புதன், 27 நவம்பர், 2013

சமூக மிருகம் சந்ரு



கட்டுரை ஆசிரியர்: நரேந்திரன்,ஓவியர், சென்னை.

அம்மாவின் முதுகில் குமைந்துகொண்டிருக்கும் தேள்குட்டிகள் தத்தமது கதையைக் கொட்டியவை இவைகள். இ(எ)ப்படியெல்லாம் சந்ரு சொன்னார்......
      எனது தாத்தாக்களில் ஒருவர் பில்லிசூனியக்காரராக இருந்தார். ஒருவர் வியாபாரியாக இருந்தார்.... ஒருவர் விவசாயியாக இருந்தார்.... ஒருவர் திருடனாக இருந்தார்.... நான் யாராக இருக்கப்போகிறேன்?
      கருணையினால் உன்னால் மட்டுமே செய்ய வேண்டிய காரியங்கள் அனேகம் உள்ளது...பூவை வரைந்தவன் பூவாகவே இருக்கிறான்’. சித்தன்னவாசல் ஓவியம் பற்றி சொன்னது... மரங்களெல்லாம் கனிகளாய் காணும் நிறைவு.....
       முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டதும், அதை அடைந்ததும், மற்றவர்களோடு பகிர்ந்து உண்டதும்... தன்னை நேசிக்காமல் அரூபமாய் இருக்கிற பிதாவை நேசிப்பவன் பொய்யன் - சொன்னான் ஒருவன்... மறுதலித்தான் இன்னொருவன்...  எந்தப் பூ உன்னை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது?
சந்ருவுக்கு வரைய சொல்லிக்கொடுத்தவை:- 
           கல்ரேகை, படமெடுத்து ஆடும் ஒரு சர்ப்பம், மலர்ந்திடும் ஒரு பூ, பறவையின் வாழ்வைச் சிறகில் எழுதிய பிரமிள், எழுதுங்கள்! பேனா முனையின்  உரசலாவது கேட்கட்டும் என்ற ஆத்மாநாமின் ஓலம், மாக்சிம் கார்க்கியின் திருடன், பெரியார் உடைத்த பிள்ளையார், ஆயிரம் கால்கள் கொண்ட கிளி, உடுக்கை ஒலி, இடுக்கன் வருங்கால் நகுக, அவ்வை, சித்திரமும் கைப்பழக்கம், பில்லி சூனியக்காரன் தாண்டாதே இந்தப்பக்கம் எனப் போட்ட ஒரு கோடு, வைக்கோல் கன்றுக்குட்டி, சாராய பாட்டில்கள், மாமிசம் வெட்டுமிடத்தில் உள்ள மரபீடம், மந்தையிலிருந்து விலகி ஓடிக் கொண்டிருக்கும் ஆட்டுக்கூட்டம், காத்திருப்பது கல் எரிபவனுக்கு தவம், வேட்டை, மகிஷாசுரமர்த்தினி, மிதந்துகொண்டே எய்த அம்பில் மயங்கிவிழும் மான், டைனோசார் முட்டை, வட்டப்பாதையில் மறைந்த நளகிரியானை, வாய்க்குள்  திணிக்கப்பட்ட வரலாற்றுப்புத்தகம், கயிற்றரவு, சிற்பத்தின் மார்பைத் தொட்ட னைத்து ஊறிய மணற்கேணி, அந்தரத்தில் பீய்ச்சி அடிக்கப்பட்ட பால் துளிகள், இருளும் நிழலுமாய் வெள்ளைக் காகித விளையாட்டு, பரம சாதுவான காலன், பன்றிக்கறி வேண்டி மடிப்பிச்சை ஏந்தும் கைகள், பொற்கொடியின் கடிதங்கள், அன்னை இட்ட தீ, அப்பா தலையில் போட்ட நெருப்பு, பிட்ச்சைப் பாத்திரம், மன்னனுக்கும்       நமக்குமாய்    ஒன்றாய்      விடிந்த     பொழுது,    தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் குறி (ஆண், பெண்), தானே அடித்துக் கொண்ட மொட்டை, கிடா வெட்டு, மாடு வெட்டு, மனுச வெட்டு, எப்பொழுதும் கட்டைவிரலில் அமர்ந்திருக்கும் ப்ளடி ஃபூல் பூச்சாண்டி, அம்மாவின் நிர்வாணம், பரிநிர்வாணம் (இந்த இடத்தில் நகுலனுக்கு நன்றி)




சந்ருவின் விரல் அமைப்பு
    கட்டைவிரல் பசியையும், பாதுகாப்பையும், ஆள்காட்டிவிரல் இருப்பையும், மரணத்தையும், பாம்பு விரல் தனிமனிதனையும், சமூ கத்தையும், மோதிரவிரல் ஊக்கத் தையும், உற்சாகத்தையும், சுண்டு விரல் உறவையும், பகையையும் சுட்டுவை. ஆக மொத்தம் சந்ருவின் ஓவியங்களுக்குப் பத்துவிரல்கள்.


ஏன் சந்ரு?
     ஸ்பெசலிஸ்டுகள் சூழ இருந்த காலத்தின் எதிர்-ஒலி சந்ரு. வினாயகர், எலி,பூனை, ஆடு, மாடு, கோழி, குதிரை, பன்றி......(சார் சொல்லும் சொரிநாய்) ஸ்பெசலிஸ்டுகள், வான்கா, செசான், டாலி, பால்க்ளி, பிக்காஸோ...  ஸ்பெசலிஸ்டுகள்  இவரது சகபயணிகள். ஆகவே அவரது பயணம் சுமூகமாக அமைய ஆடு, மாடு, கோழி வெட்டி பூஜை செய்ய வேண்டிய அவசியம் அவருக்கிருந்தது. ஸ்பெசலிஸ் டுகள் காலம் இன்றும் முடிவடையவில்லை.மாடு ஸ்பெசலிஸ்டுகள் காடு ஸ்பெசலிஸ் டுகளாகவும், ஆடு ஸ்பெசலிஸ்டுகள் அணில் ஸ்பெசலிஸ்டுகளாகவும் உருமாறி உலா வந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்க வளமுடன்......இச்சூழலில் குகைகளில் தன் வாழ்வின் நிழலைப் பதித்தவனையும், கோட்டிலிருந்து வளர்ந்து கல்லைக்  கடவுளின் எண்ணற்ற அவதாரங்களாகப் படைத்தவனையும், அனாதையான காலத்தில் பின் தொடர்ந்து, இந்த வெறிபிடித்த அழகிய உலகிலே எனது பாதை எதுவென மண்டை பிய்த்து, தனது அடையாளம் நோக்கி முன்னால் ஓடியவர்.
யார் சந்ரு?     
தான் உணர்ந்ததை வெளிப்படுத்த எந்தவித குறுக்கீடும் இல்லாத சுதந்திர வெளியை நோக்கிய பயணம் சந்ருவுடையது. ஆனால் சூழல் உருவாக்கும் கேள்விகளும் நெருக்கடிகளும் நமது கழுத்தை நெரித்து விழி பிதுங்கச்செய்பவை. சுலபமாய் தட்டி விடமுடியாத கனத்த தூசிகள் அவை. வேட்டையை விளையாட்டாக மாற்றிக் கொள்ள வேண்டிய  தருணம் இது. விளையாட்டின் நுட்பம் எதிராளியை வீழ்த்துவது அல்ல. நான் இப்படி செய்துகாட்டுகிறேன் பார்! என்ற குழந்தையின் குதூகலம். முதல் சீட்டில் ராஜா, மூன்றாவது சீட்டில் வெட்டுக்கத்தி, ஐந்தாவது சீட்டில் வாழைப்பழம், ஏழாவது சீட்டில் மூளை.  .....வை ராஜா வை..........
     தனது தனிமனித அகவியலிலிருந்து மரபு, நவீனம் எனும் பெரும் வேலிகளை அசைத்துப் பார்த்தவை இவரது படைப்புகள் எனச் சொல்லலாம். மாட்டின் எடையை விட உண்டதும், பேண்டதும் அதிகம் என உணர்ந்தது எவரோ (கீழ்வாலை குகை ஓவியம்) -அவரேதான் காமதேனுவைச் சாணிபோட வைத்தது (சந்ருவின் காமதேனு ஓவியம்).
   சந்ருவைப் பற்றி ஆயிரம் பக்கம் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கை சில நூறு வார்த்தைகளில் அழுந்திக்கிடக்கிறது. அவருடனான எனது உறவின் மனவெழுச் சியில் சற்றே நிதானம் குலைந்த பதிவுகள் இவை. ஒரு ஓவியரைப்பற்றி அதே பயிற்சியில் உள்ள மற்றொருவரின் பதிவு மிகவும் தேவையான  இந்தக் காலகட்டத்தில் இன்னும் நிதானமாக ஒன்று எழுத வேண்டும். சந்தானராஜைப் பற்றி எபினேசர் எழுதியதைப் போல. சந்தனராஜைப்பற்றி வெறும் வார்த்தைகளால் ஆன புருடாக்களுக்கு மத்தியில் ஓர் ஓவியரை எப்படிப் படிக்க வேண்டும் என்பதற்கான அற்புதமான பதிவு.
      சமூகமிருகம் சந்ரு எழுதியாயிற்று. சமூகம்-சந்ரு, மிருகம்-சந்ரு, சந்ரு-என மூன்று பதிவுகளை எழுதிவிட்டால் கதையை முடித்துவிடலாம்தான்.
           ஒரு கல் தோசை, ஒரு தலகரி, ஒரு ரத்தம், ஒரு சந்ரு சா...ர்... பா..............ர்சல்.
           தற்பொழுது இடைவேளை... மங்களம்....சுபமங்களம்...சுபோஜெயம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக