- பெ.சரஸ்வதி, உதவி பேராசிரியர், இந்தித்
துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.
இந்தி இலக்கியத்தில் பிரேம்சந்த் என்னும் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன. இந்தி ‘கதை இலக்கியச் சக்கரவர்த்தி’
என்று அழைக்கப்பட்ட பிரேம்சந்த் 1880 ஆம் ஆண்டு
ஜூலை திங்கள் 31ஆம் தேதி பனாரசிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில்
உள்ள லம்ஹி என்ற இடத்தில் பிறந்தார். பெற்றோர் அவருக்கு இட்ட
பெயர் ‘தன்பத் ராய்’ என்பதாகும்.
வீட்டில் அவரைச் செல்லமாக ‘நவாப்ராய்’ என்று அழைத்து வந்தனர். நவாப்ராய் என்ற பெயரிலேயே தம்
ஆரம்பகால படைப்புகளை இயற்றினார் பிரேம்சந்த். மத்தியவர்க்க சாதாரண
உழவன் மகனாகத்தான் அவருடைய இளமைப் பருவம் கழிந்தது. மிகுந்த துன்பங்களுக்கு
இடையில் தன்னுடைய பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். 15ஆம் வயதில்
அவருக்குத் திருமணம் நடந்தது. பொருந்தா மணத்தால் அவர் தன் மனைவியை
விட்டுப் பிரிந்தார். மெட்ரிக் பரீட்சையைப் பாஸ் செய்த பிறகு
அவர் அரசுப் பணியில் சேர்ந்தார். பணி நிமித்தமாக அவர் பல ஊர்களுக்குச்
சென்றார். அங்கு பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தார்.
1906 ஆம் ஆண்டு சிவராணி என்னும் விதவைப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.
பிரேம் சந்தின் ஆரம்பகால
படைப்புகள் உருது மொழியில் வெளிவந்தன. பிறகு அவர் இந்தியில் எழுத ஆரம்பித்தார். அவர் இந்தியில்
கதை எழுத ஆரம்பித்த பொழுது இந்தியில் மந்திர வித்தை மாய தந்திரக் கதைகள் உச்சக்கட்டத்தில்
இருந்தன. கதைகள் வெறும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக மட்டும் எழுதப்பட்டது.
அந்த நேரத்தில் பிரேம்சந்த் விரும்பியிருந்தால் தானும் அவ்வாறான கதைகளை
எழுதி பணம் சம்பாதித்திருப்பார். ஆனால் அவரோ சமூகச் சிந்தனையோடு
மக்களுக்காகக் கதை எழுதத் தொடங்கினார்.
தெருவில் நடந்து
செல்லும் சாதாரண மக்களைக் கதைப் பாத்திரமாகச் சித்தரித்து கௌரவப்படுத்தினார். இந்தி கதையுலகிற்கு ‘யதார்த்தப்
பரம்பரை’யை அடித்தள மிட்டார். அவரின் முதல்
கதைத் தொகுப்பு 1909ஆம் ஆண்டு ‘சோஜே வதன்’
என்ற பெயரில் வெளிவந்தது. சுதந்திரப் போராட்டத்தை
வலியுறுத்தியதால் இக்கதைத் தொகுப்பு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோபத்திற்கு ஆளானது.
இத்தொகுப்பைத் தடை செய்தது. அரசு பெயரில் எழுத
முடியவில்லை. அதனால் அவர்தன் பெயரை மாற்றி ‘பிரேம்சந்த்’ என்று எழுத ஆரம்பித்தார்.
பிரேம்சந்த்தின்
கதை இலக்கியம் சீர்திருத்தம், காந்தியக்கொள்கை, கம்யூனிசம், யதார்த்தம்
மற்றும் இலட்சியத்தை உள்ளடக்கியது. ஒவ்வொரு கொள்கை உடையவர்களும்
தன்னுடைய கருத்தை அவர் படைப்பில் காணலாம். பிரேம்சந்த் எழுத்துலகில்
அடியெடுத்து வைத்த காலத்தில் வர்க்கப் பிரிவு தலை விரித்து ஆடிக்கொண்டிருந்தது.
சமூகம், மேல் மத்திய மற்றும் கீழ் வர்க்கமாகப்
பிரிக்கப் பட்டிருந்தன. கீழ்மட்ட மக்கள் எல்லா விதத்திலும் கீழே
இருந்தார்கள். உழைப்பதற்கு மட்டுமே அவர்கள் உடலைப் பெற்றிருந்தார்கள்.
யோசிப்பதற்கான உரிமை அவர் களுக்குக் கிடையாது. அவர்களைப் பற்றி எந்த இலக்கியத்திலும் எழுதவில்லை. அவர்களுக்கும்
இலக்கியத்தைப் பற்றித் தெரியவில்லை. அந்த நிலையில் ‘பிரேம்சந்த்’ நாட்டின் பெரும்பான்மை மக்களின் பொருளாதார
மற்றும் சமுதாய விடுதலையை ஆதாரமாகக் கொண்டு எழுத ஆரம்பித்தார். அந்தப் பெரும்பான்மை மக்களிடையே அவர் உழவன், கூலித்தொழிலாளி,
பெண்கள் மற்றும் தீண்டத்தகாதோர் போன்றவர் களின் யதார்த்த வாழ்க்கையை
ஏன்? கதைகளில் கோடிட்டுக் காட்டினார். அவர்
எழுத ஆரம்பித்தப் பிறகுதான் கதை, நாவலுக்கு மதிப்புக் கிடைத்தது.
சாதாரண மக்களுக்குப் புரியும் விதமான மொழியில் பழமொழிகள் கலந்து எளிய
நடையில் எழுத ஆரம்பித்தார். அவர் சாதாரண மனிதனுடைய வாழ்க்கைப்
போராட்டங்களையும் அடிப்படைத் தேவைகளில்லாமல் அவர் படும் வேதனைகளையும் மேல்வர்க்கம்
மற்றும் ஆதிக்க வர்க்கத்தினால் அவர்கள் சுரண்டப்படுதலையும் அவர் தம் கதை களிலும் நாவல்களிலும்
வெளிப்படுத்தினார்.
பெண் உரிமை மற்றும்
தனித்தன்மைக்காகத் தன் படைப்புகளின் மூலம் குரல் கொடுத்தவர் பிரேம்சந்த். மிகச் சிறந்த பெண் கதா பாத்திரங்களைக் கொண்ட அவருடையப்
புதினங்களும் கதைகளும் இந்தியப் பெண்களுக்கு மதிப்பும் நம்பிக்கையும் அளித்தது.
சமுதாயத்தில் பெண்ணிற்கு எதிராக நிகழும் அனைத்துக் கொடுமைகளையும் தன்னுடையப்
படைப்புகளில் வெளிப்படுத்தினார். ‘நிர்மலா’ என்னும் புதினத்தில் பொருந்தாமணம் மற்றும் வரதட்சனையால் ‘நிர்மலா’ என்ற பெண்ணின் வாழ்வு எப்படி பாதிக்கப்பட்டது
என்பதை எடுத்துரைத்தார். ‘பிரதிஞ்ஞா’ என்னும்
புதினத்தில் விதவைகளின் துயர்களை விவரித்துள்ளார். ‘கபன்’
என்னும் புதினத்தில் ‘ஜால்பா’ என்னும் பாத்திரத்தின் மூலம் ஆடம்பரம் மற்றும் அந்த நகை மோகத்தால் குடும்ப
வாழ்வு எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்று எடுத்துரைத்து எளிமையான வாழ்க்கைமுறையை அறிவுறுத்தினார்.
‘சேவாசதன்’ என்னும் புதினத்தில் விபசாரிகளின் பிரச்சனைகளை
எடுத்துக்காட்டினார். எல்லா வர்க்கங்கள், ஜாதியையும் சேர்ந்த அவருடைய கதாப்பாத்திரங்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர் களாகவும்
இருந்தனர்.
பிரேம் சந்த் அரசுப்பணியில்
இருந்ததால் தன்னுடைய கதை மற்றும் நாவல்களில் நேரிடையாகச் சுதந்திரப் போராட்டத்தை வலியுறுத்தாமல்
மறைமுகமாக எழுதினார். அரசுத்துறை, சட்டத்துறை, போலிஸ் போன்றவற்றில் மண்டிக்கிடந்த ஊழல்
மற்றும் அராஜகத்தை விமர்சித்து எழுதினார். 1921 ஆம் ஆண்டு அரசு
பணியை இராஜினாமா செய்தபின் அவர் தன்னுடையப் படைப்புகளில் சுதேசி பிரசாரம், வெளிநாட்டுப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரம், மது விலக்கு,
சத்தியாக்கிரகம் போன்ற விஷயங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தார்.
‘ரங்கபூமி’ என்னும் புதினத்தில் தொழிற் புரட்சியினால்
உண்டான பிரச்சனையை எடுத் துரைத்தார். இதில் தற்கால ஆங்கில ஆட்சியாளர்கள்
நாட்டில் சிகரெட் தொழிற்சாலை திறப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். அதை அந்தப் புதினத்தில் கண் தெரியாத கதை பாத்திரமான ‘சூர்தாஸ்’ என்பவன் எதிர்க்கிறான். அம்மாதிரி தொழிற்சாலைகள் இங்கு உருவாகுவதால் உழவர்கள் கூலிகளாக மாறுவார்கள்.
மேலும் நாட்டின் இளைய சமுதாயத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாவார்கள்
என்ற கருத்தை இப்புதினத்தில் பிரேம்சந்த் வெளிப்படுத்தினார். ‘கர்மபூமி’ எனும் புதினம் சுதந்திரப் போராட்டத்தை மையமாகக்
கொண்டு எழுதப்பட்டது. இதில் ‘அமர்நாத்’
என்னும் பாத்திரம் தன் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபடுகிறான். அவனும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து தீண்டாமை,
பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக சத்தியாகிரகம்
செய்கிறார்கள். கபன் மற்றும் கோதான் போன்ற புதினங்களிலும் அரசை
விமர்சித்து எழுதியுள்ளார்.
பிரேம்சந்த்தின்
காலத்தில் சுதந்திரப்போராட்டத்துடன் சமுதாய சீர்திருத்தப் போராட்டமும் நடந்து கொண்டிருந்தது. ஆர்ய சமாஜ், பிரார்த்தனா சமாஜ் மற்றும்
பிரம்ம சமாஜ் போன்ற இயக்கங்கள் தீண்டாமைக்கு எதிராக குரலெழுப்பிக் கொண்டிருந்தன.
அதனுடைய தாக்கம் பிரேம்சந்த்தின் படைப்புகளிலும் காணப் பட்டது.
பிரேம்சந்த்தின் படைப்பில் மற்ற சாதியினர் தீண்டத்தகாதவரை நடத்தும் முறைகளையும்
அவர்களின் ஏழ்மையையும் அறியாமையும் அவர்களுக்கு எதிரான சுரண்டல்களையும் எடுத்துரைத்தார்.
அவர்களை முக்கிய கதாப்பாத்திரமாக்கி அவர்களுடைய பிரச்சனையைச் சமூகத்திற்கு
எடுத்துக்காட்டினார். அவருடைய கட்டுரைகளான ‘தீண்டாமை அழிந்து கொண்டிருக்கிறது’, ‘காசியின் கலங்கம்’, ‘காசி கோயில் நுழைவுச் சட்டத்தை ஆமோதித்தல்’
போன்றவற்றின் மூலம் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
‘கர்மபூமி’ என்னும் புதினத்தில் சுக்தா மற்றும்
சாந்திகுமார் போன்ற கதாப்பாத்திரங்களின் தலைமையில் ஹரிஜனங்களின் கோயில் நுழைவுப் போராட்டம்
வெற்றி பெறுகிறது. இதே புதினத்தில் ‘அமர்காந்த்’
என்னும் பாத்திரம் ஹரிஜனங்களைக் கிராமங்களில் வசிக்க வைப்பதில் வெற்றி
பெறுகிறது. அவர் களுடைய
குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப விரும்புகிறார்கள். தன்னுடைய உரிமை
களைப் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு வருகிறது.
கிராமம் மற்றும்
உழவர்களின் மேல் பிரேம்சந்திற்குத் தனிப் பற்று என்றே கூற வேண்டும். அவர் சுதந்திரத்தை உழவன், கூலித்
தொழிலாளிகளின் சுரண்டல் மற்றும் அடக்கு முறையிலிருந்து விடுதலையடையப் பார்க்கிறார்.
ஆங்கில ஆட்சியில் உழவர்கள் கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் நிலை
மிகவும் மோசமாக இருந்தது. இந்திய உழவர்களின் நிலையை ‘கோதான்’ எனும் நாவலில் சித்தரித் துள்ளார். இது இந்திய இலக்கிய உலகத்திலேயே சிறந்த நாவலாகும். இந்தியா
விவசாய நாடு. இந்த நாட்டின் நன்மை தீமை விவசாயிகளையே நம்பியுள்ளது. இந்த நாவலில் ‘ஹோரி’ என்னும் உழவன்
கதாப்பாத்திரம் மூலமாகக் கேள்விக்குறியான இந்திய விவசாயிகளின் நிலையை பிரேம்சந்த் உணர்த்தியுள்ளார்.
அவர் ‘பிரே மாஸ்ரம்’, ‘காயாகல்ப’
மற்றும் ‘கர்மபூமி’ புதினங்களில்
கூட சிறு விவசாயிகள், விவசாயக் கூலிகள், லசான் ஜமீன்தாரி முறை போன்றவைகளை உணர்த்தியுள்ளார்.
பிரேம்சந்த் இந்து
முஸ்லீம் மத நல்லிணக்கத்தை வரவேற்பவர். தன்னுடைய கட்டுரைகள், கதைகள், நாவல்கள்
மற்றும் நாடகத்தில் கூட தொடர்ந்து இதை வலியுறுத்தி வந்தார். ‘இந்து முஸ்லீம் ஒற்றுமை’, இப்பொழுது நாங்கள் என்ன செய்ய
வேண்டும்’, ‘இந்தி-உருதுவின் ஒற்றுமை’,
‘குரானில் மத ஒற்றுமை’ போன்ற பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
‘காயாகல்ப்’ என்ற புதினத்தில் இந்து-முஸ்லீம் என்று சித்தரிப்பதை விட அவர்களை முதலில் மனிதர்களாகப் பார்க்கிறார்.
‘காயாகல்ப்’ புதினத்தில் ‘சக்ரதர்’ மற்றும் ‘க்வாஜா மஹமூத்’
அவ்வகையான பாத்திரங்களாவார்கள்.
பிரேம்சந்த் சிறுகதை, புதினம், கட்டுரை, குழந்தை இலக்கியம், மொழி பெயர்ப்பு, கடித இலக்கிய எழுதாளர் மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளராகவும் எடிட்டராகவும்
இருந்தார். முப்பதாண்டு கால அவரது எழுத்துப்பணியில்
12 நாவல் களையும் கிட்டதட்ட 300 சிறுகதைகளையும்
எழுதியுள்ளார். அவருடைய படைப்புகள் இன்றும் எல்லாருக்கும் வழிகாட்டியாக
உள்ளது. அவருடைய படைப்புக்காகவே அவருடைய காலம் ‘பிரேம்சந்த் யுகம்’ என்று அழைக்கப்பட்டது. அவர் அக்டோபர் எட்டாம் நாள் 1936 ஆம் ஆண்டு இயற்கையெய்தினார்.
ஆனாலும் அவருடைய படைப்புகள் அன்றும் என்றும் சமுதாயத்திற்கு வழி காட்டியாக
அமைந்துள்ளன. பன்முக எழுத்தாளராக ‘பிரேம்சந்த்’
இந்தி இலக்கிய உலகத்தில் மட்டுமல்லாமல் மக்களின் மனதிலும் சக்கரவர்த்தியாகத்
திகழ்ந்து வருகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக