சா. திருவாசகம்,
உதவிப் பேராசிரியர், அ.மா.ஜெயின் கல்லூரி, சென்னை
சார்...! உங்களிடம் ரொம்ப சாவகாசமாகவும் வருணனைகளோடும் கதை சொல்லத்தான் எனக்கும்
விருப்பம். ஆனால், பாருங்கள் நான் தற்போது மிகுந்த படபடப்போடு
இருக்கிறேன். அதற்கு இரண்டு காரணங்கள். முதலில் நான் சொல்லப் போவதை நீங்கள்
கேட்கிறீர்கள் என்பதே ஆச்சர்யமளிக்கிறது. இங்கே யாருக்கும் எதற்கும் நேரமில்லை
சார். ரயிலையோ பேருந்தையோ பிடிக்க மூச்சு வாங்குகிறார்கள். எந்நேரமும் செல்போன்
ஆராய்ச்சி, காதில் எதையாவது மாட்டி அடைத்துக் கொள்கிறார்கள்.
அருகிலிருப்பவர்களிடம் பேசவோ, பேச்சைக் கேட்கவோ அவ்வளவு
பயப்படுகிறார்கள். முன்பின் அறிமுகமில்லாதவர்கள் அருகில் வந்தாலே விலகிப் போகிறார்கள்.
கொஞ்சம் நிமிடங்களுக்கு முன்பு சாலையில் விபத்தாகிய யாரோ ஒருவரின் இரங்கல் கதையையோ,
கழிப்பறை தேடியலைந்து கிடைக்காமல் பொது இடத்தில் அசுத்தப்படுத்திய
இன்னொரு வரின் சமூக அவலக் கதையையோ கூட கேட்காமல் முகம் சுளிப்பவர்களுக்கு நடுவில் என்
கதையை நீங்கள் கேட்பதுதான் படபடப்புக்கான முதல் காரணம்.
இரண்டாவது, நான் சொல்லப்போகும் விஷயம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்றாலும்
அதைச் சொல்லத் தொடங்கும் இந்த நிமிடத்திலும் குழப்பமாகவே இருக்கிறது. அப்போதே இதை
சில நண்பர்களிடம் சொல்லி என் சந்தேகத்தைக் கேட்டேன். விவகாரமாகிவிடப் போகிறது
வெளியில் சொல்லாதே என்று பயமுறுத்தினார்கள். நானும் ஒன்றும் போராளி எல்லாம் இல்லை.
பயந்து போய் அமைதியாகி விட்டேன். ஆனாலும் இதை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்கின்ற
நினைப்பு ஐந்தாண்டுகளாக இருந்து
கொண்டேதான் இருக்கிறது. பழைய கதை என்பதால் கொட்டாவியாக உணர வேண்டாம். முடிந்தவரை
சுவாரசியமாக சொல்ல முயற்சிக்கிறேன். கவனமாகக் கேளுங்கள். கொஞ்சம் துல்லியமாகச்
சொல்வதென்றால் 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது
வாரத்தின் ஏதோ ஒரு நாளின் மாலை செய்தித்தாளில்தான் அந்தச்
செய்தியைக் கண்டேன். கொஞ்சம் பிசகியிருந்தாலும் அடுத்த
பக்கத்தில் ‘கள்ளக்காதல்’ செய்திகளுக்குத்
தாவியிருப்பேன். ஒரு மூலையில் குட்டியூண்டு சைசில் போட்டிருந்தார்கள்.
“பாரதிதாசன்
பாடல் ஒப்புவித்தல் போட்டி - பரிசு ரூ.5000, ரூ.3000,
ரூ.2000” சொக்கா! சொக்கா! என்று கத்தாத
குறைதான் போங்கள். நியாயப்படி பார்த்தால் அந்தச் செய்தியை நான் கடந்து போயிருக்க
வேண்டும் அல்லது என் மாணவர்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். என்ன
பார்க்கிறீர்கள்! ஆமாம். நான் ஒரு ஆசிரியர். அதுவும் கல்லூரியில், சொல்லவேயில்லை
இல்லையா. மன்னியுங்கள், இந்தப் பதட்டத்தில் கோர்வையாகச்
சொல்ல முடியவில்லை.
சார்! இந்த
இடத்தில் என் முன்கதை சுருக்கத்தைச் சொல்லிவிடுகிறேனே. சுருக்கமாகத்தான். நான் ஒரு
லெக்ச்சுரர். தமிழ் லெக்ச்சுரர். கவர்மெண்ட் காலேஜ். யாரேனும் என்னைப் பற்றிக்
கேட்டால் அப்படித்தான் ‘கெத்’தாக
அறிமுகப்படுத்திக் கொள்வேன். ஆனால், அரசாங்க விதிகளின்படி,
நான் ‘கெஸ்ட் லெக்ச்சுரர்’. கௌரவ விரிவுரையாளர்,
விருந்து நிலை, மருந்து நிலை என்று என்னென்னவோ தமிழ்ப்படுத்துவார்கள். ஒரு
வெங்காய
கௌரவமுமில்லை. வெண்டைக்காய் விருந்தும் இல்லை.
அரசுக்
கல்லூரியில் மாதத்திற்கு நாற்பது மணி நேரம் பாடம் நடத்த வேண்டும். ஒரு மணி
நேரத்திற்கு நூறு ரூபாய். நாற்பது மணிகளுக்கு மொத்தம் நாலாயிரம் சம்பளம். ஒருசில
மாதங்களில் நாற்பத்தைந்து ஐம்பது மணி நேரம் கூட பாடம் நடத்துவோம். அப்போதும் அதே
நாலாயிரம்தான். ஆனால், முப்பது முப்பத்தைந்து என்று குறைந்தால் மட்டும்
மூவாயிரம் மூவாயிரத்து ஐந்நூறு என்று சம்பளம் குறைந்துவிடும். அந்த பணமும்கூட
ஒவ்வொரு மாதமும் சரியாக வந்து சேராது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான்.
இதுதான் எங்கள் நிலை. கேட்கிற நீங்கள் இவ்வளவு அனுதாபம் காட்டுகிறீர்கள்.
ஆனால், அரசாங்கம் துளிகூட கருணை காட்டவில்லை சார்.
கூட்டமாகப் போய் கல்வி அமைச்சரிடம் முறையிட்டோம். “ம்.. ம்..
சரி பண்ணிடலாம்யா” என்றார் மூக்கு நோண்டிக்கொண்டே.
“உன்னுடைய
முன்கதைக்கு ஒரு பத்தி போதும் நேரா பாரதிதாசன் மேட்டருக்கு வாய்யா” என்று சொல்ல நினைக்கிறீர்கள். அதான் சார்! மாதா மாதம் சம்பளம் தருவதில்லை
அல்லவா? நாங்கள் என்ன செய்வோம் ஜீவனத்திற்கு. அன்றைய
தேதியில் நான் இளைஞன். 26 வயது. மனைவி, பிள்ளைகள் இல்லை (இன்று வரையிலும்தான்!). அறைவாசி. அந்த அறைக்கும் வாடகை பாக்கி. வீட்டு உரிமையாளருக்கு இரண்டு
பிள்ளைகள். நாலாங்கிளாஸோ என்னவோ படித்தார்கள். தினமும் மாலையில் அவர்களுக்கு ‘அறம் செய விரும்பு’ சொல்லிக் கொடுத்ததால் அறை
வாடகையை அப்படி ஒன்றும் கறாராகக் கேட்டதில்லை. ஆனால், நான்
தினமும் சாப்பிட்டு வந்த உணவக முதலாளிக்கு இருபதைக் கடந்த தடிமனான இரண்டு
வாரிசுகள் இருந்தார்கள். அதிலும் அந்த சின்னவன், ஜிம்
நடத்திக் கொண்டிருந்தான். அவன் அப்பாவுக்கு நான் ரூ.1500
கொடுக்க வேண்டியிருந்தது. அவன் என்னைக் கடந்து போன போதெல்லாம் அவர்களின் உணவக
சாப்பாடு செரிமானம் ஆகாமலே அவசரமாக வெளியேறத் துடிப்பது போலிருக்கும்.
பயம் சார்! கடன் பயம்.
சரி...
நண்பர்கள் யாரிடமாவது கேட்டிருக்கலாமே என்கிறீர்கள். என் சம்பளத்தின் யோக்கியதைப்
பற்றி அவர்கள் முன்பே தெரிந்திருந்தார்கள் என்பதாலோ என்னவோ போன் பண்ணாலே
எடுக்கமாட்டார்கள். அழைப்பை எடுக்கும் ஓரிருவரோ “சேர்ந்தே இருப்பது புலமையும்
வறுமையும் என்று சரியாகத்தான் சொல்லியிருக்கார் சிவாஜி கணேசன்” என்று பகடி செய்தார்கள். கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் தெரியாதவர்கள்.
என்னிடமிருந்த
கடைசி சேமிப்புப்பணம் ரூ.260 (ஓரிரு பத்து ரூபாய் தாள்கள், நிறைய 5, 2, 1 ரூபாய் நாணயங்கள்) அவ்வளவும் தீர்ந்து
போய்விட்டிருந்தது. ஒருவாரமாக இரண்டு வேளை ஆகாரம்தான். புறநானூற்றுக் கவிஞன்
ஒருவன் பெருஞ்சித்திரனோ எவனோ ‘பசி
தினத்திரங்கிய கசிவுடை யாக்கை...’ என்று பாடியது போல்
ஆகிவிட்டது என் தேகம். ஸாரி சார்.. மிரள வேண்டாம். எப்பவோ படித்தது சட்டென்று
நினைவுக்கு வந்துவிட்டது. அதுவுமில்லாமல் என் தரித்திரத்தின் தீவிரத்தை ஏதேனும்
உதாரணத்துடன் சொன்னால்தான் நான் செய்த அல்பத்தனத்திற்கான வலுவான காரணம் அமையும்.
இனிமேல்
செலவுகளுக்குப் பணம்...? என்று கையைப் பிசைந்து கொண்டிருந்த சமயத்தில்தான்
அந்த நாளிதழ் அறிவிப்பு - பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் - என் கண்ணில் பட்டது.
மனதில் ஒரு திட்டம் உருவானது அல்லது தீட்டினேன் (வார்த்தையைக்
கவனியுங்கள் ஏதோ சதித்திட்டம் போல் இருக்கிறதா, சதித்திட்டம்தான்).
எனக்கு
நெருக்கமான என் பேச்சை மதிக்கும் மாணவர்களில் யாரையாது ஒருவனை போட்டியில் கலந்து
கொள்ள வைப்பது, பரிசை வெல்வது, பணத்தைப் பங்கு போட்டுக் கொள்வது,
இதுதான் என் திட்டம். ‘அட அல்பமே’ என்று நினைக்கிறீர்கள். அன்றைய என் வறுமையைக் கொஞ்சம் யோசியுங்கள் சார். எனக்கு நெருக்கமான மாணவர்கள்
மூன்று பேர். அருண், கிறிஸ்தோபர்,சுசித்ரா.
அருண் கணினி மாணவன். 2007லேயே ஆர்குட், 2 ஜீபி மெகா பிக்ஸல் என்று பயம் காட்டியவன். அவன் பிறந்த தேதியைக் கேட்டால்
கூட கணினியில் பார்த்துதான் சொல்வான். ‘அவ்வளவு’ ஞாபக சக்தி. மனப்பாடமெல்லாம் அவனுக்கு ஒத்துவருமென தோன்றவில்லை. சுசித்ரா
ஜீன்ஸ் பெண், ஸ்டைலாகப் பேசுவாள். - ய்யேண்டா இவ்ழோ ழேட் -
அருணுக்கு நெருங்கிய தோழி (என்று சொல்லிக் கொள்வாள்). கதை, இலக்கியம்
என்று என்னையுமறியாமல் எப்போதாவது பேச ஆரம்பித்தால், செல்போனை
காதில் வைத்துக் கொண்டு “ம்ம்...சொல்லுடி...” என்று எழுந்து போய்விடுவதைக் கவனித்திருக்கிறேன். தவிரவும், ஒரு மாணவியுடன் சகஜமாக பேசும் ஆசிரியரை எங்கள் சக ஆசிரியர்கள்
சீரானசுவாசத்துடன் எதிர்கொள்ள மாட்டார்கள் என்பதால் சுசியும்
டெலிட், இறுதியாக கிறிஸ்தோபர் (க்ருஸ்டஃபர் என்பாள்
சுசித்ரா). கொஞ்சம் கவிதை இலக்கியம் என்று திரிபவன். அடிக்கடி எதையாவது
எழுதிக்கொண்டு வந்து காண்பிப்பான். எல்லாம் என்னவளே... அன்பே... ஏ மனிதா வகையறா,
ஆர்வமுள்ளவன். கொஞ்சம் பயிற்சிக் கொடுத்தால் ஓரளவு வருவான். ஆகவே,
என் திட்டத்திற்கு அவனைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். என்
திட்டத்தைக் கிறிஸ்தோபரிடம் சொன்னேன்.
“பாரதிதாசன்னா...
செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடியவர்தானே ஐயா” என்று கேட்டு
கலங்கடித்தான்.
“இல்லடா
இவர் வேற ஆள் பெண்ணை வர்ணிக்கும் போது கூட தமிழ் தமிழ்னு பாடுவார் முக்கியமான
கவிஞர்” என்றெல்லாம் ஏதேதோ சொல்லி போட்டியில் கலந்துகொள்ள
மூளைச்சலவை செய்தேன்.
“அதெப்படி
ஐயா காலேஜ் ப்ரின்சிபாலுக்கு சர்க்குலர் வந்திருக்கும்ல வழக்கமா இதுமாதிரி
போட்டிகளுக்கு அந்த ஹிஸ்ட்ரி எழிலரசனையோ பி.காம் சரண்யாவை யோதானே அனுப்புவாங்க.
நான் எப்படி திடீர்னு கலந்துக்க முடியும்? என்று கேட்டான்.
அவன் சொன்னது உண்மைதான். வழக்கமாக போட்டிகளுக்கு அனுப்புவதற்கென்றே கல்லூரியில்
சில பயல்களைத் தயார் செய்து வைத்திருப்பார்கள். கிராதகர்கள். ஆனால், நானொன்றும் அம்மாஞ்சி இல்லசார். அந்தப் பரிசுத் தொகையை இழக்கத் தயாராக
இல்லை.
“அதப்
பத்தி நீ கவலைப்படாதே. தமிழ்த்துறைக்கு நான்தானே இன்சார்ஜ். பிரின்ஸ்பால்கிட்ட
பேசிக்கறேன். புது மாணவர்களை வளர்த்துவிடணும் ஐயா. தன்னம்பிக்கை வளரும் அப்துல்
கலாம் சொன்னமாதிரி.. அப்படி இப்படினு எதையாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன் நீ
சரின்னு சொல்லு” என்றேன். என்புத்தி குறித்து என்ன முடிவு
செய்தானோ தெரியவில்லை. “சரி ஐயா” என்று
ஒத்துக்கொண்டான். அவன் என் வறுமையை நேரிலேயே கண்டவன். அவனிடம் கூட நூறு ரூபாய்
கடன் வாங்கியிருக்கேன் என்று நினைவு. தங்கமான பையன்.
அன்றைய தினமே “ஆபரேஷன்
பாரதிதாசன்” திட்டத்திற்குத்
தயாரானோம். திட்டத்தின் முதல் படி போட்டிக்கென்று கொடுக்கப்பட்டிருந்த மனப்பாடப் பாடலைத்
தேர்ந்தெடுத்தல், மூன்று பாடல்கள் கொடுத்திருந்தார்கள்.
முதல் பாடல் பாரதிதாசன் எழுதிய ‘என்னருந் தமிழ்
நாட்டின்கண்...’ என்று தொடங்கும் பாடலைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தேன்.
“போட்டிக்கு
இன்னும் அஞ்சு நாள் இருக்கு. ஆனா, நீ நாளைக்கே முழுசா மனப்பாடம்
பண்ணிடணும் அப்போதான் இன்னும் நல்லா பயிற்சி செஞ்சி ஜெயிக்கலாம்” என்று சொல்லி புத்தகத்தை அவனிடம் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு எதுவுமே
சொல்லாமல் போய்விட்டான். எனக்கோ மனசு அடித்துக்கொண்டது. ரொம்ப நல்ல பாட்டு. சுலபமா
மனப்பாடம் செய்யலாம். அழகா ஜெயிக்கலாம். பரிசைத் தட்டலாம். பார்க்கலாம் என்ன
பண்றான்னு என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் சார், என் தவிப்பையும் ஐயப்பாட்டையும் நூறு சதவீதம் போக்கினான் கிறிஸ்தோபர்.
காலையில் புத்தகத்தை வாங்கிச் சென்றவன் அன்று மாலையே என் அறைக்கு வந்தான். சாதித்த
பெருமிதம் அவன் முகத்தில், “மனப்பாடம் பண்ணிட்டேன் ஐயா”
என்றான் கம்பீரமாக. நான் நம்ப முடியாமல் “எங்கே
சொல்லு பார்க்கலாம்” என்றேன்.
‘ம்க்கும்’ என்று
தொண்டையைச் செருமிக்கொண்டு ‘என்னருந்தமிழ் நாட்டின்கண்’ என்று ஆரம்பித்தான்.
நான் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் என் பார்வையைப்
பொருட்படுத்தாமல் பாடலைச் சரளமாக சொல்லிக்கொண்டே சென்றான். நான் ஆச்சர்யம்,
வியப்பு எல்லாம் அடைந்து முடிவதற்குள் அவன் பாடலின் கடைசி வரியை
உள்ளம் சொக்கும் நாள் எந்நாளோ”- சொல்லி முடித்திருந்தான்.
நான்
திணறித்தான் போனேன். அரை நாளுக்குள் இவ்வளவு பெரிய பாடலை கொஞ்சம் கூட
பிழையில்லாமல் சொல்ல எப்படி முடிந்தது. இவனால், பரீட்சைக்குக் கூட இத்தனை
படித்திருப்பானோ என்னவோ அரசாங்கத்திற்கு இல்லாத அக்கறை இவனுக்குத்தான் எவ்வளவு
இருந்தது என்மேல். அவ்வளவு சீராக சொன்னான் சார். நானே
வியந்து போய் விட்டேன். “எப்படிடா இவ்வளவு சீக்கிரம்
மனப்பாடம் பண்ணினே”.
அதற்கு அவன்
சிரித்தபடியே சொல்கிறான். “ஐயா இது பிளஸ் டூ பாடமா வந்தது. ஏற்கனவே படிச்சதுதான்”
என்று திகீர் என்றது எனக்கு. சிரிக்கக் கூடிய விஷயமா சார் அது.
“இத
ஏன்டா முன்னாடியே சொல்லல... நீ வேணும்னா பாரு போட்டிக்கு வர்ற பசங்கள்ல நெறைய பேர்
இந்தப் பாட்டைத்தான் சொல்லுவாங்க. ஏன்னா அதான் பிளஸ் டூல படிச்சிருக்காங்கல்ல. தோ
பார்டா எப்பவுமே ஒரு போட்டியில எல்லோரும் செய்யறத நாமளும் செய்யக்கூடாது. வித்தியாசப்படணும்
போட்டிகளுக்குப் போறவங்களுக்கு இதுதான் பாலபாடம்” என்று
மூச்சு வாங்க விளக்கினேன். என்னுடைய பதின் பருவங்களில் பள்ளி இலக்கிய போட்டிகளில் நான்
பெற்றிருந்த வெற்றிகள் குறித்து (எல்லாம் துக்கடா) ஏற்கனவே கதை கதையாக சொல்லியிருக்கிறேன்.
என் போன்றவர்களுக்குச் சிற்றின்பம் பேரின்பம் எல்லாமே அதுதானே.
பழைய வெற்றிகளைப் பெருமிதமாக சொல்லிக் கொள்வது.
என் அறிவின்
மேல் கொண்ட நம்பிக்கையோ அல்லது என் வறுமையின் மீது கொண்ட கரிசனமோ, வேறு பாடலை மனப்பாடம் செய்யச் சம்மதித்தான். எவ்வளவு
நல்ல பையனா இருக்கான் பாருங்க சார். இரண்டாவது பாடலைப்
படித்துக் காட்டினேன்.
“தட்டுப்படாத
பெரும் பொருட்கொரு சாதியும் படுவா? சாதியும் உண்டோடா?”
இந்தப் பாட்டு கேட்பதற்கு ரொம்ப நல்லாயிருக்கும்டா... “அறம் பிறக்குமடா படுவா அறம் பிறக்குமடா... அப்டினு கையை நீட்டி முழக்கமிட ரொம்ப
ரைமிங்கா இருக்கில்ல இந்தப் பாட்டு” என்று அவனிடம்
அபிப்ராயம் கேட்டேன். நானே முழக்கமிட்டும் காட்டினேன். நன்றாகத்தானிருந்தது. ஆனால்,
அவனோ அமைதியாக என்னவோ யோசித்துக் கொண்டிருந்தான். இருக்காதா பின்னே.
அது கொஞ்சம் பெரிய பாட்டு. எப்படி மனப்பாடம் பண்ணுவான்? குழந்தை.
எனக்கே கஷ்டமாகத்தான் இருந்தது. “ஏன்டா யோசிக்கிறே பாட்டு பெருசா
இருக்கா மனப்பாடம் பண்ண முடியாதா... சரி வேணாம் விடு, முணாவது
பாட்டு ‘தமிழ் வாழ்த்து’ படிக்கலாம்.
அது சின்னதா இருக்கு பார்” என்றேன். அவன் மனசு சங்கடப்படக்கூடாது இல்லையா சார். ஆனால், கிறிஸ்தோபர் என் அன்பு மாணவன் - வீறு கொண்டு
சூளுரைத்தான். “ஐயா மூணு பாட்டையுமே மனப்பாடம் பண்றேன். எந்தப் பாட்டை நெறைய பேர் சொல்லலையோ அத நான் சொல்றேன். ஜெய்க்கிறோம்யா
ஜெய்க்கிறோம்”.
எனக்கு அழுகையே
வந்துவிட்டது சார் அப்போ. அவனுக்கு நான் ஒன்றுமே செய்ததில்லை சார். அவன் எழுதிய
கவிதைகளைப் படித்து சும்மனாச்சுக்கும் பாராட்டியதோடு
சரி. அப்புறம் ஏனிந்த குருபக்தி அவனுக்கு. அவனை மாதிரியெல்லாம் மாணவர்கள்
வாய்ப்பது அபூர்வம் சார். அந்த நிமிஷம் அரசாங்கத்தின் மீதிருந்த அத்தனை
கொலைவெறியும் அவனது அன்பில் கரைவது போலிருந்தது. அடுத்து வந்த நான்கு நாட்களிலும்
கல்லூரி வகுப்புகள் முடிந்த பிறகு அவனுக்குக் கடுமையான பயிற்சி யளித்தேன்.
வார்த்தைகளை மிகத் தெளிவாக, ஏற்ற இறக்கத்தோடு, பாவனைகளோடு ஒப்புவித்தல், கை நீட்டுதல், உயர்த்துதல், எல்லாம் சொல்லிக் கொடுத்தேன். வெற்றி
பெற வேண்டும் என்கின்ற வெறி சார்.
போட்டி நாள். மற்ற
கல்லூரிகளிலிருந்து தலா மூன்று மாணவர்கள் வந்திருந்தனர். நான் என் கிறிஸ்தோபரை
மட்டும் அழைத்துச் சென்றிருந்தேன். அந்த எழிலரசனோ சரண்யாவோ வந்து ஜெய்த்துவிட்டால்
அவர்களிடம் கடனாகவா பணம் கேட்கமுடியும். தேவையில்லை சார். என் அன்பு மாணவனே
போதும். 5000ல் 3000மாவது கொடுப்பான். மூவாயிரம் சார்.
மாதத்திற்கே எனக்கு நாலாயிரம்தான். எவ்வளவு பிரச்சினைகள் தீரும்.
இப்போது ஒரு
விஷயம் சொல்கிறேன். அந்தப் போட்டியை நடத்தியவர்கள் ஆளும் கட்சி அரசியல்வாதிகள்.
இம்மாதிரி போட்டிகளை மாவட்டம் தோறும் நடத்தி இறுதியாக மாநில அளவில் நடத்தவும் திட்டமாம்.
அதில் முதல் பரிசு பத்தாயிரமாம். ஹப்ப்பா... பத்தாயிரம். வேணாம் சார். தவறு. பேராசை கூடாது. எனக்கு அஞ்சாயிரமே போதும். இதற்கே எவ்வளவு
மானம் கெட வேண்டியிருக்கிறது. மானம் கெடுதலின் உச்சமாக ஒரு காரியம் செய்தேன்.
போட்டி அமைப்பாளர்களிடம் நானே வலியச் சென்று
பேச்சுக் கொடுத்தேன். அவர்களின் வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டேன். (எ.கா)
போட்டியிடும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலை எழுதுவது, பாவிப்
பெயல்கள் ஒரு போட்டிக்குப் பதினெட்டுப் பேரா வந்து தொலைப்பார்கள். என் வெற்றிக்
கதைகளில் எல்லாம் மூன்று பரிசுகளுக்கு நான்கு பேருக்கும் குறைவாகத்தானே
வந்தார்கள். என்ன செய்வது? அப்போதெல்லாம் ஸ்கெட்ச் பேனா,
வண்ணப் பென்சில்கள் என்கின்ற அளவில்தானே
பரிசுப் பொருட்கள் கொடுத்தார்கள். ஆயிரமெல்லாம் யார் கண்டார்கள். கட்சியின்
மாவட்டச் செயலாளர் வந்ததும் போட்டி தொடங்கியது. எனக்கு வியர்க்கத் தொடங்கியது.
ஜெயிக்கணுமே சார். கிறிஸ்தோபர் என்னமோ சாந்தமாக இருந்தான். ஜெபம் செய்திருப்பான்
போல. “நல்லா வேண்டிக்கோடா நம் வறுமை ஒழியணும்னு” என்றேன் மனதிற்குள். பெயர்ப்பட்டியலை நான்தான் எழுதியிருந்தேன் அல்லவா.
இவனின் பெயரை கடைசிக்கு சற்று முன்பு வருமாறு எழுதியிருந்தேன். அதுவும் போட்டி யுக்திகளில்
ஒன்று சார். ஆரம்பத்தில் பேசுபவர்களை விடவும் கடைசியாக பேசுபவர்களின் பேச்சு நடுவர்களின்
மனதில் பதிந்திருக்கும். அதனால்தான் அவன் பெயரை கடைசிக்கு முன்பாக வைத்தேன்.
நன்றாக ஒப்புவிப்பான். நடுவர்களின் மனதில் பதியும். பரிசளிப்பார்கள். எப்படி சார்
என் சமயோசிதம். நான் எதிர்பார்த்ததெல்லாம் நடந்தது சார். நான் சொன்னது போலவே அந்தப் பிளஸ் டூ பாட்டை பலரும் ஒப்புவித்துச் சென்றார்கள். கிறிஸ்தோபர் என்னைப்
பார்த்தான். என் மதியூகத்தை மெச்சும்படியான பார்வை அது. ஒரு முன்னாள் வெற்றி வீரன்
என்றால் சும்மாவா.
“ஐயா
‘தமிழ் வாழ்த்து’ பாட்டைத்தான் யாரும்
சொல்லல. நான் அத சொல்லட்டுமா” என்று கேட்டான். என்னோடு
பழகிப் பழகி என் மதியூகம் அவனுக்கும் வந்துவிட்டது போலும். ஆசிர்வதித்து அனுப்பி
வைத்தேன் மேடைக்கு.
“தமிழே
வாழ்க தாயே வாழ்க அமுதே வாழ்க அன்பே வாழ்க...” தெளிவான உச்சரிப்பு.
ரசிக்கும்படியான பாவனை, தேவையான ஏற்ற இறக்கத்தோடு சொல்லிச் சென்றான். சும்மாவா சார். அவ்வளவும்
பயிற்சி. ஆனால், பயிற்சியைவிட மேடையில் பல மடங்கு அற்புதமாக
ஒப்புவித்து அசத்தினான். அடடா இவனை மாணவனாகப் பெறவே யான் என்ன பேறு பெற்றிருக்க
வேண்டும். சொக்கா சொக்கா. பலத்த கைத்தட்டல் களுக்கிடையே மேடையி லிருந்து
இறங்கியவனை கண்ணீருடன் தோளில் சாய்த்துக் கொண்டேன். உணர்ச்சிப் பெருக்கு சார். கிறிஸ்தோபருக்குப்
பின்னால் இரண்டு பையன்கள் பேசினார்கள். எல்லாம் தத்தக்கா பித்தக்கா சார். இவன்
அளவுக்கு யாரும் இல்லை. ஒருவழியாக எல்லாம் சுமூகமாக முடிந்துவிட்டது. இனி, பரிசளிப்பு நிகழ்ச்சிதான்.
யாரங்கே வந்து சீக்கிரம் அறிவியுங்கள் என் கிறிஸ்தோபர் பெயரை என்று அலறாத
குறைதான்.
“மூன்றாம்
பரிசு” என்று சொல்லி வேறு எவன் பெயரையோ
அறிவித்தார்கள். அடச்சே ஒழிந்து போகட்டும். இவனை விட ஆள் பிரமாதமாக ஒப்புவித்தானே.
“இரண்டாம்
பரிசு”. அட திக்கித் திணறி ஒப்புவித்த ஒரு ஒல்லிப் பையன்,
அப்படியென்றால் முதல் பரிசு... கண்டிப்பாக நம்பினேன் சார் நம்பினேன். ஆனால்,
“முதல் பரிசு என்று கூறி... ஐயைய்யோ... கிறிஸ்தோபர் பெயர் இல்லை
சார். வேறு எவன் பெயரோ, அவ்வளவு அழகாக தெளிவாக பாடல்
ஒப்புவித்த என் கிறிஸ்தோபருக்கு ஒரு பரிசு கூட இல்லை. இதெல்லாம் அயோக்கியத்தனம்
சார். ஒரு தப்பும் பண்ணலயே. திக்கல், திணறல் இல்லை. அப்புறம்
ஏன் பரிசு குடுக்கவில்லை. எத்தனை எத்தனை கடமைகள் இருந்தப அந்தப் பரிசுத் தொகைக்கு. யோசித்துப் பாருங்கள் சார்.
என் மனநிலையை எப்படி துடித்திருப்பேன் என்று. கிறிஸ்தோபர் பேந்த பேந்த முழித்துக்
கொண்டிருந்தான். நடுவர் குழுவினரிடம் போய் ஆவேசமாகக் கேள்வி கேட்க வேண்டும் என்று
ஆத்திரப்பட்டேன். பரிசுத் தொகைக்காக என்று இல்லாவிட்டாலும்கூட அறச்சீற்றம் என்று
ஒன்றிருக்கிறது இல்லையா. நீதி முக்கியம் சார். கண்டமேனிக்கு அவர்களைக் கறுவிக் கொண்டிருந்தபோது
(மனதிற்குள்தான்) ஒரு கறை வேஷ்டி எங்கள் அருகில் வந்தார்.
“தம்பி
ரொம்ப நல்லாத்தான் படிச்சாப்ல கடேசில முடிக்கும்போதுதான்...
மாவட்ட செயலாளரு
எங்க ஆளுங்களுக்கெல்லாம் சுருக்னு ஒரு மாதிரி ஆய்டுச்சி போலிருக்கு”
அவர் சொன்னதைக்
கேட்டு ஒரு நிமிடம் யோசித்த போது எனக்கும் கூட ‘சுருக்’கென
உறைத்தது. தமிழ் வாழ்த்துப் பாடலின் இறுதி வரியை பாரதிதாசன் இவ்வாறு
முடித்திருப்பார். “தமிழ்நாட்டுக்கும்
பிற நாட்டுக்கும் அமிழ்தாய் அமைத்த அம்மா வாழ்க! அம்மா
வாழ்க!”
சார் இவ்வளவு
நேரம் பொறுமையாகவோ, இடையிடையே செல்ஃபோனை தடவிக் கொண்டோ, தூங்கி வழிந்துகொண்டோ இந்தக் கதையைக் கேட்டீர்கள் அல்லவா. நீங்கள்
சொல்லுங்கள். அன்றைக்கு அந்தப் பண முடிப்பை நான் பெறாமல்
போனதற்குக் காரணம் கிறிஸ்தோபரா பாவேந்தரா?.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக