பா. தயானந்தன், தாவரவியல் துறைத் தலைவர்(ஓய்வு), சென்னைக் கிறித்தவக் கல்லூரி.
சங்கத்தமிழ்ப் புலவர்கள் வியத்தகு
ஆற்றல் பெற்றவர்களாக விளங்கியுள்ளனர். கணியன் பூங்குன்றனாரோ,
கபிலரோ, செம்புலப்பெயல்நீராரோ
இன்று நம்மிடையே இருந்தால் பன்மொழிப் புலவர்களாக இருந்திருப்பர். குறிப்பாக, ஆங்கிலத்தில் மிகுபுலமை பெற்றிருப்பர். ஆங்கிலக் கவிஞர்கள் பல்வேறு புதிய
முயற்சிகளைக் கவிதையில் கையாண்டது அறிந்ததே. சங்கத் தமிழ்ப் புலவர்கள் இன்று திணைக்கோட்பாட்டை
மனதில் வைத்து (அகம், புறம், முதல்,
கரு, உரிப் பொருள்கள்) கவிதை எழுதினால் எப்படியிருக்கும்?
சங்கத்
தமிழ்ப்பாடல்களைப் பலரும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளனர். பெ. நா.
அப்புஸ்வாமி அவர்கள் 120 பாடல்களை மொழிபெயர்த்திருக்கிறார் (Tamil
Verse in Translation). இதற்கு முன்னரே ஆங்கிலத்தில் மொழியாக்கம்
செய்த ஜார்ஜ் எல். ஹார்ட் III (George
L. Hart III), ஏ. கே. இராமானுஜம் (A.K. Ramanujam), ஜி.யு.போப் (G.U. Pope), ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை (J.M. Nallasamipillai) போன்றோரையும்
குறிப் பிடலாம். (கட்டுரை முடிவில் பட்டியல்
தரப்பட்டுள்ளது).
சங்கப்புலவர்கள்
முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருளென
வகுத்து நுண்ணிய பல அரிய கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.
தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள காதல் பாடலைப் படிக்கும் பொழுது, சில சமயங்களில் இவர்கள் காதலைப் பற்றிப் பாட
வந்தார்களா, தாவரங்கள், வண்டுகள் என உயிரியல்
பாடம் சொல்ல வந்தார்களா, வானத்தையும் பூமியையும் குறித்து வானவியல்
புவியியல் அறிவுப் பாடம் சொல்ல
வந்தார்களா என்கிற திகைப்பு இருக்கும். ஆனால் சங்கத் தமிழ் மரபைத் தெரிந்தவர்களுக்குக்
கருத்துக்கள் ஒன்றுக்குள் ஒன்று பதிந்திருப்பது புலப்படும். இது மட்டுமின்றி ஒரேயொரு
பொருளைப் பாட்டின் தொடக்கத்தில் கேட்டவுடனே இது எந்தத் திணையைச் சேர்ந்தது என்றும்
இனி வரப்போகிற காட்சி என்னவென்றும் மனத்திரையில் காணமுடியும்.
உதாரணமாக, ஒரு பாட்டின் தொடக்கத்தில் குரங்கு வந்தால் இனி வரப் போவது இருட்டிலே
நடந்த ஒரு கதையாக இருக்கலாம். அது குளிர்காலமாக இருந்திருக்கலாம். மலையும் அருவியும்
யானைகளும் மயில்களும் பலாப்பழங்களும் மூங்கில்களும் நிறைந்த அகண்ட
வெளியில் இளம்காதலர்கள் இணைவதையும் புரிந்து கொள்ளலாம். இத்தகைய குறிஞ்சிப்பாட்டில்
ஒவ்வொரு பொருளும் ஒரு சொற்றொடர் மட்டுமல்ல ஒரு கதையையே சொல்லி முடிப்பதாக இருக்கின்றன.
சென்னைக்
கிறித்தவக் கல்லூரி ஆண்டு மலரில் (1979) சங்க மரபில் சில ஆங்கிலப்
பாடல்களை எழுதியிருந்தேன் (Poems in Classical Tamil (Cankam) Style) இதில் வரும் ஒரு பாடல்:
What
she said to her friend:
The
bent palm
On
the sloping hills
Is
black as night
Only
the waterfall
Heard
me and rumbled
When
he took me
இப்பாடல்
குறுந்தொகையில் உள்ள கபிலரது 25-வது பாடலை ஒட்டியுள்ளது.
பாடலில்
வரும் இரவு நேரம், பனைமரம், மலைசார்ந்த இடம்,
அருவி இவையெல்லாம் குறிஞ்சி நிலத்தை நினைவு படுத்துகின்றன.
இவ்வாங்கிலப் பாடலினை சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பணியாற்றிய தமிழ்த்துறைப்
பேராசிரியர் ஜான் ஆசிர்வாதம் அவர்களிடம் கொடுத்து சங்ககால மரபில் தமிழாக்கம்
செய்துதரும்படி நான் கேட்டேன். இப்பாடலில் ஒரு சில வரிகளை சேர்த்து அவர்
தமிழ்ப்படுத்திய பாடல் இது. தலைவி தோழிக்குச் சொன்னது:
“வாழி தோழி வியன்மலைச் சாரல்
வளை வருங் குழையே
மழை தரும் முகிலின் மிக்கு இருளும்
கோடுயர் சினை இரும் பெருமலை நாடன்
குவளைக் கண் மெல்லிழை புணர்ந்தது
இழிதருமருவி கண்டிகு முழங்கும்”
பாலைத்
திணையை மையமாக வைத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மற்றொரு பாடல். பாலை பிரிதலும் பிரிதல் நிமித்தமும், மற்றும்
கடுமையான வாழ்க்கை நிலையையும் வறட்சியையும் குறிப்பது நாம் அறிந்ததே. இப்பாடல் சங்ககாலத்திற்குப்
பின்பு தமிழ் மக்களை இறுக்கி இன்றைக்கும்
இழிவுபடுத்திக் கொண்டிருக்கும் தீண்டாமையை மையமாகக் கொண்டுள்ளது.
What
she said:
They say the shade of
The shrill and whining casuarinas
Would cover just a few
And the stunted cacti
Have ageless thorns
That scare the doves to eagle’s nest
Will he come
And touch my wasting hands?
In this horrible village
Even touching is taboo.
இளம்பெண்
(தலைவி) வேலையினைத் தேடி வெளியே சென்றிருக்கும் தன் காதலனை நினைத்து
ஏங்குகிறாள். பாலை நிலத்தில் கொளுத்தும் வெய்யிலில் நிழல் கொடுக்காத சவுக்கு
மரத்தின் கீழ், முள் நிறைந்த கள்ளிச் செடியின் ஓரத்தில் என்ன
துன்புறுகிறானோ என்று கவலைப்படுகிறாள். இப்பாடலின் உள்ளுறை இன்றைய சாதிச் சமுதாயத்தினை நினைவுபடுத்துகிறது. ஒரு சமூகமாகச்
சேர்ந்து அமரக்கூடிய ஆலமர நிழலல்ல இது. துயர் கொடுக்கும் முள்நிறைந்த இப்பாலை நிலத்தை
இன்றைய சமூகத்திற்கு ஒப்பிடலாம். தலைவன் எப்பொழுது வந்து
தொடுவான் என்று காத்துக் கொண்டிருக்கிறாள் தலைவி. ஆனால் அவளோ தீண்டப்படாத குடியெனத் தள்ளி வைக்கப்பட்டவள். கள்ளிச் செடியிலிருக்கும் முட்கள் அங்கு உட்கார
வரும் புறாவைக் கூட விரட்டி, எப்படி விழுங்கலாம் என்று
காத்திருக்கும் பருந்தின் கூட்டிற்குள் அமரச் செய்கிறது. சாதியின் கொடுமையினால்
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவதிப்பட்டு வரும் தமிழ் மக்களின் நிலையை இப்பாலை நிலக் கருப்பொருள்கள் விளக்கிக் காட்டுகின்றன. மேலும் இங்குக் கவனிக்க வேண்டியது என்னவெனில் இப்பாடலைச் சங்ககாலப் புலவர்கள் பாடியிருந்தால் சவுக்கு மரத்தைப் பாடலில் கொண்டுவந்திருக்க மாட்டார்கள்.
சவுக்குமரம் அண்மைக் காலத்தில்தான் இந்தியாவிற்குள் நுழைந்தது. பேரா. ஜான்
ஆசிர்வாதம் செய்த தமிழாக்கம்
“புன் தலைப் புறவிடர் பருந்தினுழையென
முள்ளடர்
கள்ளி செல்லுநர் வருத்தும்
வெஞ்சுர
வெம்மை ஒன்றோவன்றே
அணங்கலும்
நவ்வா வம்பலர் இருக்கை
ஒருவரோ
ஈண்டு வருவரோ நாளை”
தலைவி
பாடுவதாக நான் எழுதிய இன்னொரு குறிஞ்சிப்பாட்டு:
Why
friend,
These blue mountains, these deep green valleys
And these clouds hugs as elephants seem endless?
Clouds covering and uncovering
The vast stretches of kurinci
And permeating the sholas dense as hair
To moisten every leaf that drips
To join the silvery mountain streams
Tonight in the dark I’ll see no clouds,
Only the warmth of its mist
And the vague lines of the tall eucys.
Is it wrong to long for him
And get lost in this vastness?
தலைவன்
வருகைக்காகக் காத்திருக்கும் தலைவி, தோழியிடம்
கூறுவதாக அமைந்துள்ளது. இங்குக் குறிக்கப்படுவது வெறும்
மலையோ மேகமோ பள்ளத் தாக்குகளோ, மரங்களோ அல்ல. பின்னர்
இரவினிலே நடக்கப் போகும் புணர்தலை நினைக்கும் அவளுடைய ஆழ்மன வெளிப்பாடு.
இதிலிருக்கும் எல்லாக் கருப் பொருட்களும் காதலைத் தாண்டி ஓர்
உன்னத உணர்ச்சி நிலையைக் குறிப்பதாக இருக்கிறது. இந்தப் பாடலில் சொல்லப்பெறும்
தைலமரம் சங்கப் புலவர்களால் பாடப் பட்டிருக்காது. தைலமரம் முந்நூறு ஆண்டுகட்கு
உட்பட்ட காலத்தில்தான் ஆஸ்திரேலி யாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இப்பாடல்
இன்னும் மொழியாக்கம் செய்யப்படவில்லை. நீங்களே செய்து பார்க்கலாம்.
கீழே
வரும் பாடல் மருதத்திணையை வைத்து எழுதப்பட்ட ஓர் ஆங்கிலப் பாடல்; ஊடலையும் களவு வாழ்க்கையையும் குறிப்பது. தலைவி தோழியிடம் சொல்கிறாள்:
My hair dripping wet I shuddered.
The long water snake writhed through
The hood-like leaves of water-hyacinth,
An oversized uluvai in its mouth.
At dawn he’ll crawl out in a hurry
Leaving her to milk
The lean buffalo that stands
Tied to the lonely lamp post,
And feed her darling child.
நீரிலே
குளிப்பது, பாம்பு, மீன், எருமைமாடு, காலைநேரம் இவையெல்லாம் மருத நிலத்தைச்
சேர்ந்த கருப்பொருட்களும் முதற்பொருட்களுமாகும். தலைவியின் பயத்தையும் மன
நிலையையும் காட்ட இப்பொருட்கள் உதவுகின்றன. இப்பாடலில் குறிக்கப்பெறும் அய்கோனியா
தாவரத்தை (ஆகாயத் தாமரை) சங்கப் புலவர்கள் பாடியிருக்கமாட்டார்கள். ஏனென்றால்
இதுவும் தென் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த செடியாகும்.
இச்செடியின் இலை பாம்பு படமெடுப்பது போலிருக்கும். நடுவிலே உளுவையை வாயில்
வைத்துக்கொண்டு நெளிந்து செல்லும் பாம்பைப் பார்த்து அலருகிறாள் தலைவி. பரத்தை தன்
குழந்தைக்குப் பால் கொடுப்பது, சங்க கால மருதநிலக் காட்சி, இக்காலச் சமூகம் பரத்தையர்களை இழிவாகப் பார்க்கும்
பார்வையைப் போல் அப்பொழுது சங்கப் பாடல்களிலே அதிகமாக வெளிப்படுத்தப்படவில்லை.
அவள் பரத்தையாக இருக்கலாம். ஆனால் அவளும் தன் குழந்தைக்குத் தாயாகப் பால் கரந்து கொடுப்பதைத் தலைவி உளப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறாள்.
இவ்வாங்கிலப்பாடலும் தமிழாக்கம் செய்யப் படவில்லை.
2003
ஆம் ஆண்டு சென்னைக் கிறித்தவக் கல்லூரி ஆண்டு மலரில் ‘எரிபொருள் எயினர்‘ என்கிற தலைப்பில் பாலைத்திணைப்
பாடல் ஒன்று தமிழில் எழுதியிருந்தேன். எரிபொருளைக் கொள்ளையடிக்க ஈராக்கில்
போர்தொடுத்து உலக மக்களிடையே வெறுப்பை உண்டாக்கிய அமெரிக்க ஜனாதிபதி புஷ் பற்றின அந்தப்
பாடல்:
“புஷ்ஷில் பதுங்கி
தண்ணுமை முழங்கி
அலறத்தாக்கி
ஆறலைக் கள்வர்
ஆனிரைக் கவர்ந்தது
அந்தக் காலம்.
ஈராயிரம் ஆண்டு கழித்து
ஈராக் பாலையில்
ஊர் என்ற முதலூரில்
இன்றுமா எயினர்?
புஷ்ஷில் பதுங்கி
அலறத் தாக்கி
ஆயிலைக் (oil) கவரும்,
ஆயிரம் மழலையர்
அழுங்குரல் ரசிக்கும்
வம்பலக் கொடியோர்?
ஆனிரைச் சாணியை
வறட்டியாக்கி
ஆம்பர்கர் (hamburger) சுட்டால்
அதன் சுவை பேஷ் புஷ்!
இப்பாடல்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. நீங்களே மொழி பெயர்த்துப் பார்க்கலாமே.
இரண்டாயிரம்
ஆண்டுகாலத் தமிழ்க் கவிதை (செய்யுள்) வரலாற்றில் உரிப் பொருளில்
மாற்றம் ஏற்படவில்லை. உள்ளுறையிலும் மாற்றம் நிகழவில்லை. முதற் பொருளைப் பொருத்தவரையில்
சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த முந்நூறு ஆண்டுகால வரலாற்றில் அறிவியல்,
தொழில்நுட்பம் மற்றும் உலகமயமாக்கலால் இடமும் பொழுதும் எதுவென
திகைக்க வைத்துள்ளது. வேனிற்காலத்தில் சென்னைப் பல்பொருள் அங்காடி, திரையரங்கம், கேளிக்கை விடுதி முதலிய இடங்கள் பகலை இரவாக்கி,
வெம்மையைத் தண்மை ஆக்குகின்றன. இதனால் இடம், பொழுது என்கிற இயக்கத்தில் மயக்கம்
ஏற்படுகிறது.
கருப்பொருளை
எண்ணினால் சற்றேறக்குறைய முழுமையாகவே மாற்றம் அடைந் திருக்கிறது எனலாம். தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, பறை, குழல், யாழ் என்று நாமறிந்த கருப்பொருள்கள் மாறி இன்று புதிய சமயங்களும் நம்பிக்கைகளும்
துரித உணவு, கோலாகரடி, பஞ்சவர்ணக்கிளி,
டிரம்ஸ், கிட்டார், விமானம்,
செல்போன், மடிக்கணினி, இணையம்
எனக் கருப்பொருட்கள் சமகால வாழ்வில் இயல்பாகவே
இணைந்திருக்கின்றன. சீரியாழ், பேரியாழ், மீன்கோட்பறை, துடி என நிலவிய சூழல் மாறி இன்று பாணன்
யார்? பாடினி யார்? விறலி யார்?
தோழி யார்? என வினவத் தோன்றுகிறது.
செல்பேசி
(செல்ஃபோன்) என்பது எந்தத் திணையின் கருப்பொருள். கல்லூரி
வகுப்பில்
தலைவனும் தலைவியும் குறுஞ்சேதி (sms) அனுப்பும்பொழுது, இதை அகத்திணைப் பொருளாக எடுத்துக் கொள்ளலாமா? தீவிரவாதிகள்
கையிலும் கள்வர் கையிலும் வலிமைமிக்க ஊடகப் பொருளாகப் பயன்படும்பொழுது இதைப் புறத்திணைப்
பொருளாக ஏற்றுக்கொள்ள வேண்டுமல்லவா?
சங்கப்புலவர்கள்
மிகத்திறமையாக பாடல்கள் மூலம் அக்காலச் சமூகத்திற்குப்
பல நல்ல கருத்துக்களை வழங்கினார்கள்.
இரண்டாயிரம் (2000) ஆண்டு கழித்து இன்றைக்கும் இதே நடையில்
இன்றைய கருப்பொருள்களையும் முதல் மற்றும் உரிப்பொருள்களையும் வைத்துப் பாடல்கள் புனைய முடியும்; இக்காலத்திற்குத் தேவையான
பல நல்ல கருத்துக் களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
பார்வை
நூல்கள்
Cankam
Poem in English – Selected List
Appuswami, P.N. Tamil verse in
translation. International Institute of Tamil Studies,
Chennai. (1987)
Dayanandan, P. Poem in Classical Tamil
(Cankam) Style. Madras Christian College
Magazine XLVIII: 57-61. (1979)
Hart, George. The poems of Ancient Tamil,
their milieu and their Sanskrit counterparts.
University of California Press. (1975)
Hart, George. The poem of
Ancient Tamil. OUP India, 2nd edition. (1999)
Hart, George. Poets of the
Tamil anthologies: ancient poems of love and war. Princeton
University Press. (1979)
Hart, George and Hank Heifetz. The Four
Hundred Songs of war and wisdom: An
Anthology
of Poems from Classical Tamil: The Purananuru. Columbia University
Press.
(2002)
Ramanujam, A.K. The Interior Landscape: Love
Poem from a Classical Tamil Anthology.
Indiana University Press,
Bloomington. (1967)
Ramanujam, A.K. Poems of Love and War: From
the Eight Anthologies and the Ten Long
Poems of Classical Tamil. Columbia University Press.
(1985)
Selby, Martha Ann (Editor). Tamil Love
Poetry: The Five Hundred short Poems of the
Ainkurunuru.
Columbia University Press. (2011)
Vaidehi. Learn Sangam
Tamil. http://learnsangamtamil.com
Zvelebil, Kamil. Literary
conventions in Akam poetry. Institute of Asian Studies,
Chennai. (1986)
E-mail:
p.dayanandan@gmail.com
பார்க் கல்லூரி- திருப்பூர்
பதிலளிநீக்கு(தன்னாட்சி)
ஐயா,
மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனமும் எங்கள் கல்லூரியும் இணைந்து 10 நாள் ‘திணைமயக்கம் காட்டும் வாழ்வியல் நெறி’ என்னும் பொருண்மையிலான தேசியப் பயிலரங்கம் எதிர் வரும் 10.02.2014 முதல் 19.02.2014 வரை நடைபெற உள்ளது. இப்பயிலரங்கத்தில் ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இப்பயிலரங்கில் தாங்கள் ஒரு தலைப்பில் ஆய்வு அறிஞராக கலந்து கொண்டு உரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் தகவல்களுக்கு பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
முனைவர் செ.திருமாறன், முதல்வர் – 95666 56601 , 98422 93054
முனைவர் மு.சாமி சுந்தரம், துறைத் தலைவர் – 95666 56617 , 9965148965