வியாழன், 26 செப்டம்பர், 2013

சமூகம் – படைப்பு- பெண்

மு. நஜ்மா, முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைப் பல்கலைக்கழகம்

பெண்என்பதற்கான கருத்துருவாக்கம் காலப்போக்கில் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டாலும் அது கற்புஎன்கிற அச்சாணியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டேதான் அலைகின்றது. இதைச் சுற்றிக் கட்டப்படும் விழுமியங்கள் பெண்ணின் ஒவ்வொரு அசைவுகளையும் தீர்மானிக்கும் கருவிகளாக வினைப்படுகின்றன. வீடுகளில், வீதிகளில் பயிலும் இடங்களில், பணிபுரியும் இடங்களில் என்று எங்கு ஓடினாலும் இவ்விழுமியங்கள் சாட்டை பிடித்து அடித்துத் துரத்திக் கொண்டேதான் வருகின்றன. இதையும் தாண்டி ஆண்-பெண் உறவு பல்வேறு நிலைகளில் பயணித்துக் கொண்டுதான் உள்ளது. இவ்வாறு எதிர்கொள்ளும் உறவுகளைச் சமூகத்தித்றகு அடையாளம் காட்டவோ அல்லது அங்கீகாரம் பெறுவதற்கோ முயலுவது முட்டாள்தனம் என்றுகூடச் சில நேரம் சொல்லத் தோன்றுகிறது. என்றாலும், அதற்கான எத்தனிப்புகள் செயல்பட்டுக் கொண்டேதான்  இருக்கின்றன. படைப்பாளி இதற்கான வாய்ப்பாக வடிகாலாக படைப்புகளை உருவாக்குகிறாள். இப்படியான ஒரு மனநிலையில் எழுதியதுதான் இடைவெளியில் உருவாகும் சில அத்தியாயங்கள்என்கிற சிறுகதை. இதை எழுதுவதற்கான சூழலைப் பகிர்ந்து கொள்வது என்பது பெண்ணைப் பற்றிய சமூக மதிப்பீட்டிற்கான அளவுகோலை அவதானிப்பதாகவும் உள்ளது.
ஆண் -பெண் உறவு என்பது பாலியலை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் கணக்கில் கொள்ளாமல் தொடரும் உறவுகள் பல உள்ளன. அத்தகைய ஒரு உறவைப் பற்றிய கதை இது. மனித மனம் ஐம்புலன் தாண்டிய வார்த்தைகளுக்குட்படாத பல உணர்வுகளிலும் லயிக்கின்றது. அது ஏதோ ஒரு வகையில் முழுமையை உணர வைப்பதாக உள்ளது. அப்படிப் பட்ட பயணத்தைத் தேடி ஒரு பெண் ஓடுவதை அக்கதை சொல்லுகிறது. சிறு வயதில் கையில் பழைய புத்தகங்களை வைத்துக் கொண்டும் துண்டை மாராப்பாகப் போட்டுக் கொண்டும் விளையாடிய டீச்சர் விளையாட்டில் கிடைத்த லயிப்புதான் அவளைத் தீர்மானித்தது. சிறு வயதிலேயே உடன்பயிலும் மாணவர்களைத் தனது மாணவர்களாகப் பாவித்து கல்லூரிக்  காலம்  வரை  அதே  மனோபாவத்துடன்  இருந்த  அப்பெண்ணுக்கும் உடன் பயிலாளன் ஒருவனுக்கும் இருந்த உறவு குறித்தும் இக்கதை பேசுகின்றது. அவன்  எப்போதும் தன்னை வளர்த்த சம்பூரணம் டீச்சரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பான். டீச்சர் தொழில் மீது அக்கறை கொண்ட லயிப்பு சம்பூரணத்தின் மீதும் அவளுக்கு  ஏற்பட்டது. இதன் உச்சம் தானும் சம்பூரணம் டீச்சர் மாதிரி ஆகணும்னு அவளைத் தூண்டியது. இதற்காகவே அவனைச் சுற்றித் திரிந்த அவளைச் சமூகம்  அப்படித்தான் பார்த்திருக் குமா-? பாலியல் உணர்வுகளில் ஏற்பட்ட தேக்கங்களை சுமந்து கொண்டிருக்கும் இச்சமூகம் பார்க்கின்ற வைகளிலும் கேட்பவைகளிலும் அவற்றைப் பொருத்திப் பார்த்து திருப்தி அடைகின்றது. இறுதியில் அவள் சம்பூரண            மாகாமலேயே இறந்து விடுகின்றாள் என்று கதையில் அவளைச் சாகடித்து எழுதினேன். இப்படி அவளைச் சாகடிப்பது எனக்குள் பொதிந்து கிடக்கும் சமூகம் கற்பித்த கற்பு  என்கிற விழுமிய மனோபாவமோ என்கிற எண்ணம் வந்தது. சமூக அங்கீகாரத்தை நோக்கி அவள் ஏன் சாகடிக்கப்பட வேண்டும் என்ற கதையின் இறுதி வரியை அடித்து விட்டு, அவர்கள் சமூகத்தைக் காரி உமிழ்ந்துவிட்டு தங்கள் உறவை தொடர்ந்தனர். அவள் சம்பூர்ணமாகவே வாழத் தலைப்பட்டாள் என முடித்தேன். இப்படித் தன்னை ஆசிரியராகப் பாவித்துக் கொள்ளும் பெண்ணின் மனநிலை உண்மையில் எதனால் உருவாகிறது? பல்வேறு சூழலில் ஒடுக்கப்படும் ஒரு பெண்ணின்  புனைவு அதிகார வெளிப்பாடுதான் இத்தகைய பாவிப்புகளுக்குக் காரணமாக இருக்கின்றது. இன்று வரை அக்கதை பிரசுரிக்கப் படாமலேயேதான் உள்ளது.



 

நிலை

சீ. வெங்கடேசன், ஓவியர், சென்னை.

 எழுதுவதனால் எனக்கு எழுத்து வடிவம் அறிமுகமாகியிருக்கின்றது. இதற்கான வாய்ப்பு எனக்கு பள்ளியின் மூலம் அமைந்தது. சிலருக்குத் தனி நபர் மூலமாகவும் கிடைத்திருக்கும். வாழ்க்கை எனும் திசையை நாம் உற்றுநோக்கி உள்வாங்குகையில் நம்முள் புவிஈர்ப்பு விசையை இழந்த தன்மை உள்ள வெற்றிடம் உருவாகின்றது. சிறு வயதில் வாழ்க்கை எனும் ஓசையின் சாரம் அறியாமல் விளையாட்டாக விரும்பிப் பயன்படுத் துவதுண்டு. காலப்போக்கில் நம் பல்வேறு வகையான வேலைகளுக்கிடையில், இன்றும் சிறுவர்கள் விளையாடுவதை நாம் கவனிக்கையில், நம்மை ஒப்பிட்டுப் பார்க்கின்றோம். இன்று விளையாடும் நிலையில் இல்லாமல், விளையாட்டின் அனுபவத்துடன் வளர்ந்துள்ளோம்.
அவன் வாழ்க்கையை வெறுத்து விடுவான் தோல்வியுற்றால். இவன் வெற்றி பெற்றால் அவன் வாழ்க்கையையே வெறுத்துவிடுவான். இப்படி பல்வேறு வகையில் நம்முடன் இருப்பவர்களிடம் வாழ்க்கை எனும் ஓசையை விரும்பி விளையாட்டாகவும், வெறுப்புடனும் பயன்படுத்துவதுண்டு.  இன்று அரசுத் துறையில், தனியார் துறையில், சுயதொழிலில் தொடரும் வேலைகள் ஒருபுறம். எந்தத் துறையில் இருந்தும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள முடியாது. அன்றாடம் நாம் சந்திக்கும் பொருட்களில், அசையும், அசையா, நம் போன்ற அனைத்தின் அனைத்தும் அனுபவமாக நம் அனைவரிடமும் வந்திணையும் இயல்பு அரசு நிர்ணயிக்க இயலா படிப்பு.நம்முடன் இருப்பவர்கள் அவர்களுக்கும், அவர்கள் நமக்கும் நன்மை நடைபெறும் என செய்யும் செயல்கள் அனைத்தும் நம்பிக்கை சார்ந்தது. இந்த நம்பிக்கை பலருக்கு ஏற்படுத்திய மகிழ்வு நமக்கும் நடைபெறும் என்பதில் இருந்து நடைபெறுகின்றது. நம் இருத்தல் காலங்களில் நம் அனைவருக்குமான பொதுவான மாற்றங்களில் இன்ப துன்பத்தை ஒட்டிய அனைத்து குணங்களும் அனைவருக்கும் உண்டு.
இங்கு ஒருவருக்கு மரணம் நிச்சயம். அவர் போன்ற உயிரை உருவாக்குவதென்பது நிச்சயமல்ல. நான் மரணமடைவேன். என்னுடன் இருப்பவர்கள் மரணமடைவார்கள். என் முன்னோர்கள் மரணமடைந்துள்ளனர். சிறு வயதில் அநேகருக்கும் ஒரு பயம் கலந்த, ஆசை அனுபவம் உருவாகியிருக்கும். அவரவர் தன் முன் உள்ளவர்களின் மரணம் கண்ட காலம் முதல் மரணத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று. ஆனால், மரணத்தில் இருந்து எப்படி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். மரணம் இயல்பு என அறிந்து அவர் அவர் தன் சிறு வயது ஆசை அனுபவத்தில் இருந்து தப்பி தன்னை மரணத்தில் புகுத்திக் கொள்கின்றனர். பிறப்பு, இருப்பு, இறப்பு என மாற்றம் கொள்ளும் நிகழ்வான ஓசையை நம்முடன் நம்மைச் சுற்றி அனைத்தும் அனைத்திற்கும் வழங்கி வருகின்றது. இவ்வகையான இயல்பு மாற்ற நிலையில் இருந்து நம் இருத்தலை கவனிக் கின்றோம். பத்திரப்படுத்துகின்றோம். இந்த இயல்பு மாற்ற நிலையை ஒப்புக்கொள்ளும் பொழுது ஆம் நம்மை ஒப்புவிக்கின்றோம். ஒப்புவித்தல் தன்னுடன் நிகழும் உரையாடல். உரையாடல் தன் பல்வேறுபட்ட குணங்களின் முகமாற்ற இயல்புடன் பயணப்படும் நிகழ்வு. பயணம் எங்கிருந்து யாரிடமிருந்து இவ்வார்த்தையின்  அர்த்தம் எது.




என்னை என்னுடன் பொருத்திக் கொள்ளும் பொழுது, தன்னைத் தன்னுடன் பொருத்திக் கொள்ளும் விருப்பம் சாத்தியமாகின்றது.
இறந்த காலம், இருப்பின் காலம், வருங்காலம் இவை எங்கே எனத் தனக்குள் கேட்கும்பொழுது, அத்தனைக் காலமும் மிக மர்ம இன்ப கொடிய காலத்தின் வெளியாகும்
இவ்வெளி அரூபம். அருபம் கலை. கலை என என் உள் நிகழும் மாற்றத்தின் மிகச் சுருக்கம். இங்கு என் கரங்களில் ஒழுகும் இரத்தங்கள் யாரால், எதற்காக காலத்தின் உள் இணையத் துடிக்கும் மனோநிலை. காலம் சார்ந்து யாருடனாக. ஆண், பெண் சேர்க்கையில் உருவாகும் தன் போன்ற உற்பத்தி, விருப்பம் அழிவையும் விரும்பும்.
ள்வாங்கல் வரலாறு, உளவியல் வெளிப்பாடு, வாழ்வித்தலில் சரி தவறு தொடரும் இன்ப, துன்பம், எது, எங்கே, யாரிடம். நீ என உன்னை உள் கொண்டேன். உன் மூலமாக ஏன்? என் அனுபவத்தை நீ காட்சியாக ஒளி ஒலி என என்னிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது, தாய், தந்தை, ஆசிரியர், கடவுள் என யாராக யாரை யாரிடம் இருந்து காண்பது; பாவிப்பு இல்லை; மதிப்பீடு. நிச்சய அனுபவம் பாவிப்பைத் தவிர்க்கும். பாவிப்பவனின் வாழ்க்கையை உணரும். ஏன்? என் அனுபவம் எனக்கு என்ற இருமாப்பு  இல்லை. அவனுக்கும் உண்டு என்ற ஓர் அசைவு அவன் மூலம் கிடைத்துவிட்டது. என் அனுபவத்தில் சிறந்தது என நான் நினைக்கும் ஒன்றில், அவன் வேறு ஒன்றைக் காண்பிக்கும் பொழுது, என் இருப்பு என நான் நம்பியது தடுமாறுகின்றது. அவன் என் முன்னோர்களில் ஒருவன். எனக்கு ஒன்றை என் அனுபவத்தில் கவனப்படுத்து கின்றான் ஒரு மருத்துவ கடவுள் போல்.

தாய் தந்தை கடவுள்
கடவுள் என் முன்னோர்கள்
தாய் தந்தை உறவுகள் மீறி
அனுபவ புரிதல் வாழும் காலத்தில்
வாழும் காலம் இறந்த காலத்தில்
வாழும் காலம்
வாழ்க்கை அனைத்துடன்
அனைத்தின் அழிவு
உருவாதல்
இருத்தலில் வளர்தலில்
சுகம்
எனக் கடவுளைக் கடவுளாக்கும் வாழும் காலத்துடனான இறந்த காலம் கலையின் மகிழ்வு. கலை என்ற சொல் என்னுடையதில்லை. எனக்கு அறிமுகமான குறியீடு, செயல், வெப்பம், உக்ரம், தகிப்பு, விலகல், ஆழ்நிலை, அமைதி, இயக்கம், உருவாக்கம், ஒன்றில் இருந்து மற்றும் ஒன்று.
ஒருவர் ஓசையை விரும்புகின்றார். ஒருவர் ஒளியை விரும்புகின்றார். ஒருவர் உடல் மொழியை விரும்புகின்றார். ஒருவரின் வெளிப்பாட்டு விருப்பம் அவன் விரும்பிய துறை சார்ந்ததாக அமைகின்றது. நான் ஒளியை விரும்பிவிட்டேன். தாய்மொழி நிலம் சார்ந்ததாகவும், மூலமொழி ஒளி ஒலி சார்ந்ததாகவும் அமைகின்றது. ஒளி ஓசையையும் ஓசை ஒளியையும் தன்னுள் கொண்டுள்ளது. தரிசனத்தில் காணும் பொருள் மனிதனின் பார்வையில் உண்டு, இல்லை. இம்முரண்பாடு பார்க்கும் பொருளை ஊடுருவிச் செல்லும் விருப்பத்தில் நிகழ்கின்றது. மனிதன் தன்னில் இருந்து தன்னைப் பல்வேறாகப் பிரித்து, பிரித்த அத்தனையுடன் இணைத்து பிரித்துப் பார்க்கும் சுழல்வெளி ஊடுருவலில் உள்ளது. உறவின் சுகம் வேண்டி மீண்டும் மீண்டும் தன்னை தானே ஊடுருவலுக்குள் பயணப் படுத்திக் கொள்ளும் நிகழ்வு அனைத்தும் தன் போன்று என்பதில் இருந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இருத்தலில் உள்ள ஒன்று இல்லாமல் போனதன் மர்ம நிகழ்வு யாரிடம் இல்லை. இந்த இயல்பு நிகழ்கின்றது. யாரும் அறியாமல் யாரும் விரும்பாமல்.

களஅனுபவமும் வழக்காறுகளும்



செ. ஸ்டாலின், உதவிப் பேராசிரியர், குருநானக் கல்லூரி, சென்னை.



 கள ஆய்வில் சந்தித்த பலர் என்னிடம் அன்பாகப் பழகினர். நான் அம்மையப்பன் நல்லூரில் தங்கி கள ஆய்வை மேற்கொண்டேன். நான் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் காது அவ்வளவாக கேட்காத பாட்டி ஒருவர் இருந்தார். அந்த பாட்டி என்னைத் தேடி அக்கிராமத்தில் எங்கிருந்தாலும் வந்து விடுவார். ஒருநாள் கள ஆய்வுக்காக அருகிலுள்ள ராவுத்தநல்லூர் என்ற இடத்திற்குச் சென்று மதியம் திரும்பினேன். எனக்காகப் புளித்த தயிர் ஊற்றி கூழ், வற்றல் மிளகாய் வைத்திருந்தார்கள். வந்தவுடன் எனக்குக் கொடுத்தார்கள். நானும் மகிழ்ச்சியில் குடித்துவிட்டு, பின்னர் தூங்கி விட்டேன். அவர்களும் நான் ஒரு கல்யாணத்துக்குப் போகணும்பான்னு சொல்லிக் கொண்டே போய்விட்டார்கள். அவர்கள் என்னை விசாரித்துவிட்டு போய் இருக்கிறார்கள். நான் நாளைக்குத்தா வருவேன். அந்த தம்பி ஊருக்கு எப்போ போகும்ன்னு கேட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.
இவர்கள் சென்னையை அடுத்த மறைமலைநகருக்கு உறவுக்கார் திருமணத்திற்கு இரயிலில் சென்றபோது இறங்கி அனைவரும் சென்றிருக்கிறார்கள். மேம்பாலத்தில் ஏற முடியாது, பயமாக இருக்கும் என்று தண்டவாளத்தைக் கடக்கும்போது சேலை தண்டவாளக் கம்பி ஒன்றில் மாட்டிக் கொண்டிருக்கிறது... அருகில் உள்ள தண்டவாளத்தில் அதிவேக ரயில் ஒன்று வந்து கொண்டிருக்கிறது.  புடவையை இவர்கள் வேகமாக இழுக்கும் போது நிலை தடுமாறி அருகிலிருக்கும் தண்டவாளத்தில் விழ அந்த இரயிலில் அடிபட்டு இரு துண்டாகி இறந்து போனார்கள்... இரு தினங்களுக்குப் பிறகு வந்த அவர்களின் உடல் வெள்ளைத் துணியில் சுற்றி கிடத்தப்பட்டு இருந்தது. அதனைப் பார்த்தபோது உண்மையிலேயே மனம் அவ்வளவு கடினப்பட்டது. என் இரத்த உறவினர்களில் ஒருவராக அவர் தெரிந்தார். அழுத அத்தனை பெண்களும் என்னை விசாரித்து, எனக்கு உதவி செய்தது பற்றியும் தன் பிள்ளை வயிற்றுப் பேரன் போல இருக்கிறார் என்று அவர்கள் பேசியது உட்பட அத்தனை நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி அழுதது, என்னை வெகுவாக கலங்க வைத்தது. இவர் உட்பட பலர் எதையும்  எதிர்பார்க்காமல் காட்டும் அன்பைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இங்கு தாலாட்டுப்பாட்டும் நாட்டார் கதையும் உங்களுக்காக...



 
 
ராஜா கதை (கோவிந்தசாமி,நூத்தஞ்சேரி, காஞ்சிபுரம்)

ஒரு ராஜாவும் தங்கச்சியும் இருந்தாங்க. தங்கச்சி கல்யாணம் பண்ணனும்ட்டு ஒரு ராஜா புள்ளெக்கி, தங்கச்சிய தூரத்துல குட்த்துட்டாரு. அண்ணெ ராஜா,அதுக்கப்புறமா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. தங்கச்சிக்கு ரெண்டு புள்ளப் பொறந்தது. அவுங்க பேரு வீரமோகன், சுகுணா. அவுங்கள நல்லாப் படிக்க வெச்சி, வளத்துக்குணு வர்றாங்க. இந்த ராஜாக்கு ஒரே ஒரு பொண்ணு ஹேமலதான்னு பேரு. ஒரு நாளு விஷ ஜூரமாயிடுச்சி. தங்கச்சி வூட்டுக்காரெ செத்துட்றான். இவளொட மச்சினெ யோசிக்கிறான். இவம் புள்ளைத்தானெ அடுத்த ராஜா. அவன்கள விடக் கூடாதுன்ட்டுக் கொடுமப் பண்ண ஆரம்பிச்சிட்டான். அந்தம்மாவ பாதாளச் சிறையில அடைச்சிட்டா(ன்). கொழந்தை களையும் அடைச்சிட்டான். இந்த விஷயத்த எப்டியொம் அண்ணங்கிட்டச் சொல்ல தூதுவுட்டான். அந்த நாட்டு மந்திரியே, அவ மச்சினெ பண்ணக் கொடுமயப் பாக்க முடியாம, அவன சாவடிச்சிட்டான். இந்த ராஜா தங்கச்சி கொழந்தைகங்களக் கூப்டுக்குணு வந்துட்றான்.  புள்ளைங்க ஒரே ஸ்கூலுக்கு அனுப்புறான். தாம் பொண்ணோடு சேத்து, பசங்கப் பெரியவங்காயிட்டான். ஒடனெ, தங்கச்சி அண்ணங்கிட்டப் போயி, அண்ணா ஊம் பொண்ண எம்புள்ளைங்கள்ள ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்றீனான்னு கேக்க, அவனும் செரின்றான். அதுக்குள்ள விஷ ஜூரம் வந்து தங்கச்சியும் செத்துட்றாள். மாமனெ ரெண்டு புள்ளைங்கள காப்பாத்திக்கினு வர்றான்.
ஒரு நாளு பொண்டாட்டியக் கூப்ட்டு, நம்மப் பொண்ண வீரமோகனுக்குக் குடுத்து அவுங்க நாட்டுக்கு அனுப்பிட்லான்ட்டு சொல்றான். அதுக்கு அவ, பொண்ணு ரெண்டு பேர்ல யார விரும்புதோ அவனக் கட்டிக் கொடுக்கலான்றா. அப்பொ ஹேமலதாவும் அவத் தோழிகளும் தோட்டத்துல இருக்கும்போது, ஆறடி உயரமுள்ள ஒரு மனிதக் கொரங்கு வந்து இவகிட்ட கலாட்டாப் பண்ணுது.பயிப்புட்றாள் இவ. அந்த நேரம்பாத்து வீரமோகனும், சுகுணாவும் வாள் சண்டப்பயிற்சி எட்த்துங்குறாங்க. அவ அலறலப் பாத்து சுகுணா ஓடியாந்து காப்பாத்துறான்.கொரங்கக் கொன்னுட்ரான். அதுக்குள்ள ராஜாக்கு ஆள் போயி அவெ வந்துகாயத்துக்கு மருந்தெல்லாம் போட்டு, பொண்ணுக்கிட்ட கேக்குறாள். நீ யாரக் கட்டிக்கிறேன்னு. அதுக்கு அவ நா சுகுணா அத்தானத்தான் கட்டிக்குவெ. அவரு தா ஏ உயிரக் காப்பாத்துனாருன்னாள். கல்யாணம் ஏற்பாடு நடக்குது.
இன்னொரு ஊர்ல சதப்பிண்ட வெள்ள அரக்கன்னு ஒருத்தென். அவெ அந்த ஊரையெ அட்டகாயம் பண்றான். அவனோட உயிர் நாடில இருந்து பத்தடிப் பாம்பு ஒன்னுக் கௌம்பி யாரத் தீண்டுதோ, அவங்க எலும்பு இல்லாம எல்லாம் சதயா மாறிடும். அதனால, அவுனுக்கு சதப்பிண்ட வெள்ளரக்கன்னு பேரு. இப்டி ஊரையே நாசம் பண்றான். அந்த ஊர் ராஜம்பொண்ணு, இவன எப்பொ சாவடிக்கிறீங்களோ, அப்பதா நா உள்ளவெ வருவேன்ட்டு பத்து தாதிங்க, பத்து வீரனுங்களக் கூட்டிக்கிணுக் காட்டுக்குப் போய்ட்றாள். காட்ல, காட்டுவாசி தலைவன் புலிகேசின்னு ஒருத்தென். அவுங்களுக்கு எல்லா ஏற்பாடும் பண்றான். அந்தப் பொண்ணு பேரு ஜோதி. அப்பொ அந்த வேடர் தலைவன் சொல்றான். அம்மா ஆலாலச் சுந்தரென்னு ஒரு முனிவரு இருக்குறாரு. அவுருக்கிட்டப் போனாக்கா, சதப்பிண்ட வெள்ளரக்கனென்னு சாவடிக்கிறதுக்கு வழி சொல்லுவாருன்னான். அவ, அந்த முனிவரத் தேடிக்கிணு, நாலு அஞ்சி நாளு அலைறாள். இதுக்குநடுவுல, தம்பிய விரும்புறதா சொல்லிட்டாளே ஹேமலதா. அதனால, நம்போ இங்க இருக்கக் கூடாது. நம்போ நாட்டுக்குப் போய்ட்லான்ட்டு ஒரு லட்டரு எழுதி காவலாளிக்கிட்ட குட்துட்டு, வெள்ளக் குதுர மேல ஏறிக்கிணு அந்தக் காட்டு வழியா வர்றான் வீரமோகன். அந்த நேரம் பாத்து முனிவரத் தேடிக்கிணு வந்தவள, பத்து திருடனுங்க மடக்கிட்டானுங்க. வீரமோகன் முனிவரு இருக்குற மரத்தாண்ட வன்ட்டான். முனிவரப் பாத்து அவுருக்குக்கால்ல வுழுந்த ஒடனே, அவரு கண்விழிச்சிப் பாக்கவே இல்ல. எழுந்தா, குதுரில ஏறிக்கிணுப் போறான். அந்த நேரம் பாத்து அந்தப் பொண்ணுப் போயி ரெண்டு பேர சாவடிக்கிறாள். ரெண்டு பேரும், இன்னா எந்த வூருன்னு வெவரத்தக் கேக்றான். வில் அம்புஎட்த்து ஒன்னவுட்டு எட்டுப் பேரக் கொல்றா(ன்). இந்தப் பொண்ணுப் போயி ரெண்டு பேர சாவடிக்கிறாள். அவெ ஒடனெ, தா பாத்த முனிவரப்பத்தி சொல்றான். சொல்ட்டு குதிரில ஏத்திக்கிணு முனிவருக்கிட்டப் போறாங்க. போயி ரெண்டு பேரும் அவரு கால்ல வுழுறாங்க. அப்பொ அவருப் பாத்துட்டு இன்னான்னுக் கேக்கவொ, எல்லாத்தியும் இவ சொல்றாள். அதுக்கு முனிவரு, நா ஒரு குளிகைக் கல்லு (கூழாங்கல்லு மாரி) தர்றென். அத வாயில போட்டா, காத்தா மாறிடுவெ, அப்பொ யாருக்குமே தெரியாது. அந்த சமயத்துல அவனக் கொன்னுட்லான்னாரு. அத எட்த்துகுணுப் போறங்க.
இவந்தம்பி சுகுணா. அங்க அண்ணெ இருக்கும்போது தம்பி கல்யாணம் பண்ணக் கூடாதுன்ட்டு அவெ ஒரு லட்டரு எழுதி வெச்சிட்டு, அவுங்க அப்பெ நாட்டுக்கு வர்றான். வர்ற வழில சதப்பிண்ட வெள்ளரக்கங்கிட்ட சுகுணா மாட்டிக்கிறான். பாம்பு உயிர் நாடிலர்ந்து வருது. வந்து தீண்டிச்சின்னா எலும்பு இல்லாத சதயா மாறிடுவான். அரக்கனும் அவன லொடக்குன்னு முழுங்கிடுவான். அந்த நேரம் பாத்து அண்ணெ, ஜோதிய ஏத்திக்கிணு வேகமாவந்துட்றான். ஜோதி பாத்துட்டு, ஏங்க யாரோ ஒருத்தரு அரக்கங்கிட்ட மாட்டிக்கிட்டாரு. அவரக் காப்பாத்துணொன்ட்டு சொல்றாள். நீ இந்தக் கல்ல வாயிலப் போட்டுக்குணு போ. அவனக் காப்பாத்திட்டு, அந்தப் பாம்ப வெட்டிசாவடிச்சிடு. நா குதிரிய ஒட்டியார்றேன்றாள் ஜோதி. ஒடனெ வீரமோகன்கல்ல வாயிலப் போட்டுக்குணு காத்தா மாரி போயி, பாம்பு தலய சுத்தி எடுத்து வெட்னாம்பாரு. சதப்பிண்ட வெள்ளரக்கன் அப்டி போயி வுழுந்து செத்துட்டான். சுகுணா ஒடனெ, இன்னாடா இது. நம்போ ஒண்ணுமே செய்ல, இவந்தனியா போயி வுழுறான்ட்டு நெனெக்கிறான். இவனுக்குத்தான் கண்ணுக்குத் தெரியாதெ. அப்டியெ கிட்டப் போயி பாத்தா தம்பி. இவெ ரூபத்துக்கு வந்துட்டான். ரெண்டு பேரும் பாத்துக் கட்டிப்புடிச்சி அழுறாங்க. தம்பிய ஏன்டா வந்துட்டேன்னான். மாமா வூட்டுக்கே போயி ஹேமலதாவ சுகுணாக்குக் கட்டி வெச்சிடுங்க. நானும் ஜோதிய கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்க போய்ட்றேன்ட்டு சொல்லிப்போய்ட்றான்.  சுகுணா இங்கியெ நின்னுட்றான். இவெம் போயி ஜோதியக் கட்டிக்கிணு ஜோதிமா நகரத்த ஆண்டு வர்றான்.                 

  தாலாட்டு
 
காக்காயோ காக்காயோ - எங்க
அம்மாளப் பாத்தீங்களா
வேலூருச் சந்தையிலே
வேடிக்கைப் பாக்குறாங்கோ
பச்சக்கருவோட்டுக்கு
கையேந்தி நிக்குறாங்கோ
கோட்டக்காட்டுல கோடி நிக்குறாங்கோ
பாக்கத்துல பாத்துநிக்கிறாங்கோ

கூவத்தூருல கொஞ்சிக்கினு இருக்குறாங்கோ
     நெடுமரத்துல நெறிஞ்சிப் பாக்குறாங்கோ
ஆடிவர்ற வெள்ளத்துல அசஞ்சி பாக்குறாங்க
சவுக்குக்கடியில சாஞ்சிப் பாக்குறாங்கோ
செய்யூரு சந்தையில செறிஞ்சி வர்றாங்க
கிருஷ்ணப் பஸ்சுல கீச்சிக்குனு உழ்ந்துட்டாங்க.

-கார்த்திகா  (பட்டிபுலம்,காஞ்சிபுரம்)

திருநங்கைகளின் தோழன்

என். ஜெய்சிங், புகைப்படக்கலைஞர், மும்பை.

                   

என்னுடைய சிறு வயதிலிருந்து திரு நங்கைகள் பற்றிய பயம், சந்தேகங்கள் எனக்கு இருந்தன. பொண்டுகோ புள்ளஎன அழைக்க ப்பட்ட அப்பு என்கிற திருநங்கை மூலமாய்த் திருநங்கைகள் பற்றிய முதல் அறிமுகம் ஏற்பட்டது. பெரிய அளவிலான பொட்டு, உயர்த்திப் போடப்பட்ட தலைக் கொண்டை, ஆண்களின் அரைக்கால் சட்டை, பெண்கள் உடுத்தும் பாணியில் அமைந்த கைலி, வாய் நிறைய வெற்றிலை, சுயநலமற்ற அன்பு கொண்ட வராய் என் எதிர் வீட்டில் குடியிருந்தார். என் தெரு மக்கள் அனைவரும் தண்ணீர் பிடிக்கவும், குழந்தைகளைப் பார்த்துக் கொள் ளவும், காய்கறி வாங்கி வரவும், துணி துவைக் கவும் பயன் படுத்திக் கொண்டு அவரை ஏய் பொண்டுகா புள்ள எனக் கிண்டலடிப்பர். ஆனால் சுப்பு அனைவரிடமும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்பாய் பழகினார்.

திருநங்கைகள் பணம் பிடுங்கிகள், மோசமா னவர்கள் என்கிற பொதுபுத்தி எனக்கு ருந்தது. வேலை நிமித்தம் சென்னையிலிருந்து மும்பைக்கு இரயில் பயணத்தின்போது பட் பட்’ பட்டென கை தட்டும் ஓசை அடுத்த பெட்டியில் கேட்கும்போதே, நான் பயணம் செய்த பெட்டியில் சலசலப்பு ஏற்படுவதை பார்த்திருக் கிறேன். கீழே அமர்ந்திருக்கும் ஆண்கள் மேலே றிப்போக முற்படுவர்; போர்வை போர்த்திக் கொண்டு தூங்குவது போல பாவனை செய்வர். நானும் நமக்கேன் வீண் வம்பு எனத் தூங்கு வதைப் போல் நடித்திருக்கிறேன். சில சமயம் காசு கொடுத்திருக் கிறேன். திருநங்கைகள் யார்? ஏன் அவர்களைப் பார்த்து பயப்படுகிறோம்? ஆணும் இன்றி பெண்ணும் இன்றி இருக்கும் இவர்களின் உடற்கூறு   எப்படிப்பட்டது   என்கிற    தேடல்

எனக்குள் இருந்தது. விடைகளைத் தேடி கூவாகம் திருவிழா விற்குச் சென்றேன். முதல் முறைக் கூவாகம் திருவிழாவிற்குச் சென்ற போது என்னுடன் புகைப்படக் கருவியை எடுத்துச் சென்றிருந்தேன். சடங்குகள் நிறைந்த வண்ண மயமான திருவிழாவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்குப் புகைப்படங்கள் எடுக்கத் தோன்றவில்லை.
அங்கு நான் கண்ட திருநங்கைகளை அணுகிப் பேச விரும்பினேன். ஆனால், தயக்கம் இருந்தது. பொதுபுத்தியின் காரணமாய் பல கேள்விகள், பயங்கள் என்னைத்தடுத்தன. புகைப் படக் கருவியைப் பிடுங்கிக் கொள்வார்கள். காசைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்பன போன்ற என் எண்ண ஓட்டம் அமைந்திருந்தது. தொடர்ந்து ஐந்து வருடங்கள் கூவாகம் திருவிழாவிற்குச் சென்று கொண்டிருந்தேன்.

ஐந்தாவது வருடம், விழுப்புரம் சாலையில், ஓர் விடுதிக்கும் கீழ் நின்றபடி, விடுதிக்குள்  சென்று  வந்தபடி  இருந்த  திருநங்கைகளையும்,  ஆட் களையும்  தயங்கியபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மணி மதியம் பன்னிரெண்டு இருக்கும். அப்போது 25 வயதி லிருந்து முப்பது வயதுக்குள் இருந்த ஓர் அழகிய திருநங்கை என்னை வா எனக் கூப்பிட்டார். எனக்குள் சற்று தைரியம் ஏற்பட்டது. என்னையும் அறியாது அவரைப் பின் தொடர்ந்து சென்றேன். இடதுபுறம் ஒரு மதுபானக் கடை இருந்தது. குறுகிய சந்துபோல அமைந்திருந்த இடம் இருட்டாக இருந்தது. அறைக்கு வெளியே திருநங்கைகள் சிறுசிறு குழுக் களாய் அரட்டை அடித்தபடி அமர்ந்திருந் தனர். சில அறைகளுக்குள் தயாராகிக் கொண்டிருந்தனர். என்னை அழைத்துச்சென்ற திருநங்கை ஓர் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டார். என்னைக் கட்டிலில் அமரவைத்து உடைகளை நீக்கக் கூறினார். நான் அவரை தடுத்து, “நான் புகைப்படம் எடுக்க வந்தேன்எனத் தயங்கியபடி கூற, வெளியே போ, என் தொழில கெடுக்காதஎன்று கோபாமாய் என்னை வெளியேற்றினார். அறைக்கு வெளியே நின்ற என்னை மற்றொரு திருநங்கை ஏன் இவ்ளோ சீக்கிரம் வெளியே வந்துட்டீங்கஎனக் கேட்டார். எதிர் அறைக்கு என்னை அழைத்தார். நான் விடுதியை  விட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினேன். அவனைப் போல நான் அழகா இல்லையா? அதனால ஓடறீங்களா எனக் கேட்கவும் எனக்கு ஓர் அறை வாங்கியது போலிருந்தது. அந்த திருநங்கையின் அறைக்குள் சென்று அமர்ந்தேன். அங்கே ஐந்தாறு திருநங்கைகள் அமர்ந்திருந்தனர். நடந்ததைக் கூறினேன். என் பெயர், ஊர் பற்றிக் கேட்டனர்.
அவர்களுடன் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது திருநங்கைகள் ஒருவ ருக்கொருவர் கண்களால் ஜாடை பேசிக் கொண்டி ருந்தனர். உரையாடலின் ஊடே, ஒவ்வொ ருவராய் அறையை விட்டு வெளியே றினர். எஞ்சியி ருந்தது நானும் என்னை அறைக் குள் அழைத்த அந்த திருநங் கையும். திருநங்கை யின் உடலை முழுமை யாகப் பார்க்கவேண்டும்; புகைப்படம் எடுக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினேன். என்னை நிர்வாணமாய்ப் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் எனச் சம்மதம் கூறினார். புடவை மாற்றுவது போல், கட்டிலில் படுத்தபடி அரை நிர்வாணமாய் என பல வகையான  புகைப் படங்கள் எடுத்தேன். அந்த நிகழ்வில் எனக்குள்ளே பல மாற்றங்கள் நிகழ்ந்தன. திருநங்கைகளின் உடல் கூறு பற்றிய ஆர்வத்தில் கலந்திருந்த காமம் தேய்ந்து போனது. அன்று மாலை வரை அவர்களுடன் ஒன்றாய் உணவருந்தி, தேநீர் குடித்து, பேசிக் கொண்டு, நேரம் செலவிட்டேன்.
 திருநங்கைகள் பற்றி இச்சமூகம் எனக்குக் கற்றுக் கொடுத்த தவறான எண்ணங்கள் மறைந்து, அந்த அருகாமையும், அவர்கள் எனக்களித்த பாச மும் என்னை மனிதநேய முள்ளவனாய் மாற்றின. திருநங்கைகள் தங்கள் உடலைக் கொண்டாட, ஏற்றுக் கொள்ள, அவர்கள் உடலைப் பாராட்ட, சக மனிதராய் இச்சமூகத்தில் வாழ, தங்களை ஏற்றுக்  கொள்ளும் மனிதர்களை எதிர் பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். மிகுந்த நம்பிக்கையுடனும், ஏக்கத்துடனும் அன்று மாலைவரை என் புகைப் படக் கருவியைக் கையில் எடுக்காமல், அவர் களுடன் நண்பனாய், சகதோழனாய் நேரத்தை செலவிட்டு, திருநங்கைகள் பற்றிய ஆழ்ந்த, புரிதலுடன் விடுதியைவிட்டு வெளியே வந்தேன்