சிவ சித்திரை, திரைப்பட
ஒளிப்பதிவாளர், சென்னை.
பிரபஞ்சத்தின்
நீலவானம் பெருவெளியில்... வெண்ணிற மேகக்கூட்டங்கள் படையாகத் திரள்கின்றன.
பொழுதுகளை உன்னதமாக்கும் காலநிலைகளை படைத்துக் கொண்டிருக்கிறார், கடவுள்.
“விதையிட்டவள்
அறுவடை செய்வாள். படைத்தவள் காத்துநிற்பாள். மானுடர்களே... சித்தர்கள் வாழ்ந்த
பூமி இது. தவம் செய்தவர்கள் நீங்கள் காத்திருங்கள். நற்செய்தி உண்டு. காடும்
நாடும் செழிக்கப் போகிறது. நொடிப்பொழுதில் மழை” வர்ண பகவான்
இடியிடித்து சேதி சொல்கிறான். அச்சேதி பிரபஞ்ச மெங்கிலும் எதிரொலிக்கிறது.
மண்ணுலகின் ஜீவராசிகள் பரவசமடைகின்றன. கடவுள், கருமேகங்களைக்
களைத்து, அற்பு தங்களை நிகழ்த்த ஆயத்தமாகிறார். வானுக்கும்
பூமிக்கும் இடைப்பட்ட காற்றுவெளியில், இரு பருந்துகள்
வட்டமடித்து அன்பின் உன்னதங்களை சிறகுகளால், உறவாடி மகிழ் கின்றன.
பறவைமலை என்றழைக்கப்படும் ஒரு மலை உச்சியில், செங்குத்துப் பாறையின்
சரிவில், புதர் செடிகளின் ஓர் வேர்புடைப்பில்
வீற்றிருக்கிறது. அப்பருந்துகளின் கூடு. மலையடிவாரத்தின் பச்சைப் போர்த்திய
நிலப்பரப்பில்...ஒரு புள்ளியாய் செம்மறி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்,
ஏழு வயது ருகன். ஏறக்குறைய நூறு ஆடுகளைக்
கொண்டது. அவனின் படை. பிறப்பிலிருந்தே ஆடுகளோடு வளர்ந்தவன். அவைகளின் அனைத்து
அசைவுகளையும் அங்க அடையாளங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பவன். ஆடுகளின் மொழி
புரிந்து, அவைகளைத் தன்வசப்படுத்துவதில் கெட்டிக்காரன்.
அச்செம்மறியாட்டுக் கூட்டத்தை வழிநடத்தும் தலைவன். இவையெல்லாம் கற்றுக்கொண்டது,
தனது பாட்டியிடம்தான். கதைகள் சொன்னவள், கற்பனைகளை
விதைத்தவள். பறவைமலையின் அற்புதங்களையெல்லாம் உணர்த்தியவள். பறவை மலைக்கும் முருகனுக்கு
மிடையேயான உறவிற்கு இந்த ஆடுகள்தான் ஆதாரம். முருகன், ஆடுகளை
வளைத்து மலையடி வாரத்தின் குகைக்குத் திருப்புகிறான். அவைகள், மண் பாதையின் புழுதிமண்ணை கிளப்பிக் கொண்டே படைவீரர்களாய் நடைபோட்டன,
காற்றுடன். மண்வாசம் அடித்தது. முருகன் வானைப் பார்க்கிறான். கருமேகங்கள் திரண்டு, வெளிர்நீளம் மறைகிறது. பருந்துகள் சத்தமிட்டுக் கொண்டே தன் கூடுநோக்கி சிறகடிக்கின்றன. பருந்தின் சத்தத்துடன் வருணபகவான் இடி இடிக்க...
கடவுள் கண் திறக்கிறார். மழைத்தூரல் விழுகிறது. சூரியக்கதிர்கள் மேகங்களை
கிழித்துக்கொண்டு ஒளிவீசுகின்றன. ஆடுகள், மலையடிவாரத்தை அடைய
மழை பொழிகிறது.
“ஆத்தா...
ஆத்தா மழ வருது” முருகன் குரல் கொடுத்துக் கொண்டே, சித்திரக்குகையை நெருங்கினான். பாட்டி, பாறையில்
முன்னோர்கள் வரைந்த சித்திரத்தின் கோடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அங்க
ஆடெல்லாம் நனையிது. நீ என்னன்னா... இங்க ஜம்முன்னு உக்காந்து பாறையில் படம்
பாத்துக்கிட்டு இருக்கியா...?”
“அதான் நீ இருக்கியே... டா... இது
கோடமழதான் செத்தநேரத்துல நின்னுடும்” என பாட்டி முருகனின்
தலையை துவட்டினாள்.
“ஆத்தா
பசிக்குது... வாளிய எடுக்கவா...” முருகன்
தூக்கு வாளியை எடுத்தான். பழைய சோற்றுக்கு, உப்பு மிளகாயைக்
கடித்துக் கொண்டனர். அருகில் ஓடிக்கொண்டிருந்த அருவியின் ஓடையில்
நீரை அள்ளிப்பருகினர். முருகன், பாறையில் வரைந்திருந்த சித்திரங்களைப்
பார்த்தான்.
“ஆத்தா
இந்தப் பாறையில என்னா வரைஞ்சிருக்கு...?”
“இதுக்கு
பேரு சித்திரம்...ன்னு சொல்லுவாங்க. நமக்கு முன்னாடி... காட்டுலேயே
வாழ்ந்தவங்க
வரைஞ்சதாம்” “எனக்கும் சின்னவயசுல ஒண்ணுமேபுரியல. முழுச்சிக்கிட்டே பார்ப்பேன்.
அப்போ... யென் தாத்தாதான் எனக்கு சொன்னாரு. அவரும் உன்னமாதிரி சின்ன வயசா
இருந்தப்போ இந்த மலையிலதான் ஆடு மேய்ச்சாரு. அப்போது ஒரு சித்தர் சொன்னாராம்”
“இச்சித்திரங்கள்
அனைத்துமே நம் முன்னோர்களால் தீட்டப்பட்டன. வண்ணத் திற்கான
கலவை, காட்டில் உள்ள மூலிகையைப் பயன்படுத்தி வரைந்துள்ளனர்.
வெயில், மழை, புயல் போன்ற இயற்கை
சீற்றங்களிலிருந்து தன்னை காத்துக்கொள்ள காடுகளில் வாழ்ந்த ஆதிமனிதர்கள்
இக்குகைகளை நாடினர். அவர்கள், காட்டு விலங்குகளையும் நீர்
நிலைகளிலுள்ள மீன்களையும், மண்ணில் விளைந்த கிழங்கு
வகைகளையும் வேட்டையாடி உணவை சேகரித்தனர். உண்டு உறங்கிய நேரம்போக, இப்பாறைகளில் சித்திரங்களைத் தீட்டினர். அச்சித்திரங்களில் தான் வாழ்ந்த
சூழலையே பதிவு செய்துள் ளனர். மரங்கள், பறவைகள், விலங்குகள், விண்மீன்கள், கதிரவன்,
மனித உருவங்கள், மனிதன் விலங்குகளை
வேட்டையாடுவது, குடில் அமைப்புகள், ஒரு
இன குழுவிற்கும் மற்றொரு இன குழுவிற்கும் போர் என்பன பல அதில் அடங்கும்.
சித்திரங்களில் பல விதமான பறவைகள் வரையப்பட்டு இருக்கின்றன. இந்த மலையில் பல இனப்பறவைகள்
வெகுகாலம் வாழ்ந்திருக்கின்றன. அதனால் இம்மலைக்குப் பறவைமலை என பெயரிட் டிருக்கிறார்கள்.
இச்சித்திரத்தின் வாயிலாக நம் முன்னோர்களின் வாழ்வையும் நம் வரலாற்றையும்
அறிவதுடன், அவர்களின் கலைநேர்த்தியையும் கண்டு வியக்கலாம். சித்திரத்தை
உற்றுநோக்கு, உன்னதம் உனக்கும் புலப்படும்” அப்படீன்னு சொல்லிட்டு அந்தச் சித்தர் தவம் செய்ய மலை உச்சிக்குப்
போயிட்டாராம். இத யென் தாத்தா சொன்னதுக்கு அப்புறம்தான்.. எனக்கே புரிய
ஆரம்பிச்சிது...”
“இங்க
பாரு ஆத்தா மனுசங்க எல்லாம் வெளையாடுராங்க”
“அவுங்க
வெளையாடல, நல்லா பாரு... கை கோர்த்து ஆடுறாங்க”
“ஆமா...
ஆத்தா. இங்க பாரு ஒரு மயிலு இருக்குது. ஒரு மனுசன... இங்கபாரு ஆத்தா... ஒரு குட்டி
மயிலு...” முருகன் சித்திரத்தின் கோடுகளைப் புரிந்து கொண்டான்.
வெகுநேரம் சித்திரங்களைப் பற்றியே பேசிக்கொண்டேயிருந்தான். பாட்டி, நிலத்தைப் பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெண்தூரல் பூசியிருந்தது.
“ஆத்தா
மழ யேன் பேய்து..?”
“மழ
மனுசனுக்கு. இந்த காட்டுல இருக்குற புல்பூண்டு செடிகொடி மரத்துக்கு, பறவைகளுக்கு, விலங்குகளுக்கு மொத்தத்துல இந்த
மண்ணுக்குதான் மழ” பாட்டியின் பதில் முருகனுக்கு நிறைவானதாய்
இருந்தது. மழையை விடுத்து....
“ம்...
அப்புறம் அத செய்யிறது யாரு. யாராவது வானத்துல இருந்து தண்ணிய ஊத்துறாங்களா...?”
என்றான்.
“மலைக்கடவுள்.
கன்னியம்மாதான் நம்ம மலைக்கடவுள். அவதான் வருண பகவான் மூலமா மழ பேய வக்கிறா”
“கன்னியம்மாவா
அவங்க யாரு? எங்க இருக்காங்க? அவங்களும்
நம்மல மாதிரி மனுசனா? அப்போ வருணபகவான்!”
“எல்லாமே அவதான். இந்த
மலமேலதான் இருக்கா. கண்ணுக்கு தெரியமாட்டா. காத்தோட கலந்து இருப்பா. அவதான் நம்ம
எல்லாரையும் படைச்சா. அவ நம்ம கேக்குறதல்லாம் தருவா”
“கேக்குறதல்லாம்
தருவாங்களா...”
“ஆமா.
தருவா”
“அப்பனா நான் ராஜாவாகணும். ஆக்குவாங்களா...?”
“நீ
எப்பவுமே ராசாதான்” என பாட்டி முருகனைக் கட்டிக்கொண்டாள்.
“இல்ல...
நீ பொய் சொல்லுற. நான் நெசமான ராஜா இல்லை. நீ கத சொல்லுறப்ப ராஜா எப்படி
இருப்பாரு. அவரு எப்போதுமே கோட்டையிலதான் இருப்பாரு. தேர்ல வருவாரு.. போருக்கு
போவாரு... அவர சுத்தியும் ஆயிரம் படைவீரங்க. யானை படைங்க... குதிரைப்படைங்க...
அப்புறம் பெரிய படதளபதி. அப்புறம் கையில கூர்மையா போர் வாளோட நிக்கிறவன்தான்
ராஜான்னு சொல்லிருக்கில... அவன் எப்போதுமே நாட்டு மக்களுக்கு நல்லதுதான் செய்வான்.
அப்போது அவன்தான ராஜா. நான் என்ன நாட்டுக்கு நல்லதா செய்யுறன். என்னட்ட எங்க
படையிருக்கு. வெறும் ஆடுங்கதான் இருக்கு... நான் ராஜா இல்ல” பாட்டி
சற்று யோசித்தாள்.
“சொல்லு
ஆத்தா... நான் ராஜாவாகணும்”
“ஒரு
நாள் ராசாவா வருவ... மலைக்கடவுள் கிட்ட வேண்டிக்க. அவ உன்னை
பாத்துக்கிட்டே
இருப்பா. நீ ஆடுகள பத்திரமா பாத்துக்கிறியா.... உன் அப்பா, அம்மா, தங்கச்சிப் பாப்பா எல்லாரையும் பத்திரமா
பாத்துக்கிறியான்னு பாத்துக்கிட்டே இருப்பா. இது எல்லாம் நீ சரியா செய்யணும்.
அப்பதான் அவ உன்ன ராசாவாக்குவா”
“நாந்தான்
எல்லாரையும் பத்திரமா பாத்துகிறனே. எப்போ ராஜா ஆகப்போறேன்”
“இன்னும்
கொஞ்ச நாள்ல...”
“எப்புடி
நம்புறது”
“ஒரு
கத சொல்லுறேன்... கேளு”
“இப்ப
கதையெல்லாம் வேண்டாம் ஆத்தா. நான் ராஜாவாகணும்”
“அதுக்குதான்
‘தங்கமுட்ட கத’ சொல்றன் கேளு. நான்
சின்ன வயசுல, ஒரு ஆட தொலைச்சிப்புட்டு, மலைமேல தேடிக்கிட்டிருந்தேன். அப்போ மலமேல இருந்த ஒரு மூதாட்டி...
“மலைக்கடவுளிடம்
வேண்டிக்கொள்”
“ன்னு...
அந்த மூதாட்டி ஒரு கதை சொன்னிச்சி...”
“முன்பொரு
காலத்தில்... இப்பறவைமலையின் அடர்ந்த வனப்பகுதியில் பழங்குடியினர்
வாழ்ந்துவந்தனர். பன்னிரெண்டு குடில்களைக் கொண்டது. அவர்களது இனக்குழு, மூப்பன், மாரி தம்பதியரின் மகள் கன்னியம்மாள். கன்னியம்மாளுக்கு
வேலை தன் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது. வனத்தில் உள்ள பழங்களையும்,
காய்ந்த விறகுகளையும் சேகரித்து, பின்னர் தன் கால்நடைகளுடன்
குடிலுக்குத் திரும்புதல் என இயற்கையோடு ஒன்றியிருந்தாள். அப்பகுதி மக்கள் ஆடு,
மாடுகளை மேய்ப்பது, நெல், கம்பு போன்ற தானியங்கள் பயிரிடுவது, தேன் எடுக்கச்
செல்வது, வேட்டையாடச் செல்வது எனத் தொழில் செய்து நன்றாக வாழ்ந்தனர். ஒருநாள் பயிரிட்டு சேர்த்து வைத்த
தானியங்களை கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றனர். அதில் கன்னியம்மாளின் இரு ஆடுகள் திருடு
போயின. கன்னியம்மாள்... மலைக்கடவுளை வேண்டிக் கொண்டாள். திருடர்களிடம் போரிட்டுத் தானியங்களை மீட்டுவரவும், மக்களை ஆபத்திலிருந்து காக்கவும்,
போராடும் வீரத்தைத் தர மனமுருகி வேண்டிக்கொண்டாள். கடவுள் ஒருநாள்
கன்னியம்மாளின் கனவில் தோன்றி,
“பறவைமலை உச்சியின் ஒரு
செங்குத்து பாறையில், இரு பருந்துகள் கூடுகட்டி
வாழ்கின்றன.
அப்பருந்துகள் தன் இனவிருத்திக்காக இரு வெண்ணிற முட்டைகளை இட்டிருக்கிறது. அவைகள்
வெறும் முட்டைகள் அல்ல. தங்க முட்டைகள். ஒருநாள், அது உனக்கு கிட்டும் தக்க
சமயத்தில் முட்டைகளை எடுத்து உன்வீட்டு வாசல் மண்ணில் புதைத்துவிடு. பொழுதுகள்
கனியும் வரை காத்திரு. செங்கோல் கிட்டும்”
எனக் கடவுள் மறைகிறார்.
வெகுநாட்களுக்குப் பிறகு பறவைமலை தங்கநிறத்தில் பிரகாசித்தது. தங்கமுட்டைகளை
மண்ணில் புதைத்தாள். மக்களைப் பாதுகாக்கும் போராளியானாள். தெய்வமானாள்”
இதுதான் அந்த மூதாட்டி சொன்ன ‘தங்கமுட்ட கத’.
அந்தக் கன்னியம்மாதான் நம்ம மலைக் கடவுள். அவகிட்ட வேண்டிக்க
நடக்கும்” கதையில் ஆழ்ந்துபோன முருகன் பிரமித்துப்போய்
அமர்ந்திருந்தான். கனவுகள் சிறகடிக்கத் தொடங்கின.
மழை நின்று, ஈரக்காற்று வீசியது. நிலமெங்கிலும் நீர்
தேங்கியிருந்தது. மலையடிவாரத்தில் உள்ள மரப்பட்டைகளிலிருந்தும் செடிகளின் இலைகளிலிருந்தும்
மழைநீர் ஒழுகிக் கொண்டேயிருந்தது. முற்புதரில் கட்டப்பட்டிருந்த, சிலந்தியின் கூடு ஒன்றில் ஈரப்பசை ஒட்டியிருந்தது. குட்டி ஆமை ஒன்று சிறு
பாதையின் மீது ஏறிக்கொண்டிருந்தது. கறுப்பு எறும்புகள் வெளிவர தயங்கின. முதிய பறவை
ஒன்று ஓசையிட்டது. மயில்கள் சத்தமிட்டுக்கொண்டே குன்றுகளில் தோகை விரித்தாடின.
சிறிய மலைப்பாம்பு ஒன்று பச்சைத்தவளையை விழுங்கிக் கொண்டிருந்தது. செம்மறியாடுகள்
உடலை சிலித்துக்கொண்டே... கால்களால் தேங்கிய மழைநீரை உதைத்துக் கொண்டன. அவ்வப்போது
தலையை ஆட்டிக்கொண்டதில் கழுத்துமணியின் ஓசை கணீர் கணீரென்று ஒலித்தது. சாம்பல்மேகங்கள் களைந்து, வானம்
வெளுத்து, சுல்லென்று வெயில் அடிக்க ஆரம்பித்ததும், மண்ணின் ஈரம் உலரத் தொடங்கியது. ஆடுகள் நிலப்பரப்பில் மேயத் தொடங்கின.
புற்களில் ஈரம் இருப்பதால் மூக்கில் நீர் புகுந்து தும்மிக்கொண்டே மேய்ந்தன. சில
ஆடுகள் மழைக்குமுன் உண்டதையே அசை போட்டன. அவைகளின் வயிறு
நிரம்பியதும், வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகி கத்திக்கொண்டே
முருகனை திரும்பி திரும்பிப் பார்த்தன. முருகன் ஆடு ஓட்டும் குச்சியையும் தூக்கு
வாளியையும் கையில் எடுத்துக்கொண்டு ஆடுகளை
வீட்டிற்கு ஓட்டினான். பாட்டி பின்தொடர பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. முருகனின் மனதில்
மலைக்கடவுளைப் பற்றிய நினைவுகளும், ஈரமான செம்மண் பாதையில் ஆடுகளின்
காலடித்தடங்களும் ஆழமாய் பதிந்திருந்தன. அவைகள் ஒன்றையொன்று உரசிக்கொண்டே
கழுத்துமணி ஓசையெழுப்பி, ஒய்யாரமாய் நடைபோட்டு வீடு போய்
சேர்ந்தன.
வெண்நிலவு ஒளி
வீசும் இரவுப்பொழுது. மண்சுவரில் கோரைகளால் வெய்யப் பட்ட கூரை வீடுகள் தொகுப்பாய்
இருந்தன. சூரிய ஒளியில் கிடைக்கப்பெற்ற மின்விளக்குகள் மந்தமாய் எரிந்துகொண்டிருந்தன.
வீசிக்கொண்டிருக்கும் குளிர் காற்றினால் சில வீட்டுக்கதவுகள் மூடப்பட்டிருந்தன. முருகனின்
பக்கத்து வீட்டு வாசலில் சுண்ணாம்பு பூசுவதற்காக, செம்மண்
கலவை குழைக்கப்பட்டிருந்தது. தெருவின் கடைசி வீட்டிலிருந்து, மூங்கில் குழலின் இசை தெள்ளத்தெளிவாய் இழையோடிக் கொண்டிருந்தது. அவர்களது
இருப்பிடம் அடர்ந்த மரங்களால் சூழப்பட்டிருந்தது. முருகன் பரவசத்துடன்
“நான்
ராஜாவாப்போறேன். நான் ராஜாவாப் போறேன்” என கத்திக்கொண்டே
வீட்டிற்குள் ஓடினான்.
“அம்மா...
தங்கச்சிப் பாப்பா எங்க...”
“அவ
ஏனையில தூங்குறா...டா...” முருகன் சத்தத்தை குறைத்து,
“தங்கச்சிப்பாப்பா...
தூங்கிக்கிட்டு இருக்கிறியா... ஒனக்கு ஒண்ணு தெரியுமா? நான்
ராஜாவாப்போறேன். ஆத்தா கத சொன்னிச்சி. மலைக்கடவுள் வேண்டிக்கிட்டா நெசமாவே
ராஜாவாயிடலாமா. நாளைக்கு நான் மலைக்கடவுள பாக்கப்போறேன். அவங்க தங்கமுட்ட
தருவாங்க. அதவச்சி நான் ராஜாவாயிடுவேன்” உறங்கிக்
கொண்டிருந்த தன் தங்கையிடம் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டான். இரவு உறக்கம்
வராமல், தங்க முட்டையைப் பற்றியே யோசித்தான். வானில்
நட்சத்திரங்களுடன் நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது. பின் தங்க முட்டையாய்
ஜொலித்தது. முருகன் அசதியில் கண் அயர்ந்தான்.
பொழுது புலர்ந்தது. முருகன் துள்ளிக் குதித்துக்கொண்டே
செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டினான். கையில் நரம்புப் பை ஒன்றை வைத்திருந்தான். பாட்டி, தூக்கு வாளியை எடுத்துக் கொண்டாள். முருகன், இன்று மலைக்கடவுளை சந்தித்து,
ராஜா வரத்தை கேட்கப் போகிறான். அந்த கொண்டாட்டத்தில் ஆடுகளை வேகமாய்
ஓட்டினான். அவைகள், கழுத்து மணியை ஆட்டியாட்டி முருகனை
திரும்பிப் பார்த்தன. செம்மறியாட்டுக் குட்டி ஒன்று மூச்சிறைக்க ஓடியது. முருகன்,
அக்குட்டியைக் கையில் தூக்கிக்கொண்டு, மலையடிவாரம்
வந்து சேர்ந்தான். ஆடுகளை மேயவிட்டுவிட்டு.
“ஆத்தா
நான் மலைக்கடவுள பாத்துட்டு வர்றேன்...” என்று மலைஉச்சியை நோக்கி
ஓட்டமெடுத்தான்.
பாட்டி “முருகா
நில்லுடா தனியா போகாத...” எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத,
முருகனின் மனதுக்குள் ஒரு எதிர்பார்ப்புடன், துள்ளல்
அதிகரித்திருந்தது. சிறுவயதில் அப்பாவோடு ஒருமுறை மலைக்கோயிலுக்கு சென்றுள்ளான்.
இப்போது, அவனுக்கு சரியான வழி தெரிந்திருக்குமா என்பதே தெரியாது.
பாதையின் ஓரம் உள்ள கற்களில் வெள்ளைச் சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்தது. அதை
வைத்து கோயிலை அடைந்தான். மலைக்கோயில், பெரிய ஆலமரத்தின்
கீழ் இருந்தது. அருகில் காட்டுமல்லி செடிகள் அடர்த்தியாய் வளர்ந்திருந்தன.
அச்செடியின் புதருக்கடியில் கரையான் புற்றுகள் தொகுப்பாயிருந்தன. கோயிலுக்குள்
நடுகல் ஒன்று இருந்தது. அதுதான் மலைக்கடவுள்... கன்னியம்மா... முருகன் கண்களை இறுக
மூடி கைகூப்பி கும்பிட்டான்.
“நீ என்ன தெனைக்கும் யென்ன பாத்துக்கிட்டு இருக்கியாமே.. ஆத்தா சொன்னிச்சி.
நான் ஆடு.. அப்பா... அம்மா... தங்கச்சிப்பாப்பா எல்லாரையும் பத்திரமா
பாத்துக்குவேன். உன்ன தெனைக்கும் வந்து கும்புடுறேன். யென்ன ராஜாவாக்கு” என வேண்டினான். கையில் வைத்திருந்த நரம்புப் பையைத்
திறந்து, அகல்விளக்கை எடுத்து எண்ணையை ஊற்றி தீபம்
ஏற்றினான். ஊதுவத்தியையும், சூடத்தையும் ஏற்றினான். தீபம் சுடர்விட்டு
எரிந்தது. மனநிறைவுடன் மலையடிவாரத்திற்குத் திரும்பிய முருகன் பாட்டியிடம்
ஓடிப்போய்...
“ஆத்தா...
ஆத்தா... நான் மலைக்கடவுள பாத்துட்டேன். விளக்கேத்தி வச்சி வேண்டிக்கிட்டேன்”
“வா
வந்து உக்காரு”
“ஆத்தா
ஓடுனது காலெல்லாம் வலிக்குது ஆத்தா”
பாட்டி, முருகனின் கால்களை இதமாகப் பிடித்துவிட்டாள். அவன், பாட்டியை
ஒரு கதை சொல்லச் சொன்னான். அவள் பல கதைகளைச் சொன்னாள். மூதாதையர்
வேட்டைக்கதை, காட்டெருது கதை, பெருந்தேன்
கூட்டுக்கதை, பஞ்சபூதங்கள் பற்றிய கதைகளெனச் சொல்லிக் கொண்டேயிருந்தாள். நாட்கள் ஓடின.... மாதங்கள் கடந்தன.
மழைக்காலம்
துவங்கியது. மலையடிவாரத்தின் நிலமெங்கிலும் பச்சைப் படர்ந்திருந்தன. வானம் ஒருநாள்
மழை பெய்வதும் மறுநாள் வெக்காளிப்பதுமாய் இருந்தது. ஆள் உயரப் புல்வெளியை செம்மறி ஆடுகள்
வேட்டையாடின. மந்தையில் செனை ஆடு ஒன்று குட்டிப்போடத் தவித்து, தன் கனத்த குரலை எழுப்பிக் கொண்டிருந்தது. “ஆத்தா...
ஆட்டுக்குட்டி தல மட்டும்தான் வெளில்ல வந்துருக்கு. பாதி ஒடம்பு வர்ல ஓடிவா...
ஆடுவேற அழுதுகிட்டே இருக்கு” என கத்திக்கொண்டே முருகன்
சித்திரக்குகைக்கு ஓடிப்போய் பாட்டியை அழைத்துவந்தான். பாட்டி வெகுவெகுவென
ஓடிவந்து குட்டியை வெளியில் எடுத்தாள். குட்டியின் உடலெங்கிலும் பிசுபிசுப்புடன் ரத்தம்
ஒட்டியிருந்தது. குட்டி கால்களை அசைத்துக்கொண்டே மெல்ல முனகியது. முருகன்
சிரித்தான்.
“ஆத்தா...
இது கெடாவா? பொட்டையா?”
“பொங்குட்டி...டா”
“அப்புடின்னா...
இது பேரு கன்னியம்மா...”
உன்னத பொழுதின்
துவக்கம் மழைத்தூரல் போட்டது. முருகன் வானை பார்த்தான். சிறு தூரலுக்கிடையே சில
அசைவுகள் தென்பட்டன. கண்களில் விழுந்த மழைத்தூரலைத் துடைத்துவிட்டு, மறுமுறை உற்றுபார்த்தான். இரு பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
முருகன் ஆச்சர்யத்துடன், புன்னகைத்துக் கொண்டான். தங்க
முட்டைகள் நினைவில் வந்ததும், மலைக்கடவுளை கும்பிட்டுக்
கொண்டே பருந்துகள் வட்டமடிக்கும் திசைநோக்கி ஓடினான். பறவைகள் கூடு வந்து சேர்ந்தன. ஒரு பாறையின் அடர்ந்த புதர்செடியின் வேர் புடைப்பில் கூடு இருந்தது.
முருகன், பருந்துகளுக்குத் தெரியாமல் சற்று தூரத்திலிருந்து
கூட்டைப் பார்த்தான். கூட்டில் இரு வெண்ணிற முட்டைகள் இருந்ததும், முருகனின் முகத்தில் ராஜகலை வந்தது.
“ஆத்தா
முட்ட இருக்கு. தங்கமா மாறப்போவுது. இனிமே நான் வுடமாட்டன். தங்க முட்டயை எடுத்து
நான் ராஜாவாயிடுவன்” என பரவசத்துடன் அடிவாரத்தை அடைந்தான்.
மழைபிடித்துக் கொண்டது. பாட்டியிடம் முட்டைகளைப் பார்த்ததாகச் சொல்லி, மகிழ்ச் சியைப் பரிமாறிக் கொண்டான். பிறந்த ஆட்டுக்குட்டியைக் கையில் தூக்கிக்கொண்டு, முடிவடையாத முட்டை பற்றிய உரையாடலோடு,
ஆடுகளுடன் வீடு திரும்பினான். அன்று பொழுது சாய்ந்து வானம்
இருட்டிக் கொண்டதும் மழை நின்றது.
அந்திப்பொழுது
சித்திரக்குகை. பாட்டி ஆடுகளைப் பார்த்துக் கொண்டாள். முருகன், பாறையின் மீது படுத்திருந்தான். கனப்பொழுதில் பறவை மலையெங்கும் தங்க
நிறத்தில் பிரகாசித்தது. முருகன் திடுதிடுவென எழுந்து மலைஉச்சியை நோக்கி ஓடினான். அவனைச்
சுற்றிலும் மஞ்சள் ஒளிவீசிக் கொண்டிருந்தது. பருந்தின் கூட்டை நெருங்கி தங்க முட்டைகளைக்
கையில் எடுத்ததும் ஜொலித்தது. கண்களை அகல விரித்து, இமைகளைச்
சிமிட்டி பரவசமடைந்தான்.
“தங்கமுட்ட
கெடச்சிடுச்சி... தங்க முட்ட கெடச்சிடுச்சி.. நான் ராஜாவாயிட்டேன் நான்
ராஜாவாயிட்டேன்” என பிதற்றினான்.
“முருகா...
என்னடா?”
“தங்க
முட்ட... தங்க முட்ட” என கைகளை குவித்துக்கொண்டே எழுந்து,
கண் திறந்ததும் பதறினான்.,
“ஆத்தா
தங்கமுட்ட எங்க. இப்போ மலையே ஜொலிச்சிதே.. எங்க தங்கமுட்ட”
“காலெந்து
வெயிலே இல்லாம, வானம் முக்காடு போட்ட மாதிரிதான இருக்கு.
எங்க ஜொலிக்குது.. டேய் தூக்கத்துல கனவு கண்டியா”
“இல்ல
ஆத்தா.. வெள்ள முட்ட தங்க முட்டையா மாறிடிச்சி” என சொல்லிக்கொண்டே
முருகன் மலை உச்சிக்கு ஓடினான். புதரிலிருந்து கீச் கீச் என்ற சத்தம் மட்டும்
கேட்டது. முருகன் மெல்ல பாறையின் சரிவில் இறங்கி கூண்டின் அருகில் சென்றான்.
பிறந்தமேனியில் பருந்தின் இரு குஞ்சுகள். முருகனுக்கு அதிசயமாக இருந்தது. குஞ்சுகளைத்
தொட்டுப் பார்த்தான். அதன் மெல்லிய தோல், மென்மையாய்
இருந்தது. சிறு வட்டக்கண்கள் அழகாய் இருந்தன. குஞ்சுகளிடம்
பேசிக் கொண்டேயிருந்ததில், வானம் இருட்டிக்கொண்டு, லேசாய் தூரல் போட்டது. முருகன் அருகிலிருந்த செடி கொடி இலைகளைச்
சேகரித்தான். பருந்தின் கூண்டுக்கு மேலே உள்ள ஒரு புதரில், குச்சிகளை
பந்தலாக அடுக்கி, அதன்மேல் இலைகளைப் பரப்பிவிட்டான். இப்போது
மழைநீர் துளிகூட உள்ளே நுழையாதபடி இருந்தது. முருகன் தங்கமுட்டையை மறந்து, அற்புதம் ஒன்று நிகழப்போவதை வெளி அறியாது ஆழ உணர்ந்திருந்தான். மழை
கனத்தது.
“இப்போ
உங்க அப்பா, அம்மாக்கிட்ட பத்திரமா இருங்க. நான் நாளைக்கிவந்து
பாத்துக்கிறன்” என்று குஞ்சுகளிடம் விடைபெற்று, அடிவாரத்திற்கு துள்ளியோடினான். போகும் வழியெல்லாம் தாய்ப் பருந்து கூடு வருகிறதா என பார்த்துக்கொண்டே சென்றான். குஞ்சு களைப்
பார்த்த ஆனந்தத்தில் ஆடுகளை மேய்ச்சலிலிருந்து வீட்டிற்கு திருப்பினான். மழைக்காலத்தின் கும்மிருட்டு. முருகனுக்கு சோறு செல்லாமல்,
குஞ்சுகளின் நினைவே ஓடியது. அதில் தங்க முட்டைகளையும், ராஜாவையும் அறவே மறந்து போனான்.
சூரியன்
உதித்தது. முருகன் ஆடுகளை அடைத்து வைத்திருக்கும் படலை திறந்து விட்டான். ஆடுகள்
மணியசைத்து ஒவ்வொன்றாய் மோதிக்கொண்டே வெளியேறின. பாட்டி தூக்கு வாளியில் பழையதையும், தண்ணீர் வாளியையும்
எடுத்துக்கொண்டு வாசல்படியைக் கடந்தார் முருகனின் அப்பா.
“அம்மா...
ஆட்ட பறவமல பக்கம் ஓட்டிட்டு போவாதீங்க. ஆனமலைக்கு ஓட்டிட்டு போ” என்றதும் முருகன் அப்பாவை நிமிர்ந்து பார்த்தான். பாட்டி
“யேன்...யா...”
“பறவைமலையில
மேற்கு பக்கமா மலைய ஒடைக்க போறாங்களாம். அதனால்
வெடிவைப்பாங்க, அதான்” என்று சொல்லிவிட்டு, முருகனின்
அப்பா வீட்டிற்குள் நுழைந்தார். அப்பா சொன்னதைக் கேட்டதும் முருகனுக்கு நெஞ்சு
படபடக்க ஆரம்பித்தது. ஒருகணம் கூட அங்கு
நிற்காமல் பறவைமலையை நோக்கி ஓட்டமெடுத்தான். பாட்டிக்கு அவன் எங்கு ஓடுகிறான்
என்பதை புரிந்து கொண்டாள்.
“முருகா
நில்லுடா அந்தப் பக்கம் போகாதடா” என சொல்லிக்கொண்டே அவனை
பின்தொடர்ந்தாள். ஆடுகள் நடப்பதேதும் தெரியாமல் நடந்தன. முருகன், மூச்சு இறைக்க ஓடி
பறவைமலையடிவாரத்தை நெருங்கினான். நெஞ்சு படபடத்தது.
கண்கள் கலங்கின. தூரத்தில் வெடிவெடிக்கும் சத்தத்துடன் மலைக்குன்றுகளில் புகைமண்டலமாய்
காட்சியளித்தது. புகையின் நடுவே, ஒன்றன்பின் ஒன்றாக பாறையின்
கற்கள் மேலே பறந்து விழுகின்றன. முருகன் கூடு இருக்குமிடத்தையே பார்த்துக்கொண்டு
ஓடினான்.
முருகன்
கூட்டையடைந்ததும், மூச்சிரைத்து நின்றான். அருகிலிருந்து மலைக்குன்றில்
திடீரென இடிபோல வெடிவெடித்தது. முருகனின் காதுகள் அடைத்து, தன்னை
சுற்றியும் நிசப்தமானது. மூச்சடைத்து கண்களை மெல்ல திறந்தான். பறவை மலையெங்கிலும்
புகை மண்டலமாய் பரவியிருந்தது. மலைக்குன்றுகளின் கீழே வெடித்துச்சிதறிய
பெரும்பாறைகளும் சிறுதுகள்களும் உருண்டோடிக் கொண்டிருந்தன. கூட்டில் ஒரு குஞ்சு
உடல் சிலிர்த்து நடுங்கிக் கொண்டிருந்தது. முருகன் துடிதுடித்துப் போனான்.
செய்வதறியாது புலம்பிக்கொண்டே மற்றொரு குஞ்சியைத் தேடினான்.
வெடித்துச்சிதறிய பாறைகளின் கற்களோடு, செடிகொடிகளும்
நசுங்கிக் கிடந்தன. முருகன் கதறிக்கொண்டே கற்கள் ஒவ்வொன்றாய் புரட்டிப்போட்டு
தேடினான். ஆத்திரத்தில் கத்திக்கொண்டே கற்களைக் கால்களால்
உதைத்து, அங்கும் இங்கும் தூக்கியெறிந்தான். சிறுகல் ஒன்றை
எடுக்கையில், விரல்களில் பிசுபிசுப்பை உணர்ந்ததும், பதறி கையை உதறினான். கீழே விழுந்த கல்லில் குஞ்சின் துண்டிக்கப்பட்ட தலை
மட்டும் ஒட்டியிருந்தது. கற்களில் குருதி படிந்திருந்தது. வெடித்து சிதறி வீச்சாய்
வந்த வேகத்தில் கூர் கல்லால் கிழிந்து வீசியெறியப்பட்ட குஞ்சின் உடல் புதரின் ஓர்
இடுக்கில் சிக்கியிருந்தது. அதன் கழுத்திலிருந்து குருதி கசிந்து பாறையில் ஒழுகிக்
கொண்டேயிருந்தது. முருகன், குஞ்சின் உடலை கையில் எடுத்து,
வானத்தைப் பார்த்து கதறிக் கதறி அழுதான்.
பறவைக்கூட்டங்கள் உரக்க கத்திக்கொண்டே திக்குமுக்காடி
வட்டமடித்தன. வானம் கருமேகங்களால் சூழ்ந்து இருண்டது. முருகன் கதறிக்கொண்டே
கையிலிருந்த குஞ்சின் உடலையும், தலையையும் எடுத்து மண்ணில்
புதைத்தான். சில கற்களை எடுத்து அதன்மீது வைத்து மூடினான். அக்கற்களில்
முன்னோர்கள் வரைந்த சித்திரங்களும் உருவங்களும் சிதைக்கப்பட்டிருந்தன. அருகிலுள்ள
மலைக்குன்றுகளில் மரங்களெல்லாம் சக்கை சக்கையாய் உருக்குலைந்திருந்தன.
மலைச்சரிவில் தொடர்ந்து
வெடி வெடித்தது. பாறைக்கற்கள் இவன் பக்கமாய் வந்து விழுந்தன. குஞ்சை புதைத்த
இடத்தில் மழைத்துளிகள் விழுந்தன. சிதைந்த கூட்டிலிருந்த குஞ்சியை தூக்கிக்கொண்டு, அடிவாரத்திற்கு திரும்பினான். முருகனைச் சுற்றியும் குருதியின் வாடையே
வீசியது. நடக்கும் வழிநெடுகிலும் குருதியில் கால்களை வைப்பதாய் உணர்ந்தான். அருவி நீரெல்லாம்
குருதியாய் ஓடிக்கொண்டிருந்தது. வெடிவெடித்த மலைக்குன்றை பார்த்தான். ஆத்திரம்
வந்து முட்டியது. மலையடிவாரத்தின் நிலப்பரப்பில் பாட்டி நிலை தடுமாறி நின்றாள்.
முருகன் பாட்டியைப் பார்த்ததும் கண்கலங்கிக் கொண்டே அருகில் ஓடினான். கையிலிருந்த குஞ்சியைப் பாட்டியிடம் கொடுத்தான்.
“பாரு ஆத்தா... கையெல்லாம் ரத்தம்... ஆத்தா... ஒரு குஞ்சு செத்துப்போச்சி ஆத்தா... பறவைங்கல்லாம் வானத்துல பறந்துபோச்சி... அங்க
ஒரு பறவ கூட இல்ல ஆத்தா... செடிகொடி மரங்க எல்லாம் உலுந்து கெடக்கு. வரைச்ச சித்திரகல்லு
எல்லாம் ஒடஞ்சிப்போச்சி. யேன்... ஆத்தா இப்புடி பண்றாங்க. மலைக்கடவுள் எங்க
ஆத்தா... தங்கச்சிப் பாப்பாகிட்ட என்ன ஆத்தா சொல்றது. நான் ராஜாவே இல்ல ஆத்தா”
என அழுதுகொண்டே ஆத்திரத்தில் பாட்டியை அடித்துக் கொண்டேயிருந்தான்.
அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பாட்டியின் நெஞ்சைத் துளைத்தது. மௌனத்துடன்
பாட்டியின் கண்களிலிருந்து நீர் கசிந்து கொண்டேயிருந்தது. முடியாபாரத்துடன்
முருகனை மார்போடு அணைத்தாள். முருகன் தேம்பி அழுதுகொண்டே பாட்டியைப் படபடவென அடித்தான். பாட்டியின்
கையிலிருந்த குஞ்சு நடுக்கத்தில்
உறைந்து கண்களில் இருள் சூழ்ந்தன. மழை வலுத்ததும், கருமேகங்கள்
பொழுதை விழுங்கத் தொடங்கின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக