பேரா. அ. தும்மா பிரான்சிஸ், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.
நேரம்
என்னவென்று அவனால் யூகிக்க முடியவில்லை. அவனது துடைகளின் இடுக்கில் ஏதோ
பிசுபிசுப்பு தென்பட்டது. ஏரிக்கரை ஓரம் வீடு இருந்ததால் எப்போதும் போலவே சன்னலின்
வழியே வரும் காற்றுக்கிடையில் கனவா நினைவா என்ற குழப்பத்திலேயே, வலதுகரம் கொண்டு உணர முற்பட்டான். ஏதோ உருண்டையாக சொரசொரப்புடன் நகர்ந்து கொண்டு
இருந்தது. இடதுபுறமாக ஒருக்களித்து படுத்தபோது அக்குளின்
வாசனையுடன் ஏதோ ஒரு புதிய மணம். இப்போது அது அவனது அக்குளின்
இடையே வந்து சேர்ந்து இருந்தது. பல் துலக்கும்போது விரல்களில் சொர சொரப்பு காணப்பட்டதை
உணர்ந்து திடுக்கிட்டான். குளிக்கும்போது பாதங்களிலும் வித்தியாசமான மாற்றம்.
வழக்கம்போல்
அலுவலகம் சென்றான். தனது நடையில் மாற்றம் ஏற்பட்டதாக உணர்கிறான். சக ஊழியர்களிடம்
தனது நடையில் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று கேட்டுக் கேட்டு நச்சரித்தான். தேனீர் இடைவெளியில் தனது மூன்று வயது மகளிடம்
இருந்து அழைப்பு வர எடுத்துப் பேசினான். அப்பா, அப்பா உன்
கட்டிலுக்கு அடியில, தல வச்சு படுப்பியே அந்தப் பக்கமாக
தரையில ஒரு தவள செத்து கெடக்குப்பா, அம்மா தூக்கிப் போட பயந்து ஆகாஷ் நைநாவ தேடினாங்க. அவரு ஸ்கூலுக்கு போயிட்டதால அப்படியே விட்டுட்டாங்க.
அப்பா அப்புறம் நா மொரத்த எடுத்தாந்து தூக்கி போட்டேம்ப்பா. ரொம்ப பெரிசா
இருந்திச்சி மேல அசிங்கமா இருந்திருச்சிப்பா. பலாப்பழ மாதிரி சொரசொரனு... அய்யோ
ஓபாக்... அசிங்கமா இருந்திச்சி, நா
தைரியமா தூக்கிப் போட்டேன். தனது மகளின் பேச்சு அவனை
அதிரத்தான் செய்தது. தனது வாழ்வில் பெரிய இலட்சியங்கள் எதையும் வகுத்துக்
கொள்ளவில்லை என்றாலும், தனது பயணத்தையும் பாதையையும்
தீர்மானித்துக் கொண்டு, தனக்கென்று ஒரு உலகை அவனே
படைத்துக்கொண்டு, சுவாசித்துக் கொண்டு இருந்தான். தனக்காக மட்டுமின்றி
சிலருக்கும் சேர்த்து அந்த சிலர் யார் என்பது அவனுக்கு மட்டுமே நிச்சயம்.
உடல் முழுக்க
அவனுக்கு சொரசொரப்பு பரவி இருந்தது. பெருமூச்சு எடுத்துக் கொண்டு இருந்தான். முழுமையாக நிமிர்ந்து
நடக்க
இயலவில்லை.
வீட்டில் யாரும் இல்லை என்றால் தத்தி தத்தி நடக்க ஆசைப்பட்டான். இரவில்கூட விளக்குகளை
அணைத்துவிட்டு விழித்துக் கொண்டு இருந்தான். அவனது மனைவி மருத்துவமனைக்கு
அழைத்துப் பார்த்து ஒதுங்கி விட்டாள். அவனது மகள் தவிர வேறு எவரும் அவன் அருகில்
நெருங்குவது இல்லை.
அவனது
வீட்டிற்கு எதிரில் ஏரி என்பதால் ஏரியின் மதகருகில் ஒரு ஓலை குடிசைப் போட்டு அதில்
அவன் தங்க வைக்கப்பட்டான். இப்போதெல்லாம் அவன் பேசுவதை யாரும் கேட்பதில்லை. காரணம்
அவனது பேச்சு எவருக்கும் புரிவதில்லை. ஏதோ சத்தம் போடுகிறான் என நினைத்து விட்டு
விடுவார்கள். குடிசையின் குறுகிய வாயில் வழியாக அவனது மனைவி தட்டில் உணவை வைத்து உள்ளே
தள்ளி விடுவாள். அவன் எப்போது அதை உண்ணுகிறான் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. பல
சமயங்களில் நாய்கள்கூட சாப்பிட்டு விடும். உள்ளே இருக்கும் உணவை உண்பதில்
நாய்களுக்குச் சண்டை ஏற்பட்டு குரைப்பு
சத்தம் கேட்டு அவனது மகள் மட்டும்
பதைபதைத்துப் போவாள். சமயத்தில்
அக்கம்பக்கத்து
தெரு மக்கள் குடிசைக்கு அருகில் கூடிவிட்டனர். ஒருசிலர் குடிசையின் வாயில் அருகில்
சென்ற குனிந்து, ஏம்பா வெளியே வா. இங்க இருந்து நீ எங்கியாச்சும் போ. உனக்கு என்ன வியாதியோ
தெரியல. எல்லோருக்கும் பரவிடப் போவுது என்று மாற்றி மாற்றி
அழைத்துப் பார்த்தனர். அவன் வெளியில் வருவதாக தெரியவில்லை. அப்போது சிலர் நீண்ட சவுக்கக் கட்டைகளைக் கொண்டு வந்தனர்.
ஒரு சாதுவை சவுக்கால் ஆயுதம் கொண்டு அலைகழித்ததே மனிதனின் இயல்பாக இருக்கிறது.
உள்ளே நுழைந்து அழைத்து இழுத்து வருவதென பேசிக் கொண்டார்கள். சிலரோ அவன்
வரமாட்டான். குடிசையோடு கொளுத்தி விடலாம் என்று பேசிக் கொண்டனர். ஒரே இரைச்சல்,
மனைவி அனைவருடைய பேச்சுகளுக்கும் அபிப்பிராயங் களுக்கும் வாய்
திறந்து பதில் சொல்லாமல் தலையை மட்டும்
சம்மதம் போல் தலை அசைத்துக் கொண்டிருந்தாள். காதலால் நடத்த வேண்டிய
இல்வாழ்க்கை கல்யாணத்தின் பெயரால் நடத்தினால் இப்படித்தான் பரிதவித்து நிற்கும்.
மகள் மட்டும்தான் கண்ணீரோடு அப்பாவ ஒண்ணும் செய்யாதீங்க, செய்யாதீங்கன்னு
முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
இவனிடம் இருந்து இரண்டு வாரங்களாக எந்த
குறுஞ்செய்திகளோ அழைப்போ வராததால் மிகுந்த பதட்டத்துடன் வந்து கொண்டிருந்தாள்
குட்டிமா. குட்டிமா அவளது இயற்பெயர் இல்லை. இவன் அவளை அப்படித்தான் அழைப்பான்
இருவருக்கும் என்ன உறவென்று எவருக்கும் தெரியாது. உறவுகளை உடை, மனிதரோடு இணை என்று தனது வாழ்வை அமைத்துக் கொண்டதாய் இவனை எவருக்கும்
புரியாது பிடிக்காது, குட்டிமாவும் இவனது சிந்தனைகளுக்கு உடன்பட்டவள்.
இருவரும் உடல் வசப்படாமல் அறிவு வசப்படாமல் மனவசப்பட்டிருந்தனர்.
இவனது வீட்டை
நெருங்க நெருங்க ஆங்காங்கு மக்கள் கையில் தடிகளுடன் நின்றிருப்பதையும், ஏதேதோ அவனது பெயரைச் சொல்லி பேசிக் கொண்டிருப்பதையும் கேட்டுக் கொண்டே
பதட்டத்துடனும் குழப்பத்துடனும் இன்னும் வேகமாக நடந்து கொண்டு வந்தாள். வீட்டின்
அருகே ஒரோ கூட்டம். எவரோ ஒருவரிடம் அவனைப் பற்றி குட்டிமா விசாரிக்க, குடிசைப் பக்கம் அவளுக்கு வழிகாட்டினார்கள். குட்டிமாவைப் பார்த்த அவனது மகள் ஓடிவந்து கைகளைப் பற்றிக்கொண்டு
குட்டிமாவை குடிசைக்கு அழைத்துச் சென்றாள். எல்லோரும்
எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் உள்ளே நுழைந்தாள். அப்போது ஒருவன் பாதுகாப்பிற்காக
ஒரு தடியை இவளது கையில் திணிக்க முயற்சித்த போது அவனை ஒற்றை
முறைப்பில் பின்வாங்கச் செய்துவிட்டு மகளை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். உள்ளே மூளையில் நடுங்கிக் கிடந்த அவனைக் கண்டவுடன் பீறிட்டு வந்த
அழுகையைக் கட்டுப்படுத்தாமல் அவனது மகளைத் தனது துடைகளுக்கு இடையில் அணைத்துக்கொண்டு உங்களுக்கு என்ன ஆச்சு என்று
தொண்டை கிழிய கத்தினாள். மகள் இவளது முகத்தையும்
பார்க்கிறாள். அவனது அசைவையும் கவனிக்கிறாள். அவன் இவர்களை நோக்கி வருவதை உணர்ந்த
இருவரும் அருகில் செல்கிறார்கள்.
அவனைப்
பார்த்தால் ஏறக்குறைய 36 ராட்சத தவளைப் போன்றே இருந்தான்.
குட்டிமா உணர்வின்றி அப்படியே தொப்பென்று முழங்கால் இட்டு கீழே விழுந்தாள்.
நெருங்கி வந்த அவனைத் தூக்கி மடியில் போட்டுக் கொண்டாள். அவனது
உருவம் அவளது மடியில் பொருந்தக்கூடிய அளவிற்கு மாறி இருந்தது. இருட்டில் என்ன நடக்கிறது
என்று வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியவில்லை. அவனை வெளியே
இழுத்துவந்து, பார்த்துவிட்டுக் கொன்று
விடுவதென்று முடிவு செய்து இருந்தனர். அவன் அவளது மடியில் கிடந்தவாறே குட்டிமாவின்
முகத்தையும் மகளின் முகத்தையும் மாறிமாறி பார்த்தான். சலசலப்பிற்கு இடையில் மகள்
அவனிடம் ஏம்பா தவளையா மாறிட்டீங்க என்று தழுதழுத்தாள். அம்மா என்று கதறிய குட்டிமா
தனது மார்போடு அவளை அணைத்துக் கொண்டாள். அவன் ஏதோ பேச எத்தனித்தான். கூச்சலுக்கு
இடையில் குட்டிமாவிற்கு அந்தக் குரல் கேட்கவே இல்லை. எல்லோரும் சொன்னார்கள். அது
ஏதோ உளருது. எங்களுக்கே புரியல. நீ குழந்தையைக் கூட்டிட்டு
வெளியே வாமா இவனை கொளுத் திடுவோம். இல்லேனா ஊருக்கே ஆபத்து
என்று மாறிமாறி சொன்னதைக் கேட்டு எரிச்சலுடன் குட்டிமா, இவர் பேசுறது எனக்குப் புரியுது. தயவு செஞ்சு உங்க
கால்ல விழுறேன் கொஞ்ச அமைதியா இருங்க என்று எரிமலையாய் கத்தி வேண்டினாள்.
முழுமையாக அமைதியானவுடன் அவன் ஏதோ சொல்கிறான், எவருக்கும்
புரியவில்லை. அது மழைக் காலத்துத் தவளை போன்றே இருந்தது. குட்டிமாவோ... நா போகமாட்டேன்.
உங்களோடவே இருந்துடுறேன்... பரவா இல்ல
உங்களோடவே சாகிறேன்... சரி போயிடலாம்...
குட்டிமா
எழுந்தாள் அவனைக் கைத்தாங்கலாக வெளியில் அழைத்து வர முயன்றாள். அவனால் நிமிர்ந்து நடக்க
முடியவில்லை. மகளின் தேடலில் ஒரு கையை எக்கிப் பிடித்துக் கொண்டு வெளியில்
தத்திதத்தி வந்தான். மனைவியைப் பார்த்தான். அவளோ குட்டிமாவை முறைத்துப் பார்த்துக்
கொண்டு இருந்தாள். குட்டிமா அவனது மகளைத் தாயிடம் போகச் சொல்லி கண் அசைத்தாள். அவளும் தயங்கித் தயங்கி தாயின் அருகில் சென்றாள்.
இப்போது
குட்டிமாவையும் சேர்த்து அடிப்பதாக மக்கள் பேசத் தொடங்கியதும் செய்வது அறியாது
அமைதியாய் நின்ற குட்டிமாவிற்கு ஏதோ யோசனை தோன்ற, உடனே அவனை
இரண்டு கைகளால் வாரிக்கொண்டு ஏரியை நோக்கி ஓட முயன்றாள். சுதாரித்துக் கொண்ட ஊர்
மக்கள் அவர்களைத் துரத்த குட்டிமா அவனோடு ஓடிக்கொண்டே
இருந்தாள். அவனது தலை மட்டும் அவளது வலது கையின் இடுக்கில் தொங்கிக்
கொண்டிருந்தது. அவன் அவளது மகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான். மகளோ
இடது கை அசைத்து புன்னகைத்தாள், கன்னம் நிறைய கண்ணீர் வழிய.
துரத்திக்
கொண்டு வருவோரை திரும்பித் திரும்பிப் பார்த்தாள் குட்டிமா.பாம்புகள் நூறு படையெடுத்து
துரத்துவதாக உணர்ந்தவள் திடீரென்று ஏரியின் நடுவில் இருந்த மனிதர்கள் நுழையமுடியாத
ஒரு பாறை இடுக்கில் மறைந்தார்கள். எல்லோரும் சென்று அருகில் பார்த்தபோது அந்தப் பாறை இடுக்கில் யாரும் இல்லை. ஒரு கம்பை விட்டு ஒருவன் குத்திப்
பார்த்தான். அந்த கம்பின் நுனியில் குட்டிமாவின்மேல் ஆடை
வந்தது. மேலும் ஒரு குச்சியை இடுக்கில் நுழைத்து துழாவியபோது அவளது உள்ளாடைகளும்
வெளியில் வந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக