சிறுகதை:
- அ.தும்மா
பிரான்சிஸ், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை.
அவன் வேகவேகமாக குழித்தோண்டி
கொண்டு இருந்தான். தோண்ட தோண்ட மணல் சரிந்து
கொண்டே இருந்தது. இருள் சூழும் நேரம். வேகவேகமாகத்
தோண்டி மணலை அள்ளி அள்ளி கொட்டிக்கொண்டு இருந்தான் தனி ஆளாக. வியர்வை பட்ட மண் மணம்வீசியது. மண் கிடைத்து விட்டது.
அவன் உயரத்தைவிட ஆழமாக தோண்டிவிட்டான். குழியின்
சுவர் முழுக்க இரத்தம் வழிவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தான். குழியைத்
தோண்டும் போது தனது பாதங்களையும் சேர்த்தே கடப்பாறையால் குத்திக்கொண்டு இருந்தான்.
தொடக்கத்தில் தெரியாமல் பாதத்தில் கடப்பறை குத்திக்கொள்ளப் பீச்சிய இரத்தம்
மண்ணுடன் பட்டவுடன் உறிஞ்சிக்கொண்டு செம்மண்ணானது. மணப் பெண்ணானது.
ஏதோ ஒரு குப்பை மேட்டில்
முளைத்திருந்த செடிகளுக்கு இடையே கிடைத்த மாங்கன்றை நடதான் இவ்வளவு ஆழமான குழியைத்
தோண்டினான். ஆழம்தான் வளத்தைக் கொடுக்கும் என நம்பினான். காகத்தின்
எச்சத்தில்கூட ஆலமரம் முளைக்கும். ஆனால் நிலைக்காது. கன்றுக்கு உரமாக தனது கால்களைக் கடப்பாறை யால் குத்திக் கிழித்து பிய்த்து
குழியில் இட்டான். பின் தனது உடல் முழுவதையும் முடியும் வரை தானே
குத்தி கிழித்து, பிய்த்து பிய்த்து குழிக்குள் துண்டு துண்டாகப்
போட்டான். ஒவ்வொரு துண்டாய் குழிக்குள் தன்னை வீசிக் கொண்டபோது
ஆனந்தமாய் சிரித்தான். சிங்கம்போல் கர்சித்தான். இவனது ஒலி கேட்டு கூடுகளுக்குச்
செல்லும் பறவைகள் கூட திரும்பிப் பார்த்துச் சென்றன. அந்த வனாந்தரம்
முழுக்க இவனது ஒலியும் வாசமும் பரவிக் கொண்டிருந்தது. மண் அதுவெறும்
மண் மட்டுமல்ல. மனிதன் மண்ணில் இருந்து தோன்றினான்.
குத்திக் கிழித்து குழிக்குள் தன்னைப் போட்டுக் கொண்டே இருந்தவன், ஒரு கட்டத்தில் உடலை கிழிக்க முடியாமல் போக, குவித்து வைத்திருந்த மணலையும் மண்ணையும் தனது உடல் துண்டுகளுடன் கலந்து குழிக்குள்
தள்ளினான். பின் மரக்கன்றை எடுத்துக்கொண்டு குழிக்குள் தன்னைத்தானே
புதைத்துக்கொண்டு மரக்கன்றை நட்டு விட்டான்……
மண்டிக்கிடந்த புதர்களுக்கிடையில் சூம்பிக்கிடந்த மாங்கன்றை குட்டிமாதான்
கண்டுபிடித்து, வரப்புகட்டி தினம் நீர் ஊற்றி வளர்த்தாள்.
இவளது கைப்பட்டவுடன் கன்று செடியாகிக் கொண்டிருந்தது. இவளுக்கு மட்டும் மா செக்கச்செவேலென்று வளர்வதாகப்பட்டது. செடி மரமானது.நகராட்சி சிமெண்ட் சாலை போட மரங்களை வெட்டிக்கொண்டு
வந்தபோதும், கழிவுநீர் கால்வாய் தோண்டும்போதும் இடையூறாய் இருந்த
மரத்தினை வெட்ட புல்டோசர் கொண்டுவரப்பட்டது. குட்டிமா தான் தனது
தந்தையிடம் அடம்பிடித்து தனக்கு சேரவேண்டிய நிலத்தை நகராட்சிக்குக்
கொடுத்து மரத்தைக் காப்பாற்றியவள். அது அவளுக்கு வெறும் மரம் அல்ல. ஆம்... மரங்கள் வெறும் மரங்கள் அல்ல.
அவளது தெருவில் உள்ள
பெருமாள் கோயிலை ஒட்டித்தான் மாமரம் வளர்ந்து இருந்தது. பெருமால் பக்தர்களுக்கு இம்மரம்தான் நிழல் தந்தது.
இவள் வாடிய பயிரைக் கண்டபோது வாடியவள் அல்ல. கடைகளில்
வாடாமல் இருக்கும் காய்கறிகளையும் கீரைகளையும் கண்டு வாடியவள். கேட்டால் பிணம் அழுகாமல் இருக்க இரசாயனம் இடுவதுபோல் பச்சை காய்கறிகள் வாடாமல்
இருக்க இரசாயனம் இடுவார்கள் என்று புலம்புவாள்.
இம்மரத்திற்குப்
பூச்சி மருந்து இட பலர் எவ்வளவோ முயன்றும் அதை குட்டிமாதான் தடுத்து நிறுத்தினாள். அம்மரம் இதுவரை காய்க்காமல் இருப்பதற்கு இவள்தான் காரணம்
என்று வசவுகள் வேறு. இம்மரத்தைத் தொடாமல் இவளுக்கு பகல் விடியாது.
தொடாமல் இரவில் உறக்கம் வராது. மரத்திற்கு ஒருமுறை
பூச்சி அரிப்பு ஏற்பட்டது. அப்போது செய்வது அறியாது பூச்சி மருந்து எதுவும்
அடிக்காமல் மாரியம்மனுக்கு நோன்பிருந்து தீமித்து மரத்தைக் காப்பாற்றினாள்.
மரத்தைச் சுற்றி
பாத்தி வெட்டி கரைக்கட்டி தினமும் நீர் ஊற்றுவாள். நீரொடு சானி எருவையும் கரைத்து ஊற்றுவாள். இவள் சடங்காகி
உட்கார்ந்தபோது தலைமுழுகி பார்த்த முதல் உருவம் இம்மரம்தான். அந்த பார்வையில் மரம்கூட ஒரு கொழுந்திலையை உதிர்த்தது. அதை தனது பாட்டியிடம் எடுத்துவரச் சொல்லி புத்தகத்தில் இன்றும் பாதுகாத்து
வருகிறாள்.
வீட்டில் விஷேச நாட்களில்
திருவிழாக்களின்போது சிறப்புணவுகள் செய்தால், யாருக்கும் தெரியாமல் திருடிவந்து மரத்தின் வேர்களுக்கு இடையில் தூவி விடுவாள்.
ஒருமுறை பாயாசத்திற்குக் காய்ச்சி வைக்கப்பட்டிருந்த மூன்று லிட்டர்
பாலை மரத்திற்கு ஊற்றிவிட்டு, தொடையில் அம்மா வைத்த சூட்டின்
தழும்பு இன்றும் மறையவே இல்லை. குளிக்கும் போதெல்லாம் ஒருமுறை
தழும்பைத் தொட்டுப்பார்த்து, கண்ணாடி பார்த்து புன்னகைப்பாள்.
தனது மகனுக்கு மாமரத்தடியில்தான்
சோறூட்டுவாள், தாலாட்டுவாள், சமயங்களில் குழந்தையைக் குளிப்பாட்டுவாள். மரத்தடிதான்
அவளுக்கு ஆரம்பப் பள்ளி. உதிர்ந்து விழும் இலைகளைக் கொண்டுதான்
எண்ணும் எழுத்தும் அவள் அவனுக்குக் கற்பித்தாள். மகன் அடம்பிடிக்கும்
போதெல்லாம் மரத்தைக் காட்டித்தான் சமாதானம் செய்வாள். இவனும்
அம்மாவைப் போல் மரத்திடம் நெருக்கமாகவும் உருக்கமாகவும் இருந்தான். ஒருமுறை விளையாடும்போது கால் இடரி கீழே விழுந்தபோது வலது காலில் ஏற்பட்ட சிறாய்ப்புக்கு
மா இலையைத்தான் அரைத்து குட்டிமா தடவிவிட்டாள். காயமும் விரைவாக
குணமானது.
---------------------------
முழாண்டு விடுமுறை
என்றதும் மகனின் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை. அவனது வகுப்பில் பலர் பாட்டி வீட்டிற்கு போவேன், அத்தை
வீட்டிற்கு போவேன் என்று அலப்பரித்தபோது, பொங்கும் மகிழ்ச்சியில்
இவன் மாமரத்தைச் சுற்றப்போவதாகவும்,
நாள் முழுக்க மாமரத்தோடு விளையாடுவேன் என்று சொன்னபோதும் வகுப்பு மாணவர்கள்
இவனை ஏதோ ஒன்றினைப் பார்ப்பது போல் பார்த்தனர். அதனை இவன் கண்டுகொள்வதாக
இல்லை.
கத்தரி வெயில் என்றாலும்
மரத்தின் அடியில் நின்றிருந்தால் மார்கழியாய் மணக்கும். விடியும் முன்னமே மரத்தடிக்கு ஓடோடி வந்துவிடுவான்.
உணவு, உறக்கம், விளையாட்டு
எல்லாம் மரத்தடிதான். அந்த ஊரிலேயே இந்த மரம் மட்டும்தான் படர்ந்து
பரந்து விரிந்து அடர்ந்து நிழல் தரும். மரத்தில் தங்கும் கிளிகள்கூட
இவனது நண்பர்கள்தாம். ஒரு முறை மரத்தில் குடியிருந்த காக்கா ஒன்று
நோய்வாய்ப்பட்டு கண்களில் இரத்தம் கசிந்து செத்து போனது. காக்கா
கூட்டங்கள் வானை வட்டமிட்டு இழவு கொண்டாடினாலும், இறந்த காக்கையை
இவன்தான் எடுத்து மரத்தடியில் அடக்கம் செய்தான். இறந்த காகத்தின்
சிறகு ஒன்றைப் பிடுங்கி கல்லறையின் மேல் நட்டு வைத்தான். கிரிக்கெட்
ஸ்டெம்ப் நடவோ, கோட்டிப்புல் விளையாட குழிகிழிக்கவோ, பேய் பந்தாடவோ, இவன் விடாததால் நண்பர்கள் யாரும் இவனுடன்
சேருவதில்லை. தனிமையில் மரத்தடியில் இருந்தாலும் அவன் தனிமையை
உணரவே இல்லை. அவனது தாத்தாப் பதினாறாம் நாள் காரியத்துக்கு மரத்தடியில்
சமயல் செய்ய அடுப்பு மூட்டியபோது கொள்ளிக்கட்டையை எடுத்து அனைவரையும் விரட்டினான்.
மரத்திற்குப் பிடிக்கும் என்று இவன் பிறந்தநாள் அன்று செய்த பூரி ஒன்றை
அம்மாவிடம் கேட்டு வாங்கி மரத்திற்கு மண்கிளறி இட்டான்.
குட்டிமாவிடம் போய்
மாங்காய் பறித்து அரிசி பானையில் போட்டு சீக்கிரம் பழுக்க வைக்கச்சொன்னான். அவள் மறுக்கவே தொடர்ந்து நச்சரித்துக் கொண்டே இருந்தான்.
அவனை சமாதானப்படுத்த ஏதேதோ சொல்லி மரத்திலேயே பழுக்கும்வரை காக்கச் செய்தாள்.
மாங்காயைத் தினம் தினம் எண்ணுவான். அதன் வளர்ச்சியையும்
மாறும் நிறத்தையும் தினம் தினம் பார்த்து அம்மாவிடம் சொல்லி சொல்லி மகிழ்வான்.
கல்லடித்து மாங்காய் பறிக்கும் தெரு பிள்ளைகளிடம் இருந்து மரத்தையும்
மாங்காயையும் காப்பாற்றும் இவன், கிளியும் அணிலும் உண்ணும் போது
மட்டும் பார்த்து கைகட்டி ஆச்சரியப்பட்டு மகிழ்வான்.
கிழக்கு பக்கம் இருந்த காய்களில் ஒன்று
நன்றாகப் பழுத்து விழுவதற்குத் தயாராய் தொங்கிக் கொண்டிருந்தது. அது விழும்போது தரையில் விழாமல் தாங்கிப் பிடிக்க அங்கேயே
காத்துக்கிடந்தான். அசந்து மரத்தில் சாய்ந்து உட்கார்ந்த போது
மாம்பழம் விழவே, ஓடோடி பழத்தைத் தரையில் விழாமல் பிடித்துவிட்டான்.
பழத்தை முகர்ந்து பார்த்து அதனைத் தூக்கிக்கொண்டு அம்மாவிடம் ஓடினான்.
அம்மா... அம்மா... பழமா...
பழமா... நம்ம பழமா... மகிழ்ச்சியில்
திக்கி திக்கி சொன்னான். குட்டிமா சலனப்படாமல் சாப்பிட சொன்னாள்.
அவன் கழுவ நீர் கேட்டான். கழுவாமல் உண்ணச் சொன்னாள்.
வெட்டி உண்ண கத்தி கேட்டான். வெட்டித் துண்டாக்காமல்
சாப்பிடச் சொன்னாள். அம்மா பழம் பெரிசா இருக்குமா, வெட்டி சாப்பிடரம்மா... என்று குழைந்த போது குட்டிமா,
வேண்டாம்பா அப்படியே சாப்புடுடா... அவனோ,
ஏம்மா...? குட்டிமா கண்கலங்கி புன்னகைத்துக் கொண்டே
சொன்னாள், அது உன் அப்பன்டா… வெட்டாம சாப்பிடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக