வியாழன், 26 செப்டம்பர், 2013

குடி, சாதி- சில குறிப்புகள்


கட்டுரை ஆசிரியர்: செயபிரகாசு நாராயணன், வழக்கறிஞர், சென்னை



நமது புலன்கள் வழியே உள்ளதை உள்ளபடி நாம் உணர்கிறோமா அல்லது உள்ளது பற்றி நமக்கு கொடுக்கப்பட்ட காட்சிகளிலிருந்து நாம் நமது மெய்நிலைகளை உணர்கிறோமா, நம் சார்பு நிலையைப் பொறுத்து கூட்டியோ குறைத்தோ புரிந்து கொள்கிறோமா? நம்முடைய மெய்நிலைமைக்கும் நம் நினைப்புக்கும் இடையே இடைவெளி இருக்கிறதா? இருக்கிறது. நாம் காணும் புறநிலையின் கடந்த கால வடிவங்களையும் நிகழ்கால வடிவங்களையும் எதிர்கால வாய்ப்புகளையும் பார்க்காமல் அவற்றை தட்டையாகப் பார்ப்பதும் நாம் காணும்பொருளின் பல்வேறு கூறுகளைப் பார்க்காமல் ஒற்றையாகப் பார்ப்பதும் நிலைமையைப் புரிந்து கொள்ளவோ அவற்றை மாற்றியமைக்கவோ பயன்படாது. உள்ளதை உள்ளபடி பார்ப்பதும் அவற்றின் இயக்கத்தையும் முரண்பாட்டையும்பார்ப்பதன் வாயிலாகவே நிலைமையைப்  புரிந்து கொள்ளவும் அதை மாற்றியமைக்கவும் முடியும். இக்கண்ணோட்டத்தில் குடி, சாதி பற்றி புரிந்து கொள்வதற்கான சில குறிப்புகள்:
நாம் நம் வாழ்நிலையில் பல்வேறு அடையாளங்களைக் கொண்டவர்களாக உள்ளோம். குடி அடையாளம், சாதி அடையாளம், பாலின அடையாளம், இன அடையாளம், தேசிய அடையாளம், வர்க்கம் சார்ந்த பண்புகள் எனப் பல அடையாளங்களைப் பண்புகளை நம்முடைய விருப்பங்களுக்கு அப்பாற்பட்டு நம்முடைய வரலாற்றுச்சூழல் நமக்கு வழங்கி ள்ளது. சம காலத்தில் ஈழ இனக்கொலை, முல்லைப் பெரியாறு, கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என வரும்பொழுது தமிழின அடையாளம் முன்னுக்கு வந்தது. பரமக்குடி, நத்தம் ஒடுக்குமுறைகள் முன்னுக்கு வரும்பொழுது குடி, சாதி அடையாளம் முன்னுக்கு வந்தது. இப்போது மீண்டும் ஈழச்சிக்கலுக்கான தமிழின அடையாளம் முன்னுக்கு வந்திருக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது ஒரு அடையாளம் மட்டுமே நம்மிடையே செயல்படவில்லை என்று தெரிகிறது. ஒன்று முன்னுக்கு வந்தால் இன்னொரு சிக்கல் பின்தள்ளப்படுகிறது.

குடி, சாதி தமிழகம் தழுவிய அளவில் சில பொதுப்பண்புகளையும் சில வேறுபட்ட பண்புகளையும்   கொண்டதாக    உள்ளது.   பிறப்பு    அடிப்படையிலான   ஏற்றத்தாழ்வு,  அகமண திருமண முறை (உலகின் பல்வேறு குடிகளிடம் இருந்தது போல்) என்பது அதன் முதன்மையான பொதுப்பண்பாகும். இவற்றின் வெளிப்பாடுகள் இடம் சார்ந்து உற்பத்தி முறை சார்ந்து வேறுபடுகின்றன. ஆற்று நீர்ப்பாசனம் உள்ள பகுதிகளில் (நஞ்சை) அதன்  வெளிப்பாடு   கடுமையானதாகவும்,   அதன்   அருகில்   உள்ள    புஞ்சை   நில   உற்பத்தி  முறையில் அதன் பண்பாட்டுத்தன்மை முதன்மையாகவும், நகர்ப்புறங்களில் ஒப்பீட் டளவில் லேசான வடிவத்தையும் பெற்றுள்ளது. அதேபோல் நம் வரலாற்றிலும் தற்போதைய தொடர்ச்சியாகவும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் திணைகளில் குடி, சாதியின் வெளிப்பாடுகள் வேறுபட்டதாக உள்ளன. இதன் ஒத்த அம்சங்களுக்குப் பார்ப் பனியமும், குடித்தன்மையும் காரணமாகும். இதன் வேறுபட்ட கூறுகள் உற்பத்தி முறை சார்ந்த வேறுபாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. குடி, சாதிகளுக்கிடையிலான முரண் பாட்டு அளவு மற்றும் வெளிப்பாடு, உற்பத்தி மற்றும் முறைகள் தீர்மானிக்கப் படுகின்றன.
இங்கு நடக்கும் சாதி திரட்சி என்பது குடிப் பண்புகளைக் கொண்டது. இதில் அக்குடியின் ஒட்டுமொத்த உறுப்பினர்களும் உடன்படுகின்றனர். அதேசமயம், தன்குடிக்கும் பிற குடிகளுக்கும் இடையிலான முரண்பாட்டில் அனைத்து உறுப்பினர்களும் ஈடுபடுவது இல்லை. இதை நாம் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். இதில் ஒன்று கூடல் குடித்தன்மை கொண்டதாகவும், குடிகளுக்கு இடையிலான முரண்களைப் பயன்படுத்துவது பார்ப்பனியத் தன்மையாகவே உள்ளது. இதில் நாம் குடித் தன்மைகளையும், பார்ப்பனித் தன்மைகளையும் பிரித்துப் பார்க்க வேண்டும். இதில்  திணைசார்குடி, தொழில்சார் குடித்தன்மைகள் வரலாற்று வழியில் உருவாகியது. அது தன்னை ஒரு தேசிய இனமாக மாற்றிக் கொள்வதில்தான் அதன் குடிசார் தன்மைகள் மறைந்து போகும். அதுவும் வரலாற்று வழியிலேயே நடந்தேறும். அதை நாம் அழிக்க முடியாது. ஆனால், பார்ப்பனிய சாதியத்தன்மையை நாம் ஒழிக்க முடியும். ஒழிக்கத்தான் வேண்டும். பார்ப்பனிய மேலாதிக்க ஒழிப்பு என்பது பார்ப்பனியத் தன்மையான, பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வினை பாதுகாக்கும் சாதியை ஒழிப்பதும், பார்ப்பன தனி உரிமையை (மேலாதிக்கம்) ஒழிப்பதே ஆகும்.
சாதி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டதாக உள்ளது. இதில் நாம் இதுவரை கருதி வந்த பிரமீடு வடிவம் அதாவது மேல் நோக்கிக் கூராகவும் கீழே தட்டையாகவும் உள்ள வடிவம் நமக்கு பொருத்தப்பாடு உடையதாக இல்லை. கீழே தட்டையான வடிவம் என்பது ஒரு அரசியல் முடிவாகும். மெய்நிலைமை அல்ல. நம் நிலையில் மேல் நோக்கிக் கூறாகவும், கீழ்நோக்கியும் கூறாகவும் கொண்ட வடிவமாக உள்ளது. பார்ப்பனர் என்பது தமிழ்நாட்டு மெய்நிலைமையில் அது ஒரு குடி அல்ல. அது ஓர் இனம். தமிழ்நாடு அல்லாத மற்ற பகுதிகளில் அங்குள்ள மக்களோடு கலந்து உயர்சாதி இந்துக்களாக நிலைபெற்று இருக்கலாம். தமிழ்நாட்டில் வரலாற்று வழியில் பார்ப்பனர் எதிர்ப்பு இருப்பதால் அப்படிப்பட்ட ஒரு கலப்பு ஏற்படவில்லை போலும்.
சாதி எங்கு உள்ளது எப்படி செயல்படுகிறது? தீண்டாமை, பிறப்பு அடிப்படையிலான உயர்வு, தாழ்வு பண்பாடு பழக்கவழக்கங்கள், செய்யும் தொழில் போன்றவற்றை உயர்வாகப் பார்ப்பது, தாழ்வாகப் பார்ப்பது போன்ற தன்மைகள் சாதி என்று அழைக்கலாம். இவை அனைத்தும் சிந்தனை முறையாக உள்ளது. பார்ப்பனிய மேலாதிக்கத்தால் உருவாக்கப்பட்டது. இது பொருள் வகைப்பட்டதல்ல. பார்ப்பனர் குடியிருப்பு, பிற்படுத்தப்பட்டோர் குடியிருப்பு, ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பு,  பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் யாருக்கு என்ன அதிகாரம்? அக்குடியிருப்பு பகுதிகளில் பொது இடமாக மாற்றப்பட்ட அரசு சார்பு அலுவலகங்கள், பேருந்து நிலையம், தேனீர் கடை போன்றவற்றிலும், ஒரு குடியினர் குடியிருப்பில் மற்றவர் குடியிருப்பது, மனை வாங்குவது போன்றவற்றிலும் இடம் சார்ந்த அதிகாரம் செயல்படுகிறது.
        பார்ப்பனர் தங்கள் எல்லைக்குள் பிறரை அனுமதிக்காததும், வரைமுறைப் படுத்துவதும், பிற்படுத்தப்பட்டோர் குடியிருப்பு பகுதிகளில் பிறரை அனுமதிக்காததும், வரைமுறைப் படுத்துவதும், பார்ப்பனரை ஒடுக்கப்பட்டோர் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் அனுமதிக்காததும், வரைமுறைப்படுத்துவதும் என்ன பண்பாக இங்கு செயல்படுகிறது? சாதியா? இல்லையென்றேபடுகிறது. இது குடிப்பண்பாகவே உள்ளது. அதனாலேயே பல பழங்குடியினரிடம் இன்றும் இப்பண்புஉள்ளது. இது பொருளாதாய தன்மை கொண்டதாக உள்ளது. இந்த இடம், நிலம் சார்ந்து இயங்கும் அதிகாரம், நிலம், குடி-உடைமையாக இருந்த பண்பின் வெளிப்பாடுதான். இந்தக் குடி - உடைமையின் மீது அரசுடைமை, தனிஉடைமை (குடிக்கு வெளியே) உருவாக்கத்தில் இருந்து குடிகளுக் கிடையிலான முரண் தொடங்கியது. இந்த முரணுக்குப் பார்ப்பனியக் கோட்பாடுகள் உருவாக்கிய பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு கொள்கை, முரணை ஏற்றத் தாழ்வுகளுக்கு இடையிலான முரணாக மாற்றியது. இந்த ஏற்றத்தாழ்வுத் தன்மை நீக்கப்பட்டால் இதற்குள் இருப்பது குடிக்குழுப் பண்பே. குடிஉடைமையில் இருக்கும் நிலம், இடம் பகுதியில் தன்னை ஒத்த குழு உறுப்பினர் புதியதாக வந்தாலும் அவர்கள் சமமாக நடத்தப்பட்டாலும் அந்த ஊர் சார்ந்த அதிகாரச் சிக்கல் வரும்பொழுது அவர்களுக்கு இரண்டாம் நிலையே வழங்கப்படுகிறது.
வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பவருக்கோ, மனைவியின் ஊரிலேயே இருக்கும் மாப்பிள்ளைக்கோ மரியாதை இருப்பது இல்லை. மாப்பிள்ளை தன் செல்வத்தால் அங்கு நிலம் வாங்கி குடியிருந்தாலும் அவனுக்கு இரண்டாம் மரியாதைதான். ஆனால், அப்பெண்ணின் தாய் ஊரில் எவ்வளவு நாள் கழித்து வந்தாலும் மரியாதை இருக்கிறது. மாமியார் வீட்டில் தங்கும் மாப்பிள்ளைக்கு மரியாதை இல்லை என்பது மனைவி சார்ந்த குடி உடைமை மற்றும் ஆளுகையில் உள்ள நில எல்லையில், மற்றவர்களுக்கு உள்ள நிலையையே எடுத்துக் காட்டுகிறது. இது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப் பட்டாலும்  அடிப்படையில் இனக்குழு பண்பாட்டின் வெளிப்பாடே. வீட்டோடு மாப்பிளையாக இருப்பது தாய்வழிச் சமூகத்தின் பண்பே. அதை மறுத்து உருவானது கணவர்வழி தன் வாழ்வை அமைத்துக் கொள்ளும் முறை. இத்தன்மை தந்தைவழி சமூகத்தின் பண்பாக உள்ளது. இன்று பெண் சார்ந்தோ, ஆண் சார்ந்தோ குடியிருக்கும் முறைக்கு மாற்றாக தங்களின் புதிய இடங்களில் குடியேறி வருகின்றனர். இங்கு இரு குடிகளின் அதிகாரமற்று பகுதி அதிகாரம் உருவாகி வருகிறது. குடிகள் வாழும் ஊரில் மண்சாலை இருக்கும்போது அதன் மீது அவர்களுக்கு இருந்த அதிகாரம் அங்கு பெருவழிச்சாலை வந்தபோது முற்றிலும் அழிக்கப்படுகிறது. அங்கு அரசின் அதிகாரம் செயல்படுகிறது. இதுவே நகர்ப்புறங்களில் நிலம் சார்ந்து எந்த அதிகாரமும் இல்லாதபோதும் முதன்மையாக அரசு அதிகாரம் நிலவினாலும் நகரின் பழைய குடிகளின் எங்கள் பகுதிஎன்ற உணர்வு செயல்படுவது இந்தப் பண்பின் நீட்சியே.
குடி சார்ந்து இயங்கும் மற்றொரு பண்பு, ஒரு குடியைச் சேர்ந்தவர் மற்றொரு குடியைச் சேர்ந்தவரால் தாக்கப்பட்டாலோ, அவமானப்படுத்தப் பட்டாலோ அத்தாக்குதலை தனிநபர் மீதான தாக்குதலாகப் பார்ப்பதும் அதற்கெதிராக அந்தக் குடி திரள்வதும் குடிப்பண்பே. வேறு குடிகளின் பெண்ணைக் கவர்வதும், வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்வதும் குடிகளின் பண்பே. இதே குடிப்பண்பு அரசியல் பொருளியல் நலன், உரிமை சார் சிக்கல் வரும்பொழுது குடித்திரள்வு நடக்கிறது.
திருமண உறவு வழியாக குடி சாதி உறவுகளுக்குள் உரிமை கடமை அதிகாரம் செயல்படுகிறது. இவ்வதிகாரம் செயல்படக்கூடிய திருமண உறவில் வேறு ஒரு குடியுடனான திருமண உறவு ஏற்படும்பொழுது ஒரு குடிக்குள் இன்னொரு குடியைச் சேர்ந்தவரின் உரிமை கடமை அதிகாரம் உருவாக்கப்படுகிறது. குடியில் உரிமை, கடமை மட்டுமே உள்ள அதிகாரமற்ற பெண்ணை ஏற்றுக்கொள்வதும், குடியில் அதிகாரம் உடைய ஆண்களை ஏற்க மறுப்பதும் இக்குடிப்பண்பே. இதுவரை குடும்பத்திலிருந்த உறவுகளான பூட்டன், பாட்டன், பூட்டி, பாட்டி, தாய், தந்தை, மகள், மகன், மருமகள், மருமகன், பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி கொண்ட நமது குடும்ப அமைப்பு இங்கு ஏற்பட்டு வரும் பொருளியல் மாற்றங்களால் நீடிக்க முடியாமல் தாய், தந்தை, மகள், மகன் என்ற நிலையோடு நின்றுவிட்டது. குடும்பமே நீடிக்க முடியவில்லையென்றால், குடி நீடிப்பதற்கான வாய்ப்பு இல்லை.
குடி, குடும்பம் சார்ந்து வாழ்ந்த நம் மக்கள் இங்கு ஏற்பட்டிருக்கும் உற்பத்தி மாற்றத்தின் காரணமாக தனியாக தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்போது குடி, குடும்பத்திற்கான மருமகளை, மருமகனைத் தேடுவதற்கு பதில் தனக்கான துணையை உருவாக்கிக் கொள்வதற்கான நிலை உருவாகி உள்ளது. அதே சமயம் அதற்குத் தேவையான சிந்தனை மாற்றம் என்பது பொதுத்தளத்தில் மாறவில்லை. இருவேறு குடிகளைச் சேர்ந்த இருவர்களுக்கு இடையே குடிப்பண்பாடு எந்த அளவுக்கு நீடிக்கிறதோ அந்த அளவுக்கு அவர்களுக்கு இடையிலான முரண்பாடு தொடர்கிறது.
குடி, சாதி என்பதன் இறுதியான பொருளாதாய பண்புகள் எவை என்று பார்த்தால் அவை குடித்தன்மை, பார்ப்பனிய மேலாதிக்கம், நிலம், உற்பத்தி முறை என்ற நான்கில் அது நிலைகொண்டு இருக்கிறது. நம்முடைய வரலாற்றில் நிறைய தொழில்சார், திணைசார் குடிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. குடிகளின் இயல்பான சமூக வளர்ச்சிக்கான போராட்டத்தில் தன்னை தேசிய இனமாக உருவாக்கிக் கொள்ளக்கூடியவை. அதனை பார்ப்பன - பார்ப்பனிய நுழைவு தடை செய்து சாதியாக மாற்றமடையச் செய்துள்ளது.
      குடி + பார்ப்பனிய சிந்தனை, சட்டம் = சாதி (அல்லது)
      குடி + பார்ப்பனிய மேலாதிக்கம் = சாதி
இதில் ஒரு கூறான பார்ப்பனிய மேலாதிக்க தன்மையை ஒழிப்பது, மற்றொரு கூறான குடிகளின் தன்மையைத் தேசிய இனத்தன்மையை நோக்கி முன்நகர்த்துவதும், நிலத்தின் மீதான குடியுடைமைத் தன்மையை மாற்றுவதும், தமிழ்த்தேசிய உற்பத்தியை கட்டமைப்பதுதான் மாற்றாக இருக்கும்.
பார்ப்பனிய மேலாதிக்க ஒழிப்பு என்பது அதைப் பாதுகாக்கும் ஆரிய பார்ப்பன ஒற்றை ஆதிக்க இந்திய அரசதிகார ஒழிப்பிலேயே அடங்கி இருக்கிறது. குடித்தன்மையைத் தேசிய இனத் தன்மையாக முன்நகர்த்துவது என்பது குடிகளுக்கு இடையிலான சமத்துவமற்ற, பின்தங்கிய தன்மைகளை ஒழித்த, அதன் முற்போக்கு கூறுகளையும், வரலாற்று தன்மைகளையும் தனதாக்கிக் கொள்ளக்கூடிய சமத்துவத்தையும், விடுதலை யையும் நோக்கமாகக் கொண்ட இனத்திரட்சியாகும். நிலத்தின் மீதான குடித்தன்மையைப் போக்குவதும், தமிழ்த்தேசிய உற்பத்தியை கட்டமைப்பதும் தமிழ்த்தேசிய விடுதலை யிலேயே சாத்தியமாகும். யாதுமூரே யாவருங் கேளீர்நமது சங்கப் பாடல் இடம் சார்ந்தும் குடி சார்ந்தும் இயங்கும் இந்த அதிகாரத்திற்கு மாற்றாகவே முன்வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக