வியாழன், 26 செப்டம்பர், 2013

எழுத்தைப் போலவே தனிப் படைப்பு


நடேஷ், ஓவியர், சென்னை (2005,நேர்காணல்: சி.முத்துகந்தன்).

ங்களது ஆரம்பகால இதழ் ஓவியங்கள்... ஓவியம் குறித்த தங்கள் பார்வை?
சென்னைக் கவின் கலைக் கல்லூரியில் 1986இல் படிப்பினை முடித்து வெளியே வருகிறேன். அப்பொழுது இனிஎன்ற பத்திரிகை நடந்து கொண்டிருந்தது. க்ரியா எஸ். இராமகிருஷ்ணன், எஸ்.வி. ராஜதுரை இன்னும் சில நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்த பத்திரிகை இனி”. இதில் தான் அதிகமாகப் படங்களைப் போட ஆரம்பித்தேன். அதற்கு முன் யாத்ராஎன்கிற பத்திரிகை வந்து கொண்டிருந்தது. அதில் முகப்பு  ஓவியம் போட்டேன். அப்போது என் ஓவியத்தை நானே பிரிண்ட் பண்ணுவேன். அதற்கடுத்த ஏழெட்டு ஆண்டுகள் வரையாமலேயே இருந்தேன். பிறகு 1995இல் நிறைய சிறு பத்திரிகைகளுக்கும் காலச்சுவடு, அட்சரம் போன்றவற்றிற்கும் படம் வரைந்தேன். என்னைப் பொறுத்தவரையில் எழுத்துக்குப் படம் போடுவது என்பதே ஒவ்வாத ஒரு விசயம். எழுத்து உண்டாவதற்கு முன் கோடு (ஓவியம்) உண்டானது. அதாவது எழுதப்பட்ட விசயத்திற்குப் படம் போட்டுக் காட்டுவது என் வேலையல்ல என்று தீர்மானமாக நினைக்கிறேன். இப்படி சொல்ல வேண்டுமென்றால் என் படங்கள் எழுத்துக்குத் துணைபோகாது எழுத்தைப் போலவே தனிப் படைப்பாக இருக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்.
கூத்துப்பட்டறையில், பத்திரிக்கையில் ஓவியம்...?
அப்பா ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறைக்கு ஆரம்ப காலத்தில் ஆதிமூலம் போன்றவர்கள் படம் போட்டார்கள். 1983லிருந்து 1995 வரைக்குமான மொத்தப் படங்களையும் நான்தான் போட்டேன். அதற்கடுத்து படம் போடவில்லை.
நாடகம் என்னவென்று எனக்குத் தெரியும். என்ன நாடகம், அதில் என்ன பேசுகிறார்கள், எப்படி செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம் தெரிந்திருந்தது. ஆக அந்த நாடகத்தின் கருவை எடுத்துக்கொண்டு அதற்குத் தகுந்த படத்தைப் போடுவேன். இது நாடக நண்பர்கள் எப்பொழுதும் குழுவாக இருப்பதனால் சாத்தியமாகும். அதாவது நாடகத்திற்குப் படம் போடுவதென்பது ஒரு கதையையோ, கவிதையையோ படித்துவிட்டு போடுவதுபோல் அல்ல. இங்கு என்னுடைய இஷ்டம்தான். யாரும் கேள்வி கேட்பதில்லை. அதேபோலத்தான் இதிலும் (பத்திரிகை) யாரும் கேள்வி கேட்பதில்லை. நான் போட்டுக் கொடுப்பதை அப்படியே போட்டுவிடுவார்கள்.
தமிழ்ச்சூழலில் நவீன ஓவியத்தை ஆரம்பித்தவர்கள் தங்களுக்கு முந்தைய தலைமுறைதான் என்பது உண்மையா?
இங்கே தமிழ்நாட்டில் நவீன ஓவியத்தை இவர்கள் (தற்போதிருக்கும் மூத்த ஓவியர்கள்) தான் ஆரம்பித்தார்கள். அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை. அதாவது ஒரு பெரிய படைப்பாளி தன் திறமையை வெளியே கொண்டுவருவதற்கான மொழியையே உடைத்துவிட்டு, வெறுமனே தான் சொல்லவந்த விசயத்தை மட்டுமே சொல்ல வேண்டும் என்ற கருத்து பின்நவீனத்துவத்தில் (வெஸ்டனில்) நடந்திருக்கிறது.


இதில் தன்னுடைய மொழியை (கிராப்ட்) உடைப்பது என்பது, அழகான படம் மோசமான படம் என்றிருக்கும் படத்தில் பார்க்கவே பிடிக்காத மோசமான படத்தைக் கொண்டுவந்து, அதில் சில விசயங்களைச் செய்வது என்கிற போக்கையே இவர்கள் கொண்டுவந்து விடுகிறார்கள். இதனை யார் செய்தார்கள் என்றால், பிரமாதமாக படம் போடுபவர்களே மோசமான படத்தையும் போட்டார்கள். இதனால் இவர்களுக்குப் பின்வந்தவர்கள் என்ன செய்தார்கள் இந்தப் போக்கை அப்படியே காப்பியடித்து நேரடியாகவே மோசமான படத்தைப் போட ஆரம்பித்தார்கள். இங்குதான் பிரச்சினையே! இதற்கு வியாபாரமும் ஒரு காரணம். இந்தியா போன்ற நாடுகளில் ஆங்கிலம் பேசுகிறவர்களே கோலோச்சி இருக்கிறார்கள். தமிழ் பேசுகிறவர்கள் பெரிய படைப் பாளியாக இருந்தால்கூட ஒளிவிட்டு வாழாமல் கட்டுப்பட்டுத்தான் இருக்கிறார்கள். அதாவது நன்றாக ஆங்கிலம் பேசத் தெரிந்தவர்கள் தவறான படங்களை உழைப்பே இல்லாமல் திருட்டுத்தனம் பண்ணி, சும்மா பொம்மைகளைச் செய்து அதில் வண்ணத்தை ஒழுகவிட்டுச்செய்து கொண்டிருக்கிறார்கள். ஆக ஒரு செயலினைச் செய்வதற்கான அவசியமே இல்லாமல் ஏற்கனவே செய்ததைக் காப்பியடித்து செய்வது என்பதனைத் தடுக்கவே முடியாது. இதனை எதுவும் செய்யவும் முடியவில்லை.
ஓவியம் குறித்த பார்வை கல்லூரியில் படிக்கும்பொழுது எப்படியிருந்தது? இப்பொழுது எப்படியிருப்பதாக உணருகிறீர்கள்?
எப்பொழுதும் உழைக்காதவர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி உழைக்கிறவர்களே கொஞ்சம் பேர்தான். சில வருடங்களில் அதாவது என்னுடைய செட்டில் 40 பேரில் என்னைப் போன்று ஒரு சிலர்தான் வந்தார்கள். அடுத்து பாண்டியன் என்பவருடைய செட்டில் ஐந்தாறுபேர் தேறுவார்கள். மைக்கேல், மரியா, எபி, சேகர் என்று இன்னும் சிலரும், அதாவது எனக்கு முந்தின செட்டிலும் போஸ், மருதநாயகம், பிரித்தா, அசோக், லலிதா, பிம்பி கிருஷ்ணன் போன்றோரும் இருந்தார்கள். இப்பொழுதும் ஒரு சிலர் இருக்கிறார்கள். ஆனால் நன்றாகப் படம் போடத் தெரிந்தவர்கள் குறைவுதான். அப்படிப் படம் போடத் தெரிந்தாலும் போட்டுக் காட்டுவதில்லை. அது ஒரு சோம்பேறித் தனத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. இப்படியிருக்க நாலைந்து விசயங்களைத் தெரிந்த மாணவர்களும் நேரடியாக சினிமாவிற்குள் சென்று விடுகிறார்கள். நான் முக்கியமான ஓவியர். உலகத்திற்கு ஒளிவீசக் கூடியவன் என்று காத்திராமல் (இதற்கு 50 ஆண்டுகளும் ஆகலாம்) நேரடியாக சினிமாவிற்குப் போய்விடுகிறார்கள். இதனைக் குறைவாகச் சொல்லவும் முடியவில்லை. ஏனென்றால் ஓவியத்தைப் பொருத்தளவில் வளமையான சூழ்நிலை இங்கே இல்லை. கேலரிகள் கூட தொழில் முறையாகக் கமிசன் ஏஜெண்டு களாகத்தான் செயல்படுகிறார்கள். அதாவது இங்கு நன்றாக விற்கக்கூடிய இந்தியா டுடே போன்ற பத்திரிகைகளில் பேசப்படக்கூடிய ஒரு பெரிய ஓவியனுடைய ஓவியத்தை வைத்தால்தான் உடனே விற்றுப்போகிறது. இது சேர் மார்க்கெட்டாக மாறிவிட்டது. ஆக இங்கு சுலபமாக பணம் வருவதைத்தான் பார்ப்பார்கள். யாரும் உழைப்பதற்கும், கஷ்டப்படுவதற்கும் காத்திருப்பதில்லை.
முறையாக ஓவியம் படித்துப் படம் போடுவதற்கும், படிக்காமலே படம் போடுவதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?
அதிக வேறுபாடு ஒன்றும் கிடையாது. ஓவியம் எப்படியிருந்தாலும் கதை சொல்வதற்கான ஒரு பொம்மையை (உருவத்தை) உருவாக்கிக் கதை சொல்கிறது. ஏனென்றால் கதைக்கான படம்தானே போடப்படுகிறது. மருது போன்ற ஆட்கள் போடும் படத்தில் வேறுவிதமான நவீன ஓவியத்தினுடைய கூறுகளெல்லாம் வந்துவிடுகிறது. மணியம் செல்வம், ஜெயராஜ் போன்றவர்களுடைய படங்கள் அழகாகவும், பெண்கள் என்றால் வாலிப்பான மக்கள் விரும்பும்படியான படங்களாகவும் இருக்கும். இரண்டிற்கும் என்ன வித்தியாசமென்றால் மருது போன்றோரின் படங்களில் அளவுகள் சரியாக இருக்கும். அதில் ஒரு இலக்கணம் இருக்கும். அதாவது வரைவதற்கான ஞானம் இருக்கும். ஆனால், முறையாக படிக்காத ஓவியர்களின் படங்களில் சில குறைகள் இருக்கும். மற்றபடி இவர்கள் போடுவதை மோசமானது என்று சொல்ல முடியாது.
பொதுவாக  ஓவிய விமர்சகர்களே இல்லை என்பது உண்மையா?
ஓவிய விமர்சனமே இல்லை என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். விமர்சனம் செய்யத் தெரிந்தவர்கள் ஒருத்தர் இரண்டு பேர்களே இருக்கிறார்கள். இது போதாது. விமர்சகர்களின் ஆழம் என்ன? அவர்களுக்கு விமர்சனம் பண்ணத் தெரியுமா? அவர்கள் குதிரையின் மேல் செல்பவர்களாக இருக்கிறார்களா? என்றெல்லாம் பார்க்க வேண்டியிருக்கிறது.
இங்கு விமர்சனப் பார்வை வயது வித்தியாசத்தை நோக்கியதாகவும் இருக்கிறது. மூத்த ஓவியர்களை மனதில் கொண்டு அவர்களிடம்தான் பேசுவோம் என்ற நிலையும் உண்டு. அதாவது மூப்பு, இளசு என்பது கிடையாது. இதில் ஞானம், அறிவு மற்றும் எவ்வளவு பார்க்கிறார்கள், அவர்களின் தீட்சண்யம் என்ன, ஒரு விசயத்தை எப்படி உடனே மூளைக்குள் ஏற்றிக் கொள்கிறார்கள், அதனை எப்படி வேகமாக வெளிக் கொணருகிறார்கள், அப்படி கொடுக்கிற விசயம் பார்ப்பவர்களுக்கு எத்தகைய வீச்சினைக் கொடுக்கிறது என்பது தானே தவிர, இதில் வயசானவன், சின்னவன் என்பதும் பெரியவர்களின் ஓவியம் பிரமாதம் என்பதும் சிறியவர்களது ஓவியம் ஒன்றுமே இல்லை என்பதும் விமர்சகர்களின் நிலையாக இருக்கக் கூடாது. ஆக விமர்சகர்கள் இளம் தலைமுறை ஓவியர்களிடமும் பேச வேண்டும்; அப்படி பேசினதைப் பிரபலமான பத்திரிகைகளில் எழுத வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் சதானந்தமேனன் நல்ல கலை விமர்சகர். கலை பற்றின அதிகமான விமர்சனக் கட்டுரைகளை எழுதவில்லை என்றாலும், தென்னிந்தியாவில் நல்ல விமர்சகர் என்று இவரைச் சொல்லலாம்.
சிலருக்குக் கோடு, சிலருக்கு வண்ணம்... தங்களுக்கு?
அப்படிப் பார்த்தால் எனக்குக் கோடுகள்தான். வண்ணம் ரெண்டாம் பட்சம்தான். ஆனாலும் நான் நல்ல கலரிஸ்ட். அதாவது ஆதிமூலம் ஒரு நல்ல கலரிஸ்ட்; நன்றாக கலர் வைப்பார். அவர் மூலமாகத்தானே நானும் வளர்ந்தேன். அவர்தான் எனக்குக் குரு. அதனால் அவர் நன்றாக வண்ணத்தைக் கையாளும்பொழுது நானும் நன்றாகக் கையாண்டிருக் கிறேன். ஆனால், என்னை யாரும் பெயிண்டர் என்று சொல்வதில்லை. மிக நன்றாக டிராயிங் பண்ணுவான். கோடுகள் நன்றாக இருக்கும் என்பார்கள்.
தமிழ்ச் சூழலில் தொடர்ந்து இயங்கக்கூடியவர்கள் (கலைஞர்கள்)?
இளம் கலைஞர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இங்கு வருமானம் இருப்பதனால் தொடர்ந்து இயங்கியே ஆகவேண்டும். ஆர்.பி. பாஸ்கரன், அல்பான்சோ, விஸ்வம், ஆதிமூலம் என்று பெரிய அட்டவணையே போடலாம். ஓவியர் சந்ரு எப்பொழுதும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறார். இளம் தலைமுறையில் டக்ளஸ், மரியா, பெரிய பாலா, சின்ன பாலா, அச்சுதன் கூடலூர் மற்றும் சோழமண்டலக் குடியிருப்பில் உள்ளவர்கள் கைலேஷ், திலேஷ், ஜெயராஜ் என்று நிறைய பேர் இருக்கிறார்கள்.
கவிதைக்குப் போட வேண்டிய படம் எப்படியிருக்க வேண்டும்?
என்னைக் கேட்டால் படம் வேண்டியதில்லை என்பேன். கவிதைக்கும், கதைக்கும் படம் எதற்கு? அதன் எழுத்துக்களிலேயே படம் இருக்கிறதே. பத்திரிகை அதனுடைய விருப்பத்திற்காக படம் போட்டு கதை சொல்லு என்கிறது. இதனை நான் எப்படி ஒப்புக்கொள்ள முடியும். அதாவது என்னைப் பொறுத்தவரையில் எழுத்துக்குப் படம் அவசியமில்லை. ஆனால் வச... வசவென்று வெறும் வார்த்தைகளாக இருப்பதனால் படம் தேவைப்படுகிறது என்கிற இடத்தில் அங்கு எந்தப் படத்தை வேண்டுமானாலும் போடலாம். சம்பந்தப்பட்ட படமும் போடலாம். அதாவது யாரும் பெரிய கடவுள் கிடையாது. எ-ழுத்தாளர்கள் ஒரு ஈகோவில் செயல்படுகிறார்கள் என்றால், ஓவியர்களுக்கும் அப்படியான ஈகோ இருக்கிறது. அவர்களது மீடியம் பெரியது என்றால் எங்களுடைய மீடியமும் பெரியதுதான். தமிழ் எழுத்தாளர்களுக்கு அவர்களின் புத்தகங்களில் எப்படி படம் போட வேண்டும் எந்த அளவில் போட வேண்டும் என்கிற எந்தவிதமான படிப்பினையும் இல்லை. இங்குப் பத்திரிகைக்கு ஒருபக்க படத்தைக் கொடுத்தால் அதனை மிகவும் சிறியதாக்கி ஸ்டேம்பு  சைசில் போடுகிறார்கள். அப்பொழுதெல்லாம் கோபம் அதிகமாக வரும். பத்திரிகைகளுடைய முக்கியமான நேரம், எழுத்தைப் பிரசுரம் பண்ணுவதில்தான் இருக்கிறது. மீதமிருக்கும் நேரத்தில் எங்குக் கோடு போடலாம், எந்த இடம் காலியாக இருக்கிறது அங்குப் படம் போடலாம் என்கிற நிலைமைக்குத் தள்ளப்படுகிறது.
ஓவியர்களுக்கான அங்கீகாரம்?
ஓவியர்களுக்கான அங்கீகாரம் குறைவுதான். அதாவது தீவிரமாக செயல்படு கிறவர்கள் இரண்டு மூன்று பேர்கள்தான். மீதம் இருப்பவர்களிடம் படம் கேட்டால் உடனே போட்டுத்தந்து விடுவார்கள். அப்படி போடுவது ஆழமான படமாக இருக்காது. ஓவியம் சொல்லவந்ததை தெளிவாகச் சொல்ல வேண்டும் என்கிற வலு அதில் இருக்க வேண்டும்... எப்படி ஒரு எழுத்தாளன் தொடர்ந்து உட்கார்ந்து ஒரு கதையை எழுத எவ்வளவு நாளை எடுத்துக்கொள்கிறான். ஆனால் இவர்கள் இந்தக் கோடு போடுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்திருப்பார்கள். சும்மாசரக் சுருக், அப்படி இப்படி என்று படம் போடலாமா? அப்படி போட்டுவிட்டு எந்தமாதிரியான அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது-. ஓவியன் வேலை செய்தால்தானே அவனுக்கான அங்கீகாரம் கிடைக்கும். அப்படி வேலை செய்த ஆதிமூலம், மருது போன்றோருக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
உரக்கப் பேசப்படும் பெண்ணியம், தலித்தியம் மௌன மொழியான ஓவியத்தில் எப்படி பேசப்படுகிறது?
அப்படியெல்லாம் பேசினதே இல்லை. அதற்கான திராணியே இல்லை. இங்குப் பெரும்பாலோர் நன்றாகக் குடிப்பார்கள்; அரட்டை அடிப்பார்கள். சினிமாவைப் பற்றி பேசி, ஒருத்தருக்கொருத்தர் சண்டைப் போடுவார்கள் அவ்வளவுதான். இந்தமாதிரியான தெளிவான சித்தாந்தங்களைப் பேசுகிற ஓவியர்கள் மிகக்குறைவு. இங்கு எல்லாமும் போகம்தான். போகத்துலேயே மாட்டிக்கொண்டு போகிறது.
இப்பொழுது ஓவியர்கள் கம்ப்யூட்டரில் இறங்கிவிட்டார்களே?
அதாவது கலர் டியுப், பிரஷ் இரண்டும் இயற்கையில் இல்லையே. தனியாகத்தானே எடுத்திருக்கிறோம். அதுபோலவே கம்ப்யூட்டரும் ஒரு ஆயுதம்தான். கம்ப்யூட்டரில் முடியவில்லை என்றால் கையில்தான் பண்ண வேண்டியிருக்கிறது. மொத்தமாக ஒரு வண்ணத்தைப் பூசுதல் என்பது கம்ப்யூட்டரில் சாத்தியமாகாது.                 
 
குறிப்பு: ‘தமிழ் இதழ்களில் நவீன ஓவிய மரபு’ எனும் ஆய்விற்காக எடுக்கப்பட்ட நேர்காணல்கள் ‘காகிதத்தில் சிறு கீறல்’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளது. (காவ்யா பதிப்பகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக