புதன், 27 நவம்பர், 2013

தங்கமீன்கள்


- எழில்நதி, பேராவூர், திண்டிவனம்.



நூறு வருட இந்திய சினிமா வரலாற்றில் மிகச் சரியான படம் தங்கமீன்கள்’. தங்கமீன் படத்தைக் குறைகூறுபவர்கள் முட்டாள்கள். தங்கமீன் படத்தை விமர்சிப்பவர்கள் பொதுபுத்தி உள்ளவர்கள், தங்கமீன் படம்தான் இந்திய சினிமாவின் முதலும் கடைசியுமான நல்லபடம். டென்ஷனாவாதிங்க. இதெல்லாம் என்னுடைய கருத்தல்ல. தங்கமீன்கள் வெளியானதற்குப் பிறகு இயக்குனர் திரு ராம் அவர்கள் அப்படத்தைப் பற்றியான விமர்சனங்களுக்குத் தந்த பதில்களின் சாராம்சம்தான் மேலே கூறியிருக்கிறேன்.
நல்லாசிரியர் விருது வாங்கிய தலைமை ஆசிரியர் இவருக்கு இரண்டு பிள்ளைகள், மகள் ஆஸ்திரேலியா மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து ஆஸ்திரேலியாவில் வாழ்கிறார். மகன் பன்னிரெண்டாம் வகுப்பில் தவறி ஒரு பெண்ணைக் காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திக் கொண்டு இருக்கிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் அலுமினிய பாத்திரத்திற்குப் பாலிஷ் போடும் ஒரு சிறிய தொழிற்கூடத்தில் வேலை செய்கிறார். மூன்றாம் வகுப்புப் படிக்கும் மகளுக்கு அப்பாவாக நடித்து இருக்கும் (ராம், படத்தின்) ஆரம்ப பத்து நிமிடக் காட்சியைத் தவறவிட்டு ஒரு பார்வையாளனாக அரங்குக்குள் நுழைந்தால்; கல்யாணி என்கிற கதாபாத்திரம் (அப்பாவாக ராம் ஏற்று இருக்கும் கதாபாத்திரத்தின் பெயர்) வறுமையில் பிடியில் சிக்கி தவிக்கும் ஒரு அன்றாடம் காய்க்சியாகத்தான் தெரிவார். ஒரு தலைமையாசிரியரின் மகனாக, தெரிய வாய்ப்பே இல்லை. தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்றாலும்கூட அவருடைய குடும்பம் அப்படி ஒன்றும் கொடுமை படுத்தவில்லை அவரை. தன் மகளே உலகம் என்று சுத்திக்கொண்டு இருக்கும் மகனிடம்; ஏதாவது வேலைக்குப் போயன்டா இவ்வளவு பெரிய ஆளாகியும் என்னையே நம்பிதான் இருப்பியா? என்ற தோரணையில் ஒரு அறிவுரை சொல்கிறார். தன் பேத்திக்குப் பள்ளிக்கட்டணம் கட்டவேண்டிய சூழலில் இதைச் சொல்கிறார். அதற்காக அலுமினிய கடைக்கு வேலைக்குப் போக வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. ஏன் அந்த ஊரில் வேறு அலுவலகமே இல்லையா? பன்னிரெண்டாம் வகுப்பு படித்த இளைஞனுக்குப் பெரும்பாலான இடங்களில் மாதம் 5000க்கு மேல சம்பளம் கிடைக்குதே பாஸ் அப்புறம் எதுக்கு அலுமினிய பாத்திரத்துக்குப் பாலிஷ்; உண்மையாக வறுமையின் பிடியில் உள்ள மக்களைப் பத்தின கதையா இருந்திருந்தால் இந்தக் காட்சியமைப்பு சரியானதாக இருந்திருக்கும்.
பார்வையாளனைத் துயரமான தளத்திற்கு நகர்த்துவதற்காக வேண்டி இதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். அப்புறம் கல்யாணி மிதிவண்டி பயன்படுத்து கிறார். கல்யாணியோட அப்பா (வாத்தியார்) காரைப் பயன்படுத்துகிறார். என்னத்தான் கொடுமைக்கார அப்பாவாக இருந்தாலும்தான் கார் வாங்கும்போது பையனுக்கு ஒரு ஸ்கூட்டர் கூடவா வாங்கித் தரமாட்டார். இல்ல வாங்கின காரை பையன் ஓட்டவே மாட்டான்; உங்க தோற்றத்திற்கு சைக்கிள் ஓட்டினா நல்லாயிருக்கும்னு எனக்கும் தோணுது. வறுமையால் இருப்பவர்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களை ஒரு கதாபாத்திரம் பயன்படுத்துவதாலோ அவர்கள் செய்யும் தொழிலை செய்வதாலோ துயரத்தையும் சோகத்தையும் பார்வையாளனுக்கு ஏற்படுத்த முடியும் என்ற சினிமா மொழியைப் புரிந்து இருக்கிறீர்கள். ஆனால் உங்களோட கதையால் இது பொருந்தவில்லை. சில்வர் மேனாக காரைக்குடி செட்டியார்கள் வீடுபோல் இருக்கும் ஒரு வீட்டுக்குள் நுழையும்போதும் மெத்தையில் மகளோடு கொஞ்சும்போதும் உங்கள் வேலைக்கும் பின்புலத்திற்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கு. சூழலால் அதனுள் இருக்கிறீர்கள் என்றாலும்கூட உங்களுடைய அப்பா, அப்படி ஒன்றும் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடவில்லை. தன் மகளுக்கு நாய்க்குட்டி வாங்க தங்கையிடம் பணம் கேட்கும் நீங்கள், மகளின் பள்ளி கட்டணத்தைக் கேட்டிருக்கக் கூடாதா.
நல்லாசிரியர் விருது பெற்ற தாத்தா தன் பேத்தியிடம் அன்பாகத்தான் நடந்து கொள்கிறார். பாசமாகத்தான் பார்த்துக்கொள்கிறார். வீட்டில் இருக்கும் ஒரே குழந்தை அந்தப் பெண்தான். அதனால் அந்தக் குழந்தையின் எதிர்காலத்தில் அக்கறை உள்ள மனிதனாகத்தான் அவர் இருந்திருக்க வேண்டும். உறுபடாத தன் மகனைப் பற்றிக் கவலைப்படும் தந்தை தன் பேத்தி நல்ல பள்ளியில் (ஆங்கிலவழிக் கல்வி) படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு  மெட்ரிக் பள்ளியில் சேர்த்துவிடும்போது சரியாகச் சொல்லப்போனால் இந்தப் படம் தாத்தா பேத்திக்குமான படமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
ஆங்கில வழிக் கல்வி முறையையும் தனியார் பள்ளிகளின் வியாபாரத்தையும் மிக நுட்பமாகவும் தெளிவாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார். பள்ளி குழந்தைகள்  பரீட்சை எழுதிக் கொண்டு இருக்கும். ஒரே அறையில் இன்னொரு முனையில் கட்டிட வேலை நடந்துகொண்டிருப்பதாகக் காண்பித்து இருப்பார். ஆங்கிலம் பற்றிய தன் எதிர்ப்பைக்  குழந்தைகள் மூலமாகச் சொல்லியிருப்பார். ‘W’ என்ற எழுத்தைக் கண்டுபிடித்தது யார் என்ற கேள்விக்குகொரங்குஎன்ற பதிலை குழந்தைகள் சொல்லும். இதற்கு முந்திய காட்சியில் . ‘W’ எழுதத் தெரியாத குழந்தைக்கு மேலே இருக்கும் குரங்கை வைத்து எழுதி சொல்லித்தருவார். குழந்தையோட அப்பா மகளாக நடித்திருக்கும் அந்த பெண்குழந்தை மிகச்சிறந்த நடிகையாக வரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இயக்குனர் மிகையாக நடிக்கவைத்திருக்கிறார். படத்தில் தோழியாக வரும் இன்னொரு குழந்தை யதார்த்தமாக நடித்து இருக்கிறார். கல்யாணியின் மனைவியாக வரும் பெண்ணும் அப்பா கதாப்பாத்திரமும் ஆஸ்திரேலியா தங்கச்சியும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். கல்யாணியின் மனைவியாக வரும் பாத்திரத்தை ஒரு காட்சியில் மிகையாகக் கையாண்டிருக்கிறார். அந்தக் காட்சி தேவையானதாகக் கூட தெரியவில்லை. மகள் தன் அம்மாவிடம்நா எப்போ வயசுக்கு வருவேன்என்று கேட்கும் காட்சி ஒன்று. அந்தக் காட்சியில் அப்படி எதற்கு அவர் அழுது மனநலம் பாதிக்கபட்டவர் போல கத்துகிறார். ஒரு கணம் இயக்குனர் செல்வராகவன் வந்துபோகிறார்.
மாமியார் தன்னிடம் மனம் நோகும்படி நடந்து கொள்கிறார் என்பதைத் தெரிவிக்க இரவில் வீட்டிற்கு வரும் கணவனை வாசலில் வழிமறித்து என்னை எங்கேயாவது கூட்டிட்டு போ என்று சொல்கிறார். அதன்படி கணவன் மனைவியும் அழகான நிலா வெளிச்ச இரவில் சைக்கிளில் செல்கிறார்கள். ஓர் இடத்தில் அமர்ந்து இருவரும் பேசும் காட்சி மிகவும் அழகாக இருக்கிறது. ஒரு புதுமையான காட்சியமைப்பு. அவர்கள் அங்கு துயரத்தைப் பேசினாலும் அழகாக இருக்கிறது. நண்பனைக் கடன் கேட்கும் போது நண்பன் நடந்துகொள்ளும் விதமும் கல்யாணி போன பிறகு தன் மகள் கேட்கும் கேள்விக்கு (அப்பா அந்த அங்கிள் ஏம்பா உள்ள வரல?), ‘கடன் கேக்கறவங்கல்லாம் உள்ள வரமாட்டாங்கப்பாஎன்று பதில் சொல்லும்போது கல்யாணி அதைக் கேட்டுக்கொண்டே வந்து நண்பனின் பின்பக்கமாக நிற்கிறார். எப்போ நான் வரவேண்டும் என்று கேட்பதற்காக. அடடாஅப்படியே கடைந்தெடுத்த பழைய தமிழ் சினிமா காட்சி சார் இது...
மற்றொரு காட்சியில் கல்யாணி மனைவி வேலை தேடி போயிருக்கும் தன் கணவனுக்கு தொலைபேசியில் பேசுவதற்காக ஒரு எஸ்.டி.டி பூத்திற்கு அருகில் வருகிறார். பூத்தை ஒட்டியே ஒரு பெஞ்சில் சில ஆண்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள். பூத்துடைய உரிமையாளர் ஒரு பார்வையற்றவர். அப்போது கல்யாணியின்  மனைவியை பெஞ்சில் உட்கார்ந்து இருப்பவர்கள் கேலி செய்கிறார். சார்.. சார்.. இன்னும் எத்தனை படத்துல சார் காட்ட போறீங்க இந்த டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து பெண்களைக் கேலி செய்யும் காட்சியை. ஆனால் இந்த இயக்குனர் கொஞ்சம் வித்தியாசமாக கண்ணுதெரியாத ஒருத்தரும் சேர்ந்து கேலி செய்வதுபோல காட்சிப்படுத் தியிருக்கிறார். ஆங்கிலத்தை எதிர்க்கிறார். அரசு பள்ளியை ஆதரிக்கிறார். இதெல்லாம் சரியான விசயம். நல்ல பதிவு. ஆனால் படத்தின் இறுதிக்காட்சியில் மிக மோசமான விஷயத்தைப் பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர். தன் மகள் ஹச் நாய் குட்டி கேட்கிறாள், அந்த நாய் குட்டி ஹச் என்ற சிம் கார்டு விற்கும் ஒரு கார்பரேட் நிறுவனத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்திய நாய்தான். இது (அதனால்தான் இதற்கு ஹச் நாய் என்று பெயர்) உலகமயமாக்குதலையும் கார்பரேட்களையும் எதிர்க்கும் ராம், தம் மகளுக்கு ஹச் நாய் குட்டியை எப்படி வாங்கிப் கொடுக்கிறார் என்பது தான் படத்தின் இறுதிக்காட்சி. இந்தக் காட்சியமைப்பு கார்ப்பரேட்டை எதிர்ப்பதாக இல்லை. ஆதரிப்பதாகவே இருக்கிறது. இந்த ஹச் நாய்க்குட்டியை எந்த வருமானத்தில் வாங்கித்தருகிறார் என்பதுதான் மிக கொடூரமான காட்சி. கேரளாவின் பழங்குடிமக்கள் மழை வருவதற்காக வாசிக்கக்கூடிய ஒரு இசைக்கருவியின் புகைப்படத்தை வெள்ளைக்காரர்களுக்குஇந்தியாவின் பழமையானக் கைவினைப் பொருட்களை விற்கக் கூடிய ஒரு பெண், ராமிடம் காட்டி இதைக் கொண்டுவந்தால் 25000 ரூபாய் பணம் தருவதாகக் கூறுகிறாள். அதனால் அந்தக் கருவியைத் தேடி போகிறார். இதற்கிடையில் ஒரு காட்சி, மடிகணினியைப் பிடுங்கிக்கொண்டு ஓடி அனைவரிடமும் அடிவாங்கும் காட்சி ஒரு தேவையில்லாத துயரக்காட்சியை அரங்கேற்றுகிறார். அதன்பிறகு காடு, மலையெல்லாம் தாண்டி அந்த பழங்குடி மக்களைச் சந்தித்து அவர்களின் காலில் விழுந்து அவர்களிடம் அந்த கருவியை வாங்கி வந்து அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு அதில் வந்த வருமானத்தில் நாய்க்குட்டி வாங்கி வருகிறார்.
பாட்டன் முப்பாட்டன் தலைமுறை தலைமுறையாய் பயன்படுத்தி வந்த ஒரு பழங்குடியின மக்களின் இசைக்கருவியை (தொன்மத்தை) அந்த இனமக்களின் பல தலைமுறை பார்த்த ஓர் உயிர் என்று கூட சொல்லலாம். அதை விற்று கார்பரேட்டை (ஹச் நாய்க்குட்டியை) வாங்குகிறார் திரு.ராம் அவர்கள். இந்த காட்சிக்கு அவர்தரும் பதில்நான் இந்தக்காட்சியில் ஒரு அரசியலைச் சொல்லியிருக்கிறேன். காடுதாண்டி மலைதாண்டி உலகமயமாதல் பரவியிருக்குஎன்பதைச் சொல்லியிருக்கிறேன் என்கிறார். படத்தின் கதாநாயகன் பழங்குடி இனமக்களின் இசைக்கருவியை வாங்கி வந்து விற்பனை செய்து விட்டு ஒரு ஹச் நாய்க்குட்டியை வாங்கித் தன் மகளுக்கு கொடுக்கிறார் என்ற காட்சியை பார்த்துக்கொண்டு இருக்கும் பார்வையாளனுக்கு ஒரு அரசியலும் புரியாது, அதில் அரசியலே இல்லை. அப்புறம் எங்க இவருடைய அரசியல் புரியும். காடுதாண்டி மலைதாண்டி உலகமயமாக்கம் பழங்குடி இன மக்களைத் தொட்டு விட்டது என்பதுதான் இவருடைய அரசியல். தொட்டுவிட்டதைச் சொல்வது அரசியல் இல்லை. எதிர்மறையான ஒன்று பரவிக்கொண்டிருக்கும்போது அதற்கு எதிர்வினையாற்றுவது அல்லது அதை நிராகரிப்பதே அரசியல். அதாவது யாரோ ஒருவன் பழங்குடி மக்களின் இசைக்கருவியை விற்பனை செய்ய முயலும்போது அதை இவர் தடுத்து நிறுத்தி அந்தக் கருவியை அந்த மக்களிடம் ஒப்படைப்பது போன்று காட்சி இருந்திருந்தால் அதுதான் அரசியல்.
ஒரு கதாநாயகன் பழங்குடி இனமக்களின் இசைக்கருவியை விற்று விட்டு ஹச் நாய் வாங்கினான் என்பதற்கு பெயர் அரசியல் இல்லை. அழித்தொழிப்பு. அந்த மக்களின் அடி நாதத்தை அவர்களின் வேரை அறுத்து, கார்ப்பரேட்டுக்கு கம்பளம் விரித்து இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக