சந்திப்பு: த. செபுலோன் பிரபுதுரை, சி.முத்துகந்தன்
28.07.2013 ஞாயிறு காலை பத்துமணிக்கு சென்னைக் கிறித்தவக்
கல்லூரியின் மேனாள் மாணவர் பேரவை யின் கலை நிகழ்ச்சியில் தென் கொரியா வைச் சேர்ந்த
சிம் மற்றும் லியின் ‘சங்கூ’ இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இசைக் கருவியின் வடிவமும் இசைத்த வேகமும் நம்மை ஈர்க்கவே
அணுகியபோது மகிழ்ச்சியோடு இசைக் கருவியை அறிமுகப்படுத்தத் தொடங்கினார் வராங்லி. இவர் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் கொரியமொழி பயிற்றுவிக்கும்
ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மொழியியல், இறையியல், மெய்யியல், பண்பாடு முதலிய துறைகளில் பெற்ற தேர்ச்சியும், சங்கு இசைப்பதில் பேரும் பெற்றவர். இவரது நண்பர் கிம், சங்கு இசைப்பதில் புகழ்பெற்றவர். நம் ஊர் உடுக்கையானது தவில் அளவில் பெரிதாய் இருந்தால் எப்படி
இருக்குமோ அப்படிதான் இருக்கிறது சங்கூ.
இந்த இசைக்கருவியின் பெயர் சங்கூ. இது ஒதாங் மரத்தால் செய்யப்பட்டது. இரண்டு பக்கமும் தோலால் மூடப்பட்டது. இசைக்க இரண்டு குச்சிகள் பயன்படுத்தப் படுகின்றன. ஒதாங் மரத்தில்தான் மூங்கிலைப் போல துளை இருக்கும். எனவேதான் ஒதாங் மரத்தில் மட்டுமே செய்கிறோம். மேலும் இம்மரம்தான் ஓசை மிகுதியாகத் தரக்கூடியது. இந்த மரத்தை வெட்டும் முன்னர் இயற்கையை வணங்கி வழிபட்ட பின்னர்தான்
வெட்டுவர். பின்னர் ஒரு கூடாரத்தில் காய வைத்து பிறகு தண்ணீரில்
மூன்று முறை ஊறவைத்து பின் உலற வைத்து மீண்டும் உலர்த்துவர்.
மாடு, குதிரை, மான் மற்றும்
நாயின் தோலைப் பயன்படுத்துவர். மாட்டின் தோல்
தரமானது, நல்ல ஓசை வரும். குதிரை தோலில் எண்ணெய் படிவம் இருக்கும். விலை அதிகமானது. ஓசையும் அதிகம். மான் தோலைப் பயன்படுத்தியதாகப் பழைய நூல்களில் எழுதியுள்ளனர். நாயின் தோல் மிகவும் மெல்லியதானது. ஆனால் ஓசை அதிகமாக வரும். இடப்பக்கத் தோலுக்கு ‘செப்பியான்’ என்றும் வலப்பக்கத் தோலுக்கு ‘கும்பியான்’ என்றும் பெயர். இடக்கையில் இருக்கும் இந்த குச்சிக்கு ‘கும்சே’ என்றும், வலக்கையில் இருக்கும் குச்சிக்கு ‘எல்சே’ என்றும் பெயர். எல்சே பைன் மரத்தால் செய்யப்படுவது. கும்சே மூங்கில் வேரில் இருந்து செய்யப்படுவது.
சங்கூவில் ஏழு வகையான நடைகள் வாசிக்கப்படுகின்றன. ஏழு என்பது முழுமையைத் தருவதாக உணரப்படுகிறது. சே என்பதற்கு தாளம் என்று பொருள். அவை ஏழும் முறையே 1.இல்சே, 2.ஈசே, 3.சம்சே, 4.சாசே, 5.ஓக்சே, 6.யூக்சே, 7.சில்சே என்ற ஏழுநிலைகளில் இசைக்கப்படும்.
எ.கா:
இல்சே -
தும்
ஈசே -
தும், தாங், தாங்.
சம்சே -
துங், துங், துங். என அமைகிறது.
இந்த இசைக்கருவியை இசைக்கும் போது ஒரு செய்தி
மக்களுக்கு உணர்த்தப் படுகிறது. முதலில் வானத்திற்காகவும்
அடுத்து பூமிக்காகவும் குறிப்பாக, மனிதனை இணைத்
தும் இவ்விசைக்கருவி இசைக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு முறை இசைக்கும் போதும் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் மனிதன்
இருக்கின்றான் என்பதை இவ்விசைக் கருவியை இசைக்கும் போதே உணரலாம். வானம், பூமி இசையை உண்டாக்கவில்லை
மனிதன்தான் உண்டாக்கினான் என்பதை உணர்த்துவதாகவும்
அமைகிறது. மேலும் நாங்கள் வீடு கட்டினால்கூட இயற்கையை இயைத்துக்
கட்டுவோம் என்கின்றனர் இவர்கள். வீடுகளை மரத்தால்
கட்டும் போது அதில் மேகம், ஆறுகள், மழை என இயற்கையை அடையாளப் படுத்துவதாகவே அமைந்திருக்கும்.
கொரியாவைப் பொருத்தவரை கிராமங்கள் தனிச்சிறப்பு
வாய்ந்தன. கிராமங்களில் அடிப்படை தொழில் உழவுத்தொழில். சங்கூவின் முதன்மைப் பயன்பாடு உழவுத்தொழிலின் போதுதான். பின்புதான் புதுவருடம், திருமணம், இறப்பு, நன்றி படையல், அறுவடைத் திருநாள், வயல் வெளியில்
வேலை செய்யும் போது... இவ்விசைக் கருவிகள்
இசைக்கப்படும்.
குவெங்வாரி (உலோகத்தால் ஆனது), ஜூங் (தாளம் ஜால்ரா
போன்றது), சங்கூ (தோல்கருவி), புக் (சங்கூ மாதிரியான ஒரு பக்க தோல் கருவி) ஆகிய இந்த நான்கு இசைக்கருவிகளும் இயற்கையின் வடிவங்களாக
உள்ளன. குவெங்வாரி இடியன் வடிவம். புக் மேகத்தின் வடிவம். இவ்வியற்கையின் வடிவங்கள் பயிர் தொழிலுக்கு முதற்காரணிகளாக
இருக்கின்றன. சங்கூவின் ஏழாம் நிலையை இசைக்கும்போது சில நேரம்
சாமி இறங்கும் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு இசைக்குழு இருக்கும். இசைக்க விருப்பம் உள்ள எவரும் சேரலாம். எந்த வேறுபாடும் கிடையாது. தொழில் முறையாக இசைப்போர் சிறப்பாக இசைப்பர். நான் பதினோரு வயதிலிருந்து கற்றுக்கொண்டேன்.
எல்லா கிராமத்தாரும் அவரவர் விருப்பம் போல நடையை
மாற்றி மாற்றி இசைப்பர். சூழலுக்கு ஏற்ப
இசைப்பர். முதல் இசைக்கருவியான குவெங்வாரிதான் முடிவு செய்யும். முதல் தாளம் கொரியா முழுமைக்கும் ஒன்றுதான். பின்னர் வரும் ஆறு தாளங்களை மாற்றி மாற்றி இசைப்பர். கொரியா முழுக்க 300க்கும் மேற்பட்ட தாளங்கள் இசைக்கப்படுகின்றன.
எந்த இசைக்கருவியையும் கைகளால் இசைப்பதில்லை. எல்லா இசைக் கருவியையும் நாங்கள் குச்சிகளைக் கொண்டுதான்
இசைப்பர். அவ்வாறு இசைப்பதால் ஒலி அளவு மிகுதியாகக் கிடைக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவிலிருந்து வந்ததாகச்
சொல்லப்படும் இவ்விசைக்கருவியை இசைக்கும் போது நம்மூர் ஆடி மாதம் நினைவுக்கு வரும். தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளுடனான வரலாறு கொரியாவை இணைத்துப்
பார்க்கத் தோன்றுகிறது. அம்மா, அப்பா, நீ, பல் முதலியசொற்கள் பொதுவாக இருப்பதும் நிம்ஜிம் பற்றிய செய்திகள்
இன்னும் படிக்கத் தூண்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக