புதன், 27 நவம்பர், 2013

களஆய்வும் வழக்காறுகளும்



கட்டுரை ஆசிரியர்: முனைவர் செ.ஸ்டாலின், உதவிப்பேராசிரியர், குருநானக் கல்லூரி, சென்னை.
 
திருப்போரூரிலிருந்து திருக்குன்றம் போகும் வழியில் ஓர் ஊர் உள்ளது. அங்கு நானும் என் நண்பரும் கதை சேகரிக்கச்  சென்றிருந்தபோது ஊர்த்தலைவரிடம் அனுமதி வாங்குங்க என்றனர். அது உள்ளாட்சி தேர்தல் நேரம், தலைவர் பொறுப்பில் இருந்தவர் மீண்டும் போட்டியிடுகிறார். அவர் வீடு எங்களுக்குக் காண்பிக்கப்பட்டது. வாசலில் நின்ற இருவரிடம் விவரத்தைக் கூறினேன். எங்களை ஏறஇறங்கப் பார்த்த அவர்கள், தலைவரை அவ்வளவு சீக்கிரம் பார்த்துவிட முடியாது. இப்பொழுதுதான் அவர், நான், இவன் எல்லாம்கேன்வாஸிங்  போய்விட்டு வந்தோம். தலைவர், ‘ரெஸ்ட்எடுக்கிறார். நீ எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல் என்று கூறினார். அருகிலிருந்த அவர் நண்பர் காதில் ஏதோ சொல்ல மறுபடியும் சந்தேகத்துடன் பார்த்துவிட்டுசரி உள்ளே வாஎன்றழைத்து அமர சொன்னார். நீங்கள் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்களா? அல்லது ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்தி சேகரிப் பவரா எனக் கேட்டனர். நாங்கள் கதை சேகரிக்க வந்தவர்கள் என்றால், அவரோ அதனை ஏற்கமறுத்துப் பேசிக்கொண்டிருந்தார். சட்டென்று நான் வைத்திருந்த பையைப் பிடுங்கிச் சோதனை போட்டார். என்னுடன் வந்தவனுக்குக் கோபம் வந்துவிட்டது. நான் மெதுவாகத் தலைவரைப் பார்த்து அனுமதி வாங்க வேண்டும் என்றேன். அவர்ஊரு கெட்டுக் கிடக்குது, இது எலக்ஸன் டைமு. சரியா.. ஒழுங்கா நடந்துக்கம்.. பொம்பளங்க கிட்ட பேச்சி வெச்சிக்காதீங்க... புரிஞ்சிதா... எனக்கு ஐநூறு, இவனுக்கு ஐநூறு கொடுத்துட்டு போ.. தலைவருக்கிட்ட நா சொல்லிக்கிறெங்என்றார். பக்கத்திலிருந்தவர் சொன்னார், இவுரு சொன்னா தலைவர் சொன்னா மாதிரி... தலைவருக்கு இவெங் கொண்டாங்கொடுத்தா ஒறவு... என்று வாயில்ஜொல்ஊற்ற தலை சரிந்து கூறிக் கொண்டிருந்தார். இவர்களுக்குப் பின்னிருந்த மதில் சுவருக்குப் பின்னே ஒருவர் எங்களைப் பார்த்து வெளியே வந்துவிடுங்கள்.. என்பது போல சைகை காட்டிக் கொண்டிருந்தார். எங்கள் கண்கள் அவரைப் பார்த்துஎங்களை எப்படியாவது காப்பாத்துங்கஎன்பது போல சைகைக் காட்ட இவங் களையும் பார்த்துக் கொண்டன. இறுதியில் நா உள்ளே போய்ட்டு வர்றே இருங் கன்னு ஒருவர் சொல்ல, வராத அழைப்புச் செல்லிடப்பேசியில் வந்தது போல ஆங்கி லத்தில் பேசிக் கொண்டு சிக்னல் இருக்கும் திசை நோக்கி நடப்பது போல வேகமாக நடந்து வெளியேறினோம். எனக்கு முன் என் நண்பன் ஓடினான் சைகைக் காரனிடம்.சரி இந்த மொற தொகுத்ததுலயிருந்து இப்ப ஓர் ஒப்பாரி, ஓர் விடுகதை...
ஒப்பாரி    

நா சித்தாடக் கட்டின நாளையில
என்ன இட்டும் போன எமனெ!
என்ன பெத்தவரும் அம்மாளும்
எனுக்கு இந்த வயசுல
எனுக்கு இருக்கலிகாடா
கூலி அனுப்பி வெச்சானொ!
எனுக்கு பாயப் படுக்கப் போட்டு,
எனுக்கு பச்சரிசி கிள்ளிப்போட்டு
நா பாவிவூட்டு வாசலிலே
பாவி நானும் வாழுறேமா
எனுக்கு முருங்க பழுதுவெச்சி
முருங்கக்கா தட்டுலயிட்ட அந்த
முண்டவூட்டு வாசலிலே
என்னப் பெத்த அம்மாளும் அப்பனொ
நானு மூணு நாளு வாழலியே
எனுக்கு ஈரப் பெருங்காயொ
இரு சாதி வேம்மம்மாரொ
எனுக்கு இருசாதிக் கூட்டத்திலெ
நா இருந்த மரம் கொள்ளலையெ...
எனுக்கு நெல்லி நெகலோரொ
நெல்லிமரம் சூதாடும் நா
நெத்திலெ பொறந்தப் புள்ள
நின்னு பொலம்ப சொந்தமில்ல!
வாழமர நெகலோரொ
வாழ்மரொ சூதாடும்
நா வனத்திலெ பொறந்த புள்ள எனுக்கு வந்து அழ சொந்தமில்ல!
எனுக்குச் சின்ன வயசினிலெ
சித்தாட கட்டுன நாளையிலெ
சிறு சடங்குப் போடுமுன்லெ
சிரிச்சி நாமுன்னெ அழுதுவிட சம்மதமா..... ஆங்...
பாவாடக் கட்டுமுன்னெ
மாபெருஞ்சடப் போடுமுன்னெ
பேச்சில எறங்குமுன்னெ பிரிஞ்சிவிட சம்மதமா..... ஆங்...
பதுங்கு வரவானது
பஞ்சாங்கம் பாத்தாலும்
பதுங்கும் பதராச்சி
எனுக்குப் பெத்த பஞ்சாங்கமும் பொய்யாச்சீ.....ஆங்...
தெப்பகுளம் எகிறிக்குதிக்குலான்னா
எலையும் சறுக்குதம்மா...
என் நாகமும் சீறுதம்மா...
கட்டு செம பன ஓல
பக்கத்துல தெப்பகுளம்
நாபதறிக் குதிக்கிலான்னா பல நாகமும் சீறுதம்மா..... ஆங்...
என்னப்பெத்த அம்மாளும்அப்பனொ
எனுக்கு என்ன கெதி வெச்சிருக்கே?
நா அழுது அழுது பொலம்பறது
உங்குளுக்குக் கேக்கலையொ... ஆங்..
அய்யோ!
பாம்புக்கு ரெண்டுக் கண்ணு
பரமசிவன் பெத்தப்பொண்ணு
நா பாம்ப நோக அழுலப்பா - என்னப்
பெத்த அப்பன நம்பி அழுறேம்பா... ஆங்...
எனக்குத் தேளுக்கு ரெண்டுக்கண்ணு
தேவேந்திரன் பெத்தப் பெண்ணு
தேனிருக்கும் பள்ளத்திலே - அந்த
கொடுமைக்கார பாவிங்கொ - அந்த
தேனிருக்கும் பள்ளத்திலெ!
தாழவிட்டுத் தள்ளினாங்கொ...
நா தேள ஒதறுவேனொ இல்ல
தெனறி விழுவேனொ!
பாம்ப ஒதறுவேனொ இல்ல
பதறி விடுவேனொ!
எனக்குப் போருப்பொராண்டு வரும் என்ன வுட்டுப் போன சீமானெ நா
பொல்லாதாங்கொ எனக்கு
வெறுவாயில தண்ணீ வரும்...
நீங்க இல்லாத நாட்டுல எனுக்கு
கொடுமைக்காரப் பாவிங்கயெல்லாஞ்
சேந்து பாழுங்கணத்தெ தள்ளுறாங்கொ.
 
- தி.நீலாம்பாள், கோட்டக்காடு, செய்யூர், வயது:48.

விடுகதை
 
இரும்புலி ஓடையில அவரவர் ஜாடக்கண்டு
அந்த மாமனக்கண்டு, அதட்டி மெரட்டி
காலால களையத் தாக்கி
எட்டு நாள் ஒரு வாரொ
கொட்டைய நாதுண்ணு பழத்த உனக்குக் குடுத்து
காப்பாத்தி வெச்ச என்னையெ நீ
கொடுப்பனச் செய்தியெ!
 
இது தா விடுகதை
இதுக்கு அர்த்தொ இன்னான்னா,

அதாவது, ஒரு ராஜா தெனமொ காட்டுக்கு வந்து எதனா ஒரு மிருகத்த வேட்டையாடுவாரு. அப்டி வேட்டையாடி வீட்டுக்கு எட்த்தும் போயி அது சமச்சி சாப்பிடுவாரு. அப்டீ இருக்கும்போது ஒரு நாளு சிங்கோ ஒண்ணு அவுர தொரத்த ஆரம்பிச்சிது. அவுரு பயிந்துக்கிணு காட்ல ஓடுவாரு. என்னைக் காப்பாத்துங்கொ, என்னைக் காப்பாத்துங்கொன்னு ஓடுவாரு, ஒருத்தரொ காப்பாத்துல அவுர. அப்போ ஒரு மரத்துல நெறய கொரங்குங்கொ இருங்கோ, அதுங்கொ மரத்து கெளைல ஒன்ன தாக்கி அவுர மேல ஏத்திக்கிணு, காப்பாத்துங்கொ அந்த சிங்ஙொ அந்த மரத்தூங்கீ யவோ படத்துங்கடுங்குது. நீ கீய வரமா நா போப்போறது இல்லன்னிக்கிணு.
இப்படி எட்டு நாளு ஒரு வாரமா மேலியெ இருக்குறாரு. சாப்பாடு ஆகாரொ எல்லா இந்தக் கொரங்குங்ஙொ மரத்துலார்ந்து பழோ காயி எல்லாத்தியொ குடுத்துட்டு, அந்த கொட்டைங்கள இதுங்கொ சாப்புடொ. இப்டீ எட்டு நாளு காப்பாத்திங்கிதுங்ஙொ. இந்த சிங்ஙொ கீயவெ இருந்து பாத்துக்குணு, எட்டு நாளு ஆயிப்போச்செ இன்னொ இன்னா பண்றதுன்னு போய்டுது.
எட்டு நாளிக்கு அப்றொ சிங்ஙொ போனதே இந்த ராஜாவ கீய எறக்கி வுட்டு வூட்டுக்கு அனுப்புதுங்கொ. இவரும் வூட்டுக்கு வந்துட்றாரு. ரெண்டு மூணு நாளு ரெஸ்ட் எட்த்துட்டு மறுபடியொ காட்டுக்கு வேட்டைக்கிப் போறாரு. தெனொ வேட்டையாட்ற மிருகங்களா வூட்டுக்கு எட்த்தாந்துடுவாரு. ஒரு நாளு எந்த மிருகமொ கெடைக்கில. கெடைக்கிலன்றதுக்காக ஒரு குட்டிக் கொரங்க சுட்டு எட்த்தும் போயிட்றா. அந்தக் குட்டிக் கொரங்ஙொட தாயி கொரங்கு தவிக்குது. இதுங்ஙொ நெனெக்கிது, இவன நம்போ எப்டீல்லா காப்பாத்துனொ, இவுனுக்கு பழொங் குட்துட்டு, நம்மோ கொட்டைய சாப்புட்டு இவுன பாதுகாப்புப் பண்ணி வெச்சிருந்தொ, நம்பொ கொழந்தைன்னுக்கூட பாக்காம சுட்டு எட்த்தும் போய்டானேன்னு, அழுதுக்கிணு கொண்டுக்குணு இருக்குதுங்கொ.
மறுபடியொ அந்த ராஜா வேட்டைக்கு வரும்போது அந்த சிங்ஙொ மறுபடியொ பாத்து தொரத்துது. இவெ மறுபடியொ அந்த எடத்துக்குத்தா ஓட்றா. என்னக் காப்பாத்துங்கொ! என்னக் காப்பாத்துங்கோண்ணிக்கிணு. அதுக்கு அந்த கொரங்குங்கொ சொன்னதுதான் மேல இருக்குற பழமொழி .
- மு.சாந்தி, அகரம்தென், வயது:45.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக