வியாழன், 26 செப்டம்பர், 2013

ஐரோப்பிய மரபு சார்ந்த விசயங்களை முதன்மைப்படுத்திப் பேசுவோர்


வீ.  அரசு, பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ் இலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்




தமிழ்ச் சூழலில் படைப்பாளர்கள் பார்வையாளர்கள் மட்டத்தில் கலை விமர்சனம் எப்படிப் பார்க்கப்படுகிறது? கலை விமர்சனத்தின் இன்றைய நிலைதான் என்ன?

 தமிழ் நாட்டினைப் பொருத்தமட்டில் இருபதாம் நூற்றாண்டினுடைய தொடக் கத்தில் கலைகள் பற்றிய உந்துதல் அதைப் பற்றிய உணர்வு என்பதனைப் பிரித்தானி யர்கள்தான் கொண்டு வருகிறார்கள். அதாவது நமக்கு நவீன கல்வி முறைமைகளைக் கொடுத்தது போலவே இந்தக் கலைகள் பற்றிப் படிப்பது, பேசுவது என்ற பயிற்சி யினையும் அவர்கள் நமக்கு உருவாக்குகிறார்கள்.

இப்படியாக உருவாக்கப்பட்டதுதான் சென்னைக் கலைக் கல்லூரி. இந்தியா விலேயே மிக முக்கியமான முதல் முயற்சியாக உருவாக்கப்பட்ட இக்கல்லூரி, சென்னையில் இருந்ததினாலேயே கேரளம், வங்காளம், தமிழகம் எனப் பல தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து பயிற்சி பெற முடிந்தது. ஆனால் கேரளத்திலிருந்து வந்து பயிற்சி பெற்றவர்கள் செயல்படுகிற முறைமை, வங்காளிகள் செயல்படுகிற முறைமை, தமிழர்கள் செயல்படுகிற முறைமை என்பவகளை வேறுபடுத் தித்தான் பார்க்க முடியும். காரணம் வேறு மாநிலத்தவர்களிடம் கலை சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான செயல்பாடும் அதனை நிறுவனப்படுத்துவதற்கான செயல்கள் என்பதும் தொடர்ச்சியாக இருக்கும். இதுமாதிரியான நன்மைகள் தமிழ்நாட்டில் உள்ளவர்களிடம் இருக்கிறதா என்பது கேள்வியே...

கேரளக் கலைஞர்கள் தங்கள் மாணவர்கள் மத்தியில், அரசு மத்தியில் அல்லது வேறு இடங்களில் இது தொடர்பான உரையாடலினை நிகழ்த்துகிறார்கள். இதனால் அங்கு இளைஞர்களின் கூட்டம் செல்வாக்குப் பெறுகிறது. இதேபோல் வங்காளத்திலும், இப்படியான நிகழ்வுகள் நடந்திருப்பதனை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இந்திய அளவில் சங்கீத நாடக அகாடமி, லலித்கலா அகாடமி, சாகித்ய அகாடமி போன்ற கலை இலக்கியத் துறைகள் தொடர்பான அமைப்பினை அவர்கள் உருவாக்கும்பொழுது அவர்களுக்கென்று ஒரு செல்வாக்கு வருகிறது. இதனால் அங்கீகரிக்கவும் படுகிறார்கள். அப்படியான விசயங்கள் அச்சிடப்பட்டு நூல்களாகவும் வெளிவருகின். ஆக, தமிழ்நாட்டினைப் பொறுத்தவரையில் இப்படியான திறமையானவர்கள் இருக்கிறார்களா என்றால் நிச்சயம் நிறைய பேர் இருக்கிறார்கள். சந்தானராஜ், ஆதிமூலம் போன்ற அற்புதமான கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எப்படிப் புதுமைப்பித்தனை எழுத்தாளர் என்றும் பாரதியைக் கவி என்றும் மரியாதை கொடுக்கிறோமோ அதே மாதிரியான மரியாதையினைப் பெறத்தக்கவர்கள்தான் இந்தக் கலைஞர்கள்.

ஆனால் இக்கலைஞர்களுக்கு நாம் இப்படியான மரியாதையை வெகுசன தளத்திலோ கல்வித் தளத்திலோ கொடுக்கிறோமா என்றால் இல்லை. காரணம் தொடர்ந்து படிக்கிறவர்களும் பல விசயங்களைப் பேசுகிறவர்களும் பல தளங்களிலும் செயல்படுகிறவர்களும் கூட இது பற்றி பிரக்ஞை இல்லாமல் இருக்கிறார்கள்.

ஒரு புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டால் இதில் இந்தக் கலைஞர்களுடைய பங்கு என்ன? என்பதனையே தெரியாதவர்களாக (எழுத்தாளர்கள்) இருக்கிறார்கள். அதாவது, இங்கு ஒருவர் கட்டடம் கட்டுகிறார் என்றால் அக்கட்டட வரைப்படத்தை உருவாக்கிய கலைஞர் பங்களிப்பு  எவ்வளவு முக்கியம் என்பதனை மறந்து வெறுமனே பொறியாளரைத்தான் பெருசாக நினைக்கிறார்கள்.

ஐரோப்பிய முறையில் உருவான நவீன கல்வி யாந்திரீகமாகப் புரிந்துகொள்ளும் பயிற்சி அளவிற்கு, அதனையொரு கலை வடிவமாகக் கட்டமைக்கின்ற கலைஞர்களைப் பற்றிப் புரிந்துகொள்ள உதவுவதில்லை, முதலில் பேச வேண்டியவர் கட்டட வடிவமைப்பு உருவாக்கிய கலைஞர்களே தவிரப் பொறியாளர்கள் அல்ல என்ற வேறுபாட்டினை உணர வேண்டும். இவ்வேறுபாடு பல துறைகளிலும் இருக்கிறது.

அரசு சார்ந்து ஒரு விழா நடக்கிறது என்றால் அந்த விழாவில் எம்மாதிரியான ஓவியங்களை முதன்மைப்படுத்துவது, எப்படியான சிற்பங்களை முதன்மைப்படுத்துவது, எத்தகைய வண்ணக் கொடிகளைச் செய்வது, அக்குறிப்பிட்ட சூழலை எப்படி கலைவடிவமாகச் செய்வது என்பதை அறிந்திருக்க வேண்டும். ஏனெனில் பாரம்பரிய மரபில் இதெல்லாம் இருக்கிறது. வாழைமரம் கட்டினார்கள், தோரணம் கட்டினார்கள், கும்பம் வைத்தார்கள் என்ற தொடர்ச்சியான மரபு நமக்கு இருக்கிறது. இதனைக் கேரள மண்ணில் பிறந்தவர்கள் பாதுகாக்கிறார்கள். அவர்களுடைய திருமணமாகயிருந்தாலும் அல்லது வேறு எந்த விழாவாக இருந்தாலும் அந்த இடத்திற்குப் போவோமேயானால் மனரீதியாகவே அதனை ஒரு விழா வெளியாக மாற்றி விடுகிறார்கள். இப்படியான மரபு நம்மிடையேயும் இருக்கிறதா என்றால்... இருக்கிறது. ஆனால் ஏன் பின்பற்றப் படவில்லை? பின்பற்றப்படாமல் இருப்பதற்கும் இப்படியான கலைஞர்களைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதற்கும் நிறைய தொடர்புகள் உண்டு.

இந்தத் தொடர்பு  என்பது எப்பொழுது அறுபட்டுப் போனது? ஏன் இல்லையா?  (i) கலைஞர்கள்  (ii) வெகுசன நிகழ்வு (iii) வெகுசன நிகழ்வு பற்றிய அறிவு சார்ந்த விவாதம் என்ற மூன்று நிலைகள் இருக்கின்றன. இதில் கலைஞர்களின் பங்களிப்பு என்பது முக்கியம். அதைப் பற்றி விவாதிக்கிறவர்களின் பங்களிப்பு என்ன என்பதும் முக்கியம். ஆனால், இதில் இந்த இரண்டு தரப்புகளிடமும் பெரிய சிக்கல் இருக்கிறது. ஒன்று, கலைஞர்கள் வெகுசனத் தளத்தோடு தொடர்பு கொள்ளாமல் சுருங்கிவிடுகிறார்கள். இதற்கான சிக்கலும் அவர்களுக்கு இருக்கிறது. அது இயல்பான சிக்கல்தான். அதனை சரியாகத்தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு இருக்கிற தன்னுணர்வு சார்ந்த மனநிலை என்பது நிறைய நேரங்களில் பரந்த வெளியில் இருக்க முடியாத சூழலை உருவாக்குகிறது என்பதனைப் புரிந்துகொண்டு கலைஞர்களைப் போற்ற வேண்டும். ஆனால் இங்கு சூழல் என்னவென்றால் அப்படியான புரிந்த கூட்டமே (அறிவாளிகள்) இங்கில்லை. மாறாக இவர்களைப் பற்றிப் பேசுகிறவர்கள் யாரென்று பார்த்தால் ஐரோப் பியமரபு சார்ந்த விசயங்களை முதன்மைப்படுத்திப் பேசும் கூட்டமாகவே இருக்கிறது.
நமக்கென்று வண்ண மரபும் சிலை உருவாக்க மரபும் விழா சார்ந்த மரபும் இருக்கிறது. இத்தகைய கருத்தாக்கங்களின் மனப்படிவுகளை நம்முடைய கலைஞர்கள் உள்வாங்குகிறார்கள். ஆனால், இதனை ரசிக்கிற மனநிலைமையை நம்முடைய வெகுசனத் தளம் இழந்துவிட்டது. எடுத்துக்காட்டாக, பல்கலைக்கழகமும் கலை சம்பந்தப்பட்ட வருடன் நெருக்கமான இணைப்பை வைத்திருப்பதில்லை. சென்னைக் கலைக் கல்லூரி என்பதனை ஒதுக்கப்பட்ட நிறுவனமாகத் தள்ளிவிட்டார்கள். அதுவும் ஒதுங்கியே இருக்கிறது. வெகுசன நீரோட்டத்திற்குள் (அங்கீகாரத்திற்குள்) வருவதே இல்லை. எழுத்து சார்ந்த துறைக்குக் கிடைக்கிற அங்கீகாரம், திரைப்படத் துறைக்குக் கிடைக்கிற அங்கீகாரம், ஓவியர்களுக்குக் கிடைப்பதே இல்லை என்பது பெரிய கொடுமை. வேறு மாநிலங்களில் ஒரு எழுத்தாளரை மதிப்பது போலவே, ஓவியரையும் சிற்பியையும் மதிக்கிறார்கள். இங்கு ஓவியர், சிற்பி பற்றிய புரிதல் என்பதே இல்லை. இதனால் இவர்களும் ஒதுங்கியே இருக்கிறார்கள். 1970களில் சிறுபத்திரிகைகளில்தான் இவர்களைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள். இவர்களைப் பற்றிய விவரங்களைப் பதிவும் செய்கிறார்கள். 1980களில் வெகுசனப் பத்திரிகைகளிலும் இது பற்றிப் பேசப்படுகிறது. இன்று, முன்பு இருந்ததைவிடக் கொஞ்சம் அறிதல் வந்திருக்கிறது என்று சொல்லலாமே ஒழிய அதிகம் இல்லை. அதைப் பற்றி விவாதிக்கவும், வாசிக்கவும் தமிழில் அதற்கென்று ஒரு பத்திரிகையே இல்லையே.

ஏன்? அரசாங்கம் சார்ந்து நடத்துகிற நுண்கலைபத்திரிகையை அவ்வப்பொழுது யாரேனும் ஒருத்தர் எடுத்துக்கொண்டு ஏதோ ஒன்றினைப் பற்றின விசயங்களைப் போட்டுக் கொண்டு வெறுமனே ஒரு சடங்காகத்தான் நடத்துகிறார்களே தவிர, விரிவான எந்தத் தளத்திற்கும் போனதில்லை. அந்தப் பத்திரிகையை எவ்வளவு அடிக்கிறார்கள், எத்தனை பேர் படிக்கிறார்கள், எங்கிருந்து வருகிறது என்று எதுவும் தெரியாது. இது தனிப்பட்ட ஒருவருடைய வேலை மாதிரி நடந்துகொண்டு போகிறது. அதில் பணியாற்றுகிற அரசு ஊழியர்களும் அந்தத் துறை சார்ந்த அறிவே இல்லாமல் இருக்கிறார்கள். அப்படி ஒரு இதழினைக் கொண்டு வர வேண்டும் என்றால் அது எதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது என்கிற திட்டமே இல்லாது அதிகமான விலை வைத்து விடுகிறார்கள். குறைந்தபட்சம் மூன்று நான்கு பேர்கள் வாங்குகிறார்கள். இப்படிப்பட்ட பரவலான அறிதலும் செயல்பாடுகளும் இந்தத் துறை சார்ந்து இல்லாமல் இருப்பதனால் எப்படி இதைப் பற்றிய புரிதல் சாதாரணமானவர்கள் மத்தியில் போய்ச் சேரும்.

இலக்கியம் படிக்கிற மாணவர்களுக்கும், நாடகம் படிக்கிற மாணவர்களுக்கும், இசைப் படிக்கிற மாணவர்களுக்கும் இத்துறை சார்ந்த அறிவு மிகவும் இயல்பாகவே இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கெல்லாம் இப்படியான விசயம் இருக்கிறது என்பதே தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அண்மைக் காலங்களில் குறிப்பாக நிறைய போஸ்டர் உருவாக்குவது அல்லது வரவேற்பறை களுக்கான சின்னச்சின்னப் பொருட்களை உருவாக்குகிற கலாச்சாரம் என்பதெல்லாம் வந்திருக்கிறது. இது ஒரு பணக்கார பண்பாடாகத்தான் கட்டமைக்கப் பட்டிருக்கிறதே ஒழிய, இது உண்மையானதாக இல்லை. இது மிகச் சாதாரணமாக எல்லோர் மத்தியிலேயும் இருக்க வேண்டிய ஒரு விசயமாகும். ஆனால், ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமானதாக தங்கியிருப்பதற்கான காரணம், இதைப்பற்றின புரிதலின்மையேயாகும்.

இந்த நிலைமையை மலையாளிகளிடம் வேறு மாதிரி பார்க்கலாம். அதாவது மிகவும் இயல்பான தன்மையில் வைத்திருப்பார்கள். அதேபோல் வங்காளியும். அதனால் தான் தாகூரால் சாந்திநிகேதனை உருவாக்க முடிந்தது. அந்தமாதிரியான புரிதல் இங்கே இல்லை. இந்த வறட்சியினால்தான் மிகத் திறமையான கலைஞர்களும் இருட்டடிப்புக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளவே முடிவதில்லை. அதேபோல் பாடத்திட்டங்களும் இவர்களைப் பற்றி போதிக்கிறதா என்றால் இல்லை. ஏதோ கைத்தொழில் செய்பவர்களைப்போல அதாவது ஒரு புத்தகத்திற்கு அட்டைப் படம் போடுகிறவர்கள் என்ற நிலையிலேயே மிகவும் எளிமைப்படுத்திக் கேவலப்படுத்தும் சூழல் தமிழ்ச் சூழலில்தான் இருக்கிறது. இச்சூழல் கண்டிப்பாக மாறவேண்டும். தற்போது கொஞ்சம் மாறியிருக்கிறது. ஆனால் பெரிய அளவிற்கு நாம் எதிர்பார்க்கிற அளவிற்கான மாற்றம் ஏற்படவில்லை.

இலங்கையில் நாடகப் பேராசிரியர் கணபதிப் பிள்ளை அறக்கட்டளை மூலம் இப்படியான கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் பரிசு கொடுத்துக் கௌரவிக்க வேண்டும் என ஒரு குழுவினை ஏற்படுத்தியிருக்கிறார்கள். முதலாண்டில் ஆதிமூலத்திற்குக் கொடுக்கப் போகிறார்கள். இவ்விழா கொழும்பில் நடக்கும் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடக்கும். ஆதிமூலம் போன்ற கலைஞர்களை இப்படியான கல்வியாளர்கள் சார்ந்த வட்டத்துக் குள்ளேயும் அங்கீகரித்துப் பேசவேண்டும். இச்சூழல் வளர வளர அதனுடைய பரிணாமம் என்பதும் மாறும் என்று நம்பலாம்.

இப்படியான விசயங்களை விமர்சகர்கள்தானே கொண்டு வரவேண்டும். இதுபற்றி...?

தமிழில் அப்படி மிகப்பரந்த அளவிற்குப் பேசப்படுகிற விமர்சகர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில்தான் இருக்கிறது. இரண்டாவதாக இதற்குள்ளேயும் குழுவாதம் இருக்கிறது. எப்படி பத்திரிகைகளில் குழுவாதம் இருக்கிறதோ, அதாவது ஒரு குழு சார்ந்த குறிப்பிட்ட நபர்களையே எழுத்தாளர்கள், நாடகக்காரர்கள் என்பார்கள். இன்னொரு குழுவைப் புரிந்துகொள்வது என்ற நியதிக்குள்ளேயே போகமாட்டார்கள். இப்படியாக ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்திற்குள்ளேயே அழிந்து மனநோயாளி களாகிப் போன வரலாறு தமிழில் நிறைய இருக்கிறது. ஏன்? இப்படி போகிறார்கள் என்றால், கலை பற்றிய ஒரு விரிந்த அனுபவம் இல்லாததும், இதனை ஒரு இனம் சார்ந்த விசயமாகப் பார்க்காததுமே ஆகும்.

அதாவது மொழி சார்ந்ததாகவும் இனம் சார்ந்ததாகவும் வாழ்கிற சூழல் சார்ந்த தாகவும் பார்க்கிறதில்லை. இப்படியில்லாமல் வேறு எங்கேயிருந்து வந்து குதித்ததாகப் பார்க்கிற நபர்கள் நிறை பேர்கள் இருக்கிறார்கள். அது சார்ந்த செயல்பாடுகளும் தமிழ்நாட்டில் அறிவியல்பூர்வமாக இல்லாமல், கொச்சையாக நடத்தப் பட்டதேயாகும். இதனால் எல்லாவற்றையும் நேர் எதிராகப் பார்க்கிற இன்னொரு கூட்டமும் வளர்ந்து விட்டது. இக்கூட்டம்தான் தற்போது இவ்விசயங்களைப் பேசிக் கொண்டிக்கிறது. இவர்கள் இனம் பற்றி, மொழி பற்றி, சூழல் பற்றிய புரிதலே இல்லாதவர்கள். வெறுமனே இறக்குமதி யாகத்தான் பேசுவார்கள்.

இப்படி இறக்குமதியாகப் பேசுகிறவர்கள் இருப்பதனால்தான் வளமை என்பதே இல்லாமல் போனது. அதாவது சந்ரு என்றால் அவருடைய தனித்தன்மை என்ன? மருது கோடுகளை எப்படிப் புரிவது? ஆதிமூலம் யார்? என்று ஒவ்வொருத்தரிடமும் உள்ள தன்மை என்பது இருக்கிறதல்லவா? அதைப் பற்றி பரந்த தளத்தில் பேசக்கூடிய அறிவாளிகள் இல்லை. ஆனால், ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மிகவும் சிக்கலா னவர்கள். காரணம் ரசிகர்கள் ஒருவரைத்தான் ரசிப்பார்கள். இன்னொருவரை ரசிக்க மாட்டார்கள். ஆகையினால் இவர்களுக்கு ஒரு கூட்டம், அவர்களுக்கு ஒரு கூட்டம் என்றிருக்கிறது. இப்படி இருப்பதுதான் மிகப்பெரிய நோய். ஆதிமூலம் பெரிய மனிதர் என்றால் சந்ருவும் ஒருவகையில் பெரிய மனிதர்தான். இப்படியான புரிதல் நமக்கு யாருக்கும் இருப்பதில்லை. அதனால்தான் சிறுபத்திரிகைகளின் குழுப் போல ஓவியர்களைப் பற்றி பேசிக் கொள்ளுகிற குழுவும் இன்னொரு வகையில் மோசமான நோய் பிடித்த குழுவாக இருக்கிறது. இப்படிப்பட்ட விசயங்களைப் பரவலான தளத்திற்கு எடுத்துக் கொண்டும் போகிறதில்லை.

எனக்குத் தெரிந்து, மிகக் குறைந்த அளவிலான ஓவியர்கள்தான் இன்னொரு ஓவியரை மதிக்கிறார்கள். மற்றவர்களை மதிக்க மறுக்கிறார்கள். இப்படியான மதிப்பீடுகளும் நோய்தானே. ஆனாலும் வெளியிலிருக்கிற நாம் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. இதனை ஒரு நுண்மையான விசயமாக எடுத்துக் கொள்ளலாம். இதனை ஜனநாயகப்பூர்வமான வெளியில் வைத்துப் பார்த்து,பேசுகிற மரபு என்பதும் மிகவும் முக்கியம். இத்தகைய மரபு நமக்கு எங்கிருந்துவரும் என்று சொன்னால், நமக்கு வண்ணங்கள் பற்றிய புரிதல் என்னவாக இருக்கிறது, கோடுகள் பற்றிய புரிதல் என்னவாக இருக்கிறது, நம்முடைய மரபில் இவை எப்படி எப்படியெல்லாம் வளர்ந்திருக்கிறது என்பதனை அறிந்துகொள்ள வேண்டும். அதேபோல் ஒரு சிற்பியினுடைய சிற்ப உருவாக்க மரபுஎப்படி சாதாரண மண்ணில் தொடங்கி எப்படி யெல்லாம் உருப்பெறுகிறது என்பதனையும் அறிந்திருக்க வேண்டும்.

இப்படியான மரபு  சார்ந்த விசயத்தை நாம் பாதுகாக்க வேண்டும். அதற்கு நம்முடைய வெளியில் (Space) எத்தகையதான இடத்தினைக் கொடுத்து வைத்திருக்கிறோம் என்பதனையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்படியில்லாம வெறும் அழகுப் பொருளாக வைத்திருந்தால் அதில் பயனேதுமில்லை. அப்பொருள் நம்முடைய வீட்டில் இருக்கிறது என்றால், அதனுடைய அடையாளம் என்ன? அதனை எந்த அடையாளத்தின் அடிப்படையில் வைத்திருக்கிறோம்? அதனைப் பார்க்கிறபோதும், ரசிக்கிறபோதும் நம் மனதில் என்ன விதமான அடையாளம் இருக்கிறது அல்லது நம்மைச் சார்ந்த, நம் குடும்பத்திலுள்ள குழந்தைகள் என எல்லோரும் அதனை எப்படிப் புரிந்து கொண்டிருக் கிறார்கள் என்பதான கண்ணோட்டத்தில், சிற்ப ஓவியங்கள் பற்றியான பயிற்சியில் நாம் தெளிந்திருக்க வேண்டும். ஆனால், நம்முடைய சூழலில் இவை மிகவும் குறைச்சலாகவே இருக்கிறது என்பதனையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

குறிப்பு: ‘தமிழ் இதழ்களில் நவீன  ஓவிய மரபு’ எனும் ஆய்விற்காக (2005) எடுக்கப்பட்ட நேர்காணல் : சி.முத்துகந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக