செந்தலைக்
குருவியின் இலக்கு குறித்து எழுதும்படி முத்து கேட்டுக் கொண்டார். குறி பொய்க்கலாம்.
குறி பார்த்து எய்தது மெய். இலக்கியப் படைப்பாளிகள் தங்கள்
படைப்பு குறித்துப் பொய் பேசலாம். படைப்பு மெய் (நிகழ்பொழுதின் பதிவு). 17.04.2013 அன்று மதியம்
சுமார் ஒரு மணி ஊத்துக் கோட்டையிலிருந்து வெங்கல் செல்லும் சாலை
சீத்தஞ்சேரியிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் தள்ளி ஒரு விலக்குப் பாதை.
அங்கு பேருந்து நிறுத்தம், நிழற்குடை. அதில் அமர்ந்து மதிய
உணவை முடித்தேன். அனல் காற்று, அருகில் மரங்கள் ஏதுமில்லை. எப்போதாவது
ஒரு வாகனம் கடந்து செல்லும். ஒரு பேருந்து நின்று சென்றது. ஒரு அம்மா விலக்குப்
பாதையில் நடந்து சென்றார். ஆண்கள் இருவர் இருந்தனர். ஒருவருக்கு வயது அறுபத்தி ஐந்து, மற்றவருக்கு வயது
ஐம்பது இருக்கலாம். இருவரும் என் அருகில் நிழலில் அமர்ந்தார்கள். துளி பிசகாமல்
ஒரு குவார்ட்டர் பிராந்தியை இரு கிளாசில் சரிசமமாகப்
பகுந்தார்கள்.
என்னை
நோக்கி ஒப்புக்குப் பெரியவர் “கொஞ்சம் தண்ணி
சாப்பிடுகிறீர்களா?”
நான்
“வேண்டாம்”
சிறியவர்
“சும்மா ஒரு மடக்கு”
நான்
“இப்போ நான் குடிக்கிறதில்லை”
ஆளுக்கு
ஒரு கிளாஸ், ஒரே ‘மடக்’
முகச்சுழிப்பில்
இரைச்சமூச்சு... முகமகிழ்வோடு சிறியவர் “இவரு என் சித்தப்பன்,
இவரு அண்ண மகன் நான். ரெண்டு பேரும் கூலி வேலைதான். கையப்பாருங்கள்
காப்புகாச்சி போய் கெடக்கு. நாங்க ரெண்டு பேரும் எங்க போனாலும் சேர்ந்து போவோம்.
சேர்ந்து குடிப்போம்.
பெரியவர்
“ஆமாம்... இவன் என் அண்ணன் மகன். இதோ என் கையப் பாருங்க.
அவன் கையவிட என் கை பாறையா ஆயிடுச்சி”.
மூன்று
சப்போட்டா பழம், இரண்டு வெள்ளரிக்காய்களை
அவர்களுக்குக் கொடுத்தேன். இருவரும் சாப்பிட்டபடியே
சிறியவர்
“சாமி... இந்தப்பக்கம் என்ன
வேலையா வந்தீங்க?”
நான்
“மெய்யூருக்கு ஒரு வேலையா வந்தேன்”
பெரியவர்
“பெரியவர் குடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு. பெரிய
மனுசர் பெரிய மனுசர்தான். நம்ம குடிக்கிறோம், அவரு நமக்குப் பழம் சாப்பிடுங்கோ நல்லதுன்னு சொல்லாம சொல்றார்...”
சிறியவர்
“ஆமாம்... பார்த்தா ஐயர் மாதிரியே இருக்கார்...
பெரியவரே நாங்க ரெட்டியாருங்க... நீங்க என்ன ஆளுக...?”
சிரித்தபடியே
நான் “நான் பறையன்”
சிறியவர்
தன் வாயில் அடித்துக் கொண்டார். இருவரும் சேர்ந்தே அய்யோ... அய்யோ...
சொன்னார்கள்.
சிறியவர்
“பெரியவரே அப்படி எல்லாம் சொல்லக்கூடாது... பாவம்...”
பெரியவர்
குழந்தைபோல் அருகில் வந்து என் தாடையைப் பிடித்து “பெரியவரே
தப்பா எடுத்துக்காதே”
அவர்களைக் கண்டு ரசித்தேன்.
பெரியவர்
என் கையைப் பிடித்துக் கொண்டார்.
சிறியவர்
“பெரியவர்... தெய்வம் போல இருக்கார். அவர் கைய
பிடிக்காம பேசு”
சிறியவர்
பக்கம் பார்த்து பெரியவர் “நீ சும்மா இருடா. பெரியவருக்கு என்ன தெரியும்” என்று கூறியதும் என் முகத்தைப் பார்த்தபடி
பெரியவர்
“நம்ம ரெண்டு பேர் ரெத்தமும் சிவப்புதானே... இதுல
ரெட்டி, பறையன்னு என்ன இருக்கு”
சிறியவர்
“திரும்ப, திரும்ப அவரு சாதி பேரச் சொல்லாத. அவக ஆளுகளுக்கு தெரிஞ்சா நம்மள வந்து அடிப்பாங்க...”
பெரியவர்
“இவன் என்ன வெவஸ்த கெட்டவனா பேசுறான்... பெரியவரே... என்
வீட்டுக்கு வாங்க. விலக்கு பாதையில, அதோ அங்க தெரியிற
வாட்டர் டேங்க் கீழ்தான் எங்க வீடுங்க. அவனுக்கும் புள்ள குட்டிங்க இருக்காங்க.
எனக்கும் பேரம் பேத்தி இருக்கு. இதோ கறி எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போறோம்.
நீங்க என் கூட வரணும். எங்க வீட்ல சாப்பிடணும்”
சிறியவர்
“ஆமாமாம்... நான் அரக்கிலோ மிளகா வத்தல் தாரேன்.
குத்தரிசி வேணுமின்னாலும் தர்றேன் வாங்க... உங்கள மாதிரி மனுசாளுக பழக்கம் எங்களுக்கு
வேணும்...”
கேட்டார்கள்
எனது முகவரி அட்டை ஒன்றை அவர்களுக்கு கொடுத்தேன். மணி இரண்டுக்கு மேல் ஆகிவிட்டது.
ஒரு பேருந்து நின்று சென்றது. ஒரு வாலிபன் மட்டும் இறங்கி விலக்குப்பாதையில் நடக்க
ஆரம்பித்தான்.
சிறியவர்
“அதோ போறானே அவன் என் அண்ணன் மகன். காலேஜ்ஜில படிக்கான்....
அவங்கிட்ட நீங்க பேசுங்க...”
இருவரும்
அழைக்க அந்த வாலிபன் எங்களிடம் வந்தான். அனைவரும் ஒருவருக்கொருவர் நன்றி கூறினோம்.
எனது இரு சக்கர வாகனம் தார் சாலையில் பயணித்தது. வேகமாக வண்டியில் பயணிக்கும்போது
அனல் அதிகமாகத் தெரியவில்லை.
பொய்யூரிலிருந்து
மெய்யூர்... அப்புறம் மண்ணவோடு... அப்புறம் இங்கு சாதிய ஏற்றத் தாழ்வுகள் குறித்து
வேதனைப்படாமல், வெட்கப்படாமல், தமிழினம்,
தமிழ் தேசியம் பேசி பிழைப்பு நடத்தும் கொம்பர்கள்...
காலை
நடைப்பயிற்சிக்குப்பின் வீடு திரும்பும் வழியில் ஒரு ரொட்டிக் கடையில் வழக்கமாக
பிரட் பாக்கெட் வாங்குவேன். அன்றும் பிரட் பாக்கெட் கேட்டேன். புதிய பையன் இரண்டு
பிரட் பாக்கெட்டை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பைக்குள் போடுவதைக் கவனித்தேன்.
உடனே
நான், “தம்பி பிளாஸ்டிக் பை வேண்டாம்”
புதியவன்
“பிரட் தூக்கிட்டுப்போக வசதியாக இருக்கும்”
நான்
“பிளாஸ்டிக் குப்பைகளைக்
குறைக்கலாம்ன்னு நெனைக்கிறேன்”
சிடுசிடுப்புடன்
புதியவன் “பை தயாரிக்கிறவன விட்டுப்புட்டு, அரசு நம்மள குத்தவாளியா ஆக்குது” என்றான். சிரிப்பை
அடக்க முடியாமல் தலை கவிழ்ந்தவாறு இரு பிரட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு வெளியேறினேன். அந்தச் சிரிப்பை “எல்லோருக்கும் எல்லாம் தெரிந்தே இருக்கிறது” என மொழி
பெயர்க்கலாம்.
சாதி, மதம், மொழி, இனம், அரசியல், நாடு, காடு, ஊரு, பாடு, சாடு, மாடு,வீடு, சூடு, வாடு எல்லாம் கடந்து மானுட நல்லறத்தை இலக்காகக்
கொண்டது கலை இலக்கியம் என்று படைப்பாளிகள் பொய்யுரைக்கலாம். அவர்களது பங்களிப்புகள்
ஒருபோதும் பொய்யு ரைக்காது. இது வாசகர்களுக்குப் புரியாதா...புரியும்... புரிஞ்சாலும்
படைப்பாளர்களும் வாசகர் களும் பங்காளிகள்தானே.
இப்படியாகப் போனது, வந்ததுமா எழுதி எழுதி கிழித்தவை.. பிரசுரமாகி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் முன்வந்து...
-சந்ரு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக