கட்டுரை ஆசிரியர்: ப. டேவிட்
பிரபாகர், இணைப் பேராசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி.
சங்க
இலக்கியங்கள் வழி தொல்காப்பியத்தில் கோட்பாட்டாக்கம் பெறும், திணை எனும் கருத்து தொன்மையான தமிழ்ச் சிந்தனை மரபுக்குரியது. இது நிலவுடைமைக் காலத்துக்கு முந்தைய இனக்குழு சமுதாயத்தின் பங்களிப் பாகும். தமிழ்ச் செவ்வியல் மரபின் தனித்தன்மையை அடையாளப்படுத்தும் முக்கியக் காரணியாகவும் இது விளங்குகிறது. வடபுலத்துச் சமய மரபுகளும் பண்பாட்டுக் கூறுகளும்
இடம்பெறத் தொடங்கிவிட்ட சங்க மரபில் திணைக் கருத்தின் தொடர்ச்சியும் செல்வாக்கும்
அதன் சிறப்பைப் புலப்படுத்துகின்றன. சிலம்பிலும் பக்தி இலக்கியங்களிலும் காப்பியக்
கட்டமைப்பிலும் திணைக் கருத்து தொடர்ந்து செல்வாக்கு பெற்று விளங்குகிறது.
இனக்குழு சமுதாயத்தின் தகவுகள் சிதைந்து நிலவுடைமைச்
சமுதாயத்தில் வேந்தர்களும் கடவுளரும் ஏற்றம் பெற்ற காலத்திலும் திணை மரபு போற்றிக்
கொள்ளப்பட்டுள்ளது. திணை என்பது பாவியல் சார்ந்த கோட்பாடாக வளர்ச்சி பெறுவதற்கு
முன்னர் இயற்கையோடு இயைந்த வாழ்வியல் கூறுகளையும் அது உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது
இதற்குக் காரணம்.
திணை
எனும் சொல் சங்க இலக்கியத்தில் பல்வேறு பொருள்களில் வழங்கப் பட்டிருப்பினும் குடி எனும் பொருளில் (புறம். 24,
27,159,373 குறுந்.72, பதிற். 31,72) ஆளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குடி என்பது மக்களை மட்டுமின்றி இயற்கை
மற்றும் கடவுளரோடு இணைந்த ஒட்டுமொத்த ஏற்றத்தாழ்வற்ற
பொதுமைச் சூழமைவைக் கட்டுவதாகும். இத்தகைய ஒருங்கிணைந்த குடியைச் சுட்டிய திணை
எனும் கருத்தே பின்னர் திணைக் கோட்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தது.
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந்நான்கல்லது குடியுமில்லை என மாங்குடி கிழார் குறிப்பிடுகிறார். (புறம். 335). சங்க இலக்கியப்
பாடுநர் குழாங்களாகப் பாணர், புலவர், கோடியர்,
வயிரியர், கண்ணுளர், கிணைஞர்,
பொருநர், அகவுணர் ஆகியோரை அடை யாளப்படுத்துகிறார்
அம்மன்கிளி முருகதாஸ் (சங்கக் கவிதையாக்கம் மரபும்
மாற்றமும், ப.191) இத்தகைய குடிகள் குறித்த
விரிவான ஆய்வுகள், தமிழ்த் திணைக் கோட்பாட்டிற்கான மூல ஊற்றுக்களைக்
கண்டறியத் துணைபுரியும்.
தமிழப் பாணர் பற்றிய
வெ.வரதராசன் (தமிழ்ப் பாணர் வாழ்வும் வரலாறும்) கா.சிவத்தம்பி (தொல்காப்பியமும் கவிதையும்) அம்மன்கிளி முருகதாஸ் (சங்கக்
கவிதையாக்கம் - மரபும் மாற்றமும்), பெ.மாதையன் (சங்ககால
இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும்), பக்தவச்சலபாரதி (சங்க காலப் பாணர்களும் கோண்டு பர்தான்களும்), பிரபஞ்சன் (பசி உருக்குலைந்த
பாண் சமுகம்), கமில் சுவலபில், ஜார்ஜ் ஹார்ட், கைலாசபதி
போன்றோரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. கவிஞர் இன்குலாப்பின் ‘ஔவை’ நாடகம், பாணர் குடியிருப்பையும்
பாணர் வாழ்வியலையும் சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. இலக்கிய நோக்கு மட்டுமின்றி,
வரலாறு, மெய்யியல், சமூகவியல்,
மானுடவியல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பார்வை தமிழ்த் தொல்குடியினரைப்
பற்றிய தொடராய்விற்கு இன்றியமையாதது.
இனக்குழுச்
சமுதாயத்தில் பாட்டு என்பது இசையோடும் ஆட்டத்தோடும் இயைந்ததாக வெளிப்படுவது. இதிலிருந்து
மாறுபட்டு பாட்டு என்பது புலமைச் செயற்பாடாக எண்ணப்பட்ட நிலையில்தான் செய்யுள்
மரபு தொடங்குகிறது. இனக்குழுச் சமுதாயத்தில் பாட்டு என்பது பாணர் குடிகளுக்கு
உரியதாக இருந்தது. இந்த மரபு நிலவுடமைக் காலத்திலும்
தவிர்க்க இயலாததாய் தேவையான மாற்றங்களுடன் பின்பற்றப்பட்டுள்ளது. இவ்வகையில்தான்
சங்க இலக்கிய ஆக்கங்கள் பாணர் மரபைத் தழுவியவையாக அமைந்துள்ளன. இதுவே திணைக் கோட்பாட்டின்
நிலைபேற்றிற்கும் விரிவாக்கத்திற்கும் காரணமாக அமைந்தது. பாணர் மரபிலிருந்து
விடுபட்டு பாடல் என்பது பிரக்ஞைபூர்வமான ஒரு புலமைத் தொழிற்பாடாகக் கருதப்படும்
நிலையிலேயே தொல்காப்பியம் தோன்றியது என கா.சிவத்தம்பி (தொல்காப்பியமும் கவிதையும்
ப.34) குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கது.
புராதன
பாடல் வளர்ச்சியில் மூன்று கட்டங்கள் இருப்பதை அம்மன்கிளி முருகதாஸ் (சங்கக்
கவிதையாக்கம் – மரபும் மாற்றமும், ப.9,10) எடுத்துக்
காட்டுகிறார். அவை 1. நேரடியாகப் பாத்திரங்கள் பாடியவை 2.
பாத்திரங்களாகப் பாணர்கள் பாடியவை 3. பாணர்கள்
போலப் புலவர்கள் பாடியவை. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பாணர் பற்றிய
குறிப்புகள் இடம் பெற்றிருப்பினும், சங்க இலக்கியத்தில் பாணர்
பாடியதாகக் குறிப்பிடும் எந்தப் பாடலையும் காணமுடியவில்லை. மேலும், கற்பில் கூற்றுக்குரிய வர்களாகவும் (தொல். பொருள்.491) வாயில்களாகவும் (தொல்.பொருள் 191) பாணர்களைத்
தொல்காப்பிய அகத்திணை சுட்டுகிறது. இதற்குச் சங்கப் பாடல்களும் சான்று பகருகின்றன.
ஐங்குறுநூற்றில்
பாணன் பத்து எனும் தலைப்பில் பத்து பாடல்கள் இடம் பெற்றுள்ளன. புறநானூற்றிலும் பதிற்றுப்பத்திலும்
இடம்பெறும் ஆற்றுப்படை எனும் துறை சங்க காலத்திலேயே தனி இலக்கிய வகையாக வளர்ச்சி
பெறுவதையும் பத்துப்பாட்டில் காணமுடிகிறது. சங்கப் பாடல்கள் எழுதப்பட்ட
காலத்திற்கும், அவை தொகுப்பாக்கம் பெற்ற காலத்திற்கும் ‘திணை’புறும் கருத்து இலக்கணக் கோட்பாட்டாக்கம் பெற்ற
காலத்திற்கும் உள்ள இடைவெளிகள் நன்கு ஆராயப்படாமல் பாணர் மரபின் மூலத்தையும்
தொடர்ச்சியையும் நன்கு அறிய இயலும்.
பாணர்களின்
வாய்மொழி சார்ந்த இசைப் பாடல்கள் படிப்படியாகப் புறந்தள்ளப் பட்டு புலவர்களின்
ஆக்கங்கள் ஏற்றம் பெறுவதைத் தெளிவாகக் காணமுடிகிறது. தொல்காப்பியத்தில் பண்ணத்தி
போன்ற இலக்கிய வகைக்கு வழங்கப்பட்டுள்ள இடம் ஒரு வகையில் பாணர் மரபைத் தவிர்க்க
முடியாத ஓர் ஏற்பாடாகவே கருத வேண்டியுள்ளது.
பாணர்களின்
பாட்டு மட்டுமின்றி, பாணர் குடியினரும் புறந்தள்ளப்படும் நிலையைக்
காணமுடிகிறது. அம்மன்கிளி முருகதாஸ் (சங்கக் கவிதையாக்கம் -மரபும் மாற்றமும்,
ப.192-203) குறிப்பிடுவது போல, பாணர்கள் பெரும்பாலும் குறுநிலக் கிழாரோடும் புலவர்கள் வேந்தரோடும் அடையாளப்படுத்தப்
படுகின்றனர். பரிசளிப்பு முறையில் பாணர் புலவரிடையே வேறுபாட்டைக்
காணமுடிகிறது.பாணர்கள் கல்லாவாய்ப் பாணர் எனக் குறிக்கப் பெறுவதும், புலவர்கள் செந்நாப்புலவர் என ஏத்தப் பெறுவதும் நிகழ்கிறது.
தனித்தன்மை
வாய்ந்த திணைக்கோட்பாட்டை உலகிற்கு வழங்கிய பாணர்கள் தமிழகத்தின் தொல்குடியினர்.
இவர்களின் வசிப்பிடம் பாண் சேரி, பாண் குடி எனப்பட்டது. இவர்கள்
இசையை வாழ்வாகக் கொண்டவர்கள். கூடி வாழும் இயல்பு கொண்ட குழு மனத்தவர், குழுவாகச் சென்று மக்களை மகிழ்வித்தவர்கள். இக்குழுவில்
பாடினி, விறலி, கூத்தர் இடம்
பெறுவதுண்டு. இனக்குழுச் சமுதாயத்தின் பொதுமை வாழ்வு இவர்களுக்குரியது. நிலவுடமைச்
சமுதாயத்தில் வறுமை வாழ்வுக்குத் தள்ளப்பட்டவர்கள்.
பண்டை
பாணர் மரபு பழங்குடிகளின் மூதறிவாளர்களிடமிருந்து
தோன்றுகிறது. மந்திர ஆற்றல், குறி சொல்லுதல், சடங்குகள்,
நிகழ்த்துதல், மருத்துவம் பார்த்தல் ஆகிய
பண்புகளைக் கொண்ட முதுவாய் மக்கள் மரபில் பாணர்களை நோக்க இயலும். புறநானூற்றில்
இடம்பெறும் முதுவாய் பாணன் (புறம். 319) முதுவாய் இரவல (புறம்.48) ஆகிய வழக்குகள் இதனை உணர்த்தும்.
ஆற்றுப்படை
நூல்கள் பாணர்களின் கூற்றாகப் புலவர்களால் பாடப்பட்டவை. இப்பாடல்கள் மன்னரைச்
சிறப்பிக்கும் நோக்கில் பாடப்பட்டவை. பாணர் வாழ்வியல் ஒரு இலக்கியப் போக்காகவே
இவற்றில் அமைகிறது. அரசுகள் நிறுவப்பெற்ற சமுதாயத்தில் பாணர்களின் பங்கு என்ன
என்பது விரிவாக ஆராயப்பட வேண்டியதாகும். ஆயினும், ஆற்றுப்படை நூல்கள் சமகாலத்திய பாணர் வாழ்வியலை அறிந்து கொள்வதற்கான
அடிப்படைகளை வழங்கியுள்ளன.
மயிலை சீனி.வேங்கடசாமி ‘சிறுபாணன் சென்ற பெருவழி’ என்ற கட்டுரையினை (1961)
வரலாற்று நோக்கில் எழுதியுள்ளார். சிறுபாணாற்றுப்படையில் இடம்பெறும்
எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் ஆகிய ஊர்களை
இக்கால ஊர்களோடு அடையாளப்படுத்தி, பாணன் சென்ற வழியினைப் படம்
வரைந்து விளக்கியுள்ளார். கட்டுரையாளர் இவற்றில் எயிற்பட்டினம் நெய்தல் நிலப்பட்டினம், வேலூர் முல்லை நில குடி, ஆமூர் மருதநில ஊர்.
மேற்சுட்டிய குடியிருப்புகளின் தன்மை அங்குள்ள மக்களின் இயல்புகள், அவர் தரும் உவ ஆகியவற்றைப் பாணன் விவரிக்கிறான். தாம் சென்ற வழி குறித்துப்
பாணர்கள் சுட்டுவதாக அமைந்த செய்திகள், அவர்களுக்கிருந்த
நிலவியல், மக்கள் வாழ்வியல் பற்றிய அறிவைத் துல்லியமாக
உணர்த்துகின்றன.
பெரும்பாணாற்றுப்படையில்
உமணர், ஆயர், உழுவார், அந்தணர் அவர்தம் குடியிருப்புகள், தொழில்கள்,
உணவியல்புகள் விவரிக்கப்பட்டுள்ளன. உமணரின் உப்பு வண்டிகள், மிளகுப் பொதி சுமந்த கழுதை சாத்து, விருந்து ஓம்பும்
எயினர், மறவர், வீர வாழ்வு, ஆயர் வாழ்வு, உழவர் பெருமை, வலைஞர்
வாழ்வு என மக்கள் வாழ்வியலை நுணுக்கமாக அறிந்தவராகப் பாணர் படைக்கப்பட்டுள்ளனர். மக்களின்
அன்பிற்கும் ஆதரவிற்கும் உரியவனாகவும் பாணர் படைக்கப்பட்டுள்ளான். மக்களை
மகிழ்விக்கும் கலைஞராகவும், மக்களோடு அணுக்கமாகத் தொடர்பு கொண்ட நாடோடிக் குழுவாகவும் பாணர்களின் வாழ்வை
ஆற்றுப்படை நூல்கள் காட்டுகின்றன.
பாணரின்
பன்முகப்பட்ட அறிவுத் திறனும் மக்கள்
தொடர்பும் ஆட்சியாளர் களுக்குப் பயன்தரத்தக்கவை. நிலவுடைமை சார்ந்த
அதிகாரத்திற்கான ஏற்பு மனநிலையைச் சமுதாயத்தில் ஏற்படுத்தவும் ஆட்சியாளர்களின்
பெருமையை மக்களிடையே பரப்பு வதற்குமான தொடர்பாளர் களாகப் பாணர்கள் தேவைப்படுகின்றனர்.
இதனால்தான் பாணர் மரபுகளும் சங்க காலத்தில் தேவைப்பட்டிருக்கின்றன.
சங்க
காலம் தொடங்கி பிற்காலப் பாண்டியர்கள் காலம் வரை பாணர் மரபு பல்வேறு காரணங்களால்
பல்வேறு நிலைகளில் போற்றிக் கொள்ளப்பட்ட நிலையும்
கவனத்திற்கு உரியது. சிலப்பதிகாரத்தில் பாணர்களின் பெருமைக்குரியமரபு
குறிக்கப் படுகின்றது. காவிரிப் பூம்பட்டினத்தில்,
“குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவின்
றிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறன்
மரபின் பெரும்பாண் இருக்கையும்”
என
பாணர் குடியிருப்பு சுட்டப்படுகின்றது. ஆயினும், பதினென்கீழ்க்கணக்கு நூலில் பண் அமைத்துப்
பாடுபவர்களும் யாழ் இசைப்பவர்களும் இல்லாத நிலைக்கு வருந்தும் குரலைக் காண
முடிகிறது. தேவாரம் எழுந்த காலத்தில் திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்னும் சிவனடியார், திருஞான சம்பந்தரோடு பல தலங்களுக்கும் சென்று
பாடியதைத் திருத்தொண்டர் புராணம் குறிப்பிடுகிறது. இதுபோன்றே, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரை திருவரங்கப் பெருமான் தன்
அருகில் இருத்தி பாசுரம் பாடக் கேட்டதாகக் கூறப்படுவதை வைணவ மரபிலும் காண்கிறோம்.
நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு ராசராசன் திருமுறைகளைத் தொகுத்த சமயத்தில் தேவாரப்
பாடல்களுக்குப் பண்முறையை வகுக்க வேண்டியிருந்தது. அப்போது நீலகண்ட யாழ்ப்பாணர்
குடியில் தோன்றிய ஒரு பெண்மணியை (மதங்கசூளாமணி) வைத்துப் பண்முறை வகுத்த
செய்தியும் பாண் மரபின் தொடர்ச்சியைக் காட்டுகிறது. பாணர் மரபினர் தஞ்சைப்
பெருவுடையார் கோயிலில் சூற்றி, சாக்கை, அறிஞ்சி என்பவராகப் பணியாற்றியுள்ளதை ராசராசன் கல்வெட்டுகள்வழி அறிய முடிகிறது.
தமிழ் இசை குறித்த அண்மை ஆய்வுகளில் பாணர் மரபை மீட்டெடுக்க இயலும்.
பாணர்
மரபை இனவரைவியல் தரவுகளை முன்வைத்து பக்தவச்சல பாரதி ஆய்ந்துள்ளார். கோண்டுவானா
பகுதியில் வாழும் பர்தான்களின் வாழ்வியலையும், அவர்தம் இசைத்
தொடர்பையும் பாணர்களோடு இவர் தொடர்பு படுத்திக் காட்டியுள்ளார். இக்காலத்தில்
பாணர்கள் தமிழகத்தில் ஒரு சிறுபான்மைச் சாதியினராக அடையாளம் பெறுவதையும், இசையோடு எவ்வகையிலும் தொடர்பற்ற பல்வேறு உதிரித் தொழில்களைச் செய்து
கொண்டு அன்றாட வாழ்விற்குப் போராடும் நலிந்த பிரிவினராக வாழ்வதை தர்ஸ்டன், தொ.பரமசிவம் ஆகியோர் ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. இனக்குழுச்
சமுதாயத்தின் தனித்தன்மை வாய்ந்த பாணர் மரபு, நிலவுடைமை சமுதாயத்தில்
படிப்படியாகச் சிதைக்கப்படுகிறது. வறுமை வாழ்வுக்கு ஆளான நெருக்கடியான நிலையிலும்
இனக்குழுவின் பொதுமை மரபுகளையும் வாழ்வியல் அறங்களையும் வற்புறுத்தும் போக்கைப் பாணர்
மரபு பேணுவதைக் காணமுடிகிறது. பாணர் மரபுகளை அழித்துக் கொண்டு தமிழகத்தில் எழுச்சி
பெற்ற வேந்தர் மரபை அவர்களால் வீழ்த்த இயலவில்லை. தம் திணை வாழ்வைப் பாதுகாக்கவும் அவர்களால் முடியவில்லை. ஆயினும் திணைக்
கோட்பாட்டின்வழி பாண் மரபின் மேன்மைகளை மீட்டுருவாக்கம் செய்ய இப்போது நாம்
முயற்சி செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக