புதன், 27 நவம்பர், 2013

நம்பிக்கை



சிறுகதை:
 
- லீலா கணபதி, பேராசிரியை (ஓய்வு), அரசு கவின்கலைக்கல்லூரி, சென்னை.

அன்று வீட்டில் நான் தனியாகத்தான் இருந்தேன். என்னோடு வசிக்கும் மகள் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு ஏழு மணிக்குத்தான் வீடு திரும்புவாள். பகலில் வரும் வேலைக்காரியும் சமையல்காரியும் வேலை முடிந்தவுடன் சென்று விடுவார்கள். நான் கதவை தாளிட்டுவிட்டு, சற்று கண்ணயர்வது வழக்கம். அன்றும் அப்படித்தான்டீபோட்டு குடித்துவிட்டு சற்று நேரம் உட்கார்ந்திருந்தேன். கடுமையான வெய்யிலும் சூடானடீயும் சேர்ந்து வியர்த்துக்கொட்டி, உடம்பு கசகசவென்று இருந்தது. குளித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, என் அறையை ஒட்டியுள்ள குளியலறைக்குச் சென்று குளிர்ந்த நீரில் குளித்து இளைப்பாற, தொலைபேசி மணி கணகணவென்று அடித்தது. தொலைபேசி மணிசப்தம் கேட்டாலே என் உடல் தானே அதனை நோக்கி ஓடிவிடும். பலமுறை என் குழந்தைகள், ‘ஏன் அவசரம்? எந்த முக்கிய வேலைக்காக அழைப்பு வரும்? அவசர அவசரமாக ஓடிவருவதை நிறுத்துங்கள்என்று சொல்லியும் என் உடல் என்னை அறியாமலேயே தானே இயங்கி ஓடிவிடும்.
ஆனால் இன்று தொலைபேசி மணி அடித்தாலும் குளித்து ஆர அமரத்தான் அதை எடுக்கவேண்டும் என சங்கல்பம் செய்துக்கொண்டு கைபேசியை மெத்தை மீது வைத்தேன். குளித்து முடிப்பதற்குள் மறுபடியும் அதன் அலறல். சற்று நேரத்திற்கொல்லாம் அதன் அலறல் தொடர்ந்து ஒலிக்க, நான் பொறுமையிழந்தேன். சங்கல்பம் காற்றில் பறந்தது. அங்கிருந்த துண்டை எடுத்து அவசரஅவசரமாச் சுற்றிக் கொண்டு படுக்கையறையை நோக்கிப் போனேன். தொலைபேசி விடாக்கண்டனாக ஒலித்துக் கொண்டேயிருக்க, ஏதோ முக்கிய சேதிபோலும் என்று எண்ணி குனிந்து அதை எடுத்து காதில் அருகில் வைத்தேன். ஒலியடங்கி அமைதி கொண்டிருந்தது. எனக்கோ எரிச்சல்; கோபத்துடன் அதைப் படுக்கையின் மீது போட்டேன். நிமிர்ந்தேன். ஐயோ! இதென்ன? என் முதுகில் தாங்கொண்ணா வலி. ஏதோ நொறுங்கியது போன்ற உணர்வு. ‘எங்கள் குலதெய்வமான கங்கேஸ்வரி தாயேஎன்று அடிவயிற்றிலிருந்து குரல் எழுப்பி அழைத்தேன். ‘ஓம் சக்தி, ஓம் சக்தி என்னைக் காப்பாற்றுகூவினேன்.   அதற்குள்   எனதுடல்   தரையில்   சப்பாணியாக உட்கார்ந்திருந்த நிலையில் கிடந்தது. பாரமான எனது உடல் பயங்கரமாக வேதனையைத் தந்தது. என்னைச் சுற்றி, கட்டில் ஒரு பக்கம்; நாற்காலி ஒரு பக்கம்; மற்றொரு பக்கம் கதவு. நான் தாறுமாறாக விழுந்து அவற்றின் மீது மோதாமல் தப்பினேன். விசித்திரமான வீழல்! வாய்ஓம் சக்திஎன்று கூவ, மனம் அடுத்தப் பக்கத்தில் இருக்கும்நைட்டியைஅணிய எண்ணி, உட்கார்ந்த வண்ணம் உடம்பை தரையில் தேய்த்து தேய்த்து மெல்ல மெல்ல நகர்ந்து, மிகுந்த பிரயத்தனத்துடன் ஆடையை உடுத்திக் கொண்டேன். அதற்குள் வாசற்கதவு தாளிடப்பட்டிருக்கிறதே, தாழ்ப்பாளை உடைத்தாலன்று யாரும் உள்ளே வர முடியாதேஎன்ற எண்ணம். இந்த எண்ண ஓட்டத்திற்கு பின்னர் எதுவுமே நினைவில்லை.
என்ன அதிசயம்! தாழ்ப்பாள் திறக்கப்பட்டு நான் மெத்தையின் மீது மல்லாக்காக ஒழுங்கான நிலையில் படுத்துக் கொண்டிருந்தேன்.
படுக்கையறையை விட்டு சற்று தூரம் நடந்து வந்து வாசற்கதவு தாழ்ப்பாளை எப்படி திறந்தேன், திரும்ப வந்து படுக்கையில் எப்படி சரியாக படுத்துள்ளேன், வலியால் கதறியவள் எப்படி அமைதியானேன்... எதையும் விளக்க முடியாது.
அதற்குள் அஸ்தமனம் முடிந்து, இருள் கவ்வியது. கீழ்வீட்டிலிருந்த ஒருவரை மாடிக்கு வந்து மின்விளக்கு போடும்படி கைபேசி மூலம் தெரிவித்தேன். அவரும் எதிர்கேள்வி எதையும் கேட்காமல் விளக்கைத் தட்டிவிட்டார். அடுத்தபடியாக என் மகளுக்கு செய்தி தெரிவிக்க வேண்டும். எனக்கு ஏதாவது என்றாலே பதறி துடிப்பவள். ஆகவே நான் என் பதட்டத்தையும், வலியையும் காட்டிக் கொள்ளாமல், ‘நான் கட்டில்மீது உட்காரும் போது எனது முதுகு மிகவும் வலிப்பதாகவும் மருத்துவரிடம் அழைத்துப்போகும்படியும் தெரிவித்தேன். அதைக் கேட்ட மாத்திரத்திலேயே, ‘கீழே விழுந்தீர்களா?’ என்று கேட்டாள். நான்இல்லைஎன பதில் அளித்தேன். மருத்துவரிடம் அழைத்து செல்வதற்கான ஏற்பாட்டை வரும் வழியிலேயே செய்துவிட்டு வந்தவள், கட்டில் மீது படுத்திருக்கும் என்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள். நான் அவளோடு மருத்துவமனைக்கு போகும் நிலையில் இல்லை என்பதை உணர்ந்து அதற்கானவற்றினை பரபரப்புடன் செய்தாள். ஒரு நர்ஸ் உதவிக்கு வந்தாள். பிறகு என்ன.. ஆம்புலன்ஸ்.. எக்ஸ்ரே... ஆஸ்பத்திரி...
ஏற்கெனவே விழுந்த அதிர்ச்சியில் என்மனம் என்ன ஆகுமோ என்ற கேள்வியை எழுப்பி எதிலும் நம்பிக்கையின்றி வேண்டாத சிந்தனைக்கு இடம் கொடுத்து உள்ளுக்குள் ஆரம்பித்தது. இந்த உடம்பு வாழ்நாள் முழுவதும் இப்படிதான் படுத்துக்கிடக்குமா என்ற கேள்வி. விடை காணா துக்கம்.
என் கால்கள் மூட்டுவலியால் நடக்க கஷ்டப்பட்டபோது பல ஊர்களைச் சுற்றி பார்க்கும் ஆசை மிகுதியால், ‘மாற்று மூட்டு அறுவை சிகிச்சைசென்ற வருடம் தானே செய்துகொண்டேன். அதிகமான பணத்தையும் அதற்காக செலவும் செய்தேனே; எல்லாம் வீணா? இன்று என்வாழ்வில் தினசரி வேலைகளைக்கூட என்னால் செய்துக்கொள்ள முடியுமா? நான் எழுந்து நடப்பேனா? வாழ்நாள் முழுவதும் மற்றவரை எதிர்பார்த்து படுத்துக்கொண்டே காலம் கழிப்பேனா? நினைக்கவே மனம் ஒப்பவில்லை.
இவ்வாறு நான் மனம் நொந்து படுக்கையில் இருக்கும் போது என்னைக்காண எங்கள் குடும்ப நண்பர் வந்திருந்தார். அவர் மருத்துவரும் ஆவார். அவரிடம் நடந்தது எல்லாம் கூறினேன். முதுகில் எலும்பு முறிவு என்ற சொல் அவரை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது போலும்.  எக்ஸ்ரேவைப் பார்த்து அதிசயப்பட்டார். அவர் என்னை நோக்கி மகிழ்ச்சியுடன்நீ அதிஷ்டசாலி! இறைவன் தன் கருணையால் உன்னைத் தாங்கி பிடித்து பெரிய விபத்திலிருந்து காப்பாற்றிவிட்டார். அடிச்சுவடுகள் என்பதில் எழுதியிருப்பதுபோல் அவர் உன் கையை பிடித்துக் கொண்டு நடக்கவில்லை. உன்னை தன் தோளிலேயே சுமந்து பத்திரமாக பெரிய விபத்திலிருந்து காப்பாற்றியிருப்பது மிகப் பெரிய அற்புதம்என்றார். அப்போது அது என் நியாபகத்திற்கு வந்தது. ‘பகவான் தன் பக்தனது கையைப்பிடித்துக் கொண்டு உடன் அழைத்துச் சென்றபோது இரண்டு ஜதை அடிச்சுவடுகள் மணலின் மீது காணப்பட்டன. பின்னர் கண்டபோது ஒரு ஜதை அடிச்சுவடுகளே தெரிந்தன. அவன் மனம் பதை பதைக்கஇறைவா! என்னை தனியே தவிக்கவிட்டு சென்று விட்டீரே எனக் கேட்க, அன்று அந்த பக்தன் நடக்கவும் சக்தியின்றி இருந்தபடியால் தானே அவனைத் தோளில் சுமந்து சென்றதாகவும், அந்த ஒரு ஜோடி அடிச்சுவடுகள் இறைவனுடையதுஎன்றும் விளக்கினார். இது நமக்குப் புரிவதில்லை. ‘இதைக்கேட்டு நான் அத்தனை பாக்கியம் செய்தவளாஎன்று வியந்தேன். நன்றி கூறினேன்.
எனது முதுகெலும்பு ஓரளவு முறிந்திருந்தாலும் எந்தவித பாதிப்பும் இன்றி சிறந்த முறையில் எல்லாம் வல்ல இறைவனால் காப்பாற்றப்பட்டிருக்கிறது அதை உணராமல் என் மனம் எப்படியெல்லாம் தவித்து, துன்பத்தில் ஆழ்த்தி துயரத்தில் மூழ்கடித்தது.
இறைவன் படைப்பில் மிக உயர்ந்த படைப்பு மனிதன்தானே! அந்த மனிதனை எத்தனை உயர்வாக சிறப்பாக படைத்திருக்கிறார். உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் எத்தனையோ பணிகளைச் செய்து அவனது ஆரோக்கியத்தை காத்துவருவதுடன் நினைத்துப் பார்ப்பதற்கரிய பல சாதனைகளைச் செய்ய வல்லதாக இருக்கின்றன. நாமோ அதைப்பற்றிய நினைப்பு சிறிதும் இல்லாமல் காலத்தை ஓட்டுகிறோம். ஏதேனும் உறுப்பு தன் பணியைச் செய்யாதபோதுதான் நமக்கு அதன் அருமை தெரிகிறது. நாம் ஒவ்வொரு உறுப்பையும் நன்றி உணர்வுடன் சரியானபடி கவனம் செலுத்தி காப்பாற்றவேண்டிய கடமையை மறந்து வாழ்கிறோம். அது பழுதடைந்து நாம் கஷ்டப்படும்போதுதான் விழிப்புணர்வு ஏற்படுகிறது.
நாம் படுக்கையில் இருக்கும் போது மனக்குரங்கு பேசிக்கொண்டே நம்மை துக்கத்தில் ஆழ்த்துகிறது. துயரத்தில் மூழ்கி அல்லல் படுகின்றோம். நம்மைப் பலப்படுத்துவதற்கு பதிலாக பலவீனமாக்கி என்ன நேருமோஎன்ற திகில்  கொள்ளச் செய்து சதா, கேள்விக்குறியை எழுப்பி நம்பிக்கையில்லா விடையை மேலும் மேலும் பெருக்கி மனக்கிலேசம் அடைகிறது. நடுநடுவே நம்பிக்கை தலை தூக்கினாலும் அதை ஏற்க மனப்பக்குவம் இல்லாமல் துயரத்தையே வளர்த்துக் கொள்ளுகிறது. என் முதுகெலும்பு காப்பாற்றப்பட்டு இருந்தபோதிலும் என் மனம் என்ன தவிப்பு தவிக்கின்றது.
இதற்கெல்லாம் என்ன காரணம்? நமக்கு எதிலும் நம்பிக்கையில்லை. எதிலும் சந்தேகம்; குழப்பம்; கலக்கம். நடக்கப்போகும் நல்லதைவிட தீயதையே நம் மனம் தேடி அலைகின்றது. இறைவன் அருளில் நம்பிக்கையின்றி நாமே நல்லதை நாடாமல் தீயதை நோக்கியே போகின்றோம். இவ்வாறு நன்மையற்ற தீய எண்ணங்களைத் தேர்ந்தெடுத்து மீளாத் துயர் அடைகிறோம். நல்லதை எண்ணி அதன் சுகத்தை உணர வழி தெரியாமல் துன்பம் அடைகின்றோம். இது ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் நடக்கிறது.
ஒரு சமயம் நான் திருவண்ணாமலைக்கு சென்ற தருணத்தில் அதிதீ ஆசிரமத்தில் இரமண மகரிஷியின் சீடர் ஒருவரை சந்தித்துப் பேசியது என் நினைவிற்கு வருகிறது. ரமணரோடு அவர் இருந்தபோது நிகழ்ந்த ஏதேனும் ஒரு சம்பவத்தைக் கூறும்படி வேண்ட, அவர் இதனைச் சொன்னார்.
அதாவது பகவான் ரமணர் ஆசிரமத்தில் சத்சங்கம் நிகழும் போது பக்தர்கள் மட்டுமின்றி விலங்குகளும்அதாவது ஆடு மாடு, நாய் முதலியவை உள்ளே வந்தால் யாரும் அவைகளை விரட்டுவதில்லை. அவைகளும் சமமாக அனுமதிக்கப் பட்டன. அங்கு அந்த விலங்குகளும் அமைதியாக இருந்து செல்வது வழக்கம்.
அத்தகைய சத்சங்கம் ஒன்று நடக்கையில் ஒரு பக்தர் ரமணரிடம் வந்து தன் மனம் சதா சர்வகாலமும் அடங்காது ஏதாவது எண்ணத்தில் சுழன்றுகொண்டே இருக்கிறது. இத்தகைய சஞ்சல மனத்தினால் அமைதியாக தியானம் செய்ய தன்னால் இயலவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தார். ரமணரோ அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. மௌனமாக இருந்தார். அன்று சத்சங்கம் துவங்கி அது முடிந்தவுடன் வழக்கம்போல் எல்லோருக்கும் அவரவர் இடத்திலேயே பிரசாதம் வழங்கப்பட்டது. இச்சமயம் ஒரு நாய் மட்டும் தன் இடத்தை விட்டு எழுந்து பிரசாதம் கொடுப்பவரைப் பின்தொடர்ந்து அலைந்துக் கொண்டிருந்தது. அதைக் கண்ட பகவான் ரமணர், அங்கு அமைதியாக வீற்றிருக்கும் மற்றொரு நாயை சுட்டிக்காட்டி, அது தனக்கு பிரசாதம் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு அமைதியாக காத்திருக்கிறது. ஆனால் அலைந்து திரியும் இந்த நாய்க்கோ தனக்கு பிரசாதம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அவநம்பிக்கையில் சஞ்சலம் கொண்டு அலைகிறது. இந்த நிலையில் அதற்கு பிரசாதம் கிடைத்தாலும் அதனை அப்படியேலபக்என்று விழுங்கிவிடும். அதனால் அந்த பிரசாதத்தின் ருசியை சுவைத்து அனுபவிக்கவும் முடியாது. ஆனால் அமைதியாக நம்பிக்கையுடன் காத்திருக்கும் அந்த நாய் தனக்கு கிடைத்த பிரசாதத்தை நன்கு சுவைத்து, ருசித்து சாப்பிட்டு திருப்தியடையும்என்று கூறினார்.
இவ்வாறு பகவான் ரமணர் பக்தர்களுக்குத் தேவையான அறிவுரைகளை குறிப்பாகவே உணர்த்துவார் என்று கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக