- இறைச்சேரி ஆரோக்கிய ஜோ, உளுந்தூர்ப் பேட்டை, விழுப்புரம்.
கட்டுரைக்கான முதன்முயற்சிதான். அதாவது, எங்க தாத்தா பேரு
களியன் என்ற ஞானபிரகாசம். இதுக்கு என்னன்னு
கேக்குறீங்களா? அங்கதான் டவுட்டு. இது என்ன களியன்... இது ஊர் பேரா இருக்குது. ஞானபிரகாசம் கிறிஸ்துவப் பெயரா இருக்குன்னு யோசிச்சேன்.ஒரு நாள் சாயந்திரம் மரியக்குழந்தைய பாக்கப்போனேன். யாரு மரியக் குழந்தன்னு கேக்கறீங்களா? எங்க பாட்டிதான். என்னடா.. நான் உயிரோடதான்
இருக்கனான்னு பாக்க வந்தியான்னு கேட்டுச்சி. 85 வயசுலயும் சத்தம் கனீர்னு இருந்துச்சி. ஒன்னும் இல்ல ஆயா, நம்ம தாத்தா பேரு களியன்னு சொல்றாங்க. அதுக்கு அடுத்து ஞானபிரகாசம்னும் போட்டுருக்கு என்ன ரெண்டு
பேரு? அப்படின்னு கேட்டேன். அதுக்கு ரொம்ப கோவம். என் வூட்டுக்காரு பேர நீ சொல்லிட்டியான்னு. சரி கோபப்படாத ஒழுங்கா சொல்லுன்னேன். அர்த்தம் மட்டும் தான் சொன்னுச்சி. ஒரு முறைகூட தன்னோட புருசன் பேர சொல்லவேயில்ல.
சரி பேருக்குப் போவோம்.. எங்க தாத்தா பேரு
களியன். அவரு இந்துன்னு சொல்றாங்க. தன்னோட 10 வயசுல அந்த ஊருக்கு
மதத்தைப் போதிக்க வந்த பாதர் நோயல்தான் எங்க தாத்தாவுக்கு ஞானப்பிரகாசம்னு ஞானஸ்தானம்
கொடுத்தி ருக்காரு. எங்க தாத்தா தாழ்த்தப்பட்ட
சமூகத்தைச் சார்ந்தவரு. பாதர் திரிதோ
தாழ்த்தப் பட்ட எளிய மக்களுக்குக் கடினமாக உழச்சாரு. சேரிப்பகுதியில இருக்குற மக்கள முன்னேத்தனும்னு நெனச்சி சேரிப்பகுதிக்கு
வந்தப்ப எங்க தாத்தா விளையாடிக் கிட்டு இருந்தாறாம். அவரு உடனே தன்னோட பையிலிருந்த பால் பவுடர்... எல்லாம் கொடுத்தாறாம். எங்க தாத்தாவுக்குப் 15 வயதுன்றதால வாத்தியாருக்குப் படிக்கிறியான்னு பாதர் திரிதோ
கேட்டாறாம். எங்க தாத்தா பயந்துபோயி ஓடிட்டாறாம். சொந்தகாரங்க எங்க தாத்தாவுக்கு புத்திமதி சொல்லி பாதர் திரிதோ
கிட்ட கொண்டு வந்தாங்க.பாதர் திண்டிவனத்துல
இருக்குற ஆர்.சி. டீச்சர் டிரைனிங் ஸ்கூல்ல சேர்த்து எங்க தாத்தாவ படிக்க வச்சாரு. படிப்பு முடிச்சி ஊருக்கு வாத்தியாரா வறாரு, அதேநேரம் பாதர்நோயல் எங்க ஊருக்கு வறாரு. அந்த ஞானஸ்தானப் பேருதான் ஞானப்பிரகாசம். எங்க ஆலயம் சிலுவ வடிவத்துல இருக்கும். கிழக்குத் தலைப் பகுதியிலதான் பூச. வடக்குப்பக்கம் கன்னி மார்கள். முகப்புப் பகுதியான மேற்குப் பகுதி முழுவதும் ஜாதி இந்துக்களுக்கானது... சாரி கிறிஸ்தவர்களுக்கானது, தெற்குப் பகுதிதான் எங்க பக்கம். இதுக்குப் பற சாலன்னு பேரு. பாதர் நோயல் வந்து முகப்பு சாலயில புது நன்ம தரும்போது அப்பத்
தான் முதன்முறையா நாலு தலித் பசங்களுக்குப் புதுநன்ம பெறப்போறாங் கன்னதும் ஜாதி வெறியனுங்க (ஆமா... கிறிஸ்தவனுங்க) நாலு பேரயும் அடிச்சித் தள்ளிட்டு பாதர் நோயலயும் அடிச்சி
சாவு மணியும் அடிச்சி வெளியே தள்ளிட் டானுங்க.
அப்பறம் ஆலயம் மூடப்பட்டது. எங்க தாத்தா எங்க ஊருல ஆர்.சி. துவக்கப் பள்ளியில
வாத்தியாரா வேலை செஞ்சாரு. வேலை செஞ்சப்ப, அவருக்குப் 12 புள்ளைங்க. தன்னோட முதல்
பிள்ளைய சாமிக்கு காணிக்கைக் கொடக்க றேன்னு பாதர் நோயல் கிட்ட சொல்ல, எங்க மாமாவ சாமியார் படிக்க கடலூர் ஆக்னெஸ் செம்னரி அனுப்
பிட்டாரு. அப்புறம் மற்ற மாமா மூனு பேரையும் சென்னை லெயோலால
படிக்க வச்சி அழகு பாத்தாரு எங்க தாத்தா. அப்பறம் எங்க சித்திய திருச்சியில ஹோலி கிராஸ்ல டீச்சர் டிரெயினிங் ஸ்கூல்ல
சேத்து, எங்க அம்மாவ 10 வரைக்கும் படிக்க வச்சாரு எங்க தாத்தா.
எங்க ஊருல அப்போதைக்குச் சுமார் 1000 பேரு ஊர்க்காரங்க. சேரியில 200 பேரு. இந்தச் சேரியச்
சேர்ந்த எங்க குடும்பம்தான் முதல்ல கல்வி பெற்ற குடும்பம். அங்க எங்க குடும்பம் மட்டும் இல்ல, எங்க ஊருல இருந்த முக்கால்வாசி குடும்பம் கிறிஸ்தவரா மாறிட்டாங்க. எங்க மாமா லெயோலா கல்லூரில பேராசிரியரா இருந்தாரு. எங்க ஊருல வாத்தியாரா வேலை செஞ்ச எங்க தாத்தாவுக்கு சாகுற
வரைக்கும் பேரு, பறை வாத்தியாருதான். என் பேரச் சொன்னாக்கூடத் தெரியாது. பறை வாத்தியாரு பேரன்னு சொன்னா புரிஞ்சிப்பாங்க. பிரான்ஸ் நாட்டு பாதருங்க பல முயற்சி செஞ்சி, எங்க ஊரையும் ஊரச் சுத்தி இருக்குற அனைத்து மக்களுக்கும்
உதவி செஞ்சாங்க. உதவி மட்டும் இல்லாம... எங்க கிராமத்துல பள்ளி, மருத்துவமனை கொண்டு வந்தாங்க. அனைத்து மக்களையும் ஒன்னா பாத்தாங்க. காலப்போக்குல வெளிநாட்டு பாதிரியாரு போயி, நம்ம ஊர்... பகுதியைச் சார்ந்தவங்க
பாதிரியா வந்தாங்க. அப்போ சாதி வென்று
கிறித்தவம் போனது. இன்னைக்கு எல்லாம்
கிறித்தவறா இருக்கோம். ஆனா, ஆலயத்துல சம உரிமை இல்லை. தலித் கிறித்தவங்க தனியாதான் போகணும், தலித் பகுதிக்குத் தேர் வராது.
எங்க வூருல முக்கியமான விஷயம் இந்தியாவுலயே எங்கயும் 4.30 மணிக்கு திருப்பலி கிடையாது. ஆனா எங்க வூருல 4.05 முதல் செபம், 4.25 மணிக்கு இரண்டாவது மணி, 4.30 மணிக்கு முதல் திருப்பலி. சும்மா கிடையாது... ஆலயத்துக்குள்ள இடம் இல்லன்னு வெளிய ஃபுல்லா உட்காருவாங்க. கோயில்ல இருந்து அஞ்சு வீடு தள்ளிதான் எங்க வீடு. சும்மா கிடையாது குருவானவர் சொல்ற வார்த்த அவ்வளவு தெளிவா
இருக்கும். எங்க அப்பா இன்னக்கி வரைக்கும் (60 வயது) முதல் திருப்பலி
அதான் 4.30 மணி பூசைக்கி தவறாம போறாரு. அவரு... அப்படின்னா என்னென்ன
பாடு பட்டுருப்பாருன்னு பாக்கலாம் வாங்க..
எனக்கு நெனவு தெரிஞ்சதுலருந்து என்ன 6 மணி பூசைக்கு அனுப்பாம வுட மாட்டாரு. நான் அஞ்சாவது படிக்கும் போது என்ன ஆலயத்துல பாதர் தங்குற இடத்துல சேத்துட்டாரு. வேற ஒன்னும் இல்ல. கோயில்ல பூசை நடக்குறப்ப நாங்க அவருக்கு உதவி பண்ணுற பணிதான். அதுக்குப் பீடப் பணியாளர்னு பேரு. டெய்லி எங்க வீட்ல சாப்புடுவோம். பாதர் இல்லத்துல வராண்டாவுல தூங்குவோம். காலையில ரெண்டாவது பூசை முடிஞ்சவுடனே ஸ்டடி, 6.30 மணியிலிருந்து 8 மணி வரை நடக்கும். அப்புறம் வீட்ல சாப்டுட்டு பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டு
திரும்பணும். பாதர் இல்லத்துல எங்க புத்தகப் பை இருக்கும். எங்களுக்கு ஒரு தனி ரூம். காலை முதல் பூசை, பூசை உதவி செய்வோர் பட்டியல், இரண்டாவது பூசைக்கு உதவி செய்வோர் பட்டியல் வாராவாரம் லிஸ்ட்டு
ஒட்டுவாங்க. அத பாத்தா பயந்து போயிடுவேன் ஏன் தெரியுமா? என் பேரு எத்தன நாள் முதல் பூசையில இருக்கும்னு. ஏன்னா, 4 மணிக்கே எழுந்திரிக்கணும், ரொம்ப முக்கியம் சோம்பாய் தாத்தா. இவரு யாரு தெரியுமா? இவருதான் பாதருக்குச் சமக்கிறவரு. காலி வொயின் பாட்டில்ல தண்ணி எடுத்துக்கிட்டு வந்து 4 மணிக்கு எங்க மேல ஊத்தித்தான் எழுப்புவாரு... நான் அங்க இருந்த ஏழு வருஷம் அதே நெலமதான். அங்க இருக்கும் போது எனக்கு ஒரு டவுட்டு... அங்க நானு மட்டும்தான் சேரிக்காரன். வேற யாரும் அங்க இல்ல. அதனால எனக்கு ரொம்பவே கஷ்டமா இருந்தது. அங்க இருந்த பாதிரியாருங்க... என்னைய சமமா பாக்குறதா எனக்குத் தெரில.
எங்க பகுதிக்குத் தேர் வராது. புது நன்மை, கல்யாணம் சாவுன்னு
ரொம்ப நாளாவே கஷ்டமா இருந்தது. பிரெஞ்சுக்கார
சாமியார் செய்த புரட்சி மாதிரி இல்லன்னாலும் பரவாயில்ல. சாதிய வளக்காம இருப்பாங்களான்னு பாத்தா, இன்னிக்கு வரைக்கும் அவங்க சாதிக்காரங்கதான் சாமியார் படிக்கிறாங்க. எங்கள ஒரு சக கிறிஸ்தவனாக்கூட பாக்குறது இல்ல. இதெல்லாம் சரி செய்யணும், உரிமைய வென்றெடுக்கணும்னு சொல்லி 2008ல எங்க பகுதியில சகாயமாதா கொடிய நாங்க எங்களுக்கும் பங்கா
கொடுங்கன்னு கேட்டோம். ஆனா பேராயரே, கிறிஸ்தவம்-சமத்துவம் சாதிக்கு வேலையில்ல அது முடியாதுன்னு சொல்லிட்டாரு. சம உரிமை இல்லன்னுதான் நாங்க தனி பங்கு வேணும்ன்னது... புரிஞ்சி புரியாத மாதிரி நடிக்கிறாங்க! அது அவரோட மனோபாவம்.
![]() |
எங்க தாத்தாவும் ஆயாவும் |
எங்களுக்குச் சம உரிமை கேட்டு பொதுப்பாதையில நடக்கத் தடை, தனி சுடுகாடு, தனித் தூம்பா, சேரித்தெருக்களுக்கு
தேர்பவனி புறக்கணிப்பு உள்ளிட்ட தீண்டாமை வடிவங்களை ஒழிகக் கோரி திரு மேத்யு தலமையில
சேரிக்காரங்க எல்லாம் சேர்ந்து எங்க பகுதியில உண்ணாவிரதம் இருந்தோம். இதுக்கு விளைவா, 2008 மார்ச் 8 ஞாயித்துக் கிழம அன்னிக்கி வீடுகளுக்குத் தீ வச்சதும், கொளுத்தினதும், எங்களுக்கு வெட்டுக்காயங்களும் தான் மிச்சம். இதுல குறிப்பிட்டுச் சொல்றது என்னன்னா இரட்சகநாதன்ற எங்க
மாமாவ அடியடின்னு அடிச்சி அவுரு லுங்கிய கிழிச்சி, அவர பைக்குல கட்டி காட்டுக்கு இழுத்துகிட்டு போயி 30 பேருக்கு மேல சேர்ந்து முள்ளு மேல போட்டு சாதிவெறியோட அடிச்சானுங்க. அவுரு தாகம் தாகம்னு தண்ணிக் கேட்டாரு. அப்போ வாயில மூத்திரத்த வுட்டு அடிச்சானுங்க. அப்புறம் எப்டியோ ஆஸ்பிட்டலுக்குப் போனோம்... உடம்புலயிருந்து எடுத்த 26 முள்ளுகல விஜயா ஆஸ்பிட்டல் டாக்டருங்களே ஆச்சரியமா காட்டுனாங்க. இந்தச் சாதிவெறி வன்முறை துப்பாக்கிச் சூட்டுல முடிஞ்சது. 126 வருசம் ஆகியும் நீதி மன்றம் உத்தரவு கொடுத்தும்
இன்னைக்கி வரைக்கும் சேரிக்குள்ள தேர் வரல. அனைத்து கிறிஸ்தவர் களுக்குமான மாதாவே... எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!! அடுத்த முறை ஆய்வுக் கட்டுரையா தர ஆசப்படுறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக