வியாழன், 26 செப்டம்பர், 2013

நிலை

சீ. வெங்கடேசன், ஓவியர், சென்னை.

 எழுதுவதனால் எனக்கு எழுத்து வடிவம் அறிமுகமாகியிருக்கின்றது. இதற்கான வாய்ப்பு எனக்கு பள்ளியின் மூலம் அமைந்தது. சிலருக்குத் தனி நபர் மூலமாகவும் கிடைத்திருக்கும். வாழ்க்கை எனும் திசையை நாம் உற்றுநோக்கி உள்வாங்குகையில் நம்முள் புவிஈர்ப்பு விசையை இழந்த தன்மை உள்ள வெற்றிடம் உருவாகின்றது. சிறு வயதில் வாழ்க்கை எனும் ஓசையின் சாரம் அறியாமல் விளையாட்டாக விரும்பிப் பயன்படுத் துவதுண்டு. காலப்போக்கில் நம் பல்வேறு வகையான வேலைகளுக்கிடையில், இன்றும் சிறுவர்கள் விளையாடுவதை நாம் கவனிக்கையில், நம்மை ஒப்பிட்டுப் பார்க்கின்றோம். இன்று விளையாடும் நிலையில் இல்லாமல், விளையாட்டின் அனுபவத்துடன் வளர்ந்துள்ளோம்.
அவன் வாழ்க்கையை வெறுத்து விடுவான் தோல்வியுற்றால். இவன் வெற்றி பெற்றால் அவன் வாழ்க்கையையே வெறுத்துவிடுவான். இப்படி பல்வேறு வகையில் நம்முடன் இருப்பவர்களிடம் வாழ்க்கை எனும் ஓசையை விரும்பி விளையாட்டாகவும், வெறுப்புடனும் பயன்படுத்துவதுண்டு.  இன்று அரசுத் துறையில், தனியார் துறையில், சுயதொழிலில் தொடரும் வேலைகள் ஒருபுறம். எந்தத் துறையில் இருந்தும் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள முடியாது. அன்றாடம் நாம் சந்திக்கும் பொருட்களில், அசையும், அசையா, நம் போன்ற அனைத்தின் அனைத்தும் அனுபவமாக நம் அனைவரிடமும் வந்திணையும் இயல்பு அரசு நிர்ணயிக்க இயலா படிப்பு.நம்முடன் இருப்பவர்கள் அவர்களுக்கும், அவர்கள் நமக்கும் நன்மை நடைபெறும் என செய்யும் செயல்கள் அனைத்தும் நம்பிக்கை சார்ந்தது. இந்த நம்பிக்கை பலருக்கு ஏற்படுத்திய மகிழ்வு நமக்கும் நடைபெறும் என்பதில் இருந்து நடைபெறுகின்றது. நம் இருத்தல் காலங்களில் நம் அனைவருக்குமான பொதுவான மாற்றங்களில் இன்ப துன்பத்தை ஒட்டிய அனைத்து குணங்களும் அனைவருக்கும் உண்டு.
இங்கு ஒருவருக்கு மரணம் நிச்சயம். அவர் போன்ற உயிரை உருவாக்குவதென்பது நிச்சயமல்ல. நான் மரணமடைவேன். என்னுடன் இருப்பவர்கள் மரணமடைவார்கள். என் முன்னோர்கள் மரணமடைந்துள்ளனர். சிறு வயதில் அநேகருக்கும் ஒரு பயம் கலந்த, ஆசை அனுபவம் உருவாகியிருக்கும். அவரவர் தன் முன் உள்ளவர்களின் மரணம் கண்ட காலம் முதல் மரணத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று. ஆனால், மரணத்தில் இருந்து எப்படி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். மரணம் இயல்பு என அறிந்து அவர் அவர் தன் சிறு வயது ஆசை அனுபவத்தில் இருந்து தப்பி தன்னை மரணத்தில் புகுத்திக் கொள்கின்றனர். பிறப்பு, இருப்பு, இறப்பு என மாற்றம் கொள்ளும் நிகழ்வான ஓசையை நம்முடன் நம்மைச் சுற்றி அனைத்தும் அனைத்திற்கும் வழங்கி வருகின்றது. இவ்வகையான இயல்பு மாற்ற நிலையில் இருந்து நம் இருத்தலை கவனிக் கின்றோம். பத்திரப்படுத்துகின்றோம். இந்த இயல்பு மாற்ற நிலையை ஒப்புக்கொள்ளும் பொழுது ஆம் நம்மை ஒப்புவிக்கின்றோம். ஒப்புவித்தல் தன்னுடன் நிகழும் உரையாடல். உரையாடல் தன் பல்வேறுபட்ட குணங்களின் முகமாற்ற இயல்புடன் பயணப்படும் நிகழ்வு. பயணம் எங்கிருந்து யாரிடமிருந்து இவ்வார்த்தையின்  அர்த்தம் எது.




என்னை என்னுடன் பொருத்திக் கொள்ளும் பொழுது, தன்னைத் தன்னுடன் பொருத்திக் கொள்ளும் விருப்பம் சாத்தியமாகின்றது.
இறந்த காலம், இருப்பின் காலம், வருங்காலம் இவை எங்கே எனத் தனக்குள் கேட்கும்பொழுது, அத்தனைக் காலமும் மிக மர்ம இன்ப கொடிய காலத்தின் வெளியாகும்
இவ்வெளி அரூபம். அருபம் கலை. கலை என என் உள் நிகழும் மாற்றத்தின் மிகச் சுருக்கம். இங்கு என் கரங்களில் ஒழுகும் இரத்தங்கள் யாரால், எதற்காக காலத்தின் உள் இணையத் துடிக்கும் மனோநிலை. காலம் சார்ந்து யாருடனாக. ஆண், பெண் சேர்க்கையில் உருவாகும் தன் போன்ற உற்பத்தி, விருப்பம் அழிவையும் விரும்பும்.
ள்வாங்கல் வரலாறு, உளவியல் வெளிப்பாடு, வாழ்வித்தலில் சரி தவறு தொடரும் இன்ப, துன்பம், எது, எங்கே, யாரிடம். நீ என உன்னை உள் கொண்டேன். உன் மூலமாக ஏன்? என் அனுபவத்தை நீ காட்சியாக ஒளி ஒலி என என்னிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது, தாய், தந்தை, ஆசிரியர், கடவுள் என யாராக யாரை யாரிடம் இருந்து காண்பது; பாவிப்பு இல்லை; மதிப்பீடு. நிச்சய அனுபவம் பாவிப்பைத் தவிர்க்கும். பாவிப்பவனின் வாழ்க்கையை உணரும். ஏன்? என் அனுபவம் எனக்கு என்ற இருமாப்பு  இல்லை. அவனுக்கும் உண்டு என்ற ஓர் அசைவு அவன் மூலம் கிடைத்துவிட்டது. என் அனுபவத்தில் சிறந்தது என நான் நினைக்கும் ஒன்றில், அவன் வேறு ஒன்றைக் காண்பிக்கும் பொழுது, என் இருப்பு என நான் நம்பியது தடுமாறுகின்றது. அவன் என் முன்னோர்களில் ஒருவன். எனக்கு ஒன்றை என் அனுபவத்தில் கவனப்படுத்து கின்றான் ஒரு மருத்துவ கடவுள் போல்.

தாய் தந்தை கடவுள்
கடவுள் என் முன்னோர்கள்
தாய் தந்தை உறவுகள் மீறி
அனுபவ புரிதல் வாழும் காலத்தில்
வாழும் காலம் இறந்த காலத்தில்
வாழும் காலம்
வாழ்க்கை அனைத்துடன்
அனைத்தின் அழிவு
உருவாதல்
இருத்தலில் வளர்தலில்
சுகம்
எனக் கடவுளைக் கடவுளாக்கும் வாழும் காலத்துடனான இறந்த காலம் கலையின் மகிழ்வு. கலை என்ற சொல் என்னுடையதில்லை. எனக்கு அறிமுகமான குறியீடு, செயல், வெப்பம், உக்ரம், தகிப்பு, விலகல், ஆழ்நிலை, அமைதி, இயக்கம், உருவாக்கம், ஒன்றில் இருந்து மற்றும் ஒன்று.
ஒருவர் ஓசையை விரும்புகின்றார். ஒருவர் ஒளியை விரும்புகின்றார். ஒருவர் உடல் மொழியை விரும்புகின்றார். ஒருவரின் வெளிப்பாட்டு விருப்பம் அவன் விரும்பிய துறை சார்ந்ததாக அமைகின்றது. நான் ஒளியை விரும்பிவிட்டேன். தாய்மொழி நிலம் சார்ந்ததாகவும், மூலமொழி ஒளி ஒலி சார்ந்ததாகவும் அமைகின்றது. ஒளி ஓசையையும் ஓசை ஒளியையும் தன்னுள் கொண்டுள்ளது. தரிசனத்தில் காணும் பொருள் மனிதனின் பார்வையில் உண்டு, இல்லை. இம்முரண்பாடு பார்க்கும் பொருளை ஊடுருவிச் செல்லும் விருப்பத்தில் நிகழ்கின்றது. மனிதன் தன்னில் இருந்து தன்னைப் பல்வேறாகப் பிரித்து, பிரித்த அத்தனையுடன் இணைத்து பிரித்துப் பார்க்கும் சுழல்வெளி ஊடுருவலில் உள்ளது. உறவின் சுகம் வேண்டி மீண்டும் மீண்டும் தன்னை தானே ஊடுருவலுக்குள் பயணப் படுத்திக் கொள்ளும் நிகழ்வு அனைத்தும் தன் போன்று என்பதில் இருந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இருத்தலில் உள்ள ஒன்று இல்லாமல் போனதன் மர்ம நிகழ்வு யாரிடம் இல்லை. இந்த இயல்பு நிகழ்கின்றது. யாரும் அறியாமல் யாரும் விரும்பாமல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக