-ஜே.ஜெகத்ரட்சகன்
சம்பந்தம் ஆசாரிதான் ஊரிலே வயசானவர். அவர் செத்து மூனு வருஷமாச்சு. இப்ப இருக்கிறதில பொன்னுசாமி அண்ணன்தான் பெரியவர். எண்பத்து அஞ்சு வயசாவுது. அவருக்கடுத்து நான். தாத்தாவுக்கு எப்பவுமே தன்னுடைய டிரவுசர் பிராயத்தைப் பேசுவதில்
ரொம்ப அலாதி. குறிப்பா அஞ்சாவது முடிச்சிட்டு, போர்டிங்ல சேர்ந்து கார்பென்டிங் தொழிலை கத்துக்கொண்டதை அடிக்கடி
பேசுவார். அந்த போர்டிங்கை வெள்ளைக்காரங்க நடத்தினதாகவும்
அவர்கள் பழகும் விதம் அருமையா இருந்ததுனு சொல்லுவார். ஒரு முறை தாத்தாவுக்கு கையில் முழுக்க சிரங்கு வந்ததாகவும், அச்சிரங்கை வெள்ளைக்காரப் பெண்மணி கொஞ்சமும் கூச்சப்படாம
சிரங்குகளைக் கழுவி சுத்தம் செஞ்சி மருந்து போட்டதை ஜூவுக்கு போயிட்டு வந்த பையன் மாதிரி
சுவாரஸ்யமா சொல்லுவாரு.
தாத்தா ரொம்பவும் சிலாகித்துப் பேசுகிற உயர்ந்த
மனிதர், அவுங்க அப்பாதான். அவரு பேரு ராகலான். சமயோஜித புத்தியி அவர மாதிரி யாருமே இருக்க முடியாதுன்னுவாரு. மாடு பிடிக்கறதுல கைதேர்ந்தவருன்னும், அவர் மாடு பிடிச்சிக் கொடுத்தா நல்லா உழைக் கும்னும் ஊரே
நம்புச்சாம். ஊர்ல யாரு மாடு பிடிக்கனும்னாலும் ராகலான கூப்புடுன்னு
சொல்வாங்களாம். கேட்டுக்குணு இருந்த நா, அதெப்படி தாத்தா உங்க அப்பா நல்ல மாட்ட கண்டுபிடிப்பாருன்னு
கேட்டேன். தாத்தாவுக்கு அவுங்க அப்பா நல்ல மாடு எது என்பதை விட, எது குறை இருக்குறது இல்லன்றத, சுலபமா கண்ணுபிடிச்சிடலாம்னு சொன்ன காரணங்களையெல்லாம் ஒன்னுவொன்னா
சொன்னாரு. முதலாவது மாட்டோட பல்லு சரியா இருக்குதான்னுப்
பாக்கணுமாம். மாடுங்களுக்குக் கீழ் தாடையில, மட்டுந்தான் பல்லு இருக்கும்னு புது தகவல அன்னைக்குச் சொன்னாரு. மாட்டுக்குக் ‘கொக்கிப்பல்லு’ன்னு ஒரு குறைபாடு
இருக்கும்மாம். அப்படியிருந்தா அந்த மாட்டால பில்லு, வெக்க எதுவுமே சரியா சாப்பிட முடியாம மெலிஞ்சிடுமாம். அதனால கொக்கிப்பல்லு இருக்குற மாட்ட புடிக்கக்கூடாதாம். அதேமேரி ‘ஆறுக் கட்டுப்
பல்லு’ இருக்குற மாட்டயும் பிடிக்கக்கூடாதாம். ஏன்னா, மாட்டுக்கு எட்டுப்
பல்லு இருக்கணும் அதான் சரின்னார். அதேமேரி ‘கொள்ளிக் கொம்பு’ இருக்குற மாட்டயும் ‘குடைமேல்குடை’ இருக்குற மாட்டயும் புடிக்கக்கூடாதாம். கொள்ளிக்கொம்புன்னா, கொம்பு மேல வெள்ளையா இருக்குறது. குடைமேல்குடைன்னா, நெத்தியில ரெண்டு சுழி இருக்குற மாடுன்னாரு. அவர் யோசிச்சி ஒன்னொன்னா சொல்லிக்கினு இருக்கும்போது நீங்க
சொல்லறது எருது மாட்டுக்கு மட்டுந்தானா, எரும, பசு இதுக்கும் பொருந்துமான்னுக் கேட்டேன். உடனே அவரு, நோ... நோ... இது எருது மாட்டுக்கு மட்டுந்தான்னாரு. தாத்தா எப்பப் பேசினாலும், No…No…, Sharp, Quick, Oh.. Yes! இதுமாதிரியான இங்கிலீஷ் வார்த்தைகளச் சொல்லி தன்னோட
ஆங்கில அறிவுக்கு டார்ச் அடிப்பாரு. தொடர்ந்து ‘பாடை சுழி’, ‘பூராண் சுழி’, ‘டமார சுழி’ன்னு சொல்லிக்கினு போனாரு.
எக்காரணத்தக் கொண்டும் நாகபூஷணம் இருக்கிற மாட்ட
பிடிக்கவே கூடாதாம். அது குடும்பத்தக்கு
கொஞ்சமும் ஆகாதாம். மாட்டோட வாலத்
தூக்கினா பாம்பு மாதிரி இருக்குமாம். அதுதான் நாகபூஷணம்னார். ‘ஏறுவால்’ மாடும் ‘துண்டு எலும்பு’ மாடும் வேலைக்கு ஆகாதாம். ‘தொடைப் பிரட்டு’மாடு சேத்துல நடக்கவே நடக்காதாம். ‘சிட்டிகால்’மாடு பாரம் ஏத்துனா படுத்துக்குமாம். ‘கரிவாய் மாடு’ திடமா இருந்தாக்கூட ஒழுங்கா வேலை செய்யாத திருட்டு மாடா இருக்கும்னார். ‘வெட்டுக் கொம்பு’ சாதாரணமா சரியா நடக்காதாம். தரையில கால தேச்சி நடக்குமாம். அதனால சம்பாதிக்கறது எல்லாம் லாடம் கட்டவே சரியா இருக்குமாம். ‘பின்னெடுப்பு’ மாடும், ‘குறுங்கழுத்து’ மாடும் ஊனமுற்ற மாடுன்னு அவுங்க அப்பா அவருக்குச் சொன்னாறாம். ஒட்டு மொத்தமா மாடுங்கள மேற்கத்தியான் மாடு, தெற்கத்தியான் மாடு, வடக்கத்தியான் மாடுனு மூனு வகையாப் பிரிக்கலாம்னும், மேற்கத்தியான் மாடு காலு, உடம்பு, கொம்பு எல்லாம்
நீளமா இருக்கும்னும் அது சீக்கிரமா களச்சுப் போயிடும்னு சொன்னாரு. அதனால அடிக்கடி மாட்ட மாத்த வேண்டி வருமாம். தெற்கத்தியான் மாடு உடம்பு, அமைப்பு ரொம்ப அருமையா இருக்கும். ஆனா குறையே இருக்காதுனு சொல்ல முடியாது. ஆனா நல்லா உழைக்குமாம். அதே மாதிரி வடக்கத்தியான் மாடும் நல்லா உழைக்குமாம். ஆனா தெற்கத்தியான விட நல்லா புஷ்டியா இருக்குமாம். யாருக்கும் அடங்காம, எல்லாரையும் இடிக்கற மாட்ட அறுத்து பார்த்தா வயித்துல ‘கோஜயம்’னு ஒன்னு இருக்குமாம். இருக்குற மாட்டுலயே வித்தியாசமான மாடு ‘காளிமாடு’ தானாம். காளிமாடு நாய் கடிக்கறதவிட ரொம்ப மோசமா கடிக்குமாம். இது மாதிரி இருக்கிற மாட்ட எங்கப்பா யாருக்கும்மே புடிச்சிக்
குடுக்க மாட்டாரு. அதனாலதான் மாடுபுடிக்க
எல்லாரும் அவரை கூப்பிடுவாங்கன்னார். தூக்கம் வருதுப்பா, ராத்திரிகூட சரியா
தூங்கல, நாளைக்கு வா மாட்டப் பத்தி இன்னும் நிறைய சொல்றன்னு
தூங்குறதுக்கு தயாராயிட்டார்.ஆமா... தாத்தா செத்து ஆறு மாசத்துக்கு மேல ஆகுது. செந்தலைக் குருவிக்காக எழுதலாம்னு நெனச்சப்போ ராத்திரி இதான்
என் நெனப்புக்கு வந்துது...
***
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக