புதன், 27 நவம்பர், 2013

இருட்டின் குழந்தை



சிறுகதை:  
மார்க்கண்டன் சுரேஷ், தோட்டயம்பட்டி, நாமக்கல்.

நீண்ட நேரமாகத் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவனைக் கவனித்த சங்கப்பிள்ளை என்னா வேணும்என்று கேட்டதும் அவன் அழுத்தமாய் இரத்தம்என்றான்.  பதிலுக்குச் சங்கப்பிள்ளையும் அவனை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுத் தர்றேன் என்பதாய்த் தலையாட்டினார்.
இங்க ஒரு ஒன்ர கிலோ! சொல்லி அர மணி நேரமாச்சிசலிப்போடு சொன்னது ஒரு குரல்.
தலக்கறி ஒரு முக்கா கிலோ போடுப்பாஎன்றது இன்னொரு குரல்.  மிதிவண்டியில் வந்த ஒருவர் வண்டியிலிருந்து இறங்காமல் காலூன்றி நின்று கொண்டே,
ஈரல் இருக்கா...?’
ஈரல் ஆயிப்போச்சி, கொடலு வேணும்னா இருக்கு
சொல்லிக்கொண்டே பிறை போல் உள்நோக்கி வளைந்திருந்த கத்தியால் கடகடவென மாட்டின் நெஞ்செலும்புகளைத் துண்டாக்கிக் கொண்டிருந்தார். மனைவி, கறியை நிறுத்துப் போடுவதும் காசு வாங்குவதாகவும் இருந்தாள். 
கடையில் கூட்டம் அலை மோதியது.  சங்கப்பிள்ளை எப்பொழுதும் இளம் கன்றுகளைத்தான் கறி போடுவார்.  அதனாலேயே கடையில் கூட்டமாக இருக்கும்.  இன்று ஞாயிற்றுக்கிழமைவேறு சொல்லவே வேண்டாம்.
நல்ல கொழுத்த கன்றாய் இருக்கக்கூடும்.  இரத்தம் காயாமல் தொங்கிக் கொண்டிருந்த இரண்டு சப்பைகளும் பருத்துப் பெரியதாய் இருந்தன.  மணிமாறனும் கால்மணி நேரமாய் காகிலோ காகிலோ என சொல்லிக் கொண்டிருந்தான்.  இப்பொழுதுதான் கறிக்கடைக்காரனுக்குக் கேட்டிருக்கும் போல;
ஏண்டா... செல்லம்மா மவனே காகிலோ போதுமாடா...
போதும்.  எனக்கும் எங்க அக்காவுக்கும் மட்டுந்தான்.  எங்கம்மா கறியெல்லாம் திங்காதுவெள்ளந்தியாய்ச் சொன்னான்.
அரைக்கிலோ ஒரு கிலோ என்னும் சலசலப்புகளுக்கு ஈடாகக் கறியை வெட்டிக்கொண்டே,
ஏண்டா... ஒங்கம்மா சாராயமெல்லாம் குடிக்கிது. கறி மட்டும் திங்காதாக்கும்; ஆமா... சாராயத்துக்கு என்னத்தத் தொட்டுக்கும்மா...?’ சங்கப்பிள்ளை சிரித்துக்கொண்டே கேட்டான்.
கறிவாங்க நின்றுகொண்டிருந்தவர்களும் கலுக்கென சிரித்துவிட்டார்கள்.  அவர்களின் சிரிப்பு மணிமாறனை காயப்படுத்தியது.  முகம் சுருங்கிச் சிறுத்தது. 
கறியை வாங்கிக்கொண்டு இறுகிய முகத்துடன் வீட்டை நோக்கி விருவிருவென நடந்தான்.

செல்லம்மா சேலையை முழங்கால் வரைக்கும் சுருட்டிக் கால்களை அகற்றி நீட்டிக்கொண்டு, கூரையை ஒட்டியிருந்த அம்மியில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தாள்.  விறகுக் கட்டைகளைப் போலவே அவளது கால்கள் கறுத்துக் கிடந்தன.  வேகமாக வந்த மணிமாறன் விருட்டென வீட்டுக்குள் நுழைந்தான். நுழைந்த வேகத்தில் மூங்கில் குச்சியில் இடித்துக்கொண்டவன் அம்மா...என்று சத்தமிட்டவாறே தலையைத் தேய்த்துக் கொண்டான்.  மணிமாறனின் சத்தம் கேட்டுத் திரும்பிய செல்லம்மா,
பாத்து மெல்ல போமாட்ட.., வாசப்படியில குனிஞ்சி போன்னு எத்தன தடவ சொன்னாலும் ஒனக்கு ஏறாது.  பொடச்சிக்கப் போவுது தலைய தேச்சிவுடு.மணிமாறன் அம்மா சொன்னதைக் கேட்டும் கேட்காதவனாகத் தலையைத் தேய்த்துக் கொண்டே வீட்டினுள் கறியை வைத்தான்.  ஏற்கெனவே அவன் முகம் வாடியிருந்ததைக் கவனித்திருந்த செல்லம்மா, ‘மணி... மணி...என இரண்டு முறை கூப்பிட்டதும் எட்டிப்பார்த்தான்.  மணிமாறனைப் பார்த்தவள்,
யாண்டா... உம்முன்னு இருக்க! யாங் என்னாச்சி...?’
குழவிக்கல்லைத் தூக்கி நிறுத்தி, அதில் ஒட்டியிருந்த மிளகாய் சாந்தை வழித்துக்கொண்டே கேட்டாள்.  மணிமாறன் அம்மாவின் முகத்தைப் பார்க்காமலே, ‘ஒண்ணுமில்லகோபமாய் சொல்லிவிட்டு நண்பர்களிடம் சென்று விட்டான்.  அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த செல்லம்மா உள்நோக்கி குரல் எழுப்பி,
பாப்பா... இந்தா இத உள்ள வச்சிட்டு அரிசி அரிக்கிற குண்டான்ல கொஞ்சம் தண்ணியும், அந்தக் கறியையும் எடுத்துக்கிட்டு வா...இளவரசியிடம் சொல்லிவிட்டுச் சுவரில் சாய்ந்து கொண்டாள்.
கருப்பான அவளின் தேகம் இளைத்துச் சூம்பியது போலிருந்தது.  அவளது முகம் சுருங்கி கன்னங்கள் ஒட்டியிருந்தன.  கண்கள் உள்வாங்கி விழிகள் முட்டை முட்டையாய் இருந்தன.  மஞ்சள் காமாலை போல் அழுக்கு நிறத்தில் விழிகள் தெளிவில்லாமல் இருந்தது.  உடல் சோர்வுற்றவளாய் ஏதோ நோயில் பாதிக்கப் பட்டவள் போல் காணப்பட்டாள். இளவரசி கறியையும் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணியையும் கொண்டுவந்து வைத்தாள்.  செல்லம்மா கறியை அலசுவதற்காகத் தண்ணீரில் கொட்டியதும் கறியிலிருந்து பிரிந்த இரத்தம் புள்ளிப் புள்ளியாய் தண்ணீர் முழுக்கப் பரவிப்படர்ந்தது.  செல்லம்மா கறியை அலச ஆரம்பித்ததும் அந்தத் தண்ணீர் முழுக்கச் செங்கருப்பு இரத்தக் குழம்பாய் மாறிக்கொண்டிருந்தது.  கறியை அலச அலச அவளைச் சுற்றி இரத்தமும் சதைகளுமாய் குவிந்து கொண்டிருந்தன.  குருதிப் பிரவாகம் பேரிரைச்சலோடு அவளைத் துரத்தியது.  பின்தொடரும் குருதி பிரவாகத்திலிருந்து தப்பிக்க நினைத் தவளாய் இரத்தச் சகதியில் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தாள்.  தசைகளிலிருந்து எழுந்த துர்நாற்றம் அவளை இழுத்து ஒரு சூனியத்துக்குள் மூழ்கடித்தது.
அம்மா! இளவரசி செல்லம்மாவின் தோளைத் தொட்டு அழைத்ததும், சூன்யத்திலிருந்து விடுபட்டவளாய் திடுக்கென செல்லம்மா சுயநினைவுக்கு வந்தாள்.  என்னாம்மாஇளவரசி கேட்டதும் செல்லம்மா இயல்புக்குத் திரும்பியவளாய்,
ஒண்ணுமில்ல அடுப்ப பத்தவச்சி அந்தக் குண்டான அடுப்புல வையி
சொல்லிவிட்டுக் கறியை அலசி ஒரு பாத்திரத்தில் வைத்தவள், அலசிய தண்ணீரை எட்டி எற்றினாள்.  அது இளஞ்சிவப்பாய் படர்ந்து விழுந்தது.
நண்பர்களோடு விளையாடிவிட்டு மணிமாறன் வீட்டுக்கு வரும்பொழுது மணி இரண்டு.  நீ சோறு போட்டுத் தின்னு பாப்பாஎன்று செல்லம்மா சொல்லியும் தம்பி வரட்டுமெனக் காத்திருந்தவள் மணிமாறன் வந்ததும் தனக்கும் தம்பிக்கும் சோறுபோட்டுக் கறிக்குழம்பை ஊற்றிக்கொண்டு, அம்மாவுக்குச் சோறு போட்டு பச்சைப்புளி ரசத்தை ஊற்றினாள்.  மணிமாறன் கறியை மென்றுகொண்டே ரசத்தில் பிசைந்து கொண்டிருக்கும் அம்மாவைப் பார்த்தான்.
ஏண்டா... ஒங்கம்மா சாராயமெல்லாம் குடிக்கிது கறிமட்டும் திங்காதாக்கும்.  ஆமா... சாராயத்தக்கு என்னத்தத் தொட்டுக்கும்மா?’ கறிக்கடைக்காரன் கேட்டது அவனுக்கு ஞாபகம் வந்தது.  அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சோத்து நேரத்துக்குச் சோறு திங்கக்கூட நெனப்பு வரல அய்யாவுக்கு, இவ்வளவு நேரம் கொலவாரிங்ககூட குதிச்சிப்புட்டு வர்றவென்
செல்லம்மா மணிமாறனைத் திட்டினாள்.  அம்மாவிடம் கேட்டுவிடலாம் என்று நினைத்திருந்தவன், அம்மா திட்டியதும் கேக்காமலே எழுந்தான்.  ஆனாலும் அவன் மனம் சமாதானம் அடையவில்லை.  தேள் கடித்தவனுக்கு அடுத்த நாள் தேள் கடித்த நேரம் வரும்வரை வலித்துக் கொண்டிருப்பதைப் போல கறிக்கடைக்காரன் சொன்னது அவன் மனதை உறுத்திக்கொண்டேயிருந்தது.
இரவு மணி எட்டு இருக்கும்.  ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் இளவரசி நாளை வகுப்பில் எழுதிக்காட்ட வேண்டிய பிரபஞ்சன் எழுதிய பாதுகை எனும் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள்.  மணிமாறன் கணக்கு நோட்டை விரித்து வைத்துக் கொண்டு எழுதாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தான்.  செல்லம்மா அவர்களைச் சோறு சாப்பிட்டுவிட்டுப் படிக்கச் சொன்னதும் சாப்பிட அமர்ந்தவன் நிமிர்ந்து பார்க்காமல் சோற்றைப் பிசைந்து கொண்டேயிருந்தான்.  இளவரசி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.  நிமிர்ந்தவன் ரசத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்த அம்மாவைப் பார்த்து,
அம்மா... நீ சாராயம் குடிப்பியாம்மா?’ கேட்டே விட்டான்.
ஒரு நொடியே ஆனாலும் செல்லம்மா தடுமாறிப் போனாள்.  அவள் என்ன சொல்ல நினைத்தாளோ தெரியவில்லை.  ஆனால் அவள் முகம் வெட்கத்தையும் வேதனையையுமே பிரதிபலித்தது.  ஏற்கெனவே சுருங்கிக் கிடந்த அவளின் முகம் இன்னும் சிறுத்துப் போனது.  அதற்குள் இளவரசிக்குச் சிரிப்பு வர சிரித்துக்கொண்டே,
ஏய் முட்டாளு ஒனக்கென்ன பைத்தியமா... அம்மாவப் போயி இப்படி கேக்குற?’
நீ தாம்புள்ள முட்டாளு.  பின்ன யாங் கறிக்கடக்காரன் அப்பிடி கேட்டான்?’
இருவரும் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள்.  என்ன செய்வதென்று புரியாதவளாய் செல்லம்மா பாதி சோற்றோடு கையைக் கழுவிவிட்டு, மணிமாறன் கேட்டதற்கு ஒன்றுமே சொல்லாமல் படுக்கையை விரித்தவள்,
பாப்பா... தூங்கும் போது வௌக்க அவிச்சிட்டு படுஇளவரசியிடம் சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டாள்.
நடுசாமம் மணி இரண்டிருக்கும் வீடு கருங்கும்மென இருட்டில் மூழ்கிக் கிடந்தது.  எலிகள் நடமாடும் அறவம்கூட இல்லாமலிருந்த ஆழ்ந்த அமைதி அந்த இரவை அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தது.  சற்று நேரத்தில் யாரோ முணுமுணுப் பதைப் போலக் கேட்டது.  அந்த முணுமுணுப்பின் சத்தம் கொஞ்ச கொஞ்சமாய் உயர்ந்துகொண்டே வந்தது.
அந்தப் பையனுக்கு கையில்ல ஒங் கைய்ய குடுறா...
மணி... அந்தப் பையனுக்குக் கையில்ல ஒங்கைய்ய குடுறா...
செல்லம்மாதான் தூக்கத்தில் பிதற்றிக் கொண்டிருந்தாள்.  அவள் கையைக் கத்தியாய் பாவித்து அருகில் படுத்திருந்த மணிமாறனின் தோளை அறுத்தாள்.  தூக்கத்தில் இருந்த மணிமாறன் லேசாய் கண்விழிக்க இருட்டில் எதுவும் தெரியவில்லை. செல்லம்மாவின் பிதற்றல் சப்தம் மட்டும் கேட்டது.
ஏங்கைய்ய குடுத்துர்றா... ஓங்கைய்ய குடுத்துர்றா...
பிதற்றிக்கொண்டே தனது கையை அறுப்பதை உணர்ந்த அந்த நொடியே பயத்தில் அலறிக் கத்தினான்.  அவனது அலறலில் மிரண்டு போன இளவரசியும் அதே நொடியில் அலறிவிட்டாள்.  ஒரு நொடிதான் இருவரின் குரலும் ஒன்றுசேர அந்தச் சத்தம் வினோதமாய் இப்படித்தான் என்று கூற முடியாத திடீர் விபத்தில் ஏற்படும் மரண ஓலம் போன்று மாறி இரவை அதிர வைத்தது.  திடுக்கென விழித்த செல்லம்மா, ‘மணி... பாப்பா...என இருவரையும் மாறிமாறிக் கூப்பிட்டவாறே விளக்கைப் பற்ற வைத்தாள்.  விளக்கின் வெளிச்சத்தில் ஆளுக்கொரு திசையில் நின்றுகொண்டிருந் தார்கள்.  மணிமாறன் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான்.  என்ன நடந்தது ஏது நடந்தது என்பதை அறியாமல் மணிமாறனின் அலறல் சத்தம் கேட்டுப் பயத்தில் அலறிய இளவரசி தூணின் அருகில் நின்றாள்.  குழப்பத்தில் அவளது விழிகள் தடுமாறின.  முகம் முழுக்கப் பயம்.  பயத்தில் அவளது உதடுகள் வாதம் வந்ததைப் போல் துடித்துக்கொண்டிருந்தது.  செல்லம்மாவும் எதுவும் புரியாதவளாய் படுக்கையின் அருகிலும் சுவரின் ஓரத்திலும் பார்த்தக்கொண்டே,
தம்பி ஏண்டா அழுவுற எதாச்சும் கடிச்சிருச்சா...
கனவு ஏதாச்சும் கண்டியா... ஏண்டா அழுவுற?’
கேட்டுக்கொண்டே மணிமாறனின் அருகில் சென்றாள்.  அவள் பக்கம் வரவர மணிமாறனுக்குப் பயம் அதிகமானது அவன் பயந்துகொண்டே பின்னோக்கி நடந்தான்.  செல்லம்மா இளவரசியின் கையைப் பிடித்துத் தேற்ற இளவரசி அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள்.
மணி ஏண்டா அழுவுற... பயப்படாத அம்மாக்கிட்ட வாடா...  செல்லம்மா மணிமாறனின் அருகில் செல்ல மணிமாறன் பயந்துகொண்டே,
வரமாட்டேங்... நீ ஏங்கைய்ய அறுக்குற நீ என்ன கொன்று கொன்றுவ வரமாட்டேங்... வரமாட்டேங்...அழுதுகொண்டே சொன்னான்.
செல்லம்மாவின் கண்கலங்கியது.  ஒரு நிமிடம் தன்னைப்பற்றி தனக்குள்ளாகவே யோசித்துக் கொண்டவள் எதையோ உறுதி செய்துகொண்ட வளாய் எழும் அழுகையை அடக்கிக்கொண்டு அம்மா போயி ஒண்ண கொல்லுவனா வாடா தம்பி...கெஞ்சியவாறே மணிமாறனைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.  அவனது உடல் முழுக்க வியர்வையால் நனைந்திருந்தது.  இருவரையும் சமாதானப் படுத்தித் தூங்க வைத்தவள் இன்னொரு தடவ இது மாதிரி நடந்தாலும் நடக்கலாம்.  இன்னியிலிருந்து புள்ளைகளோட ஒண்ணா படுக்கப்படாதுஎன்று யோசித்துக் கொண்டே படுத்திருந்தாள்.
மணிமாறனையும் இளவரசியையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வழக்கம்போல் கிளம்பி பெரியாஸ்பத்ரிக்குப் போனாள்.  மருத்துவமனை வளாகத்தின் ஒரு மூலையில் பாழடைந்த கட்டிடம் போலிருந்த அந்தத் தனிமையான இடத்துக்குச் சென்றவள் ஒரு சிறிய அறையின் கதவைத் திறந்து ஊள்ளே நுழைந்ததும் உள்ளிருந்த ஒருவன் செல்லம்மாவின் வரவை எதிர்பார்த்தவனாயிருந்தான்.  அறை வெளிச்சமற்று மங்கலாய் இருந்தது.  அறையின் இடதுபக்கம் ஜன்னல் ஒன்றும் இருந்தது, அது பக்கத்து அறையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிப்பதற்கானது போன்று இருந்தது.  ஜன்னலுக்கு நேர்கீழ் போடப்பட்டிருந்த மேஜையில் கொஞ்சம் காரச் சேவும் ஒரு புட்டியில் சாராயமும் இருந்தது.  செல்லம்மா அவனிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே ஒரு குவளையில் சாராயத்தை ஊற்றி கொஞ்சம் காரச்சேவை வாயில் போட்டவள் கடகடவெனக் குடித்தாள்.  மீண்டும் அரைக் குவளை எற்றிக் குடித்துவிட்டுப் பக்கத்திலுள்ள அறைக்குள் சென்றவள் மாலை மூன்று மணியிருக்கும் உடையைச் சரிசெய்தவாறே வெளியே வந்தாள்.  அவளது சேலையில் அங்கங்கே இரத்தம் திட்டுத்திட்டாய் ஒட்டியிருந்தது.  அந்த அறையிலிருந்தவன் வந்தவர்களிடம், அதாவது அவர்களின் பாஷையில் பார்ட்டியிடம் முன்னூறு ரூபாய் வாங்கிக்கொண்டு வழக்கம்போலச் செல்லம்மாவிற்கு அறுபது ரூபாயைக் கொடுத்து அவளைக் காட்டிவிட்டான்.
எப்பொழுதும் இப்படித்தான் ஒரு சில நாள்களில் நூறு நூற்றைம்பதும் சம்பாதித்திருக்கிறாள்.  அங்குச் செல்வது அவளுக்கு  அருவருப்பாகத்தான் இருக்கிறது.  இந்தத் தொழில் அவளுக்குப் பிடிக்கவில்லைதான்; என்ன செய்ய.. தனது இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைக்கும்பொழுது இது அவளுக்குப் பெரிதாய்ப் படவில்லை.  வீட்டுக்குச் சென்றவள் வாசலிலேயே குளித்துவிட்டுச் சேலைத் துணிகளை அலசிப் போட்டுவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.   தினமும் இப்படித்தான் எது எப்படியானாலும் சரி, மாலை வீட்டுக்குள் செல்லும்போது மட்டும் குளித்துவிட்டு சுத்தபத்தமாகத்தான்  நுழைவாள்.  செல்லம்மாவை யாரும் ஒரு நல்லது கெட்டது என எதற்கும் கூப்பிடுவதில்லை. அவள் புருசன் இல்லாத முண்டச்சி என்பதும் அவள் செய்யும் தொழிலும் அதற்குக் காரணமாய் இருந்தது.
உடல் அசதியோடு எழுந்த ஒரு காலையில் இளவரசியை மட்டும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு மணிமாறனைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள்.  வீதியிலிருந்த கிழவி ஒருத்தி மணிமாறனைப் பார்த்து, ‘ஏண்டா... பேராண்டி பள்ளிக்கோடத்துக்குப் போவுலியா?’ களிப்பாக்கைக் கடுக்கடுக்கென மென்று கொண்டே கேட்டாள்.
இல்ல நாங்... எங்க அம்மாக்கோட போறேன்சொல்லிக்கொண்டே செல்லம்மாவின் பின்னால் நடந்தான்.
இ...மா ங்கொம்மா செய்யிற தொழுலுக்கு நீயும் கூடப்போ வௌங்குவ...கெழவி தானாக முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
மணிமாறனை மருத்துவமனை வளாகத்தில் உள்ள அந்த அறைக்குக் கூட்டிச் சென்ற செல்லம்மா, வெளியே நிற்க வைத்துவிட்டு அவள் மட்டும் அந்தச் சிறிய அறைக்குள் சென்றாள். உள்ளே சென்ற அம்மா என்ன செய்கிறாள் என ஒருக்களித்து வைக்கப்பட்ட கதவு இடுக்கின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அம்மாவைப் பார்க்கப் பார்க்க அவனது முகம் வேர்த்தது. அவனுக்கு அன்று கறிக்கடைக்காரன் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது.  அம்மா வெளியே வருவது தெரிந்ததும் ஒன்றும் தெரியாதவன் போலத் தூரத்தில் போய் நின்று கொண்டான்.  வெளியே வந்தவள் மகனை அடுத்த அறைக்குக் கூட்டிச் சென்றாள்.  மணிமாறன் எதுவும் பேசாமல் அம்மாவை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே உள்ளே வந்தான்.  செல்லம்மா மணிமாறனை உள்ளே வா என்று சொல்லிக்கொண்டே ஒரு நீண்ட பெரிய மேஜையின் மேல் போர்த்தப்பட்டிருந்த அழுக்குத் துணியொன்றைச் சடக்கென நீக்கினாள்.  நீக்கியதும்...
அய்யோ... அம்மா...அலறி கத்திய மணிமாறன் அம்மாவை இறுக்கிப் பிடித்துக் கொண்டு,
அம்மா... அம்மா... வாமா வெளிய போயிரலாம்
வாமா வெளிய போயிரலாம்அழுதுகொண்டே வெளியே ஓடிவிட்டான்.
அத்தனைக் கொடூரமாய் இருந்தது.  கத்தியால் பல இடங்களில் வெட்டுப் பட்டு உடல் முகம் முழுவதும் சிதைந்து இரத்தம் கண்ணி உப்பிப்போய் பல்லை இளித்துக்கொண்டு கிடந்தது.  செல்லம்மா இதைத் திட்டமிட்டுச் செய்யவில்லை.  இது அவளின் வாழ்வோடு ஒன்றிப் போனதாகிவிட்டது.  அதனால்தான் இது மகனைப் பாதிக்கும்;  அவன் பயந்துவிடுவான் என்ற எண்ணம்கூட எதுவுமில்லாமல் பிணத்தின் மேல் போர்த்தப்பட்டிருந்த துணியை நீக்கிவிட்டாள், ஆனால் மணிமாறன் பயந்து அலறியதில் செல்லம்மாவும் கலங்கிவிட்டாள்.  பயத்தில் அழுதுகொண்டிருந்த மணிமாறனைச் சமாதானப்படுத்திச் சிறிய அறையில் அமரவைத்தாள்.  அந்தச் சிறிய அறையிலிருந்தவன் மணிமாறனைத் தட்டிக் கொடுத்து தைரியம் சொல்லியவாறே,
சின்னப்பயலப் போயி இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் கூட்டியாரலாமா, கொஞ்சமாவது ஓசன வேணாம்...
எல்லாம் ஓசனையோடத்தான் கூட்டியாந்தேன்... ஏதோ கூடமாட ஒத்தாசையா இருப்பான்னு பார்த்தேன்...
சொல்லிக்கொண்டே பிண அறுவை அறைக்குள் சென்றவள் இரண்டு கைகளிலும் உறைகளை மாட்டிக்கொண்டு கிடத்தப்பட்டிருந்த பிணத்தை அறுத்தாள்.  பக்கத்து அறையிலிருந்த மணிமாறன் பயத்திலிருந்து மீளாதவனாய் ஜன்னல் வழியாக அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.  செல்லம்மா போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டுக்குத் தேவையான சிறுநீரகம், கல்லீரல், மூளை போன்றவற்றை அறுத்து எடுத்துக்கொண்டிருந்தாள்.  மணிமாறன் கொஞ்சம் பயம் தெளிந்தவனாய் அதே சமயம் அருவருப்போடு அம்மா செய்வதையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.  செல்லம்மா அறுத்த இடங்களைத் தைத்து வெள்ளைத் துணியால் பிணத்தைச் சுற்றிக் கட்டும்பொழுது அவளால் முடியவில்லை.  களைத்துப் போனவள் சிறிது நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் கட்டினாள்.  முழுவதும் கட்டிமுடித்துவிட்டு களைப்புடன் வெளியே வந்தவள்,
பாடி ரெடியாயிருச்சி, எடுக்கறதுன்னா எடுத்துக்கலாம்
காவலரிடமும் உடன் நின்று கொண்டிருந்த பிணத்தின் சொந்தக்காரர்களிடமும் சொன்னதும் காவலர்கள் இருவர் ஏதோ சில தகவல்களை எழுதியதும் பிணம் சம்மந்தப்பட்டவர்கள் அதைப் பிணம் ஏற்றிக்கொண்டு போகும் அந்தக் கருப்பு வண்டிக்குத் தூக்கிக்கொண்டு போனார்கள்.  அய்யோ... அய்யய்யோ.. பாவிங்க ஒன்ன இப்பிடி பண்ணிப்புட்டாங்களே...வண்டியிலிருந்து சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த பெண்கள் கத்தி அழுது கொண்டிருந்தார்கள்.  அந்த அறையிலிருந் தவன் பிணம் சம்மந்தப்பட்டவர்களிடம் முன்னூறு ரூபாயை வாங்கிக்கொண்டு செல்லம்மாளிடம் அறுபது ரூபாயைக் கொடுத்தான்.
மணிமாறன் செல்லம்மாவை இறுக்கமாகக் கட்டிப்பிடித்தபடி படுத்திருந்தான்.  அருகில் இளவரசியும் படுத்திருந்தாள்.  விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.  மணிமாறனுக்குக் காய்ச்சல் போலிருந்ததால் அவனது நெத்தியைத் தொட்டுப் பார்த்த செல்லம்மா விரல்களால் அவனது தலையைக் கோதிவிட்டபடியே படுத்திருந்தாள். ஏனோ அவளது கண் கலங்கியது.  கீழ் இமையோரம் முட்டிக்கொண்டு நின்ற கண்ணீர் அவள் வாழ்க்கையைத் திரட்டித் துளித்துளியாய் விழிகளுக்கு வெளியே வழியவிட்டது.
கணவன் இறந்த பின்பு சில நாட்களாக வேலை வெட்டிக்குப் போகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தாள்.  செல்லம்மாவைப் பார்க்க வந்த மாரிமுத்துப் பொண்டாட்டி அவளைப் பார்த்து இப்புடியே கெடந்தா எப்புடி புள்ள ஆவறது? அந்த புள்ளைங்க மொவத்தப் பாரு அதுங்களுக்காவது உடுத்துக்கட்டி பொழைக்க வேணாம்.  பெரிய ஆஸ்பத்திரியில ஏதோ வேல இருக்குதாம்.  கேட்டுச் சொல்றேன்.  நாளையிலிருந்து போ... நாளு மனுச மக்கள பாத்தாத்தான் மனசாரும்என்று சொல்லி அவள் அனுப்பி வைத்ததிலிருந்துதான் செல்லம்மா மருத்துவமனைக்கு வேலைக்குப் போகிறாள்.  ஒரு நாளைக்கு இருபது என்று மாதத்திற்கு அறுநூறு கொடுத்தார்கள்.  பிரசவ வார்டில்தான் வேலை.  பிரசவம் முடிந்ததும் தரையில் சிந்திய உதிரங்களைத் துடைப்பது, உதிரத் துணிகளை அலசிக் கொடுப்பது என்று வேலைகளைச் செய்தாள்.
மார்ச்செரியில் வேலை செய்து வந்த மாரிமுத்து இனிமே நீ இங்க வேலை செய்ய வேணாம் எங்களோட வந்து சும்மா ஒத்தாசைக்கு நில்லுஎனப் பிணம் அறுக்கும் இடத்துக்குக் கூட்டிச் சென்றான்.  கூடமாட வேலை செய்து கொண்டிருந் தவள் சில மாதங்களில் பிணம் அறுக்கக் கற்றுக்கொண்டாள். தொழிலைக் கற்றுக் கொண்டவுடன் தினமும் நாற்பது ரூபாய் கொடுத்தவன் இப்பொழுது அறுபது ரூபாய் கொடுக்க ஆரம்பித்தான்.  ஆனால் அன்றிலிருந்து மாரிமுத்து பிணம் அறுப்பதில்லை.  அந்தச் சிறிய அறையில் அமர்ந்து கொண்டு பார்ட்டியிடம் பணம் வாங்குவதோடு சரி அவனது வேலை.  பிணம் அறுப்பது; தைப்பது என அனைத்தையும் செல்லம்மாளே செய்தாள்.  அவரு இருந்தா நாம யாங் இந்த வேலையெல்லாம் செய்யுறோம் என கணவனை நினைத்ததும் சரஞ்சரமாய் கண்ணீர் கொட்டியது.  மணிமாறனின் தலையைக் கோதிக் கொண்டிருந்தவள் முந்தானையை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டு தூக்கத்தை யாசித்தவளாய்க் கண்களை மூடினாள்.
இளவரசியையும் மணிமாறனையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டுச் செல்லம்மா வழக்கம்போல் கிளம்பி மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தாள்.  மணிமாறன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.  ஒருவேளை இரவு செல்லம்மா அழுது கொண்டிருந்ததைப் பார்த்திருப்பானோ என்னவோ பள்ளிக்குச் சென்றவன் திரும்பி வீட்டுக்கு வந்துவிட்டான்.  புத்தகப் பையை வீட்டில் போட்டுவிட்டு செல்லம்மா வுக்குத் தெரியாமலே அவளைப் பின்தொடர்ந்தான்.  யாரோ தன்னை பின்தொடர் வதாய் உணர்ந்து திரும்பியவள் மணிமாறனைப் பார்த்ததும் திடுக்கிட்டவளாய், ‘மணி ஏண்டா பள்ளிக்கோடத்துக்குப் போவுலியா?’ அதிர்ச்சியோடு கேட்டாள்.   மணிமாறன் கழுத்தில் நெட்டியெடுக்க ஆட்டுவதைப்போல் இடப்பக்கமும் வலப் பக்கமும் ஆட்டிப் போகவில்லை என்பதை உணர்த்தினான்.  அங்கெல்லாம் வரவேணாம் அன்னைக்கே பயந்துக்கிட்ட, கம்முன்னு பள்ளிக் கோடத்துக்குப் போ...என்று சொல்லிவிட்டு நாளு எட்டு வைத்தவள் திரும்பிப் பார்த்தாள். மணிமாறன் திரும்பிச் செல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.  சரி வாஎன்று அவனை அழைத்தவாறே மருத்துவமனையை நோக்கி நடந்தாள்.
நுழைவாயிலின் அருகில் பத்துப் பதினைந்து பெண்கள் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார்கள்.  அவர்களின் நடுவில் காலைப் பரப்பி நீட்டிக் கொண்டு தலைவிரி கோலத்துடன் ஒரு பெண் அழுதுகொண்டிருந்தாள்.  அழுது அழுது அவளது குரல் கம்மியிருக்கும் போல அழக்கூட தெம்பில்லாதவளாய்,
    கிளிப்போல வளத்தனே..எனத் தேம்பியவாறே தலையில் அடித்துக்கொண்டு அழுதாள்.
சரிந்து விழுந்த அவளின் மாராப்பை எடுத்து அவளின் தோளில் போட்டுவிட்டு அழுவாதம்மா அழுவாதஎன்று ஆறுதல் சொல்லியவளும் சேர்ந்தழுதாள்.
வானம் மோடம் போட்டு ஒரு மாதிரி மந்தமாய் இருந்தது.  மணிமாறன் அவர்கள் அழுவதைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே அம்மாவின் பின்னால் நடந்தான்.  மார்ச்செரிக்குப் போனதும் மணிமாறனை வெளியே நிற்க வைத்துவிட்டு அந்தச் சிறிய அறைக்குள் போனவள் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள்.  மணிமாறனை அந்த அறையில் இருக்கச் சொல்லிவிட்டுப் பிணம் அறுக்கும் அறைக்குள் போனாள்; கைகளுக்கு உறைகளை மாட்டிக்கொண்டு பிணத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை மெல்ல நீக்கினாள்.  அது ஒரு இளம்பெண்ணின் பிணம்.  நல்ல வட்ட முகம்.  எலுமிச்சை நிறம்.  அதைப் பார்த்ததும் கிளிப்போல வளத்தனேஎன அழுதுகொண்டிருந்த அந்தத் தாயின் முகம் அவளுக்கு நினைவுக்கு வந்தது.  என்ன பிரச்சனையோ விஷம் குடித்து இறந்து விட்டாளாம்.  செல்லம்மா கேள்விப்பட்டிருந்தாள்.
குழந்தைகளின் பிணங்களையும், இதைப் போன்ற வாழ வேண்டிய பிள்ளைகளின் பிணங்களையும் அறுப்பதென்றால் செல்லம்மாவின் மனம் தாங்காது.  அய்யோ பாவம்என அந்த அழகிய முகத்தைச் சிதைக்க மனமற்றவளாய் பிணத்தின் மீதிருந்த உடைகளை மெதுவாகக் களைந்து கொண்டிருந்தவள் வாசல்படியின் அருகில் யாரோ நிற்பதாய் மனதில் பட்டதும் நிமிர்ந்து பார்த்தாள்.  மணிமாறன் அமைதியாகச் செல்லம்மாவைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். 
மணிமாறனைப் பார்த்து தலை அசைத்தவள் பிணத்தை அறுப்பதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.  விருவிருவென உள்ளே சென்றவன் பிணத்தின் தோளை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டு உரத்த குரலில் அறும்மா... அறும்மா...வெறிபிடித்தவனாய் சீறினான்.  திடுக்கிட்டுத் திரும்பிய செல்லம்மா மணிமாறனை மிரட்சியோடு பார்த்தாள். மணிமாறன் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.  மணிமாறனையே பார்த்துக் கொண்டிருந்த செல்லம்மா எதேச்சையாய் ஜன்னலைப் பார்க்க நேர்ந்ததும் அதிர்ச்சியானாள்.  அவள் முகம் வேர்க்க ஆரம்பித்தது.  மோடம் போட்டிருந்த வானம் இருந்திருந்தாற்போல சடசடவென பேய் மழையாய் வீசி அடித்தது.
அறும்மா... அறும்மா...மணிமாறனின் குரல் செல்லம்மாவின் காதில் பட்டு வெளியேறி மழையோசையில் கரைந்தது.  அதிர்ச்சியில் உறைந்தவளாய் செல்லம்மா ஜன்னல் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள்.  அந்தச் சிறிய அறையில் ஜன்னல் ஓரத்தில் வைத்திருந்த காரச்சேவும் புட்டியில் இருந்த சாராயமும் காலியாக இருந்தது.  பெரும் மழையின் சத்தத்தின் ஊடாக மூர்க்கத்தன்மை கலந்த மணிமாறனின் குரல் மேலெழுந்து கேட்டுக்கொண்டே இருந்தது.
***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக