பேரா. த. செபுலோன் பிரபுதுரை (இரும்புலி), சென்னைக் கிறித்தவக் கல்லூரி.
முதன்முதலாய் - என்னோடு பேருந்தில் பயணி!
பள்ளிச் சீருடையில் பளிச்சென்று மின்னு!
இரவின் நிறத்தில் பாதியைப் பெற்றிரு!
ஏதோ ஒன்றால் என்னை ஈர்!
பெரும்பாலும் முகத்தைப் பக்கவாட்டிலேயே காட்டு!
ஒரு வாரம் கழித்து முழு முகம் காட்டு!
கோடை விடுமுறையில் எங்கோ சென்று ஒளிந்து கொள்!
நண்பர்களிடமெல்லாம் உன்னைப் பற்றியே பேச வை!
எதிர்பாராத காலையில்
மரங்களுக்கிடையே கல்லூரியில் தோன்று!
முதலாண்டு வேதியியல் என்பதை
உன் வகுப்பறையால் உணர்த்து!
தனிமையில் வேகமாகவும்
தோழியரோடு மெதுவாகவும் செல்!
என்னை ஈர்த்திருப்பதை எப்படியாவது புரிந்து கொள்!
உன்னையே சுற்றுவதை தெளிவாய் உணர்ந்து கொள்!
தோழிகளுக்கெல்லாம் சரியாய் அடையாளம் காட்டு!
பார்க்கும் போதெல்லாம் பார்த்து உடனே திரும்பு!
சில நாள் சென்றபின் சிறிதாய் சிரித்து வை!
எதையோ எண்ணி சிரிப்பதை நிறுத்திக் கொள்!
என்னைத் தவிர்த்துப் பாதை மாறி தவிக்க வை!
என் பாடத்தை விட்டு உன்னையே படிக்க வை!
இதுவரை நான் கற்ற தமிழ்க் கொண்டு
உனக்குக் கடிதம் எழுதவை!
கல்லூரி விழாவில் கவிதையைப் பாராட்டிட தோழமையோடு அறிமுகமாகு!
தள்ளிச் சென்று திரும்பிப் பார்!
இரண்டாம் நாளே கடிதம் கொடுக்க, புன்னகையோடு வாங்கிப் போ!
அடுத்தநாள் காலை வரை உண்ணவோ உறங்கவோ விடாதே!
அன்று வெள்ளிக் கிழமையாய் இருந்தால்
இரண்டு நாளும் இப்படியே உழற்று!
காலையில் வந்து கசங்கிய கடிதத்தை கோபத்தோடு திணி!
ஆறு நாட்கள் செல்லட்டும்
அமைதியாய் உனக்கு அவலமாய் எனக்கு.
கல்லூரியில் நான் நடிக்கும் நாடகத்தில் பாட
நண்பர்களால் இரண்டாம் முறை அறிமுகமாகு
ஒத்திகையின் இடையே ஓரிரு புரிதல்காண்!
இந்தப் பயணம் நீடிக்கட்டும் ஒரு மாதம்.
என்னுள் உன்னை ஆழமாய் பதித்து
என்னை உன்னுள் இயல்பாய் வை!
என் தன்னிலை விளக்க மடல்
இரண்டாம் முறை கொடுக்க,
பொறுமையாய் வாங்கி அமைதிகாத்து
மென்மையாய் எழுந்து போ! திரும்பிக் கூட பார்க்காமல்!
என் உயிர் காற்று நீயென அறிந்தும்
சூழல் எண்ணி விலகி ஓட திட்டமிடு!
என்னைப் பார்க்கும் போதெல்லாம் எதிர்திசை பயணி!
நான் சுற்றும் இடங்களைத் தவிர்!
நீ உலவும் பகுதிகளைச் சுருக்கு!
இவைகளே நிகழட்டும் இரண்டு மாதங்கள்!
கல்லூரி கட்டணம் கட்டும் வரிசையில்
எனக்குச் சரியாய் பெண் வரிசையில்
விழிகளில் வேல் ஏந்தி என் உயிர் கொலை புரிய வா!
என் முகம் மழிக்கச் சொல்லி உன் தோழியிடம் சொல்லு!
செவி மடுக்கா எனக்கு - உன்
முதல் கடிதம் கொடுத்தனுப்பு தமிழில்!
உன் நலம் விரும்பி தோழிகள்
உலகோடு என்னை ஒப்பிட்டு
உன்னில் இருந்து என்னை அகற்றச் சொல்ல
அதை அறிவிக்க நீயே வா!
என் கண்ணங்கள் நனைவதைக் கண்டு உனக்குள் அழு!
கைக்குட்டையை நீட்டி
உன்னைக் காப்பாற்றச் சொல்லிவிட்டுப் போ!
கைக்குட்டை வாங்க வந்து
‘நீ மோசம்’ எனக் கூறி என் கையை
கிள்ளிவிட்டு போ!
எதிரே வந்தால் வெட்கி குனி!
பலர்முன் சிரித்தால் விழிகளில் கோபம் கொள்!
நூலகத்தில் பார்த்து ‘படிக்க வந்தீங்களா?’
எனத் தொடங்கி உன் துறைக்குச் செல்
உணவகத்தில் பார்த்து ‘சாப்ட வந்தீங்களா?’
எனக்கூறி எதிரே அமர்.
தேர்வு நேரத்தில் ‘எக்ஸாமா?’ எனக் கேட்டு,
புத்தகத்தைப் பிடுங்கிக் கொண்டு என்னையே பார்.
யாருக்கும் தெரிய வேண்டாம்
என்பதைக் கூட யாருக்கும் தெரியாமல் சொல்!
அடுத்த நாள் உன் வீட்டு தொலைபேசியில் அழைத்து
நேரம் கேட்க அதிர்ந்து பின்னர் பேசி மழுப்பி வை!
‘உனக்கு எவ்ளோ தைரியம் இப்படிச்
செய்யாதே’ எனக் கூறி
உன் தொலைபேசி எண்ணை நீயே எழுதிக் கொடு!
தேர்வு நேரத்தில் ‘பார்க்காதே’ எனக் கட்டளை இடு!
தேர்வறைக்கு அருகே நடந்து நடந்து என்னை நாசம் செய்!
எழுதும் முன்னரும் எழுதிய பின்னரும் நீயே வந்து பார்!
சோர்ந்த நேரத்தில் தேனீர் வாங்கித் தா
பசித்த நேரத்தில் உணவு வாங்கித் தர பணி
சனியும் ஞாயிறும் வேண்டாமென சாபமிடு!
என் உடைகளை மதிப்பீடு செய்!
முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை முதலில் எனக்குச் சொல்!
கவிதை எழுதக் கற்றுதரச் சொல்லி நச்சரி
உன் பெயர் எழுதி கொடுத்தால் சூழல் பார்த்து திட்டு
கணக்குத் தெரியாத மக்கு என்று தலையில் தட்டு
நீ தேர்வெழுதாத போது எனக்கும் தடைவிதி
என் பட்டமளிப்பு விழாவிற்கு ஒரு காற்றாடி வாங்கித் தா
பிழையாய் பேசும்போது அறிவாளி என மட்டம் தட்டு
நெகிழ்ச்சிச் சூழலில் ‘மாமா’ என்றும்
மகிழ்ச்சிச் சூழலில் ‘போடா’ என்றும் அழை
என் குடல் புண்ணுக்காய்
நீ நோம்பிருந்து என் வலியைக் கூட்டு
சைவம் சரியென்று
நம்பிக்கையோடு வாதாடு பின்- உண்மை தெளிந்து
என்னோடு சேர்ந்து எலும்பு கடி
என் நண்பர்களோடு நலமாய்ப் பேசு
உன் தோழியின் அக்கா திருமணத்திற்கு
என்னை அழைத்துச் செல்
என் வீட்டைப் பற்றிப் பேசும்போதெல்லாம் மகிழ்ச்சி கொள்
உன் வீட்டைப் பற்றிப் பேசும்போதெல்லாம் அமைதி கொள்
நம்மைப் பற்றிப் பேசும்போதெல்லாம் உறுதி கொள்!
தினமும் ஒரு முறை அழுது சிரி
பேச்சுக்கும் முனகலுக்கும் இடையே
ஓர் புதிய இசையில் உழலு
என் அம்மாவை எப்படி அழைப்பதென்று கேள்!
கடற்கரை அழைத்துச் சென்று கால் நனை
அருகில் அழைத்து கடலில் தள்ளு
Sorry கேட்டு மீண்டும் தள்ளு
புடவை அணிந்து வந்தால் தொலைவில் அமர்
ஜீன்சுக்குள் புகுந்து வந்து தோளோடு தோள் இடி
உன் கண்ணாடியை
என்னை மட்டும் துடைத்துத் தரச் சொல்
வள்ளுவப் பாட்டனின் தமிழ்தந்து
இயேசுவின் வழியை மனதில் ஏந்தி
அம்பேத்கரையும் பெரியாரையும் நண்பராக்கு
மழைவேளையில்
இரண்டு குடை இருந்தாலும் ஒன்றை மட்டும் பிரி
மரத்தின் கீழ் நிறுத்தி கிளைகளை உலுக்கிச் சிரி
நனைந்த என்னைத் துடைக்க
உன் கைக்குட்டையைக் கொடு
நான் பங்கெடுக்கும் கவியரங்கில்
தமிழ்த்தாய் வாழ்த்தை நீ வந்து பாடு
ஈருருளி பழகச் சொல்லி ஆணையிடு
உரிமம் பெற்றபின் நானே ஓட்டுவேன் என அடம்பிடி
சின்ன சிக்கலுக்கு பெரியதாய் சினம் கொள்
பெரிய பிழைகளை அமைதியால் தண்டி
கவிதைகள் எழுதி
தினமும் பரிசளிப்போம்
பொழுதுகள் சாய
பொருளீட்டுவோம் வாழ
மகிழுந்து பயணமும்
மண்தரை படுக்கையும்
சமமாய்ப் பழகி
நமக்கான உலகை
நம் மக்களுடன் துய்ப்போம்
என்னுள் நீயும் உன்னுள் நானும்
சிரிதாய் பெரிதாய் தாழ்வாய் உயர்வாய்
பிறப்பாய் இறப்பாய் ஏற்பாய் மறுப்பாய்
களிப்பாய் கண்ணீராய்
உண்மையாய் மாயையாய்
அணுவாய் வெளியாய்
வளியாய் வெற்றிடமாய் நீராய் தீயாய்
துளியாய் ஆழியாய் உடலிலும் உயிரிலும்
உள்ளத்திலும் உணர்விலும்
நோய் உயிரியாய் பரவி
உலகம் முடித்து இறந்து வருவோம்
இதே இடத்திற்கு...
எனவே,
முதன் முதலாய் என்னோடு பேருந்தில் பயணி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக