புதன், 27 நவம்பர், 2013

‘சாதி, மத ஆதிக்கம் எதிர்க்கப்படவேண்டியவை’ - வெற்றிமாறன்




வெற்றிமாறன், திரைப்பட(பொல்லாதவன், ஆடுகளம்) இயக்குநர்.
நேர்காணல்: சா. திருவாசகம் 
 
காட்டைக் கதைக்களமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்காக தருமபுரி மாவட்ட வனத்துறை அதிகாரி தோழர் அன்பு அவர்களிடம் விவாதித்துக் கொண்டிருந்த போது, இயக்குநர் வெற்றிமாறன்கூட தற்போது அப்படியான ஒரு களஆய்வில்தான் இருக்கிறார் என்றும் அவரும்கூட சில தகவல்களைக் கேட்டிருந்தார் என்றும் கூறினார். திரைப்படம் தாண்டி புத்தக வாசிப்பு, பதிப்பு என்று இலக்கிய வேட்கையும் கொண்டவர் என்பதில் வெற்றிமாறன் தனித்துவமானவர்.
திரைப்படங்கள், இலக்கியம் குறித்து, அவரிடம் உரையாட முடியுமா என்று அன்புவிடம் கேட்டபோது தாராளமாக உரையாடலாம் என்றார். வெற்றிமாறனைச் சந்திக்க வாய்ப்பும் பெற்றுத்தந்தார். வெற்றிமாறன் அவர்களைச் சந்திக்கப் போகலாம் என்று நண்பர் முத்துகந்தனிடம் கூறியபோதுசரி போகலாம்... அந்த உரையாடலைச் சற்றே செம்மைப்படுத்தி செந்திலைக்குருவிக்கான நேர்காணலாக மாற்றினால் என்ன?’ என்கிற யோசனையைச் சொன்னதும் அந்த யோசனையே இங்கு நேர்காணலாக மாறியது... இனி...

வெறும் வணிகம் மட்டுமே சினிமாவா?
அடிப்படையில் சினிமா என்பது வெகுஜனம் சார்ந்த ஊடகம். வெகு ஜன மக்களுக்கான கலைப்படைப்பாகும். அதேப் போன்று Fesitvel படமாகவும் சில இருக்கின்றன. அதாவது இங்கு சினிமா எடுப்பவர்கள் இரண்டு வகையான சினிமா எடுக்கிறார்கள். ஒன்று வெகுஜன மக்களுக்கானது. இன்னொன்று Fesitvel படம் பண்ணுவது. இந்த Fesitvel படம் வெகுஜன மக்களுக்கானதா என்றால் இல்லை. இம்மாதிரியான படங்களில் வாழ்க்கை குறித்த அனுபவ அறிவைத் தெரிந்துக் கொள்ள முடியும். ஆனால் இவர்கள் வணிக ரீதியாகச் செயல்படுவதில்லை. அதற்கு ஏற்றால் போல் அவர்களின் வாழ்க்கை முறை எளிமையாகவும் இருக்கிறது.
      தமிழ்ச்சூழலைப் பொறுத்தவரையில் சினிமா என்பது முழுக்க முழுக்க வணிக ரீதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.வணிக சினிமாவில் எந்த அளவுக்குப் பணம் சம்பாதிக்க முடியுமென்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறவர்கள்தான் அதிகம். இந்த வணிகசினிமா இயக்குநர்களில் Political clarity யோடு இருக்கும் இயக்குநர்கள் ஒரு சிலர் மட்மே. அந்தச் சில இயக்குநர்களுக்கு கூட சினிமா மொழி கைவரப் பெறவில்லை.
இன்று வரையிலும் தமிழில் ஒரு நல்ல அரசியல் சினிமா இருக்குமா என்றால் இல்லை. அரசியல் சினிமா என்றால் எப்படியிருக்கிறது... ஒரு அரசியல்வாதி MLA தேர்தலில் நிற்பது. நின்று ஜெயித்த பின்பு நாட்டைத் திருத்துவது. இப்படித்தான் அரசியல் சினிமா இருக்கிறது.
 இந்திய சினிமாவிற்குக் கலை வடிவமே கிடையாது. இங்கு முதலில் வணிகம், அதற்கு அடுத்துதான் கலை முதன்மை பெறுகிறது. இன்னொன்று இங்கு கலைப்படம் எடுப்பதில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மற்ற கலைப் படைப்பைக் காட்டிலும் சினிமா கலைப்படைப்பு அதிக அளவிலான பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேர்கிறது.
வணிக சினிமாவில் கூட நேர்த்தியாக உருவாக்க மெனக்கட்டுக்கொண்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள்... சமீபகால தமிழ்ச் சினிமாவின்சிரிப்புபோக்கைக் கவனிக்கிறீர்களா...
      நானும் இயக்குநர் ராமும் இது குறித்து விவாதித்திருக்கிறோம்.  ஒரு படத்தை எடுப்பதற்கு ஒரு வருடம் கிரவுண்டு ஒர்க் பண்ணி, ஆறுமாதம் ஸ்கிரிப்ட் தயார் செய்து இன்னும் ஒரு வருடம் புரொடக்ஷன் பண்ணி இன்னொரு ஆறு மாதம் அதை வெளியிடப் போராடி, ஒரு மூன்று வருடம் உழைத்து ஒரு படத்தை வெளியிடுகிறோம். அதற்கு அதிக அளவிலான அவகாசமும் பொறுமையும் தேவைப்படுகிறது. இப்படி படம் எடுக்கக்கூடிய சில இயக்குநர்களும் இருக்கிறார்கள்.
      இன்னொருபுறம் மொத்த படத்தையும் மூன்று மாதத்தில் ரெடி பண்ணி ஆறு மாதத்துல படத்தை வெளியிடுபவர்களும் இருக்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் இரண்டு வகையான இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால் பார்வையாளர்கள் ஒரே வகை மட்டுமே. இந்தப் பார்வையாளர்கள் ஒரே மனநிலையில்தான் இருக்கிறார்கள். இந்த வெள்ளிக்கிழமை படம் வெளியானா அடுத்த வெள்ளிக் கிழமை வரைதான் பார்க்கிறார்கள். அப்போ, அதிகபட்சமே ஏழு நாள்தான் அவர்களுக்கு. உங்க படம் ரொம்ப பிடிச்சா பாப்பார்கள். வெள்ளி, சனி, ஞாயிறு, அப்போ மூனு நாள் ஓடி  கலெக்ஷன் எடுக்குற படத்துக்கு மூனு மாசம் உழைக்கிறவன் புத்திசாலியா? மூனு வருஷம் உழைக்கிறவன் புத்திசாலியா? என்ற கேள்வி எழுகிறது. இப்படியானச் சூழலில் நம்மை எப்படி ஆறுதல் படுத்திக் கொள்ள வேண்டியிருக்குன்னா, நமது ஆத்மதிருப்திக்காக வேலை செய்கிறோம். இன்று நம்ம படத்த மூனு நாள் பார்த்தாலும் சரி... மூனு மாசம் பார்த்தாலும் சரி... ஒரு பத்து வருடம் கழித்து நம்ம படம் தமிழ்ச் சினிமாவுலகில் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கைக்காகப் படம் எடுக்கிறோம். இது மட்டுமே நமக்கு ஆறுதலாக இருக்கிறது.
கழுகு மலை, ஜவ்வாதுமலை, விழுப்புரம்-செத்தவரை, கீழ்வாலை, ஆலம்பாடி... இப்படியான தொன்மையான இடங்களில் தமிழ் அடையாளங்களின் எச்சம் இருக்கிறது என்பது தமிழ்சினிமா படைப்பாளிகளுக்குத் தெரியுமா... ஏனென்றால் இம்மாதிரியான கதைக்களங்கள் தமிழ்ச் சினிமாவை வேறொரு தளத்திற்குக் கொண்டுச் செல்லும்தானே...உதாரணமாகஅப்போகளிப்டோபோல...
      இல்ல. அவ்வளவா தெரியாது. அந்த அளவுக்கெல்லாம் அவார்னஸ் இல்லாதவர்கள் இல்லை. இங்கு நிறைய இயக்குனர்கள் ரொம்ப பொறுப்போடும் ரொம்ப பொலிட்டிக்கல் அவார்னஸோடும்  கான்சியஸாகவும் இருக்கிறார்கள். ஆனால் அது அவர்களின்ஆர்ட்ஆக மாறவில்லை. அதற்கு என்ன காரணம்னா இங்கு ப்ராப்பர் பிலிம் கிடையாது. சினிமாவை ஒரு பாடமாக சரியா சொல்லிக் கொடுப்பதற்கான ஆட்கள் இல்லை. அப்படியான ஸ்பேஸ் இல்லை. இப்போ பாலு மகேந்திராவிடம் சேருகிறவர்கள் நன்றாகக் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் குறைவாக இருந்தாலும் தரமான படங்களை எடுக்கிறார்கள். அதே போல இராமநாராயணன் போன்றோர் நூற்றுக்கும் மேலானப் படங்களை எடுக்கிறார்கள். அவரிடம் கற்றுக்கொள்கிறவர்கள் நூற்றைம்பது படமும் எடுக்க வாய்ப்பிருக்கிறது. எங்கு எதனைக் கற்றுக்கொள்கிறார்களோ அதனை அப்படித்தான் செயல்படுத்து வார்கள்.

எரியும் பனிக்காடுநாவலைப் படமாக்கி விட்டு கதைத் திரைக்கதை பாலா என்று போட்டுக்கொள்பவர்கள் மத்தியில்ஆடுகளம்திரைப்படத்தின் இறுதியில்  Filmography, Bibiliography என்று வெளிப்படையாகப் பட்டியல் போட்டிருக்கிறீர்கள்...
      Roots நாவலின் ஒரு ச்சேப்டரில் சேவல் சண்டைக் குறித்து விவரிக்கப் பட்டிருக்கிறது. அதை வாசிக்கையில் எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது. அதிலிருந்து ஆடுகளம் கதை உருவானது. ஒரு ஆய்வாளன் அவன் ஆய்வேடு எழுதும் போது Bibiliography கொடுக்கிறான். ஏன் அதை கொடுக்கிறான்னா அவன் அதில் இருந்து கருத்தைத் திருடியதாக அல்ல.  அதில் இருந்துரெஃபர்பண்ணினான் என்பதைக் காட்டுவதற்காக. ஒரு படம் பன்றது என்பது ஒரு ஆய்வேடு மாதிரிதான். மற்றவர்களுக்கு எப்படியோ... எனக்கு அதுமாதிரிதான்.
      ஒரு கதையைத் தீர்மானிப்பது அந்தக் கதைக் களம்தான். தொல்காப்பியத்தில் கூட  அதற்குச் சில தரவுகள் இருக்கின்றன. எந்த ஊரில் கதை நிகழ்கிறதோ அந்த ஊர் மக்கள், அம்மக்களின் வாழ்க்கை, அன்றாட பிரச்சனைகள், அவர்களின் சந்தோஷம் என்ன? துக்கம் என்ன? எதிர்பார்ப்புகள் என்ன என்று தெரிந்து கொண்டு அதை நாம் கதையாக மாற்றுகிறோம். ஆடுகளம் கதைக்குத் தேவையானது சேவல் சண்டை. சேவல் சண்டை குறித்த நுட்பமான நுணுக்கமான பல விஷயங்களைக் களஆய்வில் தெரிந்துக் கொள்கிறோம். பல விஷயங்களை படத்தில் சேர்க்க முடியல. ஏனெனில் அந்தக் கதைக்கு, வெகுஜன மக்களுக்கு, அது தேவைப்படல. அதனால சேர்க்கமுடியல. வெறும் உணர்வு அடிப்படையில்தான் தியேட்டர்க்குள் வருகிறார்கள். சினிமா என்பது அடிப்படையில உணர்வு சார்ந்தது. அந்த உணர்வைத் தூண்டுவதற்கு எது தேவையோ அது போதும்.
Ameros Perros படத்தில் நாய் சண்டை இடம்பெறுகிறது. அவங்க ஊரில் இருக்கும் நாய் சண்டையை  அவங்க படம் பண்றாங்க. அப்போ நம்ம ஊரில் நடக்கும் சேவல் சண்டையை நான் படம் பண்றேன். அந்த படத்திற்காகச் சில Reference  தேவைப்படுகிறது. அந்தத்  தரவுகளுக்கு அடிப்படையாக அமைந்த Filmography, Bibiliography –யை நான் கொடுத்தேன். இந்த முறை சினிமாவுல புதுசு என்று நினைக்கிறேன். ஏன் ஓப்பனா சொல்லனும் என்றால் உலக சினிமாவுல முதன் முறையா ஆடுகளத்துல வந்தது. அதற்கடுத்து மலையாளத்துல இரண்டு மூன்று படம் செய்தார்கள். எல்லாரும் ஓரளவு இப்ப பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.
 உங்கள் படங்களில் விளிம்பு நிலை மக்கள் பிரதானமாக இடம்பெறுகிறார்களே?
      பொதுவாக என் படங்களில் விளிம்பு நிலை மக்களிடம் இருக்கும் ஏழ்மை பற்றிதான் சொல்லணும் என்று ஆசைப் படுகிறேன். அதாவது விளிம்புநிலை மக்களைப் பற்றி பேசவும் வேண்டும் என்று நினைக்கிறேன்.
 நம் தமிழ்ச்சூழலில் காஸ்ட் சிஸ்டம் இருக்கு.விளிம்பு நிலை மக்கள் குறித்த  படம் பண்ணும் போது அதத் தாண்டிட்டு போயிடுறோம். அது திட்டமிட்டு நடக்குதா? அவற்றைத் தவிர்ப்பதற்கான காரணம் என்ன?
      தலித் அரசியல் குறித்துப் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன். தற்பொழுது அதைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் ரஞ்சித் ஒருவர் மட்டும்தான் கான்சியஸா  படம் எடுக்கும் பிலிம் மேக்கர். குறிப்பாக இவர் அடித்தட்டு மக்களின் வாழ்வியலைப் பேசும் இயக்குனர். விளிம்புநிலை மக்களின் வாழ்வியலைப் படமாக்குவதை ஒரு லட்சியமாகக் கொண்டு தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். எனக்கு ரஞ்சித்திடம் சில விமர்சனமும் இருக்கு. ஆடுகளம் படத்தில் சாதியம் பற்றி வரும் இடங்களை மியூட் பண்ணியிருப்பேன். காரணம் அந்தக் குறிப்பிட்ட ஆதிக்க சாதியினருக்கு நான் பதில் சொல்லவேண்டியதாயிருக்கும். அவரவர் சாதியைச் சேர்ந்தவர்கள் அவர்களின் சாதி குறித்துத் தவறாகவே பேசியிருந்தாலும் விட்டுவிடு கிறார்கள். குறிப்பாக கமலை எடுத்துக்கொண்டால் அவர் தேவர் மகனாகவும் இருப்பார், ஐயங்காராகவும் இருப்பார். இப்ப தமிழ்ச் சூழலுக்கு மிக அவசியமானதாக சாதி அதிகாரத்தை எதிர்ப்பது என்கிற தேவை இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பா பத்து பதினஞ்சு வருஷமா சாதி வெறியாட்டங்கள் அதிகளவில் நடக்கிறது. பெரியார் வார்த்தைகளும் இயல்பாகவே தேய்கிறது...
 உதயம் திரைப்படத்தில் இந்துத்துவ ஆதிக்கத்தைத் துணிச்சலோடு பதிவு செய்திருக்கும் முறை... தமிழ் சினிமாவில் துணிச்சலான ஒன்று...
உதயம் திரைக்கதை பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதியது. அப்போதைய என் வாசிப்பு, அரசியல் எல்லாம் ஒரு வேகத்தில் அதைச் சேர்க்கத் தூண்டியது. அந்தத் திரைக்கதையை என் நண்பன் படமாக்கும் போதும் அதை நீக்க வேண்டுமென்று தோன்றவில்லை. எப்படியிருந்தாலும் சாதி மற்றும் மத ஆதிக்கங்கள் என்பவை எதிர்க்கப்படவேண்டியவை.
 குறிப்பாகத் தமிழகப் பழங்குடிகள் பற்றின படங்கள் பெரியளவில் வரவில்லை?
      என்னுடைய அடுத்த படம் பழங்குடிகள் பற்றியதுதான். நான் அதற்காக அம்மக்களுடன் தங்கி அவர்களின் பிரச்சனை, சந்தோஷம், துக்கம் என்று அம்மக்களோடு களஆய்வில் இருக்கிறேன்.
புத்தகங்கள், பதிப்பு குறித்த இலக்கியத் தளத்திலும் செயல்படுகிறீர்கள். சினிமா இயக்குநர்களுக்குப் புத்தக வாசிப்பு அவசியமா? உங்களுக்கு எவ்வாறு அது உதவுகிறது...
      புத்தகம் என்பது அருகில் இருக்கும் ஒரு பெரிய சொத்து. அதில் அள்ள அள்ளக் குறையாத அறிவு, அனுபவம் இருக்கிறது. எனக்கு சிறுவயதில் இருந்தே புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டு. பல மொழிபெயர்ப்பு நூல்கள் படித்துள்ளேன். ஜயாங்ரோங் முப்பது வருட கால அனுபவத்தை Wolf Totam என்ற நாவலை எழுதுகிறார். அதை இருபது வயதில் படிக்கும் போது கூடுதலாக நாற்பது வருட வாழ்க்கை அனுபவங்கள் சேகரமாகிறது. என்னைப் பொறுத்தவரையில் புத்தகத்தை எடுத்தால் அதனை முழுதாகப் படித்து முடித்துவிடுவேன். இடைவெளி விட்டுப் படித்தால் அதில் முழுதாகப் பயணப்பட முடியாது. நான் ஆங்கிலத்தில் விரும்பி வாசித்த புத்தகங்களைத் தமிழ் வாசகர்களுக்கும் கொண்டுச் சேர்க்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதன் முதல் முயற்சிதான்ஓநாய் குலச் சின்னம்அடுத்ததாக Murio Vargas Llosa வின் ஒரு புத்தகத்தைக் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறேன். எனக்குப் படங்களைக்காட்டிலும் புத்தகம் அதிக உற்சாகத்தைத் தரக்கூடியதாக இருக்கிறது.
 தமிழ் சினிமாவில் தமிழ் அடையாளங்கள் இருக்கின்றனவா...
இத்தனை வருட தமிழ் சினிமா வரலாற்றில் தமிழ் அடையாளங்களுடன் இருக்கும் உருவாக்கப்படும் படங்கள் மிக மிக சொற்பம். என்னைப் பொறுத்தவரை நூறு சதவீதம் அசலான தமிழ் அடையாளம் கொண்ட படமென்றால் அட்டக் கத்தியைத்தான் குறிப்பிடுவேன். ‘பருத்திவீரனில்பேசப்பட்டிருக்கும் சாதிய அரசியல் விமர்சனத்திற்குரியது. என்றாலும் அதுவும் தமிழ் மக்களின் வாழ்க்கை அடையாளம் கொண்ட படம்தான். அதேப் போல தவமாய் தவமிருந்துபடத்திற்கு முக்கிய இடமுண்டு. எப்படி உலகப்படங்கள் அம்மக்களின் வாழ்வியலைப் பேசுகிறதோ... அதேமாதிரி தமிழ்ப் படங்களும் தமிழ் மக்கள் வாழக்கை குறித்த அடையாளங் களுடன் இருக்கவேண்டும்.
 சினிமா குறித்துக் கற்கும் (விஷ்வல் கம்யூனினேஷன்) மாணவர்களுக்கு ஒரு வாசிப்பாளராக நீங்கள் பரிந்துரை செய்யும் நூல்கள்... எழுத்தாளர்கள்...
      (நீண்ட யோசனைக்குப் பிறகு...) நான் தமிழில் வாசிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகின்றன. தமிழில் என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் இல்லை என்றே சொல்லலாம். இருந்தும் தமிழில் நான் திரைப்படமாக எடுக்கவிரும்பும் நாவல் ஒன்று இருக்கிறது என்றால் அதுபுயலிலே ஒரு தோணிதான். ஆனால் அந்நாவல் ஓப்பனிங் காட்சிகளுக்கே பல கோடிகள் செலவு செய்யவேண்டியிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக