கலை வரலாற்றில் கோயிற்கலைப் பங்களிப்பு என்பது பல்லவர், சோழர், பாண்டியர் மற்றும் விசயநகரர் போன்ற அரச மரபைக்கொண்டு தமிழகம் பெற்றிருக்கிறது. தொடர்ந்து பிற்காலங்களில் மதுரை, தஞ்சை மற்றும் செஞ்சி நாயக்கர்களின் கோயிற்கலை மரபும் குறிப்பிடத்
தக்கதாயிருந்தது. கோயிற்கலை மரபானது காலத்திற்கேற்றவாறு
விரிவடைந்தும் மாற்றம் பெற்றும் மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது. அவற்றுள் சில கலை நுட்பங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு
மாற்றம் பெற்றும் சில வெளியேற்றப்பட்டும் புதிய தொழிற் நுட்பங்களை உட்புகுத்திப் புத்துயிர்
பெற்ற மரபாக விளங்குகின்றன. அதிலும் நாயக்கர் கலை எளிதில் விளங்குகின்ற நன்கு வரையறுக்கப்பட்ட கலைப் பாணியாகத்
தனிப்பெருமையுடன் முற்கால மரபின் ஒப்புமையுடன் அவை ஒன்றிணைந்து முப்பெரும் பரிணாமத்தை
இக்கலை பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
தமிழகத்தில் விசயநகரர்களின் மாபெரும் பங்களிப்பு
கலை வரலாற்றின் இடைக்காலமான 14ஆம் நூற்றாண்டாகும். மூன்று பெரும் மண்டலங்களாகத் தஞ்சை, செஞ்சி, மதுரை நாயக்கர்கள்
அடங்குவர். இம்மூன்று நாயக்கர்களும் தமிழ கத்தில் தமது கலைப்படைப்பைத்
தம் முன்னோர் வியக்கும் விதமாக விரிவு படுத் தினர். அவற்றுள் தஞ்சை, செஞ்சி நாயக்கர்களைக் காட்டிலும் மதுரை நாயக்கர் தம் கலை
மரபைப் புதிய உத்திகளை உட்புகுத்திய மரபாகும். கலை நுணுக்கத்தின் உச்சமாகவும் வெளிப்படுத்தினர்.
நாயக்கர் கலைகளின் ஒருங்கிணைப்பு:
கோயிற்கலைப் பாணியில் தஞ்சை, மதுரை மற்றும் செஞ்சி நாயக்கர்களின் கோயில் விமானங்கள் ஒத்திருந்தாலும்
அவற்றின் தாய்மை (இருப்பிடம்) என்பது விசயநகர மற்றும் சோழர், பாண்டியர் கலைப்பாணியிலிருந்து பெறப்பட்டதாகும். ஆனாலும் சில நுட்பங்கள் வேறுபட்ட தன்மையைப் பெற்றிருப்பதை
நாம் உற்று நோக்க வேண்டியதாகிறது. தஞ்சை, செஞ்சி நாயக்கர்களின் கோயிற் கட்டடக்கலை அமைப்பில் உபபீடம், அதிட்டானம், சதுரத்தூண், சுவர் மற்றும்
பிரத்தர பகுதியானது பொதுப்படையான தோற்றம் பெற்றுள்ளதாகவும் அமைந்துள்ளது. ஆனால் மதுரை நாயக்கர்களின் கோயிற் கட்டக்கலையானது மிகுந்த
வேலைப்பாடுகள் நிறைந்த விமானங்களைக் கொண்டும் கோட்ட பஞ்சரம், குடும்ப பஞ்சரம், கொடிக்கருக்குப் போன்றவை மிகுந்த அலங்காரங்களுடனும் காணப்படுகின்றன. நாயக்கர் கோயில்களில் உள்ள சுவர்ப்பகுதியில் இடம் பெற்றுள்ள
கும்ப பஞ்சரம் மற்றும் அலங்கார அமைப்புகளையும் கவர்ச்சித் தன்மையும் பெற்றிருக்கக்
கூடிய கோயில்களில் ஆழ்வார்திருநகரி மற்றும் திருவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில்
சிறப்புத்தன்மை பெற்றதாகும். இக்கோயிலில் உள்ள
சதுரத்தூண்களில் வேறுபட்ட கலை அம்சமாகத் தூண்களின் கீழே யாளியைத் தாங்கியதாகவும் அதனுள்
சிறுசிறு சிற்பங்களைப் பெற்ற விமானங்களின் கட்டமைப்பும் சுதைச் சிற்பங்கள் நிறைந்து
காணப்படுகின்ற மாபெரும் கட்டட அமைப்பையும் கொண்டுள்ளது. மதுரை நாயக்கர் கலைப் பாணியை ஒத்த நிலையை ஒரு சில இடங்களில்
தஞ்சை நாயக்கர் கட்டடக்கலையிலும் காணலாம்.
சோழர் மற்றும் பாண்டியர் கோயில்களில் காணப்படும்
உபபீடங்களில் உள்ள உறுப்புகள் போலவே தஞ்சை, மதுரை மற்றும் செஞ்சி நாயக்கர் கோயில்களில் உள்ள உபபீடங்களில் வேரிபத்திரம் மற்றும் கோட்டப்
பத்திரங்களை இணைத்துக் கோயில்களை உருவாக்கியுள்ளனர். உப பீடங்களில் (சுவர் மற்றும் விமானப் பகுதிகளிலும்) அதிகப்படியான புடைப்புச் சிற்பங்களை வடிவமைத் திருப்பதைப்
பெரும்பாலான மதுரை நாயக்கர் கோயில்களில் காணலாம். எடுத்துக் காட்டாகத் திருவரங்கத்திலுள்ள வேணுகோபால சன்னதி, ஆழ்வார் திருநகரி மற்றும் திருவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள்
சன்னதி ஆகியவைத் திகழ்கின்றன.
நாயக்கர்களின் அதிட்டான அமைப்பு:
தஞ்சை மற்றும் செஞ்சி நாயக்கர் கோயில்களில் புதிய
அதிட்டான வகையையோ அல்லது விமானக் கட்டமைப்பையோ பெரும்பாலும் முயற்சிக்க வில்லை. ஆனால், மதுரை நாயக்கர்
புதிய முப்பரிணாம அதிட்டான வகையும் படி எடுத்தார் போன்ற சிக்கலான வேலைப்பாடுகளையும்
அமைத்துள்ளனர். ஆழ்வார் திருநகரி கோயிலும், ஆண்டாள் கோயிலும் அவ்வகையில் அடங்குவன. தஞ்சை நாயக்கர் கட்டட அமைப்பான கும்ப கோணத்தில் உள்ள மகாமகக்
குளக்ரையின் மீது அமைக்கப்பட்டுள்ள மண்டபங் களின் அடித்தளங்களில் திறந்த புதிய சாலை
அமைப்பும் அழகிய வேலைப்பாடுகளையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டட அமைப்பை அலங்கரிக்கப்பட்ட அதிட்டானமும் அதனூடே
பாதபந்தம், பத்மபந்தம், புட்பபந்தம், விப்ரபந்தம், பத்மம் மற்றும்
கபோத பந்தம் என அழகிய முறையில் வடிவமைத்திருக்கிறார்கள். இவை இடைக்கால மற்றும் பிற்காலச் சோழர், பாண்டியர் கோயில்களில் உள்ள அதிட்டானத்தை ஒத்ததாகும். தஞ்சை மற்றும் மதுரை நாயக்கர் அதிட்டானங்கள் மேற்குறிப்பிட்டனவற்றைத்
தொடர்வதாகவும் இயக்க விளைவா கவும் காணமுடிகின்றது. மேற்குறிப்பிட்ட கோயில்களில் கபோதபந்தம் ஒரு புதிய பரிணாம
வளர்ச்சியாகவே உள்ளது. மதுரை நாயக்கர்
கட்டட அமைப்பானது அதிட்டானத்தில் பன்மடங்கு அல்லது எண்ணின் மடங்கு கபோத பந்த வகையை
ஆரம்ப காலங்களிலேயே அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆனால் தஞ்சை நாயக்கர் பிற்காலத்தில்தான் அதனைப் பயன்படுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாகக் கும்ப கோணம் மகாமகக்குளம் மண்டபங்கள், ஆவுடையார் கோயில் ஆகியன அமைந்துள்ளன.
கபோதத்தில் அமைந்துள்ள கூட்டில் அதிகப்படியான
சிறுசிறு சிற்பங்களும் புடைப்புச் சிற்பங்களும் மதுரை, தஞ்சை நாயக்கர் கோயில்களில் வடிவமைத் துள்ளனர். இந்த வளர்ச்சியானது பாண்டிய மரபிலிருந்து பின் தொடரப் பட்டதாகவே
கொள்ள வேண்டும். ஏனெனில் கலை நுணுக்கத்தில் சிறிதும் பிழையில்லாமல்
தமக்கு முன்னர் உள்ள கலையையும் தமது பாணியையும் இணைத்துக் காட்டியிருப்பது திருவைகுண்டம்
கோயில் மண்டபத்திலுள்ள கட்டட அடித்தளத்தில் (உப பீடத்தில்) காணலாம். அவற்றில் நிரம்ப சிறு சிறு சிற்பங்களாக மனித உருவமும்
பறவையின் இறகும் கொண்ட அப்சரசுகள் போன்ற சிற்பங்களும் குறவன், குறத்தி, குடும்பச் சிற்பங்களும்
உள்ளன. இந்த புடைப்புச் சிற்பங்களானவை திறந்த சுதந்திரத்தன்மை
வாய்ந்த சிற்பங்களாகவும் அதனூடே ஒரு செயலை எடுத்தியம்பும் வண்ணம் அமைந் துள்ளன. மதுரை, தஞ்சை நாயக்கர்
விமானங்களில் உள்ள கட்டட அமைப்பில் கபோத பந்தம்,அதிட்டானம் முதலியவை புதிய பரிணாம வளர்ச்சியைப் பெற்றுள்ளன. ஆனால் செஞ்சி நாயக்கர் கட்டட அமைப்பில் கபோத பந்தம், அதிட்டானம் போன்றவை ஒரே அமைப்பைக் கொண்டு தொடர்ந்திருக்கின்றன.
நாயக்கர் கோயில்களில் சுவர் (பாத) அமைப்பு:
ஆழ்வார் திருநகரி, ஆண்டாள் சன்னதி, திருவரங்கத்திலுள்ள வேணுகோபால் சன்னதிகளில் உள்ள விமானக்
கட்டட அமைப்பில் சுவர் பகுதியில் உள்ள அரைத் தூண்கள் ஏனைய கோயில்களில் இருப்பதுபோல்
அல்லாமல் வேறுபட்டு காணப்படுகின்றன. சிம்ம பாதம் அல்லது யாழி பாதம் கொண்ட சதுரத்தூண்கள் முற்காலப்
பாண்டியர் கோயில்களில் உள்ள மரபை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப் பட்டவையாகும். அவற்றில் உள்ள உபபீடம், அதிட்டானம், சுவர், பிரத்தரம் மற்றும் விமானக் கட்டுமானம் போன்றவை
அலங்கரிக்கப்பட்ட ஒன்றாகத் திகழ்கின்றன. தஞ்சைப் பெருவுடையார் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஆறுமுகன் கோயில் ஒரு புதிய
பரிணாமத்தைக்கொண்டு அலங்கரிக்கப்பட்ட கலைகளின் உச்சமாக இருப்பதற்குக் காரணமாக அமைவது
சோழர் மற்றும் பாண்டியர் கலைகளுமே ஆகும். இது போன்ற முன்மாதிரி வடிவமைப்புத் திருவரங்கத்தில் உள்ள வேணுகோபாலர் சன்னதியே
ஆகும். அதிகப்படியான மதுரை நாயக்கர் கட்டட அமைப்பானது
அலங்கரிக்கப்பட்ட உறுப்புகளையும் சிறு புடைப்புச் சிற்பங்களையும் கொண்டதாகவே உள்ளது. இதற்குக் காரணமாக அமைவது பிற்காலச் சோழர் கலை மற்றும் பாண்டியர்
கலையின் தாக்கமேயாகும். பிற்காலச் சோழர்
மற்றும் பாண்டியர் கலைப்பாணியானது ஒய்சாளர் மற்றும் சாளுக்கிய கலை மரபைச் சிறிதே தன்னுள்
கொண்டுள்ளது. தஞ்சை நாயக்கர் கோயில்களான கலியுக வெங்கடேச பெருமாள்
கோயிலிலும் (தஞ்சை) இராமசாமி கோயிலிலும் (குடந்தை) உள்ள விமானங்களின்
சுவர் பகுதியில் காணப்படும் புடைப்புச் சிற்பமானது அம்பியில் உள்ள கிருட்டிணன் கோயிலை
ஒத்தே அமைந்திருக்கின்றது. பத்மபந்த அதிட்டானம்
பொதுவாகத் தஞ்சை நாயக்கர் கோயில் விமானங்களில் காணலாம்.
பத்மபந்தம், கபோத பந்தம் மற்றும் பத்ம பந்தங்களில் உள்ள வேறுபட்ட கலைப்படைப்புகளை
மதுரை நாயக்கர் கோயில் கட்டடக் கலையை மதுரை, செஞ்சி நாயக்கர் கட்டடக் கலையுடன் ஒப்பிட்டுக் காணும்போது
அதன் தனித்தன்மை வெளிப்படுகின்றது. தஞ்சை நாயக்கர்
கோயிற் கட்டடக்கலை பெரும்பான்மையும் தம் முன்னோர் கட்டடக்கலை மரபுகளை அப்படியே பின்பற்றி
வந்துள்ளது. புதுமைக் கூறுகளையும் புதிய மரபு உருவாக்கங்களையும்
அதிகமாகக் காண முடிவதில்லை.
விசயநகரர்கள் அழகிய கோட்டங்களையும் அரைத்தூண்களையும்
புடைப்புச் சிற்பங்களை அசரராமர் கோயிலில் வடித்துள்ளனர். தஞ்சை நாயக்கர் கோயில்களிலும் வெவ்வேறு கோயில்களில் வெவ்வேறு
விதமான உப பீடம், அதிட்டானம், சுவர்ப் பகுதிகளையும் பிற வேறுபாடுகளையும் விமானக் கூரை அமைப்புகளையும்
சிகரங்களையும் காணமுடியும். மதுரை நாயக்கர்
கோயில் அதிட்டானங்களில் பொதுவானக் கட்டட அமைப்பாகக் கடகவிருத்த குமுதம் பயன்படுத்தப்
பட்டிருக்கின்றது. அவற்றில் தனித்தன்மை
வாய்ந்த விமானங்களாகத் தஞ்சை நாயக்கர் கோயில் விமானங்கள் அலங்கரிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும்
சோழர், பாண்டியர் கோயில் விமானங்களைப் போன்று மிகவும்
வியப்பிற்குரிய தோற்றத்தோடு அல்லாமல் இரண்டு அல்லது மூன்று நிலைகளைக் கொண்ட விமானங்களாகவே
நாயக்கர் கலை திகழ்கின்றன.
பெரும்பாலான நாயக்கர் கோயில்கள் வைணவக் கோயில்களாகவே
உள்ளன. அவற்றில் ஒரு சில கோயில்களே சைவக்கோயில்களாகும். விமானக் கோட்டங்களில் திருமாலின் வெவ்வேறு வடிவங்களான விஷ்ணு, நரசிம்மர், சிம்மவிஷ்ணு, வைகுந்த நாதர்
மற்றும் வேறு விட்ணு வடிவங்களை வைத்துள்ளனர். சமயம் சார்ந்த சமயம் சாராத சிற்பங்கள் விமானங்களில் வைப்பது
பாண்டியர் மற்றும் விசயநகர மரபாகும். அவற்றைத் தமிழக நாயக்கர்களும் பின்பற்றியுள்ளனர். நாயக்கர்களின் விமானங்கள் சிறியதாகவும் ஒரு சில விமானங்கள்
எளிமையாகவும் புதிய சுவர்ப் பகுதிகளைக் கொண்டதாகவும் திகழ்கின்றன. பல்வேறு உறுப்பு களையும் அதிக அலங்காரங்களையும் கொண்ட கருவறைக்
கட்டட அமைப்பைக் கொண்டதே நாயக்கர் விமானக் கட்டடக் கலையாகும்.
மண்டபக் கட்டடக்கலை:
பல்லவர், சோழர், பாண்டியர்களைக்
காட்டிலும் தமது கலையை உயர்த்தி காண்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மண்டபக் கட்டடகலையில்
பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள் நாயக்கர்களே. இவர்களது முன்னோடிகளான விசயநகரர்களை அடிப்படையாகக் கொண்ட
நாயக்கர்கள் கருவறைக் கட்டடக் கலையை விட மண்டபக் கட்டடக்கலைக்கே அதிக முக்கியத்துவம்
கொடுத்திருப்பது கட்டடக்கலையை உற்று நோக்கும் போது நன்கு விளங்கும். நாயக்கர்கள் அமைத்த மண்டபங்கள் கருவறையின் முன்னால் ஒரே நேர்க்கோட்டில்
இருக்குமாறு துணை மண்டபங்களாகவும் சுற்று மண்டபங்களாவும் கோயிலின் பிற இடங்களில் உள்ளவாறும்
அமைத்தனர்.
தஞ்சை நாயக்கர் கோயில்களில் உள்ள உத்சவ மண்டபங்களில்
நான்கு தூண்களுடனும் ஆயிரம் தூண்கள் நிறைந்து காணப்பட்டாலும் மதுரை நாயக்கர் கலைப்படைப்புப்
போன்று புதிய உத்திகளைக் கொண்ட கலைப்படைப்பு மிகக் குறைவே. ஆயினும் செஞ்சி நாயக்கர்களின் பதினாறு கால் மண்டபமான திருமுட்டம்
பூவராகசாமி கோயில் புருசசூக்த மண்டபங்களில் (நவக்கிரக மண்டபம்) புதிய கலைப்படைப்புகளுடன் கூடிய வளர்ச்சியைக் காணலாம். நாயக்கர்களின் முந்தைய ஆட்சியான சோழமரபின் கலையான தாராசுரத்தில்
உள்ள இராசகம்பீரன் மண்டபத்தில் உள்ள கலை நுணுக்கத்தின் தாக்கமே கூட நாயக்கர்களின் படைப்பு
களுக்கு முக்கியப் பங்காக அமைந்தது எனலாம். இதனைத் தொடர்ந்து கலையின் உச்சமான மண்டபக் கட்டடக்கலையினை
ஆவுடையார் கோயில் மண்டபம் மதுரையில் உள்ள நாயக்கர் கோயில்களிலும் தஞ்சை, செஞ்சி நாயக்கர் மண்டபங் களிலும் காணமுடியும்.
தமிழகத்தில் பல்லவர், சோழர், பாண்டியருக்குப்
பின்னர்க் கட்டடக்கலையில் குறிப்பாக மண்டபக் கட்டடக்கலையில் பெரும் மாற்றத்தையும் புரட்சியையும்
ஏற்படுத்தியவர்கள் நாயக்கர்களே. ஏனைய அரச மரபினர்
மண்டபக் கட்டடக் கலையில் வரம்புக்குட்பட்டு ஒரே கல்லால் ஆனத்தூண்களையே செதுக்கி அவற்றை
அலங்கரித்து மண்டபங்களில் நிறுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. ஆனால் நாயக்கர்கள் தம் முன்னோர் பாணியில் கிடைத்த கருங்கற்களை
அப்படியே அவற்றைச் சமப்படுத்தி எந்த நிலையில் இருந்தாலும் துண்டு, துண்டுகளாகத் தூண்களில் நிறுத்தினர். இந்த கலைப்பாணி நாயக்கர்களுக்கே உரியதாகும். அத்துண்டுக் கல்லிலும் தமக்குத் தேவையான அளவிற்குப் பூவேலைப்பாடுகள், கொடிக்கருவிகள் சிறுசிறு சிற்ப வரிகள், ஆளுயுரச் சிலைகள் என அனைத்துவித அலங்காரங்களையும் திகட்டும்
அளவிற்குச் செய்து முடித்துள்ளனர். இக்கலைப்பாணி
மதுரை, தஞ்சை, செஞ்சி என அனைத்து நாயக்கர்களுக்கும் பொதுவான ஒன்றாகவே உள்ளன. அவற்றில் சிற்சில மாற்றங்கள் தாங்கள் ஆட்சி புரிந்த பகுதிக்கேற்றவாறு
ஏற்படுத்திக் கொண்டார்களே தவிர மண்டபக் கட்டடக் கலையில் ஒருங்கிணைந்த ஒரு புரட்சியை
ஏற்படுத்தி உள்ளனர் என்பது அக்கலைகளின் மூலம் வெளிப்பட்டிருக்கின்றன.
மண்டபங்களின் வகைகள்:
அகலமான நீளமான உள்ளிடத்தைக் கொண்டுள்ள ஒரு கட்டடத்தை
மண்டபம், மன்றகம், சால, சபா, கூடம் என்ற பெயர்களால் அமைப்பர். எடுத்துக் காட்டாக உத்திரமேரூரில் ஒரு சபா காணப்பட்டது. அதில் மக்கள் கூடி கிராமத்துத் தேர்தல்களை நடத்தினர் என்ற
வரலாறு உண்டு. இதற்கு முன்னர் பழமையான கட்டடக்கலை என்று கூறப்படும்
அப்கொளேவில் சாளுக்கியர்களால் கட்டப்பட்ட சபா மண்டபம் கட்டடக் கலைக்கு முன்னோடி என
வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தச் சபையில் கிராம மக்கள் ஒன்று கூடித் தேர்தலை நடத்தி உள்ளனர். பொதுவாக மண்டபங்களின் செயல்பாட்டு முறைகளை வைத்து அவற்றை
இரண்டு பகுப்பாக, சமயச் சார்புடையவை (கோயில்களில் உள்ள மண்டபங்கள்), சமயச் சார்பற்றவை (அரசர்களின் மாளிகைகளிளும் பிற இடங்களிலும் உள்ள மண்டபங்கள்) எனப் பிரித்து அமைத்துள்ளனர்.
நாயக்கர் தூண்களின் அமைப்பு: மண்டபங்கள் பொதுவாக விழாக்காலங்களில் பயன் படுத்தப்படும்
பயன்பாட்டுக் கூடமாகவே கட்டப்பட்டுள்ளன. மண்டபங்கள் நான்கு தூண்களில் ஆரம்பித்து ஆயிரங்கால் மண்டபங்கள் வரை கட்டி அதில்
பலவகைப்பட்ட தூண்களை அமைத்து அவற்றுள் தூண் சிற்பங்களை ஆளுயர ஏராளமாக அமைத்த பெருமை
நாயக்கர் கலையையே சாரும். அதிலும் தஞ்சை
நாயக்கர் மண்டபங்கள் வேறுபட்ட கட்டமைப்புக் கொண்டதாகவும் மதுரை, செஞ்சி நாயக்கர் மண்டபங்கள் சமதளத்தைக் கொண்ட கட்டட அமைப்பாகவும்
உள்ளன. மிகச் சிறந்த கட்டட அமைப்பான தஞ்சை நாயக்கர் கலைப்படைப்பில்
மகாமகக் குளக்கரையின் மீது அமைந்துள்ள புட்ய (புஷ்ய) மண்டபங்கள் ஆகும்.மண்டபங்களுக்கே பெயர் பெற்ற கட்டட அமைப்பு மதுரை நாயக்கர்
மண்டபக் கட்டடக் கலையையே சாரும் எனக் கலை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுவர். அவற்றுள் மிகப்பெரிய விளக்கக்கூடிய தூண்கள் உயரமான அதிட்டானப்பகுதி
ஆளுயரத்திற்கும் மேலான வியப்பூட்டும் தூண் சிற்பங்கள், குதிரை மீது அமர்ந்த போர் வீரர் சிற்பங்கள், யாழிச் சிற்பங்கள் நீண்ட ஒரே சீராக அமைந்த தூண்கள் என அனைவரையும்
வியப்பூட்டும் வகையில் மதுரை நாயக்கர் கலைப்படைப்பான தூண்கள் அமைந்துள்ளன. யாழித் தூண்களில் வித்தியாசமான தூண்களும் உண்டு. தூண்களில் புதிய புதிய கொடிக்கருக்குகள் அதனூடே அமைந்த கலை
வடிவமைப்புகள் தமிழக நாயக்கர் களுக்கென்று பெற்ற தனித்துவம் ஆகும்.
தஞ்சை நாயக்கர் கலைப் படைப்பில் குதிரைத் தூண்கள்
முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. ஒவ்வொரு குதிரைத்
தூண்களும் வெவ்வேறு வகையான அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளன. கொடுங்கையமைப்பில் காணப் பட்ட வளர்ச்சி நிலைகளைப் போன்று
குதிரைத் தூண்களின் உச்ச வளர்ச்சி நிலைகளை இத்தூண்களில் காணமுடியும். இத்தூண்களில் யாழிகளும் தெய்வச் சிலைகளும் மனித உருவங்களும்
இடம்பெற்றுள்ளன. இந்த தூண்கள் மண்டபத்திற்கு அழகையும் நல்ல தோற்றத்தையும்
அளிக்கின்றன. தஞ்சை நாயக்கர் மண்டபங்களில் அமைக்கப்பட்டுள்ள
தூண்கள் பின்வருமாறு: குதிரைத் தூண்கள், தெய்வச் சிலைகள் இணைந்த தூண்கள், கோபுரத்தூண்கள், பதினாறு பட்டை யாழித்தூண்கள், மனித உருவங்களுடன் கூடிய தூண்கள், கூட்டு ருத்ரகாந்தத் தூண்கள், சதுரப்பெட்டித் தூண்கள், அணியொட்டிக்கால் தூண்கள் போன்றவையாகும். மேற்குறிப்பிட்ட தூண் வகைகளில் பெரும்பாலான தூண்கள் செஞ்சி
நாயக்கர் கட்டடக்கலையில் அமைந் திருந்தாலும் அவை எளிமையான தோற்றத்தையே பெற்றுள்ளன.
மண்டபங்களில் மேல்தளங்களை அமைப்பதிலும் தகட்டு
வடிவம் கொண்ட வளைவுகளையும் தமிழகத்தில் அறிமுகப் படுத்தியவர்கள் மதுரை நாயக்கர்கள்
ஆவர். எடுத்துக்காட்டாக நெல்லையப்பர் கோயில் மற்றும்
பிரம்மதேசக் கோயில்கள் ஆகும். சில புதிய உத்திகளை
அறிமுகப்படுத்தியும் அவற்றை இணைத்தும் யாழி (திருவைகுண்டம்) மற்றும் குதிரையின் மீது அமர்ந்த போர்வீரர் தூண்களை உருவாக்கியதில் மதுரை நாயக்கர்
சிறந்த வல்லமை படைத்தவர்களாயினர். இவற்றுடன் ஒப்பிடும்போது
சோழர் மற்றும் பாண்டியர் கலைத்தூண்கள் அகலமாகவும் விரிவாகவும் அமைந்திருப்பதைக் காணமுடியும். சோழர், பாண்டியர் காலத்தோடு
இணைந்த கலைவடிவமாக முற்கால நாயக்கர் கலை அமைந்துள்ளன. தஞ்சை, மதுரை நாயக்கர்
மண்டபங்களில் உள்ள தூண்கள் சதுரமாகவும் ஒன்றோடொன்று இணைந்த வடிவமாகவும் உள்ளன. தூண்களில் அமைந்துள்ள நாகபந்தமானது அதன் வடிவமைப்புத் தீர்க்கச்
சதுரமான அமைப்புடனும் தூண்களின் அங்கங்களான அடித்தளம், கால், கலசம், பலகை, இதழ், அலங்கு, கொடுங்கல் சிம்ம
மற்றும் புட்பபோதிகை கொண்டு அமைந்துள்ளன. இவ்வகை தஞ்சை, மதுரை நாயக்கர்
கலைக்குப் பொதுவான ஒன்றாகும். அலங்கு, கொடுங்கல் மற்றும் சிம்மம் ஆகியவை தூணின் உயரத்தை மேலும்
கூட்டுவதற்காகவே பிற்காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். யாழி மற்றும் உருவச் சிலைகளின் பீடமானது தூண்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை நாயக்கர் தூண்களில் உருவாக்கப்பட்டிருக்கும்
யாழியின் உயரத்தைவிடத் தஞ்சை, செஞ்சி நாயக்கர்
தூண்களில் காணப்படும் யாழியின் உருவம் சிறியதேயாகும். அதிலும் மதுரை நாயக்க கலைஞர்கள் புதிய வடிவமுள்ள யாழியின்
உருவத்தைத் தூண்களில் அமைத்துள்ளனர். யாழியானது தும்பிக்கை யுடனும் ஒருங்கினைந்த யானையின் உருவம் பொருந்தியும் அல்லது
யாழியின் தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்காகவே அமைக்கப் பட்டதாகத் தெரிகின்றது. மேலும் யாழித் தூண்கள் தும்பிக்கையுடனும் மகரம் அல்லது பிற
விலங்கினங்களும் தும்பிக்கையுடன் இருப்பது போலவே அமைக்கப்பட்டுள்ளன. யாழியின் கீழ்ப்புறம் குரங்கு, மனித உருவங்கள் மற்றும் பிற விலங்கின வடிவங்கள் இருப்பது
போன்று செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் தஞ்சை நாயக்கர்
தூண்கள் மதுரை நாயக்கர் தூண்களோடு ஒப்பிடுகையில் தஞ்சைக் கட்டடக் கலையானது உயரத்தில்
சிறியதாகவும் அலங்கார அமைப்புக் குறைந்ததாகவும் காணப்படுகின்றன. எடுத்துக் காட்டாகக் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீசுவரம்
கோயிலுள்ள நாயக்கர் தூண்கள் குறிப்பிடத்தக்கத் தனிச்சிறப்பு உடையனவாகும்.
நாயக்கர் கலைத்தூண்கள் பொதுவாக வளர்ச்சியுற்ற
உப பீடம், அதிட்டானத்துடன் கூடிய கட்டட அமைப்பாகக் காணப்படுகின்றன. இதுபோன்று அலங்கரிக்கப்பட்ட தூண்கள் மற்றும் சிற்பங்கள் சிறு
சிற்ப வரிகள் ஆகிய உயர்நிலைக் கலையானது, ஒய்சாளர், சாளுக்கியர், முற்காலச் சோழர், பாண்டியர் மற்றும் விசய நகரர்களின் கலை மரபின் தாக்கமாகவே
நாயக்கர்கலையில் வெளிப் படுகின்றன. கருநாடகாவின்
முற்காலக் கட்டடக்கலையும் தமிழகத்தின் பிற்காலச் சோழர் மற்றும் பாண்டிய மரபும் இணைந்து
காணப்படும் வளர்ச்சி நிலையே நாயக்கர் கட்டடக்கலையின் உச்சமாகும்.
விசயநகர கோயிற்கலையின் முழு படைப்பை ஒத்தாற்போன்று
கும்ப கோணத்தில் உள்ள இராமசாமி கோயிலின் தூண்கள் அமைந்திருக்கின்றன. ஆனால் தட்டையான சிற்பங்களைக் கொண்ட தூண்கள் ஒரு புதிய புதுவழியமைப்பைத்
தஞ்சை நாயக்கர் மண்டபங்களில் காணமுடியும். மதுரை, செஞ்சி நாயக்கர்
கோயில் களில் இதுபோன்ற தட்டை வடிவம் கொண்ட சிற்பத்தூண்களைக் காணமுடியாது.
தட்டையான தூண்கள் மற்றும் சிற்ப வரிகள் வித்தியாசமான
முறையில் ஒரு கைதேர்ந்த அமைப்பாக, முழுக்க முழுக்க
அழகியல் தன்மை நிறைந்ததாக இம்மண்டபக் கட்டடக்கலையானது சாளுக்கியர் மற்றும் ஒய்சாளர்
தூண்களின் முகத்தோற்றக் கூறுகளையே திரும்ப நினைத்துப் பார்ப்பது போலவே உள்ளது. மதுரையில் உள்ள புதுமண்டபம் (வசந்த மண்டபம்) மற்றும் தாரமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் ஆகியன மதுரை நாயக்கர் கலை மரபாகும். மதுரை நாயக்கர் கலையில் பொதுவாகக் குதிரை, யாழி, மனித சிற்பங்கள், குழுச்சிற்பங்கள் மற்றும் இசைத்தூண்கள் போன்றவற்றில் வித்தியாசமான
கலைப் படைப்புகளைக் காணமுடியும். இவ்வகைத் தூண்களை
உயரமாகவும் அழகிய கலை வடிவமைப்பு, புதிய உத்திகளைக்
கொண்டு வடிவமைத்துள்ளனர். கலையின் உச்ச
நிலையில் உள்ள மதுரை நாயக்கர் கலையின் தாக்கம் தஞ்சை நாயக்கர்கள் பிற்காலங் களில்தான்
பின்தொடர்ந்தனர். தனித்துவம் மிக்கத்தூண்களை நெல்லையப்பர் கோயில், புதுமண்டபம், ஆழ்வார் திருநகரி, இராமாசாமி கோயில், ஆவுடையார் கோயில், இரங்கநாதர் கோயில், கைலாசநாதர் கோயில் மற்றும் பூவராகசாமி கோயில் போன்ற கோயில்களில்
காணமுடியும்.
அலங்காரக் கலையானது தஞ்சை, செஞ்சி கலையை விட மதுரை நாயக்கர் கலை உயர்ந்ததாகவே இருக்கிறது. இந்த வேறுபாடுகளைக் காணவேண்டுமாயின் தூண்களில் பிரம்ம காந்தம், விஷ்ணு காந்தம் மற்றும் இந்திர காந்தம் போன்ற தூண்களை மதுரை
நாயக்கர் மண்டபங்களில் அநேக இடங்களில் காணலாம். அவற்றில் பீடமும் அடித்தளமும் உயரமாகவே அமைத்து உருவாக்கப்பட்டிருக்கும். தூண்கள் பல்வேறுபட்ட அலங்கார அமைப்புகளைக் கொண்டு சிற்பவரிகளும்
அக்கர பட்டிகை, கொடிக்கருக்கு அலங்காரம், பூ அலங்காரங்களைக் கொண்டும் அமைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கலைகளிலும் மதுரை நாயக்கர் கலையானது
உச்சகட்ட வளர்ச்சி பெற்றுத் தனித்துவம் கொண்ட ஒன்றாக விளங்கு கின்றது. திருவைகுண்டத்தில் உள்ள மண்டபத்தின் அதிட்டானப் பகுதியில்
அமைந்துள்ள சிற்ப வரிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். தூணின் உயரத்தை அதிகரித்துக்காட்டுவதற்காகக் கொடுங்கால் என்ற
பகுதி நாயக்கர் கலையில் உட்புகுத் தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக அமைவன ஆழ்வார் திருநகரி, திருவை குண்டத்தைத் தொடர்ந்து திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில்
உள்ள ஒன்பது திருப்பதி கோயில்களாகும்.
தஞ்சைநாயக்கர் கோயிலிலும் செஞ்சி நாயக்கர் கோயிலும்
யாழித்தூண்கள் ஒரு சில இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான யாழித் தூண்கள் மதுரைநாயக்கர் மண்டபங்களில்
நிறைந்து காணப்படுகின்றன. எடுத்துக் காட்டாக
நெல்லையப்பர் கோயில் திருவில்லிபுத்தூர், கிருட்டிணாபுரம், திருவை குண்டம்
போன்ற கோயில்களிலும் உள்ள தூண்கள் ஒன்றோடொன்று தொடர்புடை யதாகவே உள்ளன. உருவங்கள் அமைக்கப்பட்ட தூண்கள், தூண்களோடு அமைந்த கடவுள் சிலைகள் இவையாவும் விசயநகர கலைபாணியின்
தாக்கமாகும். உருவச் சிலைகள் அமைந்த அனைத்துத் தூண்களிலும்
உயரத்தோடு ஒட்டியே சிற்பங்கள் உயர்ந்து காணப்படுகின்றன. அதேபோன்று தெய்வப் படிமங்கள் நிறைந்த தூண்களும் மிகப்பெரியதாக
உள்ளன. அவற்றுள் சிவன், விஷ்ணு முதலிய தெய்வங்களின் சிலைகளும் இடம்பெற்றுள்ளன. தமிழக நாயக்கர் மன்னர்களின் சிலைகளும் பெரும்பாலான கோயில்
தூண்களில் உள்ளன. நாயக்கர்களின் உருவச் சிலைகளை அமைத்ததன் மூலம்
தூண்களில் அதிகப்படியான திகட்டும் தன்மை காணப்படவில்லை. இதுபோன்ற தூண்களில் மிகப்பெரிய சிற்பங்களான வீரபத்திரர், ஆஞ்சனேயர் மற்றும் வாயிற்காவலர் (துவாரபாலகர்கள்) போன்றவற்றை நாயக்கர் தூண்களில் அமைத்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாது ஒரு சில புதிய இணைப்புச் சிற்பங்களாக இரதி, மன்மதன், குறவன், குறத்தி மற்றும் கண்ணப்பன், இராமாயணம், மகாபாரத்தில் இடம்பெறும் முக்கியச் சிற்பங்களும் இடம்பெற்றிருக் கின்றன. இந்தச் சிற்பங்கள் இணைந்த தூண்கள் மிகப்பெரியதாகவும் பார்ப்போரைக்
கவரும் விதமாகவும் அமைந்துள்ளன.
நாயக்கர்களின் முன்னோடிகளான விசயநகரர் காலத்தில்
பொதுவாக வட்டமான தூண்கள் அமைக்கப்படவில்லை. சதுரமான தூண்களும் விட்டமான தூண்களும் இணைந்த நிலையில் பாண்டிய
சோழர் கலைக்கூறுகளின் இணை வாகவே உள்ளன. ஆனால் விசயநகரக் கட்டடக் கலையில் இவ்விரண்டும் பிரிக்கப் பட்டுள்ளன. அம்பியில் உள்ள விட்டலாசாமியின் கோயிலில் இவ்வகைத் தூண்களில்
வீரர்கள் குதிரையின் மேல் இருக்கும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இத்தகைய தூண்கள் அதாவது பாயும் குதிரைகள், பாயும் சிங்கங்கள் அல்லது யானை – சிங்கம் இணைப்பு யதார்த்தத்திற்கு முரணாகக் காணப்படுகின்றன.
15ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த பாயும் குதிரைகளில் வீரர்கள்
சவாரி செய்வதும் குதிரையின் கீழ் படைவீரர்களை நிறுத்துவது என்பதும் மதுரை நாயக்கர்களின்
கட்டடக்கலைக்கூறாகும். தொடர்ந்து விசய
நகரக் கலைஞர்கள் தமிழ்நாட்டின் பலபகுதிகளில் இத்தகைய தூண்களை வடிவமைத்தனர். தஞ்சை செஞ்சி நாயக்கர்களும் இக்கலைப் பாணியைப் பின்பற்றியுள்ளனர். விசய நகரர்களின் இசைத்தூண்களின் அமைப்பானது எண்பட்டை வடிவமுடையதாக
உள்ளது. மேலும் அதிட்டானத்தில் சிங்கங்கள் இடம்பெற்றும்
தூண்கள் முக்கியத் தூண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக அம்பியில் உள்ள விட்லசாமி கோயில் கல்யாண
மண்டபத் தூண்கள் இரண்டும் இணைதூண்களுடன் இணைக்கப் பட்டுள்ளன. அதன் கீழ் பாயும் சிங்கங்களும் உள்ளன. இந்த வகைச் சிங்கங்கள் பல்லவர் வழி மரபுவழிபட்டவையாகும். தமிழக நாயக்கர் கலைப் படைப்புகளில் பல இடங்களில் இவ்வகை இசைத்தூண்களைக்
காணலாம். மதுரையில் உள்ள இசைத்தூண்கள் இணைத்தூண்களாகக்
காணப்படுகின்றன. இந்தத் தூண்களின் முன்னால் ஒரு உப பீடம் நீட்டிக்
கொண்டிருக்கிறது. அதன்மேல் ஆளுயர சிற்பங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அச்சுதராயர் காலத்திலேயே இவ்வகைத் தூண்கள் காணப் படுகின்றன. மதுரை புதுமண்டபத்தில் இத்தகைய தூண்களின் உப பீடத்தின் மேல்
மதுரை நாயக்கர்களின் பத்துப் பேருடைய சிலைகள் வைக்கப்பட்டள்ளன. அவற்றுள் திருமலை நாயக்கர் சிலை விசேடமானதாகும். தொடர்ந்து தஞ்சை நாயக்கர்களும் இத்தகைய தூண்களைப் பயன்படுத்தினர்.
நாயக்கர்களின் கோபுரக் கட்டடக்கலை:
கோபுரத்தின் முக்கியமான பகுதி அதன் நுழைவாயிலாகும். அவை கோபுர வாயிலின் உள்ளோட்டமாக அமைவதாகும். நுழைவாயிலானது கோபுரத்தின் முதல் கபோத பகுதி வரை உயர்ந்தும்
அது உள்ளே இரண்டாகப் பிரிந்தும் காணப்படும். நுழைவாயிலின் உயரமானது அகலத்தை விட இரண்டு பங்கு கூடுதலாகவே
அமையும். நுழைவாயிலானது பெரும்பான்மையான கோபுரங்களின் இரண்டு
துவாரங்களை உடையதாக அமைந்திருக்கும். ஒரு துவாரம் வெளி நுழை விடத்திலிருந்து உள்ளே நுழைவாயில் பாதிவரை நீண்டிருக்கும். அதேபோன்று மற்றொரு துவாரம் உள்ளிருந்து நுழைவாயில் பாதி வரை
அமைந்திருக்கும். இவற்றை தமிழகத்தின் பெரும்பான்மையான நாயக்கர்
கோபுரங்களில் காணமுடியும். இந்தத் துவாரங்கள் கதவு வழிகள் அல்லது கதவு வழி முகப்பு
என்றும் கவடாக்கள் என்றும் அமைப்பர். சிறிய கோயில் கோபுரங்களில் இவை பெரும்பாலும் காணப்படாது. கதவின் உறுப்புகள் பெரும்பான்மையும் ஒரே கல் அல்லது மரத்தினால்
ஆனது ஆகும். நிலைப்படியும் ஒரே கல்லால் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு இடைப் பட்ட நடுப்பகுதியானது ஒரு தனி அமைப்பாகும். இதன் கூரையானது பிற நுழை வாயில் விதானம் பகுதியிலிருந்தும்
மாறுபட்டுச் சற்றே உயரமாகக் காணப்படும். இந்த மத்திய நுழைவாயில் பகுதியானது அந்தர் பகத் தோரணம் என்றழைக்கப்படும்.
பொதுவாகக் கோபுரங்களின் மேல்தளங்கள் செங்கல், சுண்ணாம்பு, சுதை ஆகியவற்றால் கட்டப்பட்டிருக்கும். கல்கார (பிரத்தரம்) மட்டம் வரையுள்ள பகுதி கருங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும். அவ்வாறு புறத்தோற்றங்கொண்ட கோபுரங்களை மதுரை, தஞ்சை, செஞ்சி நாயகர்களின்
கட்டடக்கலை வளர்ச்சி தமிழகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. அவற்றுள் மதுரை நாயக்கர் கோயில்களில் உள்ள வளர்ச்சி என்பது
பிற்காலப் பாண்டியர் கோபுரங்களின் வளர்ந்த வடிவமாகவே கொள்ளலாம். கோபுரங்களின் மீது புராணக்காட்சிகள் தனித்த சிற்பங்கள் எனச்
சிற்ப வரிகள் தொடர்ந்தும் கோபுரத்தை அலங்கரிக்கும் விதமாக நாயக்கர்களின் கோபுரக் கட்டடக்கலை
பாண்டியர் கலையைத் தழுவி பாண்டிய நாட்டில் வளர்ந்திருப்பதைக் காணமுடியும். புதுவழிமுறைகள் இல்லாமலே நாயக்கர் கோபுரங்களை மிகப்பெரியதாகவும்
மிகைப்படுத்தும் வகையில் அமைத்துள்ளனர். கோபுரங்களில் எண்ணிக்கையற்ற சிறு சிறு வடிவங்களை அறிமுகப் படுத்தியதில் இவர்கள்
பெரும் பங்கு வகிக்கின்றனர். அது மட்டுமல்லாது
பல கதைகளைக் கொண்ட சிற்பங்களை கோபுரத்தின் சுவர்ப்பகுதியில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
பல அடுக்குகளைக் கொண்ட மிகப்பெரிய கோபுரங்களை
நூற்றைம்பது மற்றும் இருநூறு அடி உயரம் கொண்ட கோபுரங்களை அமைப்பதற்கும் அடித்தளங் களையும்
அதனுள் பல அடுக்குகளையும் தாங்கக்கூடிய அளவிற்கு நாயக்கர்கள் கோபுரங்களை அமைத்துள்ளனர். 16-17ஆம் நூற்றாண்டுகளில் உருவாக்கிய கோபுரங்கள் ஏறக்குறைய 150அடி உயரம் கொண்டதாகவும் அதனுள் பதினோரு நிலைகளைக்
கொண்டுள்ளதாகவும் அமைத்துள்ளனர். எடுத்துக்காட்டாக
இராசகோபாலசாமி கோயில் (மன்னார்குடி), கும்பேசுவரர் கோயில் (குடந்தை), அருணாச்சலேசுவரர்
கோயில் (திருவண்ணாமலை), மீனாட்சியம்மன் கோயில் (மதுரை), ஆண்டாள் கோயில் (திருவில்லிப்புத்தூர்) கோபுரங்கள் ஏறக்குறைய 150 அடி உயரம் கொண்டதாக உள்ளன. மதுரை, தஞ்சை நாயக்கர்கள்
கோபுரங்களை மிக உயரமாக அமைப்பதில் அதிக கவனம் செலுத்தியிருக்கின்றனர். ஆயினும் செஞ்சி நாயக்கர் கோபுரங்களை அர்த்தமுள்ளதாகவும் பொருத்தமுள்ளதாகவும்
அமைத்துள் ளனர். தமிழகத்தில் ஒரே கோயிலில் அதிக எண்ணிக்கையிலான
கோபுரங்களைக் கட்டுவித்த பெருமை நாயக்கரையே சாரும். கோபுரத்தின் இருபக்கங்களில் உள்ள சிறிய கோட்டங்களில் கணபதி
மற்றும் முருகனை வைப்பதுபோன்ற அமைப்பு சோழர் கோபுரங்களில் காணமுடியும். இம்மரபு விசயநகரர் கலையிலும் நாயக்கர் கலையிலும் எதிரொலிக்கின்றன.
விமானக் கட்டடக்கலைக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்த
சோழர்கள் பிற்காலங்களில் கோபுரக்கலையிலும் தம் பங்கை ஆற்றியுள்ளனர். கோபுரக் கலைக்குப் பெயர் பெற்றதாகத் தென் இந்தியக் கோயில்கள்
இன்றும் நிலைத்து நிற்கின்றன. இயற்கையாகவே கோபுரங்களின்
வளர்ச்சி என்பது சிற்பங்கள் மற்றும் அலங்காரங்களுடன் கூடிய ஒன்றாகவே உள்ளன. புராணச் செய்திகளை மட்டுமல்லாது வாழ்க்கை முறைகளை விளக்கும்
விதமாகச் சிற்பங்கள் கோபுரங்களில் நிறுவப்பட்டுள்ளன. அவ்வாறு இடம்பெற்ற சிற்பங்கள் உலக இயக்க நிகழ்வுகளை எடுத்தியம்பும்
வண்ணம் உள்ளன. மாடக்குழிகள் நிறைந்த கோபுரங்களின் தோற்றம் வளர்ச்சி
என்பது முதலில் தோன்றிய விமானக் கட்டடக்கலையின் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியாகவே
கொள்ளலாம். கோபுரத்தின் உள் பக்கங்களிலும் விதானங்களிலும்
அழகிய வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஓவியங்கள் சமயம் மற்றும் சமூக நிகழ்வுகளை விளக்குவதாயும்
உள்ளன. இவ்வாறாக தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர்களுக்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலான கோயில்கள், மண்டபங்கள், கோபுரங்களை நாயக்கர்கள் கட்டியுள்ளனர். இவை அனைத்திற்கும் உள்ள தொழிற்நுட்பங்கள் தம் முன்னோர்களால்
வரையறுக்கப்பட்ட வரையறைக்குள் நின்றே எடுத்தியம்பியிருக்கின்றனர். அவற்றில் சில தளர்வுகளாகப் புனிதம் என்று அனைவராலும் மதிக்கப்படக்
கூடிய கோயில் தூண்களில் குறவன், குறத்தி, வேடன் போன்ற தூண் சிற்பங்கள் கட்டடக் கலையை மீறியும் சமத்துவம்
ஓங்கிக் காணப்படுவது நாயக்கர் கலையின் சிறப்பம்சமாகும். நாயக்கர்கள் அவரவர் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் தம்மை நிலைநிறுத்திக்
கொள்வதற்காகவும் அதீத ஆன்மிகப் பற்றாலும் தமிழகம் முழுவதும் நிரம்ப கோயில்கள் எடுப்பித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக