புதன், 27 நவம்பர், 2013

கிராமம்

கவிதை:
-அவ்வை, அரணாரை, பெரம்பலூர்

பட்டணத்துக்கு படிக்க வந்து
முனைவர் பட்டம் பெற்றுச் சென்றேன்...
எல்லாம் மாறிவிட்டது
அம்மா, அப்பா பாசம் தவிர!
ஊஞ்சல் கட்டிய புளியமரம்
அதன் வேரைக்கூடக் காணோம்.
 

பம்பரம்
கோலிகுண்டு
டயர் வண்டி
பில்லுகோட்டி...
முழுக்க தேடிப் பார்த்தேன்
சிறுவர்களுக்கு அது தெரியவில்லை
எல்லாம் மாறிவிட்டது….


நீச்சல் கற்றுக்கொண்ட
ஒவ்வொரு கிணறாய் பார்த்தேன்…
கிணறுகள் அப்படியே இருக்க
ஓதம்கூட காணவில்லை!


தீப்பெட்டிக்குள் வண்டு பிடித்து
தட்டான் பிடித்து நூல் கட்டி
பட்டாம்பூச்சி பட்டம் விட்டு
விளையாடிய இடமெல்லாம் மாறிவிட்டது...,


தெருவிளக்கில் படிக்கவில்லை!
ஐஸ்பாய் விளையாட்டும் தெரியவில்லை!
நுணாம் பழத்துக்கும் கொடுக்காப்புளிக்கும் அலையவில்லை!
கிரிக்கெட் விளையாடி
வீட்டிலேயே குளித்து
டியூசன் சென்று
டி.வி. முன்னால் அடங்கிப் போகிறது வாழ்க்கை...
ஒன்று மட்டும் மாறவில்லை

நாங்கள்
பறத்தெருவில் தான் இருக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக