- வெள்உவன், வரலாற்று ஆய்வாளர், திருநெல்வேலி
மனித நாகரிக வளர்ச்சியில் வணிகம் என்கிற செயல்பாட்டின் பங்கு என்பது
ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. வணிகத்தை மேற்கொண்டவர்கள் வணிகர் எனப்பட்டனர். வணிகர்கள் பல நாடுகளின்
எல்லா பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்குத் தேவையான பொருள்களை விற்பனை
செய்வதும் அந்தப் பகுதியில் உற்பத்தியாகும் உற்பத்திப் பொருள்களை கொள்முதல்
செய்வதும் கொள்முதல் செய்த பொருள்களை அந்தப் பொருள்களின் தேவை உள்ள பிற
இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதுமான ஒரு செயல்பாடுதான் வணிகம்
எனப்படுகிறது. இந்த செயல்பாட்டினூடே வணிகர்களின் நாடுகளுக்கிடை யேயான
போக்கு-வரத்து என்பதான நிகழ்வினால் ஓர் இடத்தின் பண்பாடு, மொழி, அறிவு, பழக்க வழக்கம்,
அறிவியல் போன்றன இயல்பாகவும் மறைமுகமாகவும் அவர்களினால் கொண்டு செல்லப்பட்டு மற்ற
இடங்களில் பரவும் நிலை உருவாகிறது. வணிகம் என்ற செயல்பாட்டினால் உண்டாகும்
பக்கவிளைவு இது. இப்பக்க விளைவு மக்களின் நாகரிக வளர்ச்சிக்கு உந்து சக்தியாக
திகழ்ந்தது.
விற்பனை அல்லது கொள்முதல் என்பதன் ஆதாரமாக விளங்குவது அளவிடுதல்
ஆகும். அளவிடுதல் என்பதன் அடிப்படையில்தான் பொருள்களின் அளவு கணக்கிடப் படுகிறது.
இவ்வாறான கணக்கிடுதலுக்கு நமது மரபில் ஏழு வகையான அளவுமுறைகள் இருந்திருக்கின்றன என்று தெரிய
வருகிறது. அவை எண்ணல், நிறுத்தல், முகத்தல், பெய்தல் நீட்டல், தெரித்தல், சார்த்தல் என
வகைப்படுகின்றன.
- எண்ணல்: பொருட்கள் ஒன்று.. இரண்டு... மூன்று... என்றவாறு எண்ணிக் கணக்கிடுதல் எண்ணல் அளவு ஆகும். எல்லா அளவு களுக்கும் இது அடிப்படை அளவு ஆகும்.
- நிறுத்தல்: பொருட்களை நிறுத்து அதன் எடையை அறிவது நிறுத்தல் அளவு ஆகும். பொன், வெள்ளி போன்றனவற்றை நிறுக்கச் சிற்றளவுகளும் வணிகப் பொருட்களை அளக்கப் பேரளவுகளும் இருந்தன. துலாக் கோல் துணைகொண்டு பொருட்கள் நிறுக்கப் படுகின்றன.
- முகத்தல்: நெய், பால் போன்ற நீர்மப் பொருள்களை முகந்து அளப்பது முகத்தல் அளவு ஆகும். நீர்மப் பொருள்களைக் கூம்பக் கூம்ப அளக்க இயலாது. படி, வள்ளம் போன்ற அளவுகலன்களின் மேற்பகுதி சமமாக இருக்கும்படிதான் அளக்க முடியும்.
- பெய்தல்: தானியம் போன்ற கூல வகைகளை அளவுகலன் களில் தானியங்களைப் பெய்து அதன் வாய்மீது கூம்பக் கூம்ப அளப்பது பெய்தல் அளவாகும்.
- நீட்டல்: எண்ணல் அளவுக்கு அடுத்தப்படியாகக் கருதத்தக்கது. இரண்டு புள்ளிகளின் இடையிலுள்ள தூரம் நீளம் ஆகும். இந்தத் தூரத்தை அளப்பதே நீட்டல் அளவாகும். வேட்டி, புடவை போன்ற அறுவைப் பொருள்களும், நிலங்களும், சாலைகளும் நீளத்தால் அளக்கப்படுகின்றன.
- தெறித்தல்: காலத்தை அளப்பது தெறித்தல் அளவாகும். ஆண்டு திங்கள், நாள், நேரம் அனைத்தும் இதில் அடங்கும்.
- சார்த்தல்: சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி ‘இப்படி’, ‘அதைப்போல’ என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவாகும்.
மேலே கண்ட அளவுமுறையில்
குறிக்கப்படுகிற நிறுத்தல் அளவு துலாக்கோல் என்கிற சாதனத்தின் துணைகொண்டு பொருள்கள் நிறுக்கப்படுகின்றன. இந்த நிறுத்தல் என்பதன்
தொமையை ‘துலாக் கோலியல்பே தூக்குங் கோலை.....’ என்கிற தொல்காப்பிய வரிகள் நமக்குப்
புரிய வைக்கின்றன. அது போலவே திருவள்ளுவரும் “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி” என்பதாகத் திருக்குறளில் துலாக்கோல் பற்றிப் பேசுகிறார். இந்தத் துலாக்கோலைப்
பயன்படுத்துவது போன்ற சிற்பங்களை நமது கோயில்களில் நம்மால் இன்றும் காண முடிகிறது என்பதும் துலாக்கோலின் (ஒற்றைத் தட்டு தராசு)
பயன்பாடு நீண்ட நெடுங்காலமாக நமது பண்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என்பதற்கான
கூடுதல் சான்றாக இருக்கிறது.
இந்தத் துலாக்கோல் என்பது இன்றைய நாளில் தராசு என்று
குறிப்பிடப்படுகிறது. தராசு என்கிற துலாக்கோல் பற்றிக் கொஞ்சம் விரிவாகப்
பார்ப்போம்.
பொதுவாகத் தராசு என்பது இரண்டு தட்டுகள் கொண்ட ஒன்றாகவே, நம்மால் புரியப்பட்டு வருகிறது. ஆனாலும் ஒரு தட்டு
கொண்ட துலாக்கோல் என்கிற தராசும் நம் ஊர்களில் காலம் காலமாய்ப் பண்டங்கள் நிறுக்க நம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிற ஒன்று. இதை நம்
ஊரில் 'வெள்ளிகாவரை' என்று சொல்வார்கள்.
சில இடங்களில தூக்கு, தூக்குகோல் என்றும்
சொல்லப்படுகிறது. 'வெள்ளைக்கோல்வரை'
என்கிற சுத்தமான, அழகான தமிழ் சொல்தான் நம் வாய்களுக்குள்
நுழைந்து சிதைந்து வெள்ளிகாவரைன்னு ஆகிப் போய்விட்டது. அந்தக் கோலில் வெள்ளை நிறத்தில்
சில கோடுகள் வரைந்திருப்பார்கள். அதனாலதான் இந்தப் பெயர். அந்தக் கோடுகள் தான் எடைகளுக்கான குறியீடுகள்.
பொதுவாக தராசு என்றால் எடைக்கல் வைப்பதற்கு ஒரு தட்டு என்றும், எடை போட வேண்டிய பொருளை வைப்பதற்கு மற்றொன்றும் என்பதாக இரண்டு தட்டுகள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த வெள்ளிக்காவரை என்கிற தூக்குகோலில் ஒரு தட்டுதான் உண்டு. அந்தக் கோலில் வரைந்திருக்கிற கோடுகள்தான் எடை அளவு. ஒவ்வொரு கோடும் ஒவ்வொரு எடையைக் குறிக்கும்
குறியீடு ஆகும். அங்கும்
இங்கும் நகர்த்துகிற மாதிரி அந்தக் கோலில் ஒரு சின்ன நூல் கயிறு
கட்டியிருப்பார்கள். தேவையான எடைக்குண்டான கோட்டுக்குக் கயிற்றை நகர்த்திப் பிறகு அந்தக் கோட்டிலேயே
கயிற்றை இறுக்கி எடை போட வேண்டியபொருளைக் கோலில் உள்ள ஒற்றைத் தட்டில் வைத்துக் கோலைத் தூக்கி எடை போடுவார்கள்.
எடை போடும் போது
துலாக்கோலின் கோல், படுக்கை வசத்தில் நேராய் இருந்தால் சரியான எடை
காட்டுகிறது என்று அர்த்தம். மேலாகத் தூக்கிக்கொண்டு இருந்தால் நிறுக்கப்படுகிற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கு அதிகமாய் துலாத் தட்டில் இருக்கிறது என்று அர்த்தம். கோல் கீழாகத் தாழ்ந்தால் நிறுக்கப் படுகிற பொருள் நிறுக்க வேண்டிய அளவுக்கும் குறைவாக இருக்கிறது என்று பொருள். இப்போது
புழக்கத்தில் இருக்கிற இரட்டைத் தட்டு தராசை விட இந்த ஒற்றைத் தட்டு
தராசுக்குச் சில விசேஷத் தன்மைகள் உண்டு. இதில் பண்டங்களை நிறுக்கத் தனியாக எடைக்கல் என்று ஒன்று தேவையில்லை.
இரட்டைத்தட்டுத்
தராசில் ஒரு கிலோ எடைக்கு ஒரு பொருளை நிறுக்க வேண்டும் என்றால் எடைக்கல் ஒரு கிலோ , எடை போட வேண்டிய பொருள்
ஒரு கிலோ என்று இரண்டு கிலோ எடையைத் தூக்குவதற்கான சக்தியை நம் உடல் செலவழிக்க
வேண்டும். ஆனால் ஒற்றைத் தட்டு தராசில் இந்த பிரச்சனை இல்லை. ஒரு கிலோ பொருளை நிறுக்க ஒரு கிலோவைத் தூக்குவதற்கு
வேண்டிய சக்தியைச் செலவழித்தால் போதும்.
இன்று தொடர்வண்டி நிலையங்கள், லாரி ஆபீஸ் போன்ற இடங்களில் பண்டங்கள்
நிறுக்கப் பயன்படுத்தப்படுகிற ‘பிளாட்பாரம்
பேலன்ஸ்’ களுக்கு ஆதிமூலமாய் இருப்பது நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வருகிற
ஒற்றைத் தட்டு தராசுதான். நாம்
மேம்படுத்தியிருக்க வேண்டிய நம் தாத்தாக்களின் தொழில் நுட்பங்களை எல்லாம்
வெளிநாட்டுக்காரன் மேம்படுத்திக் கொண்டு இருக்கிறான். நாம்
வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். என்னகொடுமை இது?....
திருவள்ளுவர்
சொன்ன “சமன் செய்து சீர்தூக்கும் கோல்"இந்த ஒற்றைத் தட்டு தராசுதான்.. இந்த சமன் செய்து
சீர்தூக்கும் கோல் என்பது வேறு ஒன்றை நினைவு படுத்துகிறது. தமிழ் மாதம் ஐப்பசிக்குத்
துலாம் மாசம் என்ற பெயர் உண்டு.. சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் மாதம் இது
என்பதால்தான் இந்தப் பெயர். சூரியன்
துலாம் ராசியில் நுழைகிற நாள் அன்றைக்குப் பூமியில் பகலும் இரவும் சம நீளத்தில் இருக்கும். அதாவது பகல் 12 மணி நேரம் இரவு 12 மணி நேரம்.
என்பதாக. மற்ற
நாள்களில் எல்லாம் பகலுக்கும் இரவுக்கும் நீளத்தில் கொஞ்சம் கூடுதல் குறைவு
வித்தியாசம் இருக்கும். எனவே சமமான நீளம் கொண்ட பகல் இரவை கொண்ட நாள் இருக்கிற
மாதத்திற்கும் ராசிக்கும் துலாம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் நம்
முன்னோர்கள்.
இன்னும் ஒரு
கூடுதல் செய்தி வானத்தில் துலாம் நட்சத்திரம் நமது ஒற்றைத் தட்டு தராசு அதாவது
துலாக்கோல் வடிவத்தில்தான் இருக்கும். இப்படி வானியல், கணக்கு, கணக்கீடு, சமானம் என்று நம் முன்னோர்களின் பன்முக அறிவு செழிப்பை நினைத்துப்
பார்க்கையில் நம்மால் இன்று வியந்து ஆச்சரியப்பட மட்டுமேதான் முடிகிறது. நம் முன்னோர்களின் அறிவுத் தொடர்ச்சியின் கண்ணி நம்மை விட்டு எப்போது,
எங்கே அறுந்து போனது என்கிற கேள்விக்கான பதிலை நம்மால் கண்டடைய
முடியாத நிலை இன்று இருப்பதுதான் நிஜம்.
அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த
சில நிறுத்தல் அளவைகள்:
பொன் முதலியவை நிறுக்கும் அளவு
4 நெல்லெடை = 1 குன்றிமணி
2 குன்றிமணி = 1 மஞ்சாடி
2 மஞ்சாடி = 1 பணவெடை
5 பணவெடை = 1 கழஞ்சு
8 பணவெடை = 1 வராகனெடை
4 கழஞ்சு = 1 கஃசு
4 கஃசு = 1 பலம்
பல்வகைப் பண்டங்கள் நிறுக்கும் அளவு
32 குன்றிமணி = 1 வராகனெடை
10 வராகனெடை = 1 பலம்
40 பலம் = 1 வீசை
100 பலம் = 1 கா
6 வீசை = 1 துலாம்
8 வீசை = 1 மணங்கு
20 மணங்கு = 1 பாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக