எல்லா உயிரும் கேளிர்!
- தயானந்தன் (p.dayanandan@gmail.com)
“உலகெல்லாம் என் உறவினர், ஆப்பிரிக்காவில் என் வேர்” என்று சொன்னேன். ஜாதி, மதம், மற்ற பேதம் எல்லாம் தாண்டிவரும் அந்த இளைஞர்களுக்குப் பெருமகிழ்ச்சி. ‘சிம்பான்சி உங்கள் உறவு; வேப்பமரம் கூடத்தான்’ என்றேன். நிமிர்ந்து உட்கார்ந்தார்கள், எல்லாருக்கும் காது இருந்தது, கேட்டார்கள். கண்கள் இருந்தன பார்த்தார்கள். வேண்டுமானால் நீங்களும் பார்க்கலாம்... கேட்கலாம்... (http://www.youtube.com/watch?v=DkGENq2Oc0I).
“யாதும் ஊரே, எல்லா உயிரும் கேளிர்!”
இந்தச் செந்தலை இதழில் எத்தனையோ அருமையான ஆழமான
படைப்புகள்! முனுசாமிபேரன் மூலைமுடுக்கிலெல்லாம் முத்துக்கள்
எடுப்பார்... முனைவர்களையெல்லாம் கட்டிச் சேர்ப்பார். முனிவர் சந்ருவை முழுமையாய்க் காட்ட முயல்வார். சுமார் பத்துப் படைப்பாளிகள் முதன்முதலாக இங்கு அறிமுகமாகிறார்கள். படைப்புகள் மானுட நல்லறத்தை இலக்காகக் கொண்டது... மனித உறவுகளைத் தக்கவைத்துக்கொள்வது... மானுடநேயத்தை மையமாகக்கொண்டது... என்றெல்லாம் செந்தலைக்குருவி குரலெடுப்பதை இந்த இரண்டாம்
இதழிலும் கேட்கலாம். இவ்விதழில் குரல்
அதிகமாகவே இருக்கிறது. கோபம், அருவறுப்பு, ஏமாற்றம், என்றுதான் மாறும்? என்ற ஏக்கம்!
நான் யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்ல இன்னும் கொஞ்சம் க்ளூ கொடுக்கட்டுமா! எந்த ஊர்? அப்பா என்ன வேலை? கம்யூனிட்டி சர்ட்டிபிக்கேட் ஜெராக்ஸ் காப்பி... கேளுங்க தைரியமா சொல்றேன். என் சொந்தக்காரங்களைப் பற்றியெல்லாம்...
எங்க அப்பாவுக்கு அப்பாவுக்கு அப்பாவுக்கு... சுமார் ஐயாயிரம் தலைமுறைகளுக்கு முன்னால்... 1,40,000 வருசத்துக்கு முன்னால் ஆப்பிரிக்காவுல இருந்தாரு. அவர் பேர் தெரியல. ஆனா ‘ஆப்பிரிக்க ஆதாம்’ என்று வச்சிக்கலாம். அவர் உயிரணுக்கருவுல (Nucleus) இருந்த ஒரு Y-குரோமோசோம் என் உயிரணுக்கருவில இருக்குது. இதைப் படிக்கிற எல்லா ஆண்கள் கிட்டேயும் அதே Y-குரோமோசோம்தான் இருக்குது. என் ஆப்பிரிக்க
தாத்தாவுக்குப் பிறந்த ஆண் பிள்ளைகளுடைய சந்ததிகள்தான் இன்று உலகம் முழுவதும் இருக்கும்
ஆண்கள். சுமார் 350 கோடி ஆண்கள்! எல்லாம் என் உறவுதான்.
குரோமோசோம்ல இருக்கும் டி.என்.ஏ.(DNA)-வில் இயற்கையாகவே மாற்றங்கள் ஏற்படும். இவற்றை முயூட்டேஷன் (Mutation) என்று சொல்வார்கள். என்னோட ஒடம்புல
இருக்குற கொஞ்சம் செல்லக் (Cells) கொடுத்தாப்போதும். என்னோட வரலாற்றையே படிச்சிக்காமிக்கிற அறிவியல் புரட்சிக்
காலமிது. நேசனல் ஜெனோகராஃபி புராஜக்ட்க்கு (National Genographic Project) என் வாயில இருக்குற கொஞ்சம் செல்ல அனுப்பினேன். இன்று வரை என்னைப்போல சுமார் 140 நாடுகள்ல இருந்து 6,18,976 பேர்கள் தங்கள் டி.என்.ஏ-மூலம் வரலாற்றை அறிந்துக்கொண்டார்கள். என்னுடைய Y -குரோமோசோம்ல M52 அப்பிடின்னு ஒரு முயூட்டேஷன் இருக்குது. இதுவந்து H1 குரூப்பச் சேர்ந்தது. நேற்று இணைய தளத்துல
போய் என்னோடக் குரூப்பச் சேர்ந்த ஆளுங்க எங்கெங்க இருக்காங்கன்னுப் பார்த்தேன். நாங்க எல்லாம் ஒரு தகப்பன் வழிவந்த ஆண்மக்கள். பாகிஸ்தான்லயும் இருக்குறாங்க... இலங்கையிலயும் இருக்குறாங்க... தஞ்சாவூர்ல இருக்குற ஒரு வடமா(Vadama) ஐயரும்... இராஜஸ்தான்ல இருந்து இங்க வந்த கௌர்(Gour) பிராமணனும் கர்நாடக ஹெப்பர்(Hebbar) ஐயங்காரும் எனக்குச் சொந்தம்தான். இதே உறவு குஜராத்ல இருக்குது. கேரளாவுல இருந்து ஆஸ்திரேலியாவுக்குப் போனவங்கக் கிட்ட இருக்குது. ஒலகத்துல இல்லாத இடமே குறைவுதான்.
அண்மையில தமிழ்நாட்டில இருக்கும் 12 ஆதிவாசி குழு மற்றும் 19 மற்ற குழு மக்களின் Y –குரோமோசோம ஆராய்ந்தார்கள். என்னுடைய H-M52 அடையாள முத்திரை 30 குழு ஆண்களிடம் இருக்கிறது. எங்க எல்லாருக்கும் மூதாதையர் சுமார் 25,000 வருடத்துக்கு முன்பு பிறந்த ஒருத்தர்தான். 30 குழுவ பட்டியல் போட இடமில்லை. கொஞ்சம் மட்டும் பாருங்கோ: புலையர், குரும்பர், தோடர், கோட்டா, பறையர், வன்னியர், பள்ளர், யாதவர், பிறமலை கள்ளர், நாடார், சௌராஷ்ட்ரா பார்ப்பனர், ஈழவர், தமிழ் ஜைனர்... போதுமா!
எங்க அம்மா கதைய சொல்லலயே... ஒலகத்துல இருக்குற 700 கோடி மக்களுக்கு ஒரே தாய் கிழக்கு ஆப்பிரிக்காவுல இருந்தாங்க. இந்தப் பாட்டி 1,80,000 ஆண்டுகளுக்கு முன்னால வாழ்ந்தாங்க. அவுங்க பேரு ஆப்பிரிக்கன் ஏவாள் (African Eve) அல்லது மைட்டோகாண்டிரியா ஏவாள் (Mitochondrial Eve). எங்க அம்மாவுக்கு அம்மாவுக்கு அம்மாவுக்கு... சுமார் 2000 தலைமுறைக்கு முன்னால 50,000 வருசத்துக்கு முன்னால ஆப்பிரிக்காவிலேயோ அல்லது
அரேபியாவிலேயோ இருந்து புலம்பெயரும்போது ஒரு முயூட்டேஷன் நடந்தது. அது எங்க அம்மா வழியா என்னோட ஒடம்புலயும் இருக்குது. நான் M6a1 குரூப்ப சேந்தவன். கோடிக்கணக்கான இந்திய மக்கள் இந்தப் பரம்பரையில வந்தவங்கதான்.
சுமார் 70,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறு குழு ஆப்பிரிக்காவ
விட்டு வெளியே வந்து உலகமெங்கும் குடியேறினார்கள். வந்தவர்களுடைய தோல் எல்லாம் அப்போ கருப்புதான். வெள்ளை, சிகப்பு, மஞ்சள், மாநிறம் இதெல்லாம்
ஒரு 60,000 வருசத்து கதைதான். ஆப்பிரிக்காவ விட்டு வெளிவந்த மக்கள்... இந்தியா வழியா ஆஸ்திரேலியாவுக்கு 50 ஆயிரம் வருசத்துக்கு முன்னாடியே போய்விட்டார்கள். இந்தியக் கண்டத்திற்குள் மக்கள் வருவதும் போவதும் திரும்ப
வருவதும்... கலப்புமணம் செய்வதும் மிகச் சாதாரணமாக நடந்த நல்ல
கதை. இதில் விளைந்த 50,000 வர்ணங்கள்தான் இன்றைய இந்தியா. ஆப்பிரிக்கக் கண்டத்தையடுத்து உலகிலேயே அதிக மரபணு வேற்றுமை
உள்ள நாடு இந்தியாதான். அண்மையில் வெளிவந்த ஒரு முக்கிய ஆய்வின் முடிவு: இன்றைக்கு முன் சுமார் 4200 ஆண்டு முதல் 1900 ஆண்டு வரை இந்தியா ழுழுவதும் கலப்பு மணங்கள் நடந்துக்கொண்டிருந்தன. கலப்பற்ற ஜாதியென்றோ, குலமென்றோ, கோத்திரமென்றோ, தமிழ்க்குடி என்றோ
ஒன்றுமேயில்லை!.
இன்னும் நான் வேப்பமரத்தப் பத்திச் சொல்லவேயில்லயே... வேப்ப மரமட்டுமல்ல உயிரினங்கள் எல்லாமே நமக்கு உறவுதான். இந்த உறவைப் புரிந்துக்கொள்ளத் திரும்ப கணியன்பூங்குன்றனாரை
நாம் கூப்பிட வேண்டுமா? இக்கால இளைஞர்களுக்கு
நன்றாகவே புரியும். அவர்களை மூளைச்
சலவை செய்யாமலிருந்தாலே போதும்.
இன்று நாம் வாழ்வதும் இனி வரப்போவதும் அறிவியலே
பெரும் ஆளுமை செய்யும் உலகமாக இருக்கும். கணினியியல் (Computer Science), உயிரித் தொழிற்நுட்பம்
(Biotechnology.), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), நுண்ணிய தொழிற்நுட்பம் (Nanotechnology.), சக்திச் சொட்டுப் பௌதிகவியல் (Quantum Physics) ஆகிய ஐந்து முக்கிய அறிவியல் துறைகள் நம்முடைய வாழ்க்கையையும்
நாம் இந்த உலகத்தை எப்படி புரிந்துக்கொள்ளப் போகிறோம் என்பதையும் தீர்மானிக்கப்போகிறது.
அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் வரப்போகும் முக்கிய
மாற்றங்கள்: தகவல் பரிமாற்றத்தில் அதிவேகம், புது சக்திக்குப் புதுமாதிரியான மூலங்களைக் காண்பது, இயந்திரங்களெல்லாம் சிறியதாக ஆவது, இயந்திரங்களே நுட்பமானத் தொழிலைச் செய்வது, புதுவிதமான நோய்களைக் கண்டறிவது (மருத்துவச் சிகிச்சை கொடுப்பது), உயிரினங்களை மாற்றுவது மட்டுமல்ல, புது உயிரினங்களை உருவாக்குவது, உலகைவிட்டு அழிந்து போன உயிரினங்கள் சிலவற்றை மீண்டும் கொண்டுவருவது, விண்வெளிப் பயணத்தின் மூலம் செவ்வாய் கிரகத்தில் குடி புகுவது... இந்த நவீன உலகத்தில் வளரும் இந்தத் தலைமுறைக்கு 2000 வருடமாக ஒட்டிக் கொண்டிருக்கும் துரும்புகளும்
அழுக்குகளும் மரபுகளும் தடையாய் இருந்துவிடுவது மனிதநேயமல்ல...
மனிதகுலம் ஆப்ரிக்காவிலே சுமார் இரண்டு லட்சம்
வருடங்களுக்கு முன்னால் பரிணமித்தது. 70,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குழு வெளியேறியது. அதன் வழித் தோன்றல்கள்தான் உலகமெங்கும் வாழ்ந்தவர்களும் இன்றும்
வாழ்பவர்களும்!
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக