புதன், 27 நவம்பர், 2013

வேடதாரிகள்



சிறுகதை:
சிவசித்திரை, புகைப்படக் கலைஞர், சென்னை.

 மனிதன் தோன்றிய காலம்தொட்டுச் சில காலங்களுக்கு முன்புகூட, மனிதனுக்குள் சாதி, மதமென்று மூடநம்பிக்கைகள் இருந்தாலும் அவனுக்குள் ஒரு பயம் இருந்தது. தர்மம், அதர்மம் என அவன் அவனுக்குள் வகுத்திருந்தான். காலப்போக்கில் எல்லாமே மாறிப்போனது.  பயம் என்ற ஒன்றை மறந்து, மனிதன் தவறு செய்வதற்கான வேடத்தை தரிக்க ஆரம்பித்துவிட்டான்மனிதனின் மீதான ஆதங்கங்களைக் கொட்டித்தீர்த்தன, சிவப்புக் குதிரைகள். பொன்னும் பொருளும், மண்ணும் பெண்ணும், பதவியும் படையும் தேவையாய் இருக்கிறது. அதனால், மனிதன் மனிதனையே வேட்டையாடுகிறான்மனிதனின் வெறியாட்டத்தைச் சாடின பாசிக்குதிரைகள்.
காலங்காலமாய் சாமியே... கதியென்று கிடந்த அத்தனைபேரும் மாறி விட்டனர்.  ஒரு நாளும் கிழமையில் கூட இந்தப்பக்கம் வருவதில்லை.  வெயிலிலும் மழையிலும், காய்ந்து நனைந்து, தோலுறிந்து மடியத்தான் போகிறோம்வெள்ளைக் குதிரையின் குரல் உரக்க ஒலித்தன.
தலையாரி வீராசாமி இருந்தபோது, நாம் நன்றாக இருந்தோம். இந்த ஊரும் பசுமையாக இருந்தது. காலங்கள் கடந்து, இப்போது எல்லாமே தலைகீழாயிற்று.  நன்றி மறந்தவர்கள் இந்த மனிதர்கள்என்று, மனிதர்கள் மீது கலிங்கத்தினை ஏற்படுத்தின, பச்சைக் குதிரைகள். ஐய்யனார்கோயில் மண்குதிரைகளின் கேள்விகள், மனிதர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றின.  அங்கிருந்தது, ஒரு வெள்ளைக் குதிரைதான். மீதம் பன்னிரெண்டும் சிவப்புக் குதிரை, பச்சைக் குதிரை, பாசிக் குதிரை. தங்களுக்காய் குரல்கொடுக்க புதிதாய் வந்த ஒரு வெள்ளைக் குதிரையை நினைத்து, மற்ற குதிரைகள் பெருமிதமடைந்தன. மண்குதிரைகள், தங்களின் குரல் மனிதர்களின் காதில் விழப்போவதில்லை. அவர்கள் மூடர்கள் என்பதை, நன்றாக உணர்ந்திருந்தன.  குதிரைகளின் ஒட்டுமொத்தப் பார்வையும் ஐய்யனாரின் மீதே குவிந்தன.  உச்சிவெயில் மண்டையைபிளக்க உறிந்ததோல், உடைந்த கை கால், காணாமல் போன பாதி அரிவாள் என ஐய்யனாரின் கம்பீரமே சிதைந்திருந்தது.  ஐய்யனாரைப் பார்த்து, குதிரைகள் பரிதாபப்பட்டுக்கொண்டன. ஐய்யனார் குளம் வற்றி கொஞ்சநஞ்சம் இருந்த நீரையும் மேயவந்த ஆடுகள் உறிஞ்சுகொண்டிருந்தன. துருயேரிய நிலையில், மண்ணில் சாயும் நேரம்பார்த்துக் காத்திருந்தது, ஐய்யனாரின் வேல்கம்பு. அதில் கட்டியிருந்த மடித்துப்போன சிவப்புத்துணி, மெதுவாய் வீசியக் காற்றில் வேகமாய் அடித்துச் சென்றது.  வயல்வெளிகள் கேட்பாரற்றுக் கிடந்தன. ஆடுமாடுகள் சுகந்திரமாய் மேய்ந்து கொண்டிருந்தன. சின்னாபின்னமாய் மாறியி ருந்தது செம்பியநல்லூர் கிராமம். தலையாரி வீராசாமி இறந்து இருபது வருடமிருக்கும்.  தலையாரி வீராசாமி இருந்தபோது ஊரே செழிப்பாய் இருந்தது. விதைக்கிற பிடி நெல் ஒவ்வொன்றும்,  விளைச்சலில் ஒரு மரக்காய் நெல்லாகக் கொடுத்த காலம்.
அறுவடை செய்து நெல்லைத்தூற்றி மூட்டையாகப் பிடிக்கும் போது, கோணிப்பை குறைந்த காலம். பச்சைப்பசும் காலம். ஆடுமாடுகளின் கண்களுக்கு முறுக்கு மீசையும், இடுப்பு வாறும், ஆள்உயரக் கைத்தடியும் நிழலாய் தோன்றி மறையும். ஆடுமாடுகள் தனக்குப் பரிச்சயமான அந்த ஆள் வருகிறானா, இல்லையாயென நோட்டம் பார்க்கும்.  அவைகளுக்கு அவ்வுருவம் தென்படாத தருணத்தில் சற்றுப் பயமில்லாமல் மேயும். பள்ளிக்கூட சிறுசுகள், நடவுப்பெண்கள், வேலைக்குப் போகிற ஆட்கள் என எல்லோரின் கண்களிலும் வீராசாமியின் முகம் பதிந்திருந்தது. அவ்வுருவத்தை நினைத்தாலே நெஞ்சுக்குள் ஒரு படபடப்பு. எப்படிப்போகும் அந்தப் பயம். தலையாரி வீராசாமியென்றால் செம்பியநல்லூரே பயம்கொள்ளும். அப்படி ஒரு ஆள். கருப்புத்தோள். முறுக்கு மீசை. விரிந்த மார்பு. ஆள் உயரக் கைத்தடி, இடுப்பில் ஒரு பிச்சுவாக்கத்தி. வீராசாமி நடந்தால், ஊர்சனங்கள் சற்று ஒதுங்கி நடப்பார்கள். அப்படி ஒரு பளு.  சும்மாவாய் வந்தது அந்தப் பளு. எல்லாமே பனங்கள்ளும், ஆட்டுப்பாலும் செய்கிற வேலை. வெள்ளை முடியைப் பார்த்து வயதான ஆளென்று எடைபோட முடியாது. வைரம்பாய்ந்த கட்டை. வீராசாமி கும்பிடுகிற சாமியைவிட, தன் முதலாளியைவிட, செய்கிற தொழிலை முதலில் மதிக்கிறவர்.  அதிலிருந்து ஒருநாளும் தவறியதில்லை. செம்பியநல்லூர் தராசு' பாண்டிதுரையென்றால் சுத்துப் பட்டியில் தெரியாதவர்கள் யாருமில்லை. ஊரைச்சுற்றியிருக்கிற கொஞ்ச நிலமும், கிழக்கால கண்ணுக் கெட்டியதூரம் வரை அவருடையதுதான். மிக உயர்ந்தவரென ஊரில் சொல்லிக் கொள்வார்கள். வீராசாமி, ‘தராசு' பாண்டிதுரையின் வயல்காட்டைத்தான் காவல் காத்தார். அதோடு, ஊர்சனங்களின் வயலையும் பார்த்துக்கொண்டார். பாண்டி துரையின், கிழக்கேயிருக்கிற இருபது ஏக்கர் கரும்புத்தோட்டம் வீராசாமியின் பாதுகாப்பில் இருந்தது. கரும்புத் தோட்டத்தின் அருகில் ஐய்யனார் கோயிலும், வீராசாமியின் குடிசையும் அங்குதான் இருந்தது. ஊர்காவலன் ஐய்யனார் கண்ணை மூடினாலும், வீராசாமி கண்ணை மூடியதில்லை. தூக்கம் வருகிறபோதெல்லாம் ஏழுமலையான் சுருட்டையெடுத்துப் பற்றவைத்தால், தூக்கம் கலைந்துவிடும். இப்படித்தான், ஒரு பகல்பொழுது. வீராசாமி, குடிசையின் வெளியே கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கிடந்தார். இரவெல்லாம் கண்விழித்து, தூக்கம் சொக்கியது. குடிசையை ஒட்டிய வயல்வரப்பில், பள்ளிக்கூடப் பொடுசுகள் நடந்துகொண்டே,
டேய்.. கரும்பெல்லாம் பெரிசா ஆயிடுச்சிடா. இனிமே நாம கப்பிரோடு வழியா போவகூடாது. குறுக்குவழியிலதான் போவனும். அப்பத்தான் பண்ணையாரு கரும்ப காலிப்பண்ண முடியும்எனத் திட்டம் தீட்டினர்.  அவ்வளவுதான், இதைக் கேட்டுக் கொண்டிருந்த வீராசாமி திடுக்கிட்டெழுந்து,
யாண்டா களவானிப் பயபுள்ளைங்களா, எத்தன நாளா நெனச்சிக் கிட்டிருந்தீங்க. நானும், எங்குலசாமி ஐய்யனாரும் இருக்குற வரைக்கும் அது  நடக்காதுடா. எம்மொதலாளி எனக்குக் கூலிமட்டும் கொடுக்குலடா, வவுத்துக்குச் சோத்தையும் போடுறாரு.   யென் ஒடம்புல உள்ள அம்புட்டு ரத்தம் சிந்துனாலும், ஒரு சொட்டுக் கரும்புசாறு சிந்த வுடமாட்டன்எனத் திட்டிக்கொண்டே, பொடுசுகளை விரட்டினார்.  பொடுசுகள் சேறு சகதித்தெறிக்க ஓடி மறைந்தனர். அந்தக் கரும்பில் அப்படி என்னதான் இருக்கிறது.  இனிப்பென்றால் இனிப்பு, அப்படி ஒரு இனிப்பு.  கரும்பு நிறமென்றால், சிவப்பும், நீலமும் கலந்த ஊதா நிறமென்று சொல்வார்கள்.  ஆனால் இது பச்சைக் கரும்பு.  கரும்பு தெரியாத அளவிற்குத் தழைகள். கரும்பு ஒவ்வொன்றும் உலக்கைப் பெரிசு. பொடுசுகள், பில்லறுக்கும் இளசுப்பெண்கள், வயல்காட்டில் வேலை செய்கிறவர்களென எல்லோருடைய கண்களும் கரும்புக் காட்டில் ஆனால், இவர்கள் எல்லோர் மீதும் வீராசாமியின் கண் பதிந்திருக்கும்.  மனிதர்கள் தவறு செய்யவும் கூடாது, தவறு செய்வதற்கான வழியை ஏற்படுத்தவும் கூடாது' என்பதில் வீராசாமி உறுதியாக இருந்தார். தெற்குத்தெரு அம்மாசிக் கிழவர் எதிரில் வந்து கொண்டிருந்தார்.  வீராசாமியின் அருகில் வந்ததும்,
என்ன வீராசாமி..... உங்க மொதலாளியோட ஆளுங்க, கரும்புக்காட்ட சுத்தியும்... கரண்டுகம்பி வச்சிக்கிட்டு இருக்காங்க!
என்னண்ணே சொல்லுற.. கரண்ட்டு கம்பி வக்கிறாங்களா? இருக்கா துண்ணே. வேற வேல எதாச்சும் செய்வாங்க. மொதலாளி, என்ன கேக்காம எதையும் செய்யமாட்டாரு”.
அட என்னப்பா நம்ப மாட்டுற நான் என்ன கொழந்தையா எனக்கு தெரியாது.. கரண்ட்டு கம்பி வைக்கிறாங்கங்குறன்...” .
என்னண்ணே சொல்லுற.. எனக்குத் தெரியாதுண்ணே... நீ எப்ப பாத்த? எங்க வக்கிறாங்க?” என்று பதைபதப்புடன் கேட்டார், வீராசாமி.
அட என்னப்பா தலையாரி நீ... சுத்தி நடக்குற நெலவரம் தெரியாம... களத்துமேட்டுல இருக்குற கரும்புக்காட்ட சுத்தியும் வச்சிக்கிட்டிருக்காங்க.  இப்பத்தான் நான் பாத்துட்டு வர்றன்என்றதும், வீராசாமி பதறியடித்து களத்து மேட்டுக் கரும்புவயலை நோக்கி ஓடினார். அம்மாசிக் கிழவர் ஊர்நோக்கி நடந்து கொண்டே.. மனதுக்குள்,
ஆடுமாடுகல்லாம் அங்கதான் நடமாடும். மனுசமக்களுக்குத் தெரியும் கரண்டு இருக்குறது, ஆடுமாடுக்கு எப்படித் தெரியும்... ம்... ஊர்காக்குற சாமி அந்த ஐய்யனாருதான் எல்லாரையும் காப்பாத்தனும்என்று புலம்பிக்கொண்டார்.   மனிதர்கள் பிறக்கும்போது கையில் ஒன்றுமில்லை. இறக்கும்போதுதான் அடைந்த நன்மதிப்பைத் தவிர ஒன்றுமேயில்லை. பொன்னைச் சேர்ப்பதும், பெண்ணை அடைவதும், மண்ணைச் சொந்தம் கொண்டாடுவதும் மனிதனின் பேராசை. அந்த வகையில், பிறரை அழித்துத் தான் வாழ்வதில் தந்திரக்காரன் தராசு' பாண்டிதுரை. வீராசாமி, மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கக் களத்துமேடு கரும்புக்காட்டை அடைந்தார். கரும்பு வயலில் பாண்டிதுரையின் பண்ணையாட்கள் செங்கோடனும், ‘டவுசர்' வேலுவும் மின்சார வேலியமைத்துக் கொண்டிருந்தனர்.
நம்ம மொதலாளியா இப்புடி செய்யுறாருஎன வீராசாமி மனதிற்குள் நினைத்துக்கொண்டு,
என்ன செங்கோடா... இதல்லாம்....?”
என்னான்னா பாத்தா தெரியல கரண்ட்டு கம்பி வச்சிக்கிட்டிருக்கோம்என்று கிண்டலாகச் சொன்னான். 
அய்யாவா...! வைக்க சொன்னாரு?”
ஆ...மாய்யா அய்யாதான் வைக்கச் சொன்னாரு. நரிக்கூட்டங்க வந்து, கரும்புக்காட்ட நாசம் பண்ணுதுல..... அதான்...என்றான், செங்கோடன்.  அவன் தராசு பாண்டிதுரைக்கு மணியாட்டிக்கொண்டு திரிபவன். அவனிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லையென, வீராசாமி அதற்குமேல் அங்கு நிற்காமல் முதலாளியின் வீடுநோக்கி விறுவிறுவென நடந்தார். பாண்டிதுரை வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்து கொண்டு, வெற்றிலையைப் போட்டுக்கொண்டிருந்தார். இரு எடுபிடிகள் அருகில் நின்றனர். வீராசாமி, முதலாளியின் முன்னே சென்று,
அய்யா.... நம்ம கரும்புத்தோட்டத்த சுத்தியும் கரண்ட்டுகம்பி வைக்க சொன்னீங்களாமே....என்று தாழ்ந்த குரலில் கேட்க,
ஆமா... வீரா... இந்த நாரப்பய நரிக்கூட்டம் வந்து கரும்புக்காட்ட நாசம் பண்ணுதுல... அதுக்கு ஒரு முடிவு கட்டுலான்னுதான்.  கரண்டுகம்பி வைக்க சொல்லிருக்கன். இனிமே பாரு நரிங்க காலடி வைக்கட்டும். கரண்டு அடிகிற வேகத்துல, இருவதடி தாண்டித் தூக்கி எரிஞ்சிருமுல்ல.....என்ற பாண்டிதுரையின் குரலில், வன்மத்துடன்.. ஒரு தோரணை வெளிப்பட்டது. 
என்ன அய்யா இப்படிச் சொல்லுறீங்க... நம்ம ஊரு ஆடுமாடுகல்லாம் அந்தப்பக்கம் மேயவருமே. மனுசமக்க நடமாடுவாங்க... அவங்களுக்கு ஏதாச்சுன்னா என்ன செய்யிறது...என்று உயிரின் உன்னதம் உணர்ந்து, பதற்றத்துடன் கேட்டார் வீராசாமி.
யாரு......யா இவன் சரியான மடையனா இருப்பான் போல. நமக்கு நம்ம வயதான் முக்கியம். அதுவும், பொழுதுசாஞ்சிதான் கரண்ட்டு போடுவோம்.    ஊருசனங்களுக்கு வேணுமுன்னா தண்டோராப்போட்டு சொல்லிப்புடுங்க.  அப்பறம் யாரும் வரமாட்டாங்க. அதுக்குமேலையும் ஆடுமாடுக வந்துதுன்னா... மாட்டிக்கிட்டு சாவட்டும். நாம என்னா பண்ணமுடியும். சும்மாவா கரும்பு போட்டுருக்கோம், எல்லாங் காசு..... காசு.. காசு..
ஊர்சனங்கக்கிட்ட சொல்லிடலாங்கையா... ஆடுமாடுகக்கிட்ட.. எப்படி சொல்லுறது?” என்ற வீராசாமியின் வார்த்தைகள், தராசு பாண்டிதுரைக்குச் செவுலில் பளாரென்று அடித்தைப்போல் இருந்தது.  பாண்டிதுரை கோபத்துடன், “நான் சொல்லுறத செய்யுற வேலக்காரபயதானயா நீ. எதுக்கு தேவையில்லா ததுல்லாம் தலையிடுற. இதுக்குமேலயும், இங்க நின்னீன்னா எனக்கு கோவந்தான் வரும்... ஒழுங்கா உசுரோட வீடுபோயி சேருஎன்று அதட்டினார். வீராசாமிக்கு இதைக்கேட்டதும் நரம்புகள் புடைத்துக்கொண்டன.  கண்கள் தீயென சிவந்திருந்தது. கோபம் பீறிட்டது. தன் நிலையறிந்து, அவரால் ஒன்றுமே செய்யமுடியாமல் வெளிநடந்தார். சாயும்காலம் நீலவானத்தில் கருமேகங்கள் பட்டும் படாததுமாக பூசியிருந்தது. கொங்சநஞ்சம் இருந்த வெளிச்சத்தையும் கரும்புக்காடு முழுங்கிக் கொண்டது. வயல்வரப்பில் குடிசை நோக்கி நடந்துகொண்டிருக்க, மனது அலைமோதியது. கால்கள் தடுமாறின. மேற்கிலிருந்து வீசுகிறக் காற்று, பயிரை அங்குமிங்கும் அசையவைத்தது.  வானம் தன்பாட்டுக்கு, தன்வேலையைப் பார்க்கத் தொடங்கியது. மின்னலோடு இடியும், இடியோடு மழையும் தொடர்ந்தது.  வீராசாமிக்கு இடியின் சப்தத்தைவிடவும், முதலாளி சொன்ன வார்த்தைகள் காதுகளில் உரக்க ஒலித்துக்கொண்டேயிருந்தது. தான் சிறுவயதிலும், தன் பாட்டன் முப்பாட்டனும் பண்ணை முதலாளிகளிடம் அடிமை பட்டுக்கிடந்ததும் நினைவில் தீயாய் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
பண்ணையாட்களின் வாழ்வியல் நிலை மிகவும் மிகமிகக் கொடுமையானதாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியில் இனாம்தார், சமீன்தார், இரயத்துவாரி, நிலப்பிரபுக்கள் என தங்களிடம் வேலை செய்யும் விவசாயிகளுக்கு நூறு அல்லது இருநூறு ரூபாய் பணம் கொடுத்து, புரோநோட்டில் நாங்கள் நிரந்தரமாக தங்கள் பண்ணைக்கு அடிமையாக. பரம்பரைப் பரம்பரையாகப் பாடுபடுவோம்என்று கையொப்பம் வாங்கிக் கொண்டனர். பண்ணையார்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த விவசாயிகள், தலைமுறைத் தலைமுறையாக அங்கிருந்து, அகலமுடியாமல் தினக்கூலிகளாகவும், பண்ணையாட்களாகவும் அடைப்பட்டு, அடிமைப்பட்டுக் கிடந்தனர். பண்ணையாட்கள் பல சாதிகளைச் சேர்ந்தவராக இருந்ததால் அவர்களின் வாழிடம் சாதி அடிப்படையில் படையாச்சி தெரு, பண்டாரம் தெரு, குடியானவன் தெரு, பள்ளர் தெரு, பறையர் தெரு என்று பண்ணைக்குச் சொந்தமான இடத்தில் அவர்களின் குடிசைகள் இருந்தன. குடிசைகள் மிகச்சிறியதாகவும், மூன்று அடி உயர மண்சுவருடன் கதவுகள் ஏதுமின்று மூங்கில் தட்டியை அடைப்பாகப் பயன்படுத்தினர். நிழலுக்காகப் பூசணி, பரங்கி, அவரை போன்ற கொடிகளைப் படர விடுவர். காய்க்கும் காய்களைப் பண்ணை வீட்டிற்குக் கொடுக்கவேண்டும். அடுப்பு சாம்பல் கூட பண்ணைக்கே சொந்தம். பண்ணையாட்கள் உடுத்தியிருக்கும் துணியைத் தவிர மாற்று துணி இருக்காது. வருடத்திற்கு ஒருமுறை  பண்ணை யாளர்கள் கொடுக்கும் புதிய வேட்டிக்கும், சேலைக்கும் உரிய பணத்தைப் பண்ணை யாட்களின் கடன் பத்திரத்தில் சேர்க்கப்படும். கிழிந்து நாராகிப் போன சாக்குகளை விரித்து, அதன் மேல் குழந்தைக் குட்டிகளுடன் முடங்கிக்கிடப்பர். அதிகாலை சேவல் கூவுவதற்கு முன்னரே, கொம்பு ஊதும் சத்தம் கேட்கும். சில கிராமங்களில் கொம்பு ஊதுவதற்குப் பதிலாக, ஒற்றைத் தப்பு அடிப்பர். குடிசைக்குள் இருந்து வெளியியேறி ஆண்கள் வயலை நோக்கி விறுவிறுவென ஓடி, சேற்றில் கால் வைத்த உடனே ' என்று ஓசையை எழுப்புவர். அந்த ஒலி நாங்கள் வேலையைத் தொடங்கிவிட்டும்என்று நிலச்சொந்தக்காரர்களுக்கு விவசாயிகள் அறிவிப்பதாகும்.
கிழக்கு வெளுக்கும் வரையில் அவர்கள் காத்திருக்க கூடாது, அதற்குள் வேலையை ஆரம்பித்திருக்க வேண்டும். இரண்டாவது கொம்பு ஒலிக் கேட்டதும் பெண்கள் குடிசையிலிருந்து புறப்பட்டு வயலுக்குள் இறங்கிவிடுவர். சூரியன் உச்சிக்கு வரும் பொழுதில் கரையேறுவர். கலையத்தில் கொண்டுவந்திருந்த கஞ்சியை ஒரு வாய் குடித்தபிறகு, மறுபடியும் வயலில் இறங்குவர். மேற்கு திசையில் சூரியன் மறைந்த பின்புதான் குனிந்த குனியிலிந்து நிமிரமுடியும். நாற்று நடுவது, களைபறிப்பது வேலை முடியவில்லை என்றால், இருள் கவியத் தொடங்கியதும் மண்ணில் குச்சியை நட்டு அதில் அரிக்கேன் விளக்கை வைத்து வேலையை முடிக்கவேண்டும். பண்ணை அடிமைகளான விவசாயிகள் ஒழுங்காக வேலை செய்கிறார்களா என கண்காணிக்க காரியக்காரன், மணியக்காரன், கண்காணிப்பாளர், தலையாரி, ஏஜெண்ட் என ஒரு படையே இருக்கும். வயலில் வேலை முடிந்ததும் பண்ணையாட்கள் வீடு திரும்ப முடியாது. பண்ணை வீட்டிற்கு சென்று அங்கு கைகட்டி நிற்கவேண்டும். நிலப் பிரபுவிடம் அன்றைய தினம் பகலில் நடந்த வேலைகள் குறித்து விவரிக்கப்படும். வேலைக்குத் தாமதமாக வந்தவர்கள், எதிர்த்து பேசியவர்கள், வேகமாக வேலை செய்யாதவர்கள் என சம்பந்தபட்ட ஆள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அடுத்தநாள் பண்ணை வீட்டிற்கு அழைந்துவர நிலச்சொந்தக்காரர் உத்தர விடுவார். தலையாரி சம்பந்தப்பட்டவரை பண்ணை வீட்டிற்கு அழைத்துவருவார்.
அந்த நபர் பறையராக இருந்தால் பள்ளரைக் கூப்பிட்டு மாட்டுக்கொட்டடித் தூணில் கட்டச்சொல்வர். பள்ளராக இருந்தால் பறையரைக் கொண்டு கட்டச் சொல்வர். அதே படையாச்சி, தேவராக இருந்தால் பள்ளரையும், பறையரையும் கட்டச்சொல்லி புளிய விளாரால் செய்த ஐந்து பிரி சாட்டை'யால் அடிப்பார்கள். ஐந்து பிரியை முறுக்கேற்றி, சாட்டையின் முனையில் பிரியை விலக்கி கூரான கூழாங்கல்லைச் சொருகி வைத்திருப்பார்கள். அடித்து இழுக்கும் போது, தோலை பிய்த்து இழுத்துவரும். ரத்தம் பீரிட்டெழும். அடிக்கிறவன் கை சோர்ந்து போகிறவரையில் அடிக்க, பின்னர் தலையாரி வாங்கி அடிப்பான். அவன் சரியாக அடிக்கவில்லை யெனில், நிலப்பிரபு சாட்டையை வாங்கி தலையாரியை அடிப்பான்.  அடிவாங்கு பவன் வேதனை தாங்காமல் எங்கே தன் முகத்தில் எச்சிலை துப்பிவிடுவான், எதிர்த்து பேசுவான் என்று வாயில் துணியைத் திணித்து கட்டிவிடுவர். வெறி தீர அடித்து முடித்ததும், ரத்தம் வடிந்துகொண்டிருக்கும் பண்ணையாளை வைக்கோல் அல்லது கோணிப்பையில் படுக்கவைத்துவிடுவர். பண்ணை வீட்டில் ரசம் சோறு போடுவர். காயத்திற்கு மருந்தாகச் சாணி உருண்டையைத் தீயில்போட்டு ஒத்தடம் கொடுத்துக் கொள்ள வேண்டும். பிறர், யாரும் அவனுக்கு உதவக்கூடாது. வீட்டிலிருந்தும் சோறு கொடுக்கக்கூடாது. ஆனால் அவன் வேலைசெய்ததாகக் கணக்குப்போட்டு கூலி தரப்படும். வேலை சரியாகச் செய்தவர்களில், ஆண்களுக்குக் கூலியாக இரண்டு படி நெல் தரப்படும். பெண்களுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு ஒரு மரக்காய் நெல் கூலியாகத் தரப்படும்.
நெல்கூலி வாங்கியவுடன் குடிசைக்குத் திரும்பியவுடன், நெல்லை அவித்து.. புடைச் சட்டியில் வறுத்து.. உரலில் குதித்தி.. புடைத்து, கஞ்சி செய்வதற்குள் பதினோரு மணி ஆகிவிடும். வயல்வேலை முடித்து திரும்பும் ஆண்கள், தாம் பிடித்துவரும் மீன், நண்டு, நத்தை போன்றவற்றை குழம்பாக சமைப்பர். நாள் முழுவதும் உழைத்த களைப்பில், அந்த இடத்திலேயே உறங்குவர். அப்போது பாய், படுக்கை விரிப்பு என்பதோ கிடையாது. பண்னையார் வீட்டின் பழைய கிழிந்த கோணிப்பைகளும் வைக்கோலும் தான் படுக்கை விரிப்பு. கண் அயர்ந்து அசதியாக உறங்கிக்கொண்டிருக்கும் போது,  அதிகாலையில் கொம்பு ஊதும் சத்தம் கேட்கும். விவசாயிகள் வயல்காட்டை நோக்கி ஓடுவர். குனிந்த முதுகு நிமிறாமல் உழைப்பர். தாழ்த்தப்பட்டவர்கள் பறையரை, ‘வலங்கைப் பிள்ளைஎன்றும் பள்ளரை, ‘இடங்கைப் பிள்ளை' என்று கூறுவது வழக்கம். அவர்கள் பண்ணையார்களுக்கு மட்டுமல்லாமல், தன்னைபோல உழைக்கும் பண்ணையாட்களுக்கும் அடிமைகளாக இருந்தனர்.  தங்களின் பிள்ளைகளும் பள்ளிக்கூடம் செல்லாமல் பண்ணையிலேயே அடிமைகளாக வேலை செய்யவேண்டும். பண்ணையில் வேலையில் ஏற்படும் தவறுகளுக்கும், ஊருக்குள் வேலையாட்கள் ஒருவருக்கொருவர் ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்கு நிலப்பிரபு கடும் தண்டனை வழங்கினான். அதில் மாட்டு சானத்தை மண்குடத்திலிட்டு, தண்ணீர்விட்டு கரைத்து அதைப் பண்ணையாட்களின் வாயில் ஊற்றுவார்கள். இத்தகைய கொடுமைகளிலிருந்து தப்பியவர்கள்.. நாகப்பட்டினம் அந்தணப் பேட்டையில் ஆள் ஏற்றுமதி செய்யும் டிப்போ' ஒன்று இருந்தது. அதில் பர்மா, சிங்கப்பூர் என்று வேலைசெய்வதற்கு ஆட்களை அனுப்பும் இடம் அது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கந்து வட்டி வியாபாரம் நடத்தி ஏராளமான நிலங்களையும், சொத்துகளையும் வைத்திருந்த நாட்டுக்கோட்டை நகரத்தார் தங்களுக் குத் தேவைப்படும் ஆட்களை அங்கிருந்து பொறுக்கினார்கள். அதில் வேலைக்குச் சேர்ந்தவன் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து ஊருக்கு வருவதாக கடிதம் எழுதுவான். அந்தக் கடிதம் தன் வீட்டிற்குச் செல்லாது தபால்காரர் மூலமாக நிலப்பிரபுரவிடம் போகும். அவன் உடனே சம்பந்தப்பட்ட நபரின் தகப்பனையோ, தமையனையோ அழைத்து அவனை ஊருக்கு திரும்பி வரச்சொல்லுபடி கடிதம் எழுத வைப்பர். ஊருக்குள் அவன் திரும்பி வரும்போது, அவனைப் பிடித்து  வைக்கோல் பிரியில் சுற்றி நிலப்பிரபு தீயிட்டு கொளுத்துவான்.
உழைப்புக்கான சரியான கூலி, ஒரு படி நெல்லை உயர்த்திக் கேட்டதற்கு, ஊர்மக்களையே தீயிட்டு கொளுத்திய மகாபாதகன் நிலப்பிரபு. நிலவுடமையாளர்கள் மீதான கோபம் தன் முதலாளி மீதும் திரும்பியது. பாண்டிதுரை ஒரு மகாபாதகனாக உருவெடுத்து, வீராசாமியின். கண்முன் நின்றான். வானத்தில் லேசாக தூரல் போட்டது. வீராசாமி வீடு வந்தடைந்தார். குடிசை வாசலில் நின்று, கருப்பங்காட்டைப் பார்த்தார்.  கருப்பங்காடெங்கிலும் இருள் சூழ்ந்திருந்தது. அது வீராசாமிக்கு ஏதோ ஒரு அச்சத்தை மூட்டியது. என்னாதான், வீராசாமி பார்ப்பதற்கு மலையாக தோற்றமளித்தாலும், உள்ளுக்குள் அவரின் மனது ஈரந்தான்.  புல் பூண்டுகள், செடி கொடிகள், மரம் மட்டைகள், மாடு மனிதர்களென யாராக இருக்கட்டும், அவர்களை மெய்யுணர்வோடு உயிராக நேசிப்பவர், வீராசாமி.  பெருமூச்சுடன், மனதைப் பிழிந்தெடுக்கும் வலியோடு குடிசைக்குள் நுழைந்தார். நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டேயிருந்தது. வெறும்வயிறு.  கலையத்தில் கஞ்சி இருந்தும், சாப்பிடத் தோனவில்லை.  தன்னை சூழ்ந்த வெறுமையுடன், கயிற்றுக்கட்டில் சாய்ந்தார். 
நான் சொல்லுறத செய்யுற வேலக்காரபயதானயா நீஎன்ற முதலாளியின் வார்த்தைகள் வீராசாமியின் காதுகளில் கேட்டுக்கொண்டேயிருந்தது. மனதின் நினைவலைகள் கருப்பங்காட்டையே சுற்றித்திரிந்தது.  என்னதான் முதலாளிக்கு விசுவாசமாக இருந்தாலும், உசிருக்கு ஒரு ஆபத்தென்றால் வீராசாமியின் மனது... கிடந்து தவியோ... தவியென்று தவித்தது.  உதடுகள் வெகுநேரமாய் புலம்பித் தவிக்கையில், ஒரு உயிரோட சத்தம்
மா..... அம்மா.....ங்குற சத்தம். பூமியையேப் பிளக்கிற அலறல் சத்தம், கருப்பங்காட்டிலிருந்து எதிரொலித்தது. வீராசாமி அலறியடித்து, எழுந்துகொண்டார். சுவரில் மாட்டியிருந்த அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு குடிசைவிட்டு வெளியேவர, மழை நச நசவென்று தூரல் போட்டது. கோணிப்பையைத் தலையில் போட்டுக்கொண்டு, கருப்பங் காட்டிற்கு ஓடினார்.  அந்தநேரம் பார்த்து, அரிக்கேன் விளக்கும் சதி செய்தது.  மினுக்கட்டான் பூச்சிக் கனக்காய் எறிந்தது. வீராசாமிக்கு கண்ணும் தெரியவில்லை, மண்ணும் தெரியவில்லை.  வாய்க்கால் வரப்பு தாண்டி, சேறு சகதியென்று விழுந்தடித்து, ஒருவழியாய் கருப்பங்காட்டை நெருங்கினார். கையிலிருந்த அரிக்கேன் விளக்கு இருளடைந்தது. வீராசாமியைச் சுற்றியும் இருள். அன்றைய இரவு இருளாகவே போனது. 
மறுநாள். மழைக்காலத்தின் மஞ்சள் வெயில். மழைவிட்டுப்போன சுவடுகள்.  அங்குமிங்கும் தெருவில் தேங்கி நிற்கிற மழைநீர். காற்றின் முகம் கூட தொலைந் திருந்தது. கருமேகங்கள் யார் கண்ணிலும்படாமல் மறைந்துகொண்டன.  பயிர்கள் எவ்வித அசைவின்றி நின்றன. ஐய்யனார் கோவிலின் முன் ஊரே கூடிநின்றது. இடைவிடாத கூச்சல். பரிதாபப் படும் முகங்கள். இரக்கப்பட்ட வார்த்தைகள். அழுகுரல்கள். வீராசாமியைப் பற்றிய வீர வசனங்கள். தொடர் உரையாடல்களுக்கி டையே சற்று அமைதியானது. கூட்டத்தில் ஒரு குரல்,
அய்யா வர்றாரு வழிவுடு, வழிவுடு....என்றது.  பாண்டிதுரை, வீராசாமி யின் சடலத்தைப் பார்த்ததும் முகபாவனையைப் பரிதாபமாக மாற்றிக் கொண்டு, உச்சுக்கொட்டினார். கையினால் முகத்தை மூடி, கண்களைக் கசக்கிக் கொண்டார்.
ரெண்டு வருசமா அய்யானாருக்குப் பூசையே வக்கில.. அதான்.. பக்கத்துல இருந்த வீராசாமிய அடிச்சிருக்கு...என்ற குரல், பாண்டிதுரைக்குச் சாதகமாய் இருந்தது. ஒருபுறம்,
வீராசாமிய நான் அடிக்கல... நான் அடிக்கல.....என்று ஐய்யனார் கத்துவதுபோல் இருந்தது.    
தலப்பார அடிச்சிக்கிட்டேன், அவன் கேக்குல. அய்யனாரு பொல்லா சாமிடா.... நம்ம வூட்டுல இருந்துகோன்னு சொன்னேன். கேக்குல.  புடிவாதகாரப்பய  நிலத்தப்பாத்துக்கிறன், நிலத்தப் பாத்துக்கிறன்னு.. இங்கயே இருந்துட்டான். ம்... எல்லாம் காலஞ்செய்யுற கோலம்.  அந்த சாமிக்கி நல்லவங்களே புடிக்காது போலஎன்று பாண்டிதுரை சொல்லிய வார்த்தைகள் ஊர்காரர்களுக்கு வேதவாக்காய் இருந்தது. பாண்டிதுரையின் எடுபிடிகளும் ஆமாஞ் சாமி' போட்டுக்கொண்டனர். ஊர்மக்கள் எல்லோரும் உச்சு'க்கொட்டிக்கொண்டு, வருத்தப்பட்டனர். 
சரிப்பா நடந்தது நடந்துபோச்சு.  இனி ஆகவேண்டியதப் பாப்போம். ஒரு நல்ல நாளாப்பாத்து அய்யானாருக்கு பூசப்போட்டு படையல் வச்சிடப்புடலாம்என்று சொல்லி, பாண்டிதுரை கூட்டத்தைவிட்டு வெளியேறினார். அவரின் பின்னால், செங்கோடனும் டவுசர்' வேலும்  குடைப்பிடித்துக்கொண்டு ஓடினர். 
வீராசாமிய நான் அடிக்கல..... நான் அடிக்கல..... மாட்ட மண்ணுல மூடி.  மனுசன் அடிச்சத.. சாமி(நான்) அடிச்சதா சொல்லுறாங்க.  அவுங்க சொல்லுறத நம்பாதீங்க... நம்பாதீங்க....என்று ஐய்யனார் கத்திக்கதறுவதுபோல் இருந்தது.  கருப்பங்காட்டு மின் வேலியில் மாடு மாட்டிக்கொண்டதும், அதை காப்பாற்றப்போன வீராசாமி மின்சாரம்தாக்கி இறந்ததையும், ஊர்க்காரர்கள் ஒவ்வரிடமாக ஐய்யனார் உறக்கக் சொல்லிக் கொண்டேயிருக்க..  காதுகொடுத்து கேட்க ஆளில்லை.  ஊர்மக்கள் சடங்குகாரியத்தில் மும்முரமாகினர். 
வீராசாமி இருந்தான் ஊரே செழிப்பா இருந்துச்சு... இனிமே... ம்.......பெரும்மூச்சுடன் கூட்டம் களைந்தது.  ஊர்சனங்கள் பிணத்தைத் தூக்கி,  சுடுகாட்டை நோக்கி நடந்தனர். பறையடிக்கும் சத்தமும், மணியடித்து சங்கு ஊதும் சத்தமும் ஊரெங்கிலும் கேட்டது.  ஐய்யனாரின் கதறல் மட்டும் யார் காதிலும் விழுந்த பாடில்லை. விழப்போவதுமில்லை. இவர்கள் வெற்று மனிதர்கள்.  மூடர்கள்.  அரிதாரம் பூசிக்கொள்ளும் பொய் முகங்கள். ஐய்யனாரைச் சுற்றிலும் வெறுமைக் கவ்விக்கொண்டது. வெள்ளைக்குதிரை அழுதுகொண்டிருந்தது. சிவப்புக் குதிரைக ளுக்கு கோபம் பீறிட்டது. பச்சைக்குதிரைகளும், பாசிக்குதிரைகளும் மெளனமாய் இருந்தன.  ஐய்யனாரின் கண்கள் சிவந்து, குருதி கசிந்தது. இயற்கை, தன் அவதா ரத்தை எடுத்தது. கருமேகங்கள் அசூரப்படையென திரண்டு, நீலவானத்தை மூடிக் கொண்டன. அடிவானத்தில் இருள் சூழ்ந்துகொண்டது. காற்று ஏதொரு மறைவி லிருந்து வெளிவருவதைப்போல், ஊருக்குள் புகுந்தது. அதன் வேகத்தைப் பெருவெளி யெங்கும் பிரயோகித்து, ஊரையேத் திணர வைத்தது. பயிர்கள் காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல், ஆடியசைந்து பின் மண்ணோடு மண்ணாய் சாய்ந்தன. கருப்பங்காடு இருந்த இடத்தின் சுவடு தெரியாமல் அழிந்துபோனது. மரங்கள் மண்ணில் விழுந்தன. காற்று, உருமாறி இடியாக சிறிதுநேரம் சத்தத்தை எழுப்பின. பின் தூரலின் முகமென உருவெடுத்து, பெருமழையாய் ஊரையே மூழ்கடித்தது. காற்றாற்று வெள்ளத்தில் குடிசை, கோபுரமென ஒன்றுவிடாமல் அடித்துச்சென்றது. வேடமிடும் மனிதர்களையும் காவு வாங்கியது.
வெள்ளைக் குதிரை, சிவப்புக் குதிரைகள், பச்சைக்குதிரைகள், பாசிக்குதிரைகளென எல்லாம் மழைநீரை குடிக்க ஆரம்பித்தன. செம்பியநல்லூர் கிராமமே பசுமையை இழந்து, வெள்ளக்காடாய் மாறி யிருந்தது.  காற்று, மழை, இடியின் சப்தத்தோடு ஐய்யனாரின் புலம்பலும் கேட்டுக் கொண்டிருக்க, உடலெங்கிலும் மழைநீர் வழிந்தோடியது.  அம்மழை நீரோடு, கண்ணிலிருந்து வடிந்த குருதியும் வெள்ளத்தில் கலந்தது. ஊர்க்காவலன்' ஐய்யனார், இவ்வேடமிடும் மனிதர்களோடும், மூடர்களோடும் வாழ்வதை துறந்து, தன் கல்லான உடலை கரைத்துக்கொள்ள... காலம் தன் தீர்ப்பை கணக்காய் எழுதிமுடித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக