புதன், 27 நவம்பர், 2013

நாவல்ஸ் கலைஞர்- முனியம்மாள்


-சந்திப்பு: இர.பூபாலன், அல்லாளச்சேரி, கலவை, வேலூர்.

நாடகக் கலைஞர் முனியம்மாள் நண்பர் சாரதியின் உதவியால் அறிமுகமானார். முனியம்மாள் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகில் உள்ள வெம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர். இவருடைய பூர்விகம் கும்பகோணம், கொல்லடங்காவிரி அருகில் இருக்கும் ஶ்ரீ புரந்தான் அரங்கோட்டை. தந்தை சின்னசாமியின் மூலமாகதான் டிராமாவில் நடிக்க வந்தார். சின்னசாமி அவர்களும் நாடகத்தில் மிக சிறந்து விளங்கி யவராம். தன் சொந்தக்காரரான முருகப்பனுக்கு ஆறாவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டார். இவரும் சிறந்த நாடக நடிகர். மிருதங்கம், ஆர்மோனியம், நடிப்பு போன்ற பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தவர். முனியம்மாளுக்கு ஒன்பது பசங்க. ஆறு ஆண்பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். தனது பெரிய மகன் தங்கராஜ் மட்டும் ஆண் பிள்ளைகளில் நாடகம் நடித்து வருகின்றார். இவரைப் போன்றே மூன்று மகள்களும் தமிழ், உஷா, ஆண்டாள் இவர்களும் ஒவ்வொரு நாடகக் கம்பெனியில் நடித்து வருகின்றார்கள்.

நாவல்ஸ் நாடகத்தைப் பற்றி முனியம்மாள் கூறியது:
        ஆரம்பத்தில் நாங்கள் டிராமாதான் நடித்து வந்தோம். எனக்கு அகவை 7இல் இருந்து நாடகம் நடித்து வருகின்றேன். நான் பாவாடை, சட்டை, சீலை போன்றவை அணிந்து நடித்தேன். தற்போது  காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்றால்போல சினிமாவில் இருக்கும் நிலையைப் போன்று ஆடைகளும் நடிகர்கள் செய்யும் செய்கைகள், நகைச்சுவை, பாடல் முறைகள் போன்றவற்றை மாற்றிக் கொண்டு நடிக்கின்றனர்.
எனக்குச் சிறிய வயதாக இருக்கும்போது என் தந்தையுடனும் கணவருடனும் ஊர் ஊராகச் சென்று புராணக் கதைகளை மையமிட்ட கதைகளை நாடகமாக நடித்தோம். பிரதி ஆசிரியர் பாடிய பாடல்கள், வசனம், நடை போன்றவற்றை அப்படியே நடித்துக் காட்டினோம். தற்போது நவீன காலத்திற்கு ஏற்றால்போல டிராமா வடிவில் இருந்து புராணக்கதை, நாவல்ஸ் என்ற இரு பிரிவாக மக்கள் பிரிகின்றனர். இருப்பினும் இலக்கியம் படித்தவர்கள் வெகுசன நாவல்களைக் கதையாக நடித்துக்காட்டும் இதற்கு நாவல்ஸ் என்ற பெயரால் அழைக்கின்றனர்.
நாவல்ஸ்இல் சினிமா பாடல்கள், வசனங்கள், தற்போதைய சிக்கல்கள் ஆகியவற்றை நடித்துக் காட்டுகின்றனர். தொடக்க காலங்களில் டென்ட் அடிச்சு நான்கு பக்கமும் வளைவும் டிக்கட் மூலம் நாடகத்தை மக்களுக்கு நடித்துக் காட்டப் பட்டது. அல்லி, சாவித்திரி, லலிதா, கண்ணகி, மணிமேகலா தெய்வம், நலாயினி, அரிச்சந்திரன், பஃப்பூன் போன்ற வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார் முனியம்மாள்.
நடிப்பில் சிக்கல்:
புராண கதைகளில் மையமிட்ட காலம் சென்று, தற்போது நாவல்ஸ் என்ற வடிவம் வந்த பிறகு மக்களை எளிதில் கவர முடிகிறது. முனியம்மாள் பரம்பரையாக நடிப்பு குடும்பத்தில் வந்தவர்.பொதுவாகப் பெண்கள் நாடகத்தில் நடிக்கும் போது மிக அதிகமான சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. பெண்கள் தன் கணவருடன் நடிக்கும் போதும் அவருடன் காதல், திருமணம் போன்ற காட்சிகளில் நடிக்கும் போது நெருங்கி நடிக்கின்றனர். ஆனால் மற்றவர்களிடம் காதல் போன்றவற்றில் நடிக்கும்போது  அவ்வாறு நடிக்க முடியாது. ஆனால் அந்த நடிகர் நெருங்கி நடிக்க விரும்புவார். இவ்வாறு நாடகத்தில் பெண் எவ்வாறு தன் கணவனுடன் நடிப்பதைப் போன்று மற்றவர்களிடம் நெருங்கி நடிக்க இயலும். இது சிக்கலான செயல் அல்லவா?
முனியம்மா தன் ஏழு வயது முதல் எழுபது வயது வரை நடிப்பின் மூலம் சிறந்து விளங்கியவர். இருப்பினும் தனக்காக எதையும் சேர்த்து வைக்கவில்லை. முனியம்மா காலத்தில் காலனா, அரையனா, ஓரனா என்ற நிலையிலே நடித்துத் தன் வாழ்க்கையை நடத்தி வந்தவர். தனது மூன்று மகள்கள் இன்று ஒவ்வொரு கம்பெனியிலும் முன்பணம் பெற்று ஒரு நாளைக்கு ஐநூறு முதல் எழுநூறு வரையிலான பணத்தைப் பெற்று நடித்து வருகின்றனர்.
கலைஞர்களுக்கு நாடகம் என்பது  பருவக்காலங்களைப் போன்றது ஆறு மாதம் நாடகம் நடித்து அடுத்த ஆறு மாதம் அதை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தவேண்டும். தன் மக்களைக் கண்ணும் கருத்துமாக வளர்ப்பதிலேயே குறிக்கோளாக இருந்தார்.
தன் மகன்கள் ஆறு பேரில் ஐவர் ஒவ்வொருவரும் தனது திறமைக்கு ஏற்றாற்போல் வேலை செய்து இராணிப் பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்களாம். ஒருவர் மட்டும்தான் நாடகம் நடித்து வருகிறார். அவரது பெயர் தங்கராஜ்.
முனியம்மா கோவிலன் கதை, நளாயினி, அரிச்சந்திர புராணம், நல்லதங்காள், கிருஷ்ண லீலை, இரணியன் போன்ற புராணக்கதையில் நடித்து வந்திருக்கிறார். சென்னையில் இருக்கும் மீனாம்மாள் உதவியால் பல இடங்களுக்கு நாடகத்தை நடித்திருக்கிறார். இதுபோன்றே நவீன நாடக மரப்பாச்சிநாடகக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அ.மங்கையின் மூலமாகவும் முனியம்மாள் பாண்டி, டெல்லி போன்ற பல்வேறு இடங்களுக்குச் சென்று நடித்து வருகிறார்.
இவ்வாறு தொடக்கத்தில் ஊர் ஊராகச் சென்று நாடகம் நடித்துப் பின்பு திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறார். அவ்வூர் மக்கள் நடிப்பைக் கண்டும் அவர்களுக்கு இடம் தந்திருக்கின்றனர். இருப்பினும் நடிப்பு முடிந்த காலம் முதல் தற்போது தெரு ஓரமாகப் பூ வியாபாரம் செய்து வருகிறார். தனக்கென்று ஒன்றும் சேர்த்துக் கொள்ளாமல் தன் பிள்ளைகளை அதே நாவல்ஸ் நாடகத்தில் ஈடுபடவைத்ததுதான் முனியம்மாளின் தனி சிறப்பு.

அகவல்

கவிதை:
பெ.நிர்மலா, இணைப்பேராசியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி. சென்னை.

பூத்துக் குலுங்கிக்
கூடுகளுக்கு இடமளித்த மரம்
தன் வேர்களிலிருந்தே விலக்கப்படும் காலம்
செல்லமாகச் சிணுங்க வைத்து
வருடிக் கொடுத்த காற்று
உன் பருத்த கிளைகளிலே
மோதி மோதி
உடைப்பட்டுப் போகும்

எனது கொள்கைகளுக்காக நீயும்
உனது கொள்கைகளுக்காக நானும்
மணம் முடித்துக்கொண்டோம்
நமது கொள்கைகள்
துகிலுரித்துக் கொண்டன
சேர்ந்தவை உடல்கள் மட்டுமே.

உன் வாழ்க்கையின்
முன் பக்கங்களைப் புரட்ட
மனமில்லைதான்
என்றாலும்... அடுத்து வந்த
பக்கங்களின் வெற்றிடங்களால்
முன்னோக்கி நகர்த்தப்பட்ட கை
ஏற்றியது மனத்தில் பாரத்தை...
புதை குழியாய் நினைவுகள்
அழுந்தி மூழ்கியது நான் மட்டும்.

வெறுப்பைக்கூடக்
கரிசனம் காட்டும் வெளிப்படுத்தும்
உன்னிடம்... அன்பைக்கூட
நீ வெறுக்கும் வண்ணம்தான்
வெளிப்படுத்த முடிகிறது.

பெருங்காடன் க(வி)தைகள்

கவிதை:
பெருங்காடன்

நல்லா படிக்கல, நடு வெரல்ல எச்ச தடவி
நடு மண்டயில, நறுக்குனு ஒரு கொட்டு
பதினோராம் வகுப்பில் சிறப்புத்தமிழ்
பன்னிரெண்டு முடிந்ததும் இளங்கலைத் தமிழ் இலக்கியம்
பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சியில் தமிழ்க்கலை இலக்கியம்

ஆரம்பத்தில் டீக்கடை நாயர்
ஆந்திரா மெஸ் ரெட்டி, மார்வாடி சேட்டு
அடுத்து ஒரிசா, பீகார், மகாராஷ்டிரா, உத்திரபிரதேச..
கிராக்கி அதிகமுள்ள சித்தாள் பெரியாள் வேலையாட்கள்..
அத்தனைபேரும் செம்மொழித் தமிழைக் கற்று
உடனே மொழிந்தார்கள் “ஏம்பா தமிழ் படிச்சா என்னப் பண்ணலாம்”
இவர்களுக்கு
குடும்ப அட்டைகளோடு தேர்தலுக்கான அட்டையும் கொடுத்தாகிவிடும்…

அதுசரி நம்மூர் சேமியா ஐஸ்காரர்
மூங்கில் கொம்பில் பொம்ம (வாட்சு) மிட்டாய் விற்பவர்..
சுண்டல்கார ஆயா.. பனஞ்சக்க விக்கும் தாத்தா..
யார் வாங்கினார்கள் இவர்களை?
குழப்பத்தில் குழம்பிப் போனேன்..

காலை எழுந்ததும் டிங் டிங் டிங்கென மஞ்சள் ரோஸ் கலரில்
மணியடித்துக் கொண்டே பஞ்சு மிட்டாய் விற்கிறார் ஒருவர்!
மதிய நேரத்தில் கதவு தட்டி, பெட்சீட் சொட்டர் என
ஐம்பது ரூபாய்க்குக்கூட
கொடுக்கத் தயாராய் இருக்கிறார் இன்னொருவர்!
மாலை மூன்று நான்கு மணிக்கு
பிளாஸ்டிக் பூ பீங்கான் பொம்மைகளென
வீட்டினுக்குள்ளேயே பரப்பி விற்கிறார் ஒருவர்!

மாலை இரவு இடைப்பட்ட நேரத்தில்
பேல்பூரி, பாணிப்பூரி, சமோசா, ஜிலேபி
அடுத்து சூடாக உடனுக்குடன்
வெஜ், எக், சிக்கன், பீப் பிரைட் ரைஸ் என
லேட்டஸ்ட் தமிழ்ப்பாட்டுப் போட்டு அமோக வியாபாரம் செய்கிறார் அவர்!

இரவில் தெருவுக்குத் தெரு
குல்பி குல்பி குல்பியென கூப்பாடு போடுகிறார் இவர்!
தெரியும்தானே இப்பொழுது பிச்சையெடுப்பவர் கூட
புள்ள குட்டிகளோடு வயதான தமிழர்கள் கிடையாது (இந்தியர்கள்தான்..)..
இதற்கு மேலும் அடுக்கினால் காந்தி பெரியார் வழி காங்கிரசார் போல்
இது ஒருமைப்பாட்டிற்கு விரோதமாய் எழுதின வயிற்றெரிச்சல் கடுதாசி என்பீர்

வழக்கம்போல் தஞ்சமடைந்தேன்
தமிழ் ஆயாவிடம் விளக்கம் கேட்டு
பதிலேதும் சொல்லாது
“ஆக்கிப் போடுறவ கெட்டவளாப் போயிட்டா
வழிகூட்டி அனுப்புறவ நல்லவளாப் போயிட்டா”
புரியவில்லை என்றேன் / தமிழ்-நாடு, அரசு-அரசியல்
எவராண்டாலும் நமக்கில்லை என்றார்

மீண்டும் முழித்தேன்
“ரோட்டு முக்குல ‘மோடி வித்த’ காட்டுறாங்க” என்றார்.
 
***

தாத்தாக்களும் பாட்டிகளும் கதிர்களை அறுவடைச் செய்ய ஆர்வமாய்க் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அய்யாக்களும் அண்ணன்களும் அவர்கள் விசயத்தில் ஆத்மார்த்தமாய் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அக்காக்களும் தங்கைகளும் உடல்மொழியெனவும் உற்சாகமாய் தங்களுக்குள் தாங்களாகப் புழுகிக் கொண்டிருக்கிறார்கள். முளைக்காத இறகுகளை யெண்ணி சீட்டுக்கவிகளும் ஏட்டுக்கவிகளும் பிரகாசமாய்ப் பறந்துக் கொண்டிருக் கிறார்கள். விசயமறிந்த அத்தனை விஞ்ஞானிகளும் அணைந்த விளக்காய் விளக்கம் தராமல் ஒளிந்திருந்தார்கள். பிறந்த குழந்தைபோல காற்றும் புயலும் நெடுமழையும் வீழ்அருவியும் கோழிபோலப் புலம்பிக்கொண்டேயிருந்தன. ஓவியமும் சிற்பமும் செய்வதறியாது இப்பொழுது பேச ஆரம்பித்திருக்கின்றன. சில நகலோவியங்கள் (நவீன ஓவியமாம்...) அசலாய் நடிக்கவும் ஆரம்பித்திருக்கின்றன. அப்படி... கடவுளிருந்தால் அத்தனையும் கண்ணாம்பூச்சி விளையாடும் (இங்கு தமிழ்ச் சினிமா பற்றி... யப்பா பேச்சே வேணாம்) சரி இப்பொழுது ஒரு காட்சி:- நெடுஞ்சாலை விபத்தில் சிக்கிய நாய்/பூனை போல தரையோடு தரையாகச் சேலைபோல் படர்ந்திருந்தன நிறைய மண்டைகள். கண்கள் நசுங்கியும் ரத்தக்கொத்துகள் ஆங்காங்கே கட்டியும் கட்டாமலும் கன்றுக்குப்பின் மாடு ஈன்ற உறுப்பைப் போலக் கொழகொழப்பாய் இருந்தன. கை, கால்... முண்டங்களின் கீழ் சீழ் காய்ந்து... எதையோ குறிப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தன. சனப்பொழுதில் உயிர் பிரியும் நபர் “ஐயோ! துப்பாக்கிப் பற்கள் பெண்ணெனப் பாராது மென்று தின்றன... முனைக்கத்தி துப்பாக்கி உள்புகுந்து கருப்பைக் கண்டு கிழித்தது... வேண்டாமடா... ஆனாலும் அந்தோ கேட்கிறதே குரல்கள் அத்தனையும் உம் உறவுகள்” என்று சனப்பொழுதிலேயே பிரிந்தது. அந்தப் பக்கம் சிரித்த முகமாய்க் கெரடப்பார்வைக் கொண்ட சிறுவர், வாயெடுத்தார்... “இன்னுமொரு தலைவர் வருவார்... நிச்சயம் தருதலைகளை அறிவார்... பொய்யாகத் தமிழ்-கிமிழென உசுப்பேற்றி உணர்வூட்டுவதாய் அழவைத்தவரெல்லாம்... (மதம், ஜாதி தவிர்க்காத பகுத்தறிவாளர்களும்/ பொதுவுடைமைவாந்திகளும்) அப்பொழுது வேரோடு அடையாள மற்றுப் போவார்” என்று இந்தப் பக்கம் சிரித்த முகமாய்ச் சிதைந்தார். இப்பொழு தும் தாத்தாக்கள், பாட்டிகள், அய்யாக்கள், அண்ணன்கள், அக்காக்கள், தங்கைகள், கவிகள்-கிவிகள், ஞானிகள்-கோனிகள் என அத்தனை சீமான் சீமாட்டிகளும் “குய்யோ முறையோ” வென வழக்கம்போலவே ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள்... இங்கு இன்னுமொருக் காட்சி:- விழாக்காலங்களில் ஆடுகளைப் பலியிடுகிறார்கள். கழுத்தறுபட்ட ஆடு துடிக்கிறது. தலைக்கும் உயிர் இருக்கிறது... தலையில்லா முண்டத்திற்கும் உயிர் இருக்கிறது... மேற்சொன் னோர்களின் குய்யோ முறையோ ஓலங்கள் இப்பொழுது படி... படியாய்... அரசு, குடும்பம், தனிச்சொத்து வாசிக்க ஆரம்பிக்கிறது (வியாபாரி அடுத்துக் காட்டும் படங்கள்... எத்தனை பயங்கரமோ).

கிராமம்

கவிதை:
-அவ்வை, அரணாரை, பெரம்பலூர்

பட்டணத்துக்கு படிக்க வந்து
முனைவர் பட்டம் பெற்றுச் சென்றேன்...
எல்லாம் மாறிவிட்டது
அம்மா, அப்பா பாசம் தவிர!
ஊஞ்சல் கட்டிய புளியமரம்
அதன் வேரைக்கூடக் காணோம்.
 

பம்பரம்
கோலிகுண்டு
டயர் வண்டி
பில்லுகோட்டி...
முழுக்க தேடிப் பார்த்தேன்
சிறுவர்களுக்கு அது தெரியவில்லை
எல்லாம் மாறிவிட்டது….


நீச்சல் கற்றுக்கொண்ட
ஒவ்வொரு கிணறாய் பார்த்தேன்…
கிணறுகள் அப்படியே இருக்க
ஓதம்கூட காணவில்லை!


தீப்பெட்டிக்குள் வண்டு பிடித்து
தட்டான் பிடித்து நூல் கட்டி
பட்டாம்பூச்சி பட்டம் விட்டு
விளையாடிய இடமெல்லாம் மாறிவிட்டது...,


தெருவிளக்கில் படிக்கவில்லை!
ஐஸ்பாய் விளையாட்டும் தெரியவில்லை!
நுணாம் பழத்துக்கும் கொடுக்காப்புளிக்கும் அலையவில்லை!
கிரிக்கெட் விளையாடி
வீட்டிலேயே குளித்து
டியூசன் சென்று
டி.வி. முன்னால் அடங்கிப் போகிறது வாழ்க்கை...
ஒன்று மட்டும் மாறவில்லை

நாங்கள்
பறத்தெருவில் தான் இருக்கிறோம்.

பிளாஸ்டிக்

கவிதை:
-க.அமரேசன், மேல்மா, வந்தவாசி.

மலையின் மரமொன்றில்
தேனும் தினைமாவும்
சரிபாதி கலந்துண்டு...
சுனை நீராடி
பூக்கள் தொடுத்து
விளையாடி
வேட்டையாடி
வீரம் காட்டி...


மழையில் புணர்ந்து
குளிரில் விரைத்து
வெயிலில் காய்ந்து
மாலை பொழுதில்
மனம் மகிழ்ந்து...

கடற்கரை பரப்பில் காலாற்றி
மலரின் மகரந்தமும்
புலால் நாற்றமும் வீசி
சுரம் வழி கடந்து...
மரத்தின் தேன் துளி
விழுந்தது!
லேபில் ஒட்டிய
டப்பாக்குள்…

தெரு...


கவிதை:  
-பாவலன், பூதூர், மதுராந்தகம்.

இயற்கை சூழ்ந்த
அழகு பூங்காதான்
கவிதைக்கான கருவறை
பூக்களோடும் மரங்களோடும்
குயில்களோடும் பறவைகளோடும்
பேசிப் பேசி எப்படியாவது
ஒரு கவிதை முடித்துவிட வேண்டும்
காத்து நின்றேன்
அப்பொழுதெல்லாம்
ஒவ்வொரு கவிதையும்
முதல் காதல் நினைவைப் போன்று
வாய்த்தது
இன்னும் சில கவிதைகள்
அவளுக்காகவும் படைத்திருந்தேன்

அப்படித்தான்
நான்…
கவிதைக்காகத்தான் வந்திருக்கக் கூடும்
ஒரு போதும் எனக்காக அல்ல…
மண்வெட்டி
கத்தி
கடப்பாறை
கோடாறி காம்பு
கோணி ஊசி
செய்வதுதான்
உண்மையான கவிதை.



மாரிசெல்வராஜின் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்





- முத்துவேல், சென்னை.
 

பரவலாக அறியப்பட்ட வரலாற்றில் இதுகாறும் சொல்லப்பட்டவை, எழுதப்பட்டவை, செதுக்கப்பட்டவை என அனைத்தையும் தந்தது வென்றவர்களும் கொன்றவர்களும் அதைக் கொண்டாடியவர்களும் தான். அவர்கள் தம்மால் கொல்லப் பட்டவர்களின் பிணங்களின் மீது ஏறி நின்று வீர வசனங்கள் பேசினார்கள், பாடல்கள் இயற்றினார்கள், புராணங்கள் பாடினார்கள். இப்படியாக வரலாற்றைச் சொந்தங் கொண்டாடுகிறார்கள். தனதென பறைசாற்றுகிறார்கள். கொல்லப்பட்டவர்கள் நயவஞ்சகர்களாகவும் துரோகிகளாகவும் வாழத் தகுதியற்றவர்களாகவுமே சித்திரிக்கப் பட்டிருக்கிறார்கள். கொலைக்களத்தில் இருந்து தப்பித்தவர்களும், கையொடிந்து மனம் நொடிந்தவர்களும், விடுபட்டுப்போனவர்களும் வரலாறு எழுதினால், அது இப்படித்தான் இருக்கும். கைநீட்டும். காறித்துப்பும். செவிட்டில் அறையும். பதற வைக்கும். அவர்களை அம்மணமாக்கி ஓட விடும். ‘தாமிரபரணியில் கொல்லப் படாதவர்கள்கதை எழுதினால், துப்பாக்கிக் குண்டுகளையும் அவற்றை ஏவி விட்ட நாற்காலிகளையும், வேடிக்கை பார்த்த வாய்களையும் பார்த்து இது போன்றும் இதை விடத் தீவிரமாகவும் கேள்விகள் கேட்பார்கள். திண்ணியத்தைப் பற்றி, பரமக் குடியைப் பற்றி, தர்மபுரியைப் பற்றி. அவர்கள் தான் இனி திருக்கோவிலுரை பற்றியும் கேட்பார்கள்.
மங்கலாக நினைவிருக்கிறது அந்தப் புகைப்படம். நான்காம் வகுப்போ ஐந்தாம் வகுப்போ நான் படித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆற்றுக்குள் சிதறி ஓடும் ஒரு கூட்டத்தை லத்தி கம்புகளோடு போலீஸ்காரர்கள் துரத்தும் புகைப்படம் அன்றைய தினசரியில் வெளியாகியிருந்தது. அந்த வயதில், பரபரப்பான செய்திகளின் மேல் ஏற்பட்டிருக்கக்கூடிய ஈர்ப்பினாலோ என்னவோ, மனதின் கடைசி மூலையில் பதுங்கியிருக்கிறது இன்னமும். அதன் பிறகு, வாசிக்கக்கற்றுக் கொண்டு இன்னது இன்னவென்று தெளிந்துணரும் காலத்தில் காட்சி எனும் வலைப்பூவில் மாரி செல்வராஜ் அதே சம்பவத்தை விவரித்து எழுதியிருந்ததை வாசித்தபோது சடாரென்று ஒரு நடுக்கம் கவ்விப்பிடித்து உலுக்கியது.

இடிந்தகரையை போலீஸ் மூச்சுத்திணற வைத்த ஒரு மார்ச் மாதத்து மாலை வேளையில் எக்மோரில் ஒரு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. வழக்கம் போல அனைவரும் தொட்டும் தொடாமலும் பேசி முடித்த பின் ஒரு கருத்த ஜீவன்,  “அங்க எம்மக்கள் துப்பாக்கி முனையில நின்னுக்கிட்டு இருக்கானுவ. நீங்க சாவகாசமா பேசுறது எனக்குப் புரியலஎன்ற தொனியில் தவிப்புடனும் கோபத்துடனும் கேள்வி கேட்டது. அது தான் மாரி செல்வராஜ். தாமிரபரணியில் இருந்து நேரே புறப்பட்டு 13 ஆண்டுகள் கழித்து அதே சீற்றத்துடன் வந்து விழுந்தது அந்தக் கேள்வி.
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்என்ற கதையில் முகிலன் கேட்பான்வேடிக்கை பார்ப்பவர்களுக்கு என்ன தெரியும்? வேடிக்கை பார்க்கத்தான் தெரியும்.’ நிற்க. வெகுநாட்களாக இந்தத் தொகுப்பைக் கைகளில் வைத்துக்கொண்டிருந்தும் இப்பொழுதுதான் முழுதாக வாசித்து முடிக்க முடிந்தது. சோம்பேறித்தனம் ஒரு காரணமென்றாலும் இந்தக்கதைகளை எதிர்கொள்ள மிகுந்த தயக்கம் இருந்து கொண்டிருந்தது. பல சமயங்களில் அதன் சூடு என்னை அலைகழித்திருக்கிறது, அதைத் தூக்கி எறியச்செய்திருக்கிறது. தனித்தனியாக ஒன்றிரண்டு கதைகளை வாசித்ததுண்டு. இவற்றை ஒரு சேர வாசிக்கையில் இந்தக் கதைகளுக்குள் ஒளிந்தி ருக்கும் முரண்களும் ஒற்றுமைகளும் தொடர்புகளும் மெல்லத் துலங்குகின்றன.   
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு கேட்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் நடந்த ஆர்ப்பாட்டத்தை பற்றிய கதைதான்தாமிரபரணியில் கொல்லபடாதவர்கள்’. அந்த ஆர்ப்பாட்டம் என்ன விதமான கோரமான முடிவைச் சந்தித்தது என்பது செய்தியாக தெரியு மென்றாலும், ஒரு பள்ளி மாணவனின் பார்வையில் இருந்து அங்குலம் அங்குலமாக அந்தச் சம்பவம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ‘எம்.ஜி.ஆர் கலரில்இருக்கும் தலைவரைப் பார்க்கவும், தனதுராஜகிளி மாமாவால் ஈர்க்கப்பட்டும், இந்த ஆர்ப் பாட்டத்தில் பங்கு கொள்வதற்காக அவன் திருநெல்வேலிக்கு முதன்முறையாக செல்கிறான். எங்குத் திரும்பினாலும் முண்டியடிக்கும் கூட்டமும், விண்ணைப் பிளக்கும் கோஷங்களும் தான் தென்படுகின்றன. பின் திடீரென, ‘ஈவு இரக்கமில்லாத அதிகாரம் வெறிபிடித்து சுழற்றிய சாட்டையின் தடம் பதிகிறது அனைவரின் முதுகிலும்’.
கண்காணாத ஊரில் இருந்து தமது உரிமைக்காகக் குரல் கொடுக்கத் திரண்டு வரும் மக்களைப் பற்றிய கதை இது. குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு முழக்கமிட்டு வரும் பெண்களும், இந்தப் பதினோராம் வகுப்புச் சிறுவனும், சில வயதானவர்களும் கூட அந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவர் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. சாதித்திமிர் கொண்ட அதிகாரம் ஒரு பக்கம் கூர்கம்பு களோடு துரத்த, இன்னொரு பக்கம் இது எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணியைப் பற்றியும் அதன் தமிழைப் பற்றியும் கூட இந்தக் கதை பேசுகிறது. பொத்தாம்பொதுவாகத் தமிழ்ப் பெருமை சொல்லி தாமிரபரணியின் படித்துறைகளில் நீராடிப் புளகாங்கித மடைபவர்கள் எளிய மக்களின் சதையையும் கண்ணீரையும் குருதியையும் சேர்த்தே தமது உடலில் அப்பிக்கொள்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுகூடுவதையும், தங்கள் அடையாளங்களை மீட்டெடுத்துக்கொள்வதையும் சகித்துக்கொள்ள முடியாத சாதிய நலன்கள் அங்கும் இது போன்ற கூட்டங்கள் எல்லாவற்றிலும் அந்த ஒரு கல்லை வீசுகிறது. “அவன் வீசிய ஒரு கல், மிகச்சரியாக விழ வேண்டிய இடத்தில் விழுந்தது”. தற்காலத்தில் நம் கண்முன்னே அதிகாரம் நிகழ்த்தும் சாதிய வெறியாட்டங்களைப் பற்றிய முக்கியமான பதிவு இது. வாசித்து முடித்த பின் ஆற்றாமையும் கையாலாகாத்தனமும் கோபமும் வெக்கமும் ஒருசேர பாய்ந்து வருகின்றன. உப்பிக்கிடக்கும் இந்த மௌனத்தை எதைக் கொண்டு வெல்ல
இந்தக் கதையின் தொடர்ச்சியாகவோ அல்லது இதற்கு முன்னதாகவோமகாத்மாவைக் கொல்ல ஒரு சதித்திட்டம்என்ற கதையைக் கூறலாம். அம்பேத்கர் சிலையை அசிங்கப்படுத்தியவர்கள் மேல் கோபப்பட்டு காந்தி சிலையை உடைக்கக் கிளம்பும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்பிராமணக்குடி வழியாக நுழைந்து, சாணக்குடி வழியாக வரும்போது மறக்குடியில் ஒரு நாய் மூவரையும் பார்த்து குலைத்து அதகளப்படுத்துகிறது”. அதே மாணவர்கள் அடுத்த நாள்தேசப்பிதா காந்தியடிகள்என்று கட்டுரை எழுத வேண்டியுள்ளது. குறுகுறுப்புத் தெறிக்கும் கதை இது.
இதே இழையில் கோர்க்கப்பட்ட கதைகளாகஅப்பாத்துரை மாமாஎன்ற கதையையும், ‘நின்றெரியும் பிணம்என்ற கதையையும் குறிப்பிடலாம். கோவில் திண்ணைகளிலோ, டீக்கடைகளிலோ ஊர் விவசாய சங்கங்களுக்கு முன்பாகவோ நின்றுஎழுச்சியுரைஆற்றிக்கொண்டிருக்கும் திராவிட இயக்க வழித்தோன்றலான அப்பாத்துரை மாமா தனிப்பட்ட வாழ்வில்எம் பொண்டாட்டி தூம துணிய துவைச்சி கொடுக்கிற வண்ணாப்பய பொண்டாட்டிஎன்று அமிலச் சொற்களால் தனது சாதியை நிலைநாட்டிக் கொள்கிறார். இந்தக் கதையில் இருந்து நீளும் மற்றொரு தளத்தில் நிற்கிறார்காலசாமி கோவில் தெருக் குறிப்புகள்என்ற கதையில் வரும் தோழர்.ராமகிருஷ்ணன். இந்த இரண்டு கதைகளுமே பொது வாழ்விற்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்குமுள்ள முரணை கேள்வி கேட்கிறது. களங்கமற்றவர்களாகவும், கொள்கைக்காக உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்களாகவும் வெளியே தம்மை நிலைநிறுத்திக்கொள்பவர்கள் தமது கொல்லைகளில் எவ்வாறு வலம் வருகிறார்கள், என்பதைப் புட்டு புட்டு வைக்கிறது.
நின்றெரியும் பிணம்’ ,சாதிய அடுக்கு எப்படி கடைசிச் செங்கல் வரை தன்னை இறுக்கமாகத் தற்காத்துகொள்கிறது என்பதைக் காட்டுகிறது. எரியும் சிதையில் நரம்பு விறைத்து எழும் பிணத்தின் கால்கள் தத்தளிப்பான ஒரு சித்திரத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகின்றன. தத்தமது நலன் சார்ந்தே அனைவரும் இயங்குகிறார்கள். தமது பெருமைகளும் நலன்களும் ஆபத்துக்குள்ளாகும்போது எங்கும் எதுவும் நிகழலாம்
இன்னொரு கோணத்தில் அடித்தட்டில் இருக்கும் பெண்களின் இருப்பு எவ்வளவு துச்சமாக கையாளப்படுகிறது என்பதையும் ஓரிரு வரிகளில் பேசுகிறது. ”பெண்கள் மட்டும்தான் தற்கொலை செய்துகொள்வார்கள் என்றே நினைத்திருந்தாள்என்ற வரிகளும் அதன் பின் கொடுக்கப்பட்டுள்ள விவரணைகளும் தவிப்புக்குள்ளாக் குகின்றன.பன்னி மேய்க்கிற சக்கிலிச்சிக்கு மளிகைக்கடை நாடார் மாப்பிள்ளை கேக்குதோ? அதான் கூட்டிட்டுப் போய் சொக்கப்பனை வச்சுட்டானுவஎன்று போகிறபோக்கில் எழுத்தப்பட்டிருக்கும் இந்த வரி, தனது கூர்முனையால் மனதை கீறிக்கொண்டு செல்கிறது.
இந்தத் தொகுப்பில் தென்படும் இன்னொரு இழையில் குற்றமும், குற்ற உணர்ச்சியும், தனிமையும், காமமும், விரக்தியும், காதலும், குரூரமும் கொதித்துக் கொண்டிருக்கின்றன. மற்றொரு இழையில் தொலைந்து போன பால்யமும் அதன் நினைவுகளும் கனவுகளில் ஓவியம் வரைந்து கொண்டிருக்கின்றன. சிறுகதைகளாகமுதல் கல்’, ‘தட்டான்பூச்சிகளின் வீடு’, ‘அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்’, ‘வன தெய்வம்’, ‘எனக்கு ரயில் பிடிக்காது’, ‘நினைவில் கொதிக்கும் பால்யம்’ , ‘செண்பகவள்ளி புராணம்’ , ‘என் தாத்தாவை நான் தான் கொன்றேன்ஆகிய கதைகள் மனதிற்கு நெருக்கமானவையாக இருக்கின்றன.
முதல் கல்லில் தலை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அதன் மயிர் பிடித்து ஆட்டும் சீற்றம் கொண்ட இளங்காமத்தின் வேட்கையைப் பேசுகிறது. அழுகி ஊதிப்போகும் உடலில் இடையறாது சுரக்கும் ஆசைகளையும், அவை பின்பு வெறியாகப் பரிணாமமடைந்து, நடு வெயிலில் எந்த செத்துப்போன கண்ணகிக்காகவும் அலைந்து திரியும் என்ற உண்மையையும் பட்டினத்தாரின் கோபத்தோடு நம்முன் வீசி எறிகிறார்.
ஆணின் காமத்தைப் பேசும் இந்தக்கதையின் இன்னொரு முனையில் நிற்கிறதுவன தெய்வம்’. தனது மகனிற்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போகும் ஒரு தாயின் வாக்குமூலமாக விரியும் இந்தக் கதையில், அந்தப்பெண் தனது பால்யகால மற்றும் இளம்பருவ காலத்து நினைவுகளைக் கூறத்தொடங்கும் இடத்தில் தொன்மங்களின் எல்லையைத் தொட்டுச் செல்கிறது. “உன் அம்மா பிறந்த போது சரியாக ஒரு மரம் சாய்ந்து நம் வீட்டின் ஓட்டில் விழுந்ததாகவும், அதிலிருந்த அணில் குஞ்சுகள் உன் பாட்டியின் உடலெங்கும் விழுந்து ஓடியதாகவும் உன் பாட்டி சொல்லுவாள். அவள் முலைக்காம்பில் இருந்து வடிந்த எனக்கான சீம்பாலை ஒரு அணில் நக்கியதாகக்கூட அவள் சொல்வதுண்டுஎன்ற வரிகள் கவித்துவ எழுச்சியைத் தருகின்றன. காமம் பெருகிப்படர்ந்து வனமாய் எரியும் ஒருத்தியைப் பற்றிய கதை இது. இவ்விரு கதைகளையும் இணைத்துப்பார்க்கும் பொழுது, ஆணின் காமத்தையும் பெண்ணின் காமத்தையும் பற்றிய நுட்பமான அவதானிப்பு ஒன்றும் புலப்படுகிறது. ஆண்களின் காமம், கூட்டமாகச் சென்று, அருகருகே நின்று ஒண்ணுக்குப் போகும் உடனடித்தன்மையுடன் இயங்குகிறது. பின் தீர்ந்து போகிறது. பெண்களுடையதோ, அனைவரும் உறங்கிய ஒளி தீர்ந்த இரவுகளில், தனியே, மெதுவாக தலை தூக்கிப் பார்க்கிறது. பின் நினைவுகளில் பற்றி எரிகிறது. மேலும் தனது கணவனிடம் கூட பகிர்ந்து கொள்ள இயலாத, பகிர்ந்து கொள்வதற்கு வேறு தோழிகளும் இல்லாத, குடும்பச் சட்டகத்துக்குள் சிக்கிக்கொண்ட பறவையாகத் தவிக்கின்றன அவளது உணர்வுகள்.         
இவரது சில கதைகளில்தான் பெண்கள் பிரதான பாத்திரங்களாக இருக்கின்றனர். ஆனால், அவர்கள் வலிமையானவர்களாக, உரத்துப்பேசுபவர்களாக இருக்கிறார்கள். வனதெய்வத்தோடு சேர்த்து, சென்பகவள்ளியைப் பற்றியும், சுதாவை பற்றியும், விஜியலட்சுமியைப் பற்றியும் கூட சொல்ல வேண்டும்.
குழி விழுந்த கண்கள், பெருத்த உதட்டையே அத்துமீறும் முன்இரண்டு தெத்துப்பற்கள், கரிக்கட்டையாய்க் கிடக்கும் முகம் கொண்ட செண்பகவள்ளியை நாமனைவரும் தினமும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பரீட்சையில் ஃபெயில் ஆனவர்கள், பதில் பேச்சு பேசாதவர்கள், தோத்தாங்குளிகள் போன்றவர் களுக்கு அவர்கள் மனைவிகளாக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள் இன்னமும். வகுப்பறையில் ஒன்னுக்குப் போய் அப்படியே ஓடிப்போன செண்பகவள்ளி நமது நினைவுகளின் பின்னடுக்குகளில் நின்று கொண்டு நம்மை நோக்கி கேள்வி கேட்டுக் கொண்டுதானிருக்கிறாள்.
சிவபாண்டியும் அவளைக் காதலித்தான்என்ற கதையில் வரும் விஜியலட்சுமியோ இதற்கு நேர் எதிர். பெண்களுக்கேயுரிய பாய்ச்சலுடனும், ஆவேசத்துடனும் தன்னைக் காத்துக் கொள்கிறாள். “அவ்வளவு பேர் வேட்டியும் காத்துலதான் பறக்கும் ஜாக்கிரதைஎன்று ஊர் பஞ்சாயத்தில் அவள் உறுமும் போது, அத்தனை பேரின் ஒழுக்கங்களும் மூக்கொழுகித் திரிகின்றன. ‘அலைந்து திரியும் பெருங்கடல்என்ற கதையில் வரும் சுதாவோ, திமிரும் பெண்மையைக் கண்டு பதறும் ஆணின் பீடத்தைப் பார்த்து கெக்கலிக்கிறாள்.
இவற்றிற்கெல்லாம், இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் எதிர்த்திசையில் அமைதியாக அமர்ந்திருக்கிறதுதட்டான்பூச்சிகளின் வீடு’. குழந்தைமையும், கறைபடியாத வெகுளித்தனமும் வழக்கொழிந்து போன காலத்தில், நீலக்கலர் அரசாங்கப் பாவாடையும், கிரேந்திப்பூக்களும் நிரம்பிய பால்யத்தின் சிறு பொழுதுகள், கடல் மேல் ஒளி தரும் தொலைதூர நிலாப் போல மயக்கங் கொள்ள வைக்கின்றன. அந்தப் பொழுதுகளில் தட்டான்பூச்சிகளுக்கான வீடுகள் பெருங்கனவு. அவை மரண மடைவது பெருந்துக்கம். உருண்டு திரண்டு நிற்கும் ஒரு சிறிய நீர்த்துளியைப் போல உறங்குகிறது மனம். இது போன்ற தருணங்கள் தான் பின் நினைவில் கொதித்துக் கிடக்கின்றன. அது தான்நினைவில் கொதிக்கும் பால்யம்’. “நாக்கைத் துருத்தி பயம் காட்டிய ஆச்சிமுத்தா கோவில் பூவரசம் மரம் தன் மஞ்சள் பூக்களைத் தலையில் கொட்டிச் சிரிக்கிறதுஎன்ற வரியில் மேலெழும்புகிறது நாஸ்டால்ஜியா.
நாஸ்டால்ஜியாவாக முடியாத விஷயங்களின் மீதும் எந்தத்தயவுமின்றி வெளிச்சம் பாய்ச்சுகிறது இந்தக் கதையுலகம். குற்றவுணர்ச்சி முதுகைப்பிடித்து பிறாண்டும் பின்னிரவுப்பொழுதுகளில் தோன்றியிருக்க வேண்டும் இவை. ‘என் தாத்தாவை நான்தான் கொன்றேன்’, ‘எனக்கு ரயில் பிடிக்காது’, ‘அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்ஆகிய கதைகளும் பால்ய காலத்து நினைவுகளை ஒட்டியே எழுதப்பட்டிருந்தாலும், இழப்பும், இழப்பு ஏற்படுத்தும் பயமும், தான் அதில் ஒரு பங்கு வகித்ததை ஒட்டி விடாது துரத்தும் குற்ற உணர்ச்சியும் ஒருங்கே வெடித்திருக்கின்றன இந்தக் கதைகளில்.
வழி தவறிய ஆடுகளே புதிய மலைகளைக் கண்டுபிடிக்கின்றன என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் கதைகளை விட, அவை ஊற்றெடுக்கும் அனுபவங்கள்தான் அதிகம் ஈர்ப்புடையதாக இருக்கிறது, புதிராக இருக்கிறது, அதிர்ச்சியூட்டுகிறது. மலைத்துப்போகச் செய்கிறது. இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் நேர்மையும், உண்மையின் மீதான தீராத காதலும் உயிர்த்துடிப்புடன் அரங்கேறுகின்றன.
தனிப்பட்ட முறையில், இந்தத் தொகுப்பை எனக்குத் தட்டுப்பட்ட ஒரு உடைந்த கண்ணாடித் துண்டு என்றே உணர்கிறேன். முடிவு செய்யப்பட்ட எல்லைகளுக்குள் நிர்ணயிக்கப்பட்ட செயல்களைச் செய்து வளர்ந்த ஒரு நகரத்து சிறுவனின் கண்களுக்கு எதிர்பாராமல் தட்டுப்பட்ட கண்ணாடித் துண்டு. அதன் வழியே அறியப்படாத ஒரு தேசத்தின் மக்களும், அவர்களின் முகங்களும், அவர் களைச் சுட்டு வீழ்த்தும் அதிகாரமும், அவர்களை அலைகழிக்கும் காமமும், காதலும், சாவும், சிரிப்பும் எனப் புதிய பிம்பங்களையும் உலகையும் காட்டிச்செல்லும் கண்ணாடித்துண்டு. அதன் வழி நான் பார்த்திராத அம்மக்களை நோக்கிப் புன்னகைக் கிறேன். அவர்களும் புன்னகைக்கிறார்கள்.
எந்த அடையாளத்தைச் சொல்லிச் சொல்லித் தாக்குகிறார்களோ, அதே அடையாளத்தைத் தனது ஆயுதமாக்கி பதிலுக்குத் தாக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். எந்தெந்த அனுபவங்களும் மனிதர்களும் அருவெறுப்பானவையாக இருந்தனவோ, எந்தெந்த இடங்களைப் பார்த்ததும் ஓடத் தோன்றியதோ, எவை எவை எல்லாம் தன்னை இருண்ட குகைகளுக்குள் அழைத்துச் சென்றனவோ, அவை அனைத்தையும் உரமாக்கி, குதிரையாக்கி, ஒளியேற்றி உண்மையை நம்முன் கொண்டு வந்து காட்டுகிறார்
ஜி.நாகராஜனையும் மண்ட்டோவையும் தனது ஆதர்சங்களாகக் குறிப்பிடும் இவர், கதை சொல்லல் முறையைச் சிக்கலாக்காமல் அப்பட்டமாக, நேரிடையாகவே இதை எழுதியிருக்கிறார். ஒட்டுமொத்தமாகப் பார்கும் பொழுது, இந்தக் கதைத் தொகுப்பில் உள்ள அத்தனை இழைகளையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது, சாதிய ஒடுக்குமுறை, ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு தளங்களில் நீளும் வெவ்வேறு விதமான உரையாடல்கள், பால்ய கால நினைவுகள், விடலைப் பருவ ரவுடியிசங்கள் என்று பல அடுக்குகள் கொண்ட முடிக்கப்படாத ஓவியத்தின் முன் நின்று கொண்டிருப்பது போன்று தோன்றுகிறது.  
தெருவில் இறங்கி ஓரடி கூட எடுத்து வைக்காமல், வார்த்தை ஜாலம் காட்டியும், சித்து வேலை செய்தும், வயோதிகக் கைகளால் எழுதப்படும் அர்த்தமற்ற வாக்கியங்களால் நிரம்பியிருக்கும் சூழலுக்கு முன், மனிதர்களுடனான உரையா டல்கள் நீர்த்துப்போன ஒரு சூழலுக்கு முன், உக்கிரமான வரலாற்று அநீதிகளை சாமர்த்தியமாக மறந்து, மறைத்து இலக்கியக் கதையாடல்கள் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலுக்கு முன் ஆணித்தரமாக வந்து விழுந்திருக்கிறது இந்தத் தொகுப்பு.
ஆல்பெர் காம்யுவின் இந்த வார்த்தைகள் இங்கே பொருத்தமானதாக இருக்குமென்று கருதுகிறேன்.

வரலாற்றின் விளையாட்டரங்கில் எப்பொழுதும் சிங்கமும் சண்டை வீரனும் இருந்து கொண்டேயிருக்கிறார்கள். சிங்கம் வரலாற்றின் பச்சை மாமிச ருசிக்காகவும், வீரன் தனது நீங்காப் புகழுக்காகவும் அங்கே விளையாடிக்கொண்டிருக்கிறனர். சிறிது காலம் முன்பு வரை, படைப்பாளி ஓரத்தில் அமர்ந்து தனக்காகவோ, அந்த வீரனை உற்சாகப்படுத்தவோ, அல்லது அந்த சிங்கம் தனது பசியை மறப்பதற்காகவோ தான் பாடிக்கொண்டிருந்தான்ஆனால், இப்பொழுது படைப்பாளியும் அந்த விளையாட் டரங்கிற்குள் நின்று கொண்டிருக்கிறான்.”
***