வியாழன், 26 செப்டம்பர், 2013

களஅனுபவமும் வழக்காறுகளும்



செ. ஸ்டாலின், உதவிப் பேராசிரியர், குருநானக் கல்லூரி, சென்னை.



 கள ஆய்வில் சந்தித்த பலர் என்னிடம் அன்பாகப் பழகினர். நான் அம்மையப்பன் நல்லூரில் தங்கி கள ஆய்வை மேற்கொண்டேன். நான் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் காது அவ்வளவாக கேட்காத பாட்டி ஒருவர் இருந்தார். அந்த பாட்டி என்னைத் தேடி அக்கிராமத்தில் எங்கிருந்தாலும் வந்து விடுவார். ஒருநாள் கள ஆய்வுக்காக அருகிலுள்ள ராவுத்தநல்லூர் என்ற இடத்திற்குச் சென்று மதியம் திரும்பினேன். எனக்காகப் புளித்த தயிர் ஊற்றி கூழ், வற்றல் மிளகாய் வைத்திருந்தார்கள். வந்தவுடன் எனக்குக் கொடுத்தார்கள். நானும் மகிழ்ச்சியில் குடித்துவிட்டு, பின்னர் தூங்கி விட்டேன். அவர்களும் நான் ஒரு கல்யாணத்துக்குப் போகணும்பான்னு சொல்லிக் கொண்டே போய்விட்டார்கள். அவர்கள் என்னை விசாரித்துவிட்டு போய் இருக்கிறார்கள். நான் நாளைக்குத்தா வருவேன். அந்த தம்பி ஊருக்கு எப்போ போகும்ன்னு கேட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள்.
இவர்கள் சென்னையை அடுத்த மறைமலைநகருக்கு உறவுக்கார் திருமணத்திற்கு இரயிலில் சென்றபோது இறங்கி அனைவரும் சென்றிருக்கிறார்கள். மேம்பாலத்தில் ஏற முடியாது, பயமாக இருக்கும் என்று தண்டவாளத்தைக் கடக்கும்போது சேலை தண்டவாளக் கம்பி ஒன்றில் மாட்டிக் கொண்டிருக்கிறது... அருகில் உள்ள தண்டவாளத்தில் அதிவேக ரயில் ஒன்று வந்து கொண்டிருக்கிறது.  புடவையை இவர்கள் வேகமாக இழுக்கும் போது நிலை தடுமாறி அருகிலிருக்கும் தண்டவாளத்தில் விழ அந்த இரயிலில் அடிபட்டு இரு துண்டாகி இறந்து போனார்கள்... இரு தினங்களுக்குப் பிறகு வந்த அவர்களின் உடல் வெள்ளைத் துணியில் சுற்றி கிடத்தப்பட்டு இருந்தது. அதனைப் பார்த்தபோது உண்மையிலேயே மனம் அவ்வளவு கடினப்பட்டது. என் இரத்த உறவினர்களில் ஒருவராக அவர் தெரிந்தார். அழுத அத்தனை பெண்களும் என்னை விசாரித்து, எனக்கு உதவி செய்தது பற்றியும் தன் பிள்ளை வயிற்றுப் பேரன் போல இருக்கிறார் என்று அவர்கள் பேசியது உட்பட அத்தனை நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி அழுதது, என்னை வெகுவாக கலங்க வைத்தது. இவர் உட்பட பலர் எதையும்  எதிர்பார்க்காமல் காட்டும் அன்பைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இங்கு தாலாட்டுப்பாட்டும் நாட்டார் கதையும் உங்களுக்காக...



 
 
ராஜா கதை (கோவிந்தசாமி,நூத்தஞ்சேரி, காஞ்சிபுரம்)

ஒரு ராஜாவும் தங்கச்சியும் இருந்தாங்க. தங்கச்சி கல்யாணம் பண்ணனும்ட்டு ஒரு ராஜா புள்ளெக்கி, தங்கச்சிய தூரத்துல குட்த்துட்டாரு. அண்ணெ ராஜா,அதுக்கப்புறமா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. தங்கச்சிக்கு ரெண்டு புள்ளப் பொறந்தது. அவுங்க பேரு வீரமோகன், சுகுணா. அவுங்கள நல்லாப் படிக்க வெச்சி, வளத்துக்குணு வர்றாங்க. இந்த ராஜாக்கு ஒரே ஒரு பொண்ணு ஹேமலதான்னு பேரு. ஒரு நாளு விஷ ஜூரமாயிடுச்சி. தங்கச்சி வூட்டுக்காரெ செத்துட்றான். இவளொட மச்சினெ யோசிக்கிறான். இவம் புள்ளைத்தானெ அடுத்த ராஜா. அவன்கள விடக் கூடாதுன்ட்டுக் கொடுமப் பண்ண ஆரம்பிச்சிட்டான். அந்தம்மாவ பாதாளச் சிறையில அடைச்சிட்டா(ன்). கொழந்தை களையும் அடைச்சிட்டான். இந்த விஷயத்த எப்டியொம் அண்ணங்கிட்டச் சொல்ல தூதுவுட்டான். அந்த நாட்டு மந்திரியே, அவ மச்சினெ பண்ணக் கொடுமயப் பாக்க முடியாம, அவன சாவடிச்சிட்டான். இந்த ராஜா தங்கச்சி கொழந்தைகங்களக் கூப்டுக்குணு வந்துட்றான்.  புள்ளைங்க ஒரே ஸ்கூலுக்கு அனுப்புறான். தாம் பொண்ணோடு சேத்து, பசங்கப் பெரியவங்காயிட்டான். ஒடனெ, தங்கச்சி அண்ணங்கிட்டப் போயி, அண்ணா ஊம் பொண்ண எம்புள்ளைங்கள்ள ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்றீனான்னு கேக்க, அவனும் செரின்றான். அதுக்குள்ள விஷ ஜூரம் வந்து தங்கச்சியும் செத்துட்றாள். மாமனெ ரெண்டு புள்ளைங்கள காப்பாத்திக்கினு வர்றான்.
ஒரு நாளு பொண்டாட்டியக் கூப்ட்டு, நம்மப் பொண்ண வீரமோகனுக்குக் குடுத்து அவுங்க நாட்டுக்கு அனுப்பிட்லான்ட்டு சொல்றான். அதுக்கு அவ, பொண்ணு ரெண்டு பேர்ல யார விரும்புதோ அவனக் கட்டிக் கொடுக்கலான்றா. அப்பொ ஹேமலதாவும் அவத் தோழிகளும் தோட்டத்துல இருக்கும்போது, ஆறடி உயரமுள்ள ஒரு மனிதக் கொரங்கு வந்து இவகிட்ட கலாட்டாப் பண்ணுது.பயிப்புட்றாள் இவ. அந்த நேரம்பாத்து வீரமோகனும், சுகுணாவும் வாள் சண்டப்பயிற்சி எட்த்துங்குறாங்க. அவ அலறலப் பாத்து சுகுணா ஓடியாந்து காப்பாத்துறான்.கொரங்கக் கொன்னுட்ரான். அதுக்குள்ள ராஜாக்கு ஆள் போயி அவெ வந்துகாயத்துக்கு மருந்தெல்லாம் போட்டு, பொண்ணுக்கிட்ட கேக்குறாள். நீ யாரக் கட்டிக்கிறேன்னு. அதுக்கு அவ நா சுகுணா அத்தானத்தான் கட்டிக்குவெ. அவரு தா ஏ உயிரக் காப்பாத்துனாருன்னாள். கல்யாணம் ஏற்பாடு நடக்குது.
இன்னொரு ஊர்ல சதப்பிண்ட வெள்ள அரக்கன்னு ஒருத்தென். அவெ அந்த ஊரையெ அட்டகாயம் பண்றான். அவனோட உயிர் நாடில இருந்து பத்தடிப் பாம்பு ஒன்னுக் கௌம்பி யாரத் தீண்டுதோ, அவங்க எலும்பு இல்லாம எல்லாம் சதயா மாறிடும். அதனால, அவுனுக்கு சதப்பிண்ட வெள்ளரக்கன்னு பேரு. இப்டி ஊரையே நாசம் பண்றான். அந்த ஊர் ராஜம்பொண்ணு, இவன எப்பொ சாவடிக்கிறீங்களோ, அப்பதா நா உள்ளவெ வருவேன்ட்டு பத்து தாதிங்க, பத்து வீரனுங்களக் கூட்டிக்கிணுக் காட்டுக்குப் போய்ட்றாள். காட்ல, காட்டுவாசி தலைவன் புலிகேசின்னு ஒருத்தென். அவுங்களுக்கு எல்லா ஏற்பாடும் பண்றான். அந்தப் பொண்ணு பேரு ஜோதி. அப்பொ அந்த வேடர் தலைவன் சொல்றான். அம்மா ஆலாலச் சுந்தரென்னு ஒரு முனிவரு இருக்குறாரு. அவுருக்கிட்டப் போனாக்கா, சதப்பிண்ட வெள்ளரக்கனென்னு சாவடிக்கிறதுக்கு வழி சொல்லுவாருன்னான். அவ, அந்த முனிவரத் தேடிக்கிணு, நாலு அஞ்சி நாளு அலைறாள். இதுக்குநடுவுல, தம்பிய விரும்புறதா சொல்லிட்டாளே ஹேமலதா. அதனால, நம்போ இங்க இருக்கக் கூடாது. நம்போ நாட்டுக்குப் போய்ட்லான்ட்டு ஒரு லட்டரு எழுதி காவலாளிக்கிட்ட குட்துட்டு, வெள்ளக் குதுர மேல ஏறிக்கிணு அந்தக் காட்டு வழியா வர்றான் வீரமோகன். அந்த நேரம் பாத்து முனிவரத் தேடிக்கிணு வந்தவள, பத்து திருடனுங்க மடக்கிட்டானுங்க. வீரமோகன் முனிவரு இருக்குற மரத்தாண்ட வன்ட்டான். முனிவரப் பாத்து அவுருக்குக்கால்ல வுழுந்த ஒடனே, அவரு கண்விழிச்சிப் பாக்கவே இல்ல. எழுந்தா, குதுரில ஏறிக்கிணுப் போறான். அந்த நேரம் பாத்து அந்தப் பொண்ணுப் போயி ரெண்டு பேர சாவடிக்கிறாள். ரெண்டு பேரும், இன்னா எந்த வூருன்னு வெவரத்தக் கேக்றான். வில் அம்புஎட்த்து ஒன்னவுட்டு எட்டுப் பேரக் கொல்றா(ன்). இந்தப் பொண்ணுப் போயி ரெண்டு பேர சாவடிக்கிறாள். அவெ ஒடனெ, தா பாத்த முனிவரப்பத்தி சொல்றான். சொல்ட்டு குதிரில ஏத்திக்கிணு முனிவருக்கிட்டப் போறாங்க. போயி ரெண்டு பேரும் அவரு கால்ல வுழுறாங்க. அப்பொ அவருப் பாத்துட்டு இன்னான்னுக் கேக்கவொ, எல்லாத்தியும் இவ சொல்றாள். அதுக்கு முனிவரு, நா ஒரு குளிகைக் கல்லு (கூழாங்கல்லு மாரி) தர்றென். அத வாயில போட்டா, காத்தா மாறிடுவெ, அப்பொ யாருக்குமே தெரியாது. அந்த சமயத்துல அவனக் கொன்னுட்லான்னாரு. அத எட்த்துகுணுப் போறங்க.
இவந்தம்பி சுகுணா. அங்க அண்ணெ இருக்கும்போது தம்பி கல்யாணம் பண்ணக் கூடாதுன்ட்டு அவெ ஒரு லட்டரு எழுதி வெச்சிட்டு, அவுங்க அப்பெ நாட்டுக்கு வர்றான். வர்ற வழில சதப்பிண்ட வெள்ளரக்கங்கிட்ட சுகுணா மாட்டிக்கிறான். பாம்பு உயிர் நாடிலர்ந்து வருது. வந்து தீண்டிச்சின்னா எலும்பு இல்லாத சதயா மாறிடுவான். அரக்கனும் அவன லொடக்குன்னு முழுங்கிடுவான். அந்த நேரம் பாத்து அண்ணெ, ஜோதிய ஏத்திக்கிணு வேகமாவந்துட்றான். ஜோதி பாத்துட்டு, ஏங்க யாரோ ஒருத்தரு அரக்கங்கிட்ட மாட்டிக்கிட்டாரு. அவரக் காப்பாத்துணொன்ட்டு சொல்றாள். நீ இந்தக் கல்ல வாயிலப் போட்டுக்குணு போ. அவனக் காப்பாத்திட்டு, அந்தப் பாம்ப வெட்டிசாவடிச்சிடு. நா குதிரிய ஒட்டியார்றேன்றாள் ஜோதி. ஒடனெ வீரமோகன்கல்ல வாயிலப் போட்டுக்குணு காத்தா மாரி போயி, பாம்பு தலய சுத்தி எடுத்து வெட்னாம்பாரு. சதப்பிண்ட வெள்ளரக்கன் அப்டி போயி வுழுந்து செத்துட்டான். சுகுணா ஒடனெ, இன்னாடா இது. நம்போ ஒண்ணுமே செய்ல, இவந்தனியா போயி வுழுறான்ட்டு நெனெக்கிறான். இவனுக்குத்தான் கண்ணுக்குத் தெரியாதெ. அப்டியெ கிட்டப் போயி பாத்தா தம்பி. இவெ ரூபத்துக்கு வந்துட்டான். ரெண்டு பேரும் பாத்துக் கட்டிப்புடிச்சி அழுறாங்க. தம்பிய ஏன்டா வந்துட்டேன்னான். மாமா வூட்டுக்கே போயி ஹேமலதாவ சுகுணாக்குக் கட்டி வெச்சிடுங்க. நானும் ஜோதிய கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்க போய்ட்றேன்ட்டு சொல்லிப்போய்ட்றான்.  சுகுணா இங்கியெ நின்னுட்றான். இவெம் போயி ஜோதியக் கட்டிக்கிணு ஜோதிமா நகரத்த ஆண்டு வர்றான்.                 

  தாலாட்டு
 
காக்காயோ காக்காயோ - எங்க
அம்மாளப் பாத்தீங்களா
வேலூருச் சந்தையிலே
வேடிக்கைப் பாக்குறாங்கோ
பச்சக்கருவோட்டுக்கு
கையேந்தி நிக்குறாங்கோ
கோட்டக்காட்டுல கோடி நிக்குறாங்கோ
பாக்கத்துல பாத்துநிக்கிறாங்கோ

கூவத்தூருல கொஞ்சிக்கினு இருக்குறாங்கோ
     நெடுமரத்துல நெறிஞ்சிப் பாக்குறாங்கோ
ஆடிவர்ற வெள்ளத்துல அசஞ்சி பாக்குறாங்க
சவுக்குக்கடியில சாஞ்சிப் பாக்குறாங்கோ
செய்யூரு சந்தையில செறிஞ்சி வர்றாங்க
கிருஷ்ணப் பஸ்சுல கீச்சிக்குனு உழ்ந்துட்டாங்க.

-கார்த்திகா  (பட்டிபுலம்,காஞ்சிபுரம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக