அசோகமித்திரன், எழுத்தாளர், வேளச்சேரி (2005, நேர்காணல்:
சி. முத்துகந்தன்).
முதல் தொடர்பு
திரு.
கிருஷ்ணமூர்த்தியை நான் முதலில் சந்தித்தது மத்தியச் சென்னை நூலகத்தில். அப்போது
ஐந்து இளைஞர்கள் “இலக்கியச் சங்கம்” என்று ஒரு
விவாத அமைப்பு நடத்தி வந்தார்கள். அந்த
ஐவரும் எழுத்தாளர்கள். அவர்கள் பெயர்கள் சா.கந்தசாமி, என்.
கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ராமகிருஷ்ணன், ம.இராசாராம்
மற்றும் ஐராவதம். இவர்கள் ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வந்தார்கள். நால்வர் ஆளுக்கு
மூன்று சிறுகதைகள். அறிமுகக் கட்டுரை ஐராவதம். இது 1966
அளவில் நடந்து வந்தது. அந்தத் தொகுப்பின் பெயர் “கோணல்கள்”.
இதற்கு அட்டை ஓவியம் திரு.கிருஷ்ணமூர்த்தி. அந்த முதல்
சந்திப்புக்குப்பின் அவர் என் வீட்டருகில்தான் வசித்து வருவது தெரிந்தது.
ஓவியத் தொடர்பு
திரு.
கிருஷ்ணமூர்த்தியை அதன்பின் அடிக்கடி சந்திக்க முடிந்தது. நாங்கள் நிறைய நேரம்
ஓவியம் தவிர வேறு பல விஷயங்களையும் பற்றிப் பேசுவோம். அந்த நேரத்தில்தான் அவருக்கு
ஜீ.வி.ஐயர் என்ற கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளரின் தொடர்பு கிடைத்தது.
கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கையில், அவர் ஜீ.வி. ஐயரைச் சந்தித்தது மிகப்பெரிய திருப்புமுனை.
என்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்காக கிருஷ்ணமூர்த்தியைத்தான் ஓவியம் வரையக்
கேட்டுக் கொண்டேன்-. அவர் ஓர் “எங்கிரேவிங்” கொடுத்தார். துரதிர்ஷ்டவசமாக அதன் அளவு பெரிதாக இருந்தது. மேலும், அச்சகத்தில் இருந்த இயந்திரத்தில் அது பொருந்தவில்லை. ஆனால், ஏறத்தாழ அதே காலத்தில் ‘இலக்கியச் சிந்தனை’ என்றொரு அமைப்பு சிறுகதைத் தொகுப்பு வெளிக்கொணரத் திட்டமிட்டது. அதன்
அமைப்பாளர் என்னிடம் அட்டை ஓவியம் பொறுப்பைத் தந்தார். இதற்கு கிருஷ்ணமூர்த்தி “லினோகட்” ஓவியம் ஒன்று தந்தார். அதைப் பயன்படுத்த
முடிந்தது. அந்த நாளில் அச்சுச் சாதனம் எளிதாக அனைவருக்கும் கிட்டவில்லை.
செலவினங்கள் குறைவாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லாப் பதிப்பாளர்களும்
விரும்பினார்கள். ஆதலால் ஒருவண்ணம், அதிகம் போனால் இரண்டே
வண்ணங்களில் அட்டை முடிந்துவிடும். அந்த அச்சு உத்தியை “Over Printing” (அடித்தது மேல் அச்சு அடிப்பது) என்பார்கள். கிருஷ்ணமூர்த்தி நான் பங்கு
கொண்ட “கணையாழி” என்ற பத்திரிகைக்கு
நிறைய லினோகட்டுகள் கொடுத்திருக்கிறார். அவருடைய பாணி திராவிட பாணி என்பார்.
அதாவது அவர் வரையும் மனிதர்கள் சற்று உயரம் குறைவாக இருப்பார்கள். முகமும் முடியும்
தனித்துவம் நிறைந்ததாக இருக்கும்.
பொதுவாக
இன்று உலகப்
புகழ்பெற்ற சோழமண்டலம் கலைஞர்கள் அமைப்பின் ஆரம்ப அங்கத்தினராகக் கிருஷ்ணமூர்த்தி
இருந்தார். அந்த நாளில் அந்த இடம் அத்தவானமாக இருக்கும். மனித நடமாட்டமே இல்லாத
அந்த நாளில் அவர் ஒரு சைக்கிளைக் கொண்டு அந்த இடத்திற்கு அரும்பணியாற்றினார்.
ஆனால், அவர் அதில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. திரைப்படத் துறையில் பல வெற்றிகள்
குவித்தார். பலமுறை அவருடைய Art
Direction-க்காக ஜனாதிபதி பரிசு கிடைத்தது. இதெல்லாம் நான் மிகவும் பெருமைப்படும்
விசயங்கள். கிருஷ்ணமூர்த்தி மிகவும் அடக்கமானவர். நல்ல பண்புகள் உடையவர். நல்ல நண்பர்.
அவரைப் பற்றி நான் கருத்துக்கூற நேர்ந்ததில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக