புதன், 27 நவம்பர், 2013

பெருங்காடன் க(வி)தைகள்

கவிதை:
பெருங்காடன்

நல்லா படிக்கல, நடு வெரல்ல எச்ச தடவி
நடு மண்டயில, நறுக்குனு ஒரு கொட்டு
பதினோராம் வகுப்பில் சிறப்புத்தமிழ்
பன்னிரெண்டு முடிந்ததும் இளங்கலைத் தமிழ் இலக்கியம்
பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சியில் தமிழ்க்கலை இலக்கியம்

ஆரம்பத்தில் டீக்கடை நாயர்
ஆந்திரா மெஸ் ரெட்டி, மார்வாடி சேட்டு
அடுத்து ஒரிசா, பீகார், மகாராஷ்டிரா, உத்திரபிரதேச..
கிராக்கி அதிகமுள்ள சித்தாள் பெரியாள் வேலையாட்கள்..
அத்தனைபேரும் செம்மொழித் தமிழைக் கற்று
உடனே மொழிந்தார்கள் “ஏம்பா தமிழ் படிச்சா என்னப் பண்ணலாம்”
இவர்களுக்கு
குடும்ப அட்டைகளோடு தேர்தலுக்கான அட்டையும் கொடுத்தாகிவிடும்…

அதுசரி நம்மூர் சேமியா ஐஸ்காரர்
மூங்கில் கொம்பில் பொம்ம (வாட்சு) மிட்டாய் விற்பவர்..
சுண்டல்கார ஆயா.. பனஞ்சக்க விக்கும் தாத்தா..
யார் வாங்கினார்கள் இவர்களை?
குழப்பத்தில் குழம்பிப் போனேன்..

காலை எழுந்ததும் டிங் டிங் டிங்கென மஞ்சள் ரோஸ் கலரில்
மணியடித்துக் கொண்டே பஞ்சு மிட்டாய் விற்கிறார் ஒருவர்!
மதிய நேரத்தில் கதவு தட்டி, பெட்சீட் சொட்டர் என
ஐம்பது ரூபாய்க்குக்கூட
கொடுக்கத் தயாராய் இருக்கிறார் இன்னொருவர்!
மாலை மூன்று நான்கு மணிக்கு
பிளாஸ்டிக் பூ பீங்கான் பொம்மைகளென
வீட்டினுக்குள்ளேயே பரப்பி விற்கிறார் ஒருவர்!

மாலை இரவு இடைப்பட்ட நேரத்தில்
பேல்பூரி, பாணிப்பூரி, சமோசா, ஜிலேபி
அடுத்து சூடாக உடனுக்குடன்
வெஜ், எக், சிக்கன், பீப் பிரைட் ரைஸ் என
லேட்டஸ்ட் தமிழ்ப்பாட்டுப் போட்டு அமோக வியாபாரம் செய்கிறார் அவர்!

இரவில் தெருவுக்குத் தெரு
குல்பி குல்பி குல்பியென கூப்பாடு போடுகிறார் இவர்!
தெரியும்தானே இப்பொழுது பிச்சையெடுப்பவர் கூட
புள்ள குட்டிகளோடு வயதான தமிழர்கள் கிடையாது (இந்தியர்கள்தான்..)..
இதற்கு மேலும் அடுக்கினால் காந்தி பெரியார் வழி காங்கிரசார் போல்
இது ஒருமைப்பாட்டிற்கு விரோதமாய் எழுதின வயிற்றெரிச்சல் கடுதாசி என்பீர்

வழக்கம்போல் தஞ்சமடைந்தேன்
தமிழ் ஆயாவிடம் விளக்கம் கேட்டு
பதிலேதும் சொல்லாது
“ஆக்கிப் போடுறவ கெட்டவளாப் போயிட்டா
வழிகூட்டி அனுப்புறவ நல்லவளாப் போயிட்டா”
புரியவில்லை என்றேன் / தமிழ்-நாடு, அரசு-அரசியல்
எவராண்டாலும் நமக்கில்லை என்றார்

மீண்டும் முழித்தேன்
“ரோட்டு முக்குல ‘மோடி வித்த’ காட்டுறாங்க” என்றார்.
 
***

தாத்தாக்களும் பாட்டிகளும் கதிர்களை அறுவடைச் செய்ய ஆர்வமாய்க் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அய்யாக்களும் அண்ணன்களும் அவர்கள் விசயத்தில் ஆத்மார்த்தமாய் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அக்காக்களும் தங்கைகளும் உடல்மொழியெனவும் உற்சாகமாய் தங்களுக்குள் தாங்களாகப் புழுகிக் கொண்டிருக்கிறார்கள். முளைக்காத இறகுகளை யெண்ணி சீட்டுக்கவிகளும் ஏட்டுக்கவிகளும் பிரகாசமாய்ப் பறந்துக் கொண்டிருக் கிறார்கள். விசயமறிந்த அத்தனை விஞ்ஞானிகளும் அணைந்த விளக்காய் விளக்கம் தராமல் ஒளிந்திருந்தார்கள். பிறந்த குழந்தைபோல காற்றும் புயலும் நெடுமழையும் வீழ்அருவியும் கோழிபோலப் புலம்பிக்கொண்டேயிருந்தன. ஓவியமும் சிற்பமும் செய்வதறியாது இப்பொழுது பேச ஆரம்பித்திருக்கின்றன. சில நகலோவியங்கள் (நவீன ஓவியமாம்...) அசலாய் நடிக்கவும் ஆரம்பித்திருக்கின்றன. அப்படி... கடவுளிருந்தால் அத்தனையும் கண்ணாம்பூச்சி விளையாடும் (இங்கு தமிழ்ச் சினிமா பற்றி... யப்பா பேச்சே வேணாம்) சரி இப்பொழுது ஒரு காட்சி:- நெடுஞ்சாலை விபத்தில் சிக்கிய நாய்/பூனை போல தரையோடு தரையாகச் சேலைபோல் படர்ந்திருந்தன நிறைய மண்டைகள். கண்கள் நசுங்கியும் ரத்தக்கொத்துகள் ஆங்காங்கே கட்டியும் கட்டாமலும் கன்றுக்குப்பின் மாடு ஈன்ற உறுப்பைப் போலக் கொழகொழப்பாய் இருந்தன. கை, கால்... முண்டங்களின் கீழ் சீழ் காய்ந்து... எதையோ குறிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தன. சனப்பொழுதில் உயிர் பிரியும் நபர் “ஐயோ! துப்பாக்கிப் பற்கள் பெண்ணெனப் பாராது மென்று தின்றன... முனைக்கத்தி துப்பாக்கி உள்புகுந்து கருப்பைக் கண்டு கிழித்தது... வேண்டாமடா... ஆனாலும் அந்தோ கேட்கிறதே குரல்கள் அத்தனையும் உம் உறவுகள்” என்று சனப்பொழுதிலேயே பிரிந்தது. அந்தப் பக்கம் சிரித்த முகமாய்க் கெரடப்பார்வைக் கொண்ட சிறுவர், வாயெடுத்தார்... “இன்னுமொரு தலைவர் வருவார்... நிச்சயம் தருதலைகளை அறிவார்... பொய்யாகத் தமிழ்-கிமிழென உசுப்பேற்றி உணர்வூட்டுவதாய் அழவைத்தவரெல்லாம்... (மதம், ஜாதி தவிர்க்காத பகுத்தறிவாளர்களும்/ பொதுவுடைமைவாந்திகளும்) அப்பொழுது வேரோடு அடையாள மற்றுப் போவார்” என்று இந்தப் பக்கம் சிரித்த முகமாய்ச் சிதைந்தார். இப்பொழு தும் தாத்தாக்கள், பாட்டிகள், அய்யாக்கள், அண்ணன்கள், அக்காக்கள், தங்கைகள், கவிகள்-கிவிகள், ஞானிகள்-கோனிகள் என அத்தனை சீமான் சீமாட்டிகளும் “குய்யோ முறையோ” வென வழக்கம்போலவே ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள்... இங்கு இன்னுமொருக் காட்சி:- விழாக்காலங்களில் ஆடுகளைப் பலியிடுகிறார்கள். கழுத்தறுபட்ட ஆடு துடிக்கிறது. தலைக்கும் உயிர் இருக்கிறது... தலையில்லா முண்டத்திற்கும் உயிர் இருக்கிறது... மேற்சொன் னோர்களின் குய்யோ முறையோ ஓலங்கள் இப்பொழுது படி... படியாய்... அரசு, குடும்பம், தனிச்சொத்து வாசிக்க ஆரம்பிக்கிறது (வியாபாரி அடுத்துக் காட்டும் படங்கள்... எத்தனை பயங்கரமோ).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக