வியாழன், 26 செப்டம்பர், 2013

சமூகம் – படைப்பு- பெண்

மு. நஜ்மா, முனைவர் பட்ட ஆய்வாளர், சென்னைப் பல்கலைக்கழகம்

பெண்என்பதற்கான கருத்துருவாக்கம் காலப்போக்கில் பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டாலும் அது கற்புஎன்கிற அச்சாணியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டேதான் அலைகின்றது. இதைச் சுற்றிக் கட்டப்படும் விழுமியங்கள் பெண்ணின் ஒவ்வொரு அசைவுகளையும் தீர்மானிக்கும் கருவிகளாக வினைப்படுகின்றன. வீடுகளில், வீதிகளில் பயிலும் இடங்களில், பணிபுரியும் இடங்களில் என்று எங்கு ஓடினாலும் இவ்விழுமியங்கள் சாட்டை பிடித்து அடித்துத் துரத்திக் கொண்டேதான் வருகின்றன. இதையும் தாண்டி ஆண்-பெண் உறவு பல்வேறு நிலைகளில் பயணித்துக் கொண்டுதான் உள்ளது. இவ்வாறு எதிர்கொள்ளும் உறவுகளைச் சமூகத்தித்றகு அடையாளம் காட்டவோ அல்லது அங்கீகாரம் பெறுவதற்கோ முயலுவது முட்டாள்தனம் என்றுகூடச் சில நேரம் சொல்லத் தோன்றுகிறது. என்றாலும், அதற்கான எத்தனிப்புகள் செயல்பட்டுக் கொண்டேதான்  இருக்கின்றன. படைப்பாளி இதற்கான வாய்ப்பாக வடிகாலாக படைப்புகளை உருவாக்குகிறாள். இப்படியான ஒரு மனநிலையில் எழுதியதுதான் இடைவெளியில் உருவாகும் சில அத்தியாயங்கள்என்கிற சிறுகதை. இதை எழுதுவதற்கான சூழலைப் பகிர்ந்து கொள்வது என்பது பெண்ணைப் பற்றிய சமூக மதிப்பீட்டிற்கான அளவுகோலை அவதானிப்பதாகவும் உள்ளது.
ஆண் -பெண் உறவு என்பது பாலியலை அடிப்படையாகக் கொண்டது என்பதைக் கணக்கில் கொள்ளாமல் தொடரும் உறவுகள் பல உள்ளன. அத்தகைய ஒரு உறவைப் பற்றிய கதை இது. மனித மனம் ஐம்புலன் தாண்டிய வார்த்தைகளுக்குட்படாத பல உணர்வுகளிலும் லயிக்கின்றது. அது ஏதோ ஒரு வகையில் முழுமையை உணர வைப்பதாக உள்ளது. அப்படிப் பட்ட பயணத்தைத் தேடி ஒரு பெண் ஓடுவதை அக்கதை சொல்லுகிறது. சிறு வயதில் கையில் பழைய புத்தகங்களை வைத்துக் கொண்டும் துண்டை மாராப்பாகப் போட்டுக் கொண்டும் விளையாடிய டீச்சர் விளையாட்டில் கிடைத்த லயிப்புதான் அவளைத் தீர்மானித்தது. சிறு வயதிலேயே உடன்பயிலும் மாணவர்களைத் தனது மாணவர்களாகப் பாவித்து கல்லூரிக்  காலம்  வரை  அதே  மனோபாவத்துடன்  இருந்த  அப்பெண்ணுக்கும் உடன் பயிலாளன் ஒருவனுக்கும் இருந்த உறவு குறித்தும் இக்கதை பேசுகின்றது. அவன்  எப்போதும் தன்னை வளர்த்த சம்பூரணம் டீச்சரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பான். டீச்சர் தொழில் மீது அக்கறை கொண்ட லயிப்பு சம்பூரணத்தின் மீதும் அவளுக்கு  ஏற்பட்டது. இதன் உச்சம் தானும் சம்பூரணம் டீச்சர் மாதிரி ஆகணும்னு அவளைத் தூண்டியது. இதற்காகவே அவனைச் சுற்றித் திரிந்த அவளைச் சமூகம்  அப்படித்தான் பார்த்திருக் குமா-? பாலியல் உணர்வுகளில் ஏற்பட்ட தேக்கங்களை சுமந்து கொண்டிருக்கும் இச்சமூகம் பார்க்கின்ற வைகளிலும் கேட்பவைகளிலும் அவற்றைப் பொருத்திப் பார்த்து திருப்தி அடைகின்றது. இறுதியில் அவள் சம்பூரண            மாகாமலேயே இறந்து விடுகின்றாள் என்று கதையில் அவளைச் சாகடித்து எழுதினேன். இப்படி அவளைச் சாகடிப்பது எனக்குள் பொதிந்து கிடக்கும் சமூகம் கற்பித்த கற்பு  என்கிற விழுமிய மனோபாவமோ என்கிற எண்ணம் வந்தது. சமூக அங்கீகாரத்தை நோக்கி அவள் ஏன் சாகடிக்கப்பட வேண்டும் என்ற கதையின் இறுதி வரியை அடித்து விட்டு, அவர்கள் சமூகத்தைக் காரி உமிழ்ந்துவிட்டு தங்கள் உறவை தொடர்ந்தனர். அவள் சம்பூர்ணமாகவே வாழத் தலைப்பட்டாள் என முடித்தேன். இப்படித் தன்னை ஆசிரியராகப் பாவித்துக் கொள்ளும் பெண்ணின் மனநிலை உண்மையில் எதனால் உருவாகிறது? பல்வேறு சூழலில் ஒடுக்கப்படும் ஒரு பெண்ணின்  புனைவு அதிகார வெளிப்பாடுதான் இத்தகைய பாவிப்புகளுக்குக் காரணமாக இருக்கின்றது. இன்று வரை அக்கதை பிரசுரிக்கப் படாமலேயேதான் உள்ளது.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக