பேராசிரியர் பு.ஜார்ஜ்,(மகரிசா) இணைப்பேராசிரியர், சென்னைக் கிறித்தவக் கல்லூரி.
கத்திரி
வெயிலில்
கானகத்தில்
நிழல் தேடி
அலைகிறது
மான்...
நல்ல மரம்
கெட்ட மரம்
இன்னபிற எதுவும்
நிழலில்
தெரிவதில்லை...
மாந்தர்
முகத்தில் அப்பியிருந்த
இருளைத்
துடைத்துத்
தன்
உள்ளங்கையில்
ஒளித்து
வைத்துக் கொள்கிறது சூரியன்...
பறவைகளின்
பாட்டொலியில்
அவசரமின்றிப்
புலருகிறது
பொழுது...
பச்சைப்
போர்வையிட்டு
மங்களப்
பூச்சூடி
ரம்மியமாய்
நிற்கிறது அரளி...
மாந்தரை மாய்த்த
காட்சிகளும் கதைகளும்
இமயப்
பனிமழையாய்
மனதைக் கவ்விக்
கொண்டிருக்கையில்
அரளியின்
வசீகரிக்கும்
அந்த மஞ்சள் பூக்களில்
சிறகடித்தவாறே
ஆனந்தமாய்த்
தன் அலகிட்டுப்
பருகுகிறது
பூவின்
கொப்பளிப்பை
கருப்பு வண்ணத்
தேன் சிட்டு
பன்னிரண்டாயிரம்
ரூபாய்க்கு மேல்
வாடகையில்
என் உழைப்பில்
எனக்கொரு வீடு
கொசுக்கள்...குளவிகள்...
தேனீக்கள்...எறும்புகள்...
கரப்பான்
பூச்சிகள்...பல்லிகள்...
எலிகள்...நாய்கள்...
பாம்புகள்...அணில்கள்...
குயில்கள்...மயில்கள்...
மான்கள்...புறாக்கள்...
பன்றிகள்...என
அந்த வீட்டில்
சொந்தம்
கொண்டாடுகின்றன
உள்ளும்
புறமும்...
அழுக்கையும்
ரத்தத்தையும்
உயிரையும்
அமைதியையும்
பாதுகாப்பையும்
மிச்சத்தையும்
தேடும் அவை
தேடப்பட்டவைகளால்
அறியப்படும்...
எது
எப்படியிருந்தாலும்
எனக்கானது
மட்டுமல்ல
என் வீடு
இட்ட
உணவை உண்பதற்குப்
போட்டியிடும்
காக்கையும்
மயிலும்
லாவகமாய் எந்தப்
பக்கமாவது
வந்தமர்ந்து
உண்கிறது
காக்கை...
மயிலின்
விரட்டலை
அலட்சியப்
படுத்துகிறது காக்கை...
திடீரென
அருகில் சென்று
கருப்புக்
குடையை விரித்தால்
மிரண்டு ஓடும்
பாய் காளையைப்
போல்
மிரள்கிறது
காகம்
தோகை விரித்து
விரட்டும்
மயிலின்
விசுவரூபம் கண்டு...
அருகிருந்து
பார்த்த, கேட்ட
காக்கைக்குத்தான்
தெரியும்
மயிலிறகின்
பிரும்மாண்டமும்
அதிர்வுப் பேரோசையும்
மெல்லிய தோகை
வசீகரிக்கும்
அழகுக்கு மட்டுமல்ல
போராடுவதற்குந்தான்
கோடையில்
நிழல் பரப்பிக்
குடைபிடிக்கும்
இலுப்பை
தென்மேற்குப்
பருவக்காற்று
சில்லென்று
பூமியைத் தழுவத்
தொடங்குங் காலத்தில்
இலையுதிர்த்துப்
புதுப்பிக்கத்
தொடங்குகிறது
இலைகளைத்
தளிர்களாய்...
தளிர்களோடு
பிறக்கும் மொட்டுக்கள்
மணம் பரப்பிப்
பூக்கும்…
இரவில் வௌவாலும்
பகலில் அணிலும்
உதிர்க்கும்
பூக்களை உண்ண
மரத்தடியில்
இராப்பகலாய்ப்
புள்ளிமான்கள்
சுற்றிவரும்...
பழுக்குங்
காலத்திலும்
கிளைகள்தொறும்
நிலவொளியில்
நிழலாடும்
தொங்கித் தாவும்
வௌவால்கள்...
மாலைப் பொழுதுகளில்
இலையொடு இலையாய்
ஒளிந்திருக்கும்
கிளிகள்...
மான்களுக்கு
எட்டாக்
கனிகளையும்
கிட்டச்
செய்யும்
கிளிகளும்
வௌவால்களும்...
பகிர்வதற்கு
ஓசையோடு
அழைக்கும் ஒன்று
இரகசியமாய்
அழைக்கும் ஒன்று…
பூத்துக்
காய்த்துக்
கனிந்த மரமோ
மௌனமாய்
நிற்கிறது.
காலைச்
சீறி
வலிய சண்டைக்கிழுத்துக்
காளையைப் போல்
கம்பீரமாய்க்
கொம்புகளோடு
செருக்கித் திரியும்
கலைமான்...
கிளைத்த
கொம்புகளின்
இடுக்குகளில்
அழகாய் நெளியும்
அதிகாரம்...
கொம்புகள்
முற்றி
தலைக்குக்
கனம் ஆகின்ற
காலங்களில்
உதிர்த்துவிட்டு
ஆணவம் இழந்து
அடக்கமாயிருக்கிறது
சகாக்களுடன்...
மீண்டும்
கிளைக்கும்
மென்கொம்புகள்
போலவே
செருக்கும்
இலகுவாக துளிர்க்கும்
காலத்தை
புல்வெளியில்
படர்ந்திருக்கும்
மரநிழலில்
படுத்து
அசைபோட்டுக் கனவுகிறது மான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக