சந்ரு, அரசு கவின்கலைக்
கல்லூரி முதல்வர் (ஓய்வு), எழும்பூர்
கலை
என்றால் என்ன?
பல பொருள் தரும்
ஒரு சொல். இளம் பருவம் (வேட்டை பழகுதல்) விளையாட்டு, வாலிபம் - விளையாட்டு, வேட்டையும்
விளையாட்டும் ஒன்று கலந்த அனுபவம் கலை. கலை ஓர் அனுபவம். பயிற்சி வாயிலான
வெளிப்பாடு கலை படைப்பு.
மானுட
வாழ்வில் கலையின் பங்கு?
பகிர்தல்
வாழ்வின் யதார்த்தம். தனிநபர், சமூகம் என்பதில் நேரும் மன இறுக்கத்தின்
நீட்சியாக வெளி, கடவுள், கலை, காதல் போன்ற நல்ல தன்மைகள் உருக்கொள்கின்றன.
யாவரும்
சொல்பவர், கேட்பவர் என்ற இருவேறு நிலைக்கு உரியவர். இக்கலையின் பேரால் தன் அனுபவத்தை
சொல்லும் நிலையில் கலைஞனும் கேட்கும் நிலையில் சமூகமும் சுட்டிக்காட்டப் படுகிறார்கள்.
தகவல் பதிவு, அனுபவ பகிர்வு என்பதை மானுட வாழ்வில் கலையின் பங்கு
பணியாக குறிப்பிடலாம்.
யார்
கலைஞன்? அதன் நீட்சியாக யார் கலைஞன் இல்லை?
தனிப் பயணிக்கு
பாட்டு துணை. மரண பயம், விந்தை உணர்வு குறித்த விசாரிப்பில் நெகிழ்ந்து
அகமகிழ்ந்த பொழுதாய் உறவுகளை தழுவி நிற்பவன் கலைஞன். இவ்விசாரிப்பில் குழப்பமுற்று,
வன்மத்துடன் பிறர்பால் அதிகாரம் எழுதுவது கலைஞனுக்குப் புறம்பானது.(நம் சமூகத்தில் ஏன் அங்கும், தன்னில் பரந்துபட்ட மனோநிலையை உணரும் இடத்தில் தன்னை
கலைஞனாக பாவிக்கிறார்)
இக்குழுவினர்
ஓவியங்களில் உருவத் தோற்றங்கள் பொது பண்பு கொள்கின்றன. இதுவே இக்குழு ஒருங்கிணையக் காரணமா? (அ) வேறு படைப்பியல் உந்துதலா-?
கலைத்துறையினர்
சாமி வகையறா, ஆண், பெண் அழகு வகையறா,
குதிரை, கரப்பான் வகையறாக்களும் உருவத்
தோற்றங்களை பொதுவாக கொண்டவை எனினும் அத்தகைய படைப்பாளி, படைப்புகள்
இக்குழுவில் இல்லை.
ஓவியத்திலுள்ள
உருவத் தோற்றங்களுக்கு பின்னால் படைப்பாளி நிற்கிறான். ஓவியம் குறித்த ஆய்வுகள்
படைப்பாளி, ஆளுமை, சமூகம் எனப் பரந்து
விரிந்தவை. இதில் சுயம், சமூகம்
சார்ந்த விசாரிப்பு, விமர்சனங்களை பிரதிபலிக்கும் உருவத் தோற்றங்களை பொதுப்
பண்பாக இக்குழுவின் ஓவியங்கள் பெற்றுள்ளன எனலாம். மேலும், இக்குழு
நடப்பிலுள்ள
பரவலான கருத்தியல், ஊடக பண்புகளையும் கடந்து செல்லும் முனைவு கொண்டது
எனலாம்.
ஏன் அரூப ஓவியர்கள் இக்குழுவில் இல்லை?
மௌனம் மகான்களுக்கு
அழகு. வாய்ப் பேச்சில் அறியவரும் நபர் மகானா? பைத்தியமா? என்று... அரூபம் என்ற சொல்லுக்கு உணர்வு மயம், காட்சித் தோற்றம் அற்ற,புரிந்துணர்வு என பல அருத்தம்
கொள்ளலாம்
காட்சித்
தோற்றங்களைக் கொண்டது ஓவியம். இதில் அரூபம் என்பது உருவ, வடிவ
தோற்றங்களால் உணர்த்தப்படுவது. கரு, உரு என ஓவியங்கள் பல வகை
வளர்ச்சி மற்றும் ஆய்வு முறைகளை கொண்டவை. அதில் நிகழ் பொழுதின்
பதிவு, அகமகிழ்வு என்பதை முன்மொழிந்து படைப்பாளி, படைப்பு, பார்வையாளர் என்பனவற்றின் நெருக்கம்
சார்ந்து, பயிற்சித்திறன், கதையாடல்
தன்மைகளை விலகி, ‘அரூப ஓவியம்’ தனது அடையாளத்தை
கொண்டுள்ளது.
(நேரில்/மனதில்
கண்ட தோற்றங்களை வரையும் திறன் அவசியமில்லை என்பது அரூப
ஓவியம் சார்ந்த புரிந்துணர்வு)
அரூபன், ரூபத், வடிவத் தோற்றங்களை ஒருங்கிணையப் பெற்றது
ஓவியம். ஓவியங்களைப் பகுத்து ஆயும் முறையில் ‘உருவ ஓவியம்’ அரூப ஓவியம் என வகைப் படுத்தப்படுகிறது.
எனவே, அரூப கூறுகள் (அ) அரூப ஓவியம் என்பதை இக்குழுவிற்கு
அன்னியமல்ல.
உருவத்
தோற்றங்களை ஓவியமாக்கும் ஓவியர்கள் அனைவரும் இக்குழுவில் இல்லை. அவ்வண்ணமே அரூப
ஓவியர்களும் இல்லை எனலாம்.
உருவம்
என்பதை பற்றிய கருத்தியலான துவக்கம். ஒவ்வொரு அங்கத்தினருக்கும் எந்த அகப்படைப்பிலிருந்து
உந்துதல் பெற்றது-? அல்லது எதிலிருந்து?
உணர்வு அலைகள்
பகிர்வதற்கு ஏதுவாக நேர் மற்றும் புனைவு வகை. காட்சித் தோற்றங்களை பெறுபவை. அனுபவ
பகிர்தலாக எதை, யாருக்கு எவ்வகையில் என்ற கவனம் ஓவியத்தில் உருவ, வடிவ,
அரூப தோற்றங்களைக் கட்டமைக்கின்றது.
பகுத்து அறிதல்
என்பது தன், பொது என்ற அடையாளங்களை கொண்டது. பரவலாக அறியப்பட்ட அடையாளத்தை முன்வைத்து
ஒரு நபரின் பிரத்யேக அனுபவம் வெளிப்படுத்தப்படுகிறது மற்றும் பிறரால்
அறியப்படுகிறது.
‘அம்மா’ என்ற
வார்த்தையை கற்றது எப்படி? இக்கேள்விக்கான பதில் ஓவியத்தில்
நேர்ந்த உருவத் தோற்றங்க-ளுக்கான உந்துதல், கருத்தியல்
பெற்றமைக்கும் பொருந்தும்.
இக்குழு
நபர்கள் கலைஞனாக வாழ முடிவு செய்தது ஏன்-? இதனால் வாழ்க்கையில் நேர்ந்த மாற்றங்கள் எத்தகையது?
நமக்கு நாமே
ரகசியம். நிலைப்பும் நிலையாமையும் உந்து சக்தி, உறவும், தொழிலும்
நமது முகவரிகள். யாவற்றிலும் உறவு காணும் முகமாய் தன்னை இழந்த தருணம் கோலாகலமானது.
இவ்வனுபவம் அனைத்து செயல்பாடுகளுக்கும் அனைவ ருக்கும் பொது. அவ்வனுபவ வெளிப்பாடு
(அ) பகிர்தல் படமெடுக்கும் பாம்பின் நாக்கில் முத்தமிடுவதாகவும் இருக்கலாம்.
அவ்வனுபவத்தை பாவனையாக்கி, படைப்பாக்கும் பாங்கில் ஒரு நபர்
தன்னை கலைஞனாக அறிய, அறிவிக்க முற்படுகிறார். இதில் கலைஞன்,
கலை படைப்பு என்பன தொழில், உற்பத்தி, முகவரி என்றாகிறது.
பராபரமான
உள்ளத்தைத் தன்னில் யாசிக்கும் நிலையில் ரிக்ஷா -ஓட்டுநர், ஓவியம்
செய்பவர் இருவரும் கலைஞர்களே. சமூக அடையாளங்கள் வேறு வேறானவை.
வாழ்க்கைப்
பயணத்தில் நபரின் நெருங்கிய உறவும், தொழிலும் (சமூக உறவும்) ஒன்றையொன்று சார்ந்தவை,
ஒன்றையொன்று பிரதிபலிப்பவை. இவ்வகையில் கலைத் துறை சார்ந்தது எனது
வாழ்க்கைப் பயணம்.
என்னை
கிராமத்திலிருந்து அழைத்துவந்து சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்த்தவர்கள் ராஜா ரவிவர்மாக்கள்.
இக்கல்லூரி வளாகத்தில் ரூபன்ஸ்களும், பிக்காசோக் களும்
தங்களின் அதிகாரப் பகிர்வு, விருது, வியாபாரம்
குறித்து சமர்புரிவார்கள். கூடி ஐரோப்பா, இந்தியா, சென்னை, மரபு, நவீனம், உலகமயம் என ஜெபம் புரிவர். சுதந்திரம், தனித்துவம்,
புனிதம் என மூன்று முறை கூவிப் பிரிந்து
செல்வர். இவர்கள் மத்தியில் எனக்கான அடையாளம் தேடிக்கொண்டிருந்தேன்.
எனது
சினேகிதியின் மரணம் வாழ்க்கை, கலைத்துறை என்பவற்றை தீவிர விசாரணைக்கு
உட்படுத்தியது. இரக்கமும் மூர்க்கமும் ஓவியத்தைப் பரிசோதனை களமாக்கியது.
சக கலைஞர்களை கண்டு அசூசையும், பரிதாபமும் கொண்டேன். இவர்களோடு
உலவுகிறேன் என்பது மட்டுமே என்னில் எச்சமாக இருந்தது.
எனது உடல்
நலக்குறைவும், பெற்றோரின் கண்ணீரும், என்னை குடும்பஸ் தனாக்கியது.
குழந்தைகளின் மூத்திரவாடை சதாகாலமும் எனது பெற்றோர் பாதங்களில் என் முகம் புதைத்தது.
அவர்களுக்கு நான் வாழ்த்து சொல்லியபடியே கலைத்துறை மேல்
சவாரி செய்தேன். பாலியல் உறவுகளில் நேர்ந்த அவஸ்தையும், பரஸ்பரமும்,
கலைத் துறை, மதம் சார்ந்த விசாரிப்பும்,
விமரிசனமுமாக எனது பதிவுகளைக் கண்டேன்.
கலைக் கல்லூரி, அரசு கலைத்துறை, கலை விற்பனைக் கூடங்கள், இவற்றை சிலாகிக்கும் விமரிசனங்களுக்கு வெளியே நடைபயிற்சி வழிகளில் கலை
சேவையாக பட்டது. நகர்புறம், கிராமப்புறம், மலைப்பகுதி எனப் பல பகுதிகளும் ஓவிய முகாம்களாய்
நிகழ்த்தினோம். பலதரப்பட்ட மக்களுக்கும் கலை பயிற்சி முகாம்கள் நிகழ்த்தினோம்.
அனைத்தும் அதனதன் இயல்பில் ஜீவிப்பதை உணர்ந்தேன். கலையும் வாழ்க்கையும்
ஒன்றுக்குள் ஒன்று.
1960க்கு பிறகு கலை உலகிற்கு வரக்கூடிய கலைஞர்கள் அனைவரும் மேற்கத்திய கலை,இந்தியக் கலை, சென்னைக் கலைப்பாணி என்பது தெளிவாக
புரிந்தபிறகு கலைஞர்களாக மாறியவர்கள்தான். இத்தரவுகளில் கருப்பு அங்கத்தினர்கள் தங்களை எவ்வாறு அடையாளப்படுத்திக்
கொள்கிறார்கள்-?
கலை
எல்லையற்றது...?
காட்சிப் பதிவு
கருவிகளின் கண்டுபிடிப்புகளும் கலை பற்றிய கருத்துரு மாற்றங்களும் கலை, கலைக்காக, கலை மக்களுக்காக. அந்நியக்கலை மரபு,
சுதேசிய கலைமரபு, மரபு கலை, நவீன கலை, கவின் கலையும் பிற ஊடகங்களும், சுய விசாரணை, மானிடம் அதிகார மையங்களும் படைப்பு
சுதந்திரமும் இவ்வாறு பல தரவுகளில் விவாதித்து, கலை
புரிதலாகி அவற்றை படைப்பாக்கி வழியில் கலைஞர்களாக அறியப் பட்டவர்கள் அநேகர்.
விரல்விட்டு எண்ண முடியாத அளவு.
உற்பத்திப்
பொருள் அனைத்திற்கும் சந்தையும், விலையுமுண்டு. இதை கைக் கொள்ள தெரிந்தவர்கள் பிரபல்ய
கலைஞர்களாக சமூகத்தில் பார்க்கிறார்கள் என்ற புரிதல் நம்மை தனிமைப்படுத்தி
இயக்கியது. அது எந்த அனுபவங்களோடு தன்னை இணைத்துக் கொள்கிறது?
இக்குழு
பல்வேறு கலைஞர்களைக் கொண்டது. இதில் தத்தமது தனித்துவத்தை இழக்காமல் குழுக்கான
கூட்டு முயற்சி சாத்தியமா- எப்படி?
கயிறு இழுக்கும்
விளையாட்டு. கூடி செயல்படும் இலக்கு குறித்து தெளிவும், நம்பிக்கையும், செயல்பாட்டில் உறுதியும் வேண்டும்.
ஒரு கயிறு அல்லது பல கயிறு கட்டி இழுத்தபோதும் ஒருவர் இழு திறன் மற்றவருக்கு கை
மாறிவிடாது. இலக்கு வசப்படும்.
கூட்டாக
செயல்படுவதில் ஒவ்வொருவரும் தத்தமது செயலில் தெளிவும், உறுதியும் வினையும், கருத்துப் பரவலில் என்பதாகும்.
தமிழக
ஓவிய மரபில் நெருக்கம், துவக்கம், தொடர்பு
கிடையாது?
எங்கள் குடிசை
வீட்டிற்குள் ரோப்பு நிறத்தில் ஏசுநாதரும் அவர் இருதயத்தில் சிறிய அளவில் கருகிய
நிறத்தில் என் தாத்தா தலைவணங்கிய நிலையும் சலனமற்று இருந்தார்கள்.
எனது மனப்பாட
பகுதியிலிருந்து ஐரோப்பிய பாலே டான்ஸ் மகளிர் அம்மணமாக எனது ஓவியங்களில் காட்சி
அமர்ந்தது கண்டேன். கடந்துவந்த வழிகளும் அவ்வண்ணமே இருந்தன. கதை என்றால் “ஒரு
ஊரில் ஒரு ராஜா” என்பது. வாழ்க்கை அனுபவம் கதை ஆகாது என
நம்பிக் கொண்டிருந்த காலம்.
ரூபன்ஸ், ரெம்ராண்டுகளின் மகளிர் ரத்தமும் சதையுமாக ஆடுகிறார்கள். இந்தியர்கள்
வார்ப்பு பொம்மைகளை அடுக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என ஊமைக் கலைஞர்கள் பலர் வாய்
பேசியதைக் கேட்க நேர்ந்தது. அவர்கள் பார்த்ததை அச்சி அசலாக
வரையத் தெரிந்தவர்கள் மற்றும் வரையத் தெரியாதவர்கள் (மார்டன்
ஆர்டிஸ்டுகள்).
மேலும் நமது
சாமி வகையறா, ஜாக்கெட் அணியாத பொம்பள, ஆம்பள வகையறாக்களை
உள்வாங்கி டிஸ்டிராக்ஸ்சன், கியூபிசம், அப்ஸ்டிராக்ட் என மரபை நவீனமாக்கி வெளித்தள்ளிக்
கொண்டிருப்பவர்கள். இவர்களையும், இவர்களது கலைப் படைப்புகளையும்
புரிந்து அறிய நாமும் மரபுகலை வகைகளுக்குள் நுழைந்தோம்.
தமிழ் மரபு கலை
படைப்புகளை பயிற்சி முறையாக நகல் செய்தோம். அவற்றிலான உள்ளடக்கம், காட்சி கட்டமைப்பு, பயிற்சித் திறன் போன்றவை பகுத்து அறிந்தோம்.
அக்கலைப் படைப்புகள் மத அடையாளங்களை விலக்கி வாழ்வியலுக்கான
யதார்த் தங்களை பேசின.
யாவற்றிலும்
உறவுகாணும் பாங்கு காட்சி அமைப்பில் கோரம் தவிர்த்தல் போன்ற நுண்மங்கள் இன்றைய கலைப்போக்கின்
அவசியமாகிறது என்பதை உணர்ந்தோம்.
இன்றைய கலைத்
துறையில் மரபை நவீனமாக்கும் (பிளாஸ்டிக் மா இலை தயாரிப்பாளர்கள்) மேம்போக்கான
போக்கையும், மத மூடநம்பிக்கையையும் விமர்சிக்கும் ஓவியங்களை செய்து வருகிறோம்.
இளம் கலைஞர்கள்
மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்களுக்கும் மேற்கண்ட பயிற்சி வகுப்புகளும் நிகழ்த்தி வருகிறோம்.
நான்
எதை கலைத்துறையில் உருவாக்குகிறேன்?
கலை படைப்பு, மதம், மொழி, அரசு, இனக்குழு, விருது, விளம்பரம்,
வியாபாரம் அற்றது. கலைப் படைப்பாளி பட்டறிவாளன், சமூக முன்னோடி சுதந்திரமானவர். இக்கூற்றை உறுதியாக நம்புகிறேன்.
கொள்வதும் கொடுப்பதும் (வியாபாரம்) யதார்த்தம். இதில்
உணவுப் பொருட்களை வாங்கி விற்கும் வியாபாரி அல்ல. உழுது பயிர் செய்யும்
விவசாயியாகவே கலைத் துறையில் என்னை பாவிக்கிறேன்.
புரவலர்கள், விருது வழங்கும் குழுக்கள், இடைத்தரகர்கள் (கலை
பொருள் விற்பனையாளர்கள் மற்றும் கலை விமர்சகர்கள்) கலைத் துறையின் நல்மேய்ப்பர்களா?
இதில் படைப்புச் சுதந்திரம் என்பது அறியாமையா?
அறிந்தும் அறியாதவன்.
நிகழ்பொழுதின்
அனுபவம் கலை, பாவித்தலும் அதன் பிரதி உற்பத்தியும் கலைப் படைப்பு, கலைப் படைப்பு புறவடிவம். அதனால் பெறப்படும் தூண்டல் அகவயமானது. இதை
உணர்த்த கல்லில் ரதிதேவியை வடிக்க வேண்டுமா? சிறு மண்ணால்
கட்டினால் போதாதா?
தடையற்ற
மனோவயத்தை யாவரும் எந்த ஒரு செயலிலும் உணரலாம், உய்க்கலாம், பகிரலாம். இதை ஒரு ஓவியத்தின்மூலம் பகிர்வதற்குப்
பயிற்சித்திறன் அவசியமா?
படைப்பாளி
ரசனைக்குறியவர். ரசனைக்கு படைப்புத்திறன் தடையா? கலைஞன், கலைப்
படைப்பு என்பவை அதிகாரத்தில் அடையாளமா?
கலைக்கான
கருத்துரு, கலைத்துறை, கலைப் படைப்பு, படைப்பாளி,
சமூகம் இவற்றிற்கான முரண் இணக்கத்தைக் கவனிப்பதும் அவ்வப்போது நேரும் தீர்வுகளை எனது கலைப்படைப்புகளாக உருவாக்கி
வருகிறேன்.
‘கருப்பு’ எதை உணர்த்துகிறது?
வெளி ஒளியுமல்ல, இருளுமல்ல. ஒளி கையிருப்பு எனில் இருள் விரிந்து பரந்த களம். கருமை -
வண்ணம்/இனம்.
கருப்புக் குழுவின் அவசியம்?
கலைத்துறையில்
எனது அனுபவத்தைப் பகிர்வதற்கும் சக கலைஞர்களோடு கூடி வெளிப்படுத்துவதற்கும் இக்குழு
அவசியமாகிறது.
இக்கேள்விக்களுக்கான
புதிய கலைப்படைப்புகளாக மாற்ற இயலுமா-?
கலை பற்றிய
விசாரிப்பு என்பதே கலை படைப்பு. இதில் நம் மனத்தோன்றலை நேர்மையாக வெளிப்படுத்த
மனஉறுதியும் தெளிவும் வேண்டும்.
இக்கூட்டுச் செயலில் நமது பங்களிப்பு?
கூடி உருவாக்கிய
கருத்துருக்களைச் செயல் வடிவம் ஆக்க சாத்தியக் கூறுகளை ஆராய்தல், குழுவோடு
இணைந்து செயல்படுதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக