்டிதுரை, வீராசாமி யின் சடலத்தைப் பார்த்ததும் முகபாவனையைப் பரிதாபமாக மாற்றிக் கொண்டு, உச்சுக்கொட்டினார். கையினால் முகத்தை மூடி, கண்களைக் கசக்கிக் கொண்டார்.
“ரெண்டு வருசமா அய்யானாருக்குப் பூசையே வக்கில.. அதான்.. பக்கத்துல இருந்த வீராசாமிய அடிச்சிருக்கு...” என்ற குரல், பாண்டிதுரைக்குச் சாதகமாய் இருந்தது. ஒருபுறம்,
“வீராசாமிய நான் அடிக்கல... நான் அடிக்கல.....” என்று ஐய்யனார் கத்துவதுபோல் இருந்தது.    
“தலப்பார அடிச்சிக்கிட்டேன், அவன் கேக்குல. அய்யனாரு பொல்லா சாமிடா.... நம்ம வூட்டுல இருந்துகோன்னு சொன்னேன். கேக்குல.  புடிவாதகாரப்பய  நிலத்தப்பாத்துக்கிறன், நிலத்தப் பாத்துக்கிறன்னு.. இங்கயே இருந்துட்டான். ம்... எல்லாம் காலஞ்செய்யுற கோலம்.  அந்த சாமிக்கி நல்லவங்களே புடிக்காது போல” என்று பாண்டிதுரை சொல்லிய வார்த்தைகள் ஊர்காரர்களுக்கு வேதவாக்காய் இருந்தது. பாண்டிதுரையின் எடுபிடிகளும் ‘ஆமாஞ் சாமி' போட்டுக்கொண்டனர். ஊர்மக்கள் எல்லோரும் ‘உச்சு'க்கொட்டிக்கொண்டு, வருத்தப்பட்டனர். 
“சரிப்பா நடந்தது நடந்துபோச்சு.  இனி ஆகவேண்டியதப் பாப்போம். ஒரு நல்ல நாளாப்பாத்து அய்யானாருக்கு பூசப்போட்டு படையல் வச்சிடப்புடலாம்” என்று சொல்லி, பாண்டிதுரை கூட்டத்தைவிட்டு வெளியேறினார். அவரின் பின்னால், செங்கோடனும் ‘டவுசர்' வேலும்  குடைப்பிடித்துக்கொண்டு ஓடினர். 
“வீராசாமிய நான் அடிக்கல..... நான் அடிக்கல..... மாட்ட மண்ணுல மூடி.  மனுசன் அடிச்சத.. சாமி(நான்) அடிச்சதா சொல்லுறாங்க.  அவுங்க சொல்லுறத நம்பாதீங்க... நம்பாதீங்க....” என்று ஐய்யனார் கத்திக்கதறுவதுபோல் இருந்தது.  கருப்பங்காட்டு மின் வேலியில் மாடு மாட்டிக்கொண்டதும், அதை காப்பாற்றப்போன வீராசாமி மின்சாரம்தாக்கி இறந்ததையும், ஊர்க்காரர்கள் ஒவ்வரிடமாக ஐய்யனார் உறக்கக் சொல்லிக் கொண்டேயிருக்க..  காதுகொடுத்து கேட்க ஆளில்லை.  ஊர்மக்கள் சடங்குகாரியத்தில் மும்முரமாகினர். 
“வீராசாமி இருந்தான் ஊரே செழிப்பா இருந்துச்சு... இனிமே... ம்.......” பெரும்மூச்சுடன் கூட்டம் களைந்தது.  ஊர்சனங்கள் பிணத்தைத் தூக்கி,  சுடுகாட்டை நோக்கி நடந்தனர். பறையடிக்கும் சத்தமும், மணியடித்து சங்கு ஊதும் சத்தமும் ஊரெங்கிலும் கேட்டது.  ஐய்யனாரின் கதறல் மட்டும் யார் காதிலும் விழுந்த பாடில்லை. விழப்போவதுமில்லை. இவர்கள் வெற்று மனிதர்கள்.  மூடர்கள்.  அரிதாரம் பூசிக்கொள்ளும் பொய் முகங்கள். ஐய்யனாரைச் சுற்றிலும் வெறுமைக் கவ்விக்கொண்டது. வெள்ளைக்குதிரை அழுதுகொண்டிருந்தது. சிவப்புக் குதிரைக ளுக்கு கோபம் பீறிட்டது. பச்சைக்குதிரைகளும், பாசிக்குதிரைகளும் மெளனமாய் இருந்தன.  ஐய்யனாரின் கண்கள் சிவந்து, குருதி கசிந்தது. இயற்கை, தன் அவதா ரத்தை எடுத்தது. கருமேகங்கள் அசூரப்படையென திரண்டு, நீலவானத்தை மூடிக் கொண்டன. அடிவானத்தில் இருள் சூழ்ந்துகொண்டது. காற்று ஏதொரு மறைவி லிருந்து வெளிவருவதைப்போல், ஊருக்குள் புகுந்தது. அதன் வேகத்தைப் பெருவெளி யெங்கும் பிரயோகித்து, ஊரையேத் திணர வைத்தது. பயிர்கள் காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல், ஆடியசைந்து பின் மண்ணோடு மண்ணாய் சாய்ந்தன. கருப்பங்காடு இருந்த இடத்தின் சுவடு தெரியாமல் அழிந்துபோனது. மரங்கள் மண்ணில் விழுந்தன. காற்று, உருமாறி இடியாக சிறிதுநேரம் சத்தத்தை எழுப்பின. பின் தூரலின் முகமென உருவெடுத்து, பெருமழையாய் ஊரையே மூழ்கடித்தது. காற்றாற்று வெள்ளத்தில் குடிசை, கோபுரமென ஒன்றுவிடாமல் அடித்துச்சென்றது. வேடமிடும் மனிதர்களையும் காவு வாங்கியது.
வெள்ளைக் குதிரை, சிவப்புக் குதிரைகள், பச்சைக்குதிரைகள், பாசிக்குதிரைகளென எல்லாம் மழைநீரை குடிக்க ஆரம்பித்தன. செம்பியநல்லூர் கிராமமே பசுமையை இழந்து, வெள்ளக்காடாய் மாறி யிருந்தது.  காற்று, மழை, இடியின் சப்தத்தோடு ஐய்யனாரின் புலம்பலும் கேட்டுக் கொண்டிருக்க, உடலெங்கிலும் மழைநீர் வழிந்தோடியது.  அம்மழை நீரோடு, கண்ணிலிருந்து வடிந்த குருதியும் வெள்ளத்தில் கலந்தது. ‘ஊர்க்காவலன்' ஐய்யனார், இவ்வேடமிடும் மனிதர்களோடும், மூடர்களோடும் வாழ்வதை துறந்து, தன் கல்லான உடலை கரைத்துக்கொள்ள... காலம் தன் தீர்ப்பை கணக்காய் எழுதிமுடித்தது.