-சந்திப்பு: இர.பூபாலன், அல்லாளச்சேரி, கலவை, வேலூர்.
நாடகக் கலைஞர் முனியம்மாள் நண்பர் சாரதியின் உதவியால் அறிமுகமானார். முனியம்மாள் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில்
உள்ள வெம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் வன்னியர் சமூகத்தைச்
சார்ந்தவர். இவருடைய பூர்விகம் கும்பகோணம், கொல்லடங்காவிரி அருகில் இருக்கும் ஶ்ரீ புரந்தான் அரங்கோட்டை. தந்தை சின்னசாமியின் மூலமாகதான் டிராமாவில் நடிக்க வந்தார்.
சின்னசாமி அவர்களும் நாடகத்தில் மிக சிறந்து விளங்கி யவராம்.
தன் சொந்தக்காரரான முருகப்பனுக்கு ஆறாவது மனைவியாகத் திருமணம் செய்து
கொண்டார். இவரும் சிறந்த நாடக நடிகர். மிருதங்கம்,
ஆர்மோனியம், நடிப்பு போன்ற பல வித்தைகளைக் கற்றுத்
தேர்ந்தவர். முனியம்மாளுக்கு ஒன்பது பசங்க. ஆறு ஆண்பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். தனது பெரிய மகன் தங்கராஜ் மட்டும் ஆண் பிள்ளைகளில் நாடகம் நடித்து வருகின்றார்.
இவரைப் போன்றே மூன்று மகள்களும் தமிழ், உஷா,
ஆண்டாள் இவர்களும் ஒவ்வொரு நாடகக் கம்பெனியில் நடித்து வருகின்றார்கள்.
நாவல்ஸ் நாடகத்தைப் பற்றி முனியம்மாள்
கூறியது:
ஆரம்பத்தில் நாங்கள் டிராமாதான் நடித்து வந்தோம். எனக்கு
அகவை 7இல் இருந்து நாடகம் நடித்து வருகின்றேன். நான் பாவாடை, சட்டை, சீலை போன்றவை
அணிந்து நடித்தேன். தற்போது காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்றால்போல சினிமாவில் இருக்கும்
நிலையைப் போன்று ஆடைகளும் நடிகர்கள் செய்யும் செய்கைகள், நகைச்சுவை,
பாடல் முறைகள் போன்றவற்றை மாற்றிக் கொண்டு நடிக்கின்றனர்.
எனக்குச் சிறிய வயதாக
இருக்கும்போது என் தந்தையுடனும் கணவருடனும் ஊர் ஊராகச் சென்று புராணக் கதைகளை மையமிட்ட
கதைகளை நாடகமாக நடித்தோம். பிரதி ஆசிரியர் பாடிய
பாடல்கள், வசனம், நடை போன்றவற்றை அப்படியே
நடித்துக் காட்டினோம். தற்போது நவீன காலத்திற்கு ஏற்றால்போல டிராமா
வடிவில் இருந்து புராணக்கதை, நாவல்ஸ் என்ற இரு பிரிவாக மக்கள்
பிரிகின்றனர். இருப்பினும் இலக்கியம் படித்தவர்கள் வெகுசன நாவல்களைக் கதையாக நடித்துக்காட்டும் இதற்கு நாவல்ஸ் என்ற பெயரால் அழைக்கின்றனர்.
‘நாவல்ஸ்’இல் சினிமா பாடல்கள், வசனங்கள், தற்போதைய சிக்கல்கள் ஆகியவற்றை நடித்துக் காட்டுகின்றனர். தொடக்க காலங்களில் டென்ட் அடிச்சு நான்கு பக்கமும் வளைவும் டிக்கட் மூலம் நாடகத்தை
மக்களுக்கு நடித்துக் காட்டப் பட்டது. அல்லி, சாவித்திரி, லலிதா, கண்ணகி,
மணிமேகலா தெய்வம், நலாயினி, அரிச்சந்திரன், பஃப்பூன் போன்ற வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார்
முனியம்மாள்.
நடிப்பில் சிக்கல்:
புராண கதைகளில் மையமிட்ட
காலம் சென்று, தற்போது நாவல்ஸ் என்ற வடிவம் வந்த
பிறகு மக்களை எளிதில் கவர முடிகிறது. முனியம்மாள் பரம்பரையாக
நடிப்பு குடும்பத்தில் வந்தவர்.பொதுவாகப் பெண்கள் நாடகத்தில்
நடிக்கும் போது மிக அதிகமான சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. பெண்கள் தன் கணவருடன் நடிக்கும் போதும் அவருடன் காதல், திருமணம் போன்ற காட்சிகளில் நடிக்கும் போது நெருங்கி நடிக்கின்றனர்.
ஆனால் மற்றவர்களிடம் காதல் போன்றவற்றில் நடிக்கும்போது அவ்வாறு நடிக்க முடியாது.
ஆனால் அந்த நடிகர் நெருங்கி நடிக்க விரும்புவார். இவ்வாறு நாடகத்தில் பெண் எவ்வாறு தன் கணவனுடன் நடிப்பதைப் போன்று மற்றவர்களிடம்
நெருங்கி நடிக்க இயலும். இது சிக்கலான செயல் அல்லவா?
முனியம்மா தன் ஏழு
வயது முதல் எழுபது வயது வரை நடிப்பின் மூலம் சிறந்து விளங்கியவர். இருப்பினும் தனக்காக எதையும் சேர்த்து வைக்கவில்லை.
முனியம்மா காலத்தில் காலனா, அரையனா, ஓரனா என்ற நிலையிலே நடித்துத் தன் வாழ்க்கையை நடத்தி வந்தவர். தனது மூன்று மகள்கள் இன்று ஒவ்வொரு கம்பெனியிலும் முன்பணம் பெற்று ஒரு நாளைக்கு
ஐநூறு முதல் எழுநூறு வரையிலான பணத்தைப் பெற்று நடித்து வருகின்றனர்.
கலைஞர்களுக்கு நாடகம்
என்பது பருவக்காலங்களைப்
போன்றது ஆறு மாதம் நாடகம் நடித்து அடுத்த ஆறு மாதம் அதை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டும்.
தன் மக்களைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பதிலேயே குறிக்கோளாக இருந்தார்.
தன் மகன்கள் ஆறு
பேரில் ஐவர் ஒவ்வொருவரும் தனது திறமைக்கு ஏற்றாற்போல் வேலை செய்து இராணிப் பேட்டையில்
வாடகை வீட்டில் வசித்து வருகிறார்களாம். ஒருவர் மட்டும்தான் நாடகம் நடித்து வருகிறார். அவரது
பெயர் தங்கராஜ்.
முனியம்மா கோவிலன்
கதை, நளாயினி, அரிச்சந்திர புராணம்,
நல்லதங்காள், கிருஷ்ண லீலை, இரணியன் போன்ற புராணக்கதையில் நடித்து வந்திருக்கிறார். சென்னையில் இருக்கும் மீனாம்மாள் உதவியால் பல இடங்களுக்கு நாடகத்தை நடித்திருக்கிறார்.
இதுபோன்றே நவீன நாடக ‘மரப்பாச்சி’ நாடகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அ.மங்கையின் மூலமாகவும்
முனியம்மாள் பாண்டி, டெல்லி போன்ற பல்வேறு இடங்களுக்குச் சென்று
நடித்து வருகிறார்.
இவ்வாறு தொடக்கத்தில்
ஊர் ஊராகச் சென்று நாடகம் நடித்துப் பின்பு திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில்
நிரந்தரமாக வசித்து வருகிறார். அவ்வூர் மக்கள் நடிப்பைக் கண்டும் அவர்களுக்கு இடம் தந்திருக்கின்றனர்.
இருப்பினும் நடிப்பு முடிந்த காலம் முதல் தற்போது தெரு ஓரமாகப் பூ வியாபாரம்
செய்து வருகிறார். தனக்கென்று ஒன்றும் சேர்த்துக் கொள்ளாமல் தன்
பிள்ளைகளை அதே நாவல்ஸ் நாடகத்தில் ஈடுபடவைத்ததுதான் முனியம்மாளின் தனி சிறப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக