-முனுசாமிபேரன்.
எழுத்தர்கள், ஓவியர்கள், விமர்சகர்கள், நடிகர்கள் நீங்கள் பொதுவாகவே இவர்களைப் படைப்பாளிகள் என்பீர்கள். சரி, கதைக்கு வருவோம். கதை முனுசாமி பேரனின் ஒவ்வொரு நாள் சம்பவங்களின் அனுபவங்களை முன் வைத்து. அதாவது...
ஒருநாள்...
“யார் வேணும்?”
“அய்யா உங்கள பாக்கணும்..”
“சரிப்பா! நீ என்ன நேரடியாகவே தொடர்பு
கொள்ளலாமே. சரி அவர எப்படி உனக்குத்
தெரியும். அவரு உனக்கு சொந்தமா?”
“இல்லீங்கய்யா! அய்யா.. கேள்விய துவங்கட்டுமா?”
“சரி..”
“தமிழர், தமிழர் மரபு பற்றி..?”
“நிறுத்து நிறுத்து.. நீ யாரு? எங்கிருந்து வர்ற?.. நீ வந்த நோக்கம் இதுதானா.. உன்னைய யாரு அனுப்பினாங்க, என்னய வீணா மாட்டிவிட பாக்குறியா..?”
ஒரு நாள்..
“அய்யா... ஓவியர் அனுப்பினார்”
“அடடே... வாப்பா... வா... வா... சரி சரி கொஞ்சம் நில்லு... 9841... ஹலோ.. என்னங்க உங்க பையன்னு சொன்னீங்க! முனுசாமிபேரன்னு சொல்லுறா(ன்). பையன்கூட கருப்பா இருக்கிறான்...”
“சார், அவ(ன்) எம் பையனில்ல.. உங்களப் பாக்கணும்னு கேட்டா(ன்)... அதான் அனுப்புச்சேன்”.
“அதானே பாத்தேன்... நம்மாத்துப் புள்ளயாண்டா இப்படியா இருப்பான். சரி வாப்பா... என்ன கேளு!”
“அய்யா உங்களை எப்படி பெரும் படைப்பாளியாகத் தமிழ் கூறும் நல்லுலகு இன்னும் மதிக்கிறது?”
ஒரு நாள்...
“இங்க நான்தான் பெரிய எழுத்தாளன்னு திரியிறானே... அவனும் நானும் இருபது இருவத்தஞ்சி வருசத்துக்கு முன்னாடி, ஒரு ரஷ்ய நாவலப் படிச்சிட்டு, இராப்பகல்னு கண் முழிச்சி அத்த அப்படியே உள்டாவா தமிழ்ல எழுதினோம்... இது (இன்னிக்கு வரைக்கும்) யாருக்கும் தெரியாது. தாயொளி அவன் மட்டும் பெரிய எழுத்தாளன்ற பேர வாங்கிக்கினான். எங்க என் முன்னாடி வந்து நிக்கச் சொல்லுங்கப் பாக்கலாம்”.
ஒரு நாள்...
“நான்தாங்க இங்க முக்கியமான படைப்பாளி... நான்தாங்க தமிழ்ச் சூழலுக்குப் புதிய புதிய டிரண்டுகள கொண்டாந்தேன். யார வேணுமின்னாலும் கேளுங்க என்னயதான் எல்லாரும் சொல்லுவாங்க. இந்த இசத்தையெல்லாம் உடச்சி, மரப நவீனமாக் கொடுத்ததே நான்தான்...”
“அய்யா... தங்கள் கலை வெளிப்பாட்டில்
தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு..?”
“இந்த மாதிரியெல்லாம் நீங்க
கேள்விக் கேக்கக் கூடாது... அப்ப நீங்க பத்திரிக்கையில எழுதப் போறதில்லையா”
ஒரு நாள்...
“அய்யா வணக்கம்...”
“வாங்க... வாங்க... வணக்கம்”
“நீங்க அன்னிக்கு அவ்ளோவா கோவப்பட்டிருக்கக் கூடாது?”
“இல்லீங்க... அந்தத் தலித் படைப்பாளிங்கள, நாங்கதான் ஆரம்பத்துல ஊக்குவிச்சி எங்க இதழ்ல எழுத சொல்லி... வளத்து விட்டோம்”
“சரிங்க...”
“ஆனா, இன்னிக்கி எங்களேயே விமர்சனம்
பண்றாங்க”
“நன்றிங்க...”
ஒரு நாள்...
“இங்க ஓவியனே இல்லீங்க... இங்க, எந்த ஓவியனுக்குக் கலையைப்
பற்றிய அறிவு இருக்கு... நாங்க இராப்பகலா சிந்திச்சி, கத, கவிதன்னு எழுதுறோம். எங்க படைப்புகளுக்குக் கிறுக்கி முறுக்கி ஏதோ படம் போடுவானுங்க. அவ்ளோதான். அவனுங்க லட்சணம்...”
“அய்யா தங்களைப் பாதித்த சிறந்த படைப்பு ஏதாவது...”
“அப்படி எதுவும் இருக்குறதா தெரியல”
ஒரு நாள்...
“அய்யா, சிறந்த கவிஞர்கள் யார், யார்?”
“அவர், இவர்!, அப்புறம் அவர்!”
“அய்யா, சிறந்த ஓவியர்கள் யார், யார்?”
“அவர், இவர்!, அப்புறம் இவர்!”
“அய்யா குறிப்பா தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் படைப்பாளிகள்
யார், யார்?”
“அவர்! இவர்! அப்புறம் இவர்தான். வேற யாருமில்ல”
“அய்யா, கூட்டி கழிச்சிப் பாத்தா... எல்லாம் உங்க சாதி தவறு இயக்க தோழர்களாகவே இருக்கிறாங்களே..”
“அப்ப... நீ யாரு தம்பீ..”
ஒரு நாள்...
“அய்யா, நானு... நான்தாங்க பேசுறன்...”
“தெரியுது, தெரியுது...”
“அய்யா, அந்தப் புத்தகம் கெடச்சிதுங்களா..”
“கெடச்சிது, ரொம்ப அரும.. ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு, இப்படிதான் மண் சார்ந்த மரபோடு எழுதணும்... சரிப்பா நீ யாரு?”
“நான்தாங்க முனுசாமி பேரன்”
“அதாம்பா நீ யாரு”
“அய்யா நான்தாங்க எம்.சி.சி. முனுசாமி பேரன்”
“இல்லப்பா நீ யாரு”
“நான் ஒரு தலித்துங்க”
“சரி... நீங்க எப்படி என்னயப் புடிச்சீங்க”
ஒரு நாள்...
“நீங்க... நீங்... நீங்கதானே இவுரு”
“ஆமா... நான்தான் அவுரு...”
“உங்களோட படைப்புகள நெறய பாத்திருக்கேன்”
“நான் எப்பவுமே ஃபீல்டுவொர்க் பண்ணித்தான் எதயும் படைக்கிறது. என்னோட கத, கவித, கட்டுரயாகட்டும் இல்ல என்னோட
புகைப்படம், குறும்படம், ஆவணப்படமா கட்டும் எல்லாம் கள(ஆய்)வு தான்”.
“ஆனாலும், உங்களப்பத்தி!!!”
“என்ன... என்ன... சொல்லுங்க... சொல்லுங்க...”
“இல்ல... நீங்க... எப்ப சுனாமி வரும், எப்ப வெள்ளப் பெருக்கு வரும் எப்ப நூறு எறநூறு குடிசைங்க
எரியும்னு பயணப்பட காத்துக்கிட்டு இருப்பீங்களாமே...”
“ஏன்னா...?”
“அப்பதான் உங்களால உயிரோட்டமான குறும்படத்தையும் ஆவணப் படத்தையும் தரமுடியுமாமே...”
“இத... அந்தச் சிற்றிதழ் குரூப்புதான்
கட்டிவிட்டிருப்பானுங்க”
“அப்புறம், எங்க தலித்துகளக் கொடும படுத்துறாங்க... எந்தப் பகுதி பழங்குடிமக்களக் காட்ல இருந்து வெரட்டியடிக்குறாங்கன்னு, பத்திரிக்கைகளத் தினந் தினம் புரட்டி புரட்டிப் படிக்கிறீங்களாமே”
“இதுக்கு என்ன சொன்னானுங்க?... இவுரு இதப் படிச்சிட்டுத்தான் கத கவித கட்டுர எழுதுறார்ன்னு சொன்னானுங்களா...”
“இல்லீங்க, நீங்க சொல்றமாரி ‘இவுரு’ ‘அவுரு’ன்னு சொல்லல...”
ஒரு நாள்...
“புணர்தலுக்கானத் தூண்டல் என்பது ‘பெண் தோற்றத்தைப் பார்ப்பதனால் மட்டுமே உணருவானுங்க சில முட்டாப் பசங்க... உணர்வு ரீதியான எதிர்நோக்கு - பகிர்வு என்பது அடிப்படையில் பாதுகாப்பு - ஊக்கம் - உற்சாகம் என்பதாக. இவை கலைப் படைப்புகளில் மட்டுமல்ல..நமது ஒவ்வொரு செயலிலும்.. எதிர் நோக்காவும் - செயல் விளைவாகவும்.. இருப்பவை.. தெளிவற்ற நோக்கம் - செயல் உற்பத்தி... குழப்பத்தின் அடையாளமாகவே இருக்கும். என்ன புரிஞ்சுதா?”
“அய்யா புரிஞ்ச மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கு”
“சரி நீங்க அடுத்த வாரம் வாங்க. தனியாப் பேசலாம்”.
“சரிங்கய்யா”...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக