வியாழன், 26 செப்டம்பர், 2013

பரதேசி: கருணையோடு உமிழும் கலை

சா. திருவாசகம் (பீம்பாய்), சென்னை.
 


அட என்னப்பா எப்பாரு இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு... ஒரு சினிமாவை சினிமாவாப் பாக்காம, அதுல போயி உப்பு, காரம், சாதி...என்று சலித்துக்கொள்ளும் வழிப்போக்கர்களா நீங்கள்? தொடக்கமாக சில சினிமா கதைகள்
சினிமா ஒன்று.
2013ல் வெளியான செல்வபாய்ட்என்ற மலையாளப்படம். கேரள சினிமாவின் தந்தையான டேனியல் என்பவரின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது இப்படம். 1920களில் முதல் மலையாள சினிமாவை உருவாக்கும் முனைப்பில் ஈடுபடுகிறார் டேனியல். தயாரிப்புஇயக்கம், கதாநாயகன் எல்லாம் அவரே. ஆனால் கதாநாயகியாக நடிப்பதற்கு யாரும் முன்வரவில்லை. காரணம் அன்றைக்கு நிலவிய பெண்ணடிமைத்தனம். கதாநாயகியைத் தேடியலைந்து இறுதியாக ரோசம்மா என்ற பெண்ணிடம் நடிப்பதற்கு சம்மதம் கூறுகிறார். ஆனால், ரோசம்மா ஒரு தலித் பெண். புலையர். அவர் நடிக்க வேண்டிய பாத்திரமோ நாயர் பெண் வேடம். படப்பிடிப்புத் தொடங்கி நடக்கிறது. படப்பிடிப்புத் தளத்தில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். ரோசம்மா மட்டும் புழக்கடையில் தனியே சாப்பிடுகிறாள். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாகிறது. தான் நடித்த படத்தைப் பார்ப்பதற்காக வருகிறாள் ரோசம்மா. கேரளாவின் சாதி இந்துக்கள் அத்துணை பேரும் சேர்ந்து அவரை அடித்து விரட்டுகிறார்கள். ஒரு புலையர் பெண் நாயர் பெண்ணாக நடித்ததோடு மட்டுமல்லாமல், ஒன்றாக அமர்ந்து சினிமா பார்ப்பதா? என்பது அவர்களது கோபத்திற்குக்காரணம். ரோசம்மா உயிர் பிழைக்க ஓடுகிறாள். சாதி இந்துக்கள் அவரைத் துரத்துகிறார்கள். ரோசம்மா எங்கோ இருளில் ஓடி மறைகிறார். அவர் எங்கே போனார் என்ன ஆனார் என்று இறுதிவரை தெரியவில்லை.
கேரளாவின் முதல் சினிமா கதாநாயகி ரோசி என்கின்ற ரோசம்மாவுக்கு சாதி இந்துக்களால் நேர்ந்த கதி இதுதான். படத்தின் ஒரு வசனம் வருகிறது மலையாளிகளின் சாதிவெறி ரோசம்மாவை அழித்துவிட்டது”.
சினிமா இரண்டு.
இதுவும் ஒரு மலையாளப் படம்தான். 2012ல் வெளியான மேல் விலாசம்”. கதையும் காட்சியமைப்பும் புதுமையானது. இந்திய இராணுவ நீதிமன்றத்திற்குக் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு ஜவான் அழைத்து வரப்படுகிறார்.
தன் மேலதிகாரிகள் சிலரைச் சுட்டுவிட்டார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. கொலையை நேரில் கண்ட சாட்சிகளிடம் விசாரணை தொடங்குகிறது. கேள்விகள்- பதில்கள். கேள்விகள்-பதில்கள். இதன் வாயிலாகவே கதை உணர்த்தப்படுகிறது. படம் முழுவதுமே ஒரு அறைக்குள் நடக்கும் விசாரணைதான். விசாரணையின் ஒரு கட்டத்தில் உயரதிகாரிகள் தங்களுக்குக்கீழ் பணியாற்றும் ஜவான்களில் தலித் சாதியினரை மட்டும் சாதியைச் சொல்லி அழைத்து இழிவு செய்யும் போக்கு வெளிப்படுகிறது. கேப்டன், கர்னல், சுபேதார் உள்ளிட்டோரின் சாதிவெறியால் தினம்தினம் அவமானத்திற்கு ஆளாகும்


ஜவான், ஒரு கட்டத்தில் சாதிவெறி பிடித்த அந்த உயரதிகாரிகளைச் சுடுகிறான். இருவர் இறந்துவிட உயிர் பிழைத்த மற்ற சாதி இந்துக்கள் ஜவானை நீதிமன்றத்தில் ஒப்படைத்து தண்டனைப் பெற்றுத் தருகிறார்கள் (மேல் விலாசம்என்பதற்கான பொருளை பைபிளில் பாண்டித்யம் கொண்ட யாரையேனும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்).
சினிமா மூன்று.
இது ஒரு இந்திப்படம். ராம்சந்த் பாகிஸ்தானி (2008). பாகிஸ்தான்-இந்திய எல்லையில் (இந்திய-பாகிஸ்தான் என்று தான் சொல்ல வேண்டுமோ) வசிக்கும் ராம்சந்த் என்பவரின் ஐந்து வயது குழந்தை அம்மாவிடம் அடம்பிடித்து விளையாட்டுவாக்கில் தெரியாத்தனமாக இந்திய எல்லைப் பகுதிக்குள் வந்து விடுகிறான். வீரத்தில் சிறந்த இந்தியச் சிப்பாய்கள் அந்தக் குழந்தையைப் பிடித்து வைத்து விசாரிக்கிறார்கள். லஷ்கர்--தொய்பாவா, அல்-கொய்தாவா என்று. குழந்தையைத் தேடிக்கொண்டு அதன் தந்தை வருகிறார். சொல்லவா வேண்டும். அவரையும் பிடித்து விசாரிக்கிறார்கள் ராணுவத்தினர். விசாரணையில் அவர் பாகிஸ்தானில் வசிக்கும் இந்து - அதுவும் தலித் என்பது தெரியவருகிறது. ராம்சந்த்தைத் தொட்டு அடித்ததற்காக பதறி விலகி நிற்கிறார்கள் இந்திய ராணுவத்தினர். ராம்சந்த்தும் அவருடைய குழந்தையும் தங்கள் வாழ்வின் பெரும் பகுதியை இந்தியச் சிறையில் கழித்துவிட்ட பிறகு விடுவிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
போதும். இவை மூன்று திரைப்படங்களுமே கடந்தகால வரலாற்றையும் சமகால உண்மைச் சம்பவங்களையும் உள்ளது உள்ளபடியே பதிவு செய்யும். அதேவேளையில், சற்றும் கலைத்தன்மைக்கும் சுவாரசியத்திற்கும் யாதொரு பங்கமும் நேராமல் உருவாக்கப் பட்டுள்ள படங்கள். இந்த நேர்மைக்காக அப்படங்களின் இயக்குநர்கள் இருக்கும் திசை நோக்கி வணங்கிவிட்டு...
சில நாட்களுக்கு முன் திரையிடப்பட்டு, ஈரமும் இரக்கமும் கொண்ட தமிழ்ப் பார்வையாளர்கள் மற்றும் பேரறிஞர்களின் பன்ச் பாராட்டுகளைப் பெற்றிருக்கும் பரதேசிதமிழ்த் திரைக் காவியம் -  அப்படித்தான் சொல்கிறார்கள் குறித்து இனிப் பேசலாம்.
ஒரு விசயத்தை தெளிவுபடுத்தி விடுகிறேன். பரதேசிபடமும் அதன் இயக்குனர் பாலாவும் பொருட்படுத்தத் தகுந்த பொருண்மைகளா என்றால் ஆம். அவர் ஒரு மகாகலைஞன். இதுவொரு காவியம் என்றுதான் தமிழ் ஊடகங்கள் கொண்டாடுகின்றன. சரி, ஊடகங்கள் கொண்டாடும் அளவிற்கு தமிழ்ச் சினிமாவிற்குப் பாலா அளித்துள்ள கொடைகள்தான் என்ன?
உராங் உட்டாங் போல மூஞ்சியை வைத்துக் கொள்வது, சிம்பன்சி, காட்சில்லா போல விநோத ஒலியெழுப்புவது, நம் உள்ளூர் குரங்குகள் போலவும், சிகிச்சையிலிருந்து பாதியிலேயே வந்துவிட்டவர்கள் போலவும் சேஷ்டைகள் செய்யும் ஆண், பெண் கதாபாத்திரங்களை ஸ்ருஷ்டித்து (கேரக்டரை சேஷனாம்). சி.ஜி.யின் உதவி இல்லாம லேயே மனிதர்களை மிருகங்களாக மாற்றுவதில் மிகுந்த திறமை கொண்டவர் பாலா என்றால் அது மிகையில்லை.
கொரவளையைக் கடிப்பது, குடலை உறுவுவது, குஞ்சிக்காயை அறுத்தெறிவது ஆகிய தண்டனை முறைகளைத் தமிழ்த்திரைக்கு அறிமுகப்படுத்திய சாதனைகளும் பாலாவின் மூலம் நிகழ்ந்தவைதான். இவைதவிர, காரக்குழம்பையோ அல்லது இன்ஜின் ஆயிலையோ தலையில் ஊத்திக்கொண்டது போல புதுமையான மண்டைகளை வடிவமைத்ததையும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறந்துவிடக் கூடாது.
இவ்வளவு சாதனைகளைச் செய்த பாலாவை பலரும் கொண்டாடுவதில் வியப்பேதும் இல்லை. நம் குடும்பங்களில் புத்தி சுவாதீனமற்ற மனிதர்கள் இருப்பின் அவர்களைக் கேலி செய்து புறக்கணிக்கும் நாம், அதே குணங்கள் கொண்டவர்களைக் கலை, இலக்கியம் செயல்பாடுகளில் காணும்போது அவர்களுக்கு ஒரு அந்தஸ்து அளிக்கும் போக்கு கடந்த முப்பதாண்டுகளில் நிகழ்ந்துள்ளது. நகுலன், கோணாங்கி, ரஜினிகாந்த், பாலா...? வேண்டாம் இந்தப் பட்டியலை அடித்து விடுகிறேன். சேஷ்டைகளை ரசித்து அந்தஸ்து அளிக்கும் தமிழர்களின் கோஷங்களுக்காக மட்டுமே பாலாவை பொருட்படுத்திப் பார்க்கவில்லை. காரணம் வேறு.
2012ல் அரவாண்என்றொரு பீரியட்படம் வெளியானது. அது ஒரு அகாடமி அவார்டுவின்னர் நாவலிலிருந்து எடுக்கப்பட்ட கதை. திருட்டுத்தனத்தை ஒரு கலை போல செய்து வாழும் மக்கள் கூட்டத்தின் வாழ்வைப்பேசுகிறது இந்நாவல். இந்நாவலை ஒட்டி படமெடுத்த ஒரு இயக்குநர் அம்மக்களை கள்ளர்சாதியினர் என்று வாஞ்சையோடு அறிமுகப்படுத்தினார். மேலும், நாட்டாமை களாக, மிராசுகளாக, ஜமீன்களாக, பண்ணைகளாக இன்னபிற வெண்ணைகளாக இருக்கும் அதிகார வர்க்கங்களை  எல்லாம் தேவர், ரெட்டி, ரொட்டி, கவுண்டர், கருமாந்திரம் என்றெல்லாம் அடையாள மாலைகள் அணிவித்து அழகு பார்க்கும் தமிழ் சினிமாவின் சாதி இந்து இயக்குநர்கள் தலித்துகளின் வாழ்வைப் படமாக்கும்போது மட்டும் தமிழர் பட்டம்சூட்டுவது என்ன வகையான வியாதி?
சரி அடுத்து வருவோம். பரதேசிபடத்தின் நாயகன் வேலை தேடி பக்கத்து ஊரிலுள்ள ஒரு கடைக்குப் போகிறான். கடைக்காரனிடம் ஏதாவது வேலை கொடுங்க நாயமாரேஎன்று கேட்கிறான். கடைக்காரனும் விறகு பிளக்கும் வேலை கொடுத்து, வேலை முடிந்ததும் அவனை விரட்டி அடிக்கிறான். பிறகு கங்காணியைச் சந்திக்கிறான். இப்படிப் போகிறது படத்தின் காட்சிகள். இக்காட்சிகள் நாவலின் பக்கங்களுக்கு எந்தளவிற்கு உண்மையாக இருக்கின்றன?
எரியும் பனிக்காடுநாவலின் இரண்டாம் அத்தியாயத்தில் கயத்தாறிலுள்ள பெருமாள் நாயக்கர் ஓட்டல் மற்றும் டீக்கடைகுறிப்பிடுகிறார். இக்கடையில் எந்த எந்த சாதியினர் எப்படி நடத்தப்படுவார்கள் என்பது குறித்த விவரணைகளும் பேசப்படுகிறது. குறிப்பாக தலித்துகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இவைகளில் எவையும் இயக்குநரின் சாதிக் காமாலைக் கண்களில் படவே இல்லையா?
1920, 30களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றுபட்ட அகண்ட பாரதத்தின் சாதிவெறி எவ்வளவு உக்கிரமாக இருந்தது என்கின்ற உண்மையை எவ்வளவு வெளிப்படையாகவும் நேர்மையாகவும் துணிச்சலுடனும் பதிவு செய்திருக்கிறார். செல்லுலாய்ட்படத்தின் இயக்குனர் கமல். 1920களில் மட்டுமல்ல, 2010களில், ஒளிர்விடும் சுதந்திர இந்தியாவிலும் கூட அந்த அசிங்கம் மாறிவிட்டதா? சுதந்திர இந்தியாவின் பாதுகாப்பு அரண் என்று சொல்லப் படக்கூடிய இராணுவத்திலும் சாதிவெறி பிடித்த இந்துக்கள் நீக்கமற நிறைந்துள்ள உண்மைச் சம்பவத்தை அம்பலப்படுத்திய மேல் விலாசம்படத்தின் இயக்குநர் மாதவ்ராமதாசன் எவ்வளவு தைரியமும் நேர்மையும் கொண்டவர் என்பதை உங்களால் உணர முடிகிறதா?
இந்திய இராணுவம், மிலிட்டெரி உடை, தேசியம், தேசப்பற்று என்றெல்லாம் பொய் பேசி ரோமாஞ்சனம்அடைய வைக்கும் தீபாவளி துப்பாக்கிக்காரன்கள் அனைவரும் மேல்விலாசம், ராம்சந்த் பாகிஸ்தானி போன்ற அசல் இந்திய இராணுவக் கதைகளைச் சொல்பவர்களின் கழிவுகளைக் குடித்துத் தின்றால் அறிவு பெற ஏலுமா?
போகட்டும். சாதியின் உக்கிரத்தைக் காட்சிப்படுத்த வக்கும் திராணியுமில்லாமல் இருக்கலாம். வசனங்களின் வழியாகவேனும் சொல்ல முடியும்தானே! பரதேசியின் வசனம் யார் தெரியுமா? தீவிர இலக்கியவாதியும் சாகித்ய விருது பெற்றவருமான நாஞ்சில் நாடன். வெள்ளாளப் பெருமைகளைக் கட்டிக் காக்கும் காவலாளி என்றால் உடன் நினைவுக்கு வருவார் அய்யா அவர்கள். சாதிக் கொடுமையை வெளிப்படுத்தும் வசனங்களை எல்லாம் எழுத இந்த வெள்ளாளக் கரங்கள் நீளாது என்பதை யாமறிவோம்.
உங்க அடிமை, அடிமையோட வீட்டுல யாருமே நேரத்திலிருந்து சாப்பிடல... ஏதாச்சும் வேலை குடுத்தீங்கன்னா...என்பதாக நாவலில் வரும் வசனத்தையாவது அப்படியே எழுதியிருக்கலாமே. ச்சே... ச்சே... எப்பேர்பட்ட எழுத்தாளன். அடுத்தவர் வசனங்களை எப்படித் திருடுவார்?” என்கிறீர்களா?
 “பொறந்த எடத்துலேயே சாவணும்னு நெனக்கிறவங்களுக்கு இதுதாம்ல தலையெழுத்துஎன்கின்ற கங்காணியின் பேச்சை மட்டும் நாவலிலிருந்து உருவி கட் அண்ட் பேஸ்ட் செய்து கொள்வாராம். சாதிப்பாகுபாடுகள் குறித்த வரிகளை மாத்திரம் எடிட்செய்து விடுவாராம். என்னாங்கடா உங்க படைப்பு...  நேர்மை.
இந்தியாவின், தமிழ்நாட்டின் தனித்துவமும் சிறப்பும் வாய்ந்த அடையாளமான சாதிவெறியை காட்சிப்படுத்த மட்டும் தமிழ் சினிமாவின் எந்தவொரு இயக்குந சிகாமணிகளும் முயற்சிப்பதே இல்லையே. சாதியைத் தங்கள் வாயில் வயிற்றில், வேட்டியில், ஜோப்பியில் என்று போகுமிடெல்லாம் சுமந்து திரியும் தமிழ்நாட்டில் சாதியே இருந்ததில்லை என்று அடுத்தத் தலைமுறைக்குப் பிரகடனப்படுத்த நினைக்கிறார்களோ என்னவோ?
ஆகட்டும். எரியும் பனிக்காடுநாவலின் ஒரு பகுதியைக் காண்போம். தேயிலைக் காட்டில் ஆண்டு முழுவதும் உழைத்துக் களைத்த தலித்துகள் ஆண்டிறுதியில் தங்களின் கூலிகளைக் கணக்கு வழக்கை முடிக்கும்போது அதுவரை அம்மக்கள் கடனாக வாங்கிய பொருட்களுக்கான பணத்தைக் கங்காணிகள் பிடித்துக் கொள்வது வழக்கம். முன்பணம், ரயில் டிக்கெட் செலவு, சட்டி சாமான், கம்பளி, காய்ச்சலுக்குக் கட்டும் தாயத்து, அரிசி, மாட்டுக்கறி ஆகிய இவைதான் ஒரு வருடம் முழுக்க அம்மக்களின் செலவுகள்.
இந்தச் செலவுகள் எல்லாம் பரதேசியிலும் பட்டியலிடப்படுகின்றன. அடடே என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் நம் தலையிலேயே ஒன்று போடுகிறார் இயக்குநர். அந்த பட்டியலிலிருந்து மாட்டுக்கறியை மட்டும் மிகக் கவனமாகக் கங்காணியின் குச்சியால் தூக்கி கெடாசி விடுகிறார். மாட்டுக்கறி மட்டும் மிஸ்ஸிங்.
அட போங்க சார். மாட்டுக்கறி என்றெல்லாம் யாராவது தமிழ் சினிமாவில் சொல்வார்களா.... தமிழ் சினிமா தீட்டாகி விடாதா? என்று புடைத்த மூக்கன்கள் எவரேனும் கேட்கக் கூடும். பரதேசிஇயக்குநரின் முந்தைய படமான அவன்  இவனில் க்ளைமேக்ஸே அடிமாடுமேட்டர்தானே! தவிரவும் ... ... ... ... என்றெல்லாம் எதையுமே ராவாக சொல்பவர் என்று பெத்த பேரும்பு கழும் பெற்றுள்ளவருக்கு மாட்டுக்கறிஎன்பதைக் குறிப்பிட திராணி இல்லை என்று ஒரேடியாகச் சொல்லிவிட மாட்டேன். திராணி இருக்கிறது. ஆனால், சாதி என்கின்ற கிருமியால் ஏற்பட்ட செலக்டிவ் அம்னீஷியாநோய் தடுக்கிறது. காரணம் எளிமையானது. மாட்டுக்கறி என்பதை குறிப்பிட்டு விட்டால் அந்த மக்கள் தலித்துகள்தான் என்பதாக டமாரம் அடித்தது போலாகி விடாதா! இயக்குநர் பாலா என்ன அவ்வளவு கேணையா? எனக்குத் தெரிந்து எண்பதாண்டுக் கால தமிழ் சினிமா வரலாற்றில் மாட்டுக்கறி குழம்பு என்கின்ற வசனத்தை உச்சரித்த முதல் படம் என்று அட்டகத்திதிரைப்படத்தைக் குறிப்பிடுவேன். இத்தனைக்கும் அப்படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு அவ முதல் படம் என்பதை ராவாபேசும் இயக்குநர்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
தேயிலைக் காடுகளுக்குச் சென்று உழைத்து உயிரை விட்ட மக்கள் தலித்துகள் என்பதைக் கொஞ்சமும் அடையாளப்படுத்திவிடக் கூடாது என்பதிலும் அவர்களின் வாழ்வை இருட்டடிப்பு செய்வதிலும் சூசகமாக காரியமாற்றிய இயக்குநர் பாலா ஒரு மாபெரும் அயோக்கியத்தன்மை அவ்வளவு பட்டவர்த்தனமாக செய்திருக்கிறார்.
தேயிலைத் தொழிலாளிகளின் மருத்துவ வசதிக்காக ஆங்கிலேயர்கள் 1928ல் பி.ஹெச்.டேனியல் என்னும் மருத்துவரை நியமித்தனர். இவர் வேறு யாருமல்ல தேயிலைத் தொழிலாளிகளின் துயர வாழ்வை ‘Red Tea’ என்ற ஆங்கில நாவலாக எழுதியவர்தான். இந்த ஆங்கில நாவல்தான் தோழர் இரா.முருகவேள் அவர்களால் எரியும் பனிக்காடுஎன்று தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. மூல நூலின் உரிமையை வாங்கியவர்கள் தமிழ் மொழிபெயர்ப்பாளரிடமும் ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். இயக்குநரும் வசன கர்த்தாவும். ம்...ம்... அந்தளவுக்கு சாதி இந்துக்கள் நேர்மையானவர்களா? வாழ்விலும் படைப்பிலும் சரி மருத்துவரின் கதைக்கு வருகிறேன்.
இந்த மருத்துவர்தான் தேயிலைக் கூலிகளின் அவல வாழ்வை வெளி உலகிற்கு அம்பலப்படுத்தியவர். மனிதர்கள் வாழச் சிறிதும் தகுதியற்ற தேயிலைக்காட்டின் லைன்வீடுகளையும் சுகாதாரம் சிறிதுமற்ற மருத்துவமனையையும் சுகாதாரமாக்க டேனியல் மேற்கொண்ட முயற்சிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும் தேயிலைத் தொழிலாளிகளுக்கான சங்கம் உருவானதும் இவரது முயற்சியின் பேரில்தான். அத்துடன் தான் எழுதிய ரெட் டீநாவலில் அபிரஹாம் என்ற மருத்துவரின் பாத்திரமாக வருபவரும் இவரேதான்.
இப்படிப் பொறுப்பும் அர்ப்பணிப்பும் கொண்டு செயல்பட்ட ஒரு மனிதரை இந்தப் பரதேசியின்... சாரி... பரதேசி திரைப்படத்தில் பாலா எப்படி காட்டியிருக்கிறார் தெரியுமா? தேயிலைத் தொழிலாளிகள் அத்தனை பேரையும் கிறித்துவ மதத்திற்கு மாற்றிவிட வேண்டும் என்று தன் அம்மா மீது சத்தியம் செய்துவிட்டு மலையேறி வந்தவரைப் போல பதிவு செய்கிறார் பாலா. எந்த நேரமும் மதமாற்றப் பிரச்சாரம் குறித்து யோசிப்பவர் போலவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார். ஒரு காட்சியில், ஒரு பெண் காயலா வந்து இழுத்துக் கொண்டிருக்கும்போது, மருத்துவர் வைத்தியம் பார்க்காமல் குடித்துவிட்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பதாக காட்டுகிறார் இயக்குநர்.
எவ்வளவு அப்பட்டமான அயோக்கியத்தனம் இது. நாவலில் வரும் கதாபாத்திரங்கள் குறிப்பாக வள்ளி, காயலாவில் விழுந்திருக்கும் போது எவ்வளவு கருணையோடும், கரிசனத்தோடும் வைத்தியம் பார்க்கிறார் மருத்துவர். ஆங்கிலேயர்களிடம் போராடித் தரமும் சுகாதாரமுமான மருந்துகளை வரவழைத்து பொறுப்பான மருத்துவராக செயல்பட்ட ஒருவரை இப்படிக் கொச்சைப்படுத்திப் பார்க்க யாரால் இயலும்?
நாடி, நரம்பு, ரத்தம், சதை, எலும்பு எல்லாவற்றிலும் சாதி இந்து சாக்கடை கலந்துள்ள ஒருவரைத் தவிர வேறு யாராலும் இயலும்?
இதில் பெயர் அரசியல் வேறு. அதாவது குடித்துவிட்டு கூத்தடிக்கும் கிறித்துவ வைத்தியருக்கு பரிசுத்தம்என்று பெயர் சூட்டியிருக்கிறார் இயக்குநர் நகைமுரணாம். அட... வரலாற்றறிவு கொஞ்சமும் அற்ற பாலா போன்ற அரைவேக்காடுகளே! பெயர் அரசியலுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். மேல் விலாசம்படத்தில் சாதி இந்து கேப்டன்களின் சாதிவெறிக்கு ஆளாகும் ஜவானின் பெயர் என்ன தெரியுமா? ராமச்சந்திரன். என்ன முழிக்கிறீர்கள். சாதி இந்துக்களின் அவதார புருஷனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பெயரையேகூட ஒரு தலித் வைத்துக் கொண்டாலும் கூட அப்போதும் அவன் சாதி இழிவிலிருந்து தப்பிக்க முடியாது பாஸ். பாகிஸ்தானின் இந்து தலித்தான ராமச்சந்துக்கும் இதே கதிதான்.
பெயர் அரசியல் என்பது இப்படி அமைய வேண்டும். அதை விடுத்து மனிதநேயம் கொண்ட மருத்துவருக்குக் குடிகாரப் பட்டம் சூட்டி மகிழ்வதல்ல மிஸ்டர் பாலா.
எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு அப்பட்டமான அயோக்கியத்தனமான மோசடியை ஜஸ்ட் லீவ் இட்கணக்காக ஒதுக்கிவிட்டு எப்படி இந்தப் படத்தைக் கொண்டாட முடிகிறது இந்த ஊடகங்களால்? அதிலிருக்கும் நல்லதை மட்டும் பார்க்கிறார்களாம். யோவ்... பெரிய மனுசங்களா... சாப்பாட்டில்  பெருச்சாளி செத்து கிடந்தால் மொத்தமாக கீழே கொட்டி விடுவோமா அல்லது அதை வாலைப் பிடித்து தூக்கிக் கெடாசிவிட்டு சப்புக்கொட்டிச் சாப்பிடுவோமா?
ரொட்டிக்கும் ஒயினுக்கும் கிறங்கி கிறித்துவ மதத்திற்குத் தலித்துகள் மாறினார்கள் என்று கிண்டலாகச் சொல்லிச் செல்பவர்களுக்கு ஒரு நிகழ்ச்சியைச் சுட்டுகிறேன். 1978ஆம் ஆண்டுக்கு முன் இந்தியா முழுக்க தாது வருட பஞ்சம் கோர தண்டவமாடிய காலம். பஞ்சத்தின் தீவிரம் எந்த அளவிற்கு இருந்தது என்றால், செத்துப்போன நாய்களின் கறியைத் தின்று உயிர் வாழ வேண்டிய அளவிலான பஞ்சம். விலங்குகளின் எலும்புகளைப் பொடியாக்கித் தின்பர். மண் சுவர்களையே உணவாக்கியது என்று தாது வருட பஞ்சம் குறித்து நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. சாதாரண காலங்களிலேயே வறுமையோடு மல்லுக்கட்டும் தலித்துகள் கொடிய பஞ்ச காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை உணர முடிகிறது. பஞ்சம், வறுமை, அடிமை வேலைகளும் ஏதும் இல்லை. இக்காலகட்டத்தில் ஆந்திர பகுதியில் பக்கிங்காம் கால்வாய் அமைப்பதற்கான வேலைகள் நடப்பதைக் கேள்விப்பட்டு, அங்குச் சென்றால் ஏதேனும் கூலி வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் எனவும் எண்ணிக்கொண்டு கூட்டமாக அங்குச் சென்று வேலை கேட்கின்றனர். ஏற்கனவே அங்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த சாதி இந்துக்கள் தலித்துகளை ஆயுதங்கள் கொண்டு தாக்குகிறார்கள். வேறென்ன... தலித்துகள் சாதி இந்துக்களோடு சரிசமமாக கூலி வேலை செய்வதா .... இதுதான் இந்தியச் சமூகம். சோத்துக்கு சு.ஊ. கொண்டிருந்தாலும் கூட சாதியைக் காப்பாற்றுவது என்பது சாதி இந்துக்களின் பிறவி நோய். சாதி வெறியன்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க ஆளுக்கொரு திசையில் சிதறி ஓடும் தலித்துகள், உடம்பின் கடைசிக்கு முந்தின மூச்சு  இருக்கும் வரையில் ஓடிக்களைத்து, கடைசியில் ஓரிடத்தில் மயங்கிச் சரிகிறார்கள். விழித்துப் பார்க்கையில் அவர்கள் இருப்பது ஒரு கிறித்துவ தேவாலயம் மயங்கிக் கிடந்த தலித்துகளுக்கு உணவும் மருந்தும் கொடுத்து காப்பாற்றுகிறார்கள் பாதிரியார்கள். ஆந்திராவில் நடந்த இந்த உண்மைச் சம்பவம், ஜி.கல்யாணராவ் எழுதிய தீண்டாத வசந்தம்நாவலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஆமாம். தலித்துகள் சாதி இழிவு, வறுமை, அவமானம் இவற்றிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள கிறித்துவ மதத்தில் சேர்ந்தார்கள்தான். இதனால் சாதி இந்துக்களுக்கு என்ன பிரச்சினை வந்துவிட்டது! தலித்துகள் மதமாற்றத்தின் மூலம் அவர்களின் வாழ்வை மேம்படுத்திக் கொண்டால்  தாங்கள் அடக்கியாள யாருமே இருக்க மாட்டார்கள் என்கின்ற நல்லெண்ணம் தவிர வேறெது சாதி இந்துக்களைப் பதைபதைக்க  வைக்கிறது. இந்துக்களின் எண்ணிக்கைக் குறைகிறதே என்ற கவலையா? அப்படியெனில் அவர்களின் மதத்தைத் தூர் வாற வேண்டியதுதானே! வாழ்வில் அவர்களால் ஒருபோதும் முடியவே முடியாத காரியம் அது.
காலம் காலமாக தங்கள் மேல் திணிக்கப்பட்டு வரும் அனைத்து வகையான இழிவுகளிலிருந்தும் விடுபட மதம் மாறுபவர்களை ஏதோ இங்கிலிஷ் சாராயத்திற்கு ஆசைப்பட்டு மதம் மாறுவதைப்போல கொச்சைப்படுத்தும் சாதி இந்து (இயக்குநர்)கள் திருந்தி அறிவு பெற முயற்சிக்க வேண்டும்.
அக்கறையும் கரிசனமும் கொண்ட ஒரு நாவலின் கதாபாத்திரங்களையும் வசனங் களையும் தங்களின் சாதி விருப்பத்திற்கேற்ப வளைத்துக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பரதேசி படத்தைத் தமிழ் ஊடகங்கள் அனைத்தும் கடுமையாகக் கண்டிக்காமல் பல் இளித்துப் பாராட்டுவது அருவருப்பை வரவழைக்கிறது.
ஏழ்மை, வறுமை, கொடுமை உள்ளிட்ட மைகளை எல்லாம் ஒன்றாக்கி கொடுத்தால் பணத்தையும் கழிவிரக்கத்தையும் எளிதாகப் பெற்றுவிடலாம் என்கிற இயக்குநர் மற்றும் வசனகர்த்தாவின் பொறியில் மிக லாவகமாகச் சிக்கிவிட்டன தமிழ் ஊடகங்கள்.
படத்தில் காந்தி குறித்து ஒரு வசனம் இடம்பெறுகிறது. சாராயம் குடித்துக் கொண்டு ஒரு உத்தமரைப் பற்றி பேசாதேஎன்று நம் தேசப்பற்றாளர்கள் கைத்தட்டிக் கொண்டாட, இந்த வசனம் போதாதா?
ஆனால் எரியும் பனிக்காடுநாவலில் வரும் நிஜ வெள்ளைக்காரன் சொல்கிறான் இந்த காந்திப் பயல் ஒரு வக்கீலாக முயற்சி செய்து தோல்வி அடைந்ததால் அரசியலுக்கு வந்துவிட்டான்”.
இந்த வசனத்தைத்தான் திரித்து காந்தியின் டிட்டோட்டலர்பழக்கத்தைக் காட்டு வதற்காக வரிந்துகட்டி எழுதியுள்ளார் நாஞ்சிலார். அன்னாருக்கு காங்கிரஸ் ஆட்சியிலேயே ஞானபீடமும் கிட்டட்டும்.
இவ்வளவு காலமும் தலித்துகளின் உரிமைகளையும் உழைப்பையும் திருடியும் சுரண்டியும் தின்று கொழுத்த சாதி இந்துக்கள் இப்போது அபகரிக்க ஆரம்பித்திருப்பது தலித்துக்களின் வாழ்வியலை.
சாதி இழிவு, ஒடுக்குமுறை, அவமானம், வறுமை, கண்ணில் நிரம்பிய அம்மக்களின் வாழ்விலிருந்து சாதி இழிவை மட்டும் மிக நேக்காக பிரித்துவிட்டு வெறும் கண்ணீரையும் துயரத்தையும் கலை என்ற பெயரில் காட்சிப் பொருளாக்கி பணமும், பாராட்டும் பெறும் அல்பத்தனத்தின் ஆரம்பம்தான் இந்தப் பரதேசி. தலித்துகளை அவமானப்படுத்தும் வேறொரு வடிவமாகவே இதனைக் கருத வேண்டும்.
வாழ்விலும் எழுத்திலும் நேர்மையற்ற சாதி இந்து கலை இலக்கியவாதிகளுக்கு சொல்லிக்கொள்ள எம்மிடம் ஒரு செய்தி இருக்கிறது.
எங்கள் பாட்டன்கள் அம்பேத்கரும் அயோத்திதாசரும் தந்து சென்றிருக்கும் பேனாக்கள் எம்மிடம் உள்ளன.
விலகி நின்று கேளுங்கள்.
சாதியால் மடிந்த - மடிந்து கொண்டிருக்கும் எம்மக்களின் கதைகளை நாங்கள் சொல்கிறோம்.                                                            

பின்குறிப்பு :  

  பரதேசி படத்தில் நடிகர்களுடைய அலுப்பூட்டும் நடிப்பு, எரிச்சல் ஏற்படுத்தும் இசை, ஒளிப்பதிவு, லாஜிக்  இல்லாத வறட்டுத்தனமான காட்சியமைப்பு இவை குறித்தெல்லாம் எழுதி உடம்பை புண்ணாக்கிக் கொள்ள விரும்பவில்லை... அதற்கான மனபலமும் இல்லை. அவ்வளவும் திராபை, அடியேன் பாவம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக